in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 11)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் மஞ்சுளா அவள் அருகில் அமர்ந்தான் நந்தகோபால். காரில் வேறு ஒரு கால் டாக்சி டிரைவர் வந்திருந்தார், முரளி வரவில்லை. கார் நேராகக் கோயிலுக்கு சென்றது.

அங்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்து கடவுளை வணங்கி விட்டு எல்லோரும் கிளம்பினார்கள். ஆனால் இரண்டு கார்களும் வீட்டை நோக்கிச் செல்லவில்லை.

மஞ்சுளாவிற்கு ஒன்றும் புரியவில்லை. யாரும் இவள் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். அவளை யாரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

கார் நேராகப் பதிவு அலுவலகத்திற்குச் சென்றது. அங்கே காத்திருப்போர் அறையில் இருக்கும் போது தான் மஞ்சுளா வாயைத் திறந்தாள்.

“நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம்?”

“மஞ்சுளா… உன்னிடம் சொல்வதற்கு எங்களுக்குக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. நாங்கள் செய்த பெரிய பிழை உன்னை அரவணைத்து வாழ வைக்காதது. என் மகன் செய்த தவறு கணக்கில் அடங்காதது. நாங்கள் விவாகரத்து என்னும் சட்டத்தால் உன்னை இழக்க முடியாது. எங்களை மன்னித்து நீ மீண்டும் என் மகனுக்கு மனைவியாக, எங்களுக்கு மருமகளாக வேண்டும். திருமணத்தை மீண்டும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யத்தான் உன்னிடம் சொல்லாமல் அழைத்து வந்தோம்” என்றார் லட்சுமி.

 “என்ன?” என்று அதிர்ந்தாள் மஞ்சுளா.

“மறுப்பு ஏதும் சொல்ல வேண்டாம் மஞ்சுளா. உன் மேலும், கோபியின் மேலும் மாப்பிள்ளை வைத்திருக்கும் அன்பல்லவா அவரை ‘கோமா’விற்குத் தள்ளாமல் பிழைக்க வைத்தது. நன்றாக யோசித்துப் பாரம்மா. நீ கேட்கும் எதையும் நாங்கள் இதுவரை மறுத்துப் பேசியதில்லை. எங்களுடைய இந்த வேண்டுகோளை மட்டும் மறுக்காதே மஞ்சு” என்று ராகவன் அவள் கைகளைப் பிடித்து கெஞ்சினார் .

“என் துரோகத்தை மன்னித்து என்னை ஏற்றுக் கொள் மஞ்சு. நீயோ, கோபியோ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை. நேற்று நீ நம் வீட்டில் ‘எந்த உரிமையில் இங்கே தங்குவது?’ என்று கேட்டாயல்லவா? அந்த ஒரு கேள்வியில் நான் உடைந்து விட்டேன் மஞ்சு. தயவுசெய்து எனக்கு வாழ்வு கொடு மஞ்சு” என்று கெஞ்சினான் நந்தகோபால்.

அப்போது ஸ்ரீதர், “மஞ்சுளா உங்கள் வாழ்க்கை உடைந்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு. நாங்கள் அவ்வப்போது உங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் மகனைத் திருத்தி நல் வழிப்படுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறி விட்டோம். இந்த வயதான காலத்தில் குற்றஉணர்ச்சியாலும், எங்கள் பேரனின் பிரிவாலும் எங்களால் வாழ முடியாதம்மா “என்று கூறி கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

சாரதா ஒன்றும் சொல்லாமல், கோபியை மஞ்சுளாவிடம் கொடுத்தாள். கோபி தன் தந்தையிடம் வைத்திருந்த அளவு கடந்த பாசத்தை சைகையால் உணர்த்தினாள். ஒரு மாலையை எடுத்து அவள் கையில் கொடுத்தாள். மற்றொரு மாலையை நந்தகோபாலிடம் கொடுத்து  பதிவாளர் முன்பு அழைத்துச் சென்றாள்.

பொங்கி எழும் உணர்ச்சிகளிடையே மஞ்சுளாவும், மாலை மாற்றி திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திருமதி. நந்தகோபாலாக மாறினாள் மஞ்சுளா. அவர்கள் திருமண விருந்து கோயிலில் நடந்த அன்ன தானத்தில் சிறப்பாக முடிந்தது.

கோபியை, அவன் தாத்தா மடியில் இருத்தி சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நந்தகோபாலின் பெற்றோர் தங்கள் ஊரான கும்பகோணத்தில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமாக ஒரு சிறிய விருந்து ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறினர். அதனால் ராகவன் குடும்பத்தையும் தங்களுடன் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

சாரதாவோ, “வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. நீங்கள் தயவுசெய்து இன்று இரவு இங்கே தங்கி விட்டு நாளை காலை கிளம்புங்கள். நாங்களும் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு பின்னாலேயே வருகிறோம்” என்றாள்.

அன்று இரவு எல்லோரும் சந்தோஷமாக, மனநிறைவுடன் பேசிக் கொண்டு இருந்தனர். அன்னதானத்தில் சாப்பிட்ட பாயசமும், ஸ்வீட்டுமே வயிறு முட்ட இருப்பதால் இரவு வெறும் ரசம் சாதம் அல்லது மோர் சாதம் மட்டும் போதும் என்றனர் நந்தகோபாலின் பெற்றோர்.

நந்தகோபால் இரண்டு வாழைப்பழமும், ஒரு டம்ளர் பாலும் மட்டும் போதும் என்று கூறி விட்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டான். கோபி, “டாடி” என்று கூவிக் கொண்டு அவன் பின்னாலேயே ஓடி விட்டான். கோபிக்கு ஒரு டம்ளர் பால் எடுத்துக் கொண்டு மஞ்சுளாவும் மொட்டை மாடிக்குச் சென்றாள்.

பின்னாலேயே சென்ற முரளி, “ஸாரி அண்ணி! நீங்கள் அண்ணாவோடு பேச வரும் போது தொந்தரவு செய்கிறேன்” என்று கூறிக் கொண்டு மஞ்சுளாவின் அருகில் வந்து நின்றான்.

“அதெல்லாம் எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லை முரளி. இன்னும் சொல்லப்போனால் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் தானே சிதம்பரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு வற்புறுத்தி அழைத்து வந்தீர்கள்! இல்லை என்றால் சுயநினைவில்லாமல் படுத்திருந்த இவர், ‘எங்கள் மேல் அன்பில்லாமல் தான் வந்து பார்க்கவில்லை’ என்று தானே தவறாக நினைத்திருப்போம்” என்றாள் மஞ்சுளா.

“நான் உங்களுக்கு நன்றி சொல்லத் தான் இங்கே வந்தேன். நீங்களும், டாக்டர் அண்ணாவும் மட்டும் சேர்ந்து இருக்கா விட்டால், ஜானகி எனக்கு சம்மதம் சொல்லியிருக்கவே மாட்டாள்” என்றான் முரளி சிரித்துக் கொண்டே.

“இது என்ன புதுக்கதை? ஜானகி எதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்?” என்றாள் மஞ்சுளா வியப்புடன்.

“உனக்குத் தெரியாதா மஞ்சு? இந்த முரளி கடந்த இரண்டு வருடங்களாக ஜானகி பைத்தியமாகவே சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் ஜானகி, என் தவறான நடத்தையால், முரளியை நன்றாகத் திட்டிவிட்டு ‘ஆண்களே இப்படித்தான; வேலை முடியும் வரை காலைச் சுற்றும் பாம்பாக இருப்பீர்கள்; பின் நன்றாகக் கொத்தி விஷத்தைக் கக்கி எங்களை சாகடிப்பீர்கள். என் மஞ்சு அத்தை உங்கள் அண்ணாவை நம்பி ஏமாந்து, கடைசியில் நாடு விட்டு நாடு போனாளே! நானும் வேறு ஏமாற வேண்டுமா? போடா போ’ என்று முகத்தில் அடித்தாற் போல் கூறி விட்டாள். என் அப்பா, அம்மா கூட ஜானகியிடம் வந்து பேசிப் பார்த்தார்கள். யாருக்கும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை. இப்போது நீ வந்து கும்பகோணத்தில் இருந்த பிறகு, நம் திருமணத்தை முறைப்படி பதிவு செய்த பிறகு, அம்மையார் இன்று தான் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்குத் தான் முரளி நன்றி சொல்லுகின்றான். இப்போது புரிகிறதா?” என்றான் நந்தகோபால் கடகட வென்று சிரித்துக் கொண்டு.

“அண்ணி, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை ஜானகியிடம் சொல்லி வையுங்கள்” என்றான் முரளி குறும்பாக.

“முரளி, இது டூ மச் ” என்று சொல்லி விட்டு மஞ்சுளா நந்தகோபாலைப் பார்த்து அழகாக சிரித்தாள்.

அடுத்த நாள் எல்லோரும் கும்பகோணம் கிளம்பினார்கள். நந்தகோபால் “போகும் வழியில் இங்கே உள்ள நம் கிளினிக்கைப் பார்த்து விட்டுப் பிறகு போகலாம்” என்றான்.

“இந்த கிளினிக்கைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. முரளியும் என்னுடனே இருப்பதால் அங்கு நிலமை மிகவும் மோசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றான் நந்தகோபால் கவலையுடன்.

“உன் வாழ்க்கை நல்ல மாதிரி செட்டில் ஆகிவிட்டதே. அதைப் பார். கிளினிக்கை நாம் எல்லோரும் சேர்ந்து சரி செய்து விடலாம். வீணாகக் கவலைப் படாதே!” என்றார் ஸ்ரீதர்.

நந்தகோபால் நினைத்தது போலவே கிளினிக் மிக மோசமான நிலையில் தான் இருந்தது.’கேட்’ டைவ் தாண்டி உள்ளே போகும் வழியெல்லாம் புதர்களாக மண்டிக் கிடந்தன. கிளினிக்கில் பழைய வேலை ஆட்கள் யாருமில்லை. பெருக்கும் இரண்டு பெண்கள் தான் பழைய ஆட்கள், அவர்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். இவர்களைப் பார்த்தவுடன் எழுந்து வந்தனர்.

முரளியிடம், “ஐயா, நாங்களே உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம், நல்லவேளை நீங்கள் வந்து விட்டீர்கள்” என்றனர்.

“ஏன் என்ன விஷயம் ?” என்றனர்.

“சிந்து அம்மாவும் அந்த மலையாள டாக்டரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள், நீங்களே புரிந்து கொள்வீர்கள்” என்றனர் .

“இது என்ன முரளி, கிளினிக் இவ்வளவு மோசமாக இருக்கிறது?” என்றான் நந்தகோபால் கடுப்பாக.

“கடந்த ஒரு மாதமாக முரளி உன் பின்னால் தானே சுற்றிக் கொண்டு இருந்தான் பாவம். அவன் என்ன செய்வான்?” லட்சுமி .

“மருத்துவமனைக்கு வெளியே மட்டும் அசிங்கமாக இல்லை. உள்ளேயும் அப்படித்தானே இருக்கிறது” என்ற நந்தகோபால்  வீடு கூட்டும் அந்த பெண்களிடம் 

“ஏம்மா, நீங்கள் உள்ளே இவ்வளவு மோசமாக வைத்திருக்கிறீர்கள். ஒழுங்காக வேலை செய்வதற்கு இஷ்டமாக இருந்தால் செய்யுங்கள், இல்லையென்றால் வேலையிலிருந்து நின்று விடுங்கள் ” என்று கத்தினான் எரிச்சலாக.

“ஐயா குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். நாங்கள் உங்கள் ஆஸ்பத்திரியில் பத்து வருடங்களாக வேலை செய்து வருகிறோம். ஆனால் சிந்து அம்மா வந்த பிறகு இங்கே எதுவும் சரியாக இல்லை. அதிலும் உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆன பிறகு முரளி டாக்டரும் இங்கே வருவதில்லை. சிந்து மேடமும், அந்த மலையாள டாக்டரும் தான் இங்கே அதிகாரம். நோயாளிகளும் அதிகம் வருவதில்லை. நிறைய மக்கள் ஏதோ போதை ஊசி போட்டுக் கொண்டு கற்றை, கற்றையாய் பணம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். மாடியில் இருக்கும் அறைகளில் போய் பாருங்கள். நாங்களும் உங்களுக்குத் தெரிவிக்கத்தான் நினைத்தோம், ஆனால் எங்களுக்கு வழி தெரியவில்ல” என்றனர் அந்த இருவரும்.

 “என்ன! நீங்கள் சொல்வது உண்மையா?”  என்று திகைப்புடன் கேட்டனர் டாக்டர் ஸ்ரீதரும், லட்சுமியும்.

“நீங்கள் மேலே போய் பாருங்கள் ஸார், அப்போது தான் உங்களுக்குத் தெரியும் !”

“மஞ்சு, நீ கோபியைப் பிடித்துக் கொண்டு இங்கேயே இரு. நாங்கள் மேலே போய் ‘செக்’ செய்து விட்டு வருகிறோம்” என்று அந்த நான்கு டாக்டர்களும் மாடிக்குச் சென்றனர்.

திரும்பி வரும் போது எல்லோர் முகமும் கடுமையான கோபத்தில் இருந்தது. அப்போது சிந்துவும், அந்த மலையாள டாக்டரும் நந்தகோபாலின் ‘பென்ஸ்’ காரில் வந்து இறங்கி உள்ளே வந்தனர்.

மஞ்சுளாவையும், மற்றவர்களையும் பார்த்து திகைத்து, நந்தகோபால் அருகில்  வந்து உரிமையுடன் நின்று கொண்டாள் சிந்து.

“ஏய் தள்ளி நில்! அவன் பக்கத்தில் என்ன உரசிக் கொண்டு?” என்றார் லட்சுமி கோபமாக.

“ஏன் டாக்டர் மேடம் கோபித்துக் கொள்கிறீர்கள்? விவாகரத்து வாங்கிக்கொண்டு அமெரிக்கா போன மஞ்சுளா வந்து விட்டாள் என்று ‌எங்களைக் கேவலப்படுத்துகிறீர்களா” என்ற சிந்து, மஞ்சுளாவிடம் திரும்பி  “மஞ்சு நீ எப்போது அமெரிக்காவில் இருந்து வந்தாய்? அங்கே வேலையில் இருந்து துரத்தி விட்டார்களா?” என்று கலகலவென்று சிரித்துக் கொண்டு கேலி செய்தாள். மஞ்சுளா ஒன்றும் பேசாமல் அவளையே உறுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது போலீஸ் ஜீப் வந்து நின்று, அதிலிருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் இருவரும், பெண் காவலர்கள் இருவரும் ,ஆண் காவலர்கள் நால்வருமாக வந்து இறங்கினார்கள்.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

இனியா (சிறுகதை) – ✍ லக்ஷ்மி

லட்சுமணன் கோடு (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை