மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வழக்கத்தை விட ஆம்புலன்சை சற்று வேகமாக ஓட்டியபடியே சுந்தரேசன் பின்னால் திரும்பி, “அம்மா அழாதீங்கம்மா, இன்னும் அஞ்சே நிமிஷத்திலே ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்” என்றான்.
வண்டியில் கொரோனா பாதித்த இருபது வயதுள்ள இளைஞன் மூச்சு விடுவதற்கு போராடியதால், கூட வந்த அவனது அம்மா அழுதபடியே வந்தாள்.
“கடவுளே, என் பையனை நீதான் காப்பாத்தனும்” என்று வாய்விட்டு பிரார்த்தனை செய்தபடியே இருந்தாள்.
ஆஸ்பத்திரி வாசலில் ஆம்புலன்சை நிறுத்தியவன், வேகமாக இறங்கி வந்து திறந்தபடியே அங்கிருந்த வார்ட் பாயை பார்த்து, “அண்ணே சீக்கிரமா ஸ்ட்ரெச்சர் எடுத்திட்டு வாங்க, ரொம்ப அவசரம்” என்று சொல்லியபடியே, “அம்மா மொதல்ல நீங்க இறங்குங்க” என்று சொல்லி கைத்தாங்கலாக இறக்கி விட்டு, அதற்குள் ஸ்ட்ரெச்சர் வந்து விடவே, இரண்டு செவிலியர்கள், ஒரு வார்ட் பாய் உதவியுடன் பேஷண்டை பத்திரமாக இறக்கி ஸ்ட்ரெட்ச்சருக்கு மாற்றி விட்டு, அழுது கொண்டே போகும் அந்தம்மாவிடம், “கவலைப்படாம போங்க, நல்ல ஆயிடுவார் உங்க பையன்” என்றான் கதிரேசன்.
இறங்கும் அவசரத்தில் அவர்கள் விட்டுச்சென்ற பை ஒன்று, துணிமணிகள், பழங்கள் அடங்கியது அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு வேகமாக ICU வாசலை நோக்கி ஓடினான்.
எதிரே வந்த அவனுடைய நண்பன் “ஏண்டா, என்ன ஆச்சு இப்படி ஓடி வரே” என்றான்.
“இப்ப வந்த பேஷண்ட் வண்டியிலேயே பையை விட்டுட்டாங்கடா, அவங்க கிட்ட கொடுக்கணும்”
“அப்படியா, அதோ கயல்விழி நிக்குறா பாரு, அவளுக்கு ICUல தான் வேலை, அவகிட்ட குடுத்துடு”
கொரோனா கவச உடை அணிந்தபடி திரும்பி நின்றிருந்தவளிடம், “ஏங்க நீங்க தான் கயல்விழியா?” என்றான் கதிரேசன்
குரல் கேட்டு திரும்பியவள், “ஆமாங்க… உங்களுக்கு என்ன வேணும்” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
சட்டென்று திரும்பியவளின் கண்களை பார்த்தவுடன் ஒன்றும் பேச முடியாமல் விக்கித்து நின்றான். அவளின் பேருக்கேத்த மாதிரியே இருந்தது அவளின் கண்கள்.
வார்த்தைகளை தேடி தடுமாறியவனை, “சொல்லுங்க என்ன வேணும்” என்றாள்.
ஒருவழியாக தன்னை சுதாரித்தபடியே, “ரொம்ப சீரியஸ் கண்டீஷனிலிருந்த ஒரு பையனை ஆம்புலன்சில் அழைச்சிட்டு வந்தேன். கூட வந்த அம்மா அவசரத்தில் இந்த பையை விட்டுட்டு போயிட்டாங்க. கொஞ்சம் அவங்ககிட்ட குடுத்துடறீங்களா?” என்றான்.
அவளும், “குடுங்க கண்டிப்பா குடுத்துடறேன். நான் இப்ப ICU உள்ளே தான் போறேன்” என்று பையை வாங்கிக்கொண்டு போனாள்.
நோய் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பாய், அம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் சுகாதார பணி செய்யும் பெண்கள் அனைவருமே அதற்கான பிரத்யேக உடையை அணிந்து நடமாட வேண்டியுள்ளது.
‘என்னைக்கு தான் இந்த நோய்க்கிருமி போகுமோ தெரியலை’ என்று மனம் நொந்தபடியே வெளியே வந்தவன், அடுத்த போன் அழைப்பு வருவதற்காக காத்திருந்தான்.
காலை முதலே ஒன்றுமே சாப்பிடாமல் இருந்ததில் லேசாக பசியெடுக்க ஆரம்பிக்க, காண்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே, “ஏய் கயல்விழி, வாடி சாப்பிடலாம் ரொம்ப பசிக்குது” என்ற குரல் கேட்டகவே, கயல்விழி என்ற பெயர் அவனை திரும்பி பார்க்க வைத்தது.
கொஞ்ச நேரம் முன்னால் பார்த்த அதே பெண். பெயரையும் கண்களையும் வைத்து தான் அவனால் அடையாளம் காண முடிந்தது. இவனை தாண்டி போகும் போது திரும்பவும் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.
மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் முதல் அலை, இரண்டாம் அலை என்று தன் கோர தாண்டவத்தால் கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்தது. சுந்தரேசன் நேரம் காலம் பார்க்காமல் ஆம்புலன்சில் பறந்து கொண்டிருக்க, மருத்துவ ஊழியர்களும் சதா சர்வ களமும் ஓடிக்கொண்டிருந்தனர்.
நோயுடனும் கவலையுடனும் வருபவர்களுக்கு அன்பாகவும், ஆறுதலாகவும் கயல்விழி பேசுவதை அடிக்கடி சுந்தரேசன் பார்க்க நேரும் போதெல்லாம், இருவரும் பார்வைகளால் மட்டுமே பேசி அன்பை பரிமாறிக் கொள்வார்கள். அவள் கண்களில் தான் எவ்வளவு கனிவு, அன்பு என்று நினைத்து நினைத்து கிட்டத்தட்ட அவன் மானசீகமாக அவளை விரும்ப ஆரம்பித்தான்.
ஒருநாள் தயங்கி, “கயல்விழி உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவனிடம்,
“அப்படியா! நாளைக்கு ஆஸ்பத்திரில இருக்கிற பார்க்கில் சந்திக்கலாம்” என்றவரிடம் அவசர அவசரமாக அவன் கேட்டான்,
“உன்னை நார்மலான சுடிதாரில் பார்க்க ஆசையாயிருக்கு” என்றவனிடம்
“கண்டிப்பா நான் நாளைக்கு எனக்கு பிடிச்ச மஞ்சள் கலர் சுடிதாரிலேயே வரேன்” என்றாள்.
மறுநாள் அவளிடம் அவளை சந்திக்கும் போது என்ன பேசனும், கேட்னும் என்று மனசுக்குள்ளேயே ஒத்திகை பார்த்தவனுக்கு அப்போது தான் தோன்றியது, ‘நாளைக்கு முதன்முறையா அவளுடைய முகத்தை பார்த்து பேசப் போறோம்’ என்று. ‘கண்களே இவ்வளவு அழகென்றால் முகத்தை பத்தி கேட்கணுமா?’ என்று பலவித கற்பனைகளில் மிதந்தான்.
மறுநாள் சொன்ன நேரத்தில், சுந்தரேசன் தனக்கு பிடித்த ஜீன்ஸ் பேண்ட், கயல்விழிக்கு பிடித்த மஞ்சள் கலர் டீ ஷர்ட்டில் பார்க்கிற்கு ஆஜரானான். அங்கிருந்த நீளமான பெஞ்சில், மஞ்சள் சுடிதார் அணிந்து தன் நீளமான பின்னலை மார்பின் மீது போட்டபடி.
துப்பட்டாவையே மாஸ்க் போல ஆக்கி முகத்தை மூடியிருந்தாள் கயல்விழி. “அப்பா! இந்த ட்ரெஸ்ஸில் எவ்வளவு அழகா இருக்கே. ஆனா முகத்தை பார்க்காதபடி துப்பட்டாவை போட்டிருக்கே. உன்னை நான் எப்படி பார்க்க முடியும்” என்றான்.
“அவ்வளவு தானே, இதோ இப்ப பார்க்கலாம்” என்று சொல்லியபடியே முகத்திலிருந்த துப்பட்டாவை நீக்கினாள்.
ஒரு வினாடி அதிர்ந்து போனான் சுந்தரேசன். ஆமாம், அவளின் கண்களுக்கு கீழே ஆரம்பித்து இரண்டு கன்னங்கள், வாய், உதடு எல்லாம் பார்க்கவே முடியாத அளவிற்கு சிதைந்திருந்தது.
ஆனால் கயல்விழி கொஞ்சமும் தயங்காமல் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“நீங்க நினைச்சது போல நானும் அழகாகத் தான் இருந்தேன். +2 படிக்கும் போது கூட படிச்ச பையன் அவனின் காதலை நான் மறுத்ததால், அவனோட கண்மூடித்தனமான கோபத்தால் எனக்கு கிடைத்த பரிசு தான் இது. இதோ, இந்த ஆஸ்பத்திரியில் தான் இரண்டு வருஷங்கள் உயிருக்கு போராடினேன். டிரீட்மென்ட் கொடுத்த டாக்டர் என் மீது இரக்கப்பட்டு இந்த வார்ட் கேர்ள் வேலையை கொடுத்தார். நான் படித்த படிப்பிற்கு இந்த வேலை தான் செய்ய முடியும். எங்க அம்மாவுக்கும், எனக்கும் வேறு உறவுன்னு சொல்லிக்க யாரும் கிடையாது. அதனால் சில சமயம் மனசு உடம்பு சோர்வடைஞ்சா கூட, என்னை விட்டா அம்மாவுக்கு யாருமில்லை என்ற நினைப்பே என்னை சரி செஞ்சிடும். இப்ப சொல்லுங்க, இன்னும் என்னை நீங்க விரும்பறீங்களா?” என்றாள்.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சுந்தரேசன், “கயல்விழி உன்னுடைய இந்த நிலையை நினைச்சி வருந்தாமல் தன்னம்பிக்கையோடவும், தைரியத்தோடவும் நிற்கும் கயல்விழியை இப்பதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதுவரை கண்களை மட்டும் தான் பார்த்தேன். இங்கு வரும் நோயாளிகளுக்கு நீ காட்டும் அன்பு, பொறுமை, கனிவு, மனிதாபிமானம் இதையெல்லாம் தான் பார்த்தேன். நம்முடைய வாழ்க்கைக்கு இது போதும்” என்றவனை பார்த்து முதன் முறையாக கயல்விழியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇