in ,

கிளப்புக் கடை தாத்தா (சிறுகதை) – ✍ வைரமணி, திருச்சி 

கிளப்புக் கடை தாத்தா (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 111)

துரை மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் பொழுது மணி சரியாக காலை 8:30. என்னுடைய சொந்த ஊருக்கும், மதுரைக்கும் சரியாக 120 கிலோ மீட்டர்.

மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பின், மதுரை பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தேன். பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் சோர்வாகவும் பசியாகவும் இருந்தது. பக்கத்துல இருக்க ஏதாவது ஒரு கடையில சாப்பிட்டுட்டு ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்னு தோணுச்சு.

சின்னத்துரை மாமா வீட்டுக்குப் பத்திரிக்கை வைக்க போறோம். அங்க போய்  நான் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?  

அவுங்க சாப்பிட வற்புறுத்துறப்ப  சாப்பிடாம வந்தால் அது ஒரு பெரிய  குறையாக போயிடும், அதனால சாப்பிடாமலே போயிடலாம். அங்கேயே மாமா வீட்டுல போயி சாப்பிட்டுக்கலாம்னு என்னோட மனச மாத்திக்கிட்டேன். 

அப்புறம் பக்கத்தில் இருந்த கடையில் கொஞ்சம் பழங்கள் மற்றும் மல்லிகைப் பூவை வாங்கி கொண்டேன். மதுரை மல்லி பார்ப்பதற்கு அழகா குண்டு குண்டா  மிகவும் அருமையாக இருந்தது.

இந்தக் குண்டு குண்டு மல்லிகைப் பூக்களை மிகவும் நெருக்கமாக நேர்த்தியாகக் கட்டி இருப்பது ஒரு தனி அழகு. பூக்கட்டியவர்களைக் கண்டிப்பாகப் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

மதுரையைத் தவிர்த்து வேறு எந்த ஊரிலும் இவ்வளவு நெருக்கமாகப் பூக்களைக் கட்டியிருப்பதை நாம் பார்ப்பது மிகவும் அரிது.

ஊருக்கு திரும்பும் பொழுது வீட்டிற்கும் கொஞ்சம் மல்லிகைப் பூ வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, வாங்க வேண்டியதை வாங்கிய பின் ஆட்டோ நிற்கும் இடத்திற்குச் சென்றேன்

சின்னத்துரை மாமாவின் முகவரி எழுதிய காகிதத்தை அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் காண்பித்து, “இங்கே  போக வேண்டும் பக்கமா? தூரமா?” என்றேன்.

“போகலாண்ணே, பக்கத்துல தான் இருக்கு. அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் தான் இந்த ஓட்டல் இருக்கு. வாங்க போகலாம்” என்று கூறி, நான் ஏறியதும் ஆட்டோவை கிளப்பினார்.

சின்னத்துரை மாமா என்னுடைய தூரத்து உறவுக்காரர். எங்க கிராமத்துல நான் பிறப்பதற்கு முன்பிருந்தே ராமையா தாத்தா கிளப்புக் கடை நடத்திக்கிட்டு இருந்தாரு.

அவருடைய ஒரே மகன்தான் சின்னதுரை மாமா. தாத்தாவோட கிளப்புக் கடை மட்டும் தான் எங்க ஊர்ல இருந்த ஒரே ஒரு கடை. தாத்தா போனதுக்கப்புறம் வேறு யாரும் எங்க ஊர்ல கடை வைக்கல.

தாத்தா காலையில் மட்டும் தான் வியாபாரம் செய்வாரு. இட்லி, வடை, சுக்குக்காபி இதெல்லாம் காலையில தாத்தா கடையில தயாராக இருக்கும்.

தாத்தா நேரம் தவறமாட்டார். கடையை சரியா அஞ்சு மணிக்கெல்லாம் திறந்து அடுப்பு பத்த வைக்க ஆரம்பிச்சுருவாரு. எனக்கு நினைவு தெரிந்த வரையில், தாத்தா கடைக்கு அவ்வளவாக லீவு விட்டது கிடையாது.

சின்னதுரை மாமா கல்யாணத்துக்கு மட்டும் தான், ரெண்டு நாள் லீவ் விட்டாரு. எங்க ஊரில் உள்ள என் வயதுக்காரர்களும் மற்ற சிறு பிள்ளைகளும், தாத்தாவ ‘களப்புக் கடைத் தாத்தா’… ‘களப்பு கடை தாத்தா’…  அப்படின்னுதான் சொல்லுவோம். 

கடையில் போய் சாப்பிடுபவர்களை விட, வீட்டிற்கு இட்லியை வாங்கி கொண்டு போயி சாப்பிடுவர்கள் தான் அதிகம். 

நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது, எனக்கு நாலு இட்லி வாங்குறதுக்கு ஒரு பாத்திரம் மற்றும் பெரிய பெரிய தூக்குச்சட்டி ரெண்டு எடுத்துட்டுப் போவேன்.

கடையிலேயே உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்குத் தையல் இலை அல்லது வாழை இலை இருக்கும். வீட்டிற்கு வாங்குபவர்கள் வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்துச் செல்வார்கள்.

நான் வாங்கும் நாலு இட்லிக்குத் தேவைக்கு அதிகமா அரை தூக்குச் சாம்பார் கால் தூக்கு அளவிற்கு காரச் சட்னியும் தாத்தா கொடுப்பாரு. கொஞ்சம் கூட முகம் சுழிக்க மாட்டார்.

இட்லிக்கு நான் எடுத்துக் கொண்டது போக  சட்னி சாம்பார் மீதம் உள்ளத, வீட்டில் உள்ள அனைவரும், பழைய சோற்றுக்குத் தொட்டுக் கொள்ள வெஞ்சனமா வச்சுக்குவாங்க.

தாத்தா கடை காரச் சட்னி இட்லிக்கு மட்டுமில்லை, பழைய சோற்றுக்கும் அவ்வளவு ருசியாக இருக்கும். சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய், பூண்டு, கொஞ்சமா உளுந்து, வரமிளகாய் எல்லாத்தையும் போட்டு வதக்கி அரைச்சு கொடுப்பாரு

அவ்ளோ மணமா ருசியா இருக்கும். தாத்தா கடை காரச் சட்னி போல் இதுவரைக்கும் நான் வீட்டிலேயோ  வேறு எங்கேயும் கடையிலோ  சாப்பிட்டதில்ல.

எனக்கு என்னமோ அந்த சட்னி அரைக்கும் கைப்பக்குவம் அவருக்கு மட்டுமே அமைந்த ஒன்று என்று நினைக்கிறேன். அவ்வளவு ருசியாக இருக்கும் அந்த சட்னி

அவர் தயார் செய்த பலகாரம் மற்றும் சட்னி சாம்பார் எந்த அளவுக்கு ருசியில் உயர்ந்து இருந்துச்சோ, அது போல அவர் கடைக்கு வர்றவங்ககிட்ட அவர் காட்டிய அன்பும் மரியாதையும் பல மடங்கு உயர்வா இருக்கும்.

எங்க தெருவுல மொத்தம் அப்போ இருபது வீடுகள் இருந்திருக்கும். எங்க தெருவுல இருக்கிறவங்க யாராவது குழந்தை பெற்று இருந்தால், புண்ணியாதானம் பண்ணி தாயையும் குழந்தையையும் வீட்டிற்கு  அழைக்கும் வரை, காலைல  தாத்தா கடையிலிருந்து தான் சுடச்சுட இட்லி போகும்.

“பாவம் பிள்ளைத்தாச்சி பழச சாப்பிடாமல் சுடச்சுட சாப்பிடட்டும், அப்ப தான் உடம்புக்கு நல்லது” அப்படின்னு சொல்லி யார் மூலமாவது அவங்களுக்கு இட்லி கொடுத்து விடுவாரு

பதிலுக்கு எவ்வளவு வற்புறுத்தினாலும் ஒரு பைசா வாங்க மாட்டார். எப்படித் தான் தாத்தா கடையைச் சமாளித்து நடத்தினார் என்று தெரியவில்லை. எனக்கு இன்னமும் இப்ப நினைச்சாலும்  ஆச்சரியமாகத் தான் இருக்கும். 

தெருவிலிருந்த எல்லார்கிட்டயும் எந்த வித்தியாசமும் பார்க்காமல் தாத்தா அப்படித் தான் நடந்து கொண்டார். சொந்தகாரங்க, வேற ஆளுங்க அப்படி என்று எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார்.

அது போல யாராவது கடைக்குக் கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தட்டில் காசு வச்சு இரண்டு இட்லிக்கு நீட்டினால் காசை எடுத்து அவங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துட்டு தட்டில் இரண்டு இட்லியை வைத்துச் சட்னி சாம்பார் ஊத்தி கொடுப்பாரு.

எவ்வளவு வற்புறுத்தினாலும் குழந்தைகளுக்குக் கொடுக்கிற இட்லிக்கு காசு வாங்க மாட்டார்.

“ரெண்டு இட்லி இந்தக் குழந்தைக்கு கொடுக்கிறதால நான் என்ன குறைஞ்சா போயிருவேன்? குழந்தைகளும் தெய்வமும் ஒன்னும்மா. பச்ச பிள்ளைங்களுக்குக்  கொடுக்குறதால நான் குறைந்து போக மாட்டேன்”னு சிரிச்சுகிட்டே சொல்லுவாரு.

தாத்தா நடந்துக்கிட்ட பெருந்தன்மையை எப்ப நினைச்சாலும் எனக்குத் தாத்தா மேல மரியாதை உயர்ந்து கொண்டே போகும். 

பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போதும், தாத்தா மத்தவங்களுக்குத் தன்னால் முடிந்த உதவியை விடாம செய்து கொண்டே இருப்பார்.

ஊரில் யார் வீட்டிலாவது விசேசங்கள் என்றால், காசு வாங்காத சமையல்காரராக நின்று அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்

எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. எங்க அக்கா கல்யாணத்தப்ப நல்ல மழை. தாத்தா தான் சமையல் வேலைய பாத்துகிட்டார். மழை சாரலில் வெளியில சமைக்க முடியல.

மழையோடு மழையாக நல்லா நனஞ்சிக்கிட்டே, பெரிய பெரிய கற்களை தன்னோட கடைக்குள்ள நகர்த்தி கொண்டு போய், அடுப்பை தற்காலிகமா அமைச்சு சமைச்சு கொடுத்தாரு.

அன்று தாத்தா பட்ட சிரமம் சொல்லி முடியாது. பம்பரமா வேலை செஞ்சு பந்தியை கவனித்துக் கொண்டார். எங்க அக்கா கல்யாணத்துக்கு தாத்தா வேலை செஞ்சதால அவரோட கடையை ரெண்டு நாள் திறக்கல.

இத்தனைக்கும் ஒரு பைசா கூட தாத்தா எங்ககிட்ட வாங்கல. 

ஊர்ல யாரு வீட்டுக்குச் சமைக்க போனாலும் தாத்தா யார்கிட்டயும் ஒரு பைசா வாங்க மாட்டார். தாத்தாவோட குணத்தில் கொஞ்சம் கூட குறைந்தது கிடையாது அம்மாயியோட குணமும்.

தாத்தா மாதிரியே எல்லார்கிட்டயும் அன்பாகவும் மரியாதையாகவும் அம்மாயியும் நடந்துக்கும். தாத்தாவோட சேர்ந்து காலையில எந்திரிச்சு சட்னி அரைக்கிறது விறகு எடுத்து அடுப்பு பத்த வச்சு கொடுக்கிறது, இப்படி எல்லா வேலைகளையும் கூடமாட இருந்து செஞ்சு  தாத்தாவுக்கு உதவியா இருக்கும் அம்மாயி

தாத்தாவுக்கும் அம்மாயிக்கும் ஒரே ஒரு பிள்ளை தான். அது தான் சின்னதுரை மாமா. சின்னத்துரை மாமாவுக்கு சரியா படிப்பு வரல. எட்டாம் வகுப்புக்கு மேல தாண்டல.

பள்ளிக்கூடம் போறத நிறுத்தின பின்னாடி, சின்னதுரை மாமா தாத்தாவுக்கு கொஞ்சம் கூடமாட உதவியா இருந்துச்சு. அடிக்கடி மாமாவுக்கும் தாத்தாவுக்கும் சண்டை வரும்.

தாத்தாவையும் அம்மாயியையும்  மதிக்காமல் எதிர்த்து எதிர்த்து பேசுவாரு சின்னதுரை மாமா.

பதினஞ்சு வயசு இருக்கும் பொழுது சின்னதுரை மாமா தாத்தாகிட்ட சண்டை போட்டுட்டு, மதுரைக்கு ஓட்டலுக்கு வேலைக்கு போயிடுச்சு சின்னத்துரை மாமா

எதிர்த்து எதிர்த்துப் பேசினாலும், தாத்தாவுக்கு தன்னோட ஒரே மகன்  ஊரை விட்டு போனது ரொம்ப வருத்தத்தைக் கொடுத்துச்சு. அம்மாயியும் அடிக்கடி சின்னத்துரை மாமாவ நினைச்சு  புலம்பிக்கிட்டே இருக்கும்

அப்புறம் சின்னத்துரை மாமா எப்பயாவது தான் ஊருக்கு வரும். தீபாவளி, பொங்கலுக்கு அவசியம் வந்துரும். அந்த நேரத்தில் தாத்தாவும் அம்மாயியும் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. 

கொஞ்ச நாள் ஒரு கடையில சம்பளத்துக்கு இருந்த சின்னத்துரை மாமா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பாதிச்சு ஆளுங்க பழக்கம் ஏற்பட்டு ஒரு ஹோட்டல் கடைய சொந்தமாக நடத்த ஆரம்பிச்சுட்டார்.

கடையிலேயும் நல்ல வியாபாரம் நடந்துச்சு. அப்புறம் தாத்தா உயிரோட இருந்தப்பவே நல்லவிதமா சின்னத்திரை மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.

மாமா கல்யாணத்துக்கு அப்புறம் தன்னுடைய மனைவியை மதுரைக்கே கூட்டிட்டு போயிட்டாரு.  மதுரையிலே சொந்தமாக வீடு வாங்கி இப்ப நல்லா வசதியாக இருக்கிறார்

கிளப்புக் கடைத் தாத்தாவும் அம்மாயியும் உசுரோடு இருந்த வரைக்கும், எப்பயாவது வந்துட்டு போவாரு.

அவங்க போனதுக்கப்புறம், வருசா வருசம் பொங்கலுக்குத் தன் மனைவி குழந்தைகளோடு எங்க ஊருக்கு வந்து, பூட்டியே இருக்கும் அவங்க சொந்த வீட்டை சுத்தம் பண்ணி பொங்கல் பண்டிகை கொண்டாடிட்டு, மதுரைக்கு போயிடுவாரு. 

கிளப்புக் கடை தாத்தாவைப் பற்றியும் சின்னதுரை மாமாவை பற்றியும் நினைத்துக் கொண்டே ஆட்டோவில் உட்கார்ந்திருந்த என்னிடம் ஆட்டோ ஓட்டுனர், “அண்ணே நீங்க சொன்ன ஓட்டல் இது தான்” என்று சொல்லவும், நினைவுகளிருந்து திரும்பி அவரிடம் ஆட்டோவுக்குரிய கட்டணத்தைக் கொடுத்து விட்டு, எனது கைப்பையை எடுத்துக் கொண்டு நின்று நிமிர்ந்து பார்த்தேன்

“ராமையா செட்டிநாடு உணவகம்” என்ற பெயர் பலகையைப் பார்த்ததும், மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கிளப்புக் கடை தாத்தா உசுரோட இருந்த வரைக்கும், மாமா தாத்தாவை மதிச்சு  நடந்ததோ இல்லையோ அவர் போன பிறகு அவர் பெயரிலேயே கடை வைத்தது எனக்கு ரொம்ப சந்தோசத்தைக் கொடுத்துச்சு.

சந்தோசத்தோட நான் ஓட்டலுக்கு உள்ளே நுழைந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் கல்லாவில் உட்கார்ந்து இருந்த சின்னத்துரை மாமா என்னைக் கண்டு கொண்டார்.

“அடடே வா மாப்பிள்ளை, என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம?”

“நல்லா இருக்கீங்களா மாமா? அக்கா, குழந்தைகள் நல்லா இருக்காங்களா?”

“நல்லா இருக்கேன் மாப்பிள. நீ எப்படி இருக்க? வீட்ல எப்படி எல்லாரும்  சௌக்கியமா இருக்காங்களா? அத்தை மாமா நல்லா இருக்காங்களா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா. பெரிய பாப்பாவுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். அதான் மாமாவையும் அக்காவையும் பாத்துக் கல்யாண பத்திரிக்கை வச்சுட்டு போகலாம்னு வந்தேன்”  

“அப்படியா… மகளுக்குக் கல்யாணமா, சந்தோசம் சந்தோசம். இதுக்காகவா இம்புட்டு தூரம் வந்தே. ஒரு போன் பண்ணி இருக்க கூடாதா? இப்பெல்லாம் யாரு பத்திரிக்கையை நேர்ல எடுத்துட்டு போறான்.

அவனவன் இருக்கிற இடத்திலேயே இருந்துக்கிட்டு வாட்ஸ்அப் அது இதுன்னு போன்லயே சொல்லி கல்யாணத்தை முடிச்சுட்டு போறான். நீ  தான் நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு வீணா அலஞ்சிக்கிட்டு இருக்கே”

“அது எப்படி மாமா நெருங்கிய உறவுகளுக்கும் மாமன் மச்சான்களுக்கும் நேரில் போய் அழைக்காமல் வீட்டிலிருந்துகிட்டே போன்ல சொல்றது முறையா? அது நாகரீகமா? நேர்ல போய் மரியாதையா கூப்பிடுறதுதானே மாமா நம்ம வழக்கம். பணம் வெத்தலை பாக்குடன் நேர்ல கொடுத்து அழைப்பது தானே முறை”

“அது சரி தான் மாப்ள. நீ எந்தக் காலத்துல இருக்க? பணம், பாக்கு, வெத்தலைனு பழச விடாம புடிச்சுகிட்டு இருக்க. சரி சரி. படிச்ச உன்கிட்ட எதிர்வாதம் பண்ண முடியுமா? இன்னும் பழைய பாரம்பரியத்தை அப்படியே கட்டிக் காத்துக் கொண்டு போகணும்னு நினைக்கிற, சந்தோசம்…சந்தோசம்”

“சரிங்க மாமா யார்கிட்டயாவது கடையைக் கொஞ்ச நேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வாங்க. வீட்டுக்குப் போயி அக்காவையும் உங்களையும் நேரில் நிக்க வச்சு நான் பத்திரிக்கை கொடுக்கணும்” என்று சொல்லி மாமாவின் பதிலுக்காகக் காத்திருந்தேன்.

“அட எதுக்கு மாப்பிள்ளை வீட்டுக்கெல்லாம் போயிக்கிட்டு. சும்மா இங்கேயே குடு. வாங்கிக்கிறேன். இதெல்லாம் என்ன பார்மாலிட்டி?”

“அப்படி சொல்லாதீங்க மாமா, அப்புறம் அம்மா என்ன கண்டபடி சத்தம் போடும். ஊருக்குக் கிளம்புறப்பவே  சொல்லுச்சு.

‘மாமாவா கடையில பார்த்தேன், ரோட்டுல பார்த்தேன், அப்படின்னு சொல்லி கொடுத்துட்டு வந்திராத.  வீட்டுக்கு போயி அக்காவ மாமாவ நேர்ல நிக்க வச்சு பணம் பாக்கோட  பத்திரிக்கை வைச்சு சொல்லிட்டு வா’னு சொல்லுச்சு.

நீங்க பேசாம வாங்க பக்கத்துல தானே வீடு இருக்குன்னு சொன்னீங்க. போயிட்டு உடனே வந்துரலாம்”

“இல்ல மாப்ள. நான் இங்கேயே பத்திரிக்கைய வாங்கிக்கிறேன். குடுத்துட்டு போ. ஒண்ணும் பார்மாலிடீஸ் வேண்டாம். நான் எதுவும் தப்பா  நினைக்க மாட்டேன். காலையில வியாபார நேரம். வீட்டுக்கு போயிட்டு  வந்தால் சரிப்பட்டு வராது. நீ குடுத்துட்டு போ மாப்ள” என்று மாமா பிடிவாதமாக வீட்டிற்கு வர மறுத்து  கூறினார்.

அதற்கு மேல் மாமாவை என்னால் கட்டாயப்படுத்த முடியவில்லை. கொண்டு வந்த பழங்கள் மற்றும் பூவைத் தட்டில் வைத்து ஐம்பத்தி ஒரு ரூபாய் பணம், வெத்தலை பாக்குடன் பத்திரிகையை மாமாவிடம் நீட்டினேன்.

மாமாவும்  தட்டை வாங்கிக்கொண்டு அதிலிருந்து பத்திரிக்கையை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்

“பதினொன்னாம் தேதி. வர்ற ஞாயிற்றுக்கிழமை வச்சிருக்க. லீவு நாள். அன்னைக்குத் தான் நம்ம கடையில வியாபாரம் கூடுதலா நடக்கும். சரி… சரி பாக்கலாம்” என்று சொன்னவர், தட்டில் வெற்றிலை பாக்குடன் வைத்துக் கொடுத்த பணத்தை ஒரு மரியாதைக்காகவாது எடுத்து அவர் பாக்கெட்டில் வைக்காமல், சாப்பிட்டவர்கள் கொடுக்கும் பில் பணத்தைக் கல்லாவில் போடுவது போல் எடுத்துக் கல்லாவில் போட்டு விட்டார்.

மாமாவின் அந்தச் செயல், எனக்குக் கொஞ்சம் மனக் சங்கடத்தைக் கொடுத்தது. பிறகு ஏதோ ஒரு நினைவில் மாமா அப்படிப் போட்டு விட்டார் என்று நினைத்துக் கொண்டு நின்றேன்.    

“அப்புறம் மாப்பிள வேற எங்கேயாவது பத்திரிகை வைக்க போகணுமா?”

“இல்ல மாமா எனக்கு இங்க மதுரையில வேற யார தெரியும் உங்களுக்கு மட்டும் தான் பத்திரிக்கை வைக்க வந்தேன். அப்படியே கிளம்ப  வேண்டியது தான் மாமா”

“சரி மாப்பிள நீ சாப்டியா? சாப்பிட்டிட்டு போறீயா?”

“பரவாயில்ல மாமா நான் கிளம்புறேன் மாமா”

“அட அது எப்படி? சாப்பிட்டுட்டு போ மாப்ள. நம்ம ஓட்டல் சாப்பாடு எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பாத்து சொல்லு” என்று கூறியவர் அங்கு நின்று கொண்டிருந்த சப்ளையரை அழைத்து, என்னைக் கூட்டிக்கொண்டு போயி சாப்பிடக் கொடுக்குமாறு கூறினார். 

நானும் டேபிளில் உட்கார்ந்து டிபனை சாப்பிட்டு, காபி குடித்து முடித்தேன். எனக்கு டிபன் வகைகளைப் பரிமாறியவர், பில்லைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி நான் மாமாவின் உறவுக்காரர் என்று தெரியாமல் கொடுத்துவிட்டார்.

நாமும் மாமாவிடம் கொஞ்சம் விளையாண்டு பார்ப்போம் என்று பில்லை எடுத்துக் கொண்டு, மாமா உட்கார்ந்திருந்த கல்லாவின் அருகே சென்று சிரித்துக் கொண்டே  மாமாவிடம் பில்லை நீட்டினேன்.

மாமாவும் பில்லை வாங்கிக் கொண்டு, “மாப்பிள டிபன் எப்படி நல்லா இருந்துச்சா?” என்று கேட்டுக் கொண்டே சற்று முகம் மாறி கோபத்துடன் சர்வரை பார்த்தார்

நான் நினைத்தது போல் “ஏண்டா என் உறவுக்காரருக்கு சாப்பிட்டதற்கு பில் கொடுத்தாய்?” என்று மாமா கோபப்படுவார் என்று நினைத்தது சரியாக இருந்தது. 

மாமாவும் சர்வரைப் பார்த்து, “ஏம்பா என் உறவுக்காரர் என்று சொல்லியும் ஏன் இப்படி பில் போட்ட?” என்று சற்று கோபமாகப் பேசினார்

மாமா அப்படி சப்ளையரைப் பார்த்துக் கேட்டதும், நான் வேக வேகமாக முந்திக் கொண்டு, “விடுங்க மாமா அவர் எல்லோருக்கும் கொடுப்பது போல் தெரியாமல் எனக்கும் சாப்பிட்டதற்கு பில்  கொடுத்து விட்டார். இதற்காக அவரைக் கோபித்துக் கொள்ள வேண்டாம்” என்றேன்.  

“நீ பேசாம இரு மாப்பிள்ள. உனக்கு ஒன்னும் தெரியாது. சொந்த ஊரிலிருந்து இம்புட்டு தூரம் என்னைத் தேடி பத்திரிக்க வைக்க வந்திருக்க. உனக்கு எல்லாருக்கும் மாதிரி பில் போடலாமா?”

“பரவாயில்ல மாமா விடுங்க. நான் ஒண்ணும் தப்பா நினைக்கல” 

“அது இல்ல மாப்பிள. நீங்க சாப்பிட்ட டிபனுக்கு பில் போட்டது சரி. ஒத்துக்குறேன். குடிச்ச காபிக்கும் சேத்து பில் போட்டுருக்கான். நீங்களும் நம்ம ஊர்க்காரங்களும் என்னப் பத்தி என்ன நினைப்பீங்க?

என்னடா இது, இந்தப் பய சின்னதுரையை மதிச்சு பத்திரிக்கை வைக்க நம்மூர்காரங்களும், சொந்தக்காரர்களும் போனா ஒரு காப்பிக்கூட கொடுக்காம குடிச்ச காபிக்கும் காசு வாங்கிட்டானாமே  அப்படின்னு என்னப் பத்தி தவறா நினைக்க மாட்டீங்களா?

நீ பேசாம சாப்பிட்ட டிபனுக்கு மட்டும் காசு கொடு மாப்பிள. காப்பிக்கு வேண்டாம். காபிக்கும் சேத்துக் காசு வாங்குனா அவ்வளவா நல்லா இருக்காது. நீ சாப்பிட்ட டிபனுக்கு மட்டும் காசு கொடு மாப்பிள்ளை போதும்”

நானும் சிரித்துக்கொண்டே என் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து மாமாவிடம் நீட்டினேன். மாமாவும் பணத்தைப் பெற்றுக் கல்லாவில் போட்டு மீதிச் சில்லறையை என்னிடம் கொடுத்தார்.

மாமாவிடம் இருந்து மீதிச் சில்லறையை வாங்கி நிமிர்ந்த பொழுது, அவருக்குப் பின்னால் இருந்த சுவற்றில் மாட்டியிருந்த  புகைப்படத்திலிருந்து கிளப்புக் கடை தாத்தா, என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்

 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

8 Comments

  1. அருமை யான பதிவு
    தலை முறைகள் மாற மாற
    மனித நேயம் குறைந்து கொண்டே வருகிறது

  2. கிளபபுக்கடை தாத்தா வைரமணி திருச்சி..
    அருமையான கதை.தாத்தாவை போல நிறைய்ய நல்ல உள்ளம் படைத்த தாத்தாக்கள் அந்த கால கட்டங்களில் இருந்தார்கள்.இன்று அதெல்லாம் மலை ஏறி போனாலும். சில மனிதாபி மானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    அருமை அழகான கதை எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

முகமூடி ஒன்று கழல்கிறது (சிறுகதை) – ✍ கே.என். இராமகிருஷ்ணன், சென்னை

சொந்தம் ஒரு தொடர்கதை (சிறுகதை) – ✍ நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை