sahanamag.com
சிறுகதைகள்

முள் வேலி (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கை கால்கள் எல்லாம் நடுங்க எதையோ பார்த்து பயந்தவள் போல் சுவரோடு சுவராக பல்லி போல் ஒட்டிக் கொண்டு நின்றாள் லலிதா. எதையாவது ஆதரவாகப் பிடித்துக் கொள்ள அவள் விரல்கள் பரபரத்தன. இல்லையென்றால் கீழே விழுந்து விடுவாள் போல் இருந்தது.

அவள் பார்த்தது கனவா நினைவா ? அவள் மகன் சங்கரா இப்படி இருக்கின்றான்? அவளால் நம்ப முடியவில்லை!

லலிதாவும், அவள் கணவன் ரகுவும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். விடுமுறை நாட்களிலும் வீட்டிலேயே பள்ளிக்கூடம் போல் காலை மாலை இரு வேளையும் டியூஷன் எடுப்பார்கள். அவர்களின் மூன்றாவது மகன் தான் சங்கர் .

பெரியவன் ராஜாவும், இரண்டாவது பெண் கீதாவும் நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறார்கள். ராஜா பன்னிரண்டாம் வகுப்பும், கீதா பத்தாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

சங்கர் எட்டாம் வகுப்பு படிக்கின்றான் . ஆனால் இவன் மட்டும் ஏன் இப்படி? அவள் கணவன் ரகு சொல்வதை முதலில் லலிதா நம்பவில்லை. இப்போது சங்கரை நேருக்கு நேர் பார்த்த பிறகு அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை.

சங்கர் மேல் லலிதாவிற்கு அன்பும் நம்பிக்கையும் அதிகம். அதுவும் அவன் கடைக்குட்டி என்பதால் அவளுக்கு மிகவும் செல்லம்.

‘எங்கே , எப்படி இந்தத் தவறு நேர்ந்தது ?’ என்று யோசித்தாள்.

கண்ணாடி முன் நின்று தன் அக்காவின் சுடிதாரைப் போட்டுக் கொண்டு, முகமெல்லாம் பௌடராகவும், கண் நிறைய மையுமாக ஒரு இளம் பெண்ணின் அசைவுகளைக் கொடுத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான்.

அதைக் கண்ட லலிதா உயிரே வாய் வழியே போனது  போல் துடித்தாள். ரகு மெதுவாக லலிதாவின் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்தான்.

“சில மாதங்களாகவே அவன் இப்படித்தான் இருக்கிறான் லலிதா. அவன் நண்பர்கள் யாரும் இப்போது அவனோடு விளையாடுவதோ பழகுவதோ இல்லை. முன்பெல்லாம் அவனுடன் வீட்டிற்கு அடிக்கடி வரும் சச்சின் கூட  இப்போதெல்லாம் வருவதில்லை. அதைக் கூட நீ கவனிக்கவில்லையா?

ஒருநாள் வழியில் அந்தப் பையனைப் பார்த்து ஏன்  இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்க அவன் தான் மேலோட்டமாக இவனைப் பற்றிக் கூறினான். சச்சின் வீட்டில், நம் சங்கருடன் பழகக்கூடாதென்று தடுத்து விட்டார்கள் என்று கூறினான். பிறகு தான் அவன் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விசாரித்தேன் . அவர் தான் சங்கர் இப்போதெல்லாம் பள்ளிக்கே ஒழுங்காக வருவதில்லை  என்று கூறினார்”

“நம் பிள்ளைகள் ராஜாவிற்கும் கீதாவிற்கும் சங்கரின் குறை பற்றி தெரியுமா?” என்று கேட்டாள் லலிதா திகிலுடன் .

 “இருவருக்கும் தெரியும் என்று தான் நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன் கீதா என்னிடம் வந்து , ‘அப்பா என்னை எங்கள் பள்ளியின் ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள். வர வர எனக்கு இந்த வீட்டில் இருக்க பயமாக இருக்கிறது’ என்றாள். ராஜாவும் அப்படியே தான் கூறுகிறான் ” என்றார்.

“ஐயோ” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் .

“நான் என்ன பாவம் செய்தேனோ; என் வயிற்றில் பிறந்த பிள்ளையை இந்த நிலையில் பார்ப்பதற்கு?” என்று கதறினாள்.

அப்போது வாயில் கட்டைவிரலை வைத்து சப்பியபடி அங்கு வந்த சங்கர், “அம்மா, எனக்குப் பசிக்கிறது” ,என்று சின்னக் குழந்தை போல் கேட்டுக் கொண்டு அவள் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டான்.

கண்களில் இருந்த மையைத் துடைத்து விட்டிருந்தான். பௌடர் மட்டும் முகத்தில் திட்டுத் திட்டாக இருந்தது.

“கண்ணா, நீ இன்று பள்ளிக்கூடம் போகவில்லையா” என்றாள் லலிதா.

“நான் இனிமேல் அந்தப் பள்ளிக்கூடம் போகமாட்டேன் அம்மா, எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள் அம்மா. செத்துப் போய் விடலாம் போல் இருக்கிறது” என்றவன் திடுமென்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதான்.

“சீச்சி அப்படியெல்லாம் பேசக் கூடாது, சாப்பிட்டு விட்டு தூங்கு” என்றவள், சமையல் அறைக்குள் போய் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தயிர்சாதம் போட்டு பிசைந்து எடுத்து வந்து ஊட்டி விட்டாள். அவனைத் தூங்க வைத்துவிட்டு மீண்டும் தன் கணவரிடம் வந்தாள்.

“ஏங்க இவன் மட்டும் ஏன் இப்படி மாறினான்? எப்போதிலிருந்து மாறினான்? மற்ற இரண்டு குழந்தைகளும் பூவாக இருக்க, இவன் மட்டும் ஏன் முள்ளாக மாறினான்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“எல்லாம் நம் தலையெழுத்து. நம் இருவருக்கும் வேலைக்கு ஓடுவதற்கும் வீட்டு வேலைகளை பார்ப்பதற்குமே நேரம் சரியாக இருந்தது. வங்கிக் கணக்கைப் பார்த்துக் கொள்வதில் இருந்த அக்கறை, இந்த குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் நான் காட்டவில்லையே!” என்றான் ரகு முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு.               அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் லலிதா.

“இவன் பள்ளிக் கூடம் போகவில்லை என்றால் மேற்கொண்டு என்ன செய்வது? நம் காலத்திற்குப் பிறகு இவன் என்ன செய்வான்?  இவனைப் போல் இருக்கும் ஆட்களுடன் சேர்ந்து கொண்டு கடைகடையாய்  போய் கை நீட்டி காசு வாங்கிப் பிழைக்க வேண்டியது தானா?”  என்று அவன் கைகளில் முகத்தை மூடி அழுதாள்.

“லலிதா, நான் என் குழந்தையை பிச்சை எடுக்க விடமாட்டேன். ராஜாவும், கீதாவும் ‌எப்படிப் படிக்கிறார்களோ அதேபோல் சங்கரையும் படிக்க வைப்பேன். நீ அழாதே” என்றான்.

“பள்ளிக்கூடம் போகவே மறுக்கும் சங்கரனை எப்படிப் படிக்க வைக்க முடியும்? ஹோம் ஸ்டடியெல்லாம் கொடுக்க முடியுமா?” லலிதா .

“ஹோம் ஸ்டடியெல்லாம் முடியாது லலிதா”

“இந்த மாதிரி குழந்தைகளுக்கென்று தனியாக ஏதாவது பள்ளிக்கூடம் இருக்கிறதா?”

“சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் கொச்சியில் இருந்ததாம், ஆனால் சில வருடங்களில் அதையும் மூடி விட்டார்களாம். அதனால் பக்கத்து ஊரில் இருந்த ஒரு மாதாகோவிலில் இருந்த பாதரைப் போய் பார்த்தேன். அவர் இது போன்ற குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குமாக ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறாராம். சாதாரண உடல் ஆரோக்கியம் உள்ள குழந்தைகளும் அங்கு இவர்களுடன் சேர்ந்து படிக்கிறார்களாம், ஆனால் யாரும், யாரையும் கேலி செய்வதற்கோ, மட்டம் தட்டுவதற்கோ அனுமதிப்பதில்லையாம். எல்லோரையும் சமமாகத் தான் நடத்துவார்களாம். ஆனால் அங்கேயே ஹாஸ்டலில் தான் தங்கிப் படிக்க வேண்டும். பீஸ் ரொம்ப குறைவாகத் தான் இருக்கிறது” என்றார் ரகு .

“ஹாஸ்டலில் சேர்க்காமல் நம் வீட்டில் இருந்து பள்ளிக்குப் போக முடியாதா?” லலிதா.

“எப்படி முடியும்? சங்கரன் இங்கே இருப்பது ராஜாவிற்கும், கீதாவிற்கும்  கூட நல்லது இல்லை. சங்கரைப் பற்றி யார் கேலி பேசினாலும் இவர்கள் இருவரும் அவர்களோடு சண்டை போடுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அவனை ஒரு அவமானச் சின்னமாகக் கருதுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்திற்கும், திருமண வாழ்க்கைக்கும் ஏதாவது தடை வரும். அப்போது இவர்களுக்கு சங்கரன் மேல் பரிதாபத்திற்கு பதில் நிச்சயம் கோபமும், வருத்தமும் தான் வரும். அதனால் அவனை ஹாஸ்டலில் சேர்ப்பதே சங்கரனுக்கும் நல்லது”

அதே வாரத்தில் சங்கரையும் கொண்டு போய் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு வந்தார்கள். பெற்றோரை விட்டுப் பிரிய முதலில் சங்கர் அழுதான், அவனைவிட அதிகமாக லலிதா அழுதாள். அப்போது தான் சங்கர் பேசினான் .

“அம்மா, நீ அழாதே!  நீ சந்தோஷமாக சிரிக்கும்படி நான் நன்றாகப் படிப்பேன். என்னை கேலி செய்தவர்கள் என்னை வியந்து பாராட்டும்படி செய்வேன். மற்றவர்கள் பூக்களாக மலர்ந்து மணம் வீசும் போது நான் மட்டும் கண்ணில் பட்ட முள்ளாய்  இருந்து உறுத்த மாட்டேன்” என்றான் கேவி அழுதபடி, பாதரின் கையைப் பிடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்குள் போய்விட்டான்.       

லலிதா திகைத்தாள். அவள் சொன்ன அதே வார்த்தைகள் சுவற்றில் பட்ட பந்து போல் அவளையே திருப்பி அடித்தது.

இரண்டு வாரங்களுக்குப் பின் பாதரிடமிருந்து ரகுவிற்குப் ஃபோன். பாதர் தான் பேசினார் . ‘சங்கர் சகஜ நிலைக்கு வந்து விட்டான் என்றும் மற்ற நண்பர்களோடு நன்றாக விளையாடுகிறான் , படிப்பிலும் நல்ல அக்கறையுடன் படிக்கிறான் என்றும் கூறினார் .

“ஆதலால் அடிக்கடி நீங்கள் அங்கு வந்தால் அவனுக்கு ‘ ஹோம் ஸிக் வந்து விடும் . நான் சொல்லும்போது மட்டும் வந்தால் ‌போதும் ” என்று கூறினார் .

சில மாதங்களில் அவனுக்கு ஏதேதோ ஆப்பரேஷன் எல்லாம் செய்து உருவத்தை மாற்றி, சங்கரி என்று பெயரும் மாற்றி விட்டார்கள்.

ராஜாவும், கீதாவும் அவர்கள் பெற்றோர்கள் போலவே அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராக ஆகிவிட்டார்கள். இருவருக்கும் திருமணமும் முடிந்து விட்டது.

அவரவர் குடும்பம் என்று இருந்தார்கள். யாரைவிட யார் வசதி என்று ஈகோவும், போட்டியும் தான் அவர்களுக்கு இருந்தது. ரகுவிற்கும், லலிதாவிற்கும் வயதாகி விட்டது. அவர்கள் பென்ஷனில் வீட்டில் மேல் வேலைக்கு தான் ஆள் வைக்க முடிந்தது. லலிதாவிற்கு சமையல் செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது.

வயதானதற்கு கடவுள் கொடுத்த பரிசான இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி எல்லாம் வேறு உயிரை வாங்கியது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லக் கூட யாரும் இல்லை.

அந்த நேரத்தில் தான் ஒரு அழகான இளம் பெண் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ. காரில் வந்து இறங்கினாள். யார் என்று தெரியாமல் ரகுவும் லலிதாவும் திகைத்தனர். அந்தப் பெண்ணுடன் வந்த பாதரைப் பார்த்து ஓரளவு புரிந்தாற் போல் இருந்தது.

“நீ…. நீங்கள்” என்று தடுமாறினாள் லலிதா.

“அம்மா, என்னைத் தெரியவில்லையா? உங்கள் சங்கர், இப்போது சங்கரி” என்றாள்(ன்).

“வெறும் சங்கரியில்லை, டாக்டர் சங்கரி ” என்றார் பாதர்.

“அப்பா , அம்மா நீங்கள் இருவரும் இனிமேல் இங்கு தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வந்து விடுங்கள். என் வீட்டில் உங்களை வேண்டாம் என்று சொல்லவோ தேவையில்லாமல் அதிகாரம் செய்யவோ யாரும் இல்லை. உங்களுக்கு நான் துணை, எனக்கு நீங்கள் தான் எல்லாம்” என்று லலிதாவின் கழுத்தைச் பிடித்துக் கொண்டு அழுதான்.

“யார் பூ வாக இருந்து எங்கள் வாழ்க்கையில் மணம் வீசுவார்கள் என்று நினைத்தேனோ அந்தப்பூ  உதிர்ந்து காய்ந்து விட்டது. யாரை முள் என்று நினைத்தேனோ அவன் வேலியாய் நின்று காக்கின்றான்” என்றாள் லலிதா கண்ணீர் மல்க.

“ஆமாம் அம்மா முள்வேலி, உங்களை பத்திரமாகப் பாதுகாக்கும்” என்று சிரித்தாள் டாக்டர் சங்கரி.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

2 thoughts on “முள் வேலி (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!