மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
களையாய் இருந்த இனியாவின் முகம் முழுதும் கலவரம். ஆஸ்பத்திரி நெடி, பசி மயக்கம், அப்பாவின் உடல்நிலை எல்லாம் சேர்ந்ததால் சோர்ந்திருந்தாள்.
“அம்மா பயப்படாதே. அப்பா நம்மள விட்டு போக மாட்டாரு. நீ வீட்டுக்கு போய் ஒரு நாள் ரெஸ்ட் எடு. நான் இங்க பாத்துக்கறேன். உனக்கும் சுகர் ஏறி இருக்கும்”
இனியா சொல் கேட்டு, ஐ.சி.யுவில் இருந்த அப்பாவை கதவு வழியே ஒரு கணம் ஆழமாய் பார்த்து விட்டு, அப்பாவிடம் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ மானசீகமாய் சொல்லி விட்டு கிளம்பிளாள் அம்மா.
“பாத்துக்கோம்மா, நான் கிளம்பறேன்”
“சரிம்மா, எந்த டென்ஷனும் இல்லாம ரெஸ்ட் எடு. நான் போன் பன்றேன்” என ஆட்டோவில் அம்மாவை வழி அனுப்பி வைத்தாள்.
அம்மா போகும் ஆட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ இனியாவின் மனதை பிசைந்தது.
ஆட்டோ கண்களை விட்டு மறைந்ததும், உள்ளே ஐ.சி.யு வார்டுக்கு விரைந்தாள். அப்பா ஆயுள் இன்று நாளையோ முடிந்துவிடும். மனதை கல்லாக்கி காலன் கடமையை முடிக்க காத்திருக்கிறாள்.
‘இனி எப்படி வாழ்க்கை? அம்மா எப்படி தாங்கப் போகிறாள்?’ என ஆயிரம் கேள்விகள் மனதில் முட்டி மோதின.
“பாப்பா .. பாப்பா”
முனுசாமி குரல் கேட்டு திடுக்கிட்டாள் இனியா.
“என்ன முனுசாமி அண்ணே, அதுக்குள்ள அம்மாவை வீட்டுல விட்டுட்டீங்களா?” என ஆட்டோ முனுசாமியை பார்த்து கேட்டாள்
“பாப்பா அம்மா … அம்மா. இந்த தெரு திரும்ப சொல்ல அம்மாவ பாக்க சொல்ல ஒரு மாறி இருஞ்சு பாப்பா. அப்படியே வண்டிய யு டர்ன் அடிச்சு வந்துட்டேன் இங்க”
முனுசாமி முடிக்கும் முன், அம்மா ஆட்டோவிலேயே காணா தூரத்திற்கு போய் விட்டாள் என தெரிய வந்தது இனியாவிற்கு.
“இனியா…” ஐ.சி.யு டாக்டர் சத்தம் கேட்டு ஓடினாள்.
“சாரி மேம், ஹீ இஸ் நோ மோர்” என டாக்டர் அப்பா விடைபெற்றதை அறிவித்தார்.
‘ஒரே நேரத்தில் அம்மா அப்பா ரெண்டு பேரும் விட்டுட்டு போயிட்டாங்களா! இனி என்ன செய்யறது?’ இனியாவற்கு தலை சுற்றியது. யாரோ பக்கத்தில் தாங்கி பிடித்து உலுக்கினார்.
“இனியா… இனியா” குரலைக் கேட்டு கண் விழத்தாள். எதிரே கதிர் நின்றிருந்தான்.
“மணி ஏழு, பால்காரனை இன்னிக்கு பிடிக்கனும்னு எழுப்ப சொன்னியே, அவன் வர நேரமாச்சு எழுந்துரு” என்றான்.
“அப்பா… அம்மா…” ஏதோ சொல்ல முற்பட்டாள்.
எல்லாம் கனவென தெரிந்து ஒன்றும் பேசாமல் பல் துலக்க விரைந்தாள்.
மனம் முழுவதும் கனவின் தாக்கம். என்ன இப்படி ஒரு கனவு. பத்தாண்டுகளுக்கு முன் மறைந்த அம்மா, ஆறு மாதத்திற்கு முன் மறைந்த அப்பா, இருவரும் மறுபடி இறப்பதைப் போல கனவு, அதுவும் ஒரே நேரத்தில். பல் துலக்கியபடியே எண்ணங்கள் முட்டு மோதின அவளுள்.
‘என்ன ஆச்சர்யம். அம்மா அப்பா இல்லேங்கறது உண்மை, கனவில்லை. ஆனாலும், அந்த நிகழ்வு நிகழ்காலம் இல்லேன்னு தெரியும் போது ஒரு நிம்மதி’
‘காலனுக்கு நன்றி, வடுக்களை, வலிகளை – இழப்பின் வலிகளை ஆற்றுவதற்காக’ என மனதில் எண்ணியபடியே பால்காரன் குரல் கேட்டு வாசலுக்கு விரைந்தாள்.
“தம்பி… நாளையிலுருந்து ரெண்டு பச்சை பாக்கெட் போடு. இந்த ஆரஞ்சு பாக்கெட் தயிருக்கு நல்லால்ல. உங்க ஓணர்கிட்ட சொல்லிடு, நான் தேதி கணக்கு வெச்சிக்கறேன்” என கூறி, பால் பாக்கெட்டோடு உள்ளே நுழையும் போது, ஹாலில் அருவி கொட்டும் படத்தில் இருந்த “LIFE HAS TO GONE ON” என்ற வாசகம் அவளைக் கண்டு புன்முறுவல் செய்தது.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings