in ,

2500 – வள்ளுவ ஆண்டு (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ புதுவைப்பிரபா, புதுச்சேரி

2500 – வள்ளுவ ஆண்டு (அறிவியல் புனைவு சிறுகதை)

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

ண்டர்மீடா கேலக்ஸியின் விகினா கிரகத்து விஞ்ஞானிகளுக்கு அவசர கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

“சுப்ரீம்…. ஏதற்காக இந்த அவசரக்கூட்டம்?”

124 வயது இளம் விஞ்ஞானி இல்லியனா கேட்டாள்.

“இத்தன ஒளி வருஷமா நாம எது நடக்காதுன்னு நம்பிக்கிட்டு இருந்தோமோ…. அது நடக்க போவுது. இதுவரைக்கும் பிரபஞ்சத்தின் விண்வெளி வீதிகள்ல சுதந்திரமா திரிஞ்சுகிட்டு இருந்த நமக்கு போட்டியா….. சேப்;பியன்ஸ்……. அதான் மனிதர்கள் வரப போறாங்க”

கூடம் அதிர சிரித்தாள் இல்லியனா. கூடவே இன்னும் நான்கைந்து விஞ்ஞானிகளும் சிரித்தனர்.

சுப்ரீமின் சீரியசான பார்வையால் சிரிப்பை பாதியில் நிறுத்திக் கொண்ட இல்லியனா, “சுப்ரீம்! மனிதர்கள் இருக்கிறது பக்கத்து கேலக்ஸியான மில்கிவேயில இருக்கிற பூமி கிரகத்துல. அவங்க பூமியவிட்டு…இங்க….. நமக்கு போட்டியா…!” பொங்கி வந்த சிரிப்பு அவளது பேச்சுக்கு இடைக்கால முற்றுப்புள்ளி வைத்தது.

இன்னொரு விஞ்ஞானி சற்று குழப்பத்தோடு தொடர்ந்தார்.

“சுப்ரீம் மனிதர்களோட சராசரி ஆயுட்காலம் இந்த ஒளி நூற்றாண்டுல என்ன தெரியுமா? தொண்ணூறு. அவங்க கேலக்ஸியிலேயே இருக்குற நெப்டியூன் கிரகத்தோட சுற்றுவட்ட பாதையில ஒரு ரவுண்ட் முழுசா வர முடியுமா அவங்களால. முக்கா ரவுண்ட் முடியறதுக்குள்ள ஆயுள் முடிஞ்சிடும். அவங்க எப்படி ஆண்டர்மீடா கேலக்ஸி வரைக்கும்?”

“நல்ல கேள்வி, மத்த கிரகத்து ஆசாமிகள் தேமேன்னு கெடக்க, இந்த பூமி கிரகத்து விஞ்ஞானிகள் மட்டும் சர்வகாலமும் எதாவது யோசிச்சு… ஒரு கண்பிடிப்புல வெற்றி பெறப் போறாங்க”

இல்லியனா இறுக்கமானாள்.

“மன்னிச்சுக்கோங்க சுப்ரீம். பிரச்சனையோட ஆழ அகலம் தெரியாமல் நானும் சிரிச்சு கலாட்டாலாம் பண்ணிட்டேன். அவங்க ஆயுட்காலத்த நீட்டிக்கிற மாதிரி மருந்து ஏதாவது கண்டுபிடிச்சிட்டாங்களா சுப்ரீம்?”

“ம்கூம். அவங்க வேற மாதிரி யோசிச்சு ஜெயிச்சிருக்காங்க.”

“புது டைம் மிஷின் எதாவது?” மூத்த விஞ்ஞானி ஒருவர் வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தினார்.

“இல்ல…இல்ல… மனிதன கதிர்வீச்சா மாற்றுகிற ஒரு இயந்திரத்த கண்டு பிடிச்சிட்டாங்க”

விகினா கிரகத்து விஞ்ஞானிகள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருக்க, கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

பூமிகிரகத்தில் வள்ளுவன் அளப்பறியா ஆனந்தத்தில் திளைத்திருந்தார். அந்த தலைமை விஞ்ஞானியை சுற்றியிருந்த சகாக்களும் சந்தோஷமாகவே இருந்தார்கள்.

“சரி… சோதனை முயற்சியில் பங்கெடுத்துக் கொள்ளப் போற நபர் உங்களில் ஒருத்தர் தான். யார் முன் வரா?” வள்ளுவன் கூட்டத்தில் கேள்வியை வீசினார்.

முன்கூட்டியே சொல்லி வைத்தது போல் பெரும்பாலானோர் பிரஜேஷ் பக்கம் பார்வையை திருப்பினார்கள். பிரஜேஷீம் உற்சாகத்தோடு தன் இருகைகளையும் உயர்த்தி “நான்… நான்…” என்று குதித்தான்.

ஐநூறு அடுக்கு வீடுகள் கொண்ட ஒரு அபாட்மென்ட் கட்டிடத்தின் உச்சி மாடியில் பிரஜேஷீம் ரித்திகாவும்.

கருநீலவானத்தில் முக்கால் பங்கு நிலா மிதந்து கொண்டிருந்தது. சுத்திகரிக்கப்பட்ட காற்றை பூமி நிர்வாகத்தினர் வானவூர்த்தி வழியே பீய்ச்சி அடித்தபடி சென்று கொண்டிருந்தனர்.

ரித்திகா ஐயத்தோடு கேட்டாள். “உங்களுக்கு ஒன்னும் ஆகாதில்ல. ஏன் கேட்கறேன்னா …. நீங்க அப்படியே முழுசா எத்தனையோ தடவ வேற கிரகத்துக்கெல்லாம் போய் வந்திருக்கீங்க. அப்பொதெல்லாம் இல்லாத பயம் இப்போ ‘சிதையப் போறேன், ரேடியேஷனா மாறப் போறேன்னு’ நீங்க சொல்லும் போது வருது. அதை விட தமிழ்மொழி பேராசிரியையான எனக்கு, உங்க கான்சப்ட் ஒரு கண்றாவியும் புரியல”

“ஏய் அசடு… நாளைக்கு என்ன நடக்கப் போவுதுன்னு நான் விளக்கிறேன் பாரு” பிரஜேஷ் அருகில் வந்து நின்று கொண்டான்.

“சீஃப் கண்டுபிடிச்ச மிஷின்ல நான் உள்ளே போனதும் உருவம் இழந்துடுவேன். கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சா உருமாற்றம் கொள்ளும் என்னை, விண்வெளியில மிதந்துகிட்டிருக்கிற நம்ம ஆய்வு கலத்தை நோக்கி செலுத்துவாங்க. அது ரிசீவ் பண்ணி எனர்ஜியை பூஸ்ட் பண்ணி அப்புறம் செவ்வாய் கிரகத்த நோக்கி டிரான்ஸ்பார்ஃம் பண்ணும்.

அந்த கிரகத்துல தங்கி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்குற நம்ம கிரகத்து விஞ்ஞானிகளின் ஆய்வு கூடத்தை அடைஞ்சதும், எனக்கு மீண்டும் மனித உருவம் கிடைச்சிடும், அவ்வளவு தான். இது ஒரு சோதனை முயற்சி தான், நிச்சயம் சக்ஸஸாகும்”

“அது எப்படி மார்ஸ் வரைக்கும், அதான் செவ்வாய் கிரகம் வரைக்கும் ரேடியேஷனா போற நீங்க, அங்க போன உடனே மனித உருவத்திற்கு வருவீங்க?” ரித்திகா விழிலென்சுகளை சரி செய்தபடியே கேட்டாள்.

“நியாயமான சந்தேகம் தான். ரேடியேஷன் ஐயான்சுக்கு டைம்பீரியட் செட் பண்ணப்படுது. மார்ஸீக்கு அந்த கதிர்வீச்சு போய் சேரும் காலத்தை கணக்கிட்டு அது செட் பண்ணப்படும். இன்னொன்னு சொல்லட்டுமா? விலங்குகள் வச்சி ஆராய்ச்சி பண்ணியாச்சு. நான்… முதல் மனிதன்.”

“இந்த விபரீத முயற்சி இப்போ தேவை தானா?”

“விபரீத முயற்சியா? இதுவா? அறநூறு ஆண்டுகளுக்கு முன்னாடி ஐன்ஸ்டீனோட கோட்பாடுகள் எப்படி ஒரு புது வெளிச்சத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்ததோ, அது போலத் தான் இதுவும். ஒரு வரலாற்று நிகழ்வு. மனிதன் இந்த உடலோட இருக்கிற வரைக்கும் அவனோட ஆயுட்காலம் தொண்ணூறு ஆண்டுகள் தான். அத நீட்டிக்கிற முயற்சியில நமது உயிரியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தாலும், இப்போதைக்கு சாத்தியப்படல.

அதனால விண்வெளியில ஒரு குறிப்பிட்ட ஒளிவருஷத்துக்குள்ள தான் மனிதனால பயணிக்க முடியுது. அதன் விளைவால ஆராய்ச்சிகளும் கொஞ்சமா தான் மேற்கொள்ளப்படுது. அவனையே ஆற்றலா மாத்திட்டா! அந்த ஆற்றல் அவ்வளவு சீக்கிரம் அழியறதில்லை. ஏன்…. உனக்கு ஆற்றல் அழிவின்மை விதி தெரியாது..?”

பெருமூச்சு விட்டபடியே “தெரியும் தெரியும்” என்றாள் ரித்திகா.

“அப்புறமென்ன, புரிஞ்சுக்கிறது சுலபமாச்சே. என்னுடைய இயற்பியல் உடல்கட்டு ஆற்றலா மாற்றப்பட்டு, அதாவது கதிர்வீச்சா மாற்றப்பட்டு விண்வெளியில பாய்ச்சப்படப் போவுது. இதுக்குப் போய் நீ ஏன் பயப்படறேன்னே தெரியல”

அவன் பேச்சில் சற்று நிம்மதியடைந்த அவள், வானத்தை நோக்கி தலையை நிமிர்த்தினாள். அமைதியாக நட்சத்திரக் கூட்டங்களை கவனிக்கத் தொடங்கினாள்.

விகினாவின் தலைமை ஆய்வுக்கூட அறை —

“இல்லியனா, மனிதன வச்சு பூமி கிரகத்துக்காரங்க செய்யப் போற இந்த முதல் முயற்சி தோல்வியடையனும். அவங்கள தோல்வி அடைய வைக்கனும். அவங்க மட்டும் அந்த முயற்சியில ஜெயிச்சுட்டாங்கன்னா, அடுத்தது அவங்க மனுஷன கதிர்வீச்சாக்கி நெப்டியூன்  புளுட்டோன்னு வந்து, அப்புறம் நம்ம கேலக்சியில கூட கால் பதிச்சுட வாய்ப்பிருக்கு. அது பேராபத்தானது”

“சுப்ரீம்…. நீங்க ஏன் மனிதர்களுக்கு இப்படி பயப்படறீங்க.”

“ஐயோ! அவங்கள பத்தி உனக்குத் தெரியாது.”

“சரி… அடுத்த கேலக்ஸியில நடந்துகிட்டிருக்கிற ஆராய்ச்சி பத்தின அப்-டு-டேட் தகவல்கள் உங்களுக்கு எப்படி கிடைக்குது சுப்ரீம்?”

“ஆ…..ஹா….. ஆ…… அதுவும் மனிதர்களால தான். ஆனா அதுலயும் பாரு, இந்த திட்டம் மிருகங்கள வச்சி நடத்தப்படும் போதே தகவல் கிடைக்காம போயிடுத்து”

“இப்போ உங்களோட திட்டம் என்ன சுப்ரீம்?”

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘அப்புறம் சொல்றேன்’ என்றார்.

“பரவாயில்லை, நம்ம ரெண்டு பேர் தானே இருக்கோம். என்ன செய்யப் போறீங்கன்னு சொல்லிட்டு செய்யுங்க”

“நான் செஞ்சிட்டு சொல்றேன்”

பிரஜேஷ் இயந்திரத்திற்குள் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அவனது ஆடைகள் களையப்பட்டு அயனிகள் ஸ்ப்ரே செய்து கொண்டிருந்தார்கள்.

வள்ளுவன் ஒரு வரலாற்று நிகழ்வை நிகழ்த்தப் போகும் நிமிடங்களின் எல்லையில் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் பூமிகோளின் ஆய்வுக்கூடங்கள் அனைத்திற்கும் தகவல் போய் சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

இயல்பு நிலைக்கு வந்த போது, பிரஜேஷைப் பார்த்து கண் சிமிட்டினார்.

அவன் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, அதே புன்னகையோடு பார்வையாளர்கள் அறையில் நின்றிருந்த ரித்திகாவை நோக்க, அவள் கையசைத்தாள்.

“பிரஜேஷ்…நீங்க இயந்திரத்துள்ளே நுழையற நேரம் நெருங்கிடுச்சு. கவனமா கேட்டுக்கோங்க. இயந்திரத்தின் கன்வர்ஷன் சேம்பர்ல போய் உட்கார்ந்து கண்ண மூடிக்கோங்க. இருவது நொடியில நீங்க முழுசா கதிர்வீச்சா மாறி செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கப் போறீங்க. அங்க தரையிரங்கி ஐந்தாறு நிமிடம் உலவப் போறீங்க.

அப்புறம் மீண்டும் ஆட்டோமேட்டிக்கா கதிர்வீச்சா உருமாறி இதே ஆய்வு கூடத்திற்கு வந்து சேர்ந்து மனிதனா உருபெறப் போறீங்க. பயப்படாதீங்க பதட்டப்படாதீங்க, ஏன்னா கதிர்வீச்சா விண்வெளியில பயணிக்கிற முதல் மனிதன் நீங்க தான்”

கடைசி நிமிட கட்டளைகளையும் விளக்கங்களையும் பெற்றுக் கொண்டு, இயந்திரத்தின் புறக்கதவு திறக்கப்பட்டதும் உள்ளே நுழைந்தான் பிரஜேஷ். டிஜிட்டல் டிஸ்ப்பளே இருபது நொடியில் இருந்து பின்னோக்கி ஒளிர்ந்தது.

20…….19…….18…..17…….16……

சுப்ரீம் தனக்கு எதிர்புறம் இருந்த திரையில் பார்வையை பதித்திருந்தார். அவரை சுற்றி நின்றிருந்த கூட்டமும் திரையை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. இல்லியனா மட்டும் வேறு ஏதோ ஒரு மெஷினில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தாள்.

அந்த திரையின் இடது ஓரத்தில், ‘மில்க்கிவே கேலக்ஸி எர்த் லேப் – 01 கன்வர்ஷன் சேம்பர்’ என்றிருந்தது. கண்மூடி அமர்ந்திருந்த பிரஜேஷீம் கவுன்ட் டவுன் டைமரும் திரையில் தெரிந்தது.

          ‘…………3……….2…………1……….0.’

          பிரஜேஷ் மறைந்தான்.

“இல்லியனா….. தயாரா இருக்கீங்களா? நான் சொல்லும் போது செயல்படுங்க. நொடியும் தாமதிக்கக் கூடாது” அதிக டெசிபலில் ஆணையிட்டார் சுப்ரீம்.

பூமிகிரகத்து ஆய்வுக் கூட அரங்கம் போலவே தான் இந்த விகினா கிரகத்து ஆய்வரங்கத்திலும் பெருத்த நிசப்தம் நிலவியது.

நொடிகள் கடந்து கொண்டிருக்க, திரையின் இடப்புறமிருந்த குறியீட்டு வாசகமும் மாறிக் கொண்டே இருந்தது.

ஒரு வினாடியில் ‘இல்லியனா…’ உரக்க கத்தினார் சுப்ரீம். உடனே அவள் ஏதோ ஒரு பட்டனை தட்டினாள். நிசப்தம் நீடித்தது.

ள்ளுவன் தன் இடது கையால் முன்நெற்றியில் ஓங்கி அடித்துக் கொண்டார். ‘என்ன நடக்குது..?’ என்று பதறினார்.

“எனர்ஜி கிளாக்ல ஏதாவது பிரச்சனையா?”

“இல்ல சார். ஆனா… ஒன்னுமே புரியல. திடீர்னு ஆற்றலோட அளவுள மாறுபாடு ஏற்பட்டுது” சக விஞ்ஞானிகள் பதிலளித்தனர்.

‘அப்போ …… பிரஜேஷ்?’ – எல்லோருக்குள்ளும் இந்த கேள்வி தோன்றி மறைந்தது.

வள்ளுவன் தன்னை மீறி நடந்து கொண்டிருக்கிற செயல்களில் சிந்தயை செலுத்த முற்பட்டு, முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

செவ்வாய் கிரகத்தில் கதிர்வீச்சு சென்று சேர்ந்துவிட்டதற்கான சிக்னல் கிடைத்தவுடன், விழிகளை அகலமாக்கிக் கொண்டு அனைவரும் பார்த்தனர்.

கதிர்வீச்சு முழுமையாக உருமாற்றம் கொண்ட போது எல்லோருக்கும் பேரதிர்ச்சி. அங்கு பிரஜேஷீக்கு பதில் மனிதக்குரங்கு.

 “சீஃப்…. என்ன ஆச்சு? எப்படி இப்படி? பிரஜேஷ் எங்க?”

அடுக்கடுக்கான கேள்விகளால் துளைக்கப்பட்டார் வள்ளுவன்.

“வெற்றி! வெற்றி!” விகினா கிரகமே குலுங்கியது.

“தொலைஞ்சாங்க மனுஷங்க… சுப்ரீம் இப்போவாது விளக்குங்க. எப்படி மனிதர்களோட திட்டத்த முறியடிச்சீங்க?” குழுவாக கேட்டார்கள்.

“அதுவா…அவங்க ரேடியேஷனா மாத்தி அனுப்பின மனுஷன் செவ்வாய் கிரகத்த நெருக்கும் போது, அந்த கேலக்ஸியில தங்கி ஆராய்ச்சி நடத்திக்கிட்டிருக்கிற நம்ம விண்கலத்திலிருந்து நேர்மின் அயனிகளை கற்றையாக அனுப்பினேன்.

அது போய் அந்த ரேடியேஷன் அயனிகளை பாதிச்சிடுச்சு. விளைவு, மனிதன் அவனுக்கு முந்தைய பரிணாமமான குரங்கா தரையிறங்கியிருக்கான். நாம ஜெயிச்சிட்டோம், இனிமே பூமிகிரகத்து விஞ்ஞானிகள் இந்த திட்டத்த பத்தி துளியும் யோசிக்க மாட்டாங்க” பெருமிதத்தோடு பேசினார் சுப்ரீம்.

“அதோ பாருங்க! அந்த மிருகம் வித்தியாசமா விழுந்து விழுந்து புரளுது”

திரையில் ஓடிக் கொண்டிருக்கும் செவ்வாய்கிரக காட்சிகளை சுட்டிக் காட்டி சிரித்தனர்.

“சுப்ரீம்…நீங்க அடுத்தது என்ன பண்ணப்போறீங்க?” இல்லியனா கேட்டார்.

“இன்னும் ஒரு சில நிமிடத்துல அந்த குரங்கு மீண்டும் ரேடியேஷனா மாறி பூமிய நோக்கி பயணிக்கும். அப்போ நாம முதல்ல தாக்குதல் நடத்துன அதே விண்கலத்திலிருந்தே எதிர்மின் அயனிக் கற்றைகளால தாக்கப் போறோம். அப்போ ரிவர்ஸ் எபெக்ட்டால எல்லாம் சரியாகி அந்த ரேடியேஷன் பூமியப் போய் சேரும் போது, மீண்டும் அனுப்பப்பட்ட மனிதன் உயிர்த்திருப்பான்”

“ஏன் இந்த எதிர்விளைவுத் தாக்குலும் ரிவர்ஸ் எபெக்ட்டும்? அப்படியே விட்டுடலாமில்ல?” இல்லியனாவிடம் ஒரு விஞ்ஞானி ரகசியமாக கேட்டார்.

“உங்க கேள்விக்கு நானே பதில் சொல்றேன்” சுப்ரீம் காரணத்தை விளக்கித் தொடங்கினார்.

“அப்படியே விட்டுட்டா, அந்த குரங்கே பூமிக்கு போயிடும். அத வச்சிக்கிட்டு அவங்க ஆராய்ச்சி பண்ண தொடங்கிட்டா நம்மளோட நாச வேலையை சீக்கிரமா கண்டு பிடிச்சிடுவாங்க.

மனிதர்கள் நீங்க நெனைக்கிற மாதிரியில்ல. நான் அவுங்கள இந்த ஆயிரத்து ஐநூறு வருஷமா பார்த்துக்கிட்டுத் தானே இருக்கேன். இப்போ நாம செய்யப் போற இந்த ரிவர்ஸ் எபெக்ட்டால, விண்வெளியில என்ன நடந்ததுன்னே தெரியாம குழம்பி… குழம்பி இன்னும் ஒரு நூறாண்டுகள ஓட்டிருவாங்க.

அதவுமில்லாம, நாம தான் அவங்க திட்டத்த முறியடிச்சுட்டோம்ங்கிற உண்மை தெரிஞ்சா, அவங்க நம்மை எதிர்க்கவும் தயாராகிடுவாங்க. மனிதர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்”.

வினோத ஒலி எழுந்து சிக்னல் தர “இல்லியனா தயார் நிலைக்குப் போ, மீதியை அப்புறம் பேசிக்கலாம்” என்றார் சுப்ரீம்.

ணிப்பொறியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த ரித்திகா, மனிதக் குரங்காகவே மாறியிருந்த பிரஜேஷை நினைத்து கவலையுற்றாள்.

அவள் மட்டும் இருபதாம் நூற்றாண்டு பெண்ணாக இருந்திருந்தால், இந்நேரம் அழுது புரண்டு ஊரையே கூட்டியிருப்பாள். இருபத்தைந்தாம் நூற்றாண்டில் ‘அழுகை’ எனும் வார்த்தை அர்த்தமற்று போயிருந்தது.

தலைமை விஞ்ஞானி வள்ளுவனுக்கு தான் தவறு செய்துவிட்டதாக எண்ணம் தோன்றியது. குற்ற உணர்வோடு குரங்கு மீண்டும் கதிர்வீச்சாய் மாறும் நிகழ்வினை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு சில நொடிகளில் ஆற்றல் கடிகாரம் சகஜ நிலைக்கு திரும்பி சரியான இலக்கத்தை காண்பித்தது. இருக்கையை விட்டு எழுந்து நின்றார் வள்ளுவன்.

“இட்ஸ் ஓ.கே! பிராஜெக்ட் பெஃயிலானா கூட பரவாயில்ல. பிரஜேஷ் நமக்கு திரும்ப கிடைச்சிடனும்” முகத்தில் தசைகள் தளர்ந்து கொண்டிருந்தது அவருக்கு.

சுற்று நேரத்தில் இ பூமியில் – பிரஜேஷ் முழுமையாக.

இயந்திரத்தின் புறக்கதவு திறந்தவுடன், வள்ளுவன் ஓடிப் போய் பிரஜேஷை கட்டி அணைத்து தழுவினார்.

“உங்களுக்கு ஒன்னும் ஆகலியே” ரித்திகாவும் விசாரித்து விட்டு அவன் உடுத்திக் கொள்ள புது ஆடைகளை கொடுத்தாள்.

 “என்ன சீஃப் என்ன நடந்தது? என்னை ஏன் இன்னும் அனுப்பல?” பிரஜேஷின் கேள்விகளுக்கு

“நீங்க இப்ப ரித்திகாவோட போங்க, நாளைக்கு பேசிக்கலாம்” என்றாள் வள்ளுவன்.

அவ்விருவரும் புறப்பட்டு போனார்கள்.

“இன்று இரவு தலைமைக்குழு விஞ்ஞானிகளுக்கான அவசர கூட்டம் நடைபெற உள்ளது. பொறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு திட்டத்தின் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய முன் வர வேண்டும்” அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ரித்திகா அவளுக்கு சொந்தமான மினி வானவூர்தியை செலுத்திக் கொண்டிருந்தாள். பிரஜேஷ் அவளை நச்சரித்துக் கொண்டிருந்தான்.

“என்ன நடந்தது?” என. ஆய்வரங்க அறையில் திரையில் கண்ட காட்சிகளை அவனுக்கு விளக்கினாள்.

“அப்படியா… நானா? மனிதக்குரங்காகவா?” சற்று இடைவெளி விட்டு இன்னொரு கேள்வி கேட்டான்.

“ஆமாம்…. நான் மனிதனா மாறாம நிரந்தரமா குரங்காகவே இருந்திருந்தா…. என்ன பண்ணியிருப்ப ரித்திகா?”

“அப்பாடா…..பிரச்சனை விட்டுதுன்னு உங்கள ஏதாவதொரு உயிரியல் பூங்காவுல போய் விட்டுட்டு வீட்டுக்கு போயிட்டிருப்பேன்”

வாகனம் குலுங்க சிரித்தான் பிரஜேஷ்

பூமி தன்னைத் தானே நூற்றுக்கும் குறைவான முறையே சுற்றியிருந்த கால இடைவெளி.

பிரஜேஷ் வீட்டில் வள்ளுவன்.

“சீஃப்…. நீங்க அழைச்சிருந்தா நானே ஆய்வு கூடத்துக்கு வந்திருப்பேன். இல்லேன்னா….. விஷிவல் மீடியாவுல உங்க வேவ் பேண்ட்டுக்கே வந்திருப்பேனே”

“நோ….நோ… அதெல்லாம் வேணாம்ன்னு தான் நேரிலேயே வந்துட்டேன். மூணு மாதத்திற்கு முன்னாடி தோல்வியடைஞ்ச நம்ம திட்டத்துல, தோல்விக்கான காரணங்கள யூகிச்சு சில மாற்றங்களோட திரும்ப செயல்படுத்திப் பார்க்க திட்டமிட்டிருக்கேன்.

அந்த நிகழ்வுக்கப்புறம் நான் உங்கள தொந்தரவு செய்யாம விட்டுட்டேன். இப்போ நீங்க சம்மதிச்சிங்கனா மீண்டும் உங்களையே அனுப்பறேன். அப்படி இல்லேன்னா…. நம்ம குழுவிலேயே இருக்கிற இளம் விஞ்ஞானி மேகலாவ அனுப்பலாம்னு இருக்கிறேன்.”

“என்ன சீஃப் ….. இந்த வாய்ப்புக்காகத் தான் காத்துகிட்டிருக்கேன். உங்க மேல எனக்கு அபார நம்பிக்கை இருக்கு, நான் தயார். இந்த முறை நாம நிச்சயம் ஜெயிக்கிறோம்!”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ரித்திகா உள்ளே நுழைந்தாள்.

“வாங்க சீஃப்” என்றவள் தொடர்ந்து, “சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களா? என்ன கேப்சியூல் எடுத்துட்டு வர….காபி…ஜீஸ்….?” என்றாள்.

“எதுவும் வேண்டாம்மா. நான் பிரஜேஷ………”

“குரங்கா மாத்த போறீங்களா” இடைச் செருகலாய் கேட்டாள். சிரித்துக் கொண்டே புறப்பட்டார் வள்ளுவன்.

ல்லியனா நம்பிக்கையாக சொன்னாள்.

“சுப்ரீம்! நீங்க குழம்பிப் போக வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஒரு ஆர்வக் கோளாறால அவங்க மீண்டும் திட்டமிட்டிருக்காங்க. என்ன தான் ரகசியமா திட்டமிட்டாலும் நமக்கு தெரிஞ்சிருச்சு பாருங்க. ஆனா எந்த துணிச்சல்ல இவங்க இந்த குறுகிய காலத்துல இரண்டாவது முயற்சிய மேற்கொள்றாங்க?”

“இல்லியனா அவங்களோட திட்டத்த பற்றின செய்தி தெரிந்த அளவுக்கு தோல்விக்கான காரணங்களா அவங்க பண்ண ஆராய்ச்சிகளோட விவரம் நமக்கு தெரியலையே”

“பரவாயில்ல சுப்ரீம். ஏதோ ஒரு யூகத்துல மறுமுயற்சிக்கு இறங்கிட்டாங்க. இந்த முறையும் நீங்க அதே மாதிரி அயனிதாக்குதல் நடத்துங்க. ஆனா… இந்த முறை தாக்குதல் மிகக் கடுமையா இருக்கனும். லேசான தாக்குதலுக்கே வளர்ச்சியின் பரிணாமத்துல ஒரு படி பின்னோக்கி குரங்கா மாறின மனிதன கடுமையா தாக்கி பல படிகள் கீழிறக்கிஇ அமீபாவாக மாத்திடுங்க”

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. இந்த முறையும் நாமதான் ஜெயிப்போம்.”

சென்ற முறை இருந்த பதட்டம் கூட இல்லாமலிருந்தார் வள்ளுவன். வழக்கம் போல பிரஜேஷ் ஆர்வமாக இயந்திரத்தின் வாசல் கதவருகே தயாராக நின்றுக் கொண்டிருந்தான்.

“பிரஜேஷ்… இந்த முறை டைமர் நாற்பது நொடியிலேர்ந்து ஸ்டெப்டவுன் ஆகும். இருபதாவது நொடியில உங்கள ஒரு புகை மண்டலம் மூடிக் கொள்ளும். அடுத்த இருபதாவது நொடியில கன்வர்ஷன் ப்ராசஸ்”

வள்ளுவன் சொன்னவை அனைத்தும் நடந்து முடிந்து, பிரஜேஷ் கதிர்வீச்சாக விண்வெளியில் கலந்தான்.

விகினாவில் திரையில் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கு அந்த செயற்கை மண்டலப் புகையைப் பற்றிய செய்தி எதுவும் அறியாமல் விழித்தனர்.

“என்னவா இருக்கும் சுப்ரீம்?” மூத்தவர் ஒருவர் கேட்க

“என்னவாயிருந்தா நமக்கென்ன, இந்த தடவை நம்ம தாக்குதலோட வீச்சு செறிவானதா இருக்கப் போகுது. போன தடவையாவது குரங்காய் போய் தரையிறங்கினான். இந்த தடவ அதுவும் நடக்காதபடி என்ன செய்யப் போறேன்னு பார்த்துக்கிட்டேயிருங்க. இல்லியனா…. தயாராயிரு!”

கதிர்வீச்சின் பயணவழியை திரை காட்டிக் கொண்டிருக்க, அந்த வழிமேல் விழிவைத்து காத்திருந்த சுப்ரீம், பயணப்பாதையின் ஒரு புள்ளியில் வழக்கம் போல் கத்த, அவள் அதற்கிணங்க இயங்க, என்ன நிகழ்கிறது என்று ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த சுப்ரீம், எரிகல் தாக்கி விழுவதைப் போல் உருகுலைந்து விழுந்தார்.

“சுப்ரீம்… நாம அந்த கதிர்வீச்ச தாக்கவே முடியல. அது மேல பாய்ச்சப்பட்ட அயனிகளை கவசம் மாதிரி ஏதோ ஒன்னு தடுத்து, அயனிக்கற்றை வந்த திசையை நோக்கியே திரும்ப அனுப்புது. மனிதர்கள் அனுப்பின கதிர்வீச்சு பத்திரமா போய் செவ்வாய் கிரகத்துல சேரப் போவுது. நாம இப்போ என்ன பண்றது சுப்ரீம்?”

சுப்ரீம் எதுவும் பேசாமல் அமைதியானார்.

பூமி கிரகத்து விஞ்ஞானிகள் ஒரு சேர கூவிக் கொண்டே ஓடிவந்து வள்ளுவனை தூக்கிக் கொண்டார்கள்.

“வெற்றி! வெற்றி!”

அவர்கள் கத்திக்கொண்டிருக்கும் அதே நொடியில், செவ்வாய் கிரகத்தில் பிரஜேஷ் உருவம் பெற்று நடந்துக் கொண்டிருந்தான்.

“என்ன பண்ணீங்க சீஃப்?” தலைமைக் குழுவை சாராத விஞ்ஞானி ஒருவர் கேட்டார்.

“பெருசா ஒன்னுமில்ல. போன தடவ கதிர்வீச்ச அப்படியே அனுப்பின போது, அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏதோ சில அயனீக்கள் அதனோட கலந்து குழப்பம் விளைவிச்சிடுச்சு. மீண்டும் திரும்ப வரும் போது அதே புள்ளியில் அந்த மாசு அயனீக்கள் விலகிடுச்சு.

அதனால இந்த முறை கதிர்வீச்சுக்கு மின்காந்த அலைகளால ஒரு செயற்கை கவசம் போட்டு அனுப்பிட்டேன். ரேடியேசன் எம்பேடட் இன் எலக்ட்ரோ மேக்னடிக் ஷீல்ட, இதனால விண்வெளிப் பாதை நெடுகிலும் எந்தவித அயனிகளும் அனாவிஷயமா புகுந்து குழப்பத்த ஏற்படுத்தல”

“பிரமாதம் – சூப்பர்  – எக்ஸ்ஸலன்ட் – வாழ்க – ட்டெரிபலி சைன்டிபிக்” இதுபோல் வெவ்வேறு வார்த்தைகள் ஆய்வுக்கூடத்தின் அரங்கினுள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“மனிதர்கள லேசா மதிப்பிடக் கூடாதுன்னு நான் அடிக்கடி சொல்வேனே! இப்போ நம்பறீங்களா?”

விகினாவில் சுப்ரீம் கேட்டுக் கொண்டிருக்கும் நொடியில், ஆய்வக அரங்கில் நுழைந்த ஒருவன் “சுப்ரீம்… பூமிகிரகத்துலேர்ந்து ஒரு தகவல் சேகரிச்சு அனுப்பக் கேட்டிருந்தீர்களா? ரேடியேஷன் ஆய்வு மேற்கொள்ளும் தலைமை விஞ்ஞானியின் நாடு இந்தியா, ஊர் தமிழ்நாடு, பெயர் வள்ளுவன்” என்றான்.

“இப்போ நாம செய்ய வேண்டியது என்ன சுப்ரீம்?” ஒரு விஞ்ஞானி பதட்டமாக கேள்வி கேட்க

அவர் காதில் இல்லியனா, “ம்ம்… வேணும்னா வாழ்க வள்ளுவன்! வாழ்க தமிழ்நாடு! வாழ்க இந்தியான்னு கத்துவோமா?” என்று கேட்டு ரகசியமாக சிரித்துக் கொண்டாள்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனிதன் வடிவமைத்த பூதம் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

    நோ ஹேட்டர்ஸ் நோ டாக்டர்ஸ் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்