in ,

சர்க்கரைப் பொங்கல் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஆச்சி, நாளைக்கு மேலத்தெரு பங்களாவுக்கு என்னையும் கூட்டிட்டப் போவீக தானே? விட்டுட்டுப் போயிராதீங்க ஆச்சி.”

இதோடு  இருபதாவது முறையாக பொன்னுத்தாய் ஆச்சியிடம் கேட்டாள் செல்வி.

“ஏட்டீ  செல்வீ…  எம்புட்டு தரம் இதே கேள்வியக் கேப்பே? நான்தான் உன்னையக் கூட்டிட்டுப்  போறேன்னு  சொல்லிட்டம்லா… இப்பம் நீ பேசாம  தூங்கலேன்னு வை, உன்னைய  பங்களா  வீட்டுக்குக் கூட்டிப்  போகமாட்டேன்.  ஆச்சிக்கு  மேலெல்லாம் வலிக்குது புள்ள, தூங்கணும்.  நீயும் தூங்கு.”

“சரி ஆச்சி.”

ஆச்சியிடம் சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்ட எட்டு வயது செல்வியின் கண்களில், தூக்கத்தை மீறி மேலத்தெரு பங்களா பற்றிய கனவுகள் விரிந்தன.

செல்வி  கரிசல்குளம் கிராமத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வந்தாள். கட்டட வேலை செய்யும் செல்வியின் பெற்றோர்களுக்கு,  ஒரு வருட வெளியூர் வேலைக்கு வாய்ப்பு கிடைத்தது. பழக்கமில்லாத அவ்வளவு பெரிய நகரத்திற்கு, விவரம் அறியாத செல்வியையும் உடன் அழைத்துப் போவதை அவர்கள் விரும்பவில்லை.

அதனால் செல்வியின் அப்பாச்சியான பொன்னுத்தாய் ஆச்சியிடம், இரண்டு மாதங்களுக்கு முன்பு செல்வியைக் கொண்டு வந்து விட்டுவிட்டு, செல்வியின் பெற்றோர்கள் கிளம்பிப் போனார்கள்.

கரிசல்குளத்தில் இருக்கும் ஆச்சியின் வீட்டிற்கு வந்ததிலிருந்து, அந்த கிராமத்தில் இருக்கும் மற்ற சிறுவர்களைப் போலவே செல்விக்கும், மேலத்தெரு பங்களா மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கம் செல்வியுடன் விளையாடும் சிறுமிகள், ஆரம்பப் பள்ளியில் உடன் படிக்கும் சிறுமிகள் என அனைவருக்கும் மேலத்தெரு பங்களா ஒரு சிம்மசொப்பனம் தான், கனவு மாளிகைதான்.

பொன்னுத்தாய் ஆச்சி போன்றவர்களின் குடிசைகளைத் தாண்டி, சின்னச் சின்னதாக கான்கிரீட் வீடுகள் கொஞ்சம் இருக்கும் அந்த கிராமத்தில், மேலத் தெருவில் இருக்கும் இரண்டடுக்கு பெரிய வீடு கரிசல்குள மக்களைப் பொறுத்தவரை பங்களாவாகத்தான் பார்க்கப்பட்டது. ஏழு அடிக்கு மேல் எழும்பிய சுற்றுப்புற சுவருக்குள், இரண்டாவது அடுக்கு மட்டுமே எட்டிப் பார்த்தபடி இருக்கும் பெரிய வீடு அது.

அந்த பங்களா வீட்டிற்குள் என்ன நடக்கிறது,  யாரெல்லாம் இருக்கிறார்கள் அவர்களது அன்றாட வாழ்க்கைமுறை எப்படியிருக்கும், பழக்கவழக்கங்கள் என்ன, வீட்டிற்குள் என்னவெல்லாம் வசதிகள் இருக்கும் போன்றவை எல்லாமே அவரவர் கற்பனைக்கேற்றபடி கிராமம் முழுவதும் உலா வந்தன.

இந்த விஷயம் தொடர்பாக கரிசல்குள சிறுவர் சிறுமிகளிடம் செல்விக்கு மட்டும் கூடுதல் மவுசு.  அதற்குக் காரணம் பொன்னுத்தாய் ஆச்சி மேலத்தெரு பங்களா வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார். ஆச்சியின் வாயிலிருந்து அந்த வீட்டைப்பற்றி ஒரு தகவலும் வராது.  ஆச்சி மட்டுமல்ல, அந்த வீட்டில் வேலை செய்யும் யாருமே வீட்டைப் பற்றிய தகவல்களை லேசில் வெளியே விடமாட்டார்கள்.

அதனால் செல்வியின் மூலமாக அந்த பங்களா பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்காதா என்று எதிர்பார்ப்புடன் செல்வியிடம் நட்பானார்கள் அனைவரும்.

ஆரம்பத்தில் செல்விக்கு இதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் தினமும் தன்னிடம் மேலத்தெரு பங்களா பற்றி தோழிகள் எழுப்பும் கேள்விகளால் ஒருகட்டத்தில் அவளுக்கே பங்களா பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

தினமும் இரவு நேரத்தில் பாட்டியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த செல்வி, பங்களா பற்றிய தகவல்களைக் கேட்டாள். பொன்னுத்தாய் ஆச்சி கரிசல்குளத்தில் ஐந்தாறு வீடுகளில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தாலும், மற்ற வீடுகளைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாள். அவள் கேள்விகள் எல்லாமே மேலத்தெரு பங்களா பற்றியதாகத்தான் இருக்கும்.

“ஆச்சி… மேலத்தெருவுல இருக்கற வீடு எம்புட்டு பெருசா இருக்கும் ஆச்சி?”

“அந்த பங்களால யாரெல்லாம் இருப்பாங்க? என்ன மாதிரியே இருக்கற சின்ன புள்ளைங்க எங்ககூட விளையாட வராதா?”

“ஆச்சி, என்னையும் உங்ககூட அந்த வீட்டுக்குக் கூட்டிட்டு போறீயளா?”

இப்படி விதவிதமான கேள்விகளை எழுப்பி, ஆச்சியின் வாயிலிருந்து வந்து விழும் ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கெட்டியாக பிடித்துக் கொள்வாள். அதை வைத்து தன் தோழிகளிடம் சிலாகித்துப் பேசுவதில் செல்விக்கு அவ்வளவு பெருமை. அவள் கற்பனையிலேயே அந்த பங்களா வீட்டைப் பலவிதமாக வடித்து வைத்திருந்தாள்.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும், பங்களா வீட்டில் விசேஷ பூஜை செய்வார்கள். பூஜை முடித்து அவர்கள் தரும் சர்க்கரைப் பொங்கலை ஆச்சி சாப்பிடாமல் செல்விக்காக எடுத்து வருவார்.  அந்த சர்க்கரைப்  பொங்கல் செல்விக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த பௌர்ணமி வரும்வரை, அந்த சர்க்கரைப்  பொங்கலைப் பற்றி தன் வயதொத்தவர்களிடம் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது பேசி விடுவாள்.

மேலத்தெரு பங்களா வீட்டில் செய்த சர்க்கரைப் பொங்கலை ருசி பார்க்கும் பெரும்பேறு தனக்குக் கிடைத்ததை, தன் தோழிகளிடம் கண்கள் விரிய செல்வி விவரிக்கும் அழகே தனிதான்.

செல்வி சொல்லச் சொல்ல ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் தோழிகள். இப்படி இரண்டு மாதங்களாக மேலத்தெரு பங்களா வீட்டின் கற்பனைக் கதைகளையே பேசிப்பேசி மலைத்துப் போயிருந்த செல்விக்கு, இன்று ஆச்சி சொன்ன விஷயம் பெரும் புதையல் கிடைத்தது போலிருந்தது.

“எலா செல்வீ… நாளைக்கு பள்ளிக்கொடம் லீவுதானே? பங்களா வீட்ல யாருக்கோ பொறந்தநாளாம். நிறைய பேர் வருவாங்க போல. வேலை நிறைய இருக்கு, உன் பேத்தியையும் கூட்டிட்டு வான்னு பெரியம்மா சொன்னாங்க. அதனால நாளைக்கு நான் வேலைக்குப் போகும்போது நீயும் என்கூட வாரே என்ன. ஆனா அங்கன வந்து என்கிட்ட சொல்லாம அங்கன இங்கன போகக் கூடாது, ஜாமான் எல்லாம் தொடக்கூடாது, நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்யணும், சரியா டே?”

ஆச்சி இப்படிச் சொன்னதும் லட்சம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன செல்வியின் மனதில்.

“அப்டியா ஆச்சி ! பங்களா வீட்டுக்கு நாளைக்குப் போகப் போறோமா? வீட்டுக்குள்ள எல்லாம் நாம போய்ப் பாக்கலாமா ஆச்சி?”

“பாத்தியா…?  இப்பதானே சொன்னேன், என் கூடவே இருக்கணும்னு.  நீ மேதாவித்தனமா அங்கிட்டு இங்கிட்டு போகக் கூடாதுன்னு சொன்னம்லா “

“சரி ஆச்சி, சரி ஆச்சி, உங்க கூடவேதான் இருப்பேன். உங்கள விட்டு எங்கனயும் போக மாட்டேன். உங்களக் கேட்காம எதுவும் செய்ய மாட்டேன். கண்டிப்பா கூட்டிட்டுப் போவீக இல்ல….”

இப்படி ஆரம்பித்தவள் தான், இரவு தூங்கும் வரை நிறைய முறை ஆச்சியிடம் இதே கேள்வியைக் கேட்டு விட்டாள். அதனால்தான் ஆச்சி சலிப்புடன் பதிலைச் சொல்லிவிட்டுத் தூங்கிப் போனார்.

ஆச்சியுடன் பங்களா வீட்டிற்குப் போகும் வண்ணக் கனவுகளுடன் செல்வியும் தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை எழுந்தது முதலே பரபரப்புடன்தான் இருந்தாள் செல்வி. ஆச்சியுடன் பங்களா வீட்டிற்குப் போகும் அந்த நொடிக்கான அவளின் காத்திருப்பு, அவளைப் பொறுத்தவரை ஒரு யுகம் போல் இருந்தது. மனதில் இனம் புரியாத ஒரு பரவசம். இரண்டு மாதங்களாகக் கற்பனையில் பலவிதமாக வடித்து வைத்திருந்த மேலத்தெரு பங்களாவையும், அந்த வீட்டில் உள்ளவர்களையும் இன்று நேரில் பார்க்கப்போகிறாள். அந்தப் பிஞ்சு மனத்தில் அதற்கான பரவசம் இருக்கத்தானே செய்யும்.

ஆச்சியின் கையைப் பிடித்தபடியே தெருவில் நடந்து போகும்போது, அவள் கண்கள் பரவசத்துடன் சுற்றுமுற்றும் தேடின. தன் தோழிகள் யாராவது கண்ணில்பட்டால், அவர்களிடம் தான் பங்களா வீட்டிற்குப் போகும் விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு.

செல்வியின் கனவு மாளிகையான அந்த மேலத்தெரு பங்களா வாசலிலிருந்த பெரிய இரும்புக் கதவுகள் திறந்த போது, செல்வியின் கற்பனைக் கதவுகளும் திறந்து கொண்டன. அதை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தன.

பிரமிப்புடன் கண்களை அகல விரித்தபடி அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.  தோட்டத்தில் இருந்த பாதை வழியே வீட்டைச் சுற்றியபடி புறவாசலுக்கு வந்தார் பொன்னுத்தாய்  ஆச்சி.

தோட்டத்துப் பூச்செடிகளையும், நெடுநெடுவென வளர்ந்திருந்த மரங்களையும், கூடவே வீட்டின் உள்ளே சாளரக் கம்பிகள் வழியாகத் தெரிந்த திரைச்சீலைகளையும் ரசித்துக் கொண்டே மெய்மறந்து நடந்தாள் செல்வி.

“ஆச்சி… பொறவாசல்ல தான் ஏனம் எல்லாம் போட்டுக் கழுவணுமா? அப்போ இதுவரைக்கும் நீங்க பங்களாக்குள்ள போனதே இல்லையா ஆச்சி.”

செல்வியின் குரலில் தெரிந்த ஏமாற்றம் ஆச்சியை என்னவோ செய்தது.

“நாம எல்லாம் உள்ளார போகக் கூடாது செல்வி. புரிஞ்சுக்க… ஏதோ வயித்துப் பொழப்புக்காக ஆச்சி இங்கன வேலை செய்தேன். துட்டு கிடைக்குதில்லா, அம்புட்டுதான். அதோட நம்ம சோலி முடிஞ்சுது. நீ சின்னப்புள்ள, உனக்கு வெளங்காது. பேசாம கடகடன்னு வேலையைச் செய்யணும். இன்னிக்கு ஏனம் நிறைய கிடக்கும். அப்படி இரி, கொஞ்ச நேரத்துல ஏனமெல்லாம் கொண்டு வந்து போடுவாங்க. கவனமா கழுவணும் என்ன. பராக்கு பார்த்துட்டு அரைகுறையாக்  கழுவுனா, பெரியம்மா ஏசும், புரியுதா புள்ள?”

குழப்பமும், பிரம்மிப்பும் மாறாமல் தலையை மட்டும் அசைத்தாள் செல்வி.

சற்று நேரத்தில் வீட்டுவேலை செய்யும் கோமதி, கழுவவேண்டிய பாத்திரங்களைப் புறவாசலில் கொண்டுவந்து அடுக்கினாள்.  சின்னதும் பெரியதுமாக மலைபோல் பாத்திரங்கள் குவியத் தொடங்கின.

“செல்வி புள்ள,  கரண்டி, தட்டு இந்த மாதிரி சின்ன ஏனமெல்லாம் நீ விளக்கி வை, பெருசெல்லாம் ஆச்சி விளக்கிக்கிடுதேன் என்ன…,”

ஏமாற்றத்துடன் தலையை அசைத்தாள் செல்வி. மனத்தில் பலவிதக் கேள்விகள் துளைத்தெடுக்க, அந்த நினைவுகளுடனேயே பாத்திரங்களைக் கழுவலானாள்.

சற்று நேரத்தில் வீட்டிற்குள் இருந்து ஏதோ ஒரு நறுமணம் எட்டிப் பார்த்து செல்வியின் நாசியை வந்தடைந்தது.

“ஆச்சி, எப்பவும் சக்கரப் பொங்கல் கொடுத்து விடுவாகளே. இன்னிக்குப் பெரிய விசேஷம்னு சொன்னீகளே, சக்கரப் பொங்கல் செய்வாங்கில்ல? அந்த வாசமே வரலையே  ஆச்சி. இன்னிக்கு சக்கரப் பொங்கல் செய்யமாட்டாகளா ஆச்சி?”

அதிர்ச்சியுடன் செல்வியைத் திரும்பிப் பார்த்தார் பொன்னுத்தாய் ஆச்சி.

“இன்னிக்கி சக்கரப் பொங்கல் எல்லாம் செய்ய மாட்டாங்க செல்வி.”

“ஏன் ஆச்சி, பொறந்தநாளு தானே சொன்னீங்க. அதுக்கு சக்கரப் பொங்கல் செய்ய மாட்டாகளா? இன்னிக்கு சக்கரப் பொங்கல் செய்வாங்க, சூடா இங்கேயே வாங்கி சாப்பிடலாம்னு நினைச்சேன் ஆச்சி,” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டாள் செல்வி.

ஏறக்குறைய செல்வியின் கண்கள் கலங்கியேவிட்டன. இருந்தாலும் தலையைக் குனிந்து கொண்டு பாத்திரங்களைக் கழுவுவதுபோல் சமாளித்துக் கொண்டாள். செல்வியின் மனநிலை ஆச்சிக்குப் புரியாமல் இல்லை. விளக்கம் சொல்லி செல்வியின் அழுகையை அதிகப்படுத்த விரும்பவில்லை ஆச்சி.

“அதெல்லாம் பொறவு பேசலாம் செல்வி. இப்போ வெரசலா ஏனத்தக் கழுவு. ஆச்சிக்கு மத்த வீட்ல ஜோலி கெடக்குல்லா.”

அதன்பின் மௌனம் மட்டுமே இருவருக்கும் இடையில் உரையாடியது. வேகமாக வேலையை முடித்துக் கிளம்பிய போது, உள்ளிருந்து வழக்கமான குரல் கேட்டது.

“என்ன பொன்னுத்தாயீ… ஏனம் எல்லாம் கழுவி முடிச்சிட்டியா? நேத்துக்குள்ள  பழையது இருக்கு, சாப்பிடறியா? இல்ல வழக்கம்போல வீட்ல சாப்பிட்டு தான் வந்தேன்னு சொல்லப் போறியா? உன் பேத்தி சாப்பிடுவாளா?”

“இல்லம்மா, ரெண்டு பேரும் வீட்ல சாப்பிட்டுத்தான் வந்தோம். நான் கிளம்பறேன், அடுத்த வீட்ல வேலைக்குப் போகணும்.”

உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. செல்வியை அழைத்துக் கொண்டு பொன்னுத்தாய் ஆச்சி விடுவிடுவென்று அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

மேலத்தெரு பங்களாவீடு பற்றி செல்வியின் மனதில் கட்டி வைத்திருந்த கற்பனைக் கோட்டை பொலபொலவென்று சரியத் தொடங்கியிருந்தது. அவளின் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட ஆச்சி, அவளை வீட்டிற்கு அழைத்துப் போய் சமாதானம் செய்துவிட்டு, அடுத்த வீட்டு வேலைக்கு வரலாம் என்ற எண்ணத்தோடு குடிசையை நோக்கி நடந்தார்.

அடுத்த தெருவில் நுழைந்த போது, ஆச்சி வழக்கமாக வேலை செய்யும் சங்கரி அம்மாள் வாசலிலேயே நின்றிருந்தாள்.

“என்ன ஆச்சி, எங்க வீட்டுக்குத்தானே வேலைக்கு வரணும். திரும்பிப் பாக்காம வெரசலா போறீயளே….”

“இல்ல… செல்விய வீட்ல விட்டுட்டு வாரேன்.”

“பாப்பாவையும் கூட்டிட்டு வாங்க. உள்ள என் மகளும் டிவிதான் பார்த்துட்டிருக்கா. நீங்க வேலை முடிக்கற வரை செல்வியும் டிவி பார்க்கட்டும். பாவம், அது எப்பவும் குடிசைக்குள்ளதானே கிடக்குது. அப்புறம், இன்னிக்கு என் பாப்பாவுக்குப் பிறந்தநாள். அதுக்காக சர்க்கரைப் பொங்கல் பண்ணியிருக்கேன். செல்விக்கு நம்ம வீட்டு சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும்னு சொல்வீங்க இல்ல. இங்கேயே சுடச்சுட சாப்பிடட்டும். நீ வா பாப்பா,” என்று செல்வியைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துப் போனார் சங்கரி.

டிவி முன்னால் இருந்த நாற்காலியில் தன் மகளுடன் உட்கார வைத்துவிட்டு, சுடச்சுட சர்க்கரைப் பொங்கலைக் கொண்டு வந்து கொடுத்தார் சங்கரி.

வழக்கமாக பௌர்ணமிக்கு ஆச்சி கொண்டுவரும் சர்க்கரைப் பொங்கலின் அதே மணம். முந்திரி நெய் என மணத்தது சர்க்கரைப் பொங்கல்.

இவ்வளவு நாட்களாகத் தான் ருசித்த சர்க்கரைப் பொங்கல் இந்த வீட்டிலிருந்து தான் வந்தது என்பது அந்தப் பிஞ்சு மனதுக்குப் புரிந்து போனது. ஒரு ஸ்பூன் சர்க்கரைப் பொங்கலை எடுத்து வாயில் வைத்தவள், இனிமேல் மேலத்தெரு பங்களா பற்றி யாரிடமும் பேசக்கூடாது  என்று முடிவு செய்து கொண்டாள்.

மனிதர்களின் மனங்களை எட்டு வயதிலேயே புரிந்து கொண்டது அந்தப் பிஞ்சு மனது. வழக்கத்தைவிட அன்று ஏனோ சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருப்பது போல் தோன்றியது செல்விக்கு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. பிஞ்சு மனதில் தான் எத்தனை எத்தனை ஆசைகள் . சூழல் புரிந்து கொள்ளும் உணர்வுகள். மாளிகை பெருசா இருந்தால் என்ன மனசு பெருசா இல்லையே… மிகவும் அருமையான கதைங்க மா 👌👌👌👌

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 16) – தி.வள்ளி, திருநெல்வேலி

போராடு … வாழ்வதற்கு (சிறுகதை) – வீ .சிவா