in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 17) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14 பகுதி 15  பகுதி 16

கிருத்திகா வேலையில் போய் சேருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தன. இரண்டு மாத விடுப்பில் பணியில் சேருவதால் தனக்குப் போஸ்டிங்க்ஸ் வேண்டும் என்று கேட்டு ஏற்கெனவே நேரில் சென்று செக்ரட்டரிக்கு கடிதம் கொடுத்திருந்தாள். போஸ்டிங்க்ஸ் ஆர்டரும் தபாலில் வந்தது. சென்னைப்  பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் உதவி நிர்வாக அலுவலராக நியமன ஆணை வழங்கப்பட்டிருந்தது.

“நல்ல பவர்புல் போஸ்ட். நீயோ ரொம்ப ரூல்ஸ் பார்ப்பாய். அடுக்கு மாடி கட்டும் பிளாட் பிரமோட்டர்ஸ் நிறைய பேர் லாபத்திற்காக  எப்படி வேண்டுமானாலும் சட்டத்தை மீறுவார்கள். எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மீனாட்சி கூட ஏற்கெனவே அந்த போஸ்ட்டில் இருந்திருக்கிறாள். அவளிடம் அட்வைஸ் கேட்டுக் கொள். ரூல் பட தான் நீ போவாய். உனக்கு என்றும் துணையாக நான் இருப்பேன், ஆனால் பி கேர்புல். பெஸ்ட் ஆப் லக்” என்றான் சபரீஷ்.

அதற்குள் மீனாட்சிக்கு விஷயம் தெரிந்து “கங்கிராட்ஸ்” என்று வாழ்த்து தெரிவித்தாள். தன் திருமணத்திற்குப் பிறகு கிருத்திகா மீனாட்சியைச் சந்திக்க அவள் வீட்டிற்குக் கிளம்பினாள்.

கிருத்திகா இதுவரை மீனாட்சி வீட்டிற்குச் சென்றதில்லை. யார் வீட்டிற்குப் போவதற்கும் ஒரு தயக்கம். போனால் பெற்றோர் பற்றி விசாரிப்பார்களோ என்று ஓர் தயக்கம், அனாதை என்றால் ஆஸ்ரமத்தில் வளர்ந்தாள் என்றால் கேலி பேசுவார்களோ என்று ஓர் அச்சம். திருமணம் ஆன பின் தான் தன் கூட்டை விட்டு சற்றே வெளியே வந்திருக்கிறாள்.

போன் செய்து மீனாட்சியிடம் அனுமதி பெற்ற பிறகே, கிருத்திகா அவள் வீட்டிற்குப் போனாள். மீனாட்சி இலாகா சம்பந்தப்பட்ட நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டாள், நிறைய தைரியம் கொடுத்தாள்.

அவள் கணவர் சுந்தரமும், “நம் கையும் பையும் சுத்தமாக இருந்தால் நாம் யாருக்கும் பயப்பட வேண்டாம் கிருத்திகா” என்றார்.

“வெளியார் யாரையும், வீட்டில் வாசற்படியில் கூட நெருங்க விடாதே. எல்லா பேச்சு வார்த்தையும் அலுவலகத்திலேயும், நேர்மையான எழுத்து மூலமாகவும் இருந்தால் உன்னை யாரும் அசைக்க முடியாது. எந்த விஷயத்தையும் மற்றவர்கள் சொல்வதை நம்பி கையெழுத்துப் போடாதே. நீ நேரில் இன்ஸ்பக்ஷன் செய்து உனக்கு முழுநம்பிக்கை இருந்தால் மட்டுமே எதற்கும் ஒப்புதல் தரவேண்டும். அவசரமாக வெளியே கிளம்பும் போது எந்தக் கோப்பிலும் கையெழுத்துப் போடாதே. சி.எம். டி.ஏ. ரூல்சை தரோவாகப் படி” என்றார் மேலும்.

மீனாட்சியோ, “அனுமதி பெறாமல் நிறைய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது, அவற்றை இடிக்க வேண்டியிருக்கும். இதனால் உனக்கு நிறைய பயமுறுத்தல்கள் வரும், அதற்கு தைரியமா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படி இருக்க வேண்டும். முப்பதுஅடி ரோடில் மூன்று அடுக்குகள் கட்ட வேண்டியதற்கு விதிமுறைகளை மீறி அதிகமாகக் கட்டியிருப்பான். தயவு தாட்சண்யமே பார்க்காதே, உடனடி டெமாலிஷனுக்கு ஆர்டர் கொடு. சட்டத்திற்கு அடங்கியதா என்று பார். உன் மனதிற்கு மட்டும் உண்மையாக இரு” என்று நீண்ட அறிவுரை கூறினாள் மீனாட்சி.

மீனாட்சியின் அறிவுரைகள் இவளைக் கொஞ்சம் தெளிவுப்படுத்தின. அன்று மாலை பணியிலிருந்து சீக்கிரமே வீடு திரும்பி விட்டான் சபரீஷ்வர். அவன் வந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கருத்திருமனும் வீடு திரும்பி விட்டார். சாம்புத் தாத்தாவிற்கு சமையலில் உதவி செய்து விட்டு மாடிக்குப் போய் சபரீஷ்வரிடம் கொஞ்ச நேரம் தனிமையில் பேசிவிட்டு கீழே இறங்கி வந்தாள் கிருத்திகா.

அவள் பின்னாலேயே சபரீஷ்வரனும் கீழே வந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த வீட்டில் ஒரு பழக்கம். சாம்புத் தாத்தா முதற்கொண்டு சபரீஷ் வரை டைனிங் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஊர் விஷயம் உலக விஷயம் எல்லாம் அலசுவார்கள்.

அதே போல் அன்றும் உட்கார்ந்து பேசும்போது கிருத்திகா, மீனாட்சி கூறிய அறிவுரைகளைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள். சபரீஷ்வர் அவனுக்குத் தெரிந்த யோசனைகளைக் கூறினான். இடையிடையே ஏதாவது நொறுக்குத்தீனி வைத்துக் கொண்டும், காபி, ஜூஸ் இவைகளை சப்ளை செய்துக் கொண்டும் அவர் பங்கிற்கு சாம்புத் தாத்தா வேலை செய்து வந்தார்.

அப்போது காலிங் பெல் அடித்தது. கருத்திருமன் எழுந்து போய் கதவைத் திறந்தார். அவர் பின்னால் சபரீஷ்வரனும் போனான்.

அங்கே அவன் பெரியப்பா, சித்தப்பா குடும்பங்களுடன் கூட ஷீலா, இளங்கோவும் நின்றிருந்தனர். சபரீஷ்வரன் வரவும் கருத்திருமன் உள்ளே வந்து விட்டார். சபரீஷ் தலையசைத்து வந்தவர்களை வரவேற்றான்.

உள்ளே வந்த அவர்களை “வாருங்கள்” என்று வரவேற்றாள் கிருத்திகா. சாம்புத் தாத்தா சமையலறையிலேயே இருந்தார். காபியா, டீயா, சர்க்கரையோடா அல்லது சர்க்கரையில்லாமலா என்ற விவரங்களைக் கேட்டு அதற்கேற்றாற் போல் கொண்டு வந்தாள் கிருத்திகா. சபரீஷ் அமைதியாக அவர்களுடன் உட்காரந்திருந்தான்.

“சபரீஷ்… சாம்பசிவம் இல்லையா? கிருத்திகா ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசர், ஏன் இந்த வேலையெல்லாம் செய்கிறது?” என்றார் பெரியப்பா.

உடனே இளங்கோ, “அவருக்கு இன்னும் யாரிடம் என்ன வேலை வாங்க வேண்டும் என்றே தெரியவில்லை” என்றான் வாயை அடக்க முடியாமல். சபரீஷ்வர் அவனை முறைத்தான்.

“தாத்தா தான் எல்லாம் செய்கிறார். நான் ட்ரேயில் எடுத்து வருவதோடு சரி. நீங்கள் இன்று இரவு டின்னர் சாப்பிட்டு விட்டுப் போகலாம். நான் போய் தாத்தாவிற்கு சமையலில் கொஞ்சம் உதவி செய்து விட்டு வருகிறேன்” என்று கிருத்திகா கூறிவிட்டு சமையலறைக்குப் போகத் திரும்பினாள்.

“கிருத்திகா, உன்னுடன் தான் பேச வந்திருக்கிறோம். உட்காரம்மா” என்றார் பெரியப்பா.

வழக்கமாக சபரீஷைப் பார்த்தாலே ‘லொட லொட’வென்று பேசும் ஷீலா, இப்போதெல்லாம் ரொம்பப் பேசுவதில்லை. மிக அமைதியாக இளங்கோவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.

“கிருத்திகா, இங்கே வந்து என் அருகில் உட்கார்” என்றான் சபரீஷ்வர், சற்று நகர்ந்து அவளுக்கு சோபாவில் இடம் விட்டு.

கருத்திருமன், கிருத்திகாவிடம் வந்து “நைட் டின்னருக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று  மெதுவாகக் கேட்டார்.

“நாங்கள் டின்னர் சாப்பிட வரவில்லை, கொஞ்சம் பர்ஸனலாகப் பேச வேண்டும். நாங்களெல்லோரும்  வீட்டை விட்டுப் போனவுடன் நீங்கள் எல்லோரும் இங்கே வந்து ‘டேரா’ போட்டு விட்டீர்களா?” என்றார் கிண்டலாக சித்தப்பா கருத்திருமனைப் பார்த்து. கருத்திருமனுக்கு அவமானத்தால் முகம் கருத்து விட்டது.

கருத்திருமன் ஒன்றும் பேசவில்லை, உள்ளே போய் விட்டார். பெரியம்மாவும், சித்தியும் கேலியாகச் சிரித்தனர். அவர்கள் பேசும் முறையும், கிண்டலாகச் சிரிப்பதும் சபரீஷ்வருக்கும், கிருத்திகாவிற்கும் பிடிக்கவில்லை.

“சொல்லுங்கள் பெரியப்பா” என்று சபரீஷ் நேரிடையாக விஷயத்திற்கு வந்தான்.

“நம் கிருத்திகாவிற்கு  இப்போது சி.எம்.டி.ஏ’வில் பெரிய ஆபீசராகப்  போஸ்டிங்க்ஸ் கிடைத்திருக்கிறது என்று கேள்விப்பட்டோம். உன் சித்தப்பாவும் மாப்பிள்ளை இளங்கோவும் சேர்ந்து ‘ஷீலா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு புதியதாக ஒரு கட்டிடக் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் கம்பெனி மூலமாக கட்டிட வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. சில பொறாமைக்கார்ர்கள் ஏதோ பெட்டிஷன் எல்லாம் அனுப்புவதாகக் கேள்விப்பட்டோம். இவர்கள் வேலை நடக்கும் பகுதி கிருத்திகாவின் கன்ட்ரோலில் தான் இருக்கிறது. அதனால் தான் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தோம்” என்றார் அவன் பெரியப்பா.

“எல்லாம் சட்டப்படி நடந்தால் யார் என்ன செய்ய முடியும்?” என்றான் சபரீஷ்வர்.

“அதற்கில்லை, பொறாமையினால் யாராவது பெட்டிஷன், மொட்டைக் கடிதம் எழுதினால் அதன் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது இல்லையா? அதற்காகத்தான் கிருத்திகாவைப் பார்க்க வந்தோம்” என்றார் சித்தப்பா.

“மற்றவர்கள் பெட்டிஷனுக்கோ அல்லது மொட்டைக் கடித்த்திற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் சித்தப்பா. அதிகாரிகளே நேரில் போய்ப்  பார்த்து  சி.எம்.டி.ஏ. சட்டங்களுக்கு விரோதமாக இருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றான் சபரீஷ்வர்.

“கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நாம் எல்லோரும் உறவினர்கள் என்ற எண்ணம் மனதில் வைத்துக் கொண்டு கிருத்திகா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுரை கூறினான் இளங்கோ.

சப்ரீஷ்வரனுக்கு கோபம் வந்துவிட்டது. “முதலில் மரியாதை. கிருத்திகா என்று பெயர் சொல்ல உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. அவள் ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீசர், பார்ப்பது அரசாங்க வேலை. சொந்த கம்பெனியாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். சட்டத்திற்கு விரோதமாக நடந்தால் அது கிருத்திகாவிற்குத் தான் வம்பாக முடியும்” என்றான்.

“இன்னும் நான் டியூட்டியிலேயே சேரவில்லை. சேர்ந்த பிறகு தான் என்ன கன்ஸ்ட்ரக்‌ஷன், எந்த டிவிஷன் என்று தெரியும். அதுவுமில்லாமல், முதலில் இஞ்ஜினீயர்ஸ் போய் இன்ஸ்பெக்‌ஷன் செய்து ரிப்போர்ட் அனுப்புவார்கள். பிறகு நான் போய் இன்ஸ்பெக்‌ஷன் செய்ய வேண்டும். எனக்கும் மேலே நிறைய அதிகாரிகள் இருக்கிறார்கள். எல்லோருடைய அதிகாரமும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான். சட்டத்தை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றாள் கிருத்திகா திட்டவட்டமாக.

இளங்கோ கோபத்துடன் தன் இருக்கையினின்று எழுந்து கொண்டான்.

“இப்படித்தான் இவர்கள் பேசுவார்கள் என்று எனக்குத் தெரியும். பார்த்தாயா ஷீலா… நான் என்ன சொன்னேன். என் அண்ணா எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்றாயே, எப்படிப் பேசுகிறார்கள் பார். இந்த அவமானம் நமக்குத் தேவையா?” என்று காட்டுக் கத்தலாக கத்தினான்.

அவனுடைய தூண்டுதல் பேச்சால் ஷீலாவும் கோபத்தில் படபடவென்று கத்தினாள்.

“இத்தனை நாள் தான் ஹோமில் அநாதையாக வளர்ந்தீர்கள். எப்படியோ என் அண்ணாவால்  இந்த வீட்டின் எஜமானியாக நுழைந்து விட்டீர்கள். நாலு சொந்தக்காரர்களுடன் வாழ்ந்திருந்தால் சொந்த பந்தங்களின் அருமை தெரியும்.  சொந்தக்காரர்கள் உறவு வேண்டுமென்றால் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள். அப்பா, சித்தப்பா கிளம்புங்கள். இனிமேல் இவர்களிடம் பேசி புண்ணியமில்லை” என்றாள் கோபமாக.

“என்னை நன்றாக அவமானப்பட வைத்து விட்டீர்கள். இவர்களிடம் பேசுவது சுத்த வேஸ்ட் என்று நான் அப்போதே சொன்னேன். இந்த இலாக்காவின் அமைச்சர் எனக்கு நன்றாகத் தெரியும். இவர்களுடைய மேலதிகாரிகளே என் கையில்,  இவர்களால் என்ன செய்ய முடியும்? வர முடியாது என்று சொன்ன என்னைத் தொந்தரவு செய்து அழைத்து வந்தீர்களே, எனக்கு இந்த அவமானம் தேவையா? வா ஷீலா போகலாம்” என்று வேகமாக வெளியேறினான் இளங்கோ. எல்லோரும் அவன் பின்னாலேயே வெளியேறினர்.

அவர்கள் எல்லோரும் கிளம்பிய பிறகு அலை அடித்து ஓய்ந்தாற் போல் இருந்தது.

“அவர்கள் உன்னை வாழத்த வந்தார்களா இல்லை இங்கேயுள்ள எல்லோரையும் மட்டம் தட்டிப் பேச வந்தார்களா என்று தெரியவில்லை. இந்த இளங்கோ சரியான பிராட்… இடியட். இந்த ஷீலா கூட எப்படி மாறிவிட்டாள்” என்றான் சபரீஷ் வருத்தத்துடன்.

“அந்த இளங்கோ செய்யும் தவறுகளை ஷீலா தான் சுட்டிக் காட்டித் தடுக்க வேண்டும். ஆனால் அவள், அவனுக்கு சப்போர்ட் செய்வது தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்வது போல்” என்றாள் கிருத்திகா.

“ஒரு நிமிடம் கிருத்திகா. நம் மீனாட்சியிடம் கேட்டால் ஷீலா கன்ஸ்ட்ரக்ஷன் முழுவிவரம் தெரியும்” என்று மீனாட்சிக்குப் போன் செய்தான் சபரீஷ்வர்.

இளங்கோ உறவினர்களுடன் அவன் வீட்டிற்கு வந்த விவரத்தையும், அவர்கள் பேச்சையும், நடந்து கொண்ட முறைகளையும் மீனாட்சியிடம் உள்ளது உள்ளபடி விவரித்தார். ஆனால், மீனாட்சி இளங்கோவைப் பற்றிக் கூறிய உண்மைகள் மிகவும் பயங்கரமாக இருந்தது.

அவன் சரியான போர் டுவென்டி என்றும், கிரிமினல் என்றும் திட்டினாள். அவன் செய்யும் தவறுகள் ஷீலாவையும் சேர்த்து பாதிக்கும். ஆனால் அவன் செயல்முறைகள் நியாயத்தை விட்டு வெகுதூரம் போய் விட்டது. இனிமேல் ஆண்டவனே நினைத்தாலும் அவனைக் காப்பாற்ற முடியாது. 

கிருத்திகா இன்ஸ்பெக்‌ஷன் போகும் போது, அவன் செய்துள்ள எல்லாத் தவறுகளையும் மேலதிகாரிகளின் கவனத்திற்கு எழுத்தின் மூலம் கொண்டு செல்ல வேண்டும். அவனுடைய எல்லா அபார்ட்மென்டுமே சட்டத்தின் வரம்பை மீறியது தான். அவனுடைய பில்டர் லைசன்ஸையே ரத்து செய்து ‘லீடிங் நோட்’ கிருத்திகா தான் தரவேண்டும். இல்லையென்றால் தவறு கிருத்திகாவுடையது தான் என்றாகி விடும் என்றாள் மீனாட்சி.

“ஆனால் ஷீலா அவனை முழுவதும் நம்புகிறாளே”  என்றான் சபரீஷ்.

“அவள் கணவனை அவள் நம்பத்தானே செய்வாள். அதுவுமல்லாமல் இளங்கோவின் பேச்சும், சாமர்த்தியமும் உனக்குத் தெரியாதா? ஷீலா அவனை முழுவதும் நம்புவதும் நுனிமரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டுவது போலத்தான். யார் என்ன செய்ய முடியும்?”  என்றாள் மீனாட்சி.

கிருத்திகாவிற்கு மேலும் கொஞ்சம் அறிவுறைகள் கொடுத்து விட்டு போனில் தன் உறையினை முடித்துக் கொண்டாள். இதற்குள் சாம்பசிவம் கருத்திருமன் உதவியோடு சமையலையே முடித்து விட்டார்.

“இந்த மாதிரியெல்லாம் பேச்சு வரும் என்று தான் நான் இங்கு தங்க வேண்டாம் என்று நினைத்தேன். நான் என் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்” என்று வருத்தப்பட்டார் கருத்திருமன்.

“விடுங்கள் அங்கிள், என்னைக் கூடத்தான் ஷீலா ஏதேதோ சொன்னாள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?  இனிமேல் இந்த உடல் உயிரை விட்டுப் பிரிந்தால் தான் நான் என் கணவரை விட்டுப் பிரிய முடியும்” என்றாள் கிருத்திகா.     

பின்னாலேயே  கேட்டுக் கொண்டு வந்த சபரீஷ் அவள் தலையில் செல்லமாகத் தட்டினான்.

“இப்படியா அபத்தமாகப் பேசுவாய். நீ இல்லாமல் நானில்லை என்பதை மனதில் வைத்துப் பேசு. யாரோ சிலரினால் பேச்சினால் நாம் பாதிக்கக் கூடாது. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், நாம் நம் வழியைப் பார்ப்போம்” என்றான் சபரீஷ்.

எல்லோரும் மிகவும் டென்ஷனாக இருப்பதால், இரவு டின்னர் யாரும் ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள் என்று சாம்புத் தாத்தாவிற்கு நன்றாகத் தெரியும். அதனால் எளிமையாக இட்லி, குழிப் பணியாரம், சட்னி, சாம்பார் என்று செய்திருந்தார். எல்லோரும் அமைதியாக வெவ்வேறு யோசனைகளோடு  சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மீண்டும் போன் பெல் அடித்தது.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 17) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மன வதம் (சிறுகதை) – ✍ பீஷ்மா