in

நாலு கால் மண்டபம் (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி

நாலு கால் மண்டபம்

ன் மனதில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வலி. வயிற்றில் இருந்து ஏதோ ஒன்று கிளம்பி, அது தொண்டையை  அடைத்துக் கொண்டது  போல் இருந்தது

இப்படி தனியாக, தெரியாத  இடத்தில்,  இதுவரை   மாட்டிக் கொண்டதில்லை.  அம்மா  அவ்வளவு சொல்லியும்  கேட்காமல், இந்த   இடத்துக்கு  வந்திருக்கக்  கூடாது.  

நான்  கோமதி.  கல்லூரி  மாணவி.  விடுமுறையில்  ஊரில்  தனியாக இருக்கும் ஆச்சிக்கு ஒத்தாசையாக  இருக்கச்  சொல்லி,  அம்மா நான்கு  நாட்கள்  முன்பு, சங்கரன் கோவிலில்  இருக்கும் ஆச்சி  வீட்டில்  என்னைக்  கொண்டு வந்து  விட்டார்கள்

கிளம்பும்  போது  ஆயிரம் புத்திமதிகள்  சொல்லி விட்டு தான் போனார் அம்மா

“ஏட்டீ….கோமதி, உன்னோட சேட்டை எல்லாம் இந்த ஊர்ல வெச்சுக்காத. இது நம்ம சென்னை மாதிரி கிடையாது, கேட்டியா. சின்ன ஊரு. ஆச்சி சொல்றத கேட்டு, ஒழுங்கா வீட்ல இரு. ஆச்சிக்கு ஒத்தாசையா வேலை எல்லாம் செஞ்சு குடு. அங்க இங்க சுத்திகிட்டு இருக்காத. வெளில போகும் போது ஒழுங்கா சுடிதார் போட்டுட்டு போ. ஜீன்ஸ்  போட்டுட்டு போனா, இந்த  ஊருல ஒரு மாதிரி பாப்பாங்க.”

“பொறவு  முக்கியமான விஷயம், ஊர் கடைசில இருக்கற அந்த நாலு கால் மண்டபம் பக்கம் எட்டிப் பாத்துடாத. அங்கன என்ன இருக்கு, ஏதிருக்குனு இந்த ஆராய்ச்சி பண்ற வேலையெல்லாம் இங்கன வேண்டாம். அந்த மண்டபத்து பக்கம் போனேன்னு  தெரிஞ்சுது… நடக்கறதே வேற. புரியுதா? இப்ப எங்கிட்ட மண்டைய மண்டைய ஆட்டிட்டு, நான் அங்கிட்டு போனதும், வேலையைக்  காட்டிராத”

இப்படி திட்டி விட்டு தான் போனார் அம்மா. என்னைப் பற்றி அம்மாவுக்குத் தெரியும். அதனால்  தான் திரும்பத் திரும்ப சொல்லி விட்டுப் போனார். 

இந்த நான்கு நாட்களாக, எப்படியோ இந்த நாலு  கால் மண்டபம் பக்கம் வராமல் இருந்து விட்டேன். ஆனாலும் உள்ளுக்குள்  அலாரம்  அடித்துக் கொண்டே இருந்தது.  

அப்படி என்ன தான் இருக்கோ அந்த நாலு  கால் மண்டபத்துல?  வெறும் நாலே நாலு கால் இருக்கற மண்டபமா? இல்ல… உள்ள ஏதாவது இருக்கா? யாரும் எந்த விஷயத்தையும் வெளில விட மாட்டேங்கறாங்க. ஆச்சிகிட்ட கேட்டுப் பார்த்தேன்.

“ஆச்சி…. இந்த நாலுகால் மண்டபம்னு சொல்றாங்களே  ஆச்சி, அங்க என்ன இருக்கு?”

“ஏன்… அங்கிட்டு போகப் போறியா?  அங்க என்ன இருந்தா உனக்கென்ன?அதைப் பத்தி பேசவே கூடாது. குறிப்பா, வயசுக்கு வந்த பிள்ளைங்க அதைப் பத்தி பேசவே  கூடாது” என்றார் 

“நான்  ஒண்ணும்  அங்க  போகப்  போறேன்னு சொல்லலயே  ஆச்சி.  அங்க என்ன இருக்குன்னு தான கேட்டேன்”

“என்னமோ இருக்கு. காத்து கருப்பு இருக்குன்னு சொல்றாங்க. யாருமே அங்கிட்டு போனது கிடையாது. அதுவும் சாயங்காலம் விளக்கு வச்சதுக்கப்புறம், அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டோம்” என பயம் காட்டினார் ஆச்சி 

இவ்வளவு சொன்ன பிறகு என்னால் சும்மா இருக்க முடியுமா? அதுவும் எது வேண்டாம் என்று சொல்கிறார்களோ, அதை நோண்டிப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் எனக்கு.

அந்த ஆர்வக்  கோளாறில், பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்குப் போவதாக ஆச்சியிடம் சொல்லி  விட்டு, நாலுகால் மண்டபத்திற்கு வந்து விட்டேன். ஆறு மணி தான் ஆகிறது. அதற்குள்ளாகவே இருட்ட ஆரம்பித்திருந்தது.

நாலுகால் மண்டபத்திற்குள் வந்து சுற்றும் முற்றும் பார்க்க, உள்ளே சின்னதாக வழி இருக்கக் கண்டதும், அதற்குள் வந்தேன். 

வந்த பிறகு சட்டென்று மண்டபத்தின் வாசல் பக்கமாக இருந்த கதவு சாத்திக் கொண்டது. அதனால் தான் முதல் வரியில் சொன்ன, அந்த ஏதோ  ஒன்று  உருண்டு வந்து தொண்டையை அடைத்துக் கொள்ள,  பயத்தில்  நனைந்திருந்தேன்.  

அம்மாவும்,  ஆச்சியும்   சொன்னதையும் மீறி  வந்துட்டேன்.  ஏதாவது ஏடாகூடமா ஆயிடுச்சுன்னா?   மனசுக்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து பயமுறுத்தியது. கும்மிருட்டு.. கையிலிருந்த மொபைலில் டார்ச்சை ஆன் செய்து, சுற்றும் முற்றும் பார்த்தேன்.

நான் உள்ளே நுழையும்  போது, கதவு இருந்ததே தெரியவில்லை. அப்படியானால் கதவை யார் சாத்தியிருப்பார்கள்? உள்ளுக்குள் உருண்டு கொண்டிருந்த பயப்பந்து, இப்போது இன்னும் பெரிதாகி, தொண்டையை முற்றிலுமாக அடைத்துக் கொண்டது. வாயைத் திறந்து சத்தம் போடக் கூட முடியவில்லை.

மெதுவாக மொபைல் வெளிச்சத்தில் முன்னே நடக்க ஆரம்பித்தேன்.  கொஞ்ச தூரம் போவதற்குள், யாரோ வெகு அருகில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டார்கள். சப்த நாடியும் ஒடுங்கிப் போனது எனக்கு

திரும்பிப் பார்க்கலாமா, வேண்டாமா? திரும்பிப் பார்த்து… அங்கே ஏதாவது இருந்தால்… எப்படி ரியாக்ட் பண்ணுவது? கண்ணை மூடிக் கொண்டு, ஞாபகத்திற்கு  வந்த சாமி பெயரை எல்லாம் சொல்லிக் கொண்டேன். 

இந்தப் பக்கமாக வெளியே போக ஏதாவது வழி இருந்தால் தப்பித்து ஓடிவிட வேண்டும் என்று திரும்பாமல் முன்னேறினேன். கொஞ்ச தூரத்தில் பெரிய படி ஒன்று காலில் தட்டியது. படியை கவனமாக தாண்டியதும், சட்டென்று மொபைல் ஆஃப் ஆனது. எவ்வளவு முயற்சி செய்தும், மொபைல் சுவிட்ச் ஆன் செய்யவே முடியவில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் இல்லாமல் போனது.

யாரோ என் பக்கத்தில் கூடவே நடந்து வருவது  போல் ஒரு உணர்வு. மெதுவாக அடிக் கண்ணால் இடது பக்கமும், வலது பக்கமும் பார்த்துக்  கொண்டேன். இருட்டில் சத்தியமாக எதுவுமே தெரியவில்லை.

குப்பென்று வியர்த்து, உள்ளங்கை எல்லாம் ஈரமாக இருந்தது. இப்போது இருட்டு  கண்ணுக்குப்  பழகி  விட்டது.  மெதுவாக  முன்னே போனேன். கையால்  காற்றில்  தடவிக்  கொண்டே  போனேன். ஏதோ  கைக்கு தட்டுப்பட்டது

கதவா? ஏதோ  குச்சி  மாதிரி தெரிய, அதை  எடுக்கப்  பார்த்தேன். ஆபத்துக்கு  உதவலாம்.  ஆனால் குச்சி  கனமாக,  லேசில்  எடுக்க  வரவில்லை.  கொஞ்சம்  பலமாக  இழுத்தேன்

திடீரென்று  மொபைல்  விட்டு விட்டு எரிந்தது. அந்த  வெளிச்சத்தில்  கையில்  இழுத்துக் கொண்டிருந்த  குச்சியைப் பார்த்தேன்.  

ஐயோ… இதையா  புடிச்சு  இழுக்கறேன்.  வெலவெலத்துப்  போய்  கையை  உதறினேன்.  அது குச்சியில்லை, சுவரில்  தொங்கிக் கொண்டிருந்த  எலும்புக்  கூடு.  

உடலில்  நடுக்கம்  அதிகமானது. நாக்கு  மேலண்ணத்தில்  ஒட்டிக்  கொண்டது. உதடு  காய்ந்து போனது.  என்  இதயத்  துடிப்பே  என் காதில்  தொம் தொம் என்று  கேட்டது

யாரோ  ஓடி  வரும்  காலடிச்  சத்தம்.  எங்கே  இருந்து சத்தம் வருகிறது? காதைத்  தீட்டிக்  கேட்டேன்.  இப்போது  பக்கத்தில்  கேட்டது காலடிச் சத்தம்.  

சுவரில்  தொங்கிக் கொண்டிருந்த  எலும்புக் கூடின்  கால்  ஓடுவது  போல்  காலை  வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தது.  உயிரைக் கையில்  பிடித்துக்  கொண்டு  ஓட  ஆரம்பித்தேன். என்  பின்னால்  பத்து  பேர்  ஓடி  வருவது  போல்  காலடிச் சத்தமும், மூச்சிறைப்பும் கேட்டது.  

எதையும்  கவனிக்காமல்  ஓடினேன்.  காலில்  ஏதேதோ  தட்டியது.  எல்லாம்  இதற்கு  முன்  கையில்  குச்சி  போல்  சிக்கிய  எலும்புக்  கூடு போலவே  இருந்தது

ஒவ்வொரு  எலும்புக்  கூடு  காலில்  படும்  போதும், மொபைல்  பளிச் பளிச் என்று கண்ணைச்  சிமிட்டியது.  எலும்புக்  கூடை  கால்ல மிதிக்கறோமே,  இதெல்லாம்  கூடவே  வந்துருமோ? 

யோசிக்கும்  போதே  பின்னால்  கூட  ஓடி   வந்து  கொண்டிருந்ததெல்லாம் பகபகவென  சிரித்தன.  என்னோட  பயம்  இதுக்கெல்லாம்  காமெடியா  இருக்கு  போல… அப்போ  நாம தைரியமா  இருந்தா, இதெல்லாம்  சைலன்ட்டா இருக்குமோ?

முருகா… தைரியத்தைக்  குடுப்பா.   “காக்க  காக்க  வெற்றி வேல்  காக்க….” இல்லையே…. தப்பா சொல்றேனே…. வெற்றி  வேல்னு  வராதே…. வீர  வேல்…. இல்ல…. ம்ம்ம்…. பயத்துல  ஞாபகம்  வரல முருகா…. எந்த  வேலா  இருந்தா? என்ன…. எல்லாம்  உன்னோட  வேல்  தான

டங்க் என்று  எதன்  மேலோ  மோதிக்  கொண்டேன்.  மெதுவாக  கையை  முன்னால்  நீட்டி, எதன் மேல  மோதினேன்  என்று  பார்த்தேன்.  அதே  குச்சி….குச்சியான  எலும்புக்  கூடு. பயமும், தைரியமும்  சேர்ந்து  கலவையான  உணர்வு , என்ன  செய்கிறேன்   என்று தெரியாமலேயே  கையில் வைத்திருந்த  மொபைலால், எலும்புக் கூடை தாக்கினேன்

புளிச்சென்று  முகத்தில்  ஏதோ  தெறித்தது.  ஐயோ ரத்தம்,  கொலை  பண்ணிட்டேனா?  கொலை கேசுக்கு  என்ன  தண்டனை  தருவாங்க? ஏழு  வருஷமா?  ச்சே…. அதுவே  எலும்பு  தான. எப்படி ரத்தம்  வரும்?  பேய்க்கு  ரத்தம்  வருமோ?  படத்துல  காட்டுவாங்களே

முருகா… சஷ்டி  கவசம்  தப்பா  சொன்னதுக்கு  இப்படி  ஒரு  தண்டனையா?  காக்க காக்க  முருகன்  வேல்  காக்க  என்று  சொல்லிக் கொண்டே  எலும்புக் கூடைத்  தள்ளி  விட்டு விட்டு, ஓடினேன்.  கீழே  விழுந்த எலும்புக் கூடு,பதிலுக்கு  என்  காலை  வாரி விட, உருண்டு போய்  விழுந்தேன். மறுபடியும் முகத்தில்  ரத்தம்  தெளித்தது.  

ஐயோ  மறுபடியும்  ரத்தமா?  இது யாரோட  ரத்தம்? என்னோடதா  இல்ல  அதோடதா?  யாரோட ரத்தம்…. யாரோட ரத்தம்…..  

“அடியே…. கோமதி.  எந்திரிக்கப்  போறியா, இல்லையா?  ரெண்டு  தடவை  முகத்துல  தண்ணியக் கொட்டியாச்சு.  வயசுப்  பொண்ணு…. இப்படி  உருண்டு  உருண்டு  தூங்கினா, விளங்கிரும்.  ராத்திரி  கண்ட  படத்தைப்  பார்க்காதேனு  சொன்னா  கேக்கறியா?  எந்திரி….”

ஆ…. அம்மா  குரல்.  கண்  முழிச்சு  பார்த்தேன்.  நம்ம  வீடு.  அப்போ  நாலு கால்  மண்டபம், எலும்புக் கூடு, ரத்தம்… எல்லாம்  கனவா? 

“என்னடி…. திரு திருன்னு  முழிக்கறே?  இன்னிக்கு  ஆச்சி  வீட்டுக்குக் கிளம்பணும்னு  சொன்னேன்  இல்ல.  சீக்கிரம்  கிளம்பு.”

அப்போ  ஆச்சி  வீட்டுக்கே  இன்னும்  போகலையா?  ச்சே… எல்லாம்  வெறும்  கனவா?  

“அம்மா… ஆச்சி  வீட்டுகிட்ட  நாலு கால்  மண்டபம்னு ஏதாவது  இருக்கா?”

அம்மா  திரும்பி  என்னை  முறைக்க, அமைதியானேன்.  எல்லாம்  நேற்றிரவு  பார்த்த  பேய்ப்  படத்தின்  விளைவு  தான்

“அம்மா…. சஷ்டி  கவசத்துல  காக்க காக்க… என்ன  வேல்  காக்கனு  வரும்?”

“அடியேய்…. காலங்கார்த்தால….  என்னடி….” என்று அம்மா   கையை  ஓங்க

மீ எஸ்கே……..ப்.

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

  1. நல்ல திரில்லிங் கதை சிறப்பான கனவு..கண்ட கண்ட படம் டிவியில பார்க்காதேன்னு அம்மா சொன்னா கேட்கனும்…அதுதான் இரவு பயக்கனவுகளுக்கு அடிப்படை காரணம்.அருமை அருமை..

  2. கடைசியில் கனவு என்று தெரியும் வரை, நானும் பரபரப்போடு படித்தேன். “உருந்துகொண்டிருந்த பயப்பந்து…” அந்த வரிகள் மிகவும் அருமை..!

என் அன்பு தோழி ❤ (கவிதை) – ✍ சௌமியா தக்ஷிணாமூர்த்தி

சிறகிழந்த பறவை (கவிதை) – ✍ நாகி. ஆர். ராஜேந்திரன்