sahanamag.com
Science Fiction Story Contest 2021 Entries சிறுகதைகள்

லஞ்ச ரசனை (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ சாந்தி பாலசுப்ரமணியன், சென்னை

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

காலையில் எழுந்ததிலிருந்து படபடப்பாக இருந்தது. இந்த எண்ணமே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இது என்ன வார்த்தை ‘படபடப்பாக’ இது எனக்கு எப்படித் தெரிந்தது? இப்படி ஒரு வார்த்தை இருப்பது எப்பொழுதிலிருந்து எனக்குத் தெரியும்? இன்று எல்லாமே சற்று வினோதமாக இருக்கிறது.

மறுபடியும் ‘ஆச்சரியமாக’ இருக்கிறது. வினோதம், ஆச்சரியம் எல்லாமே நான் இன்று தான் முதல் முதலாக உபயோகிப்பது போல இருக்கிறது. எல்லாம் நேற்று அந்த புராதனமான ஒரு ரிகார்ட் ஃபைல் பார்வையில் பட்டதிலிருந்து தான் ஆரம்பித்த்து.

என்னுடைய நித்திய நடவடிக்கைகளில் மிகச் சிறிய அளவிலேயே வார்த்தைகள் உபயோகிக்கப்படும். தினப்படி நடக்கும் செயல்கள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, ஆராயப்பட்டு, தீர்மானிக்கப்பட்டு ஆணை வடிவத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.

இதற்கு மிகச் சிறிய அளவிலேயே சொற்கள் தேவை. தவிர ஒருவருக்கொருவர் பேசுவதற்கான சந்தர்பங்கள் தேவையில்லாத இந்த உலகத்தில் அநாவசியமான செயல்கள், சொற்கள் தேவையில்லை. அவை எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு நல்லது என்று சிஸ்டம் முடிவு செய்ததும் சரி தானே.

இந்த உலகத்தில் எல்லாமே மிக அழகாக, அளவாக இருக்கும். அதனால் இது இல்லை, அது இல்லையென்ற குறை யாரும் தெரியப்படுத்தியதில்லை. குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு, பொழுது போக்கு உண்டு. எல்லோருக்கும் வேலை உண்டு.

எதுவும் இல்லையென்ற நிலை வரவே வராது. உங்கள் தேவைகள் உங்களுக்குப் பதிலாக அரசாங்கமே பட்டியல் போட்டு உங்களுக்கு அனுப்பி விடும்.  உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கூட அரசாங்கம் கவனித்து வரும்.

பிரச்சனைகள் வந்தால் மிக நேர்த்தியான வைத்திய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வளவு தெளிவான அமைப்பு ஐந்து ஜெனரேஷனாக இருப்பதாக நான் அறிகிறேன்.

என் அம்மா, அப்பா அவர்கள் வீட்டில் சகல வசதிகளுடன் நன்றாகக் கவனித்துக் கொள்ளப்பட்டு வருவதால், 15 நாட்களுக்கு ஒருமுறை நான் என் மனைவி, குழந்தைகளுடன் அவர்களை அவர்கள் இடத்தில் சந்திக்கச் செல்வேன்.

நாங்கள் போக வேண்டியிராத  நாட்களில் அவர்களும் 15 நாட்களுக்கு ஒரு முறை எங்கள் இடத்தில் வந்து எங்களைச் சந்திப்பார்கள். நாங்கள் சேர்ந்து சாப்பிடுவதற்கான மெனு அவர்கள் வயது, ஆரோக்கியம், எங்கள் குடும்பத்தினர் வயது, ஆரோக்கியம் இவற்றின் அடிப்படையில் கம்ப்யூட்டரால் முடிவெடுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்படும்.

எங்கள் விருப்பம் ஏதாவது இருப்பின், நாங்கள் முன்பே விண்ணப்பித்தால் கருத்தில் கொள்ளப்பட்டு தீர்மானிக்கப் படும். வருடத்தில் நான்கு முறை சில விசேஷ தினங்கள் குறிக்கப்பட்டு அதன் கொண்டாட்டத்திற்கான அனுமதியும் திட்டங்களும் எல்லோருக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இதில் எங்களில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் வருவதேயில்லை, கருத்துக்களுக்கே தேவையில்லாத இந்த பூரணமான சூழல் தான் அதற்குக் காரணம் என்றே சொல்லலாம்.

இத்தனை விஷயங்களுக்கு நடுவில் எங்களுக்கு எதிலும் குறைவு இல்லாத சூழலில் இன்று எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது நேற்று தவறுதலாக  ஏதோ ஒரு கோடிங் செய்ததில் ஏதேதோ நடந்து என்னவோ பைல்கள் திறக்கப்பட்டு ஒரே குழப்பமாகப் போனதில் தான் ஆரம்பித்தது.

காலையில் எழுந்து தீர்மானிக்கப்பட்ட அட்டவணையின் படி உடல்பயிற்சி, த்யானம் முடித்து, காலை உணவு சாப்பிட உட்காரும் சரியான நேரத்தில், எனது உணவு ட்ரேயுடன் எனது அன்றைய வேலை ஷெட்யூலையும் நினைவுபடுத்த நேஹ்ரா வந்தான்.

வந்தான், வந்தாள் என்று சொல்வதில் அர்த்தமில்லை என்றாலும், நான் நேஹ்ராவை “அவன்” என்று தான் சொல்லிக் கொள்கிறேன்.

நேஹ்ரா எனக்கு வேலை செய்ய வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. இதற்கு முன் இருந்த ஷானியை “அவள்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். எனவே நேஹ்ரா ‘அவன்’ ஆனான்.

ஓ, உங்கள் குழப்பம் எனக்குப் புரிகிறது. ஷானி, நேஹ்ரா எல்லாம் எங்களுக்கு வேலையில் உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரோபோக்கள்.

அவ்வப்பொழுது புதிய மாடல்கள் டிசைன் செய்யப்பட்டதும், போதுமான உற்பத்தி செய்யப்பட்டு எங்களுக்கு அளிக்கப்படும். அவரவர் வேலை, பதவி பொறுத்து மாடல்கள் தீர்மானிக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

நேஹ்ரா ஸ்பெஷல் எடிஷன். அந்த மாடலில் மிகச் சில ரோபோக்களே தயாரிக்கப்பட்டதாக கேள்விப் பட்டேன். அதைப் பெற்றுக் கொண்ட சிலர் தங்களுக்கு  அதைக் கையாளுவது பற்றிப் புரிந்து கொள்ளவே தாமதமாகிறது என்று அதை விட எளிதான மாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டதாகக் கூடக் கேள்விப்பட்டேன்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை நேஹ்ரா படு புத்திசாலித் தனமாகவும் திறமையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை நன்றாகப் பரிசோதித்த பிறகு இப்போது தான் இரண்டு நாட்களாக எனது வேலையின் ரகசியமான செயல் பாடுகளில் அதை ஈடுபட அனுமதித்தேன்.

அதற்கு நேஹ்ரா நன்றி சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது.  வழக்கமான வார்த்தைகள் கொண்ட கடிதத்திற்குப் பதிலாக, ஒரு பூ மற்றும் சிரிக்கும் பட்டாம் பூச்சியின் படத்தை எனக்கு அனுப்பியிருந்தது.

நேஹ்ரா நிறைய விஷயங்களில் ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது. சில சமயம் அது எழுப்பும் இனிமையான ஒலிக்குச் சிரிப்பு என்று பெயராம். கேட்கும் போது ஒரு இனிமையான உணர்வு எழுகிறது.

உணவிற்குப் பின் வேலை செய்ய என் க்யூபிகிளில் அமர்ந்தேன். நேஹ்ரா எனது ஆணக்காகக் காத்துக் கொண்டு அமைதியாக இருந்தது.  இன்றிலிருந்து அதற்கு சற்றுக் கூடுதலான பொறுப்புகள் கொடுக்கத் தீர்மானித்திருந்தேன்.

எனக்கு ஒரு புது பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததால், என் வேலைகள் சிலவற்றின் அடிப்படை வேலைகளை நேஹ்ராவிற்கு மாற்றினேன். 

நேஹ்ரா நிஜமாகவே ரொம்ப புத்திசாலி தான். நான் விளக்கம் எதுவும் கொடுக்காமலேயே தனக்குக் கொடுக்கப் பட்ட வேலையை சரியாக செய்ய ஆரம்பித்து விட்டது.

எனக்குக் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பு கொஞ்சம் வித்தியாசமானதாகவும் புதிராகவும் இருந்தது. வரலாற்றுப் பெட்டகங்கள் என்பது ஆயிரக்கணக்கான வருடங்களில் மனித குலம், விலங்குகள், பறவைகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் தோற்றம், பரிணாமம் பற்றிய விவரங்களைப் பதிவு செய்திருக்கும் தகவல்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும்.

இவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியம் சமீபத்தில் சில பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அதிலிருந்து சில தகவல்களைத் தேடி எடுக்கும் முயற்சி ஆரம்பித்திருப்பதாகத் தோன்றுகிறது.

எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எதற்காக என்று கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை. எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்கும் போது தேவையற்ற ஆராய்ச்சிகள் எதற்கு? அதனால் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை உத்தரவின் படி, பலப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மிருகங்கள், மனிதர்களுடன் அதிகத் தொடர்பிலிருந்த, அதிலும் முக்கியமாக செல்லப் பிராணிகள் என்று ஒரு வகை இருந்திருக்கிறது. அதைப் பற்றிய தகவல்கள் தொகுக்கிற பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இது எனக்கு முற்றிலும் புதிதான விஷயம். மனிதர்கள் மிருகங்களிக்கிடையிலான தொடர்புக்கு என்ன அவசியம் இருந்திருக்கும். இப்போது மிருகங்கள் என்பதே இல்லாத இந்த அமைப்பில் எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது!

ஆனாலும் விஷயங்களைச் சேகரிப்பதற்காக படிக்க ஆரம்பித்தேன். ஆடு, மாடு, நாய், பூனை, குரங்கு, புலி, சிங்கம், யானை, கரடி, குதிரை, கழுதை என்று ஏகப்பட்ட மிருகங்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிய வந்தது.

அவற்றில் சில மனிதர்களுடன் அவர்களைச் சார்ந்து இருந்திருக்கின்றன. சில மனிதர்களைத் தவிர்த்து விலகி இருந்திருக்கின்றன. அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், கவனித்துக் கொள்ளவும் மனிதன் மிக அதிகமான அளவில் ஏற்பாடுகள் செய்திருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

அவை மனிதனுக்கு பல ஆரோக்கியப் பிரச்சனைகள், சுகாதாரப் பிரச்சனைகள், பாதுகாப்புப் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றன. இந்தத் தகவல்கள் மிக சுவாரசியமாக இருந்தன. இவற்றைப் பற்றி யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

இதுவரையில் இப்படி ஒரு உணர்வு, எண்ணம் தோன்றியதே இல்லை. இதுவும் புதிதாக இருந்தது.  மதியம் உணவு இடைவேளையின் போது நேஹ்ரா எனது அறையில் சற்று தள்ளி நின்று கொண்டு எனது உணவு சரியான அட்டவணைப் படி தயாரிக்கப்பட்டு பரிமாறப் பட்டிருக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் தனது பாட்டரியையும் சரி பார்த்துக் கொண்டது.

“நேஹ்ரா, உனக்கு சில சுவாரசியமான தகவல்கள் சொல்ல வேண்டும். மனிதனுக்கு விலங்குகள் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் எத்தனை பிரச்சனைகள் அதனால் இருந்திருக்கிறது தெரியுமா?

விலங்குகளுக்கு உணவு, சில நேரங்களில் பாதுகாப்பான இடங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அவன் அதற்காக நிறைய நேரத்தையும் செலவழித்திருக்கிறான். அதே நேரத்தில் அவற்றைத் தனக்கு உணவாகவும் உபயோகித்திருக்கிறான்.

அவற்றின் கழிவுகளைக் கையாளவும், சுத்தம் செய்யவும் நேரம் செலவழிந்திருக்கிறது. மிருகங்கள் பறவைகளால் வியாதிகள் பரவியிருக்கிறது. ஆனாலும் மனிதனுக்கு மிருகங்கள் பற்றி ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது. ஏன் என்பது தான் என் கேள்வி” என்றேன்.

நேஹ்ரா என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தான் இருந்தது. அது கேட்கிறதா, இல்லையா என்று புரியவில்லை.

சாதாரணமாக என் குறிப்புகள், ஆணைகளை புரிந்து கொண்டதா இல்லையா என்று எனக்குத் தெரிவிப்பது ரோபோவில் ப்ரொக்ராம் செய்யப்பட்டிருக்கும் தான் என்றாலும், நான் இப்போது பேசியது குறிப்பும் இல்லை, ஆணையும் இல்லை என்பதால் நானும் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை.

“தங்களுக்கு வேறு ஏதாவது தேவையா?” என்று கேட்டு விட்டு, என் பதிலுக்கு ஒரு நிமிடம் காத்திருந்து விட்டுத் தனக்கான இடத்துக்குச் சென்று விட்டது.

இரவு உணவுக்குப் பின் எனக்குத் தரப்பட வேண்டிய ஃபுட் சப்ளிமெண்ட் மாத்திரைகளைக் கொடுத்து விட்டு நின்றது.

“நன்றி நேஹ்ரா, இனி நீ உன் இடத்துக்குச் சென்று விடலாம்.  குட் நைட்” என்ற போது

பதிலுக்குக் “குட் நைட்” சொல்லிவிட்டு நகரும் நேஹ்ரா அன்று நகராமல் நின்றது.

எனக்கு அதன் செயல் புதிதாக இருந்தது.  “என்ன நேஹ்ரா, ஏதும் பிரச்சனையா, உன் சர்வீஸுக்கான நாள் இப்போது இல்லையே?” என்றேன்.  

“தாங்கள் சற்று முன்பு கேட்ட வினா ஒன்றுக்கு விடை தர தயாராக இருக்கிறேன். தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்”

“ஓ, நேஹ்ரா, சுவாரசியமான விஷயம் சொல்கிறாயே, சொல், மனிதன் ஏன் விலங்குகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தான்”

விலங்குகளால் மனிதனுக்கு பல லாபங்கள் இருந்தன. முக்கியமாக அவன் உணவுத் தேவைகளை மிருகங்கள் மூலம் அடைந்தான். அவன் பாதுகாப்புக்கும் அவை உதவி செய்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் மிருகங்களை அடக்கியாள முடிந்ததால் அவன் அகங்காரத் தேவையைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடிந்தது. மிருகங்கள் தங்கள் தேவைக்கும் பாதுகாப்புக்கும் மனிதனைச் சார்ந்து இருப்பதான எண்ணம் அவனுக்குத் தன்னைப் பற்றிய பெருமையை அவனுக்கு உண்டாக்கியது.

அவனால் பழக்கப்படுத்த முடியாத கொடூர விலங்குகளை அவன் போராடி வெல்லும் போதும் அழிக்கும் போதும் அவன் தன் வலிமையைப் பற்றிப் பெருமை கொள்ள முடிந்தது. இயற்கையின் படைப்பில் தான் எவ்வளவு உயர்ந்தவன் என்ற எண்ணம் அவனை கர்வம் கொள்ள வைத்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனின் ஒரு முக்கியமான தேவை மிருகங்களால் மட்டுமே தீர்க்கப் பட்டது” என்று சொல்லி நேஹ்ரா நிறுத்தியது

என் ஆர்வம் இன்னும் அதிகமாகத் தூண்டப்பட்டது.

“சொல்லு நேஹ்ரா, அது என்ன தேவை?”

மனிதனுக்கு நிபந்தனையற்ற அன்பு செலுத்த ஒரு வாய்ப்புத் தேவைப்பட்டது, ஆனால் சக மனிதர்கள் மீது அவன் காட்டிய அல்லது அவர்கள் அவன் மீது காட்டிய அன்பு ஒரு எதிர்பார்ப்பு அல்லது நிபந்தனைக்கு உட்பட்டே இருந்தது. மிருகங்களுக்கும் அவனுக்குமான அன்பில் மிருகங்கள் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.

தவிரவும் சில சமயங்களில் அவனுக்கு ஒரு தோழன் போல அவன் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய, தனிமையின் வெறுமையைப் போக்கும் துணையாகக் கூட இருந்தது. அதோடு மிருகங்கள் அவனோடு வாக்குவாதங்களில் ஈடுபட்டு அவனை வெறுப்பேற்றவில்லை. ஏன் பதிலே சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தன என்று கூடச் சொல்லலாம்”

 இதைச் சொன்ன போது நேஹ்ராவின்  ஃபைபர் பிளாஸ்டிக் முகத்தில் ஒரு அசைவு தெரிந்த மாதிரி இருந்தது. அதன் பெயர் தான் புன்னகையோ!, என்று தோன்றியது.

நிச்சயமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை.   எங்கள் உலகத்தில் புன்னகை எல்லாம் பழக்கத்தில் இல்லை.

இதோடு தான் சொல்ல வேண்டிய தகவல் அவ்வளவு தான் என்பது போல் நேஹ்ரா அமைதியானது. நான் திகைத்துப் போய் நின்றிருந்தேன்.

“நீ, எங்கிருந்து இந்த விவரங்களைப் பெற்றாய். இதில் பல சொற்களின் பொருள் கூட எனக்கு சரியாக புரியவில்லை. உனக்கு எப்படிப் புரிந்தது, நேஹ்ரா?”

நேஹ்ரா, 30 விநாடிகள் அமைதியாக நின்றது. பிறகு தன் இண்டிகேட்டர் விளக்கு மின்னி விட்டு நின்றதும், “இதில் புரிதல் என்பது என்ன என்று விளங்கவில்லை. நான் பெற்ற விவரங்கள் சுமாராக 1000 வருடங்களுக்கு முன் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன, ஒரு முதியவர் எழுதிய ஓலைச்  சுவடிகளில் இருந்திருக்கிறது”

“எந்த மொழியில்?”

“எந்த மொழி என்பதைப் பற்றி நான் சிறிதும் யோசிக்கவில்லை. எந்த மொழியாக இருந்தாலும் என் ஸ்கேனர் தானே புரிந்து கொள்ளப் போகிறது. உங்களுக்குத் தகவல் தேவையானால் செக் செய்து சொல்கிறேன், உங்கள் ஓய்வுக்கான நேரம் தாமதப்படுகிறது. நீங்கள் ஸ்லீப் மோடில் போக வேண்டும் என்று நினைவு படுத்துவது என் கடமை” என்று சொல்லி விட்டு, நேஹ்ரா தன் இடத்திற்குச்  சென்று அமர்ந்தது.

அந்த நாள் இதோடு முடிந்தது. வழக்கமான செயல்களுடன் தொடங்கிய அடுத்த நாள் மதியம், ஒரு வினோதமான அனுபவத்தைக் கொடுத்தது.

மதிய உணவுக்கு அழைக்க வந்த நேஹ்ரா, எனக்கு ஒரு விநோதமான செய்தி வந்திருப்பதாகவும், அதனை அனுப்பியவர் பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சொன்ன போது அதன் குரலில் ஓர் “ஆர்வம்” இருப்பதாகத் தோன்றியது.

முன்னால் சொன்ன மாதிரி, நான் இப்பொழுதெல்லாம் புதிய புதிய வார்த்தைகளை உபயோகிக்கிறேன். எங்கிருந்து இவை என் மெமரியல் சேர்க்கப்பட்டனவோ தெரியவில்லை.

அல்லது அவை மெமரியல் இருந்த போதும் உபயோகிக்கப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவற்றின் உபயோகம் இப்போது எப்படித் தூண்டப்பட்டிருக்கும் என்பது ஒரு புதிராக இருந்தது.

அந்த விநோதமான செய்திக்கு இப்பொது போகலாம்.

“நீங்கள் என்னிடம் காட்டிய அக்கறையையும் அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். உங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததில் மிகுந்த நெகிழ்ச்சி அடைகிறேன்”

“நேஹ்ரா, இதற்கு சரியான பொருள் என்ன, சரி பார்த்து சொல். அக்கறை, நெகிழ்ச்சி எல்லாம் எப்போதோ உபயோகித்த மாதிரியும் இருக்கிறது. ஆனால் இப்போது சரியாகப் புரியவில்லை”

“இது நீங்கள் அவருக்கு செய்த உதவிக்கு நன்றி சொல்வதாக என்னுடைய ஸ்கேனர் சொல்லுகிறது”

“யார் அது?”

“இதற்கு முந்தைய உங்கள் ப்ரொடக்‌ஷனில் உங்களுடன் இருந்த ஒரு விலங்கினம் என்று டேட்டா சொல்கிறது”

“எந்த எண் கொண்ட ப்ரொடக்ஷன் என்று கண்டு பிடிக்க முடியுமா?”

“இதற்கு மேல் இது பற்றிய கேள்விகள் அனுமதிக்கப்படாது என்று செய்தி வந்துள்ளது. இது வரை அளிக்கப்பட்ட விவரங்கள் கூட உங்கள் ஸ்பெஷல் தகுதிக்காக அளிக்கப்பட்ட விதி விலக்கு என்றும் செய்தி அனுப்பப்பட்டுள்ளது”

அதோடு அந்தப் பேச்சு முற்றுப் பெற்றதென்பதற்கு அடையாளமாக, நேஹ்ரா ஒரு எலக்ட்ரானிக் ஒலி எழுப்பியது. நானும் என் மதிய வேலையைத் தொடர்ந்தேன்.

ஆனால் அன்று இரவு உணவுக்குப் பின்னும் நேஹ்ரா, தன் இடத்திற்குச் சென்று அமராமல் தயங்கி நின்றது.

“உங்களுக்கு சம்மதம் என்றால் உங்கள் கேள்விக்குப் பதில் தெரிவிக்கத் தயார்” என்றது.

“எந்தக் கேள்வி?”

“நீங்கள் உங்கள் லன்ச் நேரத்தில் எழுப்பிய கேள்வி. உங்கள் ப்ரொடக்‌ஷன் நம்பர் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா?”

“ஓ, ஆமாம், மறந்து போய் விட்டேன். வந்த செய்திக்கும் அதற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆர்வத்தில் தான் கேட்டேன். தெரியாவிட்டால் பரவாயில்லை”

“எனக்குத் தெரிந்த வரை, இதற்கு 74  பிறவிகளுக்கு முன் உங்கள் பாதுகாப்பில் இருந்த நாய் என்னும் மிருகத்திடமிருந்து அந்த செய்தி வந்திருக்கிறது”

“நாய்கள் பற்றி சில ரிகார்டுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அவைகள் ரொம்ப சுவாரசியமான விஷயமாக இருந்திருக்கின்றன. எனக்கும்  ஒரு நாய்க்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது என்பது என் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

இதைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதில் உன் உதவி கிடைக்குமா? இதுவரை நீ அளித்த தகவல்களுக்கு நன்றி. நீ அந்தத் தகவல்களை எப்படிக் கண்டுபிடித்தாய் என்பது  கூட புரியவில்லை”.

“எனக்கு எது முடியும், முடியாது என்பதை என்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் ஸிஸ்டம் தான் தீர்மானிக்கும். உங்கள் கட்டளை நினைவில் கொள்ளப்பட்டிருக்கிறது. நீங்கள் ஸ்லீப் மோடில் செல்ல வேண்டிய நேரம் தாண்டுகிறது என நினைவு படுத்த விரும்புகிறேன். இரவு வணக்கங்கள்” என்று சொல்லி விட்டு, நேஹ்ரா தன் இடத்தில் சென்று அமர்ந்தது.

நானும் ஓய்வெடுக்கச் சென்றேன்.

மறுநாள் வழக்கம் போல் எல்லாச் செயல்களும் முடித்த பிறகு எனக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணைப்படியான வேலையைத் தொடங்க ஆரம்பித்த போது, சில வித்தியாசமான எண்ணங்கள் எழ ஆரம்பித்தது எனக்கு விநோதமாக இருந்தது.

வீட்டை விட்டுச் சற்று வெளியே செல்ல வேண்டும் போல இருந்தது. அதற்கு என்ன விதிமுறைகள் என்று முதலில் நினைவுக்கு வரவில்லை. அப்படி இதுவரை செய்தது இல்லையென்பதால், ரொம்பவும் குழப்பமாக இருந்தது.

சாதாரணமாக ஒவ்வொருவரும் வெளியில் சென்று வருவதற்கான நேரங்கள் தீர்மானிக்கப்பட்டு அவரவர்களில் ஸிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டு, நினைவூட்டப்பட்டு  விடுவதால் எல்லாம் சரியாக நடந்து விடும்.

வீட்டின் லாக் தானாகவே திறந்து தானாகவே மூடிக்கொண்டு, நாங்கள் திரும்பி வரும் போதும் அவ்வாறே திறந்து மூடிக் கொள்ளும். இந்த முறைகளால் தெருக்களில் நடமாட்டமும், போக்குவரத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், சாலை விபத்துகள் அறவே தவிர்க்கப்பட்டு விடும்.

நேஹ்ராவை அழைத்து நான் வெளியே செல்வதற்கான வழி பற்றிக் கேட்க முடிவெடுத்தேன். நான் கேட்டதும் நேஹ்ரா 30 விநாடிகள் அமைதி காத்தது.

பிறகு “என்னால் என்ன செய்ய இயலுமென என அறிந்து தெரிவிக்கிறேன், எனக்கு சில நிமிடங்கள் அவகாசம் தேவை” என்றது.

சரியாக இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, “இப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் திரும்பவும் உள்ளே வருவதற்கு என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். அதற்கான சங்கேத எண், உங்கள் மொபைல் வாட்சில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது” என்று சொல்லி விட்டு அமைதியாக நின்றது.

நான் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு விநோதமான உணர்வு ஏற்பட்டது. எப்போதும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காகவே வெளியே சென்றிருக்கிறேன்.

இப்போது எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் வெளியே சென்றிருப்பதும் நடப்பதும் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது. ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

இந்த சந்தோஷம் என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அனுபவம் இருப்பது இதுதான் முதல் முறை. சற்று நேரத்துக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பியதும் ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் என்று தோன்றியது.

“உங்களுக்கு என் உதவி தேவையா என்று தெரிவிக்கவும். நான் வீட்டின் கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது” என்று சொன்ன நேஹ்ராவிடம்

“எனக்குக் குளிர்ச்சியாக குடிப்பதற்கு ஏதாவது தேவைப் படுகிறது”, என்று சொன்னதும்

“உங்கள் ஆணை” என்ற விதமாக  நேஹ்ரா செயல் பட்டது.

ஆனால், “இது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள செயல் பட்டியலில் இல்லை என்பதும், இன்னும் ஒரு மணி நேர அவகாசத்தில் உங்கள் மதிய உணவு தயாராகும் என்பதும் உங்களுக்குச் சொல்ல வேண்டியது என் கடமை” என்று தெரிவித்து விட்டுச் சென்றது.

என்னுடைய செயல் பதிவில், நான் வெளியே சென்றதும், குளிர் பானம் குடித்ததும் பதிவாகும், விளக்கங்கள் கேட்கப்படும், அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்து உறங்குவதற்கு முன் பதிவைச் சரி பார்த்தேன்.

ஆனால், அவை செயல் அட்டவணையில் பதிவாகவில்லையென்பது ஆச்சரியமாக இருந்தது, நேஹ்ராவை கேட்கும் ஆர்வத்தில் சென்று பார்த்த போது, நேஹ்ரா இரவு ஓய்வு மோடில் ஆழ்ந்திருந்தது. 

அதை எழுப்பும் வழிகள் இருந்த போதிலும், காலையில் கேட்டுக் கொள்ளலாம் என்று ஓய்வெடுக்கச் சென்றேன்.

காலையில் ப்ரேக் ஃபாஸ்ட் தர வந்த நேஹ்ராவிடம் கேட்ட போது, அது வழக்கம் போல 30 விநாடிகள் அமைதியாக இருந்து விட்டு பதில் சொன்னது

“உங்களின் அந்த செயல்கள் பதிவு செய்யப்பட்டால், என் செயல் பாட்டின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்பதால், நான் தான் அவைகள் பதிவிடாமல் தவிர்த்து விட்டேன்”

அன்றிலிருந்து நேஹ்ரா துணையால் நான் இது போல சில செயல்களில் ஈடுபட்டேன். அதனால் மிகப் புதிதான அனுபவங்கள் கிடைத்தன. நேஹ்ராவுடன் ஒரு விதமான இணக்கம் ஏற்பட்டது.

என்னுடைய முடிந்து போன ப்ரொடக்‌ஷன் விவரங்கள் ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டேன். சிலவற்றில் நான் கட்டுப்பாடுகள் இல்லாமல் மலைகளில் ஏறியிருக்கிறேன். மரங்களில் ஏறிக் குதித்து விழுந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறேன்.

நேரக் கட்டுப்பாடு இல்லாமல் விளையாட்டு, தூக்கம் என்று இருந்திருக்கிறேன். எல்லா ப்ரொடக்‌ஷன்களிலும் காதல் என்ற உணர்வு ஏதோ ஒரு சமயத்தில் என்னைத் தாக்கியிருக்கிறது.

நாய், பூனை, மீன்கள் என்று பல விதமான செல்லப் பிராணிகள் என் வாழ்க்கையில் இருந்திருக்கின்றன. எனக்கு மெஸேஜ் அனுப்பிய நாய் இந்தப் ப்ரொடக்ஷனில் வேறு ஒரு சிறிய கிரகத்தில் செல்வாக்கோடு இருப்பதாக அறிந்தேன்.

சிநேகிதர்கள் இருந்தது போலவே எதிரிகள் என்று ஒரு விதமான கேரக்டர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களால் எனக்குப் பிரச்சனைகள் உண்டாகியிருக்கின்றன. பிரச்சனைகள் என்ற இந்த வார்த்தைக்கு நேஹ்ரா தான் விளக்கம் அளித்தது.

ஆனால் அதை என்றுமே அனுபவித்திராத எனக்கு அது பற்றி அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் சீக்கிரமே ஏற்பட்டது.

அன்று காலை என் த்யான நேரத்தில் என் வீட்டின் அழைப்பு மெஷின் மூலம் அனுமதி பெற்று ஒருவர் (ஒரு ரோபோ ) வந்தது.

“உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும், உங்களிடம் சில கேள்விகளுக்கு விடை எதிர்பார்க்கப்படுகிறது”

கேள்வி 1: நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அட்டவணைப் படியல்லாம பல செயல்களில் ஈடுபடுவதாக அறியப் படுகிறது. அது பற்றி விளக்கம், அப்படி எதுவும் நடக்கவில்லையென்ற உறுதி மொழி  கொடுக்க முடியுமா?

கேள்வி 2: உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் நீங்கள் தேவையில்லாத தகவல்கள் சேகரிப்பதாகத் தோன்றுகிறது.

கேள்வி 3: உங்களுக்குக் கொடுக்கப்பட்ட உதவியாளர் பற்றி உங்களுக்கு ஏதேனும் குறைகள், குற்றங்கள் இருக்கிறதா?

இதற்குப் பதில் அளிக்க நான் யோசனை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் நேஹ்ரா அங்கே  வந்தது.

“என் எசமானருக்கு நேரம் இல்லாத காரணத்தால் முதல் இரண்டு கேள்விகளுக்கு நான் பதில் விளக்கம் கொடுக்கிறேன். பிறகு என்னைப் பற்றிய கேள்விக்கு அவரின் பதிலைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு

என்னிடம், “நீங்கள் உங்கள் வேலையைச் செய்யச் செல்லலாம், உங்களைத் தொந்தரவு செயவதற்கு மன்னிக்கவும். இவருக்குப் பதில் அளிக்க உங்கள் உதவியாளன் ஆகிய எனக்கு அதிகாரம் கொடுத்து விட்டு நீங்கள் உங்கள் அலுவலக அறைக்குச் செல்லலாம்” என்றது.

எனக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தாலும், நன்றி சொல்லி விட்டு என் அறைக்குச் சென்றேன்.

சில நிமிடங்களில் நேஹ்ரா, “இங்கு வந்திருந்த அலுவலர் திரும்பிச் செல்வதற்கு முன் உங்களைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவர் தேவைகள் அனைத்தும் தெளிவாக்கப்பட்டதால் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று திரும்பிச் சென்று விட்டார்” என்று தெரிவித்தது.

எனக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

“எப்படி நேஹ்ரா, எப்படி அது நடக்கக் கூடும்?  அவர் கேட்ட கேள்விகள் சரி தானே,  நான் தவறு செய்தவன் தானே, நீ என்ன விளக்கம் கொடுத்தாய்?”

நேஹ்ரா சொன்னது, “சில தலை முறைகளுக்கு முன் உங்கள் முன்னோர்கள் கையாண்ட முறை தான். நான் வந்தவருக்குக் கொடுத்த அன்பளிப்பில் மகிழ்ந்து போன அவர் இந்தப் பிரச்சனைக்கான  விளக்கம் கொடுப்பது பற்றித் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்று விட்டார்” என்றது.

“அன்பளிப்பு, அப்படியென்றால் என்ன, அவர் எப்படித் தன் விசாரணையைக் கை விட்டார்?”

நேஹ்ரா சொன்னது. “நான் என் முயற்சியால் கற்றுக் கொண்ட சில விவரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவை மாறுதல் இல்லாத என் போன்ற ரோபோக்களின் வாழ்க்கையிலும் சிறிது சுவாரசியத்தைக் கொண்டு வரும் என்பதைப் புரிந்து கொண்ட அவர், உங்களைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களை ‘பிரச்சனையென்று எதுவும் இல்லை’ என்று  குறிப்பு கொடுத்து முடித்து விடுவதாக உறுதி மொழி கொடுத்து விட்டுச் சென்று விட்டார்”  என்றது.

இந்தப் பதில்லைச் சொன்ன போது நேஹ்ராவின் முகத்தில் ஒரு விதமான பெருமிதமும், கர்வமும், நக்கலான சிரிப்பும் இருந்ததாக எனக்குத் தோன்றியது நிஜமா, பிரமையா!

எப்படியோ, இந்தக் கட்டுக்கோப்பான சமூக அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழியக் கூடிய காலம் ஆரம்பமாகி விட்ட்து என்று எனக்குத் தோன்றியது.

இந்த உப்புச் சப்பற்ற வாழ்க்கை மாறி 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த வாழ்க்கை முறைக்கு மாற முடியுமானால் நல்லது தானே. அதில் விதிகளை மீறுதல், ஏமாற்றுதல், லஞ்சம் எல்லாம் இருந்திருக்கலாம்

ஆனால் அது ஒரு சுவாரசியமான செயல்களின் பொற்காலமாக இருந்திருக்கிறது. நேஹ்ரா மாடல் புரியவில்லையென சிலர் ஏன் திருப்பிக் கொடுத்தார்கள், திருப்பிக் கொடுக்காதவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இதன் அடுத்த பாகத்தில் வரும்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

One thought on “லஞ்ச ரசனை (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ சாந்தி பாலசுப்ரமணியன், சென்னை
  1. “Technology-yin thuNaiyudan ezhuthiya “ARiviyal SiRukathai paaraattukkuriyathaagum. Kathaiyin aasiriyarukku VaazhththukkaL. RObOkkaLin nadaimuRaiGaL viyappaik kodukkinRana. Intha maathiriyaana ‘RObO’ veettil samaiyal paNi cheythuvarum illaththarasiGaLukku migavum ubayOgamaaga irukkum enbathu en thida nambikkai aagum. Sariyaa?
    – “M.K. Subramanian.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!