in ,

காலச்சக்கரம் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ தி. வள்ளி, திருநெல்வேலி

காலச்சக்கரம் (அறிவியல் புனைவு சிறுகதை)

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

அந்த நவீன விஞ்ஞான ஆய்வகத்தில் எல்லாவித வசதியும் ஆராய்ச்சிக்கு ஏற்றவாறு இருந்தது.  ஆய்வகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் தன் மாணவர்களை அருகில் அழைத்தார்.

தனது புதிய கண்டுபிடிப்பான இந்த காலச்சக்கரத்தை அவர்களுக்கு காட்டி, “இதை நான் உங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த தேவையில்லை. நம்முடைய பலவருட உழைப்பு இப்போது வெற்றியடைந்துவிட்டது. இந்த காலச் சக்கரம் ஒரு மிகப்பெரிய வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். இதை முறைப்படி வெளியே அறிவிக்கும்முன், உங்கள் எல்லோருக்கும் அந்த அனுபவத்தை கொடுக்க ஆசைப்படுகிறேன்.  இந்த காலச்சக்கரத்தின் அனுபவத்தை நீங்கள் அனுபவித்து எல்லோருடனும் அதை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்” என்றார்.

“இதோ இந்த மெஷினின் உள்ளே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு காலச்சக்கரத்தை ஒரு முறை இடமிருந்து வலமாக  சுற்றினால் 10 வருடம் நீங்கள் முன்னோக்கி போய்விடுவீர்கள் மூன்று முறை, நான்கு முறை என்று சுற்ற… முப்பது, நாற்பது வருடங்கள் முன்னோக்கி போய் விடுவீர்கள். அப்போது இந்த உலகம் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு ஒரு அனுபவமாக கிடைக்கும். முதலில் ராகவா! நீ வந்து இதைப் பயன்படுத்தி உன் அனுபவத்தை எங்களுக்கு சொல் …” என்றார்.

காலச்சக்கரத்தை சுழற்றி… ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த ராகவன்… ஒரே பிரமையில் இருப்பதாக தோன்றியது.

”  என்னாச்சு மிஸ்டர் ராகவன்? ” என்று எல்லோரும் ஒரே குரலில் ஆவலாக  கேட்க

“அற்புதம்! மிக அற்புதம்! நான் நான்கு முறை சுழற்றி 40 வருடங்கள் முன்னோக்கி போய் விட்டேன். வருடம் 2060 ஆகிவிட்டது…. இந்த 40 வருடத்தில் எவ்வளவு மாறுதல்கள்

பணம் என்ற ஒன்றே காணாமல் போய்விட்டது.   உள்ளங்கை அகலத்தில் உள்ள ஒரு கருவி  அனைத்து பண பரிமாற்றங்களையும் செய்கிறது. அதிலேயே போன் பேசும் வசதி, அதுவே இப்போது உள்ள லேப்டாப் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்கிறது

என்ன ஒரு ஆச்சர்யம்! அதை  கையில்  கட்டிக் கொண்டால் போதும். அதை எங்கும் தூக்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை. அந்த ஒரு கருவியே அனைத்து தொலைத்தொடர்பு சேவையையும் செய்துவிடுகிறது.

அடுத்தது திரையரங்கு… இப்போது போல ஒரு கூட்டத்தை ஒரு கட்டடத்தில் அடைக்க வேண்டிய தேவையில்லை. அப்படியே நாம் இருக்கும் இடத்தில் ஒரு மாயா உலகத்தையே சிருஷ்டித்து விடுகிறது.  படத்தில் படகு வந்தால் அதிலேயே பயணிக்கும் அனுபவத்தை பெற முடிகிறது…. விமானத்தில் ஏறி பறக்க முடிகிறது… பூங்காக்களை பார்க்கும்போது மலர்களின் இனிய நறுமணத்தை உணரமுடிகிறது. அப்பப்பா என்ன ஒரு இனிய அனுபவம்!

எல்லாவற்றிற்கும் ரோபோ… சமையல் பண்ண… துணி துவைக்க… காயப்போட…. வீட்டில் அழைப்பு மணியடித்தால் கதவை திறக்க…. இனி இந்த மனைவிமார்களின் இம்சையில் சிக்கி உழல வேண்டாம். இவ்வளவு ஏன்…காய்கறி வாங்க…. கடைக்கு போக…. காரோட்ட… என எல்லாவற்றிற்கும் ரோபோக்கள். மயன் சிருஷ்டித்த உலகத்தைப் போல அழகழகாய் வீடுகள்… அடுக்கடுக்காய் கட்டடங்கள்….ஒரு மணி நேரத்தில் இவ்வளவு அனுபவம் என்றால் அந்த உலகத்தில் வாழ்ந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!!!

“எல்லாம் சரி சார் ! மனிதர்களைப் பற்றி நீங்க  சொல்லவே இல்லையே? கணவன், மனைவி, பிள்ளைகள், அம்மா, அப்பா, குடும்பம்…என்று உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறது?”

உடனே ராகவன்  முகம் தொங்கிப் போய் விட்டது.

“அது மட்டும் தான்  எனக்கு ஒண்ணுமே புரியல… அழகழகா வீடு.. எல்லாவற்றிலும் ஒருத்தர் மட்டும் தான் இருக்காங்க. கல்யாணம் எல்லாம் வழக்கொழிந்து போச்சுன்னு பேசிக்கிறாங்க. விருப்பப்பட்ட ஆணும், பொண்ணும் சேர்ந்து வாழறாங்க .புள்ளைய பெத்துகறாங்க . பிடிக்காம  பிரியவேண்டி வந்தா.. அந்த புள்ளைய பார்த்துக்க,  ஒரு தனி கட்டடம் இருக்கு. எல்லா வயசுலயேயும் புள்ளைங்க…. அனாதையா தனித்தனியா வாழுதுக..

வயசானவங்களெல்லாம் , அவங்கவங்க வசதிக்கு ஏத்த மாதிரி… தனியாகவோ, இல்ல அந்த மாதிரி இருக்குறவங்களோட  சேர்ந்தோ,  ஒரு கட்டடத்தில வாழுறாங்க. அவங்களுக்கு உதவி செய்ய நிறைய ரோபோக்கள் இருக்கு. இதுல வேடிக்கை என்னன்னா, இந்த குழந்தைங்க இருக்கிற கட்டடத்திலும் சரி… பெரியவங்க இருக்கிற கட்டடத்திலும் சரி…  இவங்க கூட பேசுறதுக்கு, இவங்களுக்கு கதை சொல்றதுக்கு, பாட்டு பாடுவது இவங்க பொழுதை போக்குவதற்கு உதவி செய்வது என  எல்லாமே ரோபோக்கள. இவ்வளவு ஏன் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது கூட ரோபோக்கள். குட்டிக்குட்டியா ரோபோ நாய்கள்… பூனைகள்… கூட இருக்கு. அதை  அங்கே இருக்கிறவங்க செல்லமா வளர்க்கிறாங்க… குழந்தைகள் கூட விளையாடுவது  எல்லாமே  இந்த ரோபோக்கள் தான்”

“எப்படி இவங்க எல்லாம் சாப்பிடுவாங்க? சமைக்க ஆள் வேண்டாமா? அதுவும் ரோபோவா?”

“எல்லாம் பாக்கெட் பாக்கெட்டா சாப்பிடுவதற்கு எல்லா வீட்டுலயும் வாங்கி அடுக்கி வச்சுருக்காங்க.. அப்புறம் தண்ணீர் பாட்டில் பாட்டிலா வாங்கி வச்சிருக்காங்க…. இதுபோக வெளியில போனா ஆக்சிஜன் சிலிண்டர் சின்னதா முதுகுல கட்டிக்கிட்டு… மூக்குல சேர்த்து கனெக்ட் பண்ணிக்கிறாங்க…மொத்தத்தில் மனுஷங்களே  அந்த டிஜிட்டல் உலகத்தை இயங்க வைக்கும் ரோபோக்கள் மாதிரிதான் வாழுறாங்க…”என்று ராகவன் முடிக்க

“அடுத்தது கணேஷ்! நீங்க போங்க… காலச்சக்கர அனுபவத்த வந்து சொல்லுங்க… புரொஃபஸர் என்னை கூப்பிட… நான் அந்த காலச்சக்கர மெஷினுக்குள் நுழைந்தேன்…”

உள்ளே நுழைந்ததும்… காலச்சக்கரத்தை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டிய நான் ஏதோ ஒரு உந்துதலில் வலமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தேன்.
1…2…3…4…5..கண்மூடி அனுபவத்திற்கு தயாராக…அந்தோ! நான் 50 வருடம் பின்னோக்கி போய்விட்டேன் அதாவது  1970…எழுபதுகளின் உலகத்தில் நான்…

இதோ! இந்தியா முழுவதும் கண்ணுக்கு தெரிய…  தமிழ்நாட்டில்… என் சொந்த ஊர் …திருநெல்வேலி …

“ஏண்டா மச்சான்! எங்கடா போயிட்ட! இன்னைக்கு தேர்த்திருவிழால்ல… தேரிழுக்க இளவட்டங்களெல்லாம் தேரடி முக்குக்கு  வந்துருங்கன்னு.. பெரியவூட்டு அண்ணாச்சி  சொல்லி விட்டாக….”என்று மொக்கராசு வந்து சொல்லிட்டுப் போனான்.

திருவிழா …..’ தலையா… கடல் அலையா..’ என்று  மதுரை சோமு பாட்டு ஸ்பீக்கரில் முழங்கிக் கொண்டிருந்தது. இதோ ஒரு பக்கம் பஞ்சு மிட்டாய்… கலர் குச்சி மிட்டாய்… சாக்பீஸ் மிட்டாய்… கமர்கட்டு… என அங்கங்கே சின்னச்சின்ன பெட்டிகளில் வியாபாரம். ‘பொய்ங்ங்ங்ங்’ என்று ஊதிக்கொண்டு பலூன் ஊதல்காரன் ஒருபக்கம்…. ஜவ்வு மிட்டாயை இழுத்து, எச்சிலைச் தொட்டு, சுருட்டி கைகடிகாரமாக்கி, அதை சுற்றி நின்ற சிறுசுகளுக்கு கடிகாரமாய் கட்டிவிட்ட ராசுக்குட்டி…..

இந்தப் பக்கம் பார்த்தால் ஆஆஆஹாஹா…. தெருவில் உள்ள இளம் பெண்கள்…. பாவாடை சட்டை தாவணியில்… அழகழகான கலரில் கை நிறைய கண்ணாடி வளையல்கள்… காலில் கொலுசோட.. இறுகப் பின்னி குஞ்சம் வச்ச தலையோடு….தலை நிறைய  கனகாம்பரம், டிசம்பர் பூக்களை வைத்துக் கொண்டு….தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் தெரிகிறதே அது என்ன உணர்ச்சி! ஓ… அதுதான் நாணம் என்ற ஒரு உணர்வா…

“டேய் தடிமாடு! என்னடே! வாசல்ல நின்னுகிட்டு சமஞ்ச குமரிகள  வேடிக்கை பாத்துகிட்டிருக்கே…உங்க அம்மா எத்தனை தடவை கூப்பிட்டுகிட்டிருக்கா.. வந்து கொட்டிக்கோ!” என்றார் அப்பா அன்போடு.

அதுக்குள்ள தாத்தா ‘லொக் லொக்கென’ இருமிக்கொண்டு …”டேய்! அந்த சித்தாஸ்பத்திரில்ல கஷாயத்த வாங்கிட்டு வால்ல. அப்படியே கம்பவுண்டர்…கிளினிக்கு வரச் சொன்னாரு வவுறு பொருமலுக்கு கார்பன்டி-மிச்சர் (கார்பனேட்டிவ் மிக்சர்) தரேன்னு சொன்னார் அதையும் வாங்கிட்டு வந்துரு… பாட்டிலை எடுத்துட்டு போ, அதுல ஊத்திக் கொடுப்பாரு”

பாட்டியும் தன் பங்குக்கு,”அப்படியே பேராண்டி! வர்ற வழியில கொட்டைபாக்கு வாங்கிட்டு வந்துரு” என்றாள். எனக்கு கடுப்பாக வந்தது.

” சரி! சரி! ஆளாளுக்கு பெரிய லிஸ்ட் சொல்லாதீங்க! வாங்கியாரேன்”.

அதற்குள் நண்பர்கள்,” ஏண்டா! வெளியே தெருவே கலகலன்னு இருக்கு. வீட்டுக்குள்ள பொம்மஜ்ஜட்டியாட்டம் உக்காந்துகிட்டிருக்கே…” என்னை இழுத்துக் கொண்டு போகின்றனர்.

தேர் வடம் பிடிச்சு இழுக்க.. அற்புதமான ஒரு அனுபவம்…  வாகையடி முக்கில சக்கரம் கீழே இறங்க.. தேர் நின்றது. 

“ஒவ்வொரு வருஷமும் இந்த இடத்தில்தான் சக்கரம் இறங்குது. இனி நாளை காலைதான் பார்க்கணும்” என்றவாரே, எல்லாரும் வீடு திரும்ப, நாங்கள் நண்பர்கள்…. சுப்பு,  ரங்கு, குட்டியப்பன், ராசுக்குட்டி, மொக்க எல்லாரும் சேர்ந்து வீட்டுக்கு டிமிக்கி கொடுத்துட்டு, இரண்டாம் ஆட்டம் தலைவர் படம் ராயல் தியேட்டருக்கு  வண்டியை விட்டோம் ..

சினிமா முடிஞ்சு ரெண்டு மணிக்கு திரும்ப, கேட்டை இழுத்து பூட்டி விட்டார் அப்பா. வழக்கம் போல, காம்பவுண்டு ஏறி குதிச்சு, அம்மா புண்ணியவதி பின் கதவை லேசா திறந்து வைச்சிருக்க… உள்ளே வந்து சத்தம் காட்டாமல படுத்தேன்.

காலைல “ஏல என்னல! இவ்வளவு நேரம் தூக்கம். ராத்திரி  ரெண்டாவது ஆட்டம் பாக்க வேண்டியது…. பகல்ல விடிய விடிய தூங்க வேண்டியது…” என்று தண்ணிய கொண்டு வந்து முகத்தில ஊற்றினார் அப்பா.

அடுத்தநாளே அண்ணிக்கு வளைகாப்பு. வீடு நிறைய சொந்தங்கள். சந்திர விலாஸ் சாப்பாடு. சொதி குழம்பு. வந்த மக்களுக்கெல்லாம் திருநெல்வேலி அல்வா பார்சல். அண்ணி கை நிறைய வளையல்களோடு… கன்னம் நிறைய சந்தனம்… நெற்றி நிறைய குங்குமத்தோடு கிளம்ப…

“ஆத்தா! தலையில மல்லிகைப் பூவை எடுத்துரு.  மல்லிகை பூ வச்சுகிட்டு சூலி அசலூரு போகப்படாது” என்று  கிழவி சொல்ல… பூவை எடுத்து கையில் உள்ள பையில் வைத்துக் கொண்டார்.

ரெண்டு வேப்பிலையை எடுத்து கிழவி தலையில் சொருகி விட…வேப்பிலையை காப்புகட்டி… அண்ணியை அனுப்ப… அண்ணி அழுத கண்களோடு, அண்ணனை ஓரக்கண்ணால் பார்த்து, விடைபெற்றுக் கொண்டு தலையாட்ட, அண்ணனும் கூடவே நடக்க…” ஏல…பொண்டாட்டி பிரசவத்துக்கு போகையில புருஷன் கூட போக படாது.  வாசலுக்கு போகாத உள்ள போ…”  கிழவி அதட்ட…அண்ணன் ஆற்றாமையில் தலையசைத்து, மனைவிக்கு விடைகொடுத்தார்,

கை நிறைய வளையல்களோடு கண்முன்னே அண்ணி வர,  என் நேரம் முடிந்து நான் திரும்பி 2020க்குள் வந்து விழுந்தேன்.

என் அனுபவத்தை  கேட்ட புரொபசர்  அவசரப்பட்டு தப்பு பண்ணி விட்டோமோ… காலத்தை முன்னோக்கி செலுத்துவதுக்கு பதிலா பின்னோக்கி போற மாதிரி வைச்சிருக்கலாமோ என்று யோசிக்க ஆரம்பித்தார்…எனக்கும் பின்னோக்கிப் போய் அந்த கவலையற்ற உலகில் வாழ மாட்டோமா என்ற ஆசை பிறந்தது..

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கூடா நட்பு (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    ஸ்பைடர்மேன் சிவா (சிறுவர் கதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி