in

குடைக்காம்பு (சிறுகதை) – ✍ சின்னுசாமி  சந்திரசேகரன், ஈரோடு

குடைக்காம்பு (சிறுகதை)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ம்பூதிரிகள்  என்பவர்கள்  நம்ம  ஊர்  பிராமணர்களைப் போல கேரளாவில் வாழும் பிராமணர்கள். நம் கதையில் வரும் கிருஷ்ணன் நம்பூதிரியின் கேரக்டரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம்  கொஞ்சம் நம்பூதிரிகளின் பூர்வாசிரமத்தைப்  பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.    

சரித்திரத் தகவலின்படி, ஐந்தாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த (விஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமரால்) வர்கள்.முப்பத்திரண்டு கிராமங்கள் (முழுவதும் கேரளாவின் விளைநிலங்கள்) இவர்களின் சொத்தாக இருந்தது.   இவர்கள் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களே தவிர விவசாயம் அதிகமாகத் தெரியாது.   

ஆனால்  மற்றவர்களை வைத்து  விவசாயம் செய்வித்து கொஞ்சம் அவர்களுக்கும் கொடுத்து பாக்கி முழுவதும்  தாங்கள்  வைத்து  ஒரு  குறுநில மன்னர்களைப் போல வாழ்ந்து வந்தார்கள்.   ரிக், யஜுர், சாம  வேதங்கள் மாத்திரம் இவர்கள் பின்பற்றும் வேதங்களாக இருந்தன. ஆனால்  இவர்களின் இந்த ராஜ  வாழ்க்கைக்கு முதலில் பிரிட்டிஷ்காரர்கள் ஆப்பு  வைத்தார்கள்.   

அதன் பின்  வந்த  கம்யூனிஸ்ட்  கட்சியினர்  நிலப்பொதுவுடமை  என்ற  பெயரில் இவர்களின்  பெரும்பான்மையான  நிலங்களைப்  பறித்து  உழுது கொண்டிருந்த மற்ற இனத்தவர்களுக்குப் பிரித்துக்  கொடுத்தனர்.   

நிலைமை தலைகீழாக மாறிய  போதிலும்,மனதாலும்,  கம்பீரத்தாலும் நம்பூதிரிகள் பழைய கெத்திலேயே  வாழ்ந்து  கொண்டிருந்தனர். மற்ற இனத்தவரும் இவர்களின் பழைய  வாழ்க்கையை  மனதில்  வைத்து, அவர்களை அதே மரியாதையுடனும், பணிவுடனும் பாவித்து  வந்தனர்.

சாதாரணமாக வீட்டில்  இருக்கும் போது  இடுப்பில்  முண்டும்,  பயணத்தின் போது தோர்த்தும்  உடுத்துவார்கள்  ஆண்கள். இயற்கை   கொடுத்த  தக தக  நிறமும், இடதுபுறம் சரிந்தார்ப்  போல  முன்  நெற்றியில்  விழும்  குடுமியும், இடது தோளில் தொங்கும் துண்டும் நம்பூதிரிகளின்  பாரம்பரிய  அடையாளமாகும்.

அதிகாலை எழுந்து, பூஜை   புனஸ்காரங்களை  கிரமப்பிரகாரம்   முடித்து, சகதர்மிணி செய்து  கொடுத்த  பலகாரங்களை (புட்டும்  கடலையும் அல்லது ஆப்பமும் தேங்காய்ப் பாலும்)  ஒரு பிடி  பிடித்து விட்டு,  சரீரம்  முழுதும் திருநீரும்,  சந்தனமும் மணக்க நம் கதை நாயகன் கிருஷ்ணன்  நம்பூதிரி,  வீட்டின் வெளித்திண்ணையில் உட்காருவார்.

அந்தத் திண்ணையில் இருந்து பார்த்தால்  வீதியில் செல்பவர்கள்  அவர்  கண்ணிலிருந்து  தப்ப முடியாது. காத்துக் கொண்டிருந்த அவர் சகதர்மிணி வெற்றிலைச் செல்வத்தை வெள்ளித் தட்டில் வைத்து  பவ்யமாக  அருகில் வைத்துச் செல்வார்.

அதற்காகவே காத்திருந்ததைப்  போல வேலைக்காரன்  நன்கு பளபளவெனத் துலக்கிய பித்தளைப் பணிக்கத்தை (உடுக்கை  போலிருக்கும்  இப்பாத்திரம் வெற்றிலை எச்சில்  துப்ப உபயோகிப்பர்) மிக்க மரியாதையுடன் கிருஷ்ணன் நம்பூதிரிக்கு அருகில் வைத்துச் செல்வான்.

அவர்  திண்ணையில்  உட்காரும்   நேரத்தை  வைத்து  நம்  கடிகாரத்தை  காலை ஒன்பது மணிக்கு வைத்துக் கொள்ளலாம். இவரின் முக்கிய பொழுதுபோக்கு தனது அறிவிற்குக் குறைந்தவர்களை வம்புக்கிழுத்து அவர்களின்  அறியாமையைக்  கேலி  செய்வதாகும்.

உதாரணத்திற்குச்  சொல்லவேண்டுமானால், அன்று ஒருநாள் இவர் வீட்டு வாசல் வழியாக  ஆடு  மேய்க்கும் லட்சுமிக்குட்டி  ஆடு  மேய்ச்சலுக்கு  ஓட்டிச் செல்லும்போது  கூப்பிட்டார்.

“எடி  லட்சுமிக்குட்டி,  இவ்விட  வா”  பணிவுடன் வந்து அந்த பத்து வயது ஏழைச்சிறுமி உடம்பை  வளைத்துக்  கேட்டாள்,

 “தம்புரான்…”

“எடி.. அந்த கருப்பு நிற வெள்ளாட்டுக்கு கூட போகுன்னது அதண்ட குட்டிகளா?”

“ஆமாம் தம்புரான்..”

“அதென்னடி ஆடு  கருப்பு  நிறம்..  அதன்  ஒரு  குட்டி  கருப்பு,  மற்றது  வெள்ள.. அதெங்கனெ..?”

தனது வயதுக்கும்  அறிவிற்கும் மீறிய  கேள்வியால்  நிலை  தடுமாறிய அப்பெண்  பேந்த  பேந்த விழித்ததில்  திருப்தியான  கிருஷ்ணன்  நம்பூதிரி , “போ, போ.. முட்டாப்புள்ள” என்று அவளை அனுப்பி விட்டு அடுத்த இரைக்காக காத்திருக்கும் கொக்கானார்.

அதே ஊரில்  கூலி  வேலை  செய்து  பிழைக்கும்  தம்பதியினர்  பழனியும், ஆராளும். உழைப்புக்கு அஞ்சாத   இத்தம்பதி  நெல் வயல்  வேலை  சமயத்தில் கடுமையாக  உழைத்து சாப்பாட்டிற்குத் தேவையான நெல் சம்பாதித்தும் மற்ற சமயங்களில் கிடைத்த  வேலையைச் செய்தும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

அது அறுவடை சீசன். அன்று வழக்கம்போல வயல் வேலைக்குச் சென்று  கொண்டிருந்த  பழனியின் போதாத  நேரம்  கிருஷ்ணன் நம்பூதிரியின்  கண்ணில் பட்டு விட்டான்

“எடோ பழனி…  நமக்கு  ஒரு நாலஞ்செண்ணம்  தாளம் குடை  வேணும்.. வேகம் உண்டாக்கிக் கொடுக்கணும்  கேட்டோ?’

தாளம்குடை என்பது  பரந்து,  விரைப்பான,  மடக்க முடியாத,  நான்கு பேர் நனையாமல் செல்லக்கூடிய  குடை.   கேரள  மழைக்கு உகந்த கிராமத்து மக்கள் ஒரு காலத்தில்  உபயோகித்த‌து. ஆனால், நாளா வட்டத்தில் புழக்கத்தில் இல்லாமலும், அதன் உதிரிப்பாகங்கள் கிடைக்காமலும் போய்  விட்டன.  பழனியின்  போறாத காலம் அந்தக் கிராமத்தில்  தாளம்  குடை செய்யத் தெரிந்தவன் அவன்  ஒருவன் தான்.

தனக்கு நேரம்  இல்லை  என்று  சொல்லும்  தைரியம் இல்லாததாலும்,  அதன் உதிரிப்பாகங்கள்  கிடைப்பதில்லை  என்று  சொல்லி  நம்பூதிரியிடம் திட்டு  வாங்க பயந்து, உடம்பை  வளைத்து ‘சரிங்க  தம்புரான்..’ என்று கூறி அப்போதைக்குத் தப்பினான் பழனி.

இரண்டு  நாள்  கழித்து  அந்த  வழியாக  (வேறு பாதை இல்லாததால்)  வயல் வேலைக்குச்  சென்று கொண்டிருந்த  பழனியை  கிருஷ்ணன்  நம்பூதிரி  மடக்கி விட்டார்.

திட்டு வாங்க  பயந்து  குடை  வேலையை ஆரம்பித்து விட்டதாக பொய் சொல்லி அப்போதைக்கு தப்பித்துக்  கொண்டான்  பழனி.  அந்த  வாரத்தில் இரண்டு   மூன்று  முறை  தம்புரானிடம்  சிக்கி  ஏதோதோ  பொய்  சொல்லி  சமாளித்தான்  பழனி.  செக்கில் போட்டு ஆட்டப்படும்  கடலைக்கு  இணையான வலியை  அனுபவித்தான்  பழனி.

வழக்கமாக நயன்தாரா  வரும்  அவன்  கனவில், தம்புரான்  இடையில்  வந்து   ‘குடை  எங்கே?’ என்று  கேட்டு  குடைந்தெடுத்தார்.   

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த  பழனியைப்  பார்த்து  ஆராள்  கேட்டாள். “என்னய்யா.. ஒரு  வாரமா  ஒரு  மாதிரி  இருக்கற…  ஒடம்பு  சரியில்லயா?”

தாங்க முடியாமல்  எல்லாவற்றையும் ஆராளிடம் கொட்டினான்  பழனி.

“அட போய்யா..  இதுக்கா  இம்புட்டு  கஷ்டப்படறே?   நான் சொல்றபடி செய்” அவன்  காதில்  கிசுகிசுத்தாள்   ஒரு  மந்திரத்தை  ஆராள்.

அடுத்த நாள்  வழக்கம்போல  ஒளிந்தும், நெளிந்தும் போகாமல் நம்பூதிரியின் கண்ணில் படும்படியே  நடந்து  சென்றான்  பழனி.

“எடோ பழனி..   குடைக்கு  எந்து   பற்றி?” கொக்கு இரையை கொத்தத் தொடங்கியது.

“எல்லாம் தயார்  தம்புரானே.   குடைக்காம்பு    மாத்திரம்  கிடைக்கல.  உங்க செல்வாக்கில அத  மாத்திரம்  வாங்கிக் கொடுத்தா  அடுத்த  நாளே  ரெடி தம்புரானே”

“அவ்வளவு தானே..  நாளைக்கே  வந்து  வாங்கிக்கோ” என்றார்   

“உங்க செல்வாக்கில”  என்ற  வார்த்தையில்  உச்சி  குளிர்ந்த  தம்புரான்.

அடுத்த நாள்  கொஞ்சம்  கூடுதல்  கம்பீரத்துடன்  நேராக  சென்று  தம்புரானைக் கேட்டான் பழனி,  “குடைக்காம்பு  கிட்டியோ  தம்புரான்?”

“ஞான் மறந்து  போயி..  நாள  வா”  என்றார்  தம்புரான்.

அடுத்த நாள் ஒன்பது   மணிக்கு   திண்ணையில்  தம்புரானைக்  காணாததால் வீட்டின் முன்பு   நின்று   குரல்  கொடுத்தான்   பழனி.

வெளியே எட்டிப்  பார்த்த  தம்புரான்,  “நாள  வாடா”  என்றார்   அலுப்புடன்.

அடுத்த நாள்   பழனி   சென்றபோது   தம்புரான்   வீட்டின்   உள்ளிருந்து  பேச்சுக் குரல் கேட்டது.

தம்புராட்டி கேட்டுக் கொண்டிருந்தார்,    “எந்துண   நிங்களு   ஆயாளக்  கண்டு பேடிச்சு நொண   பறயாம்  பறயண்ணது?   ஈஸ்வரா..”

வெளியே   வந்த   தம்புராட்டி,  “எடோ   பழனி…   தம்புரான்  வெளிய  போயி.. நீ இனி இவிட வரண்டா, சாதனம்  கிட்டியால்  பறஞ்சாய்க்காம்”   என்று வசனம் தப்பாமல் ஒப்பித்து  விட்டுச் சென்றார்.

துண்டை உதறி   தோளில்  போட்டுக்  கொண்டு   “குடைக்காம்பு” தத்துவத்தையும், அதைச் சொல்லிக்கொடுத்த மனைவி ஆராளையும் மனதில் பாராட்டிக் கொண்டே கம்பீரமாக  நடந்து  வீடு சென்றான்  பழனி.

தம்புரானின் திண்ணை இப்போதெல்லாம்  ஆளில்லாமல்  வெறிச்சோடியே  கிடக்கிறது.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 4) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    கயல் விழி (சிறுகதை) – ✍ ராஜஸ்ரீ முரளி, சென்னை