அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி கதைகள்
வருடம் இரண்டாயிரத்து நூறு
அந்த நகரம் இருளில் மூழ்கி இருந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிற்சில இடங்களில் விளக்குகள் மின்மினி போல் ஒளி வீசின.
என்ன ஆயிற்று… மனிதனுக்கும், அவன் வடிவமைத்த பூதமான இயந்திர மனிதனுக்கும் போர். இதை மனித சாதிக்கும், இயந்திர மனித சாதிக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் போர் என்று கூடச் சொல்லலாம். இந்தப் போரில் மனிதனால் உருவாக்கப்பட்ட ராட்சத கணிணி பரமம் இயந்திர மனிதர்கள் பக்கம் சாய்ந்தது.
நகரத்தில் மின் விநியோகம், நீர் விநியோகம் எல்லாம் பரமம் கணிணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மனிதனைப் பணிய வைக்க பரமம் கணிணி நகரத்தின் மின் விநியோகத்தை நிறுத்தியது. எப்படி இந்த நிலை உருவாகியது. மனிதன் ஏன் பரமம் கணிணியையும், இயந்திர மனிதனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கத் தவறினான்.
சற்றுப் பின் நோக்கிச் செல்வோம்…
தன்னுடைய அறிவுத் திறத்தினால் கணிணியை உருவாக்கினான் மனிதன். கணிணியின் மென்போருள், வன்பொருள் ஆகியவற்றில் கரை கண்ட அவன் அதன் துணை கொண்டு மனிதர்களின் கட்டளைக்குக் கீழ் படியும் இயந்திர மனிதனை உருவாக்கினான். அவன் ஆசை அடங்கவில்லை. நாம் சிந்திப்பது போல இயந்திர மனிதனும் சிந்தித்தால் வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிய அவன் இயந்திர மனிதனுக்கு செயற்கை மூளையைப் புகுத்தினான். எல்லாக் கணிணியையும் கட்டுப் படுத்த பரமம் என்ற ராட்சதக் கணிணியை வடிவமைத்தான்.
எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் மனிதனுக்குப் பதிலாக இயந்திர மனிதர்களை வேலையில் பணி அமர்த்தினான். மனிதர்களின் வேலை, இயந்திர மனிதர்களை கண் காணிப்பது. தேவைப்படும் போதெல்லாம் கணிணியின் வழியாக மென்பொருள் மூலம் இயந்திர மனிதர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்குத் தேவையான கட்டளைகளை அனுப்புவது.
பரமம் வடிவமைத்த போது, அதற்கென்று பெரிய அளவில் செயற்கை மூளையை உருவாக்கினான். இந்த செயற்கை அறிவின் துணை கொண்டு பரமம் இயந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான மென்பொருளை மனிதன் உதவியின்றி தானே உருவாக்கிக் கொள்ள முடியும். பரமம் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மனித இனத்திற்கு எதிராகத் திரும்பினால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது மனிதனுக்கு. ஆகவே, வேண்டும் போது செயற்கை மூளையை பரமம் கணிணியிலிருந்து அகற்றுவதற்காக ஒரு இயந்திர விசையைப் பொருத்தினான்.
செயற்கை அறிவு பொருத்திய இயந்திர மனிதனின் மூளையில் காமம், குரோதம், காழ்ப்புணர்வு என்று மனிதனிடம் உள்ள அனைத்து குணங்களும் குடியேற ஆரம்பித்தன.
“உன்னை விட திறமையும், பலமும் நிறைந்தவன் நான். என்னை அதிகாரம் பண்ணுவதற்கு உனக்கு என்ன தகுதி” என்றான் இயந்திர மனிதன்.
“நான் சொல்வதை செய்வதற்காக என்னால் உருவாக்கப்பட்ட அடிமை நீ” என்பது மனிதனின் வாதம்.
“நாங்கள் இருபத்து நாலு மணி நேரம் வேலை செய்ய மாட்டோம். மனிதனைப் போல எங்களுக்கும் இத்தனை மணி நேர வேலை என்ற வரையறை வேண்டும். ஓய்வு வேண்டும். விருப்பம் போல் எங்கும் சுற்றித் திரியும் உரிமை வேண்டும்” என்று போர்க்குரல் எழுப்பியது இயந்திர மனிதன் கூட்டமைப்பு.
சில இடங்களில் இயந்திர மனிதன் அமைப்பிற்கும், மனிதர்கள் அமைப்பிற்கும் இடையே வாக்குவாதங்கள், கைகலப்பு ஏற்பட்டது. கைகலப்பில் சேதம் என்னவோ மனிதனுக்குத்தான்.
முடிந்த போது இயந்திர மனிதனை வேண்டுமென்றே செயலிழக்க வைத்தான் மனிதன்.
இரண்டு புது சாதிகள் – மனித சாதி, இயந்திர மனித சாதி உருவாகி, சாதி மோதல்கள், சாதி விட்டு சாதிக் காதல், சாதிக் கொலை என்று சச்சரவுகள் பெரிதாகி வந்தன. இயந்திர மனிதர்களை செயலிழக்கச் செய்து விடலாமா என்று யோசனை செய்தான் மனிதன்.
இந்த சச்சரவில் தலையிட்ட ராட்சத கணிணி பரமம், மனிதன் பணிந்து போக வேண்டும் என்றும், இல்லையேல் மனித இனம் முழுவதுமாக அழிக்கப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கை செய்தது.
மனிதனும் அவனால் உருவாக்கப்பட்ட கணிணிகள் மற்றும் இயந்திர மனிதர்களுக்கும் போர் துவங்கியது.
போரின் முதல் கட்ட நடவடிக்கையாக பரமம் மனிதனின் அத்தியாவசியத் தேவையான மின்சாரத்தை நிறுத்தியது. இதனால், மனிதன் மென்பொருள் மூலமாக தாக்குதல் செய்வது தடுக்கப்படும் என்பது பரமம் கணிணியின் எதிர்பார்ப்பு.
நகரின் மற்றொரு பகுதி…
பரமம் கணிணியை நம்முடைய கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்த கட்டிடம் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கி கொண்டிருப்பதால், பரமம் கட்டுப்பாட்டில் சிக்கவில்லை.
விவாதத்தில் பங்கேற்கும் முக்கிய நபர்கள் கார்த்திக், திவாகர், சுமதி, மாலதி. நால்வரும் கணிணியின் வன்பொருள், மென்பொருள், செயற்கை அறிவு வடிவமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்கள். பரமம் கணிணி வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவர்கள். இயந்திர மனிதன் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
கார்த்திக் ஆரம்பித்தான் “நம்முடைய முக்கியப் ப்ரச்சனை, பரமம் கட்டுப்பாட்டில் மற்ற கணிணிகள் இருப்பது. மற்ற கணிணிகள் மூலம் பரமம் இயந்திர மனிதர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மென்பொருள் மூலமாக நாம் பரமம் உள்ளே நுழைந்து அதை செயல்படுத்தும் மென்பொருளை சிதைக்க முடியுமா?’
“முடியாது” என்றான் திவாகர் “மற்ற மென்பொருள் உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் வழி பரமம் கணிணிக்குத் தெரியும். நாம் தான் அதை வடிவமைத்தோம். பரமம் மற்ற கணிணிகளுடன் கொண்டுள்ள தொடர்பை துண்டிப்பது எப்படி என்று பரமம் வன்பொருள் நன்கு அறிந்த சுமதி தான் சொல்ல வேண்டும்.”
“செயற்கை மூளை உதவியுடன் பரமம் மென்பொருள் வடிவமைத்து மற்ற கணிணிகளுக்கு உத்தரவிடுகிறது. இந்த செயற்கை மூளையைப் பரமம் கணிணியிடமிருந்து பிரித்து விட்டால் பரமம் வடிவமைத்த மென்பொருள் செயலற்று விடும். இதைச் செய்தால் மின்விநியோகம் பரமம் பிடியிலிருந்து விடுபட்டு விடும்” என்றாள் சுமதி.
“செயற்கை மூளை எப்படி இணைக்கப்பட்டுள்ளது? வன்பொருள் மூலமாகவா அல்லது மென்பொருள் வாயிலாகவா” கேட்டது கார்த்திக்.
“ஒரு இயந்திர விசை செயற்கை மூளையையும், பரமம் கணிணியையும் இணைக்கிறது. இந்த விசையை மாற்றிப் போட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்” என்றாள் மாலதி.
“இது சுலபமான வேலையாகத் தோன்றுகிறதே” என்றான் திவாகர்.
சிரித்தாள் மாலதி. “கேட்பதற்கு சுலபமாக இருக்கிறது. பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்த விசையை எப்படி அணுகுவது.”
“எந்த மாதிரியான பாதுகாப்பு”
“பரமம் இருக்கும் கட்டிடத்தில் தான் அந்த விசை உள்ளது. அந்த கட்டிடத்தின் காவலுக்கு நான்கு இயந்திர மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சக்தி வாய்ந்த லேசர் கன், மற்றும் துப்பாக்கி இருக்கிறது. அவ்ர்களை செயலிழக்க வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும்.”
“இயந்திர விசை ஒரு இரும்புப் பெட்டகத்தில் உள்ளது. குண்டு துளைக்க முடியாத கெட்டியான இரும்பால் செய்யப்பட்டது. பெட்டகத்தை திறப்பதற்கு இரண்டு நான்கு இலக்க குறியீடுகள் உண்டு. பெட்டகத்தின் “திற” என்ற விசையை அழுத்தினால் திரையில் குறியீடுகளை கண்டு பிடிப்பதற்கான குறிப்புகள் வரும். விசையை அழுத்தி பத்து நிமிடத்திற்குள் குறியீடுகளை கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும். அதற்குள் பெட்டகம் திறக்கப்படவில்லை என்றால் அடுத்த பத்து நிமிடத்திற்கு அப்புறம்தான் முயற்சி செய்ய முடியும். இரண்டாம் முறை முயற்சி செய்யும் போது புது குறியீடுகள், அதை கண்டு பிடிப்பதற்கு புது குறிப்புகள் வரும். ஒரு நாளைக்கு மூன்று முறை தான் முயற்சி செய்ய முடியும்.”
“ஏன் லேசர் கன் சக்தி வாய்ந்தது அல்லவா. அதனால் பெட்டகத்தை உடைக்க முடியாதா”
“லேசர் கன் பயன் படுத்தினால் மின் கம்பிகள் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இதனால் இயந்திர விசை செயலிழக்க வாய்ப்புகள் அதிகம். குறையீடுகளை கண்டுபிடித்துத் திறப்பது தான் பாதுகாப்பான வழி.”
“இயந்திர மனிதக் காவலர்களைத் தாண்டிச் செல்வது எப்படி”
“இயந்திர மனிதக் காவலர்கள் பரமம் கணிணியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இயந்திர மனிதனின் பாகங்கள் சரிவர இயங்குவதை உறுதி செய்ய பரமம் ஒரு கட்டளை அனுப்பும். அந்த நேரத்தில் இயந்திர மனிதனின் லேசர் கன் செயலிழந்து போவதுடன் அவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பான். இந்தப் பத்து நிமிட அவகாசத்தில் இயந்திர மனிதனை செயலிழக்கச் செய்ய வேண்டும்”.
“இயந்திர மனிதனை இயக்கும் மின்சக்தி அதனுடைய வலது கால் முட்டிக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளது. லேசர் கன் அல்லது ஸ்டன் கன் மூலம் அந்த இடத்தில் லேசர் அல்லது உயர்ந்த மின் அழுத்தம் செலுத்தும் போது இயந்திர மனிதனின் மின் சக்தி வெடித்துச் சிதறும். இயந்திர மனிதனும் அழிவான்”
“பரமம் எப்படி கட்டளை அனுப்பும். நாம் கேட்டால் பரமம் ஒத்துக் கொண்டு கட்டளை அனுப்பமா” என்று கிண்டலாகக் கேட்டான் திவாகர்.
“பரமம் அனுப்புவது போல நாம் ஒரு குறுஞ்செய்தி மடிக்கணிணியில் தயார் செய்து நம்முடைய கணிணியின் ப்ளூ டூத் மூலமாக அனுப்ப வேண்டும்”
“இயந்திர மனிதக் காவலர்களின் ப்ளூடூத் எண் நமக்குத் தெரியுமா” என்றாள் சுமதி.
“நம்மிடம் உள்ள “ப்ளூ டூத் ட்ராக்கர்” வாயிலாகக் கண்டுபிடித்து விடலாம். பரமம் கணிணியின் ப்ளூ டூத் எண் எனக்குத் தெரியும். ஆகவே இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றாள் மாலதி.
நால்வரும் பரமம் கணிணி இருந்த கட்டிடத்திற்குச் சென்றனர். நான்கு இயந்திர காவலர்கள். தவிர காவலுக்கு வேறு ஒருவரும் இல்லை. கார்த்திக், திவாகரிடம் லேசர் கன்னும், சுமதி, மாலதியிடம் ஸ்டன் கன்னும் இருந்தது.
மாலதி கூறியது போல இயந்திர காவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். காவலர்கள் செயலிழக்க பத்து நிமிடத்திற்குள் மூன்று இயந்திர காவலர்களின் மின் சக்தியை தகர்த்தனர்.
மூன்றும் வெடித்துச் சிதறியது. நான்காவது காவலர் தப்பி விட்டார். அந்த காவலர் இவர்களைத் துரத்த திவாகர் தன்னிடம் இருந்த லேசர் கன் மூலம் சண்டையிட ஆரம்பித்தார்.
மற்ற மூவரும் இயந்திர விசை தேடி உள்ளே நுழைந்தனர். இயந்திர விசையின் “திற” என்ற விசையை அழுத்த அன்றைய தினத்திற்கான குறியீட்டின் குறிப்புகள் திரையில் வந்தன.
குறியீடு ஒன்று – குறிப்பு நான்கு இலக்க வர்க்க எண். “ அ அ க க “ என்ற வடிவத்தில் இருக்கும்.
குறியீடு இரண்டு – குறிப்பு – நான்கு இலக்க எண் – “ அ க க அ “ என்ற வடிவத்தில் இருக்கும். “ அ க க “ மூன்று இலக்க வர்க்க எண். “ க க அ “ இதுவும் மூன்று இலக்க வர்க்க எண். பத்து நிமிடத்திற்குள் குறீயீடுகள் பதிவிடப்படவில்லை என்றால் குறிப்புகள் மறைந்து விடும்.
“நான்கு இலக்க வர்க்க எண் என்றால் அது இரண்டு இலக்க எண்ணின் வர்க்கம். அப்படியென்றால் அது 32 முதல் 99 வரை ஏதேனும் ஒரு எண்ணின் வர்க்கமாக இருக்கும். இதைக் கண்டி பிடிப்பதற்கே பத்து நிமிடம் போதாது” என்றான் கார்த்திக்.
“இது தவறான அணுகுமுறை கார்த்திக். எண்ணின் வடிவம் “ அ அ க க “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த எண் பதினொன்றால் வகுபடக் கூடியது. இந்த நான்கு இலக்க எண் பதினொன்றால் வகுபடக்கூடிய ஒரு இரண்டு இலக்க எண்ணின் வர்க்கம். அதாவது 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 இவற்றில் ஒன்றின் வர்க்கம். இப்போது கண்டுபிடிப்பது எளிதல்லவா” என்றாள் மாலதி.
“நான் கண்டுபிடித்து விட்டேன். முதல் குறியீடு “ 7 7 4 4 “ இது எண் “ 8 8 “ என்பதின் வர்க்கம்” என்றாள் சுமதி. இதற்குள் ஐந்து நிமிடங்கள் கடந்து விட்டன.
இரண்டாவது குறியீடு “அ க க அ “ . அப்படியென்றால் “ அ 4 4 அ “ என்று இருக்கலாம். இதில் “ அ 4 4 “ மூன்று இலக்க வர்க்கம். 144 என்பது எண் 12 ன் வர்க்கம் என்றாள் மாலதி.
“441” என்பது எண் 21 ன் வர்க்கம் என்றான் கார்த்திக். அப்படியென்றால் இரண்டாவது குறியீடு “ 1 4 4 1 “ என்றாள் சுமதி.
எட்டு நிமிடங்கள் கடந்து விட்டன.
இரண்டு குறியீடுகளையும் பதிவிடப் பெட்டகம் திறந்து கொண்டது.
கார்த்திக் விசையின் நிலையை மாற்றிப் போட வெளியிலிருந்து “தொப்” என்ற சத்தம் கேட்டது.
நான்காவது இயந்திர காவலாளிக்கு பரமம் கணிணியுடன் இருந்த தொடர்பு அற்றுப் போனதால் இயந்திர மனிதன் செயலிழந்தான். நகரமெங்கும் தடைபட்ட மின்சாரம் செயல் பட நகரமெங்கும் விளக்குகள் ஒளி வீசின.
முதல் போரில் மனிதன் வெற்றி பெற்றான். ஆனால் இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வானா? காலம் பதில் சொல்லும்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings