sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

அறிந்தும் அறியாமலும் (சிறுகதை) – ✍ கௌசல்யா லட்சுமி, மலேஷியா

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 108)

ஸ்தூரி மஞ்சளைத் தண்ணீரில் குழப்பி ஆழ்கடற்வண்ணத்தில் உள்ள மேகங்களின் மீதே அப்பியதைப் போன்ற அழகிய காட்சியில் உறைந்திருந்தது அன்றைய மாலை வேளை

இரண்டு மணி நேர கனத்த மழைக்குப் பிறகும், விண்ணிலிருந்து மண்ணில் வீழ்ந்தே தீருவேனென எஞ்சியிருந்த மழைத்துளிகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த மேகங்களுக்கு இடையே தோன்றிய சூரியனின் கதிர்வீச்சு,ஆங்காங்கே படர்ந்திருந்தது

மழைத்துளிகளின் தூறல்களைக் கடந்து சென்ற சூரிய ஒளியினால் உருவாகிய வெவ்வேறு நிற அலை நீளங்களால் தோன் றியிருந்த வானவில்லோ, அழகிய மங்கையின் நெற்றியில் வண்ண வண்ண பொட்டுகளை இட்டதைப் போல அக்காட்சியை நிறைவு செய்தது

ஆனால் இக்காட்சியினை ரசிக்க மறந்த சுந்தரியின் இரு கண்களும் தொடர்ந்து அவளது கைப்பேசியையே உற்று நோக்கின. 

பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் தன் அப்பாவின் நலன் விசாரணையிலும் சற்றும் ஆர்வமில்லாத பங்கேற்பாளர் போலப் பதிலளித்துக் கொண்டிருந்தாள். 

முதல் பருவ விடுமுறை முடிந்து பல்கலைக்கழத்திற்குத் திரும்பிய சுந்தரி, மூன்றாம் பருவ விடுமுறைக்குத் தான் மீண்டும் தன் சொந்த ஊரான பேராவிற்கு வந்தாள். 

ஓராண்டு இடைவெளிக்குப் பின் தன் சொந்த ஊர், ஊர் மக்கள், முக்கியமாகப் பெற்றோர்களைப் பார்க்கப் போகிறோம் என்பதால் ஏற்படும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் காட்டிலும் விரக்தியும் படபடப்பும் சுந்தரியின் கண்களில் அதிகமாக இருந்தது

எதையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பவளாய் நிமிடத்திற்குப் பத்து முறை கைபேசியில் நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மையிலே நேரத்தை தான் சரி பார்க்கிறாளா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது சுந்தரியின் தந்தைக்கு

பேருந்து நிலையத்தில் மகள் வந்து இறங்கியவுடனே அவளின் தோற்றத்தில் உள்ள மாற்றங்களைக் கண்களால் கண்ட திரு மகேந்திரன், வீட்டிற்குச் செல்லும் வழியில் தன் மகளின் நடத்தையில் உள்ள மாற்றங்களை மனதால் உணர்ந்தார்

தோற்றத்திலுள்ள மாற்றம் அவரை வருத்தவில்லை. ‘எப்போதும் துரு துருனு பேசிகிட்டே இருக்குற புள்ள இப்ப இவ்வளவு அமைதியா இருக்கே’, என்ற கவலை தான் அவருக்கு

சுந்தரி வெகு தூரம் பயணித்த அலைச்சலால் அப்படி இருக்கலாமென நினைத்துக் கொண்டார். 

“அம்மா… அக்கா வந்துட்டா”

அப்பாவின் நீல நிற மைவி வாகனம் வீட்டின் முன் வந்து நின்றவுடனே இறக்கை கட்டி விட்டதைப் போல வாசலை நோக்கி ஓடினாள் சுந்தரியின் தங்கை மயூரி. 

அச்சமயத்தில் கோழி குழம்பு கொதிக்கவே, அடுப்பின் எரிவாயுவை அணைத்து விட்டு, மகளைச் சந்திக்கப் போகும் ஆவலில் வாசலைப் பார்த்தவாறே மெது மெதுவாக அடிகளை எடுத்து வத்தார் சுந்தரியின் தாயார். 

“அம்மோ ஆளு ஒரு வருசத்துல இப்படி மாறிட்டியே அக்கா. என்னால என் கண்ணையே நம்ப முடில. என் அக்காவா இது?” என மயூரி ஆச்சரியத்துடன் சுந்தரியைக் கட்டிக் கொண்டாள்.

“சும்மா ஒரு சேஞ்சுக்காகத் தான் மயூரி. அழகா இருக்கறேனா?” என சுந்தரியின் கேள்விக்கு 

“என் அளவுக்கு இல்லனாலும் ஏதோ இப்ப பாக்குற மாதிரி இருக்க” எனக் கேலி செயதாள் மயூரி

“சுந்தரி, எப்படிமா இருக்குற? பார்த்து எவ்வளவு நாளாச்சு” எனப் பெருமூச்சு விடுவதற்குள், சுந்தரியின் சிகையழகைத் தொடங்கி காலில் அணிந்திருக்கும் செருப்பு வரையிலும் அனைத்தும் அந்நியமாக இருப்பதைக் கவனித்த அவளின் அம்மா

“என்ன சுந்தரி இதெல்லாம்? கொடுக்குற காசையெல்லாம் இப்படி தான் கறியாக்கிறியா? முகத்துல ஒரு பொட்டை காணும்.  என்ன பாவாடை இது? யூனிவர்சிட்டில இப்படி தான் உடுத்துறியா நீ? கரு கருனு இருந்த முடியை இப்படிச் செம்பட்டை மாதிரி ஆக்கி வெச்சிருக்க” எனச் சீறினாள்

“ஐயோ அம்மா… தயவு செஞ்சு ஆரம்பிச்சிடாதே. நான் ஹாஸ்பிட்டாலிட்டி படிக்குற பொன்னு. இப்படி இருந்தா தானே ப்ரசென்டபலா தெரிவேன். எண்ணெய் தேச்சி சடை பின்னிக்கிட்டு, முகத்துல பெளடர் மட்டும் பூசிக்கிட்டு, பொட்டு வச்சு வந்தேனா பார்க்க எஸ்டேட்டு மாதிரி தெரிவேன்” என்றாள் சுந்தரி

“அதுக்காக இப்படி அறையும் குறையுமா தான் உடுத்திகிட்டு சுத்துவியா? பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?” தொடர்ந்தாள் அவளது அம்மா

“விடு அம்பிகா. பிள்ளை இத்தனை நாள் கழிச்சி வந்துருக்கு, நாலு வார்த்தை நல்லா பேசாம ஏன் எரிஞ்சு விழுற? முதல்ல பிள்ளைய உள்ள கூட்டிட்டு போ” என்றார் சுந்தரியின் அப்பா. 

புன்னகையிலே தன் அப்பாவிற்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு வீட்டினுள்ளே சென்றாள் சுந்தரி

“நீ எதுவும் கவலை படாத அக்கா. அம்மாலாம் ஓல்ட் ஜெனெரேஷன். அதான் அப்டி பேசுறாங்க. நானும் யூனிவர்சிட்டிக்குப் போனவுடனே, உன்னை மாதிரி என் ஹேர்ஸ்டைல்லாம் மாத்திக்கப் போறேன். என் முடிய ஸ்ரேட் பன்னிட்டு பர்கண்டி கலர் டை பண்ணிடலாம்னு இருக்கேன்”, என்றாள் மயூரி

“மாத்துவடி…மாத்துவ. அவளை மாதிரி இல்ல. நீ படிக்கப் போறது கொவர்ண்மெண்ட் யூனிவர்சிட்டி. அதுவும் டீச்சருக்கு படிக்கப் போற. உன் இஷ்டத்துக்கெல்லாம் ஆட முடியாது” என அதட்டினாள் அவளது அம்மா

சுந்தரியின் மனதிலிருந்த கனம் கண்ணீராக உருமாறி, துாவாலைக்குழாயிலிருந்து உச்சந்தலையில் கொட்டிய நீரோடு நீராகி வழிந்துக் கொண்டிருந்தது

சவர்காரத்தை உள்ளங்கையில் பிடித்தவாறே நீரில் நனைத்து தேய்த்துக் கொண்டிருந்தாள்.  குளியறையிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்

‘இது நான் இல்ல, சுந்தரி இல்ல. ஆனால், இது தானே எனக்கு ஆரம்பத்துல புடிச்சது. இப்போ புடிக்கலனாலும் சுலபமா விட முடியலயே’ மனதை நெருடும் சிந்தைனையில் மூழ்கினாள் சுந்தரி

பகுத்தறிவுடன் மனிதன் தோன்றியிருந்தாலும், பல வேளைகளில் சரி, தவறு எனும் அடிப்படையைக்கொண்டு எவரும் முடிவெடுப்பதில்லை. முக்கியமாகப் பருவ வயதில், இளைஞர்களால் எடுக்கப்படும் முடிவுகளும் தேர்தெடுக்கப்படும் தேர்வுகளும் தங்களுடைய விருப்பு வெறுப்பினைத் தழுவியே எடுக்கப்படுகிறது. இந்நிலைக்கு சுந்தரி விதிவிளக்கல்ல. 

அவள் மனதை முள்ளாய் தைத்துக் கொண்டிருந்த குற்றவுணர்ச்சியினை, ‘இதனால நான் சர்வாய்வ் ஆக முடியும், இதைச் செய்யலனா என் வாழ்க்கைய நான் ஆசைப்பட்ட படி வாழ முடியாது. இருக்குறது ஒரு லைப், அதை நமக்குப் பிடிச்ச மாதிரி வாழனும்’ எனும் கருத்தை முன்னிருத்தி  நியாயப்படுத்தி கொண்டாள். 

“வ்வாவ்! ஆப்பிள் ப்ராண்ட் போன் தான அது? எப்ப அக்கா வாங்குன?” சுந்தரி உணவருந்தும் மேசையில் புதிதாக வாங்கிய தனது கைத்தொலைப்பேசியை வைத்த பொழுது, அதை மயூரி கவனித்து விட்டாள்.

“எவ்வளக்கு வாங்குன அக்கா? இந்தப் போன் செம்ம விலையாச்சே” எனத் தொடர்ந்தாள்

“அட, ஆமா. நான் கூடக் கார்ல வரும் போது கவனிக்கல பாரு. எப்பமா வாங்குன?”

சுந்தரி ஆப்பிள் ப்ராண்ட் கைப்பேசி வைத்திருப்பது அவளது தந்தைக்குமே பெரும் ஆச்சரியமாக இருந்தது. 

“அது… வாங்கி ஒரு ரெண்டு மாசம் இருக்கும் பா. எனக்குத் தெரிஞ்ச பையன் வித்தான். கம்மி விலைல தான் வாங்குனேன் பா” என்றாள் சுந்தரி

“என்னமோ மார்கெட்ல மீன் வாங்குன மாதிரி கம்மி விலை தானு சொல்ற. இதை வாங்க எப்படிப் பணம் கிடைச்சது உனக்கு? ஏங்க, இது உங்க வேலை தானா?” என அம்பிகா மகளோடு கணவனையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரணையைத் தொடங்கினார். 

“நான் பணம் கொடுத்திருந்தா உன்கிட்ட சொல்லியிருக்க மாட்டேனா? எனக்கும் இப்ப தான் தெரியும். ஆனா போன வருஷமே போன்லெ ஏதோ பிரச்சனனு சொன்னலமா?”

“ஆமா அப்பா, அப்பப்போ ஹேங் ஆகிடும். அப்போவே வேற போன் வாங்கலாம்னு தான் உங்ககிட்ட சொன்னேன். ஆனால் அந்த நேரத்தில உங்ககிட்ட காசு இல்லனு நீங்க பேசுனதுலே தெரிஞ்சது. அதான் நானே சொந்தமா காசு சேர்த்து வைச்சி வாங்குனேன் அப்பா. அதுவுமில்லாம அதை என் பிரண்ட் ரெண்டாயிரம் வெள்ளிக்கு தான்பா வித்தான். அதான் வாங்கிட்டேன்.” 

அம்மாவிடம் வாய் கொடுத்தால் தொடர்ந்து கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டுக்கொண்டே இருப்பார் என்பதை நன்றாக அறிந்திருந்தாள் சுந்தரி. 

அம்மாவின் கேள்விகளைச் சமாளித்து நிம்மதியாக உணவருந்திக் கொண்டிருந்த சுந்தரியின் கைப்பேசிக்கு தொடர்ந்து ‘மிஸ்டர் அம்சவர்த்தன்’ எனும் பெயரில் அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது

‘ஓஞ்ச சங்கை திரும்ப ஊத விட்ருவாங்க போலிருக்கே’ என நினைத்த சுந்தரி, ஆசையாசையாய் தட்டிலிட்ட வீட்டுச் சாப்பாடை அப்படியே விட்டுவிட்டு கைப்பேசியுடன் தனது அறைக்குள் ஓடினாள்

“நான் இப்ப தான் என் வீட்டுக்கே வந்து சேர்ந்தேன், அதுக்குள்ள கோல் பண்ணி டிஸ்டப் பண்றீங்களே. தயவு செஞ்சு அடுத்த இருபது நாளைக்கு எனக்கு மெசஞ், கோல் எதுவும் பண்ணாதீங்க, ப்ளீஸ்” எனக் கெஞ்சினாள் சுந்தரி

“நான் என்ன பண்ணனும்னு சொல்லுற நிலைமைல நீ இல்ல சுந்தரி. டீல் படி இந்த மாசமும் உனக்குப் பணம் அனுப்பியாச்சு. வீட்டுக்குப் போனதும் எல்லாம் மறந்தாச்சோ? இன்னைக்கான போட்டோவை இன்னும் ஒரு மணி நேரத்துல அனுப்பிடு. இல்லனா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்” என சுந்தரியை மிரட்டியது அக்குரல்

சுந்தரி மற்றொரு வார்த்தை பேசும் முன்னரே அழைப்புத் துண்டிக்கப்பட்டது. சுந்தரியின் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த ஓரளவு நிம்மதியும் அவ்வழைப்போடு சேர்த்துத் துண்டிக்கப்பட்டது

என்ன செய்வதறியாது திக்கற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். மனதைத் திடப்படுத்திக் கொண்டு ஏதும் நடக்காததைப் போல மீண்டும் உணவருந்தும் மேசைக்குச் சென்றாள்

மகேந்திரனும் மயூரியும் உணவருந்தி முடித்து, கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்

“யார் போன் பண்ணது? இங்கே இருந்து பேசுறதுக்கு என்ன?” கடுமையான குரலோடு கேட்டார் அம்பிகா

“இல்லம்மா, அது வந்து… என் பிரண்டு தான். நேற்றே என்னோட அஸ்சாய்ன்மென்ட்டை அனுப்பி வைக்கச் சொன்னான். நான் மறந்துட்டேன். அதைக் கேட்டு தான் அடிச்சான். அதான் இப்ப லப்டோப் யூஸ் பண்ணி அனுப்பி வைச்சேன்” என்றாள்

“சாப்பிட்டு முடிஞ்சதும் அனுப்புறேன்னு சொல்ல வேண்டிதானே?” எனும் அம்மாவின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனம் சாதித்தாள் சுந்தரி. 

“சரி அம்பிகா. நான் நிலத்துக்குப் போய், ஆடு மாடுக்கெல்லாம் தீனி வைச்சிட்டு வந்துற்றேன்”, எனச் சொல்லி வீட்டை விட்டு கிளம்பினார் மகேந்திரன். எப்பொழுதும் போல மயூரியும் அப்பாவுக்கு உதவியாய் அவருடன் கிளம்பினாள். 

“சரிங்க, மழை வேகமா வரும் போலத் தெரியுது. சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு வந்துருங்க”, எனச் சொல்லி இருவரையும் வழியனுப்பி வைத்த அம்பிகா, சுந்தரி பக்கத்தில் அமர்ந்து உணவுண்ணத் தொடங்கினார்.  

‘அச்சோ, அடுத்தென்ன கேப்பாங்கனு தெரியலையே. இப்ப இவங்கள சமாளிக்க அப்பாவும் இல்ல. சீக்கிரமா சாப்பிட்டு, ரூம்குள்ள போகிடறது தான் நல்லது’, எனச் சுந்தரி மனக்கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்

“என்ன சுந்தரி, அடுத்து அம்மா என்ன கேப்பாளோனு யோசிக்கிறியா?”, எனக் கேட்டார் அம்பிகா. 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். சுந்தரியின் மனத்திரையில் ஓடிய வசனங்களும் அம்பிகாவிற்குத் தெளிவாகத் தெரிந்தது போலும். அதனைச் சற்றும் எதிர்பாராத சுந்தரி திரு திருவென முழித்தாள்

“இல்லனு கூடச் சொல்ல முடியில பாத்தியா உன்னால”, எனச் சொல்லி சிரித்தார் அம்பிகா

“நீயா எதாவது கற்பனை பண்ணிக்காதம்மா. நான் அப்படி எதையும் நினைக்கல” எனப் பொய்யுரைத்தாள் சுந்தரி

அவளது பதிலைத் தொடர்ந்து அம்பிகா கேள்விகள் ஏதும் கேட்கவில்லை என்றாலும், சந்தேகப்பார்வையை வீசினார். 

விறு விறு வென உணவை உண்டு முடித்த சுந்தரி, கைகளைக் கழுவி விட்டு, “என்கிட்ட ஏதாவது குத்தம் கண்டுபிடிக்குறதே வேலையாப் போச்சு”, என முனுமுனுத்தவாறே தனது படுக்கையறைக்குச் சென்றாள். 

சுந்தரி கோபத்தில் எழுந்து போகவில்லை, பயத்தின் காரணமாகத்தான் அச்சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக அவ்வாறு நடந்துக்கொள்கிறாள் என்பது, வெள்ளிடைமலைப் போல அம்பிகாவுக்குத் தெரிந்தது

உணவருந்தி முடித்த அம்பிகா, தன் மகளின் இத்திடீர் மாற்றத்திற்கான காரணமஎன்னவாக இருக்கக்கூடும் என எண்ணியவாறு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்

இடைநிலைப்பள்ளி வரை பெற்றோர்களின் கண்காணிப்பில் வளரும் பிள்ளைகள், மேற்கல்விக்காக வெளியூர் சென்று திரும்பும் பொழுது அவர்களின் தோற்றம்,  பேச்சு வழக்கு, குணம் போன்றவற்றில் சற்று மாற்றங்கள் காணப்படுவது இயல்பான ஒன்றே

ஆனால், சுந்தரியோ அனைத்திலும் முற்றிலுமாக மாற்றம் கண்டிருந்தாள். மகள் காதல் வயப்பட்டிருப்பாளோ எனும் சந்தேகம் எழுந்த அம்பிகா, அதை அமைதியாகக் கையாள வேண்டும் எனும் உறுதியைத் தனக்குத் தானே விடுத்துக் கொண்டார்

அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட சுந்தரியால், தாயின் கேள்விகளிடமிருந்து தப்பிக்க முடிந்ததே தவிர, நேரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை

அம்சவர்த்தன் கொடுத்த காலக்கெடு முடிய இன்னும் கால் மணி நேரமே மிச்சமிருந்தது. 

‘மயூரி வரதுக்கு முன்னாடியே வேலைய முடிக்கிறது தான் சரியா இருக்கும். அவ வந்துட்டப் பிறகு ரூம்ல ஏதும் செய்ய முடியாது’ என நினைத்த சுந்தரி தனது கைப்பேசியில் புகைப்படும் எடுப்பதற்கான செயலியைத் திறந்தாள்

சில நிமிடங்களுக்குப் பின்னர், தன் அம்மா கதவைத் தட்டும் சத்தம் கேட்டு பயந்தாள் சுந்தரி. அவசர அவசரமாகத் தனது கைத்தொலைபேசியைத் தலையணைக்கு அடியில் மறைத்து விட்டு கதவைத் திறந்தாள்

“மறுபடியும் குளிக்கப் போறியா நீ?” என சுந்தரி ஒரு துவலையக் கட்டிக் கொண்டு நிற்பதைப் பார்த்த அம்பிகா வினவினார்

“இல்ல, அது… அது… ஜூஸ் குடிச்சிக்கிட்டு இருந்தேன். மேல ஊத்திருச்சு. அதான் ட்ரேஸ் சேன்ஜ் பண்ணப் போறேன்” என்றாள் சுந்தரி

“ம்ம்ம், என்னோட போன் வேலை செய்ய மாட்டிங்குது. என்னனு பாரு” எனச் சொல்லி தன் கைப்பேசியை சுந்தரியிடம் கொடுத்தார் அம்பிகா

சற்று நேரம் முயற்சி செய்து பார்த்த பின் “ஒருவேளை போன் தான் பிரச்சனைனு நினைக்கிறேன். இருங்க ரிஸ்டார்ட் பண்ணி பாக்குறேன்” என்றாள் சுந்தரி

“ம்ம்ம்… இப்ப தான் ஓன் ஆச்சு”, எனச் சொல்லி கைப்பேசியைத் தன் தாயிடம் கொடுத்தாள் சுந்தரி

தம் கைப்பேசியைப் பெற்றுக் கொண்டு அம்பிகா அறையை விட்டு வெளியேறிவுடன், சுந்தரி வேறொரு உடையை மாற்றிக் கொண்டிருந்தாள்.  

 “சுந்தரி… சுந்தரி, கதவைத் திற” என அம்பிகா மீண்டும் கதவைத் தட்டினார். 

“இப்ப என்னம்மா?” எனச் சலித்துக் கொண்டு கதவைத் திறந்தாள் சுந்தரி

“என்னடி பண்ணிக்கிட்டு இருக்குற நீ?”

“நான் தான் சொன்னேனே, சட்டைய மாத்தப் போறேனு, அதுக்குள்ள ஏன் இப்படி நச்சரிக்கிறீங்க” என்றாள் சுந்தரி

“உன் போன் எங்க? எடு” என்றார் அம்பிகா

அம்மாவின் குரலில் கடுமையையும் கண்களில் கோபத்தையும் உணர்ந்த சுந்தரிக்கு உடல் பதபதத்தது. 

“என் போனை எதுக்குக் கேக்குறீங்க?”

“உன் போன் எங்க சுந்தரி?” இம்முறை பலமான குரலில் அழுத்தமாகக் கேட்டார் அம்பிகா

“என்னம்மா பிரச்சனை உங்களுக்கு? ஏன் உயிரை வாங்குறீங்க? என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியா விட்றீங்களா?” பேசி முடிப்பதற்குள் சுந்தரியின் கன்னங்கள் இரண்டும் சிவக்க, பளார் பளாரென அறைந்தார் அம்பிகா

“என்னடி இது? யாருக்கு அனுப்ப இப்படி அசிங்கமா போட்டோ எடுத்த? வெக்கமா இல்லயா உனக்கு? பாவி! எடு ப்போனை” கடுங்கோபத்திலிருந்த அம்பிகாவின் குரல் அவ்வீட்டையே உலுக்கியது

அம்பிகாவிடமிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, மகேந்திரன் மயூரியோடு வீட்டிற்கு மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தார்

“என்ன சுந்தரி இதெல்லாம்? அம்மா சொல்றதெல்லம் உண்மையா?” வலுவிழந்த குரலில் வினவினார் மகேந்திரன். 

“என்னை மன்னிச்சிருங்கப்பா. பிரண்ஸ் பேச்சைக் கேட்டு புத்தி கெட்டுப் பண்ணிட்டேன். நான் விட்றனும் தான் நினைச்சேன். ஆனால், என்னை அவன் விடல. நான் தினமும் போட்டோ அனுப்பலைனா, என் படத்தை ஆன்லைன்ல ஏத்திருவேனு மிரட்டுனான். என்னை மன்னிச்சிருங்கப்பா”, எனக் கதறினாள் சுந்தரி 

“பிரண்ஸ் சொன்னா எதை வேண்ணும்னாலும் செஞ்சிடுவியா? காசு கண்னை மறைச்சிறிச்சுனு சொல்லு. பணம் தான் முக்கியம்னா எதுக்குப் படிக்கப் போன? கீளாங் வேலைக்குப் போய் சம்பாதிச்சிருக்கலாமே. இப்படி உன்னை நீயே அடுத்தவனுக்குக் காட்சிப் பொருளாக்கி வரப் பணத்தை வைச்சி ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புறியா? குடும்ப மானத்தையே அழிச்சிட்டியே” அம்பிகாவால் தன் மகள் செய்த காரியத்தைச் சற்றும் தாள முடியவில்லை

மகள் பணத்திற்காக மானதைத் துச்சமாக எண்ணுவாள் என மகேந்திரனும் அம்பிகாவும் ஒரு போதும் நினைத்ததில்லை.  

“நீ படிச்சி கிழிச்சது போதும். இனி வாழ்க்கைல ப்போன்னை தொடாதே” எனச் சொல்லி சுந்தரியின் கைபேசியைத் தரையில் வீசினார் அம்பிகா

மகளின் கல்வியை நிறுத்துவதன் வழி இப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதை அறிந்த மகேந்திரன், தரையில் சிதறிக் கிடந்த சுந்தரியின் கைபேசியை எடுத்துக் கொண்டு, சுந்தரியோடு காவல் நிலையத்திற்கு விரைந்தார். 

அம்சவர்த்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சுந்தரி தன்னுடைய சுயவிருப்பத்தினால் அம்சவர்த்தனின் ஒப்பந்தத்திற்கு இணங்கியதால், அவளும் ஒரு வகையில் குற்றவாளியாகவே கருதப்பட்டாள்

தான் செய்யும் காரியத்தால் தனக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை அறிந்திருந்த சுந்தரி, அதே காரியத்தால் நேரப் போகும் தீமைகளை அறியாமல் போனதால் சுயமரியாதை, பெற்றோர்களின் நம்பிக்கை, உறவினர்களிடையே தனக்கிருந்த நற்பெயர் எனப் பலவற்றை இழந்தாள்.  

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ சில தவற்றைச் செய்வது இயல்பு தான். சுந்தரி பணத்திற்காகத் தெரிந்தே செய்த தவறு, பின்னாளில் அவள் தெரியாமல் செய்த சிறு தவறினால் வெளிச்சத்திற்கு வந்தது. 

புகைப்படங்களை எஞ்சியிருக்கும் நேரத்திற்குள்  அம்சவர்த்தனுக்கு அனுப்பியாக வேணுமெனும் அவசரத்தாலும், அம்பிகா தனது அறையின் கதவைத் திடீரெனத் தட்டியதால் ஏற்பட்ட பதட்டத்தாலும் அம்சவர்த்தனுக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களைத் தவறுதலாகத் தனது அம்மாவிற்கு அனுப்பினாள் சுந்தரி

அறியாமல் செய்த அச்சிறுபிழையினால் மட்டுமே, சுந்தரி அறிந்தே செய்த பெரும்பிழை திருத்தப்பட்டது

சுந்தரின் அவ்விரு தவறுகளும் அவளது வாழ்வில் பெரும் திருப்புமுனைகளாக அமைந்தன. இச்சமபவத்தால் நிகழ்ந்த மனச்சோர்வை முறிக்க ஓராண்டு உளவியல் சிக்கிச்சைப் பெற்ற சுந்தரி, பின்பு மீண்டும் பல்கலைக்கழகம் சென்று கல்வியைத் தொடர்ந்தாள்.  

தன்னைப் போல நடுத்தரவீட்டுப் பெண்களைக் குறி வைத்து, அவர்களைத் தடம் மாறச் செய்யும் கொடியவர்களின் பிடியில் வேறு எந்தப் பெண்ணும் சிக்காமல் இருக்க, தன் கதையை விழிப்புணர்வு கருதி பல மேடைகளில் தைரியத்துடன் பகிர்ந்தாள்

கடந்த காலத்தில் செய்த தவறு, அவளின் எதிர்காலத்தைப் பாதிக்க விடாமல் துணைநின்ற பெற்றோர்களும் இறைவனும் மாத்திரமே வாழ்வின் உண்மையான வழிகாட்டி என்பதை உணர்ந்து, சரியான பாதையில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தாள் சுந்தரி.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

2 thoughts on “அறிந்தும் அறியாமலும் (சிறுகதை) – ✍ கௌசல்யா லட்சுமி, மலேஷியா
  1. நல்ல வேளை சுந்தரி சரியான சமயத்தில் காப்பாற்றப் பட்டுவிட்டாள்.

  2. நன்றாக இருக்கிறது கதை . பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!