in ,

காலாவதி (சிறுகதை) – பிருந்தா ரமணி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“பூரணி! அந்த மைதா மாவு பாக்கெட் ஒரு கிலோ எடுத்துப் போடு!” சூப்பர் மார்க்கெட்டில் டிராலியைத் தள்ளிக் கொண்டு வந்த மகள் பூர்ணிமாவிடம் சொன்னாள் மஞ்சுளா.

“சரிம்மா!” என்றபடி மைதா மாவு பாக்கெட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.

அடுத்து என்ன வாங்க வேண்டும் என்று லிஸ்டைப் பார்த்து விட்டு நிமிர்ந்த போதும் பூர்ணிமா மைதா மாவு பாக்கெட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி! ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கே அந்த மாவுப் பாக்கெட்டை வச்சுக்கிட்டு? அதை வச்சுட்டு, அப்புறம் கடலை மாவை எடு” என்று மஞ்சுளா சொன்னாள்.

“இரும்மா, எஸ்பயரி டேட் (காலாவதி நாள்) எப்போ போட்டிருக்கான்னு பார்த்து வாங்க வேணாமா? இந்த மைதாமாவு காலாவதியாக இன்னுமொரு மாசம் தான் இருக்கு; அதற்குள்ளே இதைப் பயன்படுத்தித் தீர்த்துடுவியா?” என்று பூர்ணிமா கேட்டாள்.

“முடியாதுடி”

“சரி, அப்போ வேற கடைல வாங்கிக்கலாம்” என்றாள் பூர்ணிமா.

“ஐயோ, ஏண்டீ இப்படிக் கொல்றே? இப்படி ஒவ்வொரு பொருளா நீ ஆராய்ஞ்சு வாங்குறதுக்குள்ளே விடிஞ்சுடும் போ” என்று மஞ்சுளா சலித்துக் கொண்டாள்.

“பரவாயில்லைம்மா; இப்போ நேரம் ஆனா என்ன? ஆகட்டுமே! நமக்குத் தரமான பொருள் தான் முக்கியம்” என்று பூர்ணிமா சொன்னாள்.

“திருத்தவே முடியாதுடி உன்னை; உன் தொல்லை தாங்காமத் தான் மாப்பிள்ளை ஷாப்பிங்க்னா உங்க அம்மா கூடப் போன்னு அனுப்பி வச்சுடறார் போல” என்று சொன்னாள் மஞ்சுளா.

“அம்மா, ரொம்ப நக்கலாப் போச்சு உனக்கு; இனிமேல் நான் வாரா வாரம் வரலை போ” என்று பூர்ணிமா கோபப்பட்டாள்.

“சரி, சரி, ரொம்பத் தான் பிகு பண்ணிக்காம வா! அடுத்து மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி எல்லாம் எடு” என்று மஞ்சுளா பூர்ணிமாவைச் சமாதானப்படுத்தினாள்.

பூர்ணிமா சிறு வயதிலிருந்தே இப்படித்தான். எந்தப் பொருள் வாங்கினாலும் காலாவதி தேதி பார்க்காமல் வாங்க மாட்டாள். ஏதோ ஒரு முறை வகுப்பாசிரியர் சொன்னது பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது பூர்ணிமாவின் மனதில்.

இதோ… திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. குடும்பத் தலைவியான பின்பும் ஸீசன் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற எந்தவொரு அஸ்திரத்துக்கும் அசைந்து கொடுக்க மாட்டாள் பூர்ணிமா.

ஞாயிறு காலை மஞ்சுளா படுக்கையில் இருந்தே முணங்கிக் கொண்டு இருந்தாள். “பூரணி! அம்மாவுக்குக் காய்ச்சலா இருக்கு; வீட்டுல மருந்து தீர்ந்துடுச்சு; போய் குரோசின் மாத்திரை வாங்கிட்டு வர்றியாடா?”

“சரிம்மா! உனக்குக் கஞ்சி வச்சுக் கொடுத்துட்டு வாங்கிட்டு வர்றேன்”

“என்னங்க, நீங்க அசோசியேஷன் மீட்டிங் போற வழியில பூரணியை இறக்கி விடறீங்களா? அவ மருந்து வாங்கிட்டு வரட்டும்” என்று கணவர் ராமநாதனிடம் கேட்டாள் மஞ்சுளா.

“சரி மஞ்சு, நான் வேணும்னா மதியம் சாப்பாடு ஹோட்டலில் இருந்து வாங்கிட்டு வந்துடவா?” என்று ராமநாதன் கேட்டார்.

“வேணாம்பா, நான் சமைச்சுடுவேன்” என்று பூர்ணிமா சொன்னவுடன்

“சரிம்மா வா கிளம்பலாம்” என்றார் ராமநாதன்.

மருந்துக் கடையில், “நாலு குரோசின் மாத்திரை கொடுப்பா” என்று ராமநாதன் கேட்டார்.

இந்தாங்க ஸார்” என்று கொண்டு வந்து கொடுத்தான் கடைப்பையன்.

பூர்ணிமா அதை வங்கிப் பார்த்து விட்டு, “என்னங்க இதுல எக்ஸ்பயரி டேட் போடலையே?”

“மேடம், முழு பாக்கெட்டுல அந்த டீடெயில் எல்லாம் போட்டிருக்கும்; தவிர எங்க கடையிலே காலாவதியான மாத்திரைகளை எல்லாம் வச்சிருக்கவே மாட்டோம்” என்று பொறுமையாகச் சொன்னான் கடைக்காரப் பையன்.

“நீங்க சும்மா வாயால சொல்றத நாங்க எப்படி நம்பறது?” என்றாள் பூர்ணிமா.

“மேடம், 25 வருஷமாக் கடை வச்சு கஸ்டமர்கிட்டே நம்பிக்கைக்குப் பாத்திரமா இருக்கோம்; இந்தாங்க முழு பாக்கெட், நீங்களே செக் பண்ணிக்கோங்க” என்று நீட்டினான் கடைப் பையன்.

அதைச் சரி பார்த்த பூர்ணிமா, “இந்தாங்க! இதை முன்னாடியே நீங்க கொடுத்திருக்கலாம்!” என்றபடிப் பணத்தை நீட்டினாள். முணுமுணுத்தபடியே அதை வாங்கிக் கொண்டான் கடைப்பையன்.

வெளியே வந்த ராமநாதன், “பூரணி! ஆனாலும் நீ இப்படிப் பேசி இருக்கக் கூடாதும்மா; இது ரொம்பத் தரமான கடை” என்றார்.

“அட போங்கப்பா! இப்போவெல்லாம் நல்ல பெயரை வச்சிட்டுத் தான் மக்களை ஏமாத்தறாங்க; நாம காசு கொடுத்துத் தானே வாங்கறோம்; அப்ப இப்படிக் கேட்கறதுல தப்பில்லையே?” என்று சொன்ன மகளைக் கவலையுடன் பார்த்தார் ராமநாதன்.

“சரிப்பா! நீங்க போயிட்டுச் சீக்கிரம் வாங்க” என்றபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பூரணி.

நாலு மாதங்களுக்குப் பின் ஒரு வியாழக்கிழமை காலை, பூர்ணிமா அம்மா வீட்டிற்கு வந்தாள்.

“என்னடி பூரணி, ஒரு போன் கூட பண்ணாம, அதுவும் வியாழக்கிழமை காலைல வந்திருக்கே?” என்று மஞ்சுளா கேட்டாள்.

“ஏம்மா, நான் சனி, ஞாயிறு வந்தாத் தான் இந்த வீட்டுக் கதவு திறந்திருக்குமா?” என்று பூர்ணிமா பதிலுக்குக் கேட்டாள்.

“அப்படி இல்லைடி அசடே! சும்மாத் தான் கேட்டேன்; இன்னிக்கு ஆபீஸ் இருக்கா? லீவா?” என்று கேட்டாள் மஞ்சுளா.

“ஆபீஸ் இருக்குமா; எனக்கும் சேர்த்து லஞ்ச் பேக் பண்ணிடும்மா”

பூர்ணிமா வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. மாப்பிள்ளை போன் செய்தாலே பூர்ணிமா அதை கட் செய்வதில் இருந்து ஏதோ பிரச்னை என்று புரிந்து கொண்டனர் ராமநாதனும் மஞ்சுளாவும். ஆனாலும் அவளாகவே சொல்லட்டும் என்று அமைதி காத்தனர். இன்னும் ஒரு வாரம் ஓடியது. பூர்ணிமா வாயைத் திறப்பதாகத் தெரியவில்லை.

அன்று மஞ்சுளா தானாகவே கேட்டாள். “ஏண்டி பூரணி! மாப்பிள்ளை உன்னைப் பார்க்கவே வரவில்லை”

“நினைச்சேன் என்னடா நீ இன்னும் கேட்கலியேன்னு” என்று பூர்ணிமா நக்கலாகச் சொன்னாள்.

“கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லுடி! உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது பிரச்னையா?” என்று மஞ்சுளா கொஞ்சம் பதட்டமாகவே கேட்டாள்.

கண்ணை மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்ட பூர்ணிமா, “என்னை அவர் ரொம்ப டாமினேட் பன்றாரும்மா”

“அப்படி என்ன செஞ்சார்?”

“அவரோட அம்மா வீட்டுக்கு வர்றாங்கன்னு என்னை என் ஃப்ரெண்ட் வீட்டு ஃபங்க்சனுக்கு கூட போகக் கூடாதுன்னு சொல்றாரும்மா; அன்னிக்கு நீயும் அப்பாவும் வந்தப்ப முக்கியமான ஆபீஸ் மீட்டிங்க்னு அவரு மட்டும் கிளம்பிப் போனாருல்ல; அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?” என்று பூர்ணிமா பொரிந்து தள்ளினாள்.

“என்னடி பூரணி! இது ஒரு பிரச்னையா? உங்க மாமியார் ஆறு மாசத்துக்கு ஒரு முறை தான் வர்றாங்க; அப்பவும் நீ இல்லேன்னா நல்லாவா இருக்கும்? நாங்க மாசம் ஒரு தடவை வர்றோம்; அதுவும் மாப்பிள்ளைக்கு எங்களைப் பத்தி நல்லாவே தெரியும்” என்று பொறுமையாகச் சொன்னாள் மஞ்சுளா.

“என்னம்மா நீயும் அவரை மாதிரியே பேசறயே? ஏற்கெனவே போன் செஞ்சு பேசி உங்க மனசைக் கலைச்சுட்டாரா?” என்றாள் பூர்ணிமா.

“பைத்தியம் மாதிரிப் பேசாத; இப்போ என்ன தான் சொல்ல வர்ற நீ?” என்று மஞ்சுளா கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

“இது ஒண்ணு மட்டும்னு இல்லேம்மா; இது மாதிரி நிறையக் கருத்து வேற்றுமைகள் எங்களுக்குள்ளே இருக்கு; இனி அவருக்கும் எனக்கும் ஒத்து வராதும்மா” என்றாள் பூர்ணிமா.

“கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகலை, என்னடி பேச்சு இது? அப்ப உங்க உறவுக்குத் தான் என்ன மரியாதை? நீ வாழ்ந்த வாழ்க்கைக்குத் தான் என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் மஞ்சுளா.

“இந்த உறவு பத்து மாசம் தான் நீடிக்கணும்னு இருக்கு போல போம்மா போ” என்றாள் பூர்ணிமா.

“இங்க பாரு பூரணி! நீ நினைக்கிற மாதிரிக் காலாவதி தேதி பார்த்து வாங்குற உறவு இல்லை கணவன்-மனைவி உறவு. குறிப்பிட்ட காலத்தைக் கடந்துட்டா கெட்டுப் போறதுக்கு உன் தாலில எக்ஸ்பயரி டேட் ஒண்ணும் போடலை. இவ்வளவு ஏன், நாம வாங்குற பொருட்கள்ல சிலவற்றிற்குக் காலாவதியே கிடையாது. சுத்தமான தேன் இருக்கே, அதை நீ எத்தனை வருஷம் வேணா உபயோகப்படுத்தலாம். தேன் எடுக்கும்போது தேனீக்கள் கொட்டும் வலியைத் தாங்கிட்டு, பார்த்துத் தான் எடுக்கணும். இதே மாதிரித் தான் கணவன்-மனைவிக்குள்ளே கருத்து வேற்றுமை வரத்தான் செய்யும். வலிமையா நிக்குற அன்பு தான் இதையெல்லாம் தவிடு பொடியாக்கும். உன் அம்மாவா, நல்ல தோழியா உன்கிட்டே சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன், இனி உன் இஷ்டம்” என்றபடி நகர்ந்தாள் மஞ்சுளா.

பூர்ணிமா செல்போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போவதை ஓரக்கண்ணால் பார்த்த மஞ்சுளா, நிம்மதியாகச் சமையலறைக்குள் சென்றாள்.

(நிறைவு)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனமிருந்தால் மார்க்கம் உண்டு (சிறுகதை) – மைதிலி ராமையா

    பேய்! (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்