in ,

முகமூடி ஒன்று கழல்கிறது (சிறுகதை) – ✍ கே.என். இராமகிருஷ்ணன், சென்னை

முகமூடி ஒன்று கழல்கிறது (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 110)

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு நகரின் வீதியில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கிய முன்னிரவு நேரம். சுற்றிக் கட்டிய வீட்டுத் தொகுப்பிலிருந்த ஒரு வீட்டில் பேசும் குரல்கள் நன்றாகவே வெளியே கேட்கின்றன

“அப்பா, தங்கச்சிக்கு வந்திருக்கிற நோய்க்கு இந்தத் தமிழ்நாட்டிலேயே சிறந்த டாக்டர், எங்க அண்ணன், அதான் பெரியப்பா மகன் தான் பெஸ்ட்”னு சொல்றாங்க.

“ஊரில உலகத்திலே டாக்டரே இல்லே, இவரு தான் இருக்காராமா. நாம்ப கோயம்புத்தூர் போலாம்மா சித்ரா” என்றார் சற்றே கோபத்துடன் சித்ராவின் தந்தை லட்சுமண கோபால்

“பெரியப்பா நல்லவருப்பா. அவரு மகன், அதான் என் அண்ணன் இன்னும் நல்லவருப்பா”

“அண்ணன் அண்ணன்னு சொல்றியே, உனக்கு யாரு அது சித்ரா? எங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த கீழ் ஜாதிப் பொண்ணு பெத்த பையனா?  உனக்கு அவங்கெல்லாம் நல்லவங்க உங்க  அப்பா தான் மோசம்கிறியா?”

“என்னங்க அண்ணியை இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்று இடையில் புகுந்தாள் சுந்தரா, சித்ராவின் அம்மா

“யாருடி அண்ணி, அந்த கீழ் ஜாதி மனுஷியா?  என் அண்ணனுக்குத் தான் அறிவில்லை, எனக்குமா?  நாம்ப என்ன ஜாதி, அவங்களை நாம தொடக் கூட மாட்டமே. அவங்க பையன் எப்படிக் கருப்பு பாத்தியா?  அவன் டாக்டராம், புகழ் வாய்ந்த டாக்டராம்.  அவரு இல்லேன்னா, உலகத்தில யாருமே இல்லியா என்ன?”

“ஏங்க நம்ப சுசித்ராவுக்கு அவசரமா ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க, இப்பப் போய் இப்படியெல்லாம் பேசறீங்களே. பாவம் அவ எப்படியெல்லாம் கஷ்டப்படறா? இந்த நேரத்தில ஜாதி அது இதுன்னு பேசிக்கிட்டு.  எல்லாரும் மனுஷங்க தாங்க”

“எனக்குத் தெரிந்த அருமையான கிளினிக் ஒன்னு கோவைல இருக்கு.  அங்கே எப்படியாப்பட்ட ஆப்பரேஷனையும் செய்ய டாக்டர்கள் இருக்காங்க,  பாரினில இருந்து கூட டாக்டர் வரவழைச்சுப் பண்ணுவாங்க.  ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன். சாயந்தரம் 4 மணிக்கு ப்ளைட், புறப்படுங்க”னு சொல்லிக் கொண்டே வேகமாக அங்கிருந்து நகர்ந்து செல்லத் தொடங்கினார் லட்சுமணன்

“அதில்லேப்பா,  தங்கச்சியைப் பாருங்கப்பா, வாடிப் போயிருக்கா. கோவைக்குப் போவதெல்லாம் கஷ்டம்ப்பா”

“உங்க பெரியப்பா பெரிய பணக்காரர். அவரு பெத்த பையன்.  உலகம் புகழும் டாக்டர், வசதியானவர்.  நான் ஒரு ஏழை மேலாளர் தானேம்மா” என்றார் லட்சுமணன் கிண்டலாக

“இல்லப்பா, பெரியப்பா வீட்ல எல்லாருமே எங்க மேலெல்லாம் ரொம்பப் பாசமா இருக்காங்கப்பா. நீங்க தான் ஒதுங்கி வந்துட்டீங்கப்பா”

“எப்ப எங்க அண்ணன் ஜாதி மாறி கல்யாணம் பண்ணினாரோ, அப்பவே அவர் என் அண்ணனில்லேன்னு முடிவு பண்ணிட்டேம்மா. அன்னையோட அண்ணன் தம்பி உறவையே அறுத்துட்டு வந்திட்டேம்மா.  மானம் முக்கியமில்லையா? இனிமே இதைப் பத்தியெல்லாம் என்கிட்ட பேசாத”

“அப்பா,  அது தான் அவங்களே ஒரு தடவை நம்ப வீட்டுக்கு வந்தாங்களே.  நீங்க தான் முகம் கொடுக்காம அவங்கள வெரட்டிட்டீங்க.  பாவம் அவங்க வருத்தத்தோட திரும்பிப் போனாங்க”

“அது முடிஞ்சு போன உறவும்மா”

“எதுங்க முடிஞ்சு போன உறவு?” என்றாள், அதுவரை பேசாமலிருந்த சித்ராவின் அம்மா

“எங்க அண்ணன் குடும்பத்தோட உறவு தான்”

“சகோதர உறவெல்லாம் முடியற உறவாங்க.  இன்னைக்கு அடிச்சுக்கலாம் நாளைக்குக் கூடிக்கலாம் என்கிற நிலை தானேங்க”

“நான் முடிவெடுத்துட்டேன், இதில நீ ஏன் குறுக்கே வரே”

“இவ்வளவு நாள் நான் ஏதாவது சொன்னேனாங்க.  உங்க வழியில நீங்க போங்கன்னு விட்டுட்டேன் தானே”

“அப்புறம் இப்போ மட்டும் இதென்ன கேள்வி?”

“நம்ப மக சுசித்ரா முடியாமப் படுத்திருக்கா.  உங்க அண்ணன் பையன் தான் பெஸ்ட் டாக்டருன்னு சொல்றாங்க.  அவரும் ரொம்ப நல்லவர் தானே.  மாட்டேன்னு சொல்ல மாட்டாருங்க”

“யாருக்கு வேணும் அவங்க உதவியெல்லாம், அதுக்கு வேறே ஆளப்பாரு”

“ஆபத்துக்குப் பாவமில்லனு நினைச்சாவது வாங்க, நாம இங்கயே அவரைப் போய்ப் பார்க்கலாங்க. என்னங்க கேவலம், அவங்க என்ன மூணாவது ஆட்களா.  நம்ப உறவுங்க”

“இதோ பாரு, அதெல்லாம் முடியாது.  நான் எடுத்த முடிவில மாற்றமில்ல.  வேற டாக்டர் கோவையில் இருக்காங்க, இன்னைக்கே  ப்ளைட் பிடிக்கிறோம் கோவை போறோம்.  மேலே ஏதும் பேசாதீங்க, புறப்படுங்க”

சொன்ன லட்சுமண கோபால் விருட்டென்று அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அப்பாவின் குணம் அறிந்த சித்ராவும்  அம்மா சுந்தராவும் செய்வதறியாது சோர்ந்த முகத்துடன் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்தனர்

சித்ராவின் தங்கை சுசித்ராவுக்குப் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது. ‘ப்ளைட்டுல போகப் போகிறோம்’ என்பதில் மகிழ்ச்சியிலிருந்தாள் அவள்

மிகவும் இளைத்திருந்தாள்.  அவளுக்கு அவள் நிலை சொல்லப்படாததால், அவளின் நோய் பற்றிய பயமில்லாதிருந்தாள்

ப்ளைட் பிடித்து கோவையை அடைந்தார்கள். கோவையை அடைந்து ப்ளைட்டை விட்டு இறங்கி நடக்கும் போதே சுசித்ராவைத் தாங்கிப் பிடித்தும்,  சில இடங்களில் சித்ரா அவளைத் தூக்கிக் கொண்டும் செல்ல வேண்டியிருந்தது.  

இந்தக் கஷ்டத்தையெல்லாம் லட்சுமண கோபாலும் உணர்ந்தார் என்றாலும், அவருடைய வீம்பு தான் இதிலிருந்து அவரைத் தள்ளியிருக்கச் செய்தது

விமான நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு சென்றார்கள். முன்பே புக் செய்திருந்தபடியால், சசித்ராவுக்கு ஒரு அறையும், மற்றவர்களுக்கு ஒரு அறையுமாகத் தந்தார்கள்

அவர்களுடைய வீட்டை விட அறைகள் மிகவும் வசதியாகவும் அருமையாகவும் இருந்தன தான்.  ஆனால் சுசித்ரா மட்டும் தான் அதை ரசித்தாள். மற்றவர் முகங்களில் வேற்று நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு தான்

டாக்டர்கள் இருவர் அவளைப் பரிசோதித்தார்கள். இன்றும் நாளையுமாக டெஸ்ட்கள் எடுப்போம் என்றும், அதற்கு அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்யப்படுமென்றும் சொன்னார்கள்

அந்த டாக்டர்களில் ஒருவர் இளையவராகவும் அனுபவமில்லாதவராகவும் இருந்ததைப் பார்த்த சுந்தராவும், சித்ராவும் கவலையில் ஆழ்ந்தனர்

யாரும் யாரிடமும் பேசாமல் சென்ற அன்று, டெஸ்ட்கள் மட்டும் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.  அடுத்த நாளும் இரண்டொரு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டன.  பாவம் சுசித்ரா.  எல்லாவற்றையும் பெரியவர்களைப் போல் தாங்கிக் கொண்டிருந்தாள்

சித்ரா கல்லூரியில் பொறியியலில் இரண்டாம் ஆண்டும், சுசித்ரா பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பும் படிக்கும் மாணவிகள்.  சுந்தராவும் மாலை நேரப் பணியாக ட்யூஷன் சொல்லிக் கொடுக்கிறாள்.

இருவர் வருமானத்தில் போதும் போதாமல் மருத்துவச் செலவுகளோடு தடுமாறிக் கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பம் தான் அது

லட்சுமண கோபாலின் அண்ணன் ராம்கோபாலின் மகன் ராஜேஷ், ஒரு புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். வெளிநாடுகளில் கூட அவரை வரவழைத்துக் கொள்வார்கள்.  அவருடைய தேதி கிடைப்பதே குதிரைக் கொம்பென்பார்கள்.  

ராம் லட்சுமணர்கள் இருவருக்கும் ஒரு தங்கை, திருமணமாகி உடனே ஒரு எதிர்பாராத விபத்தில் கணவனை இழந்தாள்.  ராம்கோபால் அவளைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.

விதி அவளைத் தொடர்ந்து புற்று நோயிலும் அழுத்தியது. மருந்துகளின் பலனால் அவள் ஆயுசைத் தள்ளிப் போடத் தான் முடிந்தது. 

நோய் முற்றிய நிலையில் வீட்டிலும் மருத்துவமனையிலுமாக சிகிச்சை, இடையில் மகன் ராஜேசும் தன் திறமையில் வலி போக்கும் மருத்துவம் செய்கிறான். வேறு செய்வதற்கில்லா திக்கற்ற நிலை

கோவை கிளினிக்கில் இரண்டாவது நாள் இரவு லட்சுமணகோபாலும் சுந்தராவும் சித்ராவும் தூங்க நேரமானதால், அடுத்த நாள் காலையில் எழுந்திருக்க நேரமானது.

காலை 6 மணிக்கு சுசித்ராவை அறுவை சிகிச்சைக்கு அறுவை தியேட்டருக்குக் அழைத்துக் கொண்டு செல்ல ஒரு நர்ஸ் வந்த போது தான், மூவரும் விருட்டென்று எழுந்து புறப்பட்டார்கள்.

சுசித்ராவை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லும் நர்ஸ், “கூட யாரும் வராதீர்கள்.  உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள். அதற்குள் தியேட்டரிலிருந்து சுசித்ராவைக் கொண்டு வந்து விடுவோம்” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டுச் சென்றாள்

“என்னப்பா இது, தியேட்டர் வரையும் நாம் போகலாமே, ஏன் கூடாது என்கிறார்கள்?”

“சித்ரா நாம் பல் கூட விளக்கல.  அவளுக்குத் தொற்று ஏதும் தொற்றக் கூடாது என்று தான் நர்ஸ் அப்படி சொல்லியிருப்பாள்” என்றாள் சுந்தரா

“நான் இப்போதே போய்க் கேட்கிறேன்.  இது என்ன நடைமுறையென்று” துள்ளினார் லட்சுமணன் அந்தச் சூழ்நிலையிலும்

“அப்பா, தயவு செய்து இங்கே ஏதும் சத்தம் போடாதீர்கள். பொறுமையாய் இருங்கள்”

“ஆமாம் நம் கையெழுத்து” என்று சொல்லும் போதே, போன அதே நர்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தாள்

“சார், இதில் ஒரு கையெழுத்துப் போடுங்கள்”

“ஏம்மா, நாங்க தியேட்டர் வரைக் கூட வரக் கூடாதாம்மா?” என்றாள் சுந்தரா

“இல்லைம்மா, இங்கே இப்போது கொரானா பயம் இருப்பதால் யாரையும் நாங்கள் தியேட்டர் பக்கம் வர விடுவதில்லை.  நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்.  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றவள், கையெழுத்திட்ட படிவத்தைப் பெற்றுக் கொண்டு  அங்கிருந்து நகர்ந்தாள்

அவர்கள் பல் துலக்கிய பின்னர் மீண்டும் அறையின் வெளியே வந்த போது ஒரு நர்ஸ் அறுவை தியேட்டரிலிருந்து வருவதைப் பார்த்தனர்

லட்சுமணன் ஓடிச் சென்று, “என்னம்மா, அறுவை சிகிச்சை முடிந்து விட்டதா?” என்றார் பரபரப்பாக

“சுசித்ரா என்ற பெண்ணுக்குத் தானே?  ஆகிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு டாக்டர் கூட சற்று முன்னர் தான் வந்தார். அவர்தான் ஆபரேஷன் செய்யப் போகிறார்” என்றாள் அவள்

“நான் அப்போதே சொன்னேனல்லவா, இந்த மருத்துவமனை சிறப்பானது.  சிறப்பான வைத்தியம் செய்வார்கள் என்றார்கள். சரி தான், இனி பயப்பட வேண்டாம்” என்று மனைவியையும் மகளையும் பார்த்து ஆறுதலாகச் சொன்னார் லட்சுமணன்

இப்போது மற்றொரு நர்ஸ் தியேட்டரிலிருந்து ஏதோ உபகரணங்களோடு ஓடிக் கொண்டிருந்தாள். அவளையும் கேட்டனர்

“இந்த டாக்டர் மட்டும் இப்போது வராமலிருந்தாரானால் உங்கள் பெண்ணைக் காப்பாற்றவே முடியாது போயிருக்கும்” என்று கூறி விட்டு உபகரணங்களோடு மீண்டும் தியேட்டருக்கே ஓடினாள் நர்ஸ்

சற்று நேரம் கழிந்ததும் நேற்றைக்கும் முந்தைய நாள் வந்த அந்த இரண்டு டாக்டர்களும் வெளியே வந்தார்கள்.  

இவர்களிடம் வந்தவர்கள், “ஆபரேஷன் சக்சஸ்,  இப்ப உங்கள் பெண்ணை வெளியே கொண்டு வந்து விடுவோம்.  மயக்கம் தெளிய 1 மணி நேரமாகலாம்.  அதன் பின்னர் அவளிடம் நீங்கள் பேசக் கூடச் செய்யலாம்.  நாளைக்கு மறுநாள் கூட நீங்கள் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம்” என்றார்கள்

“யாரோ புதிய பாரின் டாக்டர் வந்தார் என்றார்களே” என்று மெதுவாக இழுத்தார் லட்சுமணன்

“ஆமாம்”

“அவரை நாங்கள் பார்த்து நன்றி சொல்ல வேண்டுமே” என்றார்கள் மூவரும்

“அவர் மிகவும் பிசியானவர்.  பாரினிலிருந்து இங்கு வந்தவர் ஓய்வெடுக்கக் கூட இல்லாது இன்று சென்னைக்குச் செல்கிறார் அவர். இப்போது தான் புறப்பட்டுச் சென்றார்.  இந்நேரம் அவர் ப்ளைட்டிலிருப்பார்” என்றார்கள் அவர்கள்

“அவர் இரண்டு நாள் கழித்து எங்கிருப்பார் என்றாவது சொல்கிறீர்களா?” என்றார்கள் ஏக்கமாக

“அவர் எங்கிருப்பார் என்பது அவ்வப்போது தான் சொல்ல முடியும். நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் போது நான் அப்போதைய முகவரி தருகிறேன்” என்றார் மூத்த டாக்டர்

சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்ட்ரெச்சரில் சுசித்ராவைக் கொண்டு வந்தார்கள் இரண்டு நர்ஸ்கள்.  அவளுடைய அறையிலிருந்த படுக்கையில் விட்டு க்ளுக்கோஸ் குப்பியையும் பொருத்தி,  கொடுக்க வேண்டிய மாத்திரைகளையும் கொடுத்துச் சென்றனர்

செல்லுமுன், “இன்னும் அரை மணி நேரம் போனதும் மயக்கம் தெளியும்” என்றார்கள்

அவர்களின் கூற்றுபடியே அரைமணி நேரம் ஆனதும் சுசித்ரா கண் விழித்துப் பார்த்தாள்.  எல்லோரையும் கண்டதும் முகத்தில் மலர்ச்சி.

“என்னம்மா இப்போது எப்படியிருக்கிறது?  வலியேதும் இருக்கிறதா?” எனக் கேட்டாள் சுந்தரா

“இப்ப வலி ஒன்னும் தெரியலைம்மா, கொஞ்சம் ப்ரியா இருக்கிற மாதிரி தான் இருக்கு. நீங்க சாப்பிடுங்க” என அவள் பேசினாள்

அவள் முகத்தில் முன்பிருந்த வலியின் சின்னம் இல்லாதிருந்தது மூவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது

லட்சுமணன் மூவருக்கும் உணவு வாங்கிவந்தார்.  அன்று சுசித்ராவுக்கு மருத்துவமனையிலேயே உணவு தந்தார்கள்.  மருந்தும் ஊசிகளும் இட்டார்கள்.

அடுத்த நாள் காலை அந்த டாக்டர்கள் வந்து பார்த்தார்கள்.  பரிசோதித்துப் பார்த்ததில் இருவருக்கும் திருப்தி என்பது அவர்களின் முகங்களில் தெரிந்தது. 

மூத்தவர் சொன்னார், “உங்கள் பெண் இன்னும் இரண்டு வாரங்களில் முன்பு போல் ஆகி விடுவாள்.  நாங்கள் தரும் மருந்துகளையும் சொல்லும் உணவுகளையும் அவளுக்குக் கொடுத்து வாருங்கள்”

“இன்று போகிறீர்களா?  நாளையா?” என்றார் சின்னவர்

“இன்று இரவு 7 மணிக்கு ஒரு ப்ளைட் இருக்கிறது, இடமும் இருக்கிறது.  அதில் போகலாமா  நாங்கள்?” என்றார் தயங்கியவாறே லட்சுமணன்

“ஓ போகலாமே” என்றார் மூத்தவர்

“சார் அந்தப் பாரின் டாக்டர் சென்னையிலிருப்பாரா?  அவரை சந்திக்க முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்களேன்” என்று பவ்யமாய்க் கேட்டார் லட்சுமணன்

“அவருடைய உறவின அம்மா இறக்கும் தருவாயிலிருக்கிறார்களாம்.  இன்று அவர் காலையில் அங்கு சென்றதும் எங்களுக்கு இதை அலைபேசியில் சொன்னார்.  இன்று முழுவதும் அங்கு தானிருப்பாராம்.  அவர்களின் இறப்பு உறுதியானதை அவராலும் தடுக்க முடியாதாம்.  இன்று இரவுக்குள் ஆகலாம்” என்றும் சொன்னார் அவர்

“இந்த நிலையிலும் உங்கள் மகளின் ஆப்பரேஷனுக்கு அவர் வந்தது எங்களுக்கே ஆச்சரியமாகத்தானிருந்தது” என்றார் இளையவர்

“பாரின் டாக்டர் பீஸ் எவ்வளவு சார்?” என்றார் சற்றே பயத்தோடு லட்சுமணன்

“அவர் எனக்கு பீஸ் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  அதனால் அவர் பீஸ் போடவில்லை.  அதனால் ஒரு மிகப் பெரிய தொகை உங்களுக்கு சேவிங் தான்” என்றார் இளையவர்

திகைத்து நின்ற லட்சுமணனைப் பார்த்த அவர், “சில நேரங்களில் சிலருக்கு உதவும் எண்ணம் அடி மனதில் வரும்.  அதற்கான காரண காரியங்களை அலசக் கூடாது” என்றார்

“உங்கள் இருவருக்கும் மருத்துவமனைக்கும் மிக்க நன்றி” என்று மூவரும் கோரசாகச் சொன்னார்கள்.  இதில் சுசித்ராவும் சேர்ந்து கொண்டாள்

ப்ளைட்டில் சென்னை அடைந்ததும் வீட்டிற்குச்  சென்றார்கள். சித்ராவின் மனதில் மட்டும் ஏதோ சந்தேக அலை அடித்துக் கொண்டிருந்தது

“அப்பா,  அந்த டாக்டருக்கு நன்றி சொல்லனும்னு சொன்னீங்களே?” என்றாள் அவள் அப்பாவிடம் என அப்பாவிடம் நினைவூட்டினாள்

“ஆமாம் அம்மா, இப்போது மணி 9 ஆகிவிட்டதே.  அந்த டாக்டர் பேர் என்ன சொன்னார்கள் கோவை டாக்டர்கள்?”

“கோபாலரத்தினம் என்று டைரக்டரியில் பார்த்தேன்.  மந்தைவெளியில் இருக்கிறது அவருடைய கிளினிக்.  போன் நெம்பர் தந்திருக்கிறார்கள். பேசிப் பாருங்கள் அப்பா” என்றாள் சித்ரா

போன் செய்த போது அது சற்று நேரம் அடித்ததும், “டாக்டருங்களா? அவங்க உறவுல யாரோ இறந்துட்டாங்க, அதனால அவர் இல்லங்க” என்றார் ஒரு மனிதர்

“டாக்டர் நாளைக்கு இருப்பாரான்னு கேட்டுச் சொல்றீங்களா?”

“நான் அவரோட மாமா தாங்க. நாளைக்கு சாயங்காலம் தான் அவர் லண்டன் போகிறார்.  ஏனுங்க?” என்றார் அவர்

“அவர்கிட்ட கொஞ்சம் பேசணுங்க”

“உங்க பேரென்ன சொல்லுங்க, நான் சொல்லிடறேன்.  சரின்னாருன்னா நானே காலையில உங்களுக்குப் போனில் சொல்லுறேன்”

“சரிங்க”

அடுத்த நாள் காலையில் லட்சுமணன் எழுந்திருப்பதற்கு முன்பாகவே சித்ரா போனோடு ஓடி வந்தாள். 

“டாக்டர் வீட்டிலிருந்து தான் போன்”

ஆவலாக வாங்கியவரிடம் நேற்றுப் பேசியவர், “நீங்க எப்ப வேணாலும் வாங்க, 9 மணிக்கு மேலனு சொன்னாருங்க டாக்டர். உங்க வீட்ல எல்லோரையும் பார்க்கணும்னும் சொன்னாருங்க” என்றார் அவர்

சந்தேக முடிச்சு சற்றே அவிழ்ந்தது சித்ராவுக்கு

காலை டிபன் முடித்ததும் சுசித்ரா உட்படப் எல்லோரும் புறப்பட்டனர்

சித்ராவுக்கு அந்த வீட்டை நெருங்க நெருங்க, முடிச்சு முழுவதுமாக அவிழ்வது போலிருந்தது.

வாசலிலேயே ராம்கோபாலும் ரத்தினமும் இவர்களை வரவேற்க நின்றிருந்தார்கள். வெறுப்பாக, மெதுவாக எல்லோருக்கும் பின்னால் சென்றார் லட்சுமணன்

“வாங்க தங்கச்சி, வாம்மா சித்ரா”  என அவர்களை அன்பாக வரவேற்றார் ரத்தினம்மாள்

“நாங்க டாக்டரைத் தானே பார்க்க வந்தோம்” என முணுமுணுத்தார் லட்சுமணன்

“நாம இப்ப டாக்டரோட அம்மா அப்பாவைத் தான் பார்க்கிறோம்” என்றாள் சித்ரா.

“என்னடி சொல்கிறாய் நீ?” என அதட்டினார் லட்சுமணன்

“சித்தப்பா வாங்க” என வரவேற்றார் டாக்டர் கோபாலரத்தினம்

மயக்க நிலையிலேயே சென்றார் லட்சுமணன். கூடத்தில் உட்கார்ந்ததும் தான் அவருக்கு சுயநினைவே வந்தது.

சுசித்ரா கோபாலரத்தினத்தைப் பார்த்ததும் “டாக்டர்” என்றாள்.

“இல்லை சுசித்ரா, உனக்கும் சித்ராவுக்கும் நான் அண்ணன்” என்றார் கோபாலரத்தினம்

“அண்ணா” என்றார்கள் அவர்கள் இருவருமே அன்போடு. பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இருவருமாய்க் தழுவிக் கொண்டார்கள். 

சுந்தரா ஏற்கனவே ரத்தினம்மாவின் பக்கத்தில் தானிருந்தாள்.  லட்சுமணன் தான் தனியாக உட்கார்ந்திருந்தார்

ராம்கோபால் அவரருகில் சென்று, “தம்பி, இன்னுமா கோபம்? இந்தியாவிலுள்ள நாம் எல்லோருமே ஒரே தொப்புள் கொடி உறவுகள் தானடா.  மனிதர்களில் வேறுபாடுகள் பார்க்காதே.  உறவுகள் என்றும் உறவுகள் தான்.  பாரதி பாட்டு உனக்கும் தெரியும் தானே?” என்றார்

“ஜாதி மதங்களைப் பாரோம்

ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்- தம்முள்

சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?”

“சித்தப்பா” என்றழைத்து டாக்டர் கோபாலரத்தினமும் அவரிடம் ஆசி வாங்கினார்

கொஞ்சம் கொஞ்சமாக லட்சுமணனின் சாதி வேறுபாடு என்னும் முகமூடி அங்கே கழன்று கொண்டிருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

ஊரடங்கும் நேரம் (சிறுகதை) – ✍ அப்புசிவா, சேலம்

கிளப்புக் கடை தாத்தா (சிறுகதை) – ✍ வைரமணி, திருச்சி