அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி கதைகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமுள்ள மைதானம்.
காலை 7 மணிக்கெல்லாம் 12முதல் 15வயதுக்குள் இருக்கும் சில இளசுகள் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப், பந்துடன் கிரிக்கெட் ஆட மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.
வேகமாக முன்னால் சென்ற மணி அவசரமாக மற்றவர்களைக் கூப்பிட்டான்.
“யே! இங்கே வாங்கடா. யாரோ ஒரு ஆளு செத்துக் கிடக்காண்டா”.
வேகமாக எல்லோரும் செத்துக் கிடந்த உடல் அருகே சென்றார்கள்.
இளசுகளில் தலைவன் போல இருந்த பையன் மற்றவர்களை உடல் அருகே போகக் கூடாது என்று அறிவுறுத்தி அவனுடைய தந்தைக்கு கைப்பேசியில் விஷயத்தைச் சொன்னான்.
சில இளசுகள் உடலை கைப்பேசியில் படம் பிடிப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருந்தார்கள்.
இதற்கிடையில் அருகிலிருந்த காவல் நிலையத்திலிருந்து காவல் ஊர்தியில் இன்ஸ்பெக்டர் இன்பநாதன், மூன்று போலீஸ்காரர்களுடன் வந்தார். அவர் பின்னாலேயே போலீஸ் போட்டோக்ராபர், உடலை மார்ச்சுவரி எடுத்துச் செல்வதற்கு வண்டி ஆகியவை வந்தன.
உடலின் அருகில் சென்று யாரும் எதையும் தொடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார் இன்ஸ்பெக்டர். இறந்தவனின முகம் சிதைந்திருந்தது. அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக கொலையாளி முகத்தைச் சிதைத்திருக்கலாம்.
பாதி எரிந்திருந்த உடல், எரிக்க முயற்சி செய்து நடுவிலே விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்று ஊகிக்க வைத்தது. உடலின் பக்கத்தில் தடயங்கள் ஒன்றும் இல்லை.
பல கோணங்களில் போட்டோக்ராபர் உடலை படம் பிடித்தப் பின்னால் உடல் பிரேத பரிசோதனைக்காக மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது. விளையாட வந்திருந்த பையன்களிடம் விசாரித்து விட்டு, இளசுகளை வீட்டிற்கு செல்லும் படி பணித்தார் இன்ஸ்பெக்டர்.
மைதானத்தில் தடையம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, மைதானத்தைப் பூட்டி விட்டு காவல் நிலையத்திற்குத் திரும்பினார் இன்பநாதன்.
அந்த காவல்துறை அலுவலகத்தில் அதிகமாக வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்கள் தான் வரும். கொலை கேஸ் வந்து பல வருடங்களாகி விட்டது. துப்புத்துலக்கி கொலையாளியைப் பிடித்தால் பெருமை. இல்லையேல் மேலதிகாரியிடமிருந்து “துப்பு கெட்டவன்” என்ற பழிச்சொல் தான் மிஞ்சும்.
மைதானத்தின் அக்கம்பக்கத்தில், மைதானம் போகும் பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு புகைப்படக் கருவியை ஆராயச் சொன்னார்.
காவல் நிலையங்கள் அன்றைய தினம் வந்த “காணவில்லை” புகார்களை இரவில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும். அது மாநிலத்தில் எல்லா காவல் நிலையமும் பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காணவில்லை புகார்களை நன்றாகப் பார்க்கச் சொன்னார்.
கண்காணிப்பு புகைப்பட கருவிகள் சில இயங்கவில்லை. சிலவற்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. காணவில்லைப் பட்டியல் கை கொடுக்கவில்லை. காவலர் மற்ற காவல் அலுவலகங்களுக்கு தொடர்பு கொண்டு விசாரித்தார்.
சுற்று வட்டம் எங்கும் “வாலிபர் காணவில்லை” என்ற புகார் எதுவும் பதிவாகவில்லை என்றனர். பரலோகத்திற்குச் சென்றவர் யாரென்று தெரிந்தால் தான் அனுப்பியவர் யாராயிருக்க முடியும் என்ற ஆராய்ச்சியில் இறங்க முடியும்.
இறந்த உடலின் புகைப்படத்தை பல பிரதிகள் எடுத்து அதைக் காண்பித்து விவரங்கள் ஏதேனும் கிடைக்குமா என்று பார்க்கச் சொன்னார். காவல் துறைக்கு தகவல் அனுப்பவர்களுக்கு புகைப்படத்தை அனுப்பி, ரௌடிகள் மத்தியில் தகவல் கிடைக்குமா என்று விசாரிக்கச் சொன்னார்.
காவல்துறைக்குத் தகவல் அளிக்கும் முத்துவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
“சார்… 4ஆம் நம்பர் சாராயக் கடையில் கோவிந்த், அந்தோணி இரண்டு பேரைப் பார்த்தேன். சின்ன சின்ன திருட்டு, பிக்பாக்கெட் பண்ணுவாங்க. என்னப்பா… நல்லவேட்டையா, அயல்நாட்டு சரக்கா அடிக்கிறீங்க அப்படின்னு கேட்டேன்”.
“இதான் மாமு எங்களுக்குப் படியளந்தவருன்னு ஒரு போட்டோ காமிச்சாங்க. போட்டோல இருந்த ஆளு போட்டிருந்த சட்டை கலரும், காலைல அனுப்பின போட்டோல இருந்த சட்டை கலரும் ஒரே கலரா இருக்குது.”
துரித கதியில் போலீஸ் விரைந்து கோவிந்த், அந்தோணி இருவரையும் கைது செய்தது. அவர்களிடம் விலையுயர்ந்த கைப்பேசி, மணிபர்ஸ் நிறைய பணம் இருந்தது.
முதலில் ஒன்றும் தெரியாது என்றவர்கள், போலீஸின் அன்பான கவனிப்பிற்குப் பிறகு குற்றத்தை ஒப்புக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.
“கலியன் தான் சார் வழிப்பறி பண்ணலாம்னு கூட்டிக்கிட்டுப் போனார். புகைப்படத்தைக் காட்டி, நல்ல பசையுள்ள பையன். நிறையத் தேரும்னு சொன்னார். கலியன் கையில நாட்டுத் துப்பாக்கி வைச்சிருந்தார். சும்மா பயமுறுத்தறத்துக்குத் தான் துப்பாக்கின்னு சொன்னார்.
பையன் பர்ஸ், போன் கொடுக்க தகராறு பண்ணினான். கலியன் துப்பாக்கி வைச்சு பயமுறுத்தினப்ப குண்டு பையன் மேலே பாய்ஞ்சு கீழே விழுந்திட்டான். பேச்சு, மூச்சு இல்லை. கொலைக் கேசுல மாட்டிக்குவோம்ன்னு பயந்துட்டோம். அடையாளம் தெரிய வேண்டான்னு பாறாங்கல்லை எடுத்து மூஞ்சியை சிதைச்சுட்டோம். உடலை எரிக்க முயற்சி பண்ணும் போது வெடிச் சத்தம் கேட்டுது. பயந்து போய் ஓடிப் போய்ட்டோம்.”
“அந்தப் பையன் யாருன்னு எங்களுக்குத் தெரியாது சார். ஆனால், அந்தப் பையன் பேச்சு மூச்சு இல்லாம கீழே விழுந்தப்போ கலியன் போட்டோ எடுத்தாரு. யாருகிட்டேயோ பேசினார். என்னண்ணே, வழிப்பறின்னு சொல்லி கொலைக் கேசுல கொண்டு விட்டுட்டீங்களேன்னு கேட்டோம். அவர் ஒன்னும் சொல்லலை. பணம் இன்னும் தரேன்னு சொன்னார். தலைமறைவா இருங்க. முடிஞ்சா ஊரை விட்டே போயிடுங்கன்னு சொன்னார்”
போலீசுக்கு பெரிய சந்தேகம் வந்தது.
வழிப்பறி பண்ணப் போய் எதிர்பாராமல் கொலை நடந்துதா? அல்லது திட்டம் போட்டு கலியன் இந்தக் கொலை பண்ணியிருக்கானா?
மீதி இரண்டு கூட்டாளிகளையும் வழிப்பறின்னு பொய் சொல்லி கூட்டி வந்திருக்கணும். கொலை நடந்ததும் கலியன் பேசினது யாருகிட்ட?
பணம் கொடுத்து யாரோ இந்தக் கொலையை பண்ணச் சொல்லி இருக்காங்க. இவங்க கூலிப் படை. கலியனைப் பிடிச்சு கவனிச்சாத் தான் இந்த மர்ம முடிச்சு அவிழும்
கலியனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவன் வீடு இருக்குமிடத்தை அறிந்து விரைந்த போலீஸ் அவனை முதல் நாள் இரவிலிருந்து காணவில்லை என்றும், அவனுடைய குடும்பம் இரண்டு நாளுக்கு முன்னரே ஊருக்குப் போய் விட்டார்கள் என்றும் அறிந்து கொண்டார்கள். எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
இறந்த வாலிபனின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குள் விசாரிக்க, இறந்தவனைப் பற்றிய விவரங்கள் தெரிய ஆரம்பித்தன.
இறந்து கிடந்த வாலிபன் பெயர் கார்த்திக். அவன் ஊருக்கு வெளியே இருக்கிற “ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ்” என்கிற பெரிய கம்பெனியில் பணிபுரிகிறான். கம்பெனிக்குப் பக்கத்தில் அவர்களுடைய தங்கும் விடுதி இருக்கிறது. கார்த்திக் அந்த விடுதியில் தங்கியிருக்கிறான்.
மில் முதலாளி தங்கராஜ் பெரிய பணக்காரர். அவருடைய ஒரே மகள் சுந்தரி. சுந்தரி, கார்த்திக் வேலை செய்யும் கம்பெனியில் பணிபுரிகிறாள். வார விடுமுறை நாட்களில் சுந்தரியும், கார்த்திக்கும் சினிமா, பார்க் என்று பல இடங்களில் ஜோடியாகப் பார்த்திருப்பதாகச் சொன்னார்கள்.
கார்த்திக்கும், சுந்தரியும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும், கார்த்திக் ஒரு அனாதை என்பதனாலும், அவன் என்ன ஜாதி என்பது தெரியாததனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதை தங்கராஜ் விரும்பவில்லை என்றும் வதந்தி என்ற செய்தி வந்தது.
தங்கராஜ் ஒரு ஜாதி விசுவாசி. அவர் சுந்தரியை தன் ஜாதியைச் சேர்ந்தவர்க்கே மணமுடிக்க விரும்புவதாகவும் கூறினார்கள்.
சுந்தரியைப் பார்த்துப் பேசினால், மேலும் சில விவரங்கள் கிடைக்கும் என்று தங்கராஜ் வீட்டிற்குச் சென்றார் இன்ஸ்பெக்டர். நடந்த விஷயங்களை எடுத்துக் கூறி, சுந்தரியிடம் பேசுவதிற்கு அனுமதி கேட்டார்.
“சார்…. என் பெண்ணுக்கு அடுத்த மாதம் கல்யாணம். அவள் கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறாள். அவளை கன்ப்யூஸ் பண்ணாம எதை முக்கியமா தெரியணுமோ, அதை மட்டும் கேளுங்க” என்றார்.
கார்த்திக்கின் மணிபர்ஸ், கைப்பேசி அகியவற்றை அடையாளம் காட்டினாள் சுந்தரி. கார்த்திக்கிடம் உள்ள உறவு பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரி எதையோ மறைக்கிறாள் என்று புரிந்து கொண்டார் இன்பநாதன்.
தங்கராஜின் அந்தரங்கச் செயலர் சுரேஷ் சொன்னார்.
“சுந்தரி கார்த்திக்குடன் ஊர் சுற்றுவது சாருக்கு பிடிக்கவில்லை. கார்த்திகை வேலையை விட்டு, இந்த ஊரை விட்டு அனுப்பணும் அப்படின்னு சொல்லிக் கிட்டிருக்கார். ஆனால் நான் சொன்னதா அவர்கிட்ட சொல்லாதீங்க” என்றார்.
கார்த்திக் வேலை செய்து கொண்டிருந்த “ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ்” நிறுவனரை சென்று பார்த்தார் இன்பநாதன். நிறுவனர் ரங்கராஜனிடம் பேசியதில் அவர் ஏதோ சொல்லத் தயங்குவது தெரிந்தது.
“போஸ்ட் மார்ட்டம்” முடிந்தவுடன் உங்களுக்குப் பல கேள்விகள் வரலாம். நாம் அப்போது விரிவாகப் பேசுவோம் என்றார். கொலை நடந்ததற்கு இரண்டு நாள் முன்பு தங்கராஜ், ரங்கராஜனை சந்தித்துப் பேசியதாக செய்திகள் வந்தது.
கார்த்திக் காணவில்லை என்பதை, ஏன் கம்பெனி, போலீஸில் புகார் செய்யவில்லை என்ற சந்தேகம் வந்தது.
கலியனின் புகைப்படங்கள் “கார்த்திக் கொலையில் தேடப்படும் குற்றவாளி” என்று பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அலுவலகங்களுக்கு புகைப்படங்கள் அனுப்பப்பட்டு, கண்டவுடன் கைது செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
ஊரெங்கும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
“கார்த்திக் கொலை ஜாதிக் கொலை. தங்கராஜ். ஆளும் கட்சிக்கு வேண்டியவர் என்பதால் போலீஸ் வழிப்பறி என்று ஜோடனை செய்கிறது”.
தொலைக்காட்சி, ஊடகங்கள், செய்தித்தாள்கள், எல்லாம் அறிந்தவர்கள் போல, கார்த்திக் கொலை கேஸை அலசி தங்கராஜ் சொல்லித் தான் இது நடந்திருக்கும். ஆகவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கூற ஆரம்பித்தார்கள்.
போலீஸ் தேடுவதை அறிந்த கலியன் சரணடைந்தான். நடந்தது வழிப்பறி என்று சத்தியம் செய்தான். அவனுடைய வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தார்கள்.
அந்தப் பணத்திற்கு அவன் சொன்ன விவரம் முன்னும் பின்னுமாக இருந்தது. கொலை நடந்த உடனே யாரிடமும் பேசவில்லை என்று வாதிட்டான்.
கலியன் கைப்பேசியை பறிமுதல் செய்த போலீஸார் இணைய பாதுகாப்பு அலுவலகத்தில் கொடுத்து ஆராய்ந்ததில் கலியன் அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகள், அவனுக்கு வந்த கார்திக்கின் படம், பாதி கருகியிருந்த கார்த்திக்கின் படம் ஆகியவை கிடைத்தன.
அவன் தொடர்பு வைத்திருந்த எண் தங்கராஜ் அந்தரங்க செயலர் சுரேஷின் கைப்பேசி எண் என்று தெரிந்தது. கொலை செய்வதற்கு சுரேஷ் ஏற்பாடு செய்ததாகவும், ஐந்து லட்சம் தந்ததாகவும் ஒப்புக் கொண்டான் கலியன். சுரேஷ் கைது செய்யப்பட்டான்.
தங்கராஜ் கைது செய்யப்பட வேண்டும் என்ற கூக்குரல் வலுக்க ஆரம்பித்தது. இன்ஸ்பெக்டர் இன்பநாதன் மறுபடியும் தங்கராஜை தொடர்பு கொண்டு விசாரித்தார்.
தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய தங்கராஜ், ஹைடெக் நிறுவனர் ரங்கராஜனை சந்தித்ததை மறைக்கவில்லை.
இதனிடையில் கார்த்திக் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவரிடமிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது. மருத்துவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்பநாதன், ரங்கராஜனை உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.
ரங்கராஜன் அவருடைய தொழில் நுட்ப ஆலோசகர் பத்மநாபனுடன் வந்து சேர்ந்தார்.
மருத்துவருடைய சந்தேகங்கள், இன்பநாதன் கேள்விகளுக்கு எல்லாம் இருவருமாக விளக்கம் அளித்தனர். கொலை கேஸ் முடிவிற்கு வந்ததில் நிம்மதி அடைந்தார் இன்பநாதன்.
இந்த கேஸ் பற்றிய எல்லா விவரங்களையும் மேலதிகாரிகளிடம் விளக்கினார் இன்பநாதன். மக்கள் மத்தியில் இதைப் பற்றிப் பரவலாக வதந்திகள் பரவி விட்டதால் பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள், தொலைக் காட்சி நிறுவனங்களைக் கூப்பிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலதிகாரி.
அடுத்த நாள் ஹைடெக் நிறுவனத்தின் பெரிய கூடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்கள் தவிர தங்கராஜ், சுந்தரி, ரங்கராஜன், பத்மநாபன், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்பநாதன் பேச்சை ஆரம்பிக்கும் முன்னரே அவரைப் பேச விடாமல் கேள்விக்கணைகள் வர ஆரம்பித்தன. தங்கராஜை ஏன் கைது செய்யவில்லை என்பதுதான் முக்கிய கேள்வி.
அதிகமான, அதிகப்பிரசிங்கித் தனமான கேள்வி கேட்ட நிருபரைப் பார்த்து இன்பநாதன் கேட்டார்.
“உங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியை வேலையாள் துடைக்கும் போது கீழே தள்ள அது உடைந்து விட்டது. அப்போது உங்கள் வேலையாள் மீது கொலை வழக்குப் போடுவீர்களா?”
“விசித்திரமான கேள்வி. தொலைக்காட்சிப் பெட்டியை சரி செய்ய முடியுமா என்று பார்ப்பேன். தொலைக்காட்சிப் பெட்டி உடைந்தால் அது எப்படி கொலையாகும்?” என்றார் அந்த நிருபர்.
“அது தான் இங்கே நடந்திருக்கிறது. கார்த்திக் மனிதன் அல்ல. மனிதன் போல வடிவமைக்கப்பட்ட ஒரு மனித ரோபோ. ஆங்கிலத்தில் இதை “ஹ்யுமனாய்ட்” என்று கூறுவர். ஆகவே சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் போடலாமே தவிர, கொலை வழக்குப் போட முடியாது. இதுதான் நடந்தது” என்று விவரங்கள் கூறினார் இன்பநாதன்.
“தங்கராஜின் அந்தரங்க செயலர் சுரேஷ், அவருடைய தூரத்து உறவினர். தங்கராஜின் மகள் சுந்தரியைத் திருமணம் செய்து கொண்டால் தங்கராஜின் சொத்து பிற்காலத்தில் தனக்கு வரும் என்று ஆவலாக இருந்தார்.
சுந்தரி, கார்த்திக்குடன் ஊர் சுற்றுவதாக வந்த செய்தியை நம்பிய தங்கராஜ், ஹைடெக் அலுவலகம் சென்று ரங்கராஜனைப் பார்த்தார். கார்த்திக் ஒரு ரோபோ என்ற விவரத்தை அறிந்தார்.
இது தெரியாத சுரேஷ், கார்த்திக்கை கொலை செய்ய கலியனிடம் ஐந்து லட்சம் கொடுத்து, கொலை செய்து உடலை எரித்து விடும் படி கூறினார். ஐந்து லட்சத்தையும் எடுத்துக் கொள்ளும் ஆசையில் கலியன் கோவிந்த், அந்தோணி இருவரையும் வழிப்பறி என்று கூட்டி வந்தார்.
தகுந்த சமயம் பார்த்து கார்த்திக்கை சுட்டார் கலியன். கார்த்திக்கின் உடலில் மின்சாரம் செல்லும் பாகத்தைக் குண்டு துளைத்ததால் மின்சாரம் தடைப்பட ரோபோ செயலிழந்தது. கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்த மூவரும் முகத்தைச் சிதைத்து உடலை எரிக்க முயன்றார்கள்.
அப்போது உடலில் இருந்த மின்சாரப் பொருட்கள் வெடிக்க ஆரம்பித்தன. மூவரும் அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்கள்”
இன்ஸ்பெக்டர் பேசி முடித்ததும், மேடைக்கு கார்த்திக் முக அமைப்பு கொண்ட மூவர் வந்தனர்.
ரங்கராஜ் கூறினார் “இந்த மூன்றுமே மனிதரோபோ. உங்களுக்கு விளக்குவதற்காக மூன்று ரோபோக்களுக்கும் கார்த்திக் முகம் பொருத்தி இருக்கிறோம். எங்களுடைய பரிசோதனை சாலையில் இந்த முகத்தை எடுத்து வேறு முகத்தைப் பொருத்த முடியும். எங்கள் அலுவலகத்தில் பத்து ரோபோக்கள் உள்ளன”
“சுந்தரிக்கு, கார்த்திக் ரோபோ என்ற விவரம் தெரியும். கார்த்திக்குடன் வெளியே சென்றால் மற்றவர்களால் இது ரோபோ என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று அறிய வார இறுதி நாட்களில் சுந்தரி மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு கார்த்திக் ரோபோவுடன் சுற்றினாள்.
இப்போது நடந்த இந்த கொலை கேஸ் எங்கள் முயற்சி வெற்றி என்று தெரியப்படுத்தி விட்டது. காவல்துறை கார்த்திக் ரோபோவை எங்களிடம் ஒப்படைத்து விட்டது, அது சரி செய்யப்பட்டு ஒரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும்”
கொலை எதுவும் நிகழவில்லை என்பதால் சுரேஷ், கலியன், கோவிந்த், அந்தோணி ஆகிய நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings