in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 10)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஞ்சுளா மெதுவாக அவன் கை மேல் தன் கைகளை வைத்தாள். அவன் கைகளை மென்மையாக வருடிக் கொடுத்தாள். லட்சுமியும் ஸ்ரீதரும் ஆவலுடன் மகனையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர். நர்ஸும் அருகில் இருந்து நந்தகோபாலை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அவன் கை விரல்கள் மெதுவாக மூடித் திறந்தன. நந்தகோபாலையே பார்த்துக் கொண்டு இருந்த அவன் அம்மா, அப்பா திகைப்புடன் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். நர்ஸ் அதை உடனே ஃபைலில் குறித்துக் கொண்டாள். அதை போனில் வேறு யாரோ ஒரு டாக்டருக்கும் போன் செய்து தெரிவித்தாள்.

“மஞ்சு, உன் தொடுதலுக்கு சக்தி இருக்கும் என்று ஒரு நம்பிக்கையோடு தான் முரளியிடம் உன்னை உடனே அழைத்து வரச் சொன்னோம். எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாய் அம்மா” என்று லட்சுமி அவள் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

“அம்மா அழாதீர்கள், எல்லாம் நல்லபடியாகும்” என்றாள் மஞ்சுளா. அவர்களுடன் அதிகமாகப் பேசிப் பழக்கம் இல்லாததால் கொஞ்சம் தயக்கத்துடன் தான் பேசினாள்.

கொஞ்ச நேரத்தில் கோபியை அழைத்துக் கொண்டு வந்து விட்டான் ராகவன். கோபி “அம்மா” என்று அழைத்துக் கொண்டு மஞ்சுவிடம் வந்து ஒட்டிக் கொண்டான். அவனைப் பார்த்து லட்சுமியும், ஸ்ரீ தரும் பிரமித்து நின்றனர்.

“நந்தகோபாலை சிறு வயதில் பார்த்தது போலவே இருக்கிறது” என்று மகிழ்ந்தனர்.

“அம்மா, நான் டாடியை உடனே பார்க்க  வேண்டும்” என்று குதித்தான் கோபி.

ஸ்ரீதர் மஞ்சுளாவிடம், “குழந்தைக்கு குடிக்க ஏதாவது ஜூஸ் கொடுத்து விட்டு, பிறகு அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று கூறம்மா. இந்த நிலையில் ‘டக்’ கென்று நந்தகோபாலைப் பார்த்தால் குழந்தைக்கு அதிர்ச்சியாகும்” என்றார். ஆனால் கோபி எதையும் குடிக்க மறுத்து விட்டான். முதலில் டாடியைத் தான் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தான்.

வேறு வழியில்லாமல் அவன் தாத்தா ஸ்ரீதரும் அவனைத் தூக்கிக் கொண்டார். எல்லோரும் பின் தொடர நந்தகோபால் படுத்திருந்த அறைக்குச் சென்றனர். நந்தகோபாலைப் பார்த்ததும் வேகமாக தாத்தாவிடமிருந்து குதித்து தந்தையிடம் ஓடி வந்தான் கோபி.

“டாடி, என்னைப் பாருங்கள் டாடி. உங்கள் கோபி கிருஷ்ணா வந்திருக்கிறேன் டாடி” என்று அவன் முகத்தோடு தன் முகத்தை அழுத்தமாக வைத்துக் கொண்டு அழுதான் குழந்தை. அவன் அழுவதைப் பார்த்து  எல்லோரும் கண்கலங்கினர்.

வெகுநேரம் நந்தகோபாலிடம் எந்த பிரதிபலனும் இல்லை. கோபி அழுது அழுது ஓயும் போது மெதுவாகக் கண்களைத் திறந்தான் நந்தகோபால்.

“கோபி என் கோபி, கண்ணே, நீ வந்து விட்டாயா? அம்மா எங்கே கண்ணா?” என்றான் திக்கித்திணறி. மகனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு வெறி கொண்டவன் போல் முத்தமாறி பொழிந்தான். பிறகு, “அம்மா எங்கேடா கண்ணா?  என் மஞ்சு எங்கே ராஜா ?” என்றான் உணர்ச்சி பெருக்கில் திக்கித் திணறி கண்களில் நீர் வழிய.

“நானும் இங்கே தான் இருக்கிறேன்” என்றாள் மஞ்சுளா அழுது கொண்டே.

“எனக்கு ஒன்றும் இல்லை, அழாதே மஞ்சு. கோபி அழாதேடா கண்ணா” என்றான் நந்தகோபால், இருவரையும் அணைத்துக் கொண்டு.

லட்சுமி மருமகளை இழுத்து அணைத்துக் கன்னத்திலும், நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்

“என் மகனின் உயிர் மஞ்சுவிடத்திலும் கோபியிடத்திலும் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு இத்தனை வருடங்கள் ஆயின” என்றாள்.

நந்தகோபால் , ராகவனைக் கை கூப்பி வணங்கினான் .

லட்சுமி ஓடிப்போய் எல்லோருக்கும் பழரசம் எடுத்து வந்தாள். அப்போது சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த நரம்பியல் டாக்டர் அங்கு வந்தார். நந்தகோபாலைப் பரிசோதித்தார்

பின்னர் மஞ்சுளாவிடம், “நீங்கள் வந்தது மிகவும் சந்தோஷம். எந்த அசைவும் இல்லாமல் இருக்கவும் எங்களுக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது. நீங்களும் குழந்தை கோபியும் வந்த பிறகு, நோ, நோ உங்கள் இருவரின் தொடுதலுக்குப் பிறகு நந்தகோபால் எங்களுக்கு மீண்டும் கிடைத்து இருக்கிறான். ஆனால் நீங்களும், கோபியும் இங்கேயே நந்தகோபால் கூடவே சில நாட்கள் தங்க வேண்டும். அப்போது அவர் சீக்கிரம் பழைய நிலைக்கு வந்து விடுவார்” என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

அன்றே ராகவன் எல்லோரிடமும் ஊருக்குக் கிளம்புவதாகக் கூறினார். ஸ்ரீதர் சிரித்தார். “ராகவன், இன்னும் சற்று நேரத்தில் சாரதாவும் ஜானகியும் இங்கே வந்து விடுவார்கள், எல்லோரும் இரண்டு நாட்கள் சந்தோஷமாக இருந்து விட்டுப் பிறகு கிளம்பலாம்”  என்றார் தீர்மானமாக.

ஸ்ரீதரும், லட்சுமியும் தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். முரளி சிறிது நேரத்தில் ஜானகியையும், சாரதாவையும் அழைத்து வந்தான். முரளியின் முகம்  வழக்கத்தை விட மலர்ச்சியுடனும், சந்தோஷமாகவும் இருந்தது. அந்த மலர்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் காரணம்  ஸ்ரீதருக்கும், லட்சுமிக்கும் தெரியும். ஆனால் அதன் எதிரொலி ஜானகியிடம் தெரிகிறதா என்று பார்த்தார்கள். அது வழக்கம் போல் உணர்ச்சியற்றுத் தான் ‌இருந்தது.

சாரதா எல்லோரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு நந்தகோபாலிடம் நலம் விசாரித்தாள். பிறகு லட்சுமியிடம், “அம்மா, நீங்களும் பெரிய டாக்டரும் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். கொஞ்சம் தூங்கி ஓய்வெடுங்கள். சமையல் வேலையை சமையல்கார மாமியுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். மஞ்சுவும்  கோபியும் டாக்டர் நந்தகோபால் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளட்டும்” என்று லட்சுமியைத் தொந்தரவு செய்து படுக்க வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள்.

ஜானகி இருவருக்கும் இஞ்சி, பெருங்காய வாசனையோடு நீர் மோர் கொண்டு வந்து கொடுத்தாள். கோபி, நந்தகோபாலை விட்டு விலகாமல் அவன் அருகில் அமர்ந்து அவன் அப்பாவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு நர்ஸும் கூடவே இருந்தாள்.

டாக்டர் எழுதிக் கொடுத்த புதிய மருந்துகளை டாக்டர் முரளி கொண்டு வந்து நர்ஸிடம் கொடுத்தான். அன்று முழுவதும் நந்தகோபாலிற்கு ஸலைன் வாட்டர் தான் ஏறிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் தான் திடஉணவு கொடுக்க டாக்டர் உத்தரவு. யாரும் அவனுடன் பேசாமல் அவனை ஓய்வெடுக்க வைத்தனர்.

மஞ்சுளாவும்  கோபியும் அருகில் இருப்பதாலோ அல்லது டாக்டர்களின் மருந்துகளாலோ நந்தகோபால் நிம்மதியாகத் தூங்கினான். அடுத்த நாள் திடஉணவு இட்லி, சாதம் எல்லாம் கொடுத்தார்கள். தலை காயம் தான் ஆறவில்லை. ஆனால் அவன் ஆபத்திலிருந்து மீண்டு விட்டான் என்று அறிவித்த டாக்டர்கள், மேலும் சில மருந்துகள் எழுதிக் கொடுத்தனர். இனி ஆபத்தில்லை என்று கூறிவிட்டு சென்னை கிளம்பினர்.

நந்தகோபால் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். ஓரிரு நாட்களில் மெதுவாக நடக்கத் தொடங்கினான்.

ராகவனும், சாரதாவும் விடைபெற்றனர். முரளி அவர்களைக் கொண்டு போய் விடுவதாகக் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். தாங்கள் பஸ்ஸில் போவதாக ராகவன் எவ்வளவோ கூறியும் முரளி தொந்தரவு செய்து காரை எடுத்து அவர்களை அழைத்துச் சென்றான். நந்தகோபாலின் அம்மா லட்சுமியோ, மஞ்சுளாவும், கோபியும் இன்னும் சில நாட்கள் கழித்துத் தான் கிளம்பலாம் என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

நந்தகோபாலின் எல்லா வேலைகளையும் மஞ்சுளாவே நர்ஸின் உதவியுடன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாள். கோபிக்குத் தேவையான காரமில்லாத உணவு, பெரியவர்களுக்கு எண்ணெய், காரமில்லாத உணவு வகைகளையும் சமையல்கார மாமிக்கு உதவியாக இருந்து தயார் செய்து பம்பரமாக சுற்றினாள்.

ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து நான்கு டாக்டர்களும் ஏதோ மருத்துவ சம்பந்தமான விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர். கீழே  தரையில்  கார் பார்க்கிங் அருகில் கோபி, தாத்தா வாங்கிக் கொடுத்த ரிமோட் கண்ட்ரோல் காரை ஓட்டிக்கொண்டு இருந்தான். மஞ்சு எல்லோருக்கும் பாதாம் பால் கொண்டு வந்து கொடுத்தாள். லட்சுமி அவளை இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டாள் .

அப்போது தான் டாக்டர் ஸ்ரீதர் அந்த சந்தேகக் கேள்வியைக் கேட்டார்.

“முரளி எனக்கொரு சந்தேகம். சிதம்பரத்தில் நம் மருத்துவமனையில் தண்ணீருக்கு ஒன்றும் பஞ்சமில்லையே! அப்படியிருக்க தண்ணீர் லாரி ஏன் உள்ளே வந்தது? உள்ளே வந்த லாரி வேண்டுமென்றே நந்தகோபால் காரை இடித்தாற்போல் இருக்கிறதே! அந்த லாரியை யார் வரவழைத்தது?”

“ஸிந்து தான் லாரியை வரவழைத்தாள். மருத்துவமனை நிர்வாகம் முழுவதும் அவள் கையில் தானே! போலீஸ் கூட நீங்கள் கேட்ட அதே கேள்வியைத் தான் கேட்டது! ஆனால் ஒரு போர்வெல் ரிப்பேர் ஆகி விட்டதால் அவசரத் தேவைக்கு லாரியை வரவழைத்ததாகக் கூறினாள்” என்றான் முரளி

பத்து நாட்கள் கழிந்தன. நந்தகோபால் ஏறக்குறைய உடல்நிலை நன்றாகத் தேறி விட்டான். மஞ்சுளா, சிதம்பரத்திற்குத் தன் அண்ணா வீட்டிற்குப் போகவேண்டும் என்று தன் அத்தை, மாமாவிடம் கேட்டுக் கொண்டாள். அவர்கள் இருவரும் அவளைப் பலவாறு தடுத்தும் அவர்களுக்குப் பக்குவமாகத் தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்.

மஞ்சுளா தங்கள் அறையில் வந்து தன் துணிகளையும், கோபியின் துணிகளையும் எடுத்து சூட்கேசில் அடுக்கிக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த நந்தகோபால்,
“மஞ்சு, நீ கட்டாயம் இப்போது போகத்தான் வேண்டுமா? என்னுடன் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கக் கூடாதா?” என்றான் ஏக்கத்துடன்.

“நான் தான் பலமுறை உங்களிடம் சொல்லி விட்டேனே! நாங்களும் வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. எந்த உரிமையில் நான் இங்கு தங்க முடியும்? கடவுள் அருளால் உங்களுக்கு உடம்பு நன்றாகத் தேறி விட்டது. எனக்கு அது போதும்” என்றாள் தன் கண்களில் ஓரத்தில் நின்ற கண்ணீர் முத்துக்களைத் துடைத்தபடி.

“என் முட்டாள்தனத்தினால் தான் உனக்கு இந்த கஷ்டம். என்னை மன்னித்து விடு” என்ற நந்தகோபால், அங்கிருந்து வெளியேறி தன் பெற்றோரிடம் சென்றான்.

முரளி காரை எடுத்துக் கொண்டு வாசலில் நின்றான். மஞ்சுளா எல்லோரிடமும் விடைபெற்று கோபியுடன் காரில் சென்று அமர்ந்தாள்.

“முரளி, ஒரு நிமிடம்” என்றவாறு அப்போது லட்சுமியும் ஸ்ரீதரும் ஆளுக்கொரு சிறிய பையுடன் வந்து காரில் ஏறினார். ஸ்ரீதர் முரளிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். பின் இருக்கையில் இருந்த கோபி தாத்தாவிடம் தாவினான்.

“நீங்களும் வருகிறீர்களா அம்மா?” என்றாள் ஆச்சர்யத்துடன் மஞ்சுளா.

“ஆம் மஞ்சுளா, உங்கள் அண்ணா வீட்டிற்கு நாங்கள் வரலாமில்லையா?” என்றாள் லட்சுமி கேலியாக.

“தாராளமாக” என்றாள் மஞ்சுளா. ஆனால் மனதிற்குள், ‘விபத்தில் இருந்து எழுந்த தன் மகனை விட்டு இவர்கள் ஏன் இப்போது அண்ணா வீட்டிற்கு வருகிறார்கள்?’ என்று எண்ணினாள்.

“கோயிலில் ஒவ்வொரு வருடமும் அன்ன தானம் செய்வோம். இந்த வருடம் நந்தகோபால் உடல் நலமில்லாமல் படுத்துவிட்டதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. அதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் , உங்கள் அண்ணா , அண்ணிக்கும் நன்றி சொல்லி விட்டு வரலாம் என்று தான்” என்றார் ஸ்ரீதர்.

“அண்ணா அண்ணிக்கு நன்றியா? எதற்கு?” மஞ்சுளா.

“என்னம்மா அப்படிக் கேட்டு விட்டாய்? நம் வீட்டில் வந்து சில நாட்கள் தங்கி நம் துன்பத்திலும்,சந்தோஷத்திலும் பங்கு கொண்டிருந்தார்கள். நம் சின்னக் குட்டி இளவரசனை உன் அண்ணா கீழவே விடவில்லை. எவ்வளவு அன்பான, உண்மையான மனிதர்கள் நமக்கு உறவினர்கள். அந்த உறவை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

“அதிலும் அந்தப் பெண் ஜானகி எப்படி துருதுருவென்று ஒரு வெண்புறா போல் வீடு முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தாள். சிலருக்கு அழகிருக்கும், ஆனால் கூடவே அகம்பாவமும் இருக்கும். இந்த பெண் ‘வீனஸ்’ என்னும் கிரேக்க சிலை போல் இருக்கிறாள். மருத்துவம் படித்தாலும் துளி கர்வம் இல்லை. முரளி நீ என்ன சொல்கிறாய்?” என்று லட்சுமி முரளியை வம்பிற்கு இழுத்தாள். அவனோ ஒன்றும் சொல்லாமல் லேசாகச் சிரித்தான்.

போகும் வழியில் ஸ்ரீதர் போன் செய்து, ராகவனிடம் தாங்கள் வருவதைத் தெரிவித்தார். சாரதாவும் , ஜானகியும் அமர்க்களமாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அந்த வீட்டில் எல்லோரும் படுப்பதற்குத் தான் போதிய வசதிகள் இல்லை. அதனால் ஆண்கள் ஹாலிலும், பெண்கள்  படுக்கை அறையிலும் படுப்பதென்று முடிவு செய்தார்கள்.

கோபி தலையணையைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்கும் படுக்கை அறைக்குமாக அலைந்து, கடைசியில் தாத்தாவிற்கும், மாமாவிற்கும் மத்தியில் படுத்துக் கொண்டு தூங்கி விட்டான்.

வெகு நாட்களுக்குப் பிறகு மஞ்சுளா நிம்மதியாக, மனஅமைதியுடன் தூங்கினாள். அடுத்த நாள் காலையில் ஜன்னலிலிருந்து வந்த சூரிய ஒளி முகத்தில் அடித்த பிறகுதான் கண் விழித்தாள். கண் விழித்தவள் படுக்கையில் அவள் அருகில் நந்தகோபால் உட்கார்ந்து குறும்பாக சிரிப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அங்கங்கே புடவை சற்றே விலகியிருப்பதால் கூச்சப்பட்டாள்.

“ஹலோ குட்மார்னிங்! என்னிடம் என்ன வெட்கம் மஞ்சு? வெகு நாட்கள் கழித்து நன்றாகத் தூங்கினாய் இல்லையா?” என்றான். சந்தோஷம் அவன் முகம் முழுவதும். அங்கு ராகவன் தங்கைக்காகக் கையில் காபியுடன் வந்தார். சாரதாவும், லட்சுமியும் சில அட்டைப் பெட்டிகளையும் நகைப்பெட்டிகளையும் கொண்டு வந்து அவள் அருகில் வைத்தனர்.

“குளித்து விட்டு இதெல்லாம் போட்டுக்கொண்டு சீக்கிரம் கிளம்பு மஞ்சுளா” என்று லட்சுமி உத்தரவு போட்டு விட்டு வெளியேறினாள். அவளோடு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். பெட்டியைப் பார்த்தாள், பெரிய ஜரிகை போட்ட பட்டுப் புடவை, முத்தும் பவளமும் வைத்து இழைத்த நகை செட்.

நந்தகோபால் எப்படி இவ்வளவு காலையில் வந்தான்? இவ்வளவு பெரிய பட்டுப் புடவையும், இவ்வளவு நகைகளையும் போட்டுக் கொண்டு எங்கே கிளம்பச் சொல்கிறார்கள்?  ஓ! கோயிலில் அன்னதானம் என்றார்களே ! அதற்காகத்தான் போலும்  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

ஏதும் சந்தேகம் கேட்கலாம் என்றால் எல்லாம்  பரபரவென்று தயாராகிக் கொண்டு இருந்தார்கள். கோபி கூட ரெடிமேட் பட்டு வேட்டியிலும் சட்டையிலும் ஜொலித்துக் கொண்டிருந்தான். புதிதாகக் கழுத்தில் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, கையில் வைரக் கற்கள்  பதித்த தங்க பிரேஸ்லெட் வேறு. மஞ்சுளாவிற்கு அவனைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

“என்ன மஞ்சு, இன்னும் ரெடியாக வில்லையா? சீக்கிரம் கிளம்பு. முதலில் நாங்கள் ஒரு ட்ரிப் போய் இறங்கிக் கொண்டு உனக்குக் காரை அனுப்புகிறோம். கோபியை எங்களுடன் அழைத்துப் போகிறோம். நீயும் நந்துவும் வீட்டைச் பூட்டிக் கொண்டு வந்து விடுங்கள்” என்று எல்லோரும்  பரபரவென்று கிளம்பி விட்டார்கள்.

பட்டுப் புடவையும், மல்லிகைப்பூவுமாக அண்ணி சாரதா அன்று மிக அழகாக சந்தோஷமாக இருந்தாள். ஜானகி கூட புதிய பட்டுப் பாவாடையிலும் தாவணியிலும் என்ன அழகாக இருந்தாள். குழந்தையாக இருந்தவள் திடீரென்று நன்றாக வளர்ந்து விட்டாள் போல் தோன்றியது. ஆனால் யாரும் வாயைத் திறக்கவில்லை .

எல்லோரும் எங்கே கிளம்புகிறார்கள்? யாரும் பேசக் கூட நேரமில்லாமல் பரபரத்துக் கொண்டு, எதைக் கேட்டாலும் லேசான சிரிப்புடன் போய் காரில் ஏறி கிளம்பி விட்டார்கள். நந்தகோபால் மட்டும் அன்றைய செய்தித்தாளுடன் இவள் வரவிற்காகக் காத்திருப்பது போல் உட்கார்ந்து இருந்தான். ஆனால் அவனும் ஏதோ குறும்பாக சிரிப்பது போலவே இருந்தது.

அவனிடம் எது கேட்டாலும்  அதிக உரிமை எடுத்துக் கொள்வது போல் இருக்கும் என்று எதுவும் கேட்காமல் மௌனமாகத் தனக்குக் கொடுக்கப்பட்ட பட்டுப் புடவையும், நகைகளையும் ‌ஏதோ ரோபோட் போல் அணிந்து கொண்டாள். தலை குளித்து இருந்ததால், நன்றாக ட்ரையர் போட்டு தளர்த்தியாக ஒற்றைப் பின்னல் போட்டு மல்லிகைச் சரத்தையும் நீளமாகத் தொங்க விட்டு கண்ணாடியைப் பார்த்தவள், அப்படியே பிரமித்து நின்றாள். ஏதோ தேவதையைப் பார்ப்பது போல் இருந்தது .

‘எல்லோருக்குமே அவரவர்ளைக் கண்ணாடியில் பார்த்தால் தேவதைகள் போலத் தான் இருக்கும்’ என்று யோசித்தவள், தன் தலையில் தானே குட்டிக் கொண்டு நந்தகோபால் எதிரில் போய், “நான் ரெடி, போகலாமா?” என்றாள்.

நந்தகோபால் அவள் மேல் வைத்து கண்களை அகற்றவில்லை. அவன் பார்வை அவள் கன்னங்களை சிவக்க வைத்து விட்டது .

“மஞ்சு , சுஜாதாவின் ஸ்ரீ ரங்கத்து  தேவதைகள் படித்திருக்கிறாயா? எனக்கு இப்போது ‘சிதம்பரத்து தேவதை’ என்று எழுதவேண்டும் போல் இருக்கிறது” என்றான்

“ஒரு டாக்டர் கவிஞராகி விட்டாரா?” என்று இவளும் பதிலுக்கு கேலியாகக் கேட்டவாறே முன்னே நடந்து காத்திருந்த காருக்கு சென்றாள்.

நந்தகோபாலும் வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் அவள் அருகில் அமர்ந்தான். காரில் வேறு ஒரு கால் டாக்சி டிரைவர் வந்திருந்தார். முரளி வரவில்லை . அவர் நேராகக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்து கடவுளை வணங்கி விட்டு எல்லோரும் கிளம்பினார்கள். ஆனால் இரண்டு கார்களும் வீட்டை நோக்கிச் செல்லவில்லை. மஞ்சுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. யாரும் இவள் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். அவளை யாரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஸ்பைடர்மேன் சிவா (சிறுவர் கதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 4) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்