in

கருப்பனும் கலெக்டர் துரையும்!! (சிறுகதை) – ✍ Dr. K. Balasubramanian, Chennai

கருப்பனும் கலெக்டர் துரையும்!! (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

து 1941ஆம் ஆண்டின் இறுதி மாதம், சுதந்திர போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம். போதாதக் குறைக்கு இரண்டாம் உலகப்போர் வேறு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருந்தது

அன்று… மதராஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சிக்கு அந்த இரவு நேர புகைவண்டி (உண்மையில் பெரும் கரும்புகை கக்கும் நிலக்கரி ரயில் வண்டிகள்தான் அந்த காலத்தில்) மணிக்கு 40 மைல் வேகத்தில் விரைந்து, இல்லை! இல்லை! ஊர்ந்து கொண்டிருந்தது

அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம். குறித்த நேரம் கிளம்பி, குறித்த நேரம் ஊர் சென்று அடையும், ஒழுங்கு கட்டுப்பாடுகள் நிறைந்த காலம் அது!

பெரும் பணக்காரர்கள், உத்தியோகஸ்தர்கள், பெரிய வியாபாரிகள், ஜமீந்தார்கள், ஆணவக்கார ஆங்கிலேய துரைமார்கள், துரைசானிகள், இவர்கள்தான் பெரும்பான்மையான பெட்டிகளை அக்கிரமித்திருந்தனர். 

முதல்வகுப்பு அநேகமாக ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். இந்தியர்கள்… கருப்பர்களாக  இழிவு செய்யபட்ட, மோசமான காலகட்டம் அது. 

ஓரிரு மூன்றாம் வகுப்பு பெட்டிகள் மட்டுமே இருக்கும். ஆனால் அதிலும் அவ்வளவாக கூட்டம் இருக்காது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜனத்தொகை கம்மி, இரண்டாவது பணவசதி மிகவும் குறைவு. 

அந்த மூன்றாம் வகுப்பு பெட்டியில் தான்,  நம் ஹீரோ ‘கருப்பன்’ பயணித்துக் கொண்டிருந்தான். பெயருக்கு ஏற்றபடி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு  அட்ட கருப்பு! ஆனாலும் முகக்களையுடன் இருந்தான். 

அவன், திருவல்லிக்கேணியில் வாழும், ஒரு கார் பழுது பார்க்கும் மெக்கானிக். எந்த காரையும், ஒரு நிமிடம் ஓட்டி பார்த்தால் போதும், இன்ஜின் மற்றும் காரின் அதிர்வு சத்தத்தை வைத்தே, எங்கு பழுதாகி உள்ளது? எதை மாற்ற வேண்டும்?  என்று துல்லியமாக கூறி விடுவான். 

மொத்தத்தில்… அவன் ஒரு  நேர்மையான திறமையான ஏழைத்தொழிலாளி.   தன் சம்பாத்தியத்தை  கொண்டு, பெற்றோர், மனைவி, இரு குழந்தைகள், விதவை தமக்கை, ஆகியோரை மனம் கோணாமல் பராமரித்து வந்தான்.

திருச்சியில் இருக்கும் ஓரு ஆங்கிலேய துரையின் புது மோஸ்தர் காரை யாராலும் பழுது பார்க்க முடியாததால், விசேஷ அழைப்பின் பேரில் அவன் இப்போது திருச்சி சென்று கொண்டிருக்கிறான். 

எதிர்சீட்டில் ஓரு முதலிமார் தம்பதிகள், தங்கள் எட்டு குழந்தைகளுடன் பட்டாளம் போல், பட்டுடுத்தி, திருச்சியில் நடக்கும்  திருமணத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

முதலியார், கருப்பனை… ஏனோ முதல் பார்வையிலேயே வெறுத்தார். அவனை கண்டாலே அவருக்கு பிடிக்கவில்லை. கைதொட்டால் குற்றம்,  கால் தொட்டால் குற்றம் என்று அவனிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.

பாவம் கருப்பன், பொறுமையுடன் அனைத்தையும் சகித்து கொண்டு, அமைதி காத்தான்

இரவு பத்து மணிவாக்கில், அனைவரும் சாப்பிட்டு முடித்து அவரவர் ‘பெர்த்தில்’ படுத்து கொண்டனர்.

கருப்பனின் மேல் பெர்த்தை, முதலியார் அம்மா அவனிடம் நைஸாக பேசி தன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து விட்டாள். கருப்பனும் ‘போகட்டும் குழந்தைகள் தானே’ என்று விட்டு கொடுத்து விட்டு, தரையில் நியூஸ்பேப்பர் விரித்து ஒரு மூலையில் படுத்து, அசதியில் ஆழ்ந்து உறங்கி போனான். 

இரவு இரண்டு மணி வாக்கில் வண்டி அரியலூரை நெருங்கி கொண்டிருந்தது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கி இருந்தனர். சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கிய ஒளியில், அந்த கம்பார்ட்மெண்ட்டே அமானுஷ்ய அமைதியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. 

தடக் தடக் தடக் தடக்… எனும் இரயில் ஓட்டத்தின் சத்தம் மட்டும் ஏனோ அபஸ்வரமாய் ஒலிப்பது போல்  தோன்றியது

திடீரென்று கருப்பன் கலவரத்துடன் உடல் சிலிர்த்து எழுந்து அமர்ந்து, “ஆபத்து ஆபத்து… எல்லோரும் எழுந்திருங்கள். யாரேனும் அபாய சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துங்கள், உடனே நிறுத்துங்கள்” என பெருங்கூச்சல் இட்டான். 

முக்கால்வாசி பயணிகள், இவன் போட்ட சத்தத்தால் எழுந்து விட்டனர்.

நம் முதலியாரோ, “யோவ் உனக்கு என்னாச்சு? நீ என்ன பைத்யக்காரனா? வண்டி நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு, சரியான கிறுக்கனா இருப்பான் போலருக்கே” என அவனை திட்ட, சகபயணிகளும் அவரை ஆமோதித்து தங்கள் பங்குக்கு திட்டி தீர்த்து,  உறக்கத்தை தொடர மீண்டும் படுத்து கொண்டனர். 

அவர்கள் செய்கையால் வெகுண்டெழுந்த கருப்பன், சட்டென தாவி பாய்ந்து அபாய சங்கிலியை பிடித்து இழுக்க, ரயில் மெல்ல மெல்ல வேகம் குறைந்து, உஸ்ஸ் என்று நீராவி பெருமூச்சு விட்டு, தடக்கென்று நின்றது!. 

அவ்வளவு தான். முதலியார் மனைவி கோபத்தில்,  “அய்யய்யோ!, என் அக்கா மகள் திருமணம்,  நாலரை மணி பிரம்மமுகூர்த்தமாச்சே. நான் போலன்னா என்ன கரிச்சி கொட்டுவாளே. நேத்தே போகலான்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன், இந்த பாவி மனுஷனுக்கு எங்க ஜனங்களை கண்டாலே ஆகாது. ஏதோ சாக்கு போக்கு  சொல்லி இப்படி பண்ணிட்டானே”  என்று புலம்ப, ஆத்திரம் மேலிட்ட முதலியார் கருப்பனை அடிக்க பாய்ந்தார்

மற்றவர்கள் அவரை தடுத்து, “ஏன் வண்டிய நிறுத்தன?” என கோபாவேசத்துடன் அவனை  கேட்க

“ஐயா… மூன்று மைல் தூரத்தில், தண்டவாளத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. நான் தரையில் படுத்து இருந்ததால் அந்த அபாயகரமான பேரதிர்வை என்னால் துல்லியமாக உணர முடிந்தது. ரயில் அந்த பகுதியை தாண்டி இருந்தால், நாம் அனைவரும் மேல்லோகம் போய் இருப்போம். நல்லவேளை ரயிலை நான் உங்கள் அனைவர் உயிரையும் காப்பாற்றி விட்டேன்” என்றான் பெருமிதம் பொங்க.

ஆனாலும் அவன் பயமும்  படபடப்பும்  அடங்கவேயில்லை. ஆனால் யாரும் அவன் சொன்னதை நம்பவில்லை

அனைவரும் அவனை ஏளனமாக பார்த்து, கோபத்துடன் திட்டத் தொடங்கி விட்டனர். ஒவ்வொருவர் வாயில் இருந்தும் வித விதமான அர்ச்சனைகள் வந்தன. 

“இவர் என்ன சித்தர் பரம்பரையோ? சரியான அரைலூசு பேர்வழி போல் பேசுகிறானே” என்று சிலர் அவனை தூற்றத் தொடங்கினர். 

சிறிது நேரத்தில் ஒரு வெள்ளைக்கார கார்டும், டி.டி.யும் அவனை நெருங்கி, “நீ என்ன பெரும் மந்திரவாதியா? எப்படி 3 மைல் தூரத்தில் உள்ள வெடிப்பு உன் ஞானக் கண்ணுக்கு தெரிந்தது. இவனை பிடித்து ரயில்வே போலீஸ் இடம் ஒப்படைப்போம், மூணு மாசம் உள்ளே இருந்தா தான் புத்தி வரும்” என அதிகார ஆங்கிலத்தில் கர்ஜித்தனர்

சற்று நேரத்தில், முதல் வகுப்பில் ரகசியாக பிரயாணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேய திருச்சி ஜில்லா  கலெக்டர் ‘ஜான்சன் துரை’யின் கட்டளையின்படி, கருப்பனை  அவர்  முன் ஆஜர்படுத்தினர்

கருப்பன் வெலவெலத்து பயந்து போய் நிற்க, “ஏன் வண்டியை நிறுத்தினாய்?   என்ன காரணம்?”  என அவர் அமைதியுடன் வினவ

“ஐயா! நான் ஓரு கார் மெக்கானிக். காரின் அதிர்வை கொண்டு, எங்கே பழுது உண்டாகி உள்ளது என அறியும் ஆற்றல் கொண்டவன். இந்த பெட்டியின் அதிர்வை கேட்டு, என் தூக்கம் கலைந்தது. சுமார் மூன்று மைல் தொலைவில், தண்டவாளத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதை என் உள்மனம் கண்டுபிடித்தது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஆட்களை அனுப்பி பரிசோதித்து பாருங்கள்” என அவன்  கூறி முடிப்பதற்குள்

இரண்டு லைன்மேன்கள், ஊர்மக்களுடன் சேர்ந்து, சிகப்பு லாந்தர் விளக்குகளை  ஆட்டியபடி, “ரயில கிளப்பாதீங்க, ரயில கிளப்பாதீங்க… அபாயம் அபாயம்… சுமார் மூணு மைல் தொலைவில்  தண்டவாளத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது”   என கத்தியபடி ஓடி வருவதைக் கண்டு, அனைவரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்றனர்

கருப்பனின் அசாத்திய  திறமையை  கண்ட அந்த கலெக்டர், நிறவெறி மறந்து அவனை கட்டித் தழுவி கொண்டார்.  முதலியார் மனைவி மூர்ச்சை ஆகி விழுந்தாள்

அடுத்த நாள் அனைத்து செய்தித்தாள்களிலுல் கொட்டை எழுத்துக்களில்,

“திருச்சி ஜில்லா கலெக்டரை கொல்ல… தண்டவாளத்தில் சதிவேலை!!”

“மதராஸ் கார் மெக்கானிக் கருப்பன் உதவியால் சதி முறியடிப்பு!!”

“கலெக்டர் ஜான்சன் துரை, கருப்பனை கட்டி அணைத்து  ரூபாய் 1000 சிறப்பு பரிசு வழங்கினார் !”

“ஐந்து சுதேசி விடுதலை வீரர்கள் கைது!!”

என்று அச்சில் வெளிவந்த பரபரப்பான செய்தியால், ஊரே அச்சத்திலும் ஆச்சர்யத்திலும்  மூழ்கியது 

பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

  1. Oru manithanin niRaththai vaiththukkonDu emaanthu pOy vidakkoodaathu! Inthak kathaiyil vantha “Karuppan” … karumaiyaanavan thaan niRaththil. AaNaal, avan evvaLavu koormaiyana aRivu uLLavan paarunGaL. 3 mile tholaivil uLLa rail-track sithaivai avan avvaLavu thulliyamaagak kaNiththu, varum aabaththai uNarnthu, antha rail-vaNdiyil prayaaNam cheythu kondiruntha anaiththu uyirGaLaiyum kaappaaRRi vittaan paarunGaL. Buddhisali enthak kaalanGaLilum, entha idaththilum munnukku vanthu viduvaan !!!

    — “Mandakolathur Subramanian.”

  2. *அறிவுடையார் ஆவது அறிவார்….*

    “பார்வை சரியாக இருந்தால், பேதங்கள் தென்படுவதில்லை”

    மனிதன் பக்குவப்பட வேண்டியது ஏராளம்… போக வேண்டிய தூரமும் நிறைய…
    மனிதனை மனிதனாக நடத்து…

    கதைக்களம் அருமை…அற்புதம்…பாராட்டுக்கள் !!

  3. அருமை. எக்காலத்திலும் நம் தமிழர்கள் எதிலும் சோடை போனதில்லை. ஆசிரியரின் தமிழ்ப் பற்றும் நாட்டுப் பற்றும் கதையில் தெளிவாகத் தெரிகிறது. தொடர்க ஹேமலதா

  4. தமிழர்கள் என்றுமே தலை சிறந்தவர்கள். ஆசிரியரின் தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் தெளிவாக உள்ளது. தொடரட்டும்

    ஹேமலதா

  5. அருமையான சிரு கதை. பாராட்டுதல்கள். மரு. ந. ஆ. ஜெயவேலன்.

Sweet, Karam, Coffee (SKC) By Rajsree Murali

சகுனம் (சிறுகதை) – ✍ கண்மணி