in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 4) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 4)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பழனி கணக்கு

“சுருட்டு குடுறா…” என்ற வார்த்தையைக் கேட்டவுடன், கிருஷ்ணனுக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. தானும் அப்பாவும் மட்டும் இருக்கும் வீட்டில், வேறு யார் பேசுவது என்ற அச்சம் கலந்த அதிர்ச்சி. அவனின் அதிர்ச்சியில் மேலும் பயத்தைப் பீய்ச்சி அடித்தது பழனியின் செயல்.

“எனக்கு அந்தப் பழக்கம்லா இல்ல… போ போ…” என்று விரட்டினார் பழனி. 

அவ்வளவு தான்… பழனி அந்த அசரீரி குரலுக்குப் பதிலளிக்கவும் கிருஷ்ணன் மயங்கியே விழுந்து விட்டான்.

“அட என்னடா நீ!” என்று சொல்லிக்கொண்டு, பழனி அவனைத் தண்ணீர் தெளித்து எழுப்பினார். அவன் “புளுக் புளுக்” என்று கண்ணைத் திறந்து கொண்டு விழித்துப் பார்த்தான்.

அந்நேரம் வெளியே வாசலில், “டேய் கிஸ்னா…! பாக்யம் வந்திருக்கேன்” என்ற குரல் கேட்டு, “உள்ற வாங்க” என்று மறுகுரல் கொடுத்தான் கிருஷ்ணன். 

பாக்யம் உள்ளே வரும் போதே, கத்திரிக்காய் குழம்பு வாசம் மணந்தது. பயம் எங்கே என்று கேட்பது போல, உடம்பைச் சிலுப்பிக் கொண்டு, கைக்கழுவி அமர்ந்தான் கிருஷ்ணன்.

பாக்யம் இரண்டு பேருக்கும் சோறு வைத்து, குழம்பு ஊற்றி, ராதவைப் பற்றி நலம் விசாரித்தாள்.

பழனி சாப்பிடும் போது, ஏதும் பேசமாட்டார் என்பதை அறிந்த கிருஷ்ணன், “நல்லா இருக்கான்ங்க இப்ப, அம்மா தா வருத்தப்படுது கொஞ்சம்” என்று அளவாகச் சொல்லி முடித்தான்.

பாக்கியமும், “ஹ்ம்ம்.. ராதான்னாவே பார்வதிக்குப் பிரியம் தா. நீ படிச்சிட்டு இருக்குற. உங்க பெரிய அண்ண பட்டணத்துக்குப் போய்ட்டான். ராதா தான் அம்மாவுக்குக் கூட மாட எல்லா ஒத்தாசையு பண்ணும். சாமி, கோயில்னு சுத்திட்டு இருக்குற அதுக்கா இப்படி வரணு..?” என்று சடைத்துக் கொண்டாள். 

இப்படியே மாறி மாறி கிருஷ்ணனும் பாக்கியமும் பேசிக் கொண்டிருக்க, பழனி சாப்பிட்டு முடித்தார். நைனா கையலம்பச் செல்ல, கிருஷ்ணனும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றான்.

பாக்யம் சாமான் எடுத்து வைத்துக்கொண்டு, “நாளைக்கு காலைல வரேன், நல்லா தூங்குங்க. ராதா இந்த வாரத்துல வந்துருவான்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

கிருஷ்ணனுக்குக் கொஞ்சம் “கிளுக்” என்றது. ‘நாளைக்கு தா.. ராதா வந்துருவானே! அம்மாவும் வந்துடும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். 

இரவு பட்டையை இட்டுக்கொண்டு படுத்தது தான் தெரியும். அடுத்த நாள் காலை 8.00 மணி ஆகி, சூரியன் ஒளி சுளீரென்று முகத்தில் அடித்த பின்பு தான், கிருஷ்ணன் அரக்கப்பரக்க எழுந்தான். நைனா காலையிலேயே கிளம்பி விட்டிருந்தார். தானே விறுவிறுவென்று, விறகடுப்பு மூட்டி, குளிக்கத் தண்ணீர் வைத்தான்.

‘இதெல்லாம் ராதா எப்டிதான் தினமு செய்றானோ?’ என்று மனதில் நினைத்துக்கொண்டான். வேக வேகமாக குளித்து விட்டு, தலையைத் துவட்டிக்கொண்டு வந்தான். கையில் நோட்டு புஸ்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்புகையில், வாசலண்டை பார்வதியும் ராதாவும் ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். 

“அப்படியே நடந்து விட்டதே” என்று சத்தமாகச் சொல்லி, புத்தகங்களைக் கீழே போட்டு விட்டு ஓடினான். ராதா மெல்லமாக இறங்கி உள்ளே வந்தான்.

பார்வதி கையில் ஒரு ஜவுத்தாள் பை நிறைய மாத்திரை மருந்து இருப்பதைக் கவனித்து விட்டு, “இவ்ளோவும் ராதாவுக்கா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான்.

மேலும், “நைனா சொலிச்சு.. நீ ராதாவ கூட்டிட்டு காலம்புற வந்துருவன்னு” என்று உரக்கச் சொல்லி, “சரி.. நான் கிளம்புற.. நாராயண ஓட்டல்ல சாப்பிடுக்குறே…” என்று சைக்கிளை வேகமாக ஒரு மிதி மிதித்தான்.

காற்றடைத்த சக்கரம் இரண்டும் பறக்க ஆரம்பித்தது

அன்றிலிருந்து, நாட்குறிப்பில் பல திங்கள் கடந்தது. நாற்திசையில் பரந்து விரிந்து கிடந்த வானத்திலும் திங்கள் தேய்வதும் விரிவதும் நடந்தன. வீட்டில் அப்பாவால், நிகழ்த்தப்படும் அதிசயங்கள் யாருக்கும் ஆச்சரியத்தைத் தரவில்லை. 

மனிதனுக்கு அதிசயம் என்பது இரண்டு மூன்று நிமிடங்கள் தான் நீடிக்கின்றன. அதற்குப் பிறகு, அது ஒரு செய்தியாகவோ தினசரி செயலாகவோ ஆகிவிடுகிறது.

காலம் கிருஷ்ணனை, யூ.ஜி.படிப்பு வரையில் சோதனை இல்லாமல் கைப்பிடித்துக் கூட்டி வந்திருந்தது. அதிகமாக எது இருந்தாலும், அது தான் பெரிது என்ற சுபாவம் நம்முள் இருக்கத்தான் செய்கிறது. கிருஷ்ணனும் அவ்வாறே நினைத்தான்.

ஆசிரியர் வேலைக்குப் போவதை லட்சியமாகக் கொண்டிருந்த கிருஷ்ணன், தொடர்ந்து பி.ஜி படிக்க வேண்டும் என்று எண்ணி, சுயமாய் ஏதாவது சம்பாதிக்க முடிவு செய்தான். ஆனால், அந்தக் காலத்தில் பி.எட் படித்திருந்தால் தான் அரசு வேலை என்பதை அவனுக்கு யாரும் சொல்லவில்லை.

சொல்லும்படியான படித்த பெற்றோரும் இல்லை. அம்மாவுடன் சேர்ந்து, கட்டு ஒட்டி காசு சேர்த்து வைத்தான். பத்தவில்லை என்றால், இளைய அண்ணன் கொஞ்சம் பணம் தருவார். எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டு விட்டுக் காத்திருந்தான். 

கிருஷ்ணன் வெளியூருக்குப் போவதை நினைத்து பார்வதி மனதில் லேசான சலனம் ஏற்பட்டது.

இரவு சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருகையில், “மூத்த மகன் சென்னைக்கு போனவன் தான்…. திரும்பவேயில்லை. எங்களுக்குத்தே வயசாயிடுச்சு. கிருஷ்ண படிச்சிருக்கான்..! படிச்ச பொண்ணா பாத்து கட்டிக் கொடுக்கணும்.. இதெல்லாம் மூத்த மக இருந்து செய்வான்னு நம்புன எம் புத்திய எங்க கொண்டு போய் அடிச்சிக்குறது?” என்று முணங்கிக் கொண்டே, சப்பாத்தி மாவை ஒரு போடு போட்டாள்.

மூத்த மகனைப் போலவே, கிருஷ்ணனும் ஆகிவிடுவானோ என்ற கவலை அவளை வாட்டி எடுத்தது. அப்பாவிற்கு எந்தக் கவலையும் இல்லை. துணி நெய்வார்; மூலிகை, மண் என்று ஓயாமல் ஏதாவது சித்த ஆராய்ச்சி செய்வார்; அர்த்த ராத்திரியில் தியானத்தில் ஆழ்வார். அவ்வளவே தான்.

கிருஷ்ணனும் சரி, பழனியும் சரி ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டு வருவரே தவிர, அடிக்கடி பேச மாட்டார்கள். அம்மாவின் வெகுநாள் கவலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணன், அப்பாவிடம் மீண்டும் தன்னைப் பற்றி கேட்பதற்கு முடிவு செய்திருந்தான். 

முதல் முறை போலவே, இரவு நேரம் அப்பாவின் கட்டிலருகில் போய் அமர்ந்து கொண்டான். அவர் மும்மரமாக ஏதோ வேலையில் இருந்தார். கிருஷ்ணனைப் பார்த்ததும், “ஹ்…ம்ம் என்னடா சொல்லு?” என்றார்.  

கிருஷ்ணன் கொஞ்சம் இயல்பானவனாய், “நைனா… நா எப்போ வேலைக்குப் போவ? அன்னிக்கு கேட்டப்போ கண்ண மூடிட்டு உட்காந்துட்டியே. அஞ்சு வருஷத்துக்கு முன்ன எனக்கு வயசு பத்தாது. ஆனா, இப்போ சொல்லலாம்ல. நீ சொன்ன பிறகு, காலநேரத்துல எனக்கு நம்பிக்கை வந்திருக்கு. அது கடுகளவு கூட பிசுகுறதுல” என்று தெளிவாக தன் கேள்வியை முன்வைத்தான்.

அவனின் வார்த்தைகளில் இருந்த தெளிவு, பழனியின் இரும்பு நெஞ்சத்தை லேசாக உருக்கி விட்டது. “டேய் கண்ணா… நல்லா கேட்டுக்கோ” என்று சொல்லும் போது, பார்வதியும் தன் காதை நன்றாக தீட்டி வைத்துக் கொண்டாள்.

“படிக்க போற நீ, பார்வதி பயப்படுற மாறி கெட்டுப் போயிடமாட்ட. ஆனா வழியில நிச்சயம் தடை இருக்கு, அத நீ நல்லபடியா கடக்கணும். உன்னப் படிக்க விடாது அந்த தடை. பொறவு நீ வேலைக்குப் போவ, ஆனா முதல்ல போற வேலக்கும் படிப்புக்குத் துளி கூட சம்மந்தம் இருக்காது. நீ படிப்புக்கு ஏத்த வேலைக்குப் போவுறதுக்குல உன்ன கணக்கு படிக்க வெச்சவன், அதான் இந்தப் பழனி கணக்கு முடிஞ்சிடும்” என்று முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல சொன்னார்.

இதைக் கேட்ட பார்வதி, ஒரு நிமிடம் தன் தாலிக்கயிற்றை இறுகப் பற்றிக் கொண்டாள்….!

தகப்பனிடம் தன்னைப் பற்றியும் தன் எதிர்காலம் பற்றியும் கேட்டறிந்த கிருஷ்ணன், ஏதும் பேசாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

அவன் மனது இப்போது ‘ஏண்டா கேட்டோம்?’ என்ற நிலைக்கு வந்துவிட்டிருந்தது.

‘என்னதான் சொல்றதா இருந்தாலு.. இந்த மனுஷ இப்படியா கணக்கு முடிஞ்சிடும்னு பொசுக்குன்னு சொல்லிப்புடுவாரு’ என்று தலையைத் தேய்த்துக் கொண்டான்.

‘ஆனா, என்ன மனசு….!  வைரம் பாஞ்ச மனசுன்னா இதான்பா..! எங்கம்மா இன்னேரம் இத கேட்டு அடுப்படியில அழுதுகிட்டுருக்கும்.. இத சொன்ன நைனாவுக்கே ஒரு பயமு இல்ல…!  சித்தர்கள்லாம் எல்லாத்தையு விட்டுவிட்டு போயிடறாங்க. அவங்களுக்குத் தா  என்ன இருக்கு.? கொழந்தையா குடும்பமான்னு? கேக்குறவங்களால, தனக்குத்தானே தேதி குறிச்சிக்க முடியுமா? அவ்ளோ ஏன்? என்னாலயே இத கேட்டுட்டு நிம்மதியா இருக்க முடியலியே.! படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காதுன்னு தெரிஞ்சவுடனே மனசு நோவுது. வாழ்க்கைல ஒரு பகுதியா இருக்கப் போற வேலைக்கே இவளோ வருத்தம் எனக்கு..! ஆனா, வாழ்கையே முடிஞ்சிடும் அந்த மனுஷ அவ்ளோ லேசுலல்ல சொல்லிட்டாரு..! என்ன தெகிரியம்.. டா..!’ என்று கண்கள் விரிய, புருவம் நெளித்து விரித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டான். 

அன்றிரவு சாப்பாடு அவன் தொண்டைக்குள் ரொம்பவும் மெல்லமாக இறங்கியது. நேரம் கசந்தது. தூக்கம் தொலைந்தது. திண்ணையில் வந்து படுத்துக் கொண்டான். அப்போது ஒரு கை அவன் மேல் படவே, திரும்பிப் பார்த்தான்.

எதிரில் அக்கா நின்று கொண்டிருந்தாள். அவள் வீட்டிலிருப்பதே தெரியாத அளவிற்கு அமைதியாக, அவளுண்டு அவள் வேலையுண்டு என்று இருப்பாள். அதனால் கதையிலும் அவ்வாறே கொண்டுவர வேண்டிய கட்டாயம். இப்போது அவளுக்கு ஒரு பெரிய இடத்தில் நிச்சயம் செய்து விட்டிருந்தார்கள்.

அக்கா கிருஷ்ணனிடம் சொன்னாள், “கிருஷ்ணா… கவலப்படாதா டா. அப்பா சொன்னத நானு கேட்டே, எல்லா நல்லபடியா தா நடக்கும்” என்று சமாதானம் சொல்லி, உள்ளே போய் படுக்கச் சொன்னாள். 

அடுத்த நாள் காலையில் கிருஷ்ணன் விழித்ததே போஸ்ட் மேன் முகத்தில் தான்.

“அம்மா போஸ்ட்…” என்று வாசலண்டை நின்று போஸ்ட் மேன் உரக்கக் கத்தவும், கிருஷ்ணன் வெளியே வந்தான்.

“பச்சையப்பன் கல்லூரில சீட் கொடுத்துட்டாங்க போலிருக்கே.. ம்ம்..ம்ம்..! படிச்சி பெரியாளாவு” என்று திருமொழி சொல்லிவிட்டுப் போனார். 

கிருஷ்ணன் கடிதாசைப் பெற்றுக்கொண்டு, மலங்க மலங்க விழித்தான். அவன் முகத்தில் அப்பி வழித்தெடுத்த சோகம். என்னதான் படிக்கச் சென்றாலும், அவன் முதன்முதலில் அப்போது தான் வீட்டை விட்டு, அன்பு அம்மாவை விட்டு, அமைதியே உருவான அக்காவையும் அப்பாவையும் விட்டு, ஆரவாரத்துடன் அனுபவத்தைச் சொல்லும் அண்ணனை விட்டுப் பிரிந்து செல்கிறான். 

அந்தக் கடிதாசிக்குப் பிறகு, அவன் பிறந்த ஊரே அவனுக்கு அழகாய்த் தெரிந்தது. அதற்கு இன்னும் தோதாக, தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் திருவிழா வரும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. கிருஷ்ணனின் நண்பர்கள் சிலர் காப்பு கட்டிக்கொண்டு, சுத்த பத்தமாக இருக்கத் தொடங்கினார்கள்.

கிருஷ்ணன் அவர்களிடம் பேசும் போதெல்லாம், “டேய்.. அடுத்த வருஷ வருவனோ மாட்டனோ? யார் கண்டா?” என்று வருத்தத்துடன் சொன்னான். நண்பர்கள் அவனை தேற்றித் திருவாய் மொழிந்தார்கள். இந்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்தவாறே நாட்கள் நகர்ந்தன.

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    குடைக்காம்பு (சிறுகதை) – ✍ சின்னுசாமி  சந்திரசேகரன், ஈரோடு