sahanamag.com
சிறுகதைகள்

கூடா நட்பு (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

டைனிங் டேபிளில் காய்கறி பலகையை வைத்துக் கொண்டு காய்களும், கீரைகளும் ஒரு பக்கம் தட்டில் இருக்க, கத்தியை லேசாக டேபிளில் தட்டியபடி உட்காகர்ந்திருந்தாள் பவானி.

கண்கள் எங்கோ வெறித்திருக்க, நெற்றியில் கவலைக் கோடுகள். குளித்து விட்டுத் தலையை துவட்டியபடி வெளியே வந்த அவள் கணவர் சங்கர், அவள் இருக்கும் நிலையைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

“பவானி… பவானி…” என இரண்டு மூன்று முறை அழைத்தும், திரும்பியே பார்க்காததால் அதிர்ச்சியுற்றார்

அருகில் வந்து அவள் தோள் மீது கை வைத்து, லேசாக உலுக்கி மீண்டும், “பவானி” என்றழைத்தார்.

கனவில் இருந்து விழித்துக் போல் உடம்பை சிலிர்த்து, “கூப்பிட்டீர்களா?” என்றாள் பவானி.

“எத்தனை முறை கூப்பிட்டேன், ஆனால் அது அல்ல பிரச்சினை. என்ன ஆயிற்று உனக்கு? அப்படி என்ன சிந்தனை?” என்றார் சங்கர்.

“எல்லாம் நம் பையன் விஷாலைப்  பற்றித் தான் கவலை”

“ஏன் அவனுக்கு என்ன?”

“அவன் முன்பு போல் இல்லை. வீட்டில் அதிக நேரம் தங்குவதில்லை. வீட்டில் இருக்கும் நேரத்திலும் உபயோகமில்லாத மொபைல் போனில் தான் எப்போதும் கொஞ்சிக் கொண்டு இருக்கிறான்” என்றாள் கடுப்பாக.

சங்கர் கடகடவென்று சிரித்தார்.

“அவன் என்ன சின்ன குழந்தையா? ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பதினைந்து வயது பையன். அவன் டீனேஜ் பையன். இன்னும் அம்மா பின்னால் சுற்றுவான் என்று எப்படி எதிர்பார்ப்பாய?”

“நான் ஒன்றும் என் பின்னால் சுற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. விவரம் தெரியாத வயது. பள்ளிப் பருவம் இன்னும் முடியவில்லை. ஆனால் பெரிய மனிதத் தோரணை. பிஞ்சில் பழுத்தது என்பார்களே. அப்படி இருக்கிறது” என்றாள் வருத்தத்துடன்.

“எல்லாம் வளர வளர சரியாகி விடும், இதற்கெல்லாம் வருத்தப்படாதே” என்றார் சங்கர் ஆறுதலாக.

“எனக்கு மனசே சரியில்லை. நம் தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு போய் விட்டு வருகிறேன்” என்று பூஜை கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

கடவுளிடம் மனு கொடுக்க கிளம்பி விட்டாள் என்று சங்கர் தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டார்.

பவானி கோயிலில் இருந்து வந்து சங்கரிடம் விபூதி பிரசாதம் கொடுத்தாள். சிறிது நேரத்தில் விஷால் வந்த பிறகு, அவனை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று கோயில் குருக்கள் தந்த ஒரு சிகப்பு நிற கயிற்றை கட்டி விட்டாள். அவன் அதையும் கட்டிக் கொண்டு சிரித்தவாறு வெளியே வந்தான்.

“விஷால் ஏன் சிரிக்கிறாய்?” சங்கர்.

அவனோ கையை பாம்பு போல் ஆட்டிக் காட்டினான்.

“பாருங்கள் அப்பா, ஏற்கனவே என் கையில் இரண்டு நிறத்தில் ஐயர் மந்திரித்து கொடுத்த கயிறுகள் கட்டப்பட்டிருக்கிறது, இது மூன்றாவது. இன்னும் நான்கு நிறங்கள் மிச்சம் இருக்கிறது. அதை எப்போது அம்மா கட்டுவார்கள் என்று தெரியவில்லை” என்று கேலி செய்து கொண்டே மீண்டும் வெளியே போய் விட்டான்.

சில நாட்களில் விஷாலின் காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் வந்தன. ஒன்றும் வெளியில் சொல்லிக் கொள்வது போல் இல்லை. அப்பாவின் கையெழுத்தை ப்ராகிரஸ் அட்டையில் வாங்க  சங்கரிடம் வந்தான்.

“விஷால் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக உள்ளது. என்ன ஆயிற்று உனக்கு? வழக்கமாக இவ்வளவு குறைவாக மார்க் வாங்க மாட்டாயே! முதல் ரேங்க் வாங்கியதில்லை. ஆனால் இப்படி மட்டமாகவும் வாங்கியதில்லையே” என்றவர், ” உன் அம்மாவிடம் காட்டினாயா?”என்றார். ஆனால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார்.

“இன்னும் காட்டவில்லை டாடி. காட்டியிருந்தால் உங்களைக் கையெழுத்துப் போடக் கூடாதென்று தடுத்திருப்பார்கள். இப்போது போய் காட்டி விடுகிறேன்” என்றவன் அப்பாவைப் பார்த்து குறிப்பாக சிரித்து விட்டு பவானியிடம் மார்க் ஷீட்டைக் காட்டினான்.

பவானி அவனுடைய மதிப்பெண்களைப் பார்த்து காட்டுக் கத்தலாகக் கத்தினாள். சங்கரை வேறு திட்டினாள். அவன் இவ்வளவு குறைவாக மதிப்பெண்கள் வாங்கியதற்கு சங்கர் அவனிடம் கடுமையாக நடந்து கொள்ளாதது தான் காரணம் என்று சாடினாள்.

“நீ தான் ஒவ்வொரு நிறத்திலும் ஒரு கயிறை அவன் கையில் கட்டியிருக்கிறாயே! அந்த கயிற்றின் மகிமையால் அவன் எல்லா பாடங்களிலும் முதலாய் வருவான் என்று நம்பினேன்” என்று கண்களைச் சிமிட்டியபடி கிண்டலாகக் கூறினார்.

“என்னைக் கிண்டல் செய்வதைத் தவிர வேறு என்ன தெரியும் உங்களுக்கு! “என்று கோபித்துக் கொண்டு எழுந்தாள்.

 “இப்போது எங்கே எழுந்து விட்டாய்?  பிள்ளையாரிடம் போய் சண்டை போடப் போகிறாயா? இப்படி அடிக்கடி அவரைப் போய்  நீ தொந்தரவு செய்தால் பிள்ளையார் கோபித்துக் கொண்டு வேறு கோயிலுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய் விடப் போகிறார்” என்று கூறி விட்டு கடகடவென்று சிரித்தார்.

அன்று முதல் தினமும் நூறு முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதத் தொடங்கினாள். எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று அவள் படும் அவஸ்தையைப் பார்க்க சங்கருக்கு பரிதாபமாக இருந்தது.

தன் நண்பன் விசுவத்திடம் கலந்து ஆலோசித்து நல்ல டியூஷன் சென்டரில் சேர்த்து விட்டார். விஷால் டியூஷன் சென்டரில் சேர்ந்தால் மட்டும் போதுமா? அவன் படிக்க வேண்டாமா? மதிப்பெண்கள் ஒன்றும் பெரியதாக அதிகரிக்கவில்லை .

“என் தோழி பத்மாவின் வீட்டில் இன்று சத்யநாராயண பூஜை” என்று கூறி, கொஞ்சம் பழங்கள் பூக்கள் வாங்கிக் கொண்டு கிளம்பினாள் பவானி.

பூஜை முடிந்ததும் பிரசாதம் வாங்கிக் கொண்டு பவானி திரும்பும் போது, பத்மா தன் மகன் ராகுலை அறிமுகப்படுத்தினாள். பூஜை, பஜனை என்று வீடு முழுவதும் ஒரே சத்தமாக இருக்கும் போது எப்படி இந்த பையன் கதவைத் தாழ் போட்டுக் கொண்டு அமைதியாகப் படிக்கிறான் என்று பவானிக்கு ஒரே ஆச்சரியம்.

தன் ஆச்சர்யத்தை  வாய் விட்டே கேட்டு விட்டாள். அதற்கு பத்மா சொன்ன பதில் தான் இன்னும் அதிக ஆச்சரியம் கொடுத்தது.

“சிறிய வயதில் இருந்தே ‘ஒர்க் வைல் யூ ஒர்க், ப்ளே வைல் யூ ப்ளே’ என்பது தான் இவர்களுக்கு நானும் என் கணவரும் சொல்லித் தந்த பாடம். நண்பர்களைப் பார்த்தால் உன் குணம் தெரிய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா? அதனால் நன்றாகப் படிக்கும் அமைதியான பிள்ளைகள் தான் பெரும்பாலும் இவன் நண்பர்கள்” என்றாள் பெருமையோடு.

வீட்டிற்கு கிளம்பும் போது பிரசாதத்துடன் எல்லோருக்கும் ஒரு பூச்செடியையும் பிளாஸ்டிக் தொட்டியில் வைத்து கொடுத்தாள். வீட்டிற்கு வந்ததும் செடியை மொட்டை மாடியில் வைத்து விட்டு கொஞ்சம் தண்ணீரும் தெளித்து விட்டு கீழே வந்து தன் கணவனிடம் ஒரு அட்சரம் விடாமல் ஒப்பித்தாள்.

எல்லாவற்றையும் ஒத்துக் கொண்ட சங்கர், நன்றாகப் படிக்கும் அமைதியான பிள்ளைகள் மட்டுமே நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.

“நன்றாகப் படிப்பவனா இல்லை படிக்காத முரடனா என்பதை விட, நல்ல மனிதப் பண்புகள் நிறைந்தவன் என்பது மிகவும் முக்கியமானது பவானி” என்றார் சங்கர்.

பவானி காலையில் கொடுக்கும் காபி அவ்வளவு அருமையாக இருக்கும். விட்டமின் எ முதல் இஸட் வரை கலந்தாற் போல் அவ்வளவு உற்சாகம் கொடுக்கும். அன்று என்னவோ  வழக்கத்தை விட இன்னும் அதிக ருசியாக இருந்தது. இன்னும் ஒரு கப் வேண்டும் போல் இருந்தது.

அதனால் ஈஸி சேரில் இருந்து எழுந்து சமையல் அறைக்குள் சென்றார். அங்கே சமையல் அறை மேடையில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை கொண்ட கடலை ஊற வைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் சங்கருக்கு உற்சாகம் பொங்கியது.

“ஹை! பவானி சன்னா ஊற வைத்திருக்கிறாயே ! சுண்டல் போடப் போகிறாயா? கொஞ்சம் தேங்காயும், மாங்காயும் துருவிப் போட்டால் மிக அருமையாக இருக்கும். என்ன இருந்தாலும் ஒரு கணவனின் சுவையறிந்து செய்வதற்கு ஒரு மனைவியால் தான் முடியும். அதனால் தான் தாய்க்குப் பின்னர் தாரம் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது” என்றார் மிகுந்த உற்சாகத்துடன்.

இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு முகத்தை தோளில் இடித்துக் கொண்டாள் அந்த காலத்தில் சினிமாவில் வரும் வில்லியைப் போல். முகம்  முழுவதும் கேலிச் சிரிப்பு வேறு.

“ஐயே, ஆசையைப் பார். இது ஒன்றும் சுண்டல் போடுவதற்கு இல்லை. இது குரு பகவானிற்கு. மாலையாகக் கோர்த்துப் போட வேண்டும். இன்று வியாழக்கிழமை இல்லையா? அப்படியே ஒரு அர்ச்சனையும் பண்ண வேண்டும். நீங்களும் என்னோடு கோயிலுக்கு வருகிறீர்கள்” என்றாள் உத்தரவு போடும் பாணியில்.

“உங்கள் கட்டளையும், அதிகாரமும் என்னிடமும் அந்த பிள்ளையாரிடமும் தான். உன் பிள்ளையிடம் ஒன்றும் பலிக்காது” என்று கூறிக் கொண்டு போய் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

“என் பிள்ளை அவனால் முடிந்த அளவுக்கு அதிகமாகவே படிக்கிறான். இந்த கடவுள் தான் கருணை புரிய வேண்டும். அதற்குத் தான் இந்த பூஜையும், பிரார்த்தனையும்” என்றாள்.

மீண்டும் மிட்டெர்ம் தேர்வு நடந்தது. மதிப்பெண்களும் வந்தது, ஆனால் இப்போதும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.

வாழ்க்கையே வெறுத்து விட்டது பவானிக்கு. ‘நான் செய்த பாவமோ இல்லை ஜெனிடிகல் பிராப்ளமோ தெரியவில்லை. யார் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அப்படித் தானே அமையும்’ என்று நொந்து கொண்டாள்.

தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது பார்த்த பவானி திடுக்கிட்டாள். மற்ற எல்லாச் செடிகளும் நன்றாக இருக்க பத்மா கொடுத்த பூச்செடி மட்டும் வாடி தலை கவிழ்ந்து கொண்டிருந்தது.

பவானிக்கு மனசே சரியில்லை. ‘தன் ராசியே சரியில்லை, அதனால் தான் தன் மகனும் ஒழுங்கில்லை, நான் ஆசைப்பட்டு வைத்த பூச்செடியையும் வளரவில்லை’ என்று சலித்துக் கொண்டாள்.

தன் மன வருத்தத்தை கணவரிடம் சொல்லி குறைபட்டுக் கொண்டாள். பரிதாபமாக அவளைப் பார்த்த சங்கர், அவளையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார். பூச்செடியையும் பார்த்தார், அந்த செடியைச் சுற்றி கோரைப் புற்களும், ஏதோ கீரைகளும் வளர்ந்திருந்தன.

ஒரு இரும்பு கம்பியை எடுத்து பூச்செடிக்கு அருகில் உள்ள மண்ணை நன்றாகக் கொத்தி, புற்களையும் கீரைகளையும் கொத்தி எறிந்து விட்டு பூச்செடிக்கு தண்ணீர் பாய்ச்சினார். அவளிடம் ஒன்றும் பேசவில்லை.

அடுத்த நாள் முதல் சங்கர் தானே அந்த பூச்செடியை கவனித்துக் கொண்டார். தினமும் மண்ணைக் கொத்தித் தண்ணீர் பாய்ச்சி புதியதாக வளரும் களைகளைக்  களைந்து அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். பூச்செடி தழைத்து வளர்ந்து அரும்புகள் விட்டன. பவானி இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.

‘அது எப்படி? நீங்கள் தண்ணீர் ஊற்றியது போலத் தான் நானும் ஊற்றினேன். அப்போது வாடிவிட்ட செடி இப்போது மட்டும் எப்படி தள தள வென்று வளர்கிறது?” என்றாள்.

அப்போது விஷாலும் உட்கார்ந்து ஏதோ சாப்பிட்டுக் கொண்டு ஒரு கையில் செல் போனை நோண்டிக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் இவர்கள் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“உனக்கு புரியவில்லையா பவானி?  நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் என்ற ஔவையார் பாடல் மறந்து விட்டதா?  ஆனால் அதிகமாக களைகள் சேர்ந்தால் எல்லா சத்தையும் அவைகளே எடுத்துக் கொள்கின்றன. இப்போது தெரிந்ததா?” சங்கர்.

‘ஆம் ‘ என்று தலையாட்டினாள் பவானி.

“ஆனால் எனக்குக் கூட இப்போது தான் ஒன்று புரிந்தது” என்றார் யோசனையுடன் தன் தாடையைத் தேய்த்துக் கொண்டு.

‘என்ன?’ என்பது போல் அவரைப் பார்த்தாள்.

“களைகள் எப்படி ஒரு செடியை வளர விடவில்லையோ, அப்படித் தான் தகுதியில்லாத நண்பர்களால் ஒரு நல்ல மாணவன் தன் நிலையில் தாழ்ந்து விடுகிறான்” என்றார் சங்கர்.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” பவானி.

“உன் தோழி பத்மா சொன்னது சரிதான். ஒர்க் ஒயில் யூ ஒர்க், பிளே ஒயில் யூ ப்ளே என்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நம் விஷாலைத் தான் சொல்கிறேன். எப்போது பார்த்தாலும் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தால், படிப்பதற்கு நேரம் ஏது? நம் கடின உழைப்பு என்னும் பங்கை நாம் கொடுத்தால், வெற்றி என்ற அவர் பங்கைக் கடவுள் கட்டாயம் தருவார். விஷால் நான் சொல்வது சரி தானே” என்றார் மகனைப் பார்த்து. விஷால் எழுந்து வந்து தன் தந்தையின் அருகில் அமர்ந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“விஷால், நான் நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. உன் நேரத்தை வீணடிக்காதே என்று தான் சொல்கிறேன். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? நீ உன் நேரத்தை வீணடிக்காமல் நன்றாகப் படித்து உன் நண்பர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம் அல்லவா?” என்றார் அவன் தந்தை.

“நீங்கள் சொல்வதை நான் புரிந்து கொண்டேன் அப்பா. இனி நான் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன் ” என்றான் உறுதியுடன்.

மூன்று மாதங்கள் கழிந்தன, விஷாலிடம் நிறைய மாற்றங்கள். புத்தகங்களில் நிறைய நேரம் செலவிட்டான். தன் நண்பர்களையும் ஒதுக்கவில்லை. அவர்களோடு செலவிடும் நேரத்தை குறைத்துக் கொண்டான். அடுத்த தேர்வின் மதிப்பெண்கள் வந்தன. வகுப்பில் முதலில் வந்தான்.

“முதல் மாணவனாக வந்து அதன் ருசியை அனுபவித்தவன் இனி ஒரு போதும் கீழே இறங்க மாட்டான். உன் தோழி பத்மா கொடுத்த பூச்செடிக்கு ஒரு நன்றி” என்ற சங்கர் சிரிப்புடன் பவானியைப் பார்த்தார்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

2 thoughts on “கூடா நட்பு (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை
  1. Arumaiyaana poRuL miguntha siRukathai aagum. Chennai Bhanumathikku miguntha Nal VaazhththukkaL. ‘Vishaal’ pOlluLLa iLam vayathu piLLaiGaL mananGaLil ethEnum maaRRanGaL adainthaal athu intha ‘Kathaasiriyar’ Ms. Bhanumathi avarGaLukkup pOych chErum.

    “Mandakolathur Subramanian.”
    Chapel Hill-27516,
    N.CarOlina,
    USA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!