in ,

ஸ்பைடர்மேன் சிவா (சிறுவர் கதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி

ஸ்பைடர்மேன் சிவா (சிறுவர் கதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன்பதாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்த பின்னாடி இருக்கையில் அமர்ந்திருந்த சிவா தூங்கி வழிந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த வாசு, “டேய்! சிவா தூங்காதடா வாத்தி பார்த்தா வெளிய அனுப்பிடுவாரு.”

உறக்கத்தில் இருந்து விடுபட்ட சிவா, “டேய், எனக்கு பயங்கரமா தூக்கம் வருதுடா.”

அவனை முறைத்த வாசு, “எல்லாத்துக்கும் அப்படி தான்டா இருக்குது. நீ கொஞ்சம் கவனிக்குற மாதிரி நடிக்கையாவது செய். இப்படியா தூங்கி விழுவாங்க.”

அவன் சொல்லும் போதே மணி அடித்தது. ஆசிரியரும், “சரி எல்லாரும் இன்னைக்கு நடத்துனத, வீட்டுப்பாடம் எழுதிட்டு வாங்க.” என்று கூறி விடைபெற்றார்.

சோம்பல் முறித்த சிவா, “வாசு, நேத்து அமேசிங் ஸ்பைடர்மேன் படம் பார்த்தேன்டா, இப்ப கனவுல நான் தான் ஸ்பைடர்மேனா மாறி உலகத்த காப்பாத்துறேன். அதுக்குள்ள நீ என்ன எழுப்பி விட்டுட்ட.”

தலையில் அடித்த வாசு, “உன்ன வச்சுக்கிட்டு…”

தோளைக்குலுக்கிய சிவா, “டேய் வாசு, ‘ஊக்குவிக்க ஆள் இருந்தா, ஊக்கு விக்கிறவன் கூட தேக்கு விற்பான்.’ அதனால நீ என்ன ஊக்குவிச்சா நான் ஒரு சூப்பர் ஹீரோ ஆகுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.”

“போதும்டா சாமி, ஆள விடு. நான் வீட்டுக்கு போறேன்.” என்று வாசு ஓடினான்.

வீட்டிற்கு வந்த சிவாவிடம் அவனது தாய், “இங்க பாரு சிவா, நானும் அப்பாவும் ஒரு நிகழ்ச்சிக்குப் போறோம். அதனால வீட பூட்டிட்டு பத்திரமா இரு. பூரி செஞ்சிருக்கேன் பசிச்சா சாப்பிடு” என்று கூறி சென்றார். 

கதவை பூட்டி விட்டு உள்ளே வந்த சிவா, “சாயந்திரம் நான் வந்ததும் நூடுல்ஸ் பண்ணனும்னு சொன்னா, பூரி செஞ்சிருக்கேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அது சரி குடல் காய்ஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னுமாம்” என்றபடியே வீட்டுப்பாடம் செய்யாமல் தொலைக்கட்சியில் பதிவு பண்ணி இருந்த ஸ்பைடர்மேன் படத்தை ஓடவிட்டான்.

கதவை தட்டும் ஓசை கேட்டதும், “இந்த நேரத்துல யாரு” என்று யோசித்தபடியே கதவை திறந்தான். அவனுடைய தாய் தேவி நின்றிருந்தார்

“தள்ளு சிவா உங்க அப்பா கைபேசிய விட்டுட்டு வந்துட்டார்.” என்றபடியே வேகமாக உள்ளே சென்றவர் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் தொலைகாட்சியை பார்த்தவர் கோபத்துடன், “சிவா, உனக்கு பரீட்சை வேற நெருங்குது இந்த நேரத்துல படம் வேற பாக்குற?”

பதறிய சிவா, “அம்மா இந்த டிவி எப்படி ஆன் ஆச்சுனே தெரியல. நான் இப்ப ஸ்டடி ரூம்ல இருந்து தான் வரேன்.”

“ஆமா… ஆமா… முயல் பிடிக்கிற நாய் எதுன்னு மூஞ்சியை பார்த்தா தெரியாதா?. நான் போய்ட்டு வந்து நீ பண்ண வீட்டுபாடத்த பார்ப்பேன். அதனால ஒழுங்கா டிவிய அமத்திட்டு படி.”

சிவா, “காவடிப் பாரம், சுமக்கிறவனுக்குத் தான் தெரியும்.” என்று முணுமுணுத்தான். திரும்பி அவனை பார்த்த தேவி, “இப்ப என்ன சொன்ன?”

“ஒன்னும் சொல்லல அம்மா. நான் நல்ல பையனா படிப்பேன் அம்மா. நீங்க வரும் போது எனக்கு ஸ்பைடர்மேன் காமிக்ஸ் வாங்கிட்டு வாங்க.”

அவன் தலையில் கொட்டிய தேவி, “அதான பார்த்தேன், என்னடா நம்ம பையன் திருந்திட்டானோன்னு ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டேன்.”

தலையை தடவிய சிவா, “அம்மா, ‘கண்டதைப் படி பண்டிதன் ஆவாய்’ இது உங்களுக்கு தெரியாதா?”

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்த தேவி, “அது ‘கண்டு அதைப் படிக்க பண்டிதன் ஆவாய்.’ உனக்கு ஒரு பழமொழி கூட ஒழுங்கா தெரியல. இப்ப ஒழுங்கா போய் உன்னோட பாட புத்தகத்தப் படி. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.” என்றபடி அவர் வெளியே சென்றார்.

கதவை பூட்டியவன், பழையபடியே தொலைகாட்சியை பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது அவன் மேல் ஏறிய ஒரு எட்டுக்கால் பூச்சி அவனை கடித்துவிட்டது.

“அம்ம்ம்மா…. என்று கத்தியவன் வேகமாக சோப்பை போட்டு கையை நன்றாக கழுவினான். குளிர்ந்த நீரில் துணியை நனைத்து கடிபட்ட இடத்தில் வைத்தவன், “அன்னைக்கு சார் அறிவியல் வகுப்புல பூச்சி கடிச்சா என்ன பண்ணனும்னு சொல்லும் போது தூங்காம பாடத்த கவனிச்சது எவ்வளவு நல்லதா போச்சு. இப்ப ஸ்பைடர் கடிச்சதும் எனக்கு நானே முதலுதவி பண்ணிட்டேன். இது மாதிரி இனி தூங்காம பாடத்த கவனிக்கணும்.” என்று நினைத்துக் கொண்டான்.

“இந்த ஆன்டி பயாடிக் கிரீம் எங்க இருக்கு” என்று தேடியவன், அது இல்லாமல் போகவே, அதனை வாங்க வீட்டை பூட்டிவிட்டு மருந்து கடைக்கு சென்றான். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவன் செல்லும் பொழுது, அவன் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை கண்டான்.

அவன் உள்ளங்கையில் சிறுசிறு முட்கள் தோன்றின. அவன் பயத்தில் தன் கைகளை உதறினான், அப்பொழுது கடிபட்ட இடத்திலிருந்து வலைகள் தோன்றின.

“வாவ்….. சிலந்தி கடிச்சி நான் நிஜமாவே ஸ்பைடர்மேன் ஆகிட்டேன்.” என்று கத்தினான். அப்பொழுது அந்த வழியே ஒரு திருடனை துரத்திக்கொண்டு இரு காவலர்கள் சென்றனர்.

அதனைப் பார்த்த சிவா அந்த திருடனைப் பிடிக்க தன்வலையை உபயோகித்தான். அது அந்த திருடன் முதுகில் மாட்டியது. ஆனால் அந்த திருடன் நிற்காமல் ஓடினான். அவன் பின்னே வலையை பிடித்துக்கொண்டே சிவாவும் ஓடினான். பின்னாடி திரும்பிய அந்த திருடன்,  வலையை தன்முதுகில் இருந்து எடுத்து, சிவாவை இழுத்து அந்த காவலர்கள் மீது தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.

காவலர்கள் மீது இருந்து எழுந்த சிவாவிடம், காவலர் ஒருவர், “ஏன்ப்பா தம்பி எதுக்கு எங்க வேலையில குறுக்க வந்த? இப்ப உன்னால அந்த திருடன் தப்பி ஓடிட்டான்.”

தலையை ஆட்டிய சிவா, “இல்ல அங்கிள். நான் உங்களுக்கு உதவி தான் பண்ணினேன். அந்த திருடன நான் பிடிச்சிரலாம்னு நினைச்சேன்.” என்றவனை முறைத்த காவலர்கள் அங்கிருந்து சென்றனர்.

வீட்டிற்கு வந்த சிவா, “அந்த திருடன நான் எப்படி தப்பிக்க விட்டேன். இப்ப நான்  ஒரு ஸ்பைடர்மேன் மக்களை காப்பாத்துறது தான் என்னோட வேலை அதுக்கு இன்னும் பயிற்சி அவசியம்.” என்று நினைத்தவன் தொலைபேசியில் தன் நண்பன் வாசுவை அழைத்தான்.

“டேய்… வாசு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீ முதல கிளம்பி எங்க வீட்டுக்கு வா.” என்று அழைத்தான்.

வீட்டிற்கு வந்த வாசு அவன் புதிய சக்தியை கண்டு அதிர்ந்தவன், “அப்ப நீ நிஜமாவே ஸ்பைடர்மேன் ஆகிட்டியா?. முதல்ல நீ வீட்டுப்பாடம் எழுதிட்டியா?”

அவனை முறைத்த சிவா, “ஆமா… இப்ப வீட்டுப்பாடம் ரொம்ப அவசியம். டேய் வாசு, நான் இப்ப சூப்பர் ஹீரோ ஆகிட்டேன். எனக்கு உலகத்த காப்பாத்தனும், மக்களை காப்பாத்தனும் இப்படி பலவேலை இருக்கு. என்னைப் போய் வீட்டுப்பாடம் எழுதிட்டியான்னு கேக்குற.”

வாசு, “என்னமோ பண்ணு. ‘குரங்குக்கு சிரங்கு வந்தால், திண்டாட்டம் என்னவோ சிரங்குக்குதான்.’ எனக்கு வேலை இருக்கு நான் வரேன்.” என்று கூறி சென்றுவிட்டான்.

“இந்த வாசு பயலுக்கு என்மேல பொறாமை. இப்ப நான் யாரையாவது காப்பாத்தனுமே.” என்று நினைத்தபடியே கடைவீதிக்கு வந்தான்.

அப்பொழுது முதியவர் ஒருவர் அரிசி மூடையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு உதவி செய்து சூப்பர் ஹீரோ ஆகலாம் என்று நினைத்தவன், தன் கையிலிருந்து வலையை வரவைத்தான்.

அந்த வலை மூடையில் மாட்டாமல் அந்த மூடையை அருகில் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டது. சிவாவை கோபத்துடன் திரும்பி பார்த்த முதியவர், உள்ளே கடையில் இருந்தவர்களை பார்த்து, “எல்லாரும் ஓடி வாங்க, இந்த பையன பிடிங்க.” என்று கத்தினர்.

பயந்து போன சிவா அவரிடமிருந்து தப்பிக்க திரும்பி பார்க்காமல் ஓடினான். ஓடியவனை பின்னிருந்து யாரோ, “சிவா… சிவா…” என்று கூப்பிடும் ஓசை கேட்டது.

ஓடியவன் ஒரு பாதாள சாக்கடை குழியில் “அம்மா….” என்ற சத்தத்துடன் விழுந்தான். திரும்பவும், “சிவா… சிவா…” என்ற சத்தம். அப்பொழுதுதான் கனவுலகத்தில் இருந்து எழுந்தான் சிவா.

“அப்போ எல்லாம் கனவா?. இவ்வளவு நேரம் தூங்கவா செஞ்சேன்.” என்று நினைத்தபடியே, வேகமாக சென்று கதவை திறந்தான். அங்கு தேவி கோபத்துடன் நின்று கொண்டு இருந்தார்.

அவரை, ஓடி வந்து அணைத்துக்கொண்டவன், “அம்மா, எனக்கு ஒரு கெட்ட கனவு வந்துச்சும்மா. நான் ரொம்ப பயந்துட்டேன்.”

அதனை கண்டுகொள்ளாதவர், “வீட்டுப்பாடம் எழுதுனியா இல்லையா?”

தலைகுனிந்து நின்றவனை பார்த்தவர், “உன்ன தனியா விட்டுட்டுப் போனது என்னோட தப்பு தான். ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதேன்னு’ சும்மாவா சொன்னாங்க.”

“அம்மா, என்ன மன்னிச்சிருங்கம்மா இனி நான் பொறுப்பா இருப்பேன். இனிமேல் நான் சூப்பர் ஹீரோ பக்கமே போகமாட்டேன்.”

அவனைப் பார்த்து சிரித்தவர், “என்னடா சிவா பூனை கருவாட்ட ஒதுக்குன மாதிரி சொல்ற?. நீ நிஜமாவே திருந்திட்டியா?” என்றவரிடம் தான் கனவில் கண்ட காட்சிகளை விவரித்தான்.

அவனை தன் பக்கத்தில் அமரவைத்தவர், “இதுல இருந்து என்ன தெரியுது சிவா?, நம்ம பொழுதுபோக்குக்காக பண்றத நம்ம வாழ்க்கைக்குள்ள கொண்டு வரக்கூடாது. நீ பாடம் படிச்சிட்டு ரிலாக்ஸ் பண்ணனும்னு நினைக்கும் போது, ஸ்பைடர்மேன் படம் பாரு உன்ன வேண்டாம்னு சொல்லல. ஆனா அதையே உன் மனசுல பதிவு பண்ணாத. உன்னால முடிஞ்ச உதவிய மத்தவங்களுக்குப் பண்ணு. பெரியவங்களுக்கு மரியாதை கொடு. பள்ளியில வாத்தியார கேலி பண்ணாத. இதெல்லாம் நீ செஞ்சாலே நீ ஒரு சூப்பர் ஹீரோ தான்.”

“நீங்க சொன்ன மாதிரியே நான் நடக்குறேன் அம்மா. இப்ப நான் வீட்டுப்பாடம் எழுதப்போறேன்.” என்றவனிடம், “சரி” என்றவர் தன் கைபேசியை எடுத்தார். அவரைப் பார்த்த சிவா, “அம்மா நீங்களும் ஸ்பைடரும் ஒன்னு தான்.”

தேவி, “என்ன சொல்ற நீ?”

சிவா, “ஆமா… அம்மா, நீங்க ரெண்டு பேரும் ‘நெட்’லேயே இருக்குறீங்களே…!” என்றபடியே அவரை வம்பிழுத்து விட்டு ஓடிவிட்டான்.     

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலச்சக்கரம் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ தி. வள்ளி, திருநெல்வேலி

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை