அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12
உன் நானும்.. என் நீயும்..
உலகை மறந்து..
உவகையில் திளைத்து ..
காதல் மழையாய் ,
கார்முகிலெனச் சேர்ந்து
கணந்தோறும் பொழிந்து..
ஒருவரில் ஒருவர்
முழுதும் நனைந்து..
முழுதாய் தொலைந்து
அவரவர் அடுத்தவரின் ..
நுதல் தொட்டு,
விழி வருடி,
கன்னம் குழைந்து,
இதழில் கரைந்து..
உள்ளம் புகுந்து..
உயிரும் உருகிட,
காதல் படித்து..
காதலாய்ப் படைப்போம்!!
அவளவனின்… அந்த மாயக் கண்ணனின் காதல் தோட்டத்தில் மார்கழி மலரென உதித்திருக்கும் வரம் வேண்டி தவமிருந்தவள்… இன்று அவன் கழுத்தில் மலர் மாலையெனவே மாறியிருக்கும் நிலை அடைந்தும் அதை ஏற்றிட மறுத்தாள்.
ஏற்கனவே அவன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் அவளுக்கு மனதளவில் இருக்கும் ஏதோவொரு வருத்தத்தின் காரணமாகவே கிருஷ்ணாவை அபி மணக்க மறுத்தது.
இதில் அவன் அவளது விருப்பமின்றி மணம் செய்துகொண்டதும், அதுவரை விலகி ஓட வேண்டுமென நினைத்திருந்தவள், இனி அவனைப் பழிதீர்க்க வேண்டுமென்று முடிவெடுத்தாள்.
காதல் கொண்டு பற்றி எழும் ஊடல் தீயும் காதலே படைக்குமென அவளுக்கு அப்பொழுது உறைக்கவில்லை. அதனாலோ என்னவோ, அவளிடம் தன்மையாகப் பேசி சமாதானம் செய்ய முயன்ற அனைவரையுமே அவள் எட்டத் தான் நிறுத்தினாள்.
ஆமாம்… கிருஷ்ணா செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி வந்த தாத்தா பாட்டியின் மீது அளவுகடந்த ஆத்திரம் வர, தனது மகனின் செய்கைக்காக, அவனுடன் இனி பேச்சே இல்லை என்று ஒதுக்கி வைத்த அவளது அத்தை மாமாவின் மீது கட்டுக்கடங்கா கோபம் வர…
இறுதியாக, “கிருஷ்ணா தாலி கட்டிட்டாண்றதுக்காக நீ உனக்குப் பிடிக்காத ஒருத்தன் கூட அவனுக்குப் பொண்டாட்டியா இருக்கணும்னு அவசியம் இல்ல அபி. நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உன் கூட இருப்பேன். ஆனா எந்த முடிவா இருந்தாலும் நல்லா யோசிச்சு எடு” என்று கூறிய தன்யாவின் மேல் எல்லையற்ற எரிச்சல் தான் வந்தது.
வேறு என்னதான் வேண்டுமாம் அவளுக்கு? அது தான் அவளுக்கே தெரியவில்லை.
அவனுடன் ஒட்டிக்கொள்ள நினைக்கும் மனதை அவளது அறிவு நறுக்கென்று குட்ட, அவனிடமிருந்து விலக நினைக்கும் புத்தியை கழற்றி சலவைக்குப் போட்டுவிட நினைத்தது அவள் மனம். ஆனால் அவளது இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டது வம்சி கிருஷ்ணா தான்.
ஆனால் அவனுக்குத் தான் தெரியுமே.. அவளை எப்படி இழுத்தால், அவள் எப்படி வளைவாளென்று. அதனால் மற்றவர் போல அவளிடம் பரிவாகவோ.. மன்னிப்பை யாசித்தோ அவன் பேசவில்லை. மாறாக… அவள் மனம் நேராக… என்ன மாயம் செய்ய வேணுமோ அதைச் செய்தான், அந்தக் குழல் ஊதும் மாயவன்.
அதன் பொருட்டே… அவளை நேசிக்கும் அனைத்து உறவுகளிடம் இருந்தும் விலகி… தனதறைக்குள்ளேயே முடங்கி இருந்தவளை அங்கேயே சென்று சந்தித்தான் கிருஷ்ணா.
அவன் உள்ளே நுழைந்தும் கூட அவன் வந்ததையே அறியாது… ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “ஹே கோல்ட் பிஷ்.. என்ன உன் புருஷன் கூடக் கனவுல டூயட் பாடிட்டு இருக்கியா? அதான் நான் நேர்லயே வந்துட்டனே… இப்போ டூயட் பாடலாமா?” என்று அவளை அவன் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான்.
அதைக் கேட்ட அபி சீற்றத்துடன், “யாரை கேட்டு என் ரூமுக்குள்ள வந்தீங்க? முதல்ல வெளில போங்க” என்று கத்தினாள்.
அந்தக் கத்தலுக்கும் கூட அசராதவனாக, “இல்ல கோல்ட் பிஷ்… நான் மட்டும் இந்த ரூமை விட்டு வெளில போகப் போறது இல்ல. என்கூடச் சேர்ந்து நீயும் தான் இந்த ரூமை விட்டு வெளில வரப் போற. அதாவது இந்த ரூம்ல இருந்து என் ரூமுக்கு ஷிஃப்ட் ஆகப் போற” என்று கூறவும், இப்பொழுது ஆத்திரத்தில் அங்கம் பதறியது அவளுக்கு.
“உங்க ரூமுக்கா? நான் வரணுமா ? நான் இங்க இருந்து எங்கயும் வர மாட்டேன். நீங்க முதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க” என்று அவள் கூறியது அவளுக்கு வினையாகியது.
ஆம்… அவள் இப்படி “நான் எங்கயும் வரமாட்டேன். நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க” என்று சொன்ன வார்த்தையில் இருந்தது அவனுக்கான வாய்ப்பு.
ஏனென்றால், “ஹோ அப்போ நீ அங்க வர மாட்டியா? நான் தான் உன் ரூமுக்கு வரணுமா? அட இத முதல்லயே சொல்றதுக்கென்ன?” என்று அவன் நினைத்ததை நடத்த முயன்றான்.
அதில் மேலும் தடுமாறிய அபி, “ஹையோ நில்லுங்க நில்லுங்க.. இப்போ எதுக்கு நீங்களும் நானும் ஒரே ரூம்ல இருக்கனும்? நீங்களும் இங்க வர வேண்டாம், நானும் அங்க வர மாட்டேன்” என்று கைப்புள்ள வடிவேலாய் அவர்கள் இருவருக்கு இடையிலும் கோடு கிழித்தாள் அபி.
“அட என்ன இப்படி எதுக்கு நாம ஒரே ரூம்ல இருக்கணும்னு கேக்கற? அதுக்கெல்லாம் நான் எப்படி ஓப்பனா பதில் சொல்றது… எனக்கு வெட்கமாகிடுத்து போ…” என்று அவள் கிழித்த கோட்டை அவன் அழித்தே எல்லை கடக்க முயன்றான்.
அவனது காதல் பயங்கரவாதம் எல்லை தாண்டும் முன், அந்த அறைக்குள் நுழைந்தனர் நளினியும், தனுவும். உள்ளே நுழைந்தவர்கள், அபியை காதலால் கலாய்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் வம்சியையும், அதற்குக் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருக்கும் அபியையும் பார்த்தார்கள்.
அவர்களது அந்தக் கோலத்தைக் கண்டு அங்குக் கிருஷ்ண லீலை மீண்டும் அரங்கேறி விட்டதோ என்று எண்ணிய நளினி, அவனிடம் நேரடியாகப் பேசாமல், தனது மகளிடம் கூறுவது போல, “தனு, உன் அண்ணனுக்கு இங்க என்ன வேலையாம்? அவனைப் பேசாம வெளில போய்ட சொல்லு” என்று கராறாகக் கூறவும், அதைக் கேட்ட கிருஷ்ணா, வாய் விட்டுச் சிரித்தான்.
அவன் சிரிப்பதன் காரணம் புரிந்த தனுவும் அவன் மீதிருக்கும் கோபம் சற்றே பின் சென்றுவிட, வெளிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தாள்.
மறுபுறம் கிருஷ்ணாவின் சிரிப்பை கண்ட நளினி, “தனு.. எதுக்கு இப்போ இவன் இப்படிச் சிரிக்கறானாம்?” என்று வினவ
இம்முறை கிருஷ்ணாவே, “நான் சிரிச்சதுக்குக் காரணமா கேட்கறீங்க? பொண்டாட்டி ரூமுக்கு புருஷன் வந்தா, எதுக்குடா இங்க வர்ற, இங்க உனக்கென்னடா வேலைன்னு கேட்கறீங்க? அதுவும் ஒரு அம்மா, அவங்க பையன்கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டா… எனக்குச் சிரிப்பு வருமா வராதா சொல்லுங்க” என்று மேலும் சிரிப்புடன் கேட்க
நளினியோ, “போதும் டா… இந்த மயக்கற சிரிப்பும், உன்னோட மகுடி பேச்சும். நீ செஞ்ச காரியத்துக்கு, அபியோட புருஷனா வேற உன்ன நாங்க ஏத்துக்கணுமா? அதெல்லாம் நீ கனவுல கூட நினச்சு பார்க்காத. முதல்ல இந்த ரூமை விட்டு வெளில நட…” என்று அவர் வாசலை நோக்கி கை காட்டவும், அமைதியாய் வாசலை நோக்கி நடந்தான், ஆனால் தனியாக அல்ல… அபியின் கையைப் பற்றியபடியே.
அதைக்கண்டு மற்ற இருவரும் திகைக்க, “கிருஷ்ணா விடுங்க… நான் உங்க ரூமுக்கு வர மாட்டேன். நீங்க நினைக்கற எல்லாத்தையும் நடத்திரலாம்னு ரொம்ப ஆணவமா இருக்காதீங்க கிருஷ்ணா. நீங்க நினைக்கறது என் விசயத்துல நடக்காது” என அபி கூறவும்
ஒரு கணம் நின்று பின் அவளை நோக்கித் திரும்பியவன், “ஹோ… அப்படியா சொல்ற? உனக்கு நம்ம கல்யாணம் பிடிக்கலைன்னா தாராளமா இப்போவே நீ இந்த வீட்டை விட்டு மிஸ்.அபிரதியா கிளம்பலாம். ஆனா உன்னால மிஸஸ்.வம்சி கிருஷ்ணாவை தூக்கி எறிய முடியாதுன்னா, நீ என் கூடத் தான் இருந்தாகணும்” என்று கூறி அவளை அதிர்ச்சி அடையச் செய்தவன்…
தன் தாய், தங்கையிடம் திரும்பி, “என் வாழ்க்கையில நான் விரும்பியே ஏற்படுத்திகிட்ட குழப்பம் இது, அத நானே சரி செஞ்சுக்குவேன். நீங்க கவலைப்படாம இருங்க” என்று சீரியசாகக் கூறி விட்டு, அபியின் கரத்தைப் பற்றியபடியே அவனது அறைக்கு வந்தான்.
அவர்கள் இருவரும் அவன் அறைக்கு வந்த பிறகே சுயநினைவு அடைந்து சுற்றுப்புறம் மாறியதை உணர்ந்த அபி, “என்ன ப்ளாக் மெயில் பண்ணி இங்க உங்களோட ரூமுக்கு கூட்டிட்டு வந்துடீங்கள்ல? நான் ஒன்னும் உங்க மனைவின்ற பட்டத்தைக் காப்பாத்திக்கறதுக்காக இங்க வரல. எனக்கு இவ்வளவு டார்ச்சர் குடுக்கற உங்கள பழி வாங்கணும், அதுக்காகத் தான் இங்க நான் வந்ததே” என்று கூறவும்
“ஓஹோ சினிமாவுல வர்ற மாதிரி… கூட இருந்து என்ன வார்தைகளாலேயே கஷ்டப்படுத்தி… எல்லார் முன்னாடியும் என்ன அவமானப்படுத்தி… எனக்கு மரியாதை குடுக்காம என்ன அசிங்கப்படுத்தி, இப்படியெல்லாமா அபிம்மா?” என்று கூறி அவளது இரு தோளிலும் கையைப் போட்டவனை…
கட்டுக்கடங்காத கோபத்துடன் அவன் கையைத் தட்டி விட்டவள், “இங்க பாருங்க… இப்படி டச்சு கிச்சு பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்”
அதற்குத் தன் இதழ் புன்னகையைச் சிந்தியவன், “ஓஓ… உன்ன டச்சு.. கிச்சு.. பண்ணக்கூடாதா? அப்போ கிச்சு கிச்சு மூட்டலாமா?” என்று கூறியபடி அவளுக்கு அவன் கிச்சுகிச்சு மூட்ட, துள்ளிக் குதிக்கும் முயலென அவளும் தாவித் தாவிக் குதிக்க
ஆனாலும் கோபம் விடாத காரிகையாய்… அந்தக் கோபம் தலைக்கேற, “ஐயோ கிருஷ்ணா ஏன் இப்படி என்ன கொல்றீங்க? நீங்க இப்படிச் செய்யறது இன்னும் எனக்கு உங்க மேல வெறுப்பை தான் வளர்க்குது” என்று மிகுந்த ஆத்திரத்துடன் அவள் கூறவும், அடிபட்டார் போன்றதோர் வலி அவன் கண்களில்.
அவளை விழி விரித்து நோக்கியவன்.. பிறகு மெதுவே அவளை விட்டு விலகிப் போய், “உனக்குத் தெரியுமா அபி… இதே நீ தான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட ஒவ்வொரு செயலையும்.. நான் பேசற, நான் செய்யற ஒவ்வொரு விஷயத்தையும் அணு அணுவா ரசிச்சது. இதோ… இப்போ என்னை இவ்வளவு வெறுப்போடு பார்க்குதே இந்தக் கண்கள் தான்… என்னை அத்தனை காதலா பார்த்துச்சு. என் மேல நெருப்பா கக்குற இதே நாக்கு தான்… அப்போ என்னை விரும்பறதா சொல்லுச்சு” என்று அவன் சொல்லி முடிக்கவும், இடியின் முழக்கம் அவள் மனமெங்கும்.
அவன் இப்படிக் கூறியதும், அவள் கண்களில் தோன்றிய பாவத்தைக் கணக்கெடுக்க இயலாமல் தடுமாறினாலும், தனது ஆதியும் அந்தமுமாய், கேள்வியும் பதிலுமாய் இருக்கும் அவளிடமே அந்தக் குழப்பத்தையும் கேட்டான் அவன்.
“அப்போ என்னை உருகி உருகி காதலிச்சல்ல அபி… அந்தச் சமயத்துல பூந்தோட்டத்துல இருக்கற ரோஜா கூட்டம் மாதிரி உனக்குள்ள. உன் கண்ணுக்குள்ள ஒரு சிரிப்பு இருந்துச்சு. ஆனா கொஞ்ச நாள்லயே அதுல என்கிட்ட மட்டும் விலகல். நானும் உனக்கு வயசும் கம்மி… அதனால ஏதாவது குழப்பமா இருக்கலாம்ன்னு, நீ படிச்சு முடிச்சு, ஒரு வருஷம் வேலை பார்க்கற வரைக்கும் உன்ன தொந்திரவு பண்ண மாட்டேன்னு வாக்குறுதி தந்தேன். ஆனா… நீ என்னை விட்டு இப்படி முழுசா விலகிடுவேன்னு நினைக்கல அபி” என்று அவன் உயிர் கரைய கூறவும், அவளுக்குள்ளும் சோகத்தின் பெருவெடிப்பு.
அதைத் தனக்குள்ளேயே அடக்கியவள் சுதாரிக்கும் முன், மீண்டும் அவளருகே வந்தவன், “இப்பவும் கூட உனக்கு என் மேல காதல் இருக்குன்னு என்னால உணர்த்த முடியும்” என்று கூறி விட்டு, அவளுக்கு இன்னும் அருகே… மிக நெருக்கமாக வந்து அவள் முகத்தைத் தனது கைகளில் ஏந்தினான்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12
GIPHY App Key not set. Please check settings