in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 25) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(அத்தியாயம் 25)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

படகில் படர்ந்த அதிர்ச்சி

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

நிருபர் கடலலையை விடுவதாக இல்லை. “உங்க லைஃப்ல நீங்க செஞ்ச சிறந்த தேடல்னு எதை நினைக்குறீங்க?” என்றான். 

பெருமூச்சு விட்ட கடலலை மீண்டும் பொங்கினாள். “என்னதான் பெத்த அம்மா இல்லனாலும், அவங்களோட தாக்கம் எனக்கு இருக்கு. நான் இந்தக் காலத்து பொண்ணு இல்லியா. கொஞ்ச வித்தியாசமா யோசிச்சேன். எங்கம்மா சொன்ன வரிக்கும், சித்தர்கள்ல பெண்கள் பத்தி கேள்விப்பட்டதில்ல, அவ்வையார தவிர்த்து. அதுனால பெண் சித்தர்கள் பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு, நிறைய நூல்களைத் தேடினேன். அதுக்கு விடையா கிடைச்சது தான் திரு.வி.க எழுதிய ‘உள்ளொளி’ங்குற படைப்பு” 

“அப்போ பெண் சித்தர்கள் இருக்காங்களா?” கேமராமேனிடம் ஆச்சரியம்.

“ஆமாம்..! அவங்களப் பத்தி தொடர்ந்து என்னால தகவல் சேகரிக்க முடில. திரு.வி.க அந்தப் பெண்ணை, ‘பறவை சித்தர்’னு குறிப்பிட்டிருக்காரு. காரணம், அவங்களுக்கு அட்டமா சித்திகள்ல லாஹிமாங்குற சித்தி (ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறந்தே போயிருவாங்க) தெரிஞ்சிருக்கு. உங்க கேள்விக்கு வரேன், எனக்கு நானே பெருமையா நினைக்குற விஷயம் ஒன்னு உண்டு. எனக்கு வேறுபாடு கிடையாது. நா கோயிலுக்கும் போவேன், தேவாலயத்துக்கும் போவேன், சில சமயங்கள்ல தர்காவுல போய் நமாசும் பண்ணுவேன். எங்க எப்படி வழிபடனும்னு எனக்கு முறையா சொல்லிக் கொடுக்கபட்டிருக்கு. நிறைய புத்தகத் தேடலுக்கு அப்புறம் நான் கத்துகிட்டது, சிறந்த தேடலுங்குறது நமக்குள்ள நம்மள தேடுறது தான். இப்போ வரிக்கும், நான் எனக்குள்ள தான் என்ன தேடிட்டு இருக்கேன். இதோ இதான் எங்கம்மா போட்டோ” என்று போனைக் காண்பித்தாள். 

கடலலையின் பேச்சை கேமராமேன், மாறன் மட்டுமன்றி அங்கிருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர்.  மேலும், டாக்டர் பிரம்மாவைத் தவிர, அந்த போனைப் பார்த்ததும் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

ஏனெனில் இவ்வளவு பெரிய திரை கொண்ட போனை அவர்கள் பார்த்ததில்லை. ஆனால், பிரம்மாவிற்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. திரையில் இருந்த பெண்ணை, ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, அவன் முகம் மாறவும், கேமராமேன் அவன் பக்கம் ஃபோகசைத் திருப்பினான்.

“இவங்கள நான் பாத்திருக்கேன். சதுரகிரி போனப்போ அங்க பாத்ததா நியாபகம். நா என்ன மாறியே ஒரு அம்மா சதுரகிரில மல ஏற வந்திருக்காங்கன்னு நினைச்சி கூட ஏறினேன். கோயில்கிட்ட வரச்சே, அவுங்கள தேடுனேன். அப்ரோ சாமி பாக்கவும், நா எல்லாத்தையும் மறந்துட்டேன்” என்று தன் கழுத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டான். அப்படி ஓர் அமைதி..! 

அதைக் கிழித்துக் கொண்டு, அங்கு புயல் போல கிருஷ்ணன் வந்தான்.

“என்ன இங்க கத வேண்டி கிடக்கு..? அரைமணி நேரமா வந்துட்டே இருந்த நீர், இப்போதான் குறைய ஆரம்பிச்சிருக்கு” என்று பரபரத்து, கையில் கொள்ளும் அளவு துண்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

கடலலை அதற்குச் செவி சாயத்தது போல், “ஆமாம் வாங்க போலாம்..! எங்கம்மா எங்கேயோ நல்லார்ந்தா போதும். ஏதோ கேட்டீங்களேன்னு சொன்னேன்ன. நீங்க வேற மீடியா காரங்க, நிச்சயம் இத டி.வில சொல்வீங்கன்னு எனக்கு தெரியும். பரவால்ல. காப்பகத்துல இருந்த பெண்ணுக்கு இப்டி ஒரு கதையான்னு எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும். கூடவே, இந்த சர்வோதயத்த பத்தியும் அவுங்க ஆளுங்க உதவி செஞ்சதும் கூட போடுங்க. சர்வோதயா மேல மக்களுக்கு நம்பிக்கை வர, இந்த செய்தி உதவியா இருக்கும்” என்று சொல்லியவாறே, தன் ஜீன்ஸை சரி செய்துகொண்டு தண்ணீரில் இறங்கினாள்.

குடியேற்றம்..! 

பாக்யம் வீட்டிலிருந்த டி.வியில் விடாது செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன. காரணம், பார்வதி தான். நடுநடுவில் பாக்யம் ஏதாவது பேசுவாள். அதுவும் செய்தி சம்மந்தமாக தான். அப்படித்தான் இப்போதும் பேசினாள்.

“அத்தே..! ரொம்ப பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம் தானாம். சிதம்பரத்த சுத்தியிருந்த கிராமங்கள் மூழ்கிடுச்சாம். இன்னிக்கு சுனாமி வந்து ரெண்டு நாளாயிருச்சு. போக்குவரத்து, தண்ணி, பால், எல்லாமே அந்த ஊர்ல நின்னு போச்சாம். யார் வூட்லையும் கரண்ட் இல்லையாம். நியூஸ்காரவுங்க பாவம், எல்லா ஊருக்கும் கேமராவ தூக்கினு மழலையும் வெயில்லையும் திரியுறாங்க” என்று பேச்சில் உச் கொட்டினாள்.

“ஆமா.. இது எப்டி தமிழ்நாட்டுக்கு வந்துச்சாம்..?” என்று இழுத்தாள் பார்வதி.

பாக்யம் சொல்லலானாள். “இந்தோனிசியா கடற்பகுதில நிலநடுக்கம் ஏற்பட்டு, அப்படியே கடல் பொங்கி வந்துட்திருக்குது. பெருங்கடல் பக்கம் இருக்குற, இலங்கை, கன்னியாகுமரிலாம் அதிகம் பாதிடுச்சிடுச்சாம். இன்னிக்கு வந்த நியூஸ்ல ஹைலைட் என்னன்னா, கடலோரமா இருக்குற திருச்செந்தூர் முருகர் கோவிலாண்டயும், தரங்கம்பாடி தேவாலயமும் ஒண்ணுமே ஆகலையாம். அப்புறம் அந்த திருவள்ளுவர் சிலை இருக்கே கன்னியாகுமரில, அது ஒசரம் வரைக்கும் சுனாமி அலை வந்துருக்கு அத்தே, டி.வில காட்டுனாங்க” என்று ஆச்சரியத்தில் கண்ணை விரித்து, தன் கைகளைத் தாடையில் வைத்துக் கொண்டாள். 

பார்வதிக்கு அவள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அதிர்ச்சியை அள்ளி முகத்தில் அடித்தாற் போலிருந்தது.

“ஒருவேளை இயற்கை அதுவே தன்ன சீர் படுத்திக்கிதோ என்னவோ?” என்று நினைத்துக் கொண்டிருக்க, பாக்யம் கத்தினாள்.

“அத்தே இங்க பாரு… உங்க மகனை காட்டுறாங்க பாரு, இதோட ரெண்டாவது முறை” என்று நெற்றி விரியச் சொன்னாள்.

பார்வதி உடனே, “கண்ணு வைக்காதடி எம் புள்ளய. சீக்கிரமா திரும்ப வந்திருய்யா லட்சுமிய கூட்டிட்டு…” என்று வேண்டிக் கொண்டாள். அப்போது சரியாகப் புனிதவதியும் அங்கு ஓடி வந்தாள்.

பார்வதி அவளைப் பார்த்து அதிர்ச்சியுற, “ஒன்னும் பயப்படாதீங்க. நான் உங்களுக்கு தைரியம் சொல்லத்தான் வந்தேன்” என்று மென்மையாகப் பேசினாள். இப்படி பரஸ்பரம் அன்பு காட்டுபவர்கள் இருந்தால் போதுமே, எந்த அழிவும் மனிதர்களை அழிக்க வராது.

சிதம்பரம்..! 

கடலலையின் கதை ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கவில்லை. இருப்பினும் மனதில் வைத்துக் கொண்டு, பணிகளில் கவனம் செலுத்தினர். படகில் சென்று, காப்பற்றத் தொடங்கினர். ஆங்காங்கு பயந்து ஒடுங்கி இருந்தவர்களை அழைத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். 

ஒரு நாளிலேயே நீர் வடிந்து விட்டது. ஆனாலும் ஒரு சில இடங்களில் இன்னும் அப்படியே கடல் நீர் தேங்கி நின்றது. அதனால், படகிலேயே அனைவரும் பயணித்தார்கள். கிருஷ்ணன் உண்மையில் சோர்ந்து போனான்.

கூட்டத்தில் உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருந்த ஒருவர் பாலச்சந்தரிடம், “போதுங்க… நீங்க எல்லாம் உங்க இடத்துக்கு போங்க. ஒரு நாள் பூராவும் இருந்திருக்கீங்க, போய் சாப்பிடவோ, ரெஸ்ட் எடுக்கவோ பாருங்க” என்றதும் பாலச்சந்தர் அதை ஆமோதித்தார். இவ்வாறு சொன்ன உதவியாளரே அவர்கள் செல்வதற்கு ஒரு படகையும் கொடுத்தார். 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, லட்சுமி, யமுனா, மனோ, டாக்டர் பிரம்மா, கடலலை அனைவரும் அதே படகில் ஏறிக் கொண்டனர். கிருஷ்ணனின் தோள் மீது சாய்ந்து கொண்டாள் லட்சுமி.

யமுனா தன் கணவனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். ஸ்பரிசம் என்பது அது தான். யமுனாவும் லட்சுமியும் கடலலைத் தனக்குச் சொன்ன சேதியை முறையே கணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இதைக் கேட்ட ராமலிங்கம், திக்குமுக்காடி விட்டான்.

“என்னடி சொல்ற? அவுரு உன் சொந்த அண்ணன் இல்லியா? எனக்கு மயக்கமே வருதுடி. என்ன இருந்தாலும் நான் அன்னிக்கு அப்டி பேசிருக்க கூடாது. பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டேண்டி” என்று தலையில் அடித்துக் கொண்டான். பாலச்சந்தர் அவனைத் தடுத்தார்.

இதற்கு நடுவில், கிருஷ்ணன் மட்டும் மௌனமாக இருந்தான். அவன் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்த வார்த்தைகள் இது தான்.

‘அப்போ அந்த சாமியார் தான் செத்து பிழைச்ச மூத்த அண்ணனா இருக்குமோ? ராதா கூட சொன்னானே. இதென்ன புது திருவிளையாடல்? கதைக்கரு நம்ம இந்த ஊரை விட்டுப் போன முடியும்னுல்ல நினைச்சேன், கதாசிரியர் வேற ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்காரு போலருக்கே’ என்று மண்டையைச் சொரிந்து கொண்டான். 

படகின் மறுவோரம், கடலைலயும் பிரம்மாவும் அருகருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். 

கடலலையை நோக்கிய பிரம்மா, “ஏங்க… உங்க துணிச்சல், தைரியம், ஜீன்ஸ் போட்டுட்டு சித்தர் கத பேசுற குணம், எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு..” என்று தயங்கி தயங்கி சொன்னான். கடலலை கோபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

வடிவேலு பாலச்சந்தரிடம், “அண்ணே இங்க ஒருத்தன் செம்ம அடி வாங்க போறான், நீங்க பாருங்களேன்” என்று கலாய்த்தான்.

பிரம்மா அவனை லட்சியம் செய்யாதவாறு கடலலையிடம் சொன்னான். “நா நேராவே சொலிடறேன். உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இதே ஊரு தான். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான்.

அந்தக் கேள்விக்குக் கடலலை ஒரு பதிலும் சொல்லவில்லை. ரொம்பவும் சாதாரணமாக சிரித்தாள்.

பின், பிரம்மாவிடம் திரும்பி, “நா தைரியமா இருக்கேன். சுமார் அழகா இருக்கேன். ஜீன்ஸ் போட்டாலும், சித்தர் கதை பேசுறேன். இந்த காரணத்தால என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா? அப்போ அதுக்கு பேர் எப்படிங்க லவ் ஆகும்?” என்று தெளிவாகக் கேட்டாள். 

டாக்டர் பிரம்மாவின் பதில். “நீங்க நினைக்குற மாறிலாம் இல்ல மிஸ் கடலலை. நா என்னோட ஹாலப்பிட்டல்ல நிறைய பொண்ணுங்க கூட ஒர்க் பன்றேன். அவங்கள பாத்துலாம் எதுவும் தோணாதது, உங்களப் பாத்தா தோணுது. அதுக்குப் பேரு காதல்னு தான் நான் நினைக்குறேன். மத்தபடி நான் சொன்ன ரீசன்லாம் ரெண்டாம் பட்சம் தான்” 

‘சரி பாப்போம்’ இதைக் கடலலை வாய் திறந்து சொல்லவில்லை. அவள் கடைக்கண்ணில் பேசிய மெல்லியச் சிதறல் இது. 

இவர்கள் இருக்கும் படகுக்கு எதிரே ஒரு படகு வந்து கொண்டிருந்தது. காற்று அடிக்க அடிக்க அதுவும் அவர்கள் படகிற்கு அருகில் வந்தது. அதில் ஒரு தம்பதியினர் சோகமே வடிவாய் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் கதறியது நிச்சயம் அந்தக் கடலுக்குக் கூட கேட்டிருக்கும்.

“ஐயோ… என் ஒரே புள்ள போய்ட்டானே. எத்தனை வருஷத்து தவம்… ஐயோ. என் உசுர எடுத்துக்க கூடாதப்பா நடராஜா..? இளம் உசுர பறிச்சிட்டியே, கண் முன்னாடியே அப்படியே மிதந்துன்னு போயிடுச்சே” என்று கேட்பவர்களை உலுக்கியது அந்தத் தாயின் அழுகை குரல்.

யமுனா உடனே தன் குழந்தையின் தலையைத் தொட்டுப் பார்க்கிறாள். “அம்மா..” என்றான் மனோ. ராமலிங்கத்துக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்தப் படகு கடந்து செல்லும் முன், அந்த தம்பதிகளைக் கூப்பிட்டான்.

“இந்தாங்க… இந்தக் கொழந்தய உங்கப் பையனா நினைச்சி வளத்து ஆளாக்குங்க” என்று குழந்தையை நீட்டினான்.

ராமலிங்கத்தின் செயல் அந்தப் படகில் உள்ள அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது. எல்லோரிடமும் ஒரு வித நிசப்தம். படகு நகர்ந்து செல்லும் ஓசை மட்டுமே கேட்கிறது.

இரு படகுக்கு நடுவே, நீட்டிய கையில் உள்ள மனோ “வீல் வீல்” என்று அழுகும் சத்தம், வானத்தைக் கூட மிரள வைக்கிறது. படகு விலக விலக குழந்தை நீரில் விழும் போலிருக்கவே, அந்தத் தம்பதியினரும் வாங்கிக் கொண்டு விட்டார்கள்.

இந்த நிமிஷத்துக்குக் காத்திருந்தது போல ஒரு பெரிய காற்று அடிக்கவே, இரு படகுகளும் எதிரெதிர் திசையில் நகர்ந்து சென்று விட்டன. எல்லாம் கண நேரத்தில் நிகழ்ந்து விட்டன. இதை ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைரம் (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 13) – ✍ விபா விஷா, அமெரிக்கா