sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

ஊரடங்கும் நேரம் (சிறுகதை) – ✍ அப்புசிவா, சேலம்

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 109)

“கொஞ்சம் சவுண்டு வைடீ…” சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள் பாரதி

“போதும்மா… டிஸ்டர்ப்பா இருக்கு…. இந்த சத்தம் கேட்கலையா உனக்கு…” என்று பதில் குரலை கொஞ்சம் உயர்த்திக் கொடுத்தாள் ப்ரியா

”சொன்ன பேச்சை கேட்குதா பாரேன்… லூஸு..லூஸூ… வைடி சீக்கிரம்… என்னா நியூஸ்னு நானே பதறி போயிருக்கேன்”

சலிப்பாக எழுந்த ப்ரியா டிவி சத்தத்தை கொஞ்சம் கூட்டினாள். அதில் வணக்கம் சொல்ல அவளும் சத்தமில்லாமல் வணக்கம் சொன்னாள்

பின், ‘இன்றைய கொரோனா செய்திகள் ‘ என்று பட்டியலை வாசிக்க… தினந்தோறும் பழகிய தொனியில் அவளும் கூடவே அதே போல் இம்மி பிசகாமல் சத்தமில்லாமல் ஒப்பிக்க ஆரம்பித்தாள்

இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்ததாக அந்த பெண்மணி ஒருமாதிரியான முறைத்த முகத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, கையில் மாவு கரண்டியுடன் டிவி பக்கத்தில் வந்த, பாரதி இருண்ட முகத்துடன், “ போச்சுடீ… பொழப்பே போச்சு… இந்த மாசமும் பாதி வேலை தான் தருவானுங்க. சிறுசுங்க வந்தா போதும், சம்பளம் கம்மியா தரலாம்னு நினைக்கிறானுங்களோ என்னவோ” என்று புலம்ப ஆரம்பித்தாள். 

பாரதி பக்கத்தில் இருக்கும் கிழங்கு மில்லுக்கு அதிகாலை ஆறுமணிக்கு வேலைக்கு சென்றால், சாயந்திரம் நான்கைந்து மணிக்கெல்லாம் வந்துவிடுவாள். 

தினந்தோறும் கூலி இருநூற்றைம்பது ரூபாய். வந்து சாயந்திர இட்லி கடைக்கு தேவையான வேலைகளை செய்ய ஆரம்பிப்பாள்

மடமடவென்று சாம்பார் கூட்டி வைத்து தேங்காய் சட்னி, கார சட்னி  ரெடி செய்து விட்டு, மறுநாள் தேவைக்கான மாவு அரைத்து, விளக்கு வைக்கும் போது அடுப்பை ஏற்றுவாள்

இட்லி, தோசை… இன்னொரு பக்கம் பணியாரம். ஏழு மணிக்கு சூடு பிடிக்கும் வியாபாரம் எட்டரை வரை இருக்கும்

தினம் நூறு முதல் சில சமயம் இருநூறு வரை லாபம் கிடைக்கும். ஹோட்டல்களில் ஒருவர் சாப்பிடும் விலையில் நான்கு பேர் சாப்பிடலாமென்பதால், ரூம் எடுத்து தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் முதல்… அலுப்புடன் இருக்கும் தெருவாசிகள் வரை ரெகுலர் வாடிக்கையாளர்கள். 

சட்னி செய்யும் வரை ப்ரியாவின் உதவி தேவைப்படும். அதன் பின் ப்ரியா தனது ப்ளஸ் டூ புத்தகங்களில் மூழ்கி விடுவாள். முடித்தவுடன் அம்மா  பாத்திரம் கழுவ கொஞ்சம் ஒத்தாசை செய்வாள்

பசங்களின் வருகை இருப்பதால் வியாபார நேரங்களில் பாரதி, ப்ரியாவை அங்கே ஒண்ட விடுவதில்லை. பின் மீதங்களை சாப்பிட்டு அசரும் நேரம் அம்மா சொல்லச் சொல்ல கடன் விபரங்களை எழுத வேண்டும்

“சுமதி நேத்து காசு கொடுத்துட்டா, அதை அடிச்சுடு. அந்த சின்னவனா வருவானே செந்தில், அவன் பேர்ல இருபது… அவனுக்கு கணக்கு இருநூத்து பத்து ஆகுது. இந்த மாச கரண்டு பில்லுக்கு வந்துரும். செவப்பு சட்டை, ம்…ராஜா… இன்னிக்கு முப்பத்திரெண்டு ரூபா. நல்லா சாப்டுறான், டோட்டல் பாத்துக்கோ. அவனுக்கு ஏறுது கணக்கு, புதுசு வேற, தருவானோ என்னமோ பயமா இருக்கு” என்று மனப்பாடமாக அன்றைய முழு வரவு செலவும் ஒப்பிப்பாள்

அவள் சொல்வதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே,  அவளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து எழுதி முடிப்பாள் ப்ரியா

“அவன் நல்ல பையன் போல தான் தெரியுதும்மா… பாத்தா கபடம் இல்லாத போல இருக்கு, நீதான் வீணா பயப்படறே”

“ம்ம்… ஆமா…? நீ எப்படி அவன பாத்த…?… வெளிய உன்ன வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேனில்ல… “ 

“அலோவ்,.. படிச்சிட்டிருந்தவள ‘அந்த எண்ணெய கொஞ்சம் எடுத்துவா’….ன்னு கூப்ட்டது நீங்க தான் மேடம்…”

“சரி விடு… இனி நான் கூப்ட்டாலும் வராதே… “ என்று கண்ணயர்வாள் பாரதி. 

மகள் வளரவளர பாரதியின் மனதில் ஒருவிதமான பயம் சூழ்கொண்டது. தன்னைவிட அவள் நல்ல சூட்டிகை, அதோடு கஷ்டம் தெரிந்த மெச்சூர் ஆன பெண் தான் என்பது மனதில் இருந்தாலும்… வெளிசூழலும்… கேள்விப்படும் செய்திகளும் பலசமயம் கருக்கென்றிருப்பதை தடுக்க முடியவில்லை

இந்த வயது பெண்களின் மனதில் ஏற்படும் மாறுதல்களை நெருங்கிய உறவால் கூட கண்டுபிடிக்கமுடியாதென்பது பாரதியின் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்

அது ஒரு சின்ன முள் போல அவள் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் சுவடு கூட ப்ரியாவின் படிப்பை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்

மில்லில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்ட… இட்லி கடை லாபத்தை தனியே ப்ரியாவின் எதிர்காலத்துக்கு சீட்டுகளிலும், போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பிலும் போட்டு வருகிறாள். 

இந்த வட்டத்தை, கடந்த ஒருமாத ஊரடங்கு சிதைத்துவிட்டதை பாரதியால் உணரமுடிந்தது. ஆரம்பத்தில் ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்றே நம்பினாள். 

சராசரி வாழ்க்கையும் சாதாரணமாகவே கடந்தது. ஆனால் தொடர்ந்த காலங்களில்… இரவு மாவு பாதி மீதியாக… லேசான பயம் வந்தது. 

அதை ஒட்டி மில் வேலையும் வாரத்தில் ஓரிரு நாட்களாய் குறைந்து… சில சமயம் வேலையே இல்லை என்ற நிலையில் போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பில் கை வைக்க , அந்த பணத்தை எண்ண எண்ண தன்னைமீறி கண்கலங்குவதையும், ஒரு பயபந்து உருண்டு தொண்டையை அடைப்பதையும் பாரதியால் உணர முடிந்தது

எனினும் இதில் ஒருதுளிகூட ப்ரியாவின் கவனத்துக்கு சென்று விடாமல் பார்த்துக்கொண்டாள். அவள் நிம்மதியாய் படிப்பதில் கவனம் செலுத்தினால் போதும் என்பதே பாரதியின் குறிக்கோளாக இருந்தது. 

எனினும் சமீபமாய் பல சமயங்களில் தேவையில்லாத பயம், எதிர்காலத்தை நினைத்து கவலை என ஒரு மாதிரியான குழப்ப மனநிலை அடிக்கடி தோன்றுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை

“சரிடீ… உலகத்துக்கே என்னவோ அது நமக்கு…. பாத்துக்கலாம் விடு… நாளைக்கு வேலை இருக்குன்னு சுமதி சொன்னா… சமாளிப்போம்… “ என்றாள் பாரதி.  

அவளுக்கு இன்றைய இட்லி கடையை ஆரம்பிக்க வேண்டிய நேரம். கொஞ்சம் கவனமாகத் தான் செய்ய வேண்டியிருக்கிறது. சந்துக்குள் வீடு இருப்பதால் பெரும்பாலும  பிரச்சினையில்லை

சில சமயம் போலீஸ்காரர்கள் ரவுண்ட்ஸ் வரும் போது கும்பல் சேராமல் பார்த்துக் கொண்டால் போதும்

“ஜாக்ரதையா பண்ணுங்கம்மா…” என்று குரல் கொடுத்து விட்டு, சில பணியாரங்களை சாப்பிட்டு தவறாமல் காசு கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்

“இப்படி கஷ்டப்படுணுமாம்மா… கொஞ்சம் நாள் லீவு விட்றேன்… வேலைக்கும் இட்லி கடைக்கும்” என்பாள் ப்ரியா. 

“உனக்கு புரியாதுடி… சும்மா இருக்க கத்துகிட்டா.. பழைய வேகம் குறைஞ்சிடும்…ஏதோ ஒரு வேலையை இழுத்துபோட்டுக்கணும்.. அதில்லாம என்னால எதுவும் செய்யாம ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது “ 

“அட..  சும்மா இருக்க வேணாம்… வீட்டை க்ளீன் பண்ணு… எனக்கு படிக்க ஹெல்ப் பண்ணு… ஒரு மாசம்தானே… “ என்று அம்மாவின் தாவாயை தொட்டு கொஞ்சினாள் ப்ரியா. 

“உட்கார்ந்து சாப்பிட… உன்னை ஒரு வயசுல எங்கிட்ட விட்டுட்டு ஓடிப்போன உன் அப்பன் சம்பாதிச்சு வச்சுட்டு போகலையேடி…. “ என்று சொல்லிவிட்டு சட்டென்று தன் நாக்கை கடித்துக் கொண்டாள் பாரதி

குழந்தையிடம் தன் மனத்தாங்கலை வெளிப்படுத்திவிட்டோமோவென அவள் மனதில் திடுக்கிடல் ஏற்பட்டது. இயல்பாக கவனிப்பது போல மெதுவாக நிமிர்ந்து ப்ரியாவை பார்த்தாள். 

நல்லவேளையாக  பாரதி சொன்னதை ப்ரியா  ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவளது மாறாத இயல்பான சிரிப்புடன் கையெடுத்து கும்பிட்டாள் ப்ரியா. 

“தாயே… நான் இந்த விளையாட்டுக்கு வரல… போ… வேணாம்னு சொல்லல… மாஸ்க் போடற… இந்த சானிடைசர் வாங்கிக்கோ… பத்ரமா போயிட்டுவர நான் நிம்மதியா இருப்பேனில்ல… “ என்று பெரிய மனுஷி போல பேசினாள் ப்ரியா. 

“முப்பது முப்பத்தஞ்சு வயசாச்சு… அதெல்லாம் இப்ப தேவையாடீ… உனக்கு கொழுப்பு தான்… “ என்றாள் பாரதி. 

“தெய்வமே… அது மேக்கப் பொருள் இல்ல… ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை கையில போட்டு தடவிக்க… கிருமி ஒட்டாது… “ என்று சிரித்தாள் ப்ரியா. 

“எல்லாம் அங்க சோப்பு… தண்ணி இருக்கு… போதும் போ…. “ என்று எழுந்தாள் பாரதி. 

“சரிமா… நீ வேலையைப்பாரு… நான் லட்சுமி வீடு வரை போயிட்டு..  என் சயின்ஸ் நோட்டு வாங்கி வந்திடறேன். “ என்று கிளம்ப எத்தனித்தாள் ப்ரியா. 

“சரி… முகமூடி போட்டுக்கோ… போனமா… வெளிய நின்னு வாங்கினமா வந்தமான்னு இருக்கணும்… அவகிட்ட அரட்டை அடிச்சுட்டு இருக்காதே… சங்கு ஊதறதுக்குள்ள வந்திடு “ என்ற பாரதி… தன் வேலைகளில் மூழ்க ஆரம்பித்தாள்

எட்டு மணிக்கு சரியாக முனிசிபல் சங்கு ஊதும். மாஸ்க் அணிந்து தன் சைக்கிளில் ப்ரியா கிளம்பினாள். 

அன்று வியாபாரம் நல்லபடியாகவே இருந்தது. தெருப் பெண்களின் விவாத மேடையாக பாரதியின் இட்லி கடை இருப்பதால் கொரோனா ஊரடங்கு பற்றி… விலைவாசியை பற்றி… வரும் காலங்களில் எப்படியெப்படி மாறும் என்பதைப் பற்றி… அவரவருக்கு தெரிந்த வகையில் பேசிக் கொண்டிருந்தனர்

கல்லூரி பசங்களும் ஊருக்கு செல்ல விருப்பதால் கடன்களை ஒப்படைத்து விட்டு வயிறு நிரம்ப சாப்பிட்டனர். பாரதி பயந்த அந்த ராஜா, நண்பர்களிடம் சீட்டு எழுதி சரியாக கணக்கை கொடுத்து விட்டிருந்தான்

அவனுக்கு வேலை இருப்பதாக பார்சலில் அந்த நண்பர்கள் இட்லி கட்டிக் கொண்டனர். மாவு மீதமின்றி எட்டுமணிக்கெல்லாம் தீர்ந்ததோடல்லாமல் அதன் பின் வந்தவர்கள் ஏமாற்றமாய் திரும்பிய நிகழ்வும் நடந்தது. 

முழு மனதிருப்தியுடன் அடுப்பை அணைத்து பாத்திரங்களை எடுத்து வைத்து கழுவ ப்ரியாவை கூப்பிட எத்தனிக்கும் போது தான், அவள் இன்னமும் வராததை உணர்ந்தாள் பாரதி 

‘லூஸ்புடிச்ச கழுத… அரட்டைன்னா உட்கார்ந்துடுவா… சொல்லிதான அனுப்பினேன்… வரட்டும் … வாய்க்கு சூடு வைக்கிறேன்… ‘ என்று மனதில் நினைத்தபடி… அப்பாடாவென்று சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் பாரதி. 

எப்போதும் வேலைகளை பிரித்துக் கொள்வதால், பாத்திரம் தனியே கழுவலாமென்ற நினைப்பே பெரும் மலைப்பாய் இருந்தது

வரட்டுமென அமர்ந்து ப்ரியா எழுதிய நோட்டை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தாள். மணிமணியான கையெழுத்து… பார்க்கப்பார்க்க பெருமையாய் இருந்தது. 

இந்த தங்கத்தை பாதுகாக்கும் கொடுப்பினையை விட்டு ஓடிப் போன கணவனின் ஞாபகம் வர… லேசான ஆதங்கம் எழுந்தது. 

‘உலக வாழ்வை எதிர்கொள்வது அவ்வளவு பயமானதா என்ன….? எங்கே என்ன செய்கிறானோ… இருக்கிறானோ… இல்லாமல் போய்விட்டானோ…’ பலவிதமான எண்ணங்கள் ஒரே நேரத்தில் மனதில் புகுந்து குழப்பிக் கொண்டிருந்ததை, அந்த நோட்டின் கடைசி பக்கம் சிதறடித்தது. 

அதென்ன சிகப்பு கலரில் படம் போல… அதை அருகில் கொண்டு பார்க்க மனம் முழுதும் திகீரென்று பயமும் அதிர்ச்சியும் பரவுவதை உணரமுடிந்தது. அது ஒரு இதய வடிவம். அதன் மையத்தில் ஆங்கில R என்பதை அலங்காரமாக எழுதப்பட்டிருந்தது

அதன் கீழ் ‘என்றும் அன்புடன்’ திரும்ப அதே  R. ஒரு அரைபக்க அளவில் வரையப்பட்டிருந்த அதை கண்டதும் நோட்டு கீழே விழுந்ததைகூட கவனியாது விக்கித்து போய் வெறித்தாள் பாரதி. 

‘எவ்வளவு நம்பிக்கையடி உன்மேல்… என்ன வயசுடி உனக்கு… எல்லாம் தெரிந்த புத்திசாலி நீ…  நீயும் இப்படி கெட்டுவிடுவாயா…’ என்றெல்லாம் மனதில் அலையடிக்க மணியை பார்த்தாள். மணி எட்டரையை தாண்டியிருந்தது

ப்ரியா கிளம்பி சரியாக இரண்டு மணி நேரமாகிறது. ‘லட்சுமியின் வீட்டுக்கு சாதாரணமாக போய் வந்தால் கூட ஒருமணி நேரத்தில் வந்து விடுவாளே. என்ன செய்கிறாள்… எவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்?’ என்று சூறாவளியாய் அவள் மனம் ஆட்டம் போட்டது. 

லட்சுமி வீட்டு ஃபோன் நம்பரைத் தேடினாள். அது கிடைக்காமல் போக, தெருவில் நின்று கடைசிவரை பார்த்தாள். ஒரு நடமாட்டமுமில்லை. போலீஸ்காரர்கள் இருவர் மட்டும் பைக்கில் வந்தனர். பயமாய் அவர்களை எதிர்கொண்டாள். 

“ஏக்கா… உள்ள போங்க… செக்கிங் வராங்க… ஊர்ல இனி ஏழுமணிக்கு மேல நடமாடவே கூடாதாம்…“ என்ற அந்த இளவயது கான்ஸ்டபிள், மேலும் “ என்னக்கா ஏதாச்சும் சாப்டலாம்னு வந்தா…. முடிஞ்சுதா அதுக்குள்ள….” என்றார். 

“ஆமாம் சார்… கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சது… எங்க பாப்பா அவங்க ஃப்ரெண்டு வூடுவரை போயிருக்கு…  அதான் நிக்கறேன்…” பதட்டத்தை மறைத்து அந்த போலீஸ்காரர் உடன் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டாள் பாரதி. 

“அட என்னாக்கா… ஊரே… வெறிச்சோடி கெடக்கு… இப்ப போய் பச்சபுள்ளைகிட்ட வேலை வாங்கறீங்க… சரி… ஓட்டுபா… நைட்டு… பிஸ்கட்டு வச்சு ஓட்டிக்கலாம்…” என்று கிளம்பினர். 

மணி எட்டேமுக்கால் நெருங்க நெருங்க…. பயமும் பதட்டமும் பாரதிக்கு அதிகமாய் கொண்டே போனது. ‘ வெளியில் என்னன்னு விசாரிக்க…. ஒரு சொல் தவறாக போனாலும் காலம் முழுதும் சொல்லுவாங்களே…. கழுத… என்மேல குண்டு போட்டுட்டாளோ…’ என்று மனதில் புலம்பல் அதிகரித்தது. 

வீட்டுக்குள் நுழைந்து அந்த நோட்டுப் பேப்பரை வெறித்துப் பார்த்தாள். அந்த இதய உருவம் திடீரென இருபுறமும் காதுகள் நீளமாகவும், நடுவில் நெருப்பு போல் கண்களும், அந்த ஆங்கில ஆர் எழுத்தில் கோரைப்பற்களுமாக முளைத்து உருவம் பெரிதாக மாறி, கைகளும் கால்களும் தோன்றி இவளை நோக்கி பாய்ந்தது

பயந்து பின்னால் விலகி சுவரில் மோதி அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. ‘ நீ வளர்த்த லட்சணம் இதுதானா? ‘ என்று ஓடிப்போன கணவன் கேட்பதாய் பாரதியின் காதில் ஒரு எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது. 

சிறிது ஆசுவாசமாய் மூச்சுவிட்டு எழுந்தாள்… அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்

‘யாரின் முதலெழுத்து இது… யாரிவன்… என் வாழ்வில் இருளை கொண்டு வந்த அந்த கயவன் யார்?’ என்பதாய் அவள் மனம் முழுதும் ஒரே எண்ணம் பேயாட்டம் போட்டது.  

‘படிக்கும் காலத்தில் இதே போல் பேப்பரில் அழகழகாக எழுதித் தானே இந்த ஓடிப் போனவன் என்னை மயக்கினான். எதுவும் யோசிக்காத வயதில் மனதை பறிகொடுத்து இப்போது வாழ்வையே தொலைத்தேனே. தாயைப்போல பிள்ளை என்பது நிஜமான வார்த்தையா… கடவுளே…’  

இந்த கணத்தில் கொரோனா… ஊரடங்கு… பணம்… இட்லி.. அடுப்பு… வேலை… சேமிப்பு எல்லாம் அவள் மனதில் சுற்றிச் சுற்றி வந்தது. எல்லாம் பொய்… மாயை என்று தோன்றியது.  

ஒரு தீர்மானமாக அந்த பேப்பரை உறுத்துப் பார்த்தாள். சிகப்புகலர்… இந்த கலர் பேனாவை எங்கேயோ பார்த்த ஞாபகம் வர சிறிது பதட்டப்படாமல் யோசித்தாள்

‘ ம்… அந்த கல்லூரி பசங்களில் ஒருத்தன் ‘. வேகமாக அன்றைய விற்பனை பணம் இருந்த டப்பாவை திறந்தாள். அதில் பளீரென் மின்னியது அந்த சிகப்பு கலரால் எழுதப்பட்ட பேப்பர்

கணக்கை எழுதி எடுத்து வந்த சீட்டு.  ‘ இது யார் கொடுத்தது..? அந்த பார்சல் வாங்கி வர சொன்ன பையன் பழைய கடனை எழுதி கொடுத்தனுப்பியது… ஆமாம் அவன் தான், அவன் பெயர்…’

கடன் நோட்டை புரட்டினாள்… ‘இதோ ராஜா… ராஜா… முதலெழுத்து ஆர். அதே சிகப்பு பேனா… அவன்தான். ‘ அந்த கணக்கு சீட்டை கைகளில் வெறி கொண்ட வகையில் கசக்க முற்பட்டு, ஆதாரமாய் இருக்கும் என்று கொஞ்சம் சுதாரித்தாள் பாரதி. 

‘இதனால் தான் அந்த நாய் இன்னிக்கு வரலையா… மத்தவங்கள அனுப்பிருக்கான். அவனுங்க வர நேரம் … இவ அங்க போயிருக்கா… ஒரு மாசம் பாக்க முடியாதுன்னு பேசிட்டே இருக்கா. அவளை வெட்டிபோட்டா என்ன….’ கோபம் உச்சந்தலைக்கு ஏறி தலை முழுதும் சூடாவதை பாரதியால் உணர முடிந்தது. 

கிட்டத்தட்ட கணவன் விட்டுச் சென்ற நாளில் அவன் கடைசியாக எழுதி வைத்துச் சென்ற கடித்ததை படித்த போது வந்த அதே கோபம். இத்தனை வருடம் கழித்து அதே சூழ்நிலை. 

திடீரென்று மூளையில் யாரோ தட்டிவிட்டாற்போல் இருந்தது.  ‘ நம்ம ப்ரியா… சூட்டிகை. ஒருவேளை அப்படியே இருந்தாலும் இவனுங்க போனவுடனே வந்திருக்கணும்.. எனக்கு சந்தேகம் வராம பண்ணிருப்பாளே… ஒருவேளை இந்த பசங்களும் போய் எசகுபிசகா….

கடவுளே… ஏதும் கெடுதல் பண்ணலியே… என்னை இப்படி கொடுமைப்படுத்தறியே… வேண்டுதல்கூட எதுவும் பாக்கி வைக்கலியே… ‘ என்று புலம்பியபடி இருக்க … அந்த கடன் நோட்டில் எழுதியிருந்த பார்வதியின் ஃபோன் நம்பர் கண்ணில் பட்டது

லட்சுமியின் நான்கு வீடு தள்ளி இருப்பவள். அவளுக்கு ஃபோன் செய்தால் என்ன?

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அதே சமயம் ஏதுவும் வாய் விட்டுவிடக்கூடாது என்பதால் மனதில் கொஞ்சம் சொல்லிப் பார்த்துக்கொண்டு ஃபோன் செய்தாள். 

“சொல்லு பாரதி…. “ என்றாள் பார்வதி. பேசாத நபர் பேசுவதின் ஆச்சரியம் அவள் குரலில் தெரிந்தது. 

“வந்து பாப்பாவ பாத்தியான்னு தான்” என்று மென்று முழுங்கியவாறு கேட்டாள் பாரதி. 

“யாருப்பா…? யாரைக் கேட்கற?”  

“நம்ம ப்ரியா தாம்பா… லட்சுமி வீட்டுக்கு வரேன்னு வந்தா … மணி ஒன்பது ஆகப்போகுது.. இன்னும் வரல… அவங்க நம்பரும் இல்ல… கொஞ்சம் இருந்தா… கூப்புடேன்… பயமா இருக்குபா.. கொரோனா அது இதுன்னு புடிச்சுட்டு போறாங்களாம்.. “ சொல்லச்சொல்ல பாரதியின் குரலில் நடுக்கமும் அழுகையும் வரும் போல இருந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். 

“அட … ஒருமணி நேரம் முன்னால ஒரு தம்பிகூட பைக்கில் போச்சுப்பா… நீதான் ஏதோ தெரிஞ்சவங்ககூட வேலையா அனுப்பிருக்கியோனு நினைச்சேன்… ஏதாச்சும் பிரச்சினையா….? “ என்ற பார்வதியின் குரலில் இருந்த சந்தேகம் உணர்ந்து சுதாரித்துக் கொண்டு, இயல்பாக பேசினாள் பாரதி. 

“இல்லல்ல…. வந்து… அப்படியே கடைவீதிக்கு போய் வரச் சொன்னேன். அது தெரிஞ்சவன் தான்.. இதோ வந்துட்டாங்க போல … நான் அப்புறம் பண்றேன் …” என்று ஃபோனை கட் பண்ணினாள் பாரதி. 

படபடப்பாக வந்தது. தன் சந்தேகம் உறுதியானதை அவள் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. ‘சினிமாவில் நடப்பது போல் நடக்குமா. நாளை அந்த பார்வதி என்ன சொல்வாள். வளர்க்கத் தெரியாமல் வளர்த்துவிட்டேனென்றா… ‘ 

‘அன்று அந்த ராஜா நாயை பற்றி பேசும் போது கூட ப்ரியா அவனுக்கு ஆதரவாய் பேசினாளே … அப்பாவி பையன் போலவென்று … அடியே …. ‘ 

ஒரு முடிவாக எழுந்தாள் பாரதி. எழுந்து  தலைமுடியை இறுக்க கட்டிக் கொண்டாள். அந்த மாணவர்கள் தங்கியிருந்த அறை அடுத்த தெருவில் இருந்தது. 

வேகமாக நடந்தால் பத்து நிமிட தூரம் தான், கதவை பூட்ட மறந்து வேகமாக சாத்தினாள். 

தெருவில் இறங்க… ‘தூரத்தில் அது…. சைக்கிளில் … அவளேதான். பின்னாடி தொடர்ந்து ஒரு பைக்கில் அந்த ராஜா பயல் போல… என்ன தைரியம்….. வரட்டும்…. ‘ 

அருகில் வர ப்ரியா தான் … பைக்கில் வேறு நபர் என்று தெரிந்தது. 

“எங்கடீ போன? நாயே…” கத்தினாள் பாரதி. 

அந்த பைக் நபர் சட்டென்று இறங்கினான். 

“அம்மம்மா  திட்டாதீங்க… பாவம் .. உங்க மேல அவ்ளோ பாசம் அதுக்கு. என்ன…என்னை தான் செம வேலை வாங்கிடுச்சு… “ 

“தம்பி.. .நீங்க….?” என்று குரலை தாழ்த்தினாள் பாரதி. கத்தியதில் பக்கத்து வீடுகளில் கதவு திறக்கும் சத்தம் அவள் வாயை அடக்கியிருந்தது. 

“நான் லட்சுமிக்கு அண்ண மொறைங்க… வந்திருந்தேன். ரெண்டு குட்டீஸ்ம் ஒரு ஹெல்ப் கேட்டது… ஏதோ சரின்னு சொல்ல மாட்டிகிட்டேன். ஒருவழியா நினைச்சத உங்க பொண்ணு சாதிச்சிடுச்சு… செம டேலண்டுதான்… நேரமாச்சேன்னு லட்சுமி உங்க வீடு வரை துணைக்கு அனுப்பினது… சரி நேரமாச்சு … வரேங்க…“ என்று கிளம்ப ஆயத்தமானான் அவன். 

“சிரமத்துக்கு மன்னிசுடுங்கண்ணா… ரொம்ப தேங்க்ஸ்ணா… “ என்றாள் ப்ரியா. 

 “சரிடா குட்டி… நீ உங்க அம்மாவை சமாதானப்படுத்து…” என்று கிளம்பினான் அவன். 

உள்ளே புகுந்து கதவை தாளிட்ட பாரதி… “என்னடி பண்ணிருக்க… இது நிஜமா யாரு… லட்சுமி இங்க வந்தா தெரியுமா… இப்பதான் போறா… நீ எங்க சுத்திட்டு வர… “ என்று மூச்சுவிடாமல் கேள்விகளை தொடுத்தாள் பாரதி.

அவளை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள் ப்ரியா. “அம்மோய்… உனக்கு தான் பொய் சொல்ல வரல இல்ல… விடு… லட்சுமி சைக்கிள்ல இருந்து விழுந்து கால்ல கட்டு போட்டு உட்கார்ந்திருக்கா… பாத்ரூம்கூட அவங்க அக்கா ஹெல்ப்ல தான் போறா. இங்க வந்தாளாம். அசடு வழியுது, போய் தொடச்சிக்கோ”

“நீ எங்க போன இவ்ளோ நேரம்… பயம் வராதா….. ?” குரல் சற்று தணிந்தது பாரதிக்கு. முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்

“அட மம்மி… எப்பவும் ஆறதில ஒருமணி நேரம் கூடுதல்… இந்தா.. புடி.. இதான் சானிடைசர்… இதுல ரெண்டு சொட்டு அரைமணி நேரத்துக்கு ஒரு தடவ கையில் போட்டு தேய்ச்சுக்க… எழுபது ரூபா… என் சொந்தகாசு… உனக்கு கிஃப்ட்.. “ 

“இதுக்காடி இவ்ளோ நேரம்..? “ 

“அதை ஏன் கேட்கற… எட்டு மணிக்கு அந்த அண்ணாவோட போனேன்… ஊரடங்கு எக்ஸ்டண்டா… எந்த மெடிக்கல்லயும் இல்ல… ஒரு இருவது கடையாவது ஏறி இறங்கிருப்பேன். ஒருவழியா கெடச்சிது… இதான் அந்த கடையிலயும் கடைசீ பீஸ் தெரியுமா… பாவம் அந்த அண்ணனுக்கு தான் அலைச்சல்… “ 

“நோட்டு வாங்கிட்டயா….?” 

“ம்… தோ… புடி, முகம் கழுவிட்டு வரேன் “ என்று சொல்லியபடி ப்ரியா போக…  அந்த சானிடைசரை சுற்றி சுற்றிப் பார்த்தாள் பாரதி. கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது

சில நாளாய் வேலைக்கு கூலி என்று ப்ரியா ஐந்து பத்தாக தம்மிடம் வாங்கியது ஞாபகம் வந்தது. ‘ இதுக்கு பணம் சேர்த்திருக்குது பாரேன் ‘ என்று தோன்றியது. 

பாரதி அந்த நோட்டை பிரித்து ஆராய்ந்தாள். அதிலும் கடைசி பக்கத்தில் இதய உருவம் போட்டு ஆங்கில ஆர்.. என எழுதியிருந்தது. ஆனால் நீலநிற பேனாவால்.  திரும்ப வந்த ப்ரியாவிடம் அதை காட்டினாள் பாரதி. 

“என்னடி இது….?” 

“இதுவா… அந்த லட்சுமிக்கு நான்னா உயிராம்… எல்லா நோட்லயும் இதுபோல கிறுக்கி வைக்குது…  லூஸு.. “ 

“ லட்சுமின்னா எல் தானே வரணும்?”

“மம்மி… அவள கூப்டறது தான் லட்சுமி, அவ முழுபேரு ராஜலட்சுமி”

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

2 thoughts on “ஊரடங்கும் நேரம் (சிறுகதை) – ✍ அப்புசிவா, சேலம்
  1. நல்ல சஸ்பென்ஸுடன் கூடிய கதை. சுவாரசியமாயிருந்தது.பாராட்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!