2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15
என்ன தான் இது எதிர்பார்த்த விஷயம் என்றாலும், இரண்டு நாட்களாக மகா முகம் கொடுத்து பேசவில்லை. அவன் எதிரில் கூட வரவில்லை, என்ன செய்கிறாள் என்பதும் தெரியவில்லை.
சாப்பிடும்போதும் தங்கம்தான் சாப்பாட்டை எடுத்து வைத்தாள் அப்போது அவளிடம் ‘மகா சாப்பிட்டு விட்டாளா?’என்று கேட்டதற்கு…’ இல்லை ஐயா..இன்னும் அம்மா சாப்பிடலை’ என்று பதில் சொன்னாள்.
‘என்ன செய்வது? இவளை எப்படி சமாதானப்படுத்துவது. இனி எது சொன்னாலும் மகா சமாதானமாக மாட்டாள்’ என்பது அவனுக்கு நன்றாக புரிந்தது. ஆனால் அவள் முதலில் அழுது ஆர்ப்பாடம் பண்ணினாலும், பிறகு தனக்கு அடங்கி, பணிந்து போவாள் என்று நினைத்ததற்கு மாறாக மகா இப்படி பொங்கி எழுவாள்.. என்று நினைக்கவில்லை.
தன்னுடைய எதிர்ப்பை அழுத்தமாக காட்டுவாள் என்பது அவன் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. அப்பா, அம்மா இல்லாத பெண், ஆதரவாக பெரிதாக உறவுகள், கூடப் பிறந்தவர்கள் இல்லை என்பதால் இவளை எளிதாக சமாளித்துவிடலாம் என்பதுதான் ராம் போட்ட கணக்காக இருந்தது ..
அதுவும் அவள் குழந்தை உண்டானது தெரிந்த பிறகு அவனுடைய கணக்கு சற்று மாறியது.. ஈஸ்வரன் மாமா எவ்வளவு செய்திருக்கிறார்… ஈஸ்வர பவனத்தில் அவள் பிள்ளையை வளர்த்து கொண்டு… தனக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்தால்.. தான் வந்தனாவுடன் சந்தோஷமா வாழலாம். இவர்களையும் கவனித்துக் கொள்ளலாம்… என்று கணக்கு போட்டான். அவள் பாட்டுக்கு இந்த வீட்டில் வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற தாராள மனப்பான்மை வந்தது.
எது எப்படி இருந்தாலும் ,நாளை வந்தனாவும், அவள் அம்மா சந்தியாவும் கிளம்புகிறார்கள். அதற்குள் இன்றைக்கு கம்பெனிக்குப் போய் முக்கியமானதை கையெழுத்துப் போட்டுவிட்டு. ஈ.சி.ஆர் பங்களாவிற்கு வருவதாக வந்தனாவிடம் சொல்லியிருந்தான். தனக்காக எல்லா வேலையையும் விட்டு விட்டு வந்திருக்கிறாள். அவளுக்கு கம்பெனி கொடுக்க வேண்டியது தனது கடமை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
தங்கத்தை அழைத்து, “தங்கம்! மஸ்ரூம் பிரியாணி பண்ணி ஒரு ஹாட் பாக்ஸில் வைத்துக் கொடு. மகாவிடம் இது பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். அவ சோர்வா இருக்கிறா. உடம்பு சரியில்ல போல. மதிய சாப்பாடு எப்போதும் போல் அனுப்ப வேண்டாம் …நான் வெளியே சாப்பிட்டுக்கிறேன்” என்றான் .
தங்கம் ஒன்றும் பேசாமல் தலையாட்டினாள். பிரியாணியை பண்ணி ஒரு பெரிய ஹாட் பாக்ஸில் வைத்தாள், கூடையில் வைத்து சுந்தரத்திடம் கொடுத்து காரில் வைக்கச் சொன்னாள். பிரியாணி எங்கே போகிறது என்று இருவருக்கும் தெரிந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு…வாய் பேசாமல் அவரவர் வேலையை கவனிக்க ஆரம்பித்தனர். தங்கத்திற்கு மனம் கொதித்தது …
மகா அம்மா இப்படி வருத்தத்திலும், கோபத்திலும் இருக்கும்போது ,இவர் எவ்வளவு தைரியமாக பிரியாணியை எடுத்துக்கொண்டு போகிறார். குழந்தை உண்டாயிருக்கும் அந்த அம்மாவை சமாதானப்படுத்த கூட இந்த ஐயாவுக்கு மனசில்ல .
காப்பியைக் கலந்து சுந்தரத்திற்கு கொடுக்க போன போது சுந்தரம் மெதுவாக, “தங்கம்! மகா அம்மா எப்படி இருக்காங்க? வெளியிலேயே பார்க்க முடியலையே.. அம்மா மனசு வேதனையில இருப்பாங்க ..ஏதாவது சாப்பிட்டீங்களா? பாவம் அந்த புண்ணியவதி… ஈஸ்வர் ஐயா எவ்வளவு தான தர்மம் பண்ணி இருப்பாரு அதுகூட அவங்க வாழ்க்கையை காப்பாத்தலயே” என்றார் வேதனையோடு …
“ஆமாம் அண்ணா! சரியா சாப்பிட மாட்டேங்குறாங்க… நான் வற்புறுத்தினா ஜூஸ் மட்டும் குடிக்கிறாங்க… வெளியே வந்து சரியா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு..பெரியய்யா ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்காங்க”.
“இந்த ஐயாவுக்கு இப்படி புத்தி போக வேண்டாம்’ கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது குரங்கு மாதிரி வப்பாட்டி வேணுமா’ன்னு கேப்பாங்க ..இவர் வப்பாட்டி கிளியாத்தான் இருக்கா.. ஆனா மகா அம்மா குணம் எந்த தருதலைகளுக்கும் வராது. …நாம ஆதங்கப்பட்டு என்ன செய்ய? அந்த ஈஸ்வர ஐயா ஆசியும் கடவுளோட ஆசியும் தான் மகா அம்மாக்கு ஒரு வழி காட்டனும்”
சுந்தரம், “தங்கம்! அம்மாவை கருமாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்கம்மா.. மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் அப்படின்னு மெதுவா சொல்லி பாரு…கொஞ்சம் வெளியில வந்தாங்கன்னா , மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ஏதாவது அவங்க மனசு விட்டுக் கூட பேசலாம். இப்படி ஒருத்தர் கிட்டையும் பேசாமல் ரூமுக்குள்ளேயே அடைஞ்சிருப்பது என் மனசுக்கு சரியா படல.. பயமா இருக்கு. நீ மெதுவா சொல்லி பாரு” என்றார்.
தான் பார்க்க வளர்ந்த குழந்தை அல்லவா மகா அவளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்ற மனவேதனை சுந்தரத்தை பெரிதும் வருத்தியது.
ராம்குமார் கம்பெனிக்கு கிளம்பிப் போய்விட..மகா இருக்கும் ஈஸ்வர் ஐயா அறையை நெருங்கினாள் தங்கம். கதவை மெல்லத் தட்டினாள்.” தங்கம் உள்ள வா “என்ற மகா குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் .
“அம்மா! இப்படி ஒன்னுமே சாப்பிடாம இருக்கிறீங்களே.. இட்லியும், சாம்பாரும் கொண்டு வந்திருக்கேன்.. சாப்பிடுங்கம்மா. உங்களுக்காக இல்லைன்னாலும் வயித்துல வளர்ற பாப்பாக்காக சாப்பிட வேண்டாமா? அதை பட்டினி போடுவது என்னம்மா நியாயம்?”
மகாவின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது. ஆதரவான தங்கத்தின் வார்த்தைகள் அவளை மேலும் உடைந்து போகச் செய்தது.
“இப்ப இருக்கிற நிலைமையில இந்த குழந்தை எதுக்கு வந்துதுன்னு வருத்தப்படுகிறேன் தங்கம்”
” அம்மா தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க.. இந்த குடும்பத்துல பெரியய்யா பேர் சொல்ல வாரிசு வந்திருக்கு. உங்களுக்காக இல்லைன்னாலும் அதுக்காகவாவது நீங்க உங்க உடம்பை கவனிச்சுக்கோங்க. எழுந்திருங்கம்மா.. உங்களுக்கு எடுத்து சொல்றதுக்கு எனக்கு தகுதி கிடையாது. ஆனா நீங்க கூட பிறந்த பிறப்பை விட எனக்கு பார்த்து பார்த்து செஞ்சிருக்கீங்க.
உங்க அன்பால குளிப்பாட்டியிருக்கீங்க! அந்த விசுவாசமும் நன்றியும் என் மனசுல இருக்குமா .நீங்க இப்படி இருக்கிறத சுந்தரம் அண்ணா.. மத்த வேலையாட்கள் யாருக்கும் பார்த்துச் சகிக்க முடியல. எல்லாருமே வருத்தத்தில் இருக்காங்க .எதுக்கு இப்படி ஒரு நிலைமை அம்மாவுக்குன்னு
அம்மா! தயவுசெய்து எழுந்து, குளிச்சிட்டு , சாப்பிட்டுட்டு கருமாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அவளுக்கு பால் வாங்கி கொடுப்போம். அவ மனசு குளிரட்டும் ..அவ நமக்கு ஒரு நல்ல பாதையைக் காண்பிப்பா ..”
மகாவிற்கும் தங்கத்தின் வார்த்தைகள் ஒரு தெம்பைக் கொடுக்க , குளித்து சாப்பிட்டு பூஜை சாமான்களை எடுத்துக்கொண்டு,கோயிலுக்கு கிளம்பினாள்.
சுந்தரத்திற்கு போன் பண்ணினாள், “அண்ணா உங்களுக்கு வேலை இருக்கா? கொஞ்சம் வெளியில போயிட்டு வருவோமா?” மகாவின் குரலே அவருக்கு பெரிய சந்தோசத்தை உண்டாக்கியது .
“வேலை இல்லேன்னா வாங்க.. நாம கருமாரி அம்மன் கோயிலுக்கு போய் பாலபிஷேகம் பண்ணிட்டு வருவோம். ஆனா அவர்கிட்ட கார் கேட்க வேண்டாம்… என்னுடைய சின்ன கார்லயே போவோம்.”
கருமாரியம்மன் கோவிலில் மனதார வேண்டிக் கொண்டு பாலபிஷேகம் பண்ணி..”தாயே எனக்கு ஒரு பாதையை காண்பி “என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.
தன்னுடைய பக்தையின் வேண்டுகோள் தாயின் காதில் விழுந்ததா? அவள் காட்டிய பாதை ..?????
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings