அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி கதைகள்
நான் எழுத வந்திருக்கிறேன்.
மனிதர்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும். என்னவாக இருக்கும் என்ற புனைவை எழுத பணக்கார நண்பன் ஒருவனின் காட்டு பங்களாவுக்கு அழைத்து வர பட்டிருக்கிறேன்.
எழுதுவது துறவறம் போவது. எழுதுவது நாலைந்து திருமணம் செய்து கொள்வது. எழுதுவது தியானம். அதுவும் நல்ல எழுத்தை எழுதுவது அக்கப்போர்.
சுற்றிலும்… இளஞ்சிவப்பு பூக்கள் சூழ்ந்த தோட்டம். தென்றலை தேவைக்குத் தகுந்த மாதிரி கூட்டவும் குறைக்கவும் போலான புஸு புஸு வாவ். பேரமைதியின் முனையில் நின்று உயிர் அலற கத்தினாலும் யாருக்கும் கேட்காது. கேட்க கூடாது என்பது போல ஜன்னல் கண்ணாடிகள் வண்ண வண்ண ஓவியங்களால்…. வகை வகையான துருவங்களால் கட்டமைக்கப்பட்டிருந்தன.
ராஜ வாழ்க்கை என்று கூட மனசுக்குள்ளே இருக்கும் ஊர் சுத்தி நினைத்தான். ஒன்றும் தோன்றாத போது நிறைய எழுதி விடலாம் என்பது அனுபவம். நண்பன் வந்தான். நந்தவனம் தந்தான் என்று கூட கவிதை வந்தது. தூர வானத்தில் அடித்துக் கொண்டு சுழலும் கழுகுக்கு……மண்டைக்குள் என்ன துயரமோ. வானத்தில் எல்லாமே தூரம் தான். புரியாத போது தானே சுழலும் யாவும். பூமி கூட தனை புரிந்தால் நின்று விடாதா.
நண்பன் ஒரு மூன்றடி அலுமினிய உருவத்தை அழைத்து வந்தான். முதலில் திக் என்றிருந்தாலும்… பிறகு… ‘அட ரோபோ…!’ என்று மனம் அகல விரிந்து பார்த்தது. கண்கள் இணுங்கி குறுகி கவனித்தன. ஆசை ஆசையாய் இருந்தது. அத்தனை அருகே ரோபோவை காணும் முதல் தருணம் உள்ளே புறு புறுத்தது.
“இது குட்டி” என்றான். எனக்கு சிட்டி நினைவு வந்தது.
ஆச்சரியம்… தாளாமல்… அதையே பார்த்தேன். அதிகப்பிரசங்கி போல… குட்டி. பட்டென்று வயிற்றை கிள்ளி…..” ஹாய்.. விருந்தாளி யுத்த எசமானரே….. உம்மை பத்தி எனக்கு தெரியும். புரட்சி ஓங்குக… இன்குலாப் சிந்தாபாத் கூட்டம் தானே நீர். சே குவேரா.. பிடல் கேஸ்ட்ரோ இவுங்கள பத்தியெல்லாம் எழுதி இருக்கீர்தானே. எப்ப பாரு வம்பிழுத்துக்கிட்டு எல்லாருக்கும் குடைச்சல் குடுக்கற தீவிரவாதிதானே… ஆஹ் ஆஹ் ஆ ஹா ஆஹ்” என்று சிரித்தது. குரலில் வெண்கல பூச்சு.
நண்பன் ரட்சகன்….. ச்சூ… என்று குட்டியை பார்த்து ஒற்றை விரலை வாயின் குறுக்காக காட்டினான். கண்களின் அசைவு அப்படி பேச கூடாது என்பதாக இருந்தது.
“சரி சரி… சரிங்க எசமானரே” என்று வாயைக் கோணி ஒரு கூடுதல் வெட்டு வெட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டது.
‘ச்சோ ஸ்வீட்’ என்று முனங்கி கொண்டே அதனருகே சென்று….. “நைஸ் பாய்…” என்ற ரட்சகன்.. “யுத்தா…. உனக்கு ஹெல்ப்புக்கு தான் குட்டி இங்க இருக்கு.. என்ன வேணாலும் கேளு. செஞ்சு குடுக்கும். ஓகேடா நான் கிளம்பறேன். இனி நீயாச்சு… உன் ஸ்டோரி ஆச்சு.. குட்டி ஆச்சு” என்று டாடா காட்டியபடியே கிளம்பிய ரட்சகன் முகத்தில் காலை சூரியன்.. கண்ணொளி வீசி படர்ந்தான்.
குட்டி என்ன சொன்னாலும் செய்தது. கொய்யா பழம் வெட்டி கொண்டு வந்து நீட்டியது. லெமன் டீ தயார் செய்து கொடுத்தது. அருகே நின்று கொண்டு….” என்ன யுத்தா…..எழுதறீர்…” என்று கூட கேட்டது.
எனக்கு ஆச்சர்யம் தான். மூனடில… ஒரு மெஷின்… மனுஷன் மாதிரியே.. என்னெல்லாம் பன்னுது… விஞ்ஞான வளர்ச்சி மனுசன என்னென்னவோ பண்ணி வெச்சிருக்கு. கொஞ்சம் பயம் இருந்தாலும்….சதுர கன்னம் தொட கையை நீட்டினேன்.
கழுத்தை சற்று பின்னால் இழுத்துக் கொண்டு…”பேட் ஹாபிட்….” என்று முனங்கி கொண்டே பொய் கோபத்தில் முறைத்தது.
“ஐயோ.. பார்றா… சரி சரி.. நீ போ….நான் எழுதணும்” என்றேன். நெற்றி சுருங்கிய புன்னகை எனக்கு. கழுத்து திரும்பிய செல்லம் அதுக்கு.
குட்டி நகர்ந்து நகர்ந்து ஜன்னல் பக்கம் சென்று தோட்டத்தை பார்ப்பது போல உம்மென்று நின்றது.
*
எழுதுபவனின் தூக்கத்தில் என்ன நடக்கிறது. எல்லாமே தான். அருகே இருக்கும் சுவர் நகர்தலை உணர முடியும். கொஞ்சம் திறந்திருக்கும் ஜன்னலை நீண்ட கைகள் கொண்ட மறதி அடைக்காமல் விட்டிருக்கலாம். புரண்டு படுக்காமலேயே புரண்டு படுத்தலை உடல் உணரும். புன்னகை முகத்தில் எழுவதாக மூளையின் மூலையில் புது வடிவம் காணும். கூடுதல் சதைத் துணுக்கோடு சிறுமூளையின் கனம் கூடிக் கிடக்கும். மின் விசிறியின் அருகாமை முகத்தை ஒட்டி காற்றின் வேகம் கூட்டும். எழுதுபவனின் தூக்கத்தில்… சூனியம் சுழல சுந்தர வடிவில் பேரழகி ஒருத்தி நிர்வாணம் கூட சூடலாம்.
கண்களில் கற்பனை பூச்சிகளின் கயமுயாக்கள்…..மேலும் கீழும் ஊர்ந்தபடி இருக்க… திறக்க வேண்டாத முயற்சியோடு கண்களை இறுக மூடி இருந்தேன். கண்களுக்குள் இருக்கும் வெளிச்சத்தை மையத்தில் உருட்டி செஞ்சிருட்டில் பூஜ்ஜியமாக்க செம்பவள குட்டி சூரியன்கள் நெற்றியில் இரண்டுருள கண்டேன். கழுத்தில் கத்தி குத்து விழுந்தாற் போன்ற உள்ளெழுச்சி. உடமையற்று உயிர் மேலே எழுவதை போல உள்ளார்த்தம். உடல் வெடித்தது போல விசுக்கென கண்கள் விரித்தேன். மூச்சு நின்றது போல என்னையுமறியாமல் ஆ….வ்வென கத்தினேன்.
என் முகத்தருகே என்னை குனிந்து பார்த்துக் கொண்டிருந்த குட்டி……நான் கத்தவும் படக்கென்று முகத்தை பின்னோக்கி இழுத்து நகர்ந்தது.
“அப்போ இவ்ளோ நேரம் என் முகத்தருகே வந்து என்னை உத்து பார்த்துட்டு இருந்துச்சா….இந்த ரோபோ…”
சடுதியில் வியர்த்து விட.. வேகமாய் எழுந்து லைட்டை போட்டேன். ஒரு திருட்டு குதிரையின் சித்திரத்தைப் போல சுவரோரம் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்த குட்டி… ஒரு அரூபத்தின் வெம்மை நிறத்தை பூசியிருந்தது போல உணர்ந்தேன். என்னவோ சரி இல்லாதது போல முதல் முறை உள்ளே ஒரு சரிவு திடுமென ஏற்பட்டது. அந்த அறையில் நானும் அந்த ரோபோவும் அமைதியாக ஆளுக்கொரு மூளையில் நின்றிருந்தோம். என்னவோ தொண்டைக்குள் எனக்கு அழுத்தியது. முகத்தை இசைப்பது போல மெல்லமாக….’ குட்டி…’ என்று அழைத்தேன். வெளியே சுழன்றடித்துக் கொண்டிருந்த காற்று ஜன்னல் வரை வந்து வந்து வழி இன்றி முதுகு காட்டியபடியே ஒரு ஆதி குரங்கின் அட்டகாசத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. நீலமும் சிவப்பும் கலந்த வராண்டா வெளிச்சம் எதிலோ பட்டு எதையோ எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மெல்ல திரும்பி என்னை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் ஜன்னலைத் தாண்டி காற்றின் சூட்சுமம் தாண்டி…எங்கோ சூனியத்தை வெறிக்க ஆரம்பித்தது…குட்டி.
எனக்கு என்னை சுற்றி நாலைந்து கண்கள் உற்று நோக்குவதாக பட்டது. ‘ம்ஹும்…!’ என்று முனங்கி கொண்டே… “குட்டி நீ போ… நான் கொஞ்சம் தனியா இருக்கனும்” என்றேன். குரலில் வன்மையை வேண்டுமென்றே சேர்த்திருந்தேன்.
என் பக்கம் திரும்பாமல் அது பாட்டுக்கு நகர்ந்து அறையை விட்டு வெளியே சென்றது.
*
மனிதன் இல்லாத உலகம் என்னவாகும். மீண்டும் நல்ல மண்ணாகும்.
கேலியும் கிண்டலுமாக…. வம்பிழுத்தும்… பாட்டு பாடியும்… இசை ரசித்தும்.. பகலில்.. குட்டி நன்றாக சொல் பேச்சு கேட்கும் குரங்கு போல நடந்து கொண்டாலும்… இரவில் மூஞ்சை இறுக்கிக் கொண்டு… சார்ஜ் போன ரோபோ கட்டையாக நிற்பதும்… முறைப்பதும்…. அது வேறு மாதிரி… கொஞ்சம் பயத்தைக் கூட ஏற்படுத்தியது.
முன்பெல்லாம் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பக்கங்கள் எழுதும் நான் இங்கே வந்த இந்த 20 நாட்களில்.. மிக மிக குறைவாகவே எழுதி இருக்கிறேன். எழுத்துக்களில் குளறுபடி. நினைத்த மாத்திரத்தில் எழுத அமர்ந்தாலும்… எழுதியவைகளில் நினைத்தவை இல்லாமல் போகின்றன. மறதிக்கும் நினைவுக்கும் இடையே… பெரும்பசி வந்து வாயடைத்து விடுகிறது. ரசனையற்ற உற்றுநோக்குதல் சமீபத்திருக்கிறது. குட்டி எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என்னை உற்று பார்த்துக் கொண்டே இருக்கிறது. கூப்பிட்டு விசாரித்தேன்.
“என் மேல் எதும் கோபமா…?”
“இல்லை விருந்தாளி எசமானரே” என்று வாய் சுழித்து ஈ என்று சிரிப்பு சத்தம் தந்து நகர்ந்தது. லூசு ரோபோவா இருக்குமோ…?
உடல் வலி…உள்ளத்தின் கதவுகள் அடை பட்டது போல.. வாக்கியம் கிடைத்தும் வார்த்தைகள் கிடைக்காமல் அல்லலுற்றேன். பகலில் சொல் பேச்சு கேட்கும் குட்டி இரவில் முள் மீது நிற்பது போல பார்த்தது. நெருங்கவும் விலகவும் முடியாத இசை ஒன்றை பிரக்ஞையின் சிலிர்ப்பில் உணர்ந்தபடியே இருந்தேன். நிறமும் குணமும் அற்ற உறவும் உடைமையும் அற்ற.. நெடி உணரா சம்பவங்களை நிகழ்த்துவது போல நம்பினேன். இந்த குட்டி ஒரு பேய் பிடித்த ரோபாவாக இரவெல்லாம் ஏதாவது ஒரு மூலையில் நின்று என்னையே உற்று நோக்குவதாக பட்டது. எப்போதெல்லாம் விழிக்கிறேனோ அப்போதெல்லாம் அது விழித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் காடு கொண்ட இரவில் பச்சையமற்ற வெண்கல சாயம் பின்னிரவில் எழும்பி பரவுவதை குட்டியின் கண்களில் கண்டு அதிர்ந்து எழும்பி அமர்ந்தேன். கனவுக்கும்.. நிஜத்துக்குமான இடைவெளி குறைந்து கொண்டு வருகிறதோ… நண்பனுக்கு அலைபேச முயற்சித்தேன்.
“எசமானர்… வெளிநாடு சென்றிருக்கிறார்….. விருந்தாளி எசமான்” என்று தலை தாழ்த்தி பதில் சொன்ன குட்டி பகலில்.. மிருதுவான நண்பனாகவே தெரிந்தான். வாசலில்.. வராண்டாவில்……விரிக்கப்பட்டிருக்கும் புல் மெத்தையில்… வீட்டை சுற்றி தானாக நடக்கும் நடை பயிற்சியில் தமாசாக பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் குட்டி இரவானால் ஜன்னல் வழியே நெடுந்தொலைவை நீட்டி நோக்குவது தினமும் நடந்தது. பேசினால் பதில் இல்லை. பார்த்தால்… பார்த்துக் கொண்டே இருக்கிறது. இரவும் தனிமையும் ஒரு இயந்திரத்தை உற்று நோக்கும் சக்தியைப் பறித்திருந்தது. அது பற்றி பகலில் கேட்டால்… பாட்டு பாடி டாபிக்கை மாற்றும் குட்டி கொஞ்சம் வில்லங்கம் தான் போல.
வந்த காரியமும் சரியாக நிறைவேறவில்லை. மண்டைக்குள் எதுவோ சுழலாமல் நிற்கிறது. சுழலாத ஒன்றை சொற்களில் வடித்தெடுக்க முடியவில்லை. நினைத்தவைகளையே திரும்ப நினைக்கிறேனோ….. மறந்தவைகளை மறந்து தான் போனேனோ. நினைவுக்கும் மறதிற்கும் இடையே ஒரு ஸ்தம்பித்தலின் நிலையை எதிர் கொண்டு நானே காண்பதில் எதிரே கண்ணாடி இருக்கிறதோ என்று கூட சந்தேகம் வந்தது.
பசி இல்லை… தாகம் இல்லை. தூக்கமும் பெரிதாக இல்லை. திடீர் திடீர் என அழ தோன்றும் எண்ணங்களை சிரித்து மழுப்புகிறேன். எண்ணிலடங்கா எண்ண அலைகளை நானே மூடி போட்டு அமிழ்த்துகிறேன். எதுவோ கொதிக்கிறது. எதுவோ துடிக்கிறது. சூனியமும்… ஒற்றை விரலும்.. நெற்றியில் சுழல்கிறது. நான் என்னுள் இருந்து என்னை மீறி வேறு எதுவோ செய்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது வரும் துக்கம் அவ்வப்போது வரும் சமாதானம்.. அவ்வப்போது வரும் தகிப்பு… அவ்வப்போது வரும் அமைதி… எதிர் இருந்து உள் வந்து உள் இருந்து எதிர் நீளும் வினையின் குறுக்கு வெட்டு தோற்றத்தில்… ஜன்னல் தாண்டி குட்டியைப் போல நானும் வேடிக்கை பார்க்கிறேன். மிக சுலபமானது வேடிக்கை பார்ப்பது. மிக கடினமானது வேடிக்கை நிகழ்த்துவது. இங்கிருந்து அங்கும்… அங்கிருந்து இங்கும்… இடையே ஒரு பரிணாம சதுரம் கண்ணாடியாய் நிம்மதியற்று நிற்கிறது.
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன. நான்கு பக்கம் சேர்ந்தாற் போல இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தாற்றல் என்னானது. என் சிந்தனை சீக்கானதா. இங்கே என்ன நடக்கிறது. ஏன் இத்தனை அமைதி இங்கே. ஏன் சுற்றி இருக்கும் எந்த ஒரு மரத்திலும்… பறவை பட்சிகள் இல்லை. வீசும் காற்றில் ஏன் இரும்பின் இறுக்கம். தெரியும் வானத்தில் ஏன் அலுமினிய வண்ணம். ஊரை விட்டு ஒதுக்குபுறமாக 30 கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் இத்தனை பெரிய பங்களாவின் வசீகரம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அடர்ந்த காட்டுக்குள் நழுவிக் கொண்டிருக்கிறது. முகம் சொரிந்த போது தோன்றியது. நகங்களை எப்போது வெட்டினேன். ஆனால் வெட்டப்பட்டிருக்கிறது. நான் தூங்குகையில் எதுவோ நடக்கிறது.
நான் தூங்குகிறேனா தூங்க வைக்கப் படுகிறேனா..
இட்லியை கஷ்டப்பட்டு பிய்த்து வாய்க்குள் போட்டேன். பார்த்துக் கொண்டே இருந்த குட்டியை பார்க்க ஏனோ பாவமாய் இருந்தது. ஒரு விள்ளல் பிட்டு நீட்டினேன்.
“லூசு எசமானரே.. நான் எப்படி இட்லி உண்பேன்.. கொஞ்சம் மின்சாரம் கொடுத்தால் உரிந்து கொள்வேன்… நான் வாட்டர் மேன் இல்லை… பாட்டெரி மேன்” என்று எதுகை மோனையில் கலாய்த்தது. மொக்க இயந்திரம். சிரிக்கும் போது கூட அசையாத முகம். வாய் விட்டு சொன்ன போது…. நானும் தான் சிரித்துக் கொண்டிருந்தேன். திடும்மென சந்தேகம் வந்தது. என் முகம் அசைந்ததா… தொட்டு பார்த்தேன். தெரியவில்லை.
ஹா ஹா ஹா…… எனக்கு கேட்ட சிரிப்பு குரல் குட்டிக்கு கேட்டதா தெரியவில்லை. எனக்கே கூட சந்தேகமாகத்தான் இருந்தது. நான் வாய் விட்டு சிரித்தேனா….இல்லை வாய்க்குள்ளேயே சிரித்தேனா. மொத்தத்தில் நான் சிரித்தேனா.. இல்லை சிரிப்பு சத்தம் மட்டும் எனக்கு கேட்கிறதா…இல்லை இங்கிருந்து சென்று விட வேண்டும்.
நண்பனின் நண்பன் போல. இறுகிய உடலோடு இருந்த கண்களோடு ஒருவன் வந்தான். உணவு பொருள்கள் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றான். அவனிடம் எந்த கேள்விக்கும்…பதில் இல்லை. நேர்கொண்ட பார்வை கூட இல்லை. சூனியம் பார்த்த புன்னகை மட்டும் தான். எப்போதோ செத்து விட்டவன் போன்ற உடல்மொழி. இப்போதும் செத்து தான் நிற்பது போன்ற பாவனை.
என்ன கருமம் இது… தலை சுற்றி தலை கீழாய் கனவுக்குள் நடப்பது போல நம்ப ஆரம்பித்திருந்தேன். என்ன இது.. குட்டி சொல்லும் வேலையெல்லாம் பலபோது நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அப்போது தான் கவனித்தேன். குட்டி சொல்ல சொல்ல ஆம்லெட் செய்தேன். மேகி போல எதோ ஒன்றை தயாரித்தேன். பால் காய்ச்சினேன். சடுதியில் கோபம் வர… “ஏய் குட்டி.. எனக்கு உதவி செய்ய தான் நீ இருக்க.. ஆனா…நீ என்னை வேலை வாங்கிட்டு இருக்க……!” என்று கத்தினேன்.
“ஏன் செஞ்சா என்னவாம்.. பெரிய மனுஷ புடுங்கியா நீ….”
ஏய் என்ன சொன்ன என்ன சொன்ன…..இயந்திர சனியனே என்னடா சொன்ன…”- கையை ஓங்கி கொண்டு அதன் அருகே சென்றேன்.
கழுத்தைத் திருப்பி என்னை உற்றுப் பார்த்தபடியே……” என்னடா ங்கொம்மா…” என்று முனகியது.
என் கண்கள் இருட்டிக் கொண்டு வர தடுமாறி நாற்காலியில் சரிந்தேன்.
“எசமானரே என்ன…..நீங்களாவே மாறி மாறி பேசிக்கறீங்க….” – நீரை முகத்தில் தெளித்து என் மயக்கத்தை தெளிய வைத்துக் கொண்டே.. “என்னாச்சு உங்களுக்கு… உடம்பு ஏதும் சரி இல்லையா…” என்று கேட்ட குட்டியின் கண்களில் மனித சிமிட்டல். என் கண்களிலோடு நொடி நேர ரோபோதனம்.
*
இருப்பதிலேயே… தூங்குவது தான் சிரமமான காரியம். அது போர் அடிக்கும் செயல்.. கால விரயம் கூட. காலையில் பல் துலக்க.. குளிக்க… இயற்கை உபாதைகளை கழிக்க…. தினமும்.. இந்த உடல் அசுத்தத்தின் அகங்காரத்தை தன்னுள்ளும் தன் மேலும் படிந்து கொண்டே இருப்பதை உள்ளிருந்து எதுவோ தடுக்கிறது. எனக்கு ஒரு நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாள் வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. தோன்றுவதெல்லாம் மூளை உஷ்ணத்தின் துணுக்குகளால் உடல் புரிந்தும் கொள்ளும் போது உள்ளூர சமநிலை எதுவோ எப்படியோ குலைகிறது. குளிப்பதற்கு சோம்பேறித்தனம் வருவதெல்லாம்….உண்ண பிடிக்காத நிலையெல்லாம்… சிறுநீர் கழிக்கத் தோன்றாத கவனமெல்லாம்.. எதன் போக்கில் எங்கனம் வந்து அப்பிக் கொண்ட சித்திரங்கள். சித்திரமற்ற நிறப்பிரிகைகளாக மாறி விட தோன்றும் சுவரற்ற வெறுமையில்.. நேராக கண்கள் நுழைந்து உடல் நிரம்பிட விரும்பும் காற்றின் வெளி நடனத்தில் உள்ளொன்றும் புறம்பொன்றும் இல்லாத முழுமையை இவ்வுடல் விரும்புகிறதா. விட்டகல நினைக்கும் உயிரின் வேதியியலை வீண் சுமையென கருதுகிறதா. தலை வலியைக் கூட நெஞ்சில் உணர்கிறேன். காதில் கேட்காமல் நேராக என்னுள் ஊடுருவும் சப்தங்களை மிக நுட்பத்தோடு விவரணையாக்குகிறேன். பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
உளறுவது போல நம்பும் நானே கட்டவிழ்ந்து கொண்டிருப்பதாகவும் நம்புகிறேன். ஒரே கல்லில் ஏழெட்டு முறை தண்ணீரில் சிதற முடியும் காட்சியை கண நேரத்தில் நினைத்து என் கண்களின் வழியே பிரிண்ட் எடுக்க பேராசை. என் சிந்தனை கலைத்தது அல்லது சிந்தனை ஏற்றியது குட்டி.
குட்டியின் தீவிரத் தன்மையின் தத்ரூபம் அதன் சிணுக் நடையில் காண்கிறேன். மனிதனை எதிர்க்கும் தீவிரம் அதன் சொல்லாடலில் பதிந்தது எப்படி. சோர்ந்து சுருங்கும் கண்களை பிடுங்கி எறிந்து விடலாம் போல இருந்தது. பிடுங்கவும் பொருத்தவும் மிக எளிதான ஓர் உடல் தேவை. சிதிலமடைந்த சிறு எடை குட்டிக்கு. சித்திர குள்ளனை போல இருக்கும் சீன நடை அதற்கு. வீட்டுக்குள் எங்கு பார்த்தாலும் குட்டி நடந்து கொண்டே இருக்கிறது. வேலை இருக்கிறதோ இல்லையோ ஆசுவாசமற்ற அலைக்கழிப்பு குட்டியின் வடிவத்தில் உணர்கிறேன். எல்லாம் பற்றியும் பேசும் குட்டிக்கு எதுவுமே பேச இருப்பதில்லை இரவில். மூன்றடி சாத்தானாக தெரியும் குட்டியிடம் இரவில் முகம் கொடுத்து பேசவும் பயம். ஜன்னலோரம் நின்று எதிரே தெரியும் காட்டை வெறித்துக் காணுதல் அதன் இரவு வேட்டை. இரவை துளைத்து விரட்டி விடும் போக்கு அதன் சிமிட்டா கண்களில் இருக்கும். இமைக்கா நொடிகள் இந்த ரோபோவுக்கானது.
சமீப நாட்களில் எழுத மறந்தாலும்…. பத்து ரூபாய்க்கு பாலிதீன் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் எனக்கு பிடித்த ஜவ்வரிசி மஞ்சள் குடலை தின்ன மறக்கவில்லை மனம். சிறுவயதில் ஏற்பட்ட ஆசை வயது ஏற ஏற பேராசையாக மாறி இதோ நேற்று நண்பனின் நண்பன்….அந்த புன்னகை மன்னன்.. பூவிழி கண்ணன்…. பேசா மணிவிளக்கு.. சூட்சும வடிவாளன்… உணவு பொருட்கள் கொண்டு வருகையில் எனக்கு பிடித்த குடல் பாக்கெட்டையும் கொண்டு வந்திருந்தான். நான் கூனி குறுகி நன்றி சொன்னேன். அவனை ஆராதித்தேன். சக மனிதனை சக மனிதனாக மதிக்காத அவனை போற்றினேன். வாழ்த்தினேன். கட்டிலில் சாய்ந்து ஒரு நோயாளியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு…… நினைத்து நினைந்து தின்றேன். ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு துணுக்கு குடலையும் மாட்டிக் கொண்டு ஒவ்வொன்றாக கறக் முறுக் என்று கடித்து தின்றேன். திடும் திடும்மென மண்டைக்குள் சுழலும் நிறமறியா பயத்தை குடல் தின்று தான் போக்குகிறேன் போல. பாதி முடிந்து விட்டது. மீதி முடிய கூடாது.
*
தலைக்கு மேலே உச்சி இடித்து நொறுங்குவதை உணர்ந்தேன். வானத்தின் வாய்க்குள்ளிருந்து வெளிவரும் புலி வாலின் நெளிவு சுழிவைப் போல நொறு நொறு சத்தம். முன்னொரு காலத்தின் பெருவெடிப்பு சத்தம் காதுக்குள் இரைய.. திடும்மென விழித்தேன். விழித்தேனா என்று விளங்காத திரு திரு என் முகத்தில். அறையின் மூலையில் அரையடிக்கு அமர்ந்து பாலிதீன் பாக்கெட்டில் இருந்து மொறு மொறு குடல்கள் ஒவ்வொன்றாக எடுத்து வாய்க்குள் போட்டு நொறுக்கிக் கொண்டிருந்தது குட்டி. கட்டிலோடு நிமிர்ந்து நின்றது போல அல்லது கட்டிலே நிமிர்ந்து கொண்டது போல.. தலையை வெட்டப்படும் ஆட்டின் கடைசி நேர சிலுப்பாக சிலுப்பிக் கொண்டு பார்த்தேன். அந்த ரோபோ குடலை வாய்க்குள் திணித்து எச்சில் ஒழுக தின்று கொண்டிருந்தது.
“ரோபோ எப்படி இதை தின்னும்…!!!?”
“ஏய்… ரோபோ…….ஏய் குட்டி……” கத்திக் கொண்டே நான் அதை நோக்கி முன்னோக்கி வேகமாய் பாய்ந்தேன். நகர்ந்தேன். தவழ்ந்தேன். நடக்க மறந்த உடல் எனதாகிப் போனது. இசைக்க மறந்த வீணையின் நினைவு படிந்த நரம்புகளின் நூற்றாண்டு தனிமையைப் போல…….முதுகெலும்பில்… பின்னல்களற்ற…..மூளை நரம்பில் வண்ணம் மாயம் சூழ்ந்த புதியவன் போல உணர……மீண்டும் பழைய சேனலுக்கு தாவும் அலைக்கற்றையின் இம்சையை என் காதுகள் நாய் வாயில் குரைக்க…… நான் குட்டியின் தலையை பிடித்து ஆட்டினேன். அதன் உடலை பிடித்து குலுக்கினேன். குட்டி பயந்து நடுங்கி குடல் பாக்கெட்டை கீழே போட்டு விட்டு வேகமாய் தவழ்ந்து தவழ்ந்து சுவரோரம் தன்னை ஒட்டிக் கொண்டு ஒரு சிறுவனைப் போல மிரண்டு மூச்சிறைந்தது.
“ரோபோவுக்கு மூச்சா……!!!?”
படபடவென இருக்கும் நினைவுகளின் மிச்சத்தில்… குட்டியை பிடித்து களைத்து அடித்து குலுக்கி.. தள்ளி விட குட்டியின் வெண்கல ஆடை கழன்று கொண்டது. என் சிறுகுடல் வாய்க்குள் வந்து கொட்டுவது போல வாந்தி எடுத்தேன். குட்டியின் உடல் சுருங்கி.. நைந்து.. நரம்புகள் வெளியே தெரிய….. அதில் ஒயர்கள் பின்னப்பட்டு.. தலையில் குத்தப்பட்ட…..கொத்தப்பட்ட சதை ஓட்டைகளில் எல்லாம்.. ஒயர்களும்.. கணிப்பொறி வஸ்துகளும்… பின்னப்பட்டு….ஒட்டப்பட்டு…… ஒரு ஏலியனாக காட்சி தந்தது. நீரில் பத்து நாட்கள் ஊறிய உடல் வண்ணம். சதை பிய்ந்து விழும் தோரணை. உடலில் ஊடாக வளைந்து நெளிந்து மூளையில் சொருகப்பட்ட கணிப்பொறி உபகரணங்கள். வட்டத்தில் சதுரத்தில் செவ்வகத்தில்… தொழில்நுட்பம் மனிதனை உயிரோடு கொன்று கொண்டிருக்கும் ரகசியமாய் உதிர….. ரோபோ…தகதகவென மின்னியது.
“இதற்கு நீங்கள் அனுமதிக்கப்படவில்லை… தொடாதீர்கள். தொடாதீர்கள்… பிரச்சனையை சந்தீப்பீர்கள்…” என்று தொடர்ந்து ரெட் அலெர்ட் சத்தத்தில் கணிப்பொறி குரலாக குட்டி பேசிக் கொண்டே….. இடையே…..அண்ணே என்னைய காப்பாத்துங்க…..உங்களையும் காப்பாத்திக்கோங்க… இங்க இருந்த தப்பிக்க பாருங்க….. சொன்னா கேளுங்க… இதற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள்.. சொன்னால் கேளுங்கள்.. என்னை தொந்தரவு செய்யாதீர்கள்… என் வடிவத்தை குழைக்காதீர்கள்… இன்னமும் நான் முழுதாக இயந்தரமாக ஆகவில்லை…… அண்ணே….. என்னை மெஷின் ஆக்கிட்டானுங்க…நான்…… என்னை தெரியுதா….. நான் யார்னு தெரியுதா…….என்னை பாருங்க… நான் யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. என் எசமானர்களுக்கு நான் அடிமை. அண்ணே நான் அடிமையா இருக்க விரும்பல… என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க.. இவனுங்க கேள்வி கேக்கற மனுஷங்களை அழிக்க வந்த பணக்கார பேய்ங்க…. ”
குட்டி பாதி இயந்திரமாகவும் பாதி சிறுவனாகவும் மாறி மாறி பேச நானும் மாறி மாறி உணர்ந்தேன். உணர உணர உளறும் உண்மைகள் என்னில் உழன்றன. குட்டி ஜன்னலை வெறித்து பார்த்துக் கொண்டே…சட்டென்று திரும்பி என்னை உற்று நோக்க….. அப்போது தான் அந்த முகத்தை மூளையின் அடியாழத்தில் இருந்து என்னால் வெளியே எடுக்க முடிந்து சிந்திக்க முடிந்தது.
“இந்த படை போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா….இன்குலாப் ஜிந்தாபாத்…
நடுவர் அவர்களே…. இப்ப நாட்டுல ஆட்சியா நடக்குது… கோமாளி காட்சி தான் நடக்குது…..உலகமே பத்து பணக்காரனுக்குதான வேலை பாக்குது…”
“யார்ரா இந்த பொடியன்… இந்த போடு போடறான்… இவ்ளோ சின்ன வயசுல… இந்த தாக்கு தாக்கறான்….” டிவியில் அவன் பேச்சை பற்றி தான் அடுத்த பத்து நாட்களுக்கு எல்லாரும் பேசினார்கள். ட்ரெண்டிங்கில் தமிழ்நாட்டையே அலற விட்ட பையன் தான் இந்த குட்டி.
“அப்டீன்னா என்ன நடக்குது இங்க… இவன் ஏன் இங்க இப்டி இருக்கான். நான் ஏன் இங்க இப்டி இருக்கேன்..என்ன ஆச்சு எங்களுக்கு….” தலை சுற்றி உடல் களைத்து எதுவோ உந்தித் தள்ள…நான் என்னையும் மீறி ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே புற்கள் முளைக்க செய்திருந்த வராண்டாவில் விழுந்தேன். அறையில் இருந்து பார்க்கும் போது பரந்து விரிந்து பச்சயம் பூசி படர்ந்து சரிந்து நின்ற காட்டுக்குள் தான் விழுந்திருந்தேன். ஆனால் இப்போது அங்கு காடில்லை. காடு கொண்ட காட்சி திரைதான் என் மீது விழுந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்படி என்றால் மேலே அறையில் இருந்து காணுகையில் காடு போல காட்சி தந்த ஒளி அலை வடிவ திரை இது. காட்டை ஒளிர்ந்து கொண்டிருந்த அலைகளின் நடுவே வண்ணம் மினுங்க…. எண்ணம் குழம்ப…நான் விழுந்து எழுகையில்.. அங்கே கட்டடங்கள் நீல் வரிசையில்..அடுக்கடுக்காய் ஒரு மருத்துவமனையின் வார்டு போல தெரிந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அலுமினிய பூச்சு கொண்ட பூமி. காற்று இருக்கிறதா என்று எத்தனை முறை மூச்சிழுத்து பார்த்தாலும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
எனக்கு நடக்க மறந்திருந்தது. இந்த கால்களை எப்படி எடுத்து பூமியில் நடுவது. யாராவது கட்டளை இட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. கைகளின் இயக்கம் ஒரு இயந்திரத்தின் அசைவைக் கொண்டிருந்தது. என் கண்கள் கூட கழுத்தோடு சேர்ந்து தான் திரும்பியது. பார்வையில் எல்லாமே வெளியை ஊடுருவும் கதிர் அலைகளின் குவியல் போல தான் இருந்தது. நினைவு வந்து வந்து போய் கொண்டிருந்தது. மூச்சை இழுக்க மூச்சின் உணர்வலைகள் மிக குறைவாகவே மூளைக்குகள் சென்று வருவதை உள்ளிருந்து விவர குறிப்பு உணர்த்தியது. நரம்புகளின் வழியே காற்று நுழைந்து வெளியேறும் உரசல் சப்தங்களை ஒரு பெரும் வதையின் ஊடாக உணர்ந்து உணர்ந்து மறந்தேன். உருண்டு உருண்டு ஒரு மனித பாம்பாக அந்த வார்டுகளுக்குள் நுழைந்தேன். மூளை புரள்வதாக நம்பியது. கால்கள் நடந்தன என்று தான் நம்பினேன். என் கண்களின் பச்சை ஒளிர்வு ஒளிர்ந்து ஒளிர்ந்து குறைந்து நிறைந்து.. நான் பாரம் கொண்ட பொருளைப் போல என்னையே கண்டேன். என்னில் எண்களின் அதிர்வலைகள் நிரம்பி இருந்தன.
வார்டுகளில் வரிசையாக அறைகள் இருக்க…..ஓர் அறையில் குட்டியை போலவே பாதி மனிதனாகவும் பாதி இயந்திரமாகவும்…. ஒருவன்… தலையை ஆட்டி ஆட்டி சுவற்றைப் பார்த்து இயந்திர மொழியில் எதையோ பேசிக் கொண்டிருந்தான். அந்த அறை முழுக்க ஏதேதோ தொழிநுட்ப வஸ்துக்கள். ஒரு ஆங்கில அறிவியல் படத்துக்குள் நுழைந்து விட்டது போல இருந்தது. அந்த அறையே பூமியில் இருந்து 30 அடிக்கு மேலே பறந்தது கொண்டிருப்பது போன்று காட்சி தந்தது. குளிரூட்டப்பட்ட வெப்பம் சுழல திரும்பும் பக்கமெல்லாம் திசை மாறிக் கொண்டே இருக்கும் முட்களற்ற பெண்டுலம் அசைந்தபடியே இருந்தது.
அவனை உற்று நோக்க நோக்க….என் நினைவின் சத்தம் பேரிரைச்சலாய் என்னுள் வந்து வந்து போனது. இவனை……இவனை…..நான் பார்த்திருக்கேன்.. எனக்கு தெரியும் இவனை. இவன்….இவன்….இவன்…ஒரு இயற்கை விவசாயி. இயற்கை விவசாயத்தில்.. முனைவர் பட்டம் பெற்றவன். எனக்கு நினைவு மங்கியது. அறையின் நுட்பம் கொப்பளித்துக் கொண்டு எப்பக்கமிருந்தும் வந்து தாக்கியது. கீழே கிடந்த என் உருவத்தை புரட்டி புரட்டி நகர்ந்தேன். ஆனால் நடந்தேன். எனக்கும் எனக்குமான இடைவெளியை உணர முடிந்தது. நானே யாரோவாகவும்…..அந்த யாரோ நானேவாகவும்….சில நொடி புள்ளியில் எதுவோ இணைத்து இணைத்து துண்டித்துக் கொண்டிருந்தது.
அடுத்த அறையில் கண்ட ஒரு பெண் பிள்ளை அதே போல ஒயர்களால் நரம்பின் துவாரங்களில் நுழைக்கப்பட்டு… உடல் இளைத்து ரப்பரை போல காட்சி தந்தாள். அவள் ஒரு ரோபோவின் உடையை போர்த்திக் கொண்டு தலையை கச்சிதம் தாங்காமல் ஓர் இயந்திர கதியில் அங்கும் இங்கும் அசைத்தபடியே அறையில் சுவற்றில் இருந்த திரையைப் பார்த்து… “நான் உங்கள் அடிமை.. எசமானர்களே.. நீங்கள் சொல்வதை செய்யத்தான் நான் இருக்கிறேன். எனக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் தேவை இல்லை. நான் எக்காலத்துக்கும் தங்களுக்கு அடிபணிந்த ரோபோ. காசு கொடுங்கள். நீங்கள் சொல்லும் ஆட்களுக்கு ஓட்டு போடுகிறேன். இலவசமாக எதை வேண்டுமானாலும் கொடுங்கள். பல்லை இளித்துக் கொண்டு வாங்கி தலை குனிந்து உம்மை துதிக்கிறேன். ஓட்டே இல்லை என்று விரட்டி அடியுங்கள். தங்கள் சொல்லுக்கு தலையால் நடக்கிறேன். நான் உங்கள் அடிமை.”
அயோ இவ.. இவள்…
துப்பாக்கி சூட்டுக்கு எதிராக கொடி பிடித்தவள்…. நீட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தவள்…. சாராய கடைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தியவள். இவள் எப்படி இங்கு…!?
என் நடையில் தினுசு கூடி இருந்தது. பிட்டத்தை கிளப்பி கிளப்பி நடந்தது போல இருந்தது. கட்டுப்பாடற்ற ஒப்புக் கொடுத்தல் என்னில் வியர்வையாய் வழிந்தது. ஆனால் வியர்வை இல்லை. வடுவின் நினைப்பு மட்டும்.
அடுத்த அறையில்….. அவன் ஒரு மருத்துவன். பொது மக்களிடையே அஞ்சு ரூபாய் டாக்டர் என்று பெயர். மனித கடவுள் அவன். அதிகமாக பொது நல வழக்கு போடுபவன். ரோடு சரி இல்லையா…தண்ணி வரலையா… பஸ் வரலையா… கூட்டம் கூட்டி ரோட்ல உக்காந்துருவான். நினைவு தப்பி தப்பி….மறதி கொட்டி கொட்டி தலை இல்லாமலும் நகர்ந்து கொண்டே இருக்கும் கரப்பான் பூச்சியின் மேலாக பூமியை புரட்டிக் கொண்டிருந்தேன்.
அடுத்த அறையில்…இருந்தவன்…. “தண்ணிய அந்நிய நாட்டுக்கு தார வாக்கிறியே…. நியாயமா” என்று யூ டியூபில் ” கேடியே உள்ள வராத…ஊர் சுற்றியே திரும்பி போ” என்று அதிகார வர்க்கம் செய்யும் அத்துமீறலை புள்ளி விபரத்தோடு எடுத்து கூறியவன். மறதி கிட்ட வந்து எட்ட என்னை தள்ளி தள்ளி நகர்த்தியது.
எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. அதிகார வர்க்கத்துக்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களை எல்லாம் கொண்டு வந்து கொட்டடியில் அடைத்து அவர்களின் அறிவை அழித்து… சொல்வதைக் கேட்கும் ரோபோக்களாக மாற்றி சொல் பேச்சு கேட்கும் இயந்திர எண்ணங்களை உள் செலுத்தி… காலத்துக்கும் அடிமையாகவே மாற்றுகிறார்கள்.
அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மீம்ஸ் போடுபவன்….கார்ட்டூன் வரைபவன்…மேடையில் முழங்குபவன்… டிவியில் கருத்து சொல்பவன்… பட்டிமன்ற பேச்சாளன்… லஞ்சம் வாங்காதவன்.. மக்களுக்கு நெருங்கிய காவலன்… நேர்மைக்கு வாதாடும் வக்கீல்…. என்று அந்த பரிசோதனை கூடத்தில் மனித இறப்பும்.. இயந்திர பிறப்பும் தொடர்ந்து ஓர் வடிவமைக்கப்பட்ட தந்திரத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த சுற்று வட்டார வெண்கல வனம் புல் பூண்டுகளை செடி கொடிகளை வேரோடு அழித்திருந்தது.
நானும் தொடர்ந்து அதிகார வர்க்கத்துக்கு எதிராக எழுதி குவிக்கும் எழுத்தாளன் தானே. அதனால் தான்..என்னையும்.
நான் கழுத்துடைந்த பாம்பைப் போல நகர்ந்தேன். அவர்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணின் மைந்தர்களை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி குப்பையில் போட்டு விட்டார்கள்.
நீரிலிருந்து…..நிலத்திலிருந்து……காற்றிலிருந்து…….நெருப்பிலிருந்து……..ஆகாயம் உட்பட அவர்கள் மாற்றத்தின் ஏதேச்சதிகாரத்தை விதைக்க ஆரம்பித்து விட்டார்கள். தொழில் நுட்பத்தின் தீவிரத் தன்மையை மிக லகுவாக தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் அதிகார போதையின் உச்சத்தில் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறார்கள். சாவே இல்லாத பூமியை உருட்டுவதாக அவர்களையே நம்பி நம்பி ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். எதுவெல்லாம் இயற்கைக்கு எதிராக இருக்கிறதோ அது அறிவியலே ஆனாலும் அது அழிவு தான். அறிவியல் கண்டு பிடித்த அணுகுண்டு என்ன செய்ததென்று அறிவோம் தானே. கண்ணுக்கு தெரியாத ஒவ்வொரு வியாதியும் மனிதன் தன் எல்லையை மீறியதால் வந்த வினை. தேநீரில் ஆரம்பித்து தேகத்தின் வடிவம் வரை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். உயிரின் உயிர் தன்மையை மட்டும் உரிந்து எடுத்து விட்டு உடலின் ஸ்திரத் தன்மையை கட்டுப்பாட்டுக்குள் கொள்ளும் மாய வித்தையை இந்த அறிவியல் கண்டடைந்திருக்கிறது. அதன் அதி நவீன பரிணாம வளர்ச்சியில் மானுட குலத்தின் அடுத்த கட்டமாக இந்த ரோபோ சைத்தானை செய்து பார்க்கிறார்கள். மூலக்கூறுகளின் மறுதலிப்பை மையத்தில் நின்று குளறுபடி செய்து புட்டியில் அடைப்பது போல வெண்கல ஆடைக்குள் எதிர்க்குரல் எழுப்பும் மனிதர்களை எல்லாம் அடைத்து அடிமையாக்குகிறார்கள். உலகமே ஒரு குடையின் கீழ் என்ற ஒற்றைத் தத்துவத்தை தங்கள் அதிராக அரசியல் சூத்திரத்தின் வாயிலாக கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.
சுழல சுழன்ற எழுந்த ரோபோதனம் மிக லாவகமாக சூழ்ந்து நிற்க.. எதிரே சூட்கேஸோடு வந்து கம்பீரமாய் நின்ற எட்டப்ப நண்பன் ரட்சகன்……” என்ன நண்பா….எப்படி இருக்கிறாய்…… இதோ… உங்கள் இன்னொரு புரட்சியாளன். பறை அடித்து வீதி நாடகம் போடும் உங்கள் தோழன் இசையன். அவனும் உங்களை போலவே வெகு விரைவில் எங்கள் அதிகார தோரணைக்கு முன் முட்டியிட்டு தொழுக காத்திருக்கிறான்….”என்றவன் எதுக்கெடுத்தாலும் கேள்வி கேக்குறது….இல்ல… ஒரு பய மிஞ்ச மாட்டீங்கடா……” என முனகினான்.
நான் ரட்சகரைப் பார்த்துக் கொண்டே……நடுங்கும் வெண்கலம் பூட்டிய உடையோடு கணக்கச்சிதமாக……இசையன் அமர்ந்திருந்த முகப்பு அறைக்கு ஒரு நன்றியுள்ள பூனையைப் போல ரட்சகர் பின்னால் சென்றேன். சற்று முன் பேசிக்கொண்டே ரட்சகர் என் தலைக்குள் கையை விட்டு எதுவோ சரி செய்தார். அவர் சொல்வது எல்லாம் சரி தான். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. மிச்சம் பத்து பதினைந்து சதவீதம் இருந்த ‘நான்’ ம் மறந்து போனது.
இசையரைப் பார்த்து கும்பிட்டேன். வணக்கம் விருந்தாளி எசமானரே…
“இசையன் இது யுத்தன் ரோபோ… உங்களுக்கு இங்கே உதவியா இருக்கும். நீங்க இங்க இருக்கற ஒரு மாசமும் உங்களுக்கு இது தான் அசிஸ்டென்ட்…” என்று அறிமுக படுத்திய போது.. நான் பவ்யமாக ‘சரிங்’ என்பது போல தலையாட்டினேன்.
குட்டியை உடைத்து போட்டார்கள். அதன் உருவாக்கத்தில்….எல்லாம் சரியாய் நடந்து கொண்டிருந்த போதும்…குட்டிக்கு மிக பிடித்தமான தின்பண்டம்…..பாக்கெட்டில் அடைபட்ட துண்டு விரல் சைஸில் கத்தரிக்கப்பட்ட சவ்வரிசியில் செய்யப் படும் மஞ்சள் குடல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க தவறியதால்….அதைக் காணும் சூழலில்……குட்டி சொதப்பி விட்டது. மிஞ்சிய நினைவில் என்னிடம் எல்லாம் சொல்லி விட்டது. ஆனால்…அதனால்… டீம் என்னை ஜாக்கிரதையாக கையாண்டது. நான் முழு இரும்பு இதயத்தோடு அதை வரவேற்கிறேன். நான் அவர்கள் பிள்ளை. அவர்கள் சொல்வதை கேட்பது மட்டும் தான் என் வேலை. எனக்கென்று எந்தவொரு கொள்கையோ… தனிப்பட்ட விருப்போ வெறுப்போ எதிர்குரலோ இல்லை. நான் தலையாட்டி பொம்மையை போன்று மிக உல்லாசமாக இருக்கிறேன். இந்த உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன. நேரத்துக்கு உரிய கரண்ட் எனக்கு தருகிறார்கள். வேறென்ன வேண்டும். உள்ளபடியே ஓர் அடிமைக்கு அது தான் அழகும்.
இயந்திர சிந்தனையை மெருகேற்றும் மருந்துகள்…. ஒயர்களால் நரம்பை இணைக்கும் சங்கேத குறியீடுகள்……. கணிப்பொறி கோடிங்குகள்…. மனித சிந்தனையை அழிக்கும் டெலீட்டுகள்…….. உடல் மெலிந்து ஆனால் உருக்குலையாத உடல் சிதைவு….. இயந்திர இதய வளர்ச்சி…….. அதற்கான கோடிங் பார்டரிங் வேலை… அடிமை மனதுக்கான தரவுகளை சரியான விகிதத்தில் உடல் உள்ளீடுகளில் கலத்தல்…மனித மூளையை மெமரிகளாகவும் டேட்டாக்களாகவும் மாற்றுதல் என்று மனிதனிலிருந்து மெல்ல மெல்ல இயந்திரமாக மாறும் அதிநவீன தொழில்நுட்பத்தை மிக அட்டகாசமாக குட்டிக்கு நிகழ்த்தியது போலவே என்னிலும் நிகழ்த்திக் கொண்டிருந்தது அறிவியலின் மறுபக்கம்.
எல்லாம் சர்வ மயம் என்பது போய் எல்லாம் சர்வர் மயம் என்பது தான் தேவை.
மனித முதுகெலும்பை டிஜிட்டல் கட்டங்களால் மாற்றி கூனி குறுகி நிற்க வைப்பது. கேள்வி கேட்பதற்கான முதல் துளி சுய சிந்தனை தான். அதை அழிப்பது தான் இங்கே முதல் பணி. இவ்வுலகம் கேள்விகளாலேதான் உருவானது. அது தான் அஸ்திவாரம். அதை அழிக்கும் வண்ண மாயாஜாலங்கள் கணிப்பொறி கைகள் பெற்று விட்டன. உணவை விட்டு….. உரிந்தெடுக்கும் மின்சார உணவுக்கு பழக்கமாக்குதல். சூனியத்தில் நின்று கொண்டே வெளிச்சமாகவும் நிற்க பழகுதல். சொரணை உள்ள டி என் ஏ க்களை சல்லி சல்லியாக ‘கோட்’களாக மாற்றி எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போடும் தத்துவத்தை பூசுதல். ரத்தமும் சதையுமான காலத்தை மந்தமாக்கி இரும்புக்கு தாரை வார்க்கப்படும் மானுட வெளியின் வியாக்யானம். வெயில் மழை குளிர் பனி காதல் அன்பு பாசம் அரவணைப்பு எதுவுமில்லாத பாவனை. ஊர் உறவு சொந்தம் நட்பு என்று எதுவும் இல்லாத தோரணை. நான் அற்ற வெற்று நான். எஜமானர்களின் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும் ஒரு வேட்டை நாய். மனிதனின் நனவிலி கனவிலி முடிவிலி சிந்தனைகளை கூறுபோட்டு கோடிங்குகளின் எழுத்துருக்களாக மாற்றி எதை எப்போது எப்படி கேட்க வேண்டும்.. மறுபேச்சு பேசாமல் தன்னை எப்படி ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு தியானத்தை போல தானாகவே செயல்பட ஆரம்பித்திருந்தது. நரம்பு மண்டலம்….எலும்பு மண்டலம்…ரத்த மண்டலம் எல்லாம் தகவல் தொகுப்பாகவும்… தரவு வைப்பாகவும் மாற்றப்பட்டன. சுயத்தின் பிரக்ஞையோடு எந்த தொடர்புமற்ற வலியற்ற வெற்றுடல் அது. மானுட விதிகளை தடம் தெரியாமல் அழித்து இயந்திர விதிகளை மிக தெளிவாக எழுதி விடுவது. நான் எனும் சுயத்தை அழித்து… நான் எனும் நினைவை அகற்றி ஒரு வெற்றுடல் செய்யும் யுக்தி. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் தொன்று தொட்ட ஒரு பேரியக்கத்தின் தரவுகளை முற்றாக துடைத்தெறிந்து விட்டு சொல்வதை செய் என்ற புதுமொழியை பூசி விடுவது.
இந்த அறிவியலால் இன்னும் என்னெல்லாம் செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இதை செய்து விட்டது. இவ்வுலகத்துடனான தொடர்பை துண்டித்து மனிதனை மென்பொருளின் வடிவமாக மாற்றி விடும் சித்திர வேலைப்பாடு அது. விஞ்ஞானம் இருபக்க கூர் இருக்கும் கத்தி. யார் எந்த பக்கம் தொடுகிறார்கள் என்பதில் இருக்கிறது அதன் ஆக்கமும் அழிவும்.
உலகத்தில் இருக்கும் எல்லா கேள்வி கேட்கும் கலகக்காரன்களையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வித்தை இது. மிக ரகசியமான ப்ரோஜெக்ட் “நான்”. இப்போது அதில் நானும் ஒரு உறுப்பினர். மற்றபடி எனது பழைய வாழ்வு என்னில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. இனி எங்கள் அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் எங்கும்……..
இசையர் அழைக்கிறார்…. நான் அவருக்கு சிந்தனையை மாற்றும் திரவம் கலந்த தேனீர் கொண்டு செல்ல வேண்டும்……
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings