in

வைரம் (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்

வைரம் (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வாசல் அழைப்பு மணி அழைத்தது. என் பெண் சீதா தான்

“அம்மா அம்மா”

“என்னடி? உள்ளே நுழையும் போதே இவ்ளோ குதூகலகம்?” எனக் கேட்டேன்.

“நானும் கீதாவும் நாளை பாட்டு போட்டியில் பாரதியார் பாட்டு பாடறோம் அம்மா. என்ன பாட்டு கண்டுபிடி பாப்போம்?”, என்னை குறும்பாக பார்த்தாள்.

“எனக்கும் என் பாட்டிக்கும் பிடித்த பாட்டு தானே” என்றேன்.

“ஆம்” என தலையசைத்துக்கொண்டே, 

“பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு 

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு 

பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு” எனப் பாடிக்கொண்டே அவள் அறைக்கு சென்றாள்.  

பாரதியாரும், அந்த பாடலில் உள்ள வைரம் என்ற வார்த்தையும், என்னை கையைப் பிடித்து 35 ஆண்டுகள் பின்னோக்கி  சீதாபாட்டியிடம் அழைத்து சென்றன. 

சிவப்பாக, நல்ல உயரமாக, கூர்மையான மூக்குடனும், அறிவுடனும்,  கண்டவுடன் அனைவரையும் கவரும் கம்பீரத்துடனும், ஒன்பது கஜத்தில் ஆளுமையுடனும் திகழ்ந்தவள் சீதாப்பாட்டி.

அவளுடைய அழகிய பெரிய காதுகள், அணிகலன்களுக்கென்றே அமைக்கப்பட்டதோ எனத் தோன்றும்.

“எனக்கு ஏன் பாட்டி உன்ன மாதிரி அழகான காது இல்ல?” எனக் கேட்டால்

“போதும்டி” என்பாள் வெட்கத்துடன்.

சீதாப்பாட்டிக்கு  பாரதியார்  கவிதைகள் மேலும் வைரத்தின் மேலும் அப்படியொரு அளவுகடந்த மோகம். அத்தனை பாரதியார் பாடல்களையும் மனப்பாடமாய் வைத்திருந்தார். அதிலும் ‘வீணையடி நீ எனக்கு’ பாட்டிக்கு மிகவும் பிடித்த பாடல்.

வைரம் பிடித்ததால் அந்த பாடல் பிடித்ததா, அந்த பாடல் பிடித்ததால் வைரம் பிடித்தததா என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

யார் வைரத்தோடு போட்டிருந்தாலும் என் பாட்டியின் கண்களில் இருந்து தப்ப முடியாது. ஒருவர் போட்டிருக்கும் வைரத் தோடை வைத்து, அவர்களுடைய வீட்டின் நிதி அறிக்கை, தம்பதியரின் அன்னியோன்யம், அந்த பெண்ணின் பிறந்த வீடு, அந்த பெண்ணின் சாமர்த்தியம், ராசி என சகல சமாச்சாரங்களையும்  சல்லடை போட்டு சலித்து, என் அம்மாவிடம் தீர்ப்பு வழங்கி விடுவார்.

அது சரியா தப்பா என்பது பற்றி அவளுக்கு கவலை இல்லை. அவள் அப்படித்தான்! இப்படித் தான் ஒரு முறை, தூரத்து சொந்தமான ‘அம்மு பாட்டி’ வந்துவிட்டு போனாள்.

“அந்தப் பொண்ணுக்கு என்ன கெட்டிக்காரத்தனம். கட்டின புடவையோடு, அவளோட பிறந்த ஆத்துல கல்யாணம் பண்ணி அனுப்பி வெச்சா. இப்ப என்னடான்னா ப்ளூ ஜாக்கர்  போட்டுண்டு ஜொலிக்கிறா. அவன கல்யாணம் பண்ணிண்ட வேளையா, இல்ல… இவ அதிர்ஷ்டமா தெரியல” என அன்று முழுவதும் அங்கலாய்த்தாள் சீதாப்பாட்டி.

மற்றொரு முறை, கமலாப்பாட்டி வந்து சென்றாள். சீதாப்பாட்டி என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அவள் போட்டிருப்பது ப்ளூ ஜாக்கர் இல்லடி… இது பெல்ஜியம் கட்டிங், அந்த பளபளப்புலேயே தெரியர்தே. நீ சொல்லு… அன்னிக்கு பார்த்ததுக்கும் இன்னிக்கு பார்த்ததுக்கும் வித்தியாசம் தெரியர்தா?” என்பாள்.

என் அம்மா கொஞ்சம் பேந்த பேந்த விழிக்க, நான் வேற இடையே புகுந்து, “எனக்கு அம்முப்பாட்டி, கமலாப்பாட்டி தோடு பிடிக்காது…. சீதாப்பாட்டி தோடுதான் பிடிக்கும்” எனப் பிடிவாதம் பிடிக்க

“ஐயோ அசட்டுக்கு பிறந்த அசடே. என்னோடது வைரமே இல்ல… வெறும் கல் தோடு. இதைக் கூட கண்டுபிடிக்க தெரியல. சாமர்த்தியத்தை தொட்ட கையால் தொடல. இதெல்லாம் எவன் கூட எப்படி குடித்தனம் பண்ண போறதோ, பகவானே காப்பாத்துப்பா” என புலம்பினாள். 

 சீதாப்பாட்டி ஏதேனும் கல்யாணம் சென்று வந்தால் போதும், என் அப்பாவின் கதி அதோகதிதான்

“நீ இப்பவே சீட்டு கட்ட ஆரம்பிச்சுடு… குறைஞ்சது ஒன்றரை காரட் இல்லன்னா ஏழு கல் தோடு நன்னாவே இருக்காது” என அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்து விடுவாள்.

“மாப்பிள்ளை எப்படி இருக்கார்?” என்ற கேள்விக்கு

“வைரத்தோடு போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருக்கா, அதுக்கு மாப்பிள்ளை சுமார் தான்”, அல்லது “வைரத்தோடு கூட போடல…. ஆனா, மாப்பிள்ளை நல்ல வேலையில இருக்கான்” என்பாள்.

ஆக ஒரு வைரத்தோடு தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதா?

“ஏம்மா! பாரதியார் கவிதைகள் படிக்கும் அதிபுத்திசாலியான பாட்டி, ஏன் இப்படி வைரத்தோடு புராணம் பாடறா? நீ பாட்டிக்கு ஒன்னு வாங்கிக்  கொடேன்” என நான் சிபாரிசு செய்ய

“கல்யாண வயசுல ஆத்துல குழந்தேள் இருக்கும்போது, விதவையான எனக்கு எதுக்கு?” எனத் திட்டவட்டமாக மறுத்தாள்.

வைரத்தோட்டினால் நின்ற கல்யாணங்களையும், பறி போன நல்ல வரன்களையும் பற்றி சொல்லி அப்பாவுக்கு புரிய வைத்தாள்.

“உன் கல்யாணத்திற்கு வைரத்தோடு போட்டுத்தான் ஆக வேண்டும் என கேட்கும் நிலையில் நானும், போடும் நிலையில் அவாளும் இல்லை. என் பேத்திகளுக்கு அந்த நிலைமை வரக்கூடாது” என்பாள்.

“வைரத்தோடு வாங்கும் போது பார்த்து வாங்கணும்டி. தோஷம் இல்லாத கல்லான்னு பார்க்கணும். வைரத்தின் ராசியால் அழிந்த எத்தனையோ குடும்பங்கள் உண்டு”

இப்படியே ஆராய்ந்து, நல்ல நாள் பாத்து, பத்து நாள் ஆத்தில் தோட்டை வைத்து, பரிசோதித்த பின்பு, பணம் தந்து, ஒரு சுபயோக சுபதினத்தில்  எனக்கு நல்ல வைரத்தோடு வாங்கினாள்.

நான் கேட்ட புதுமையான தோடு வாங்க அனுமதிக்காமல், பார்த்தவுடன் தெரியுமாறு, பாரம்பரிய தோடு வாங்கினாள். விசேஷங்களில் கண்டிப்பாக நான் வைரம் தான் போட வேண்டும் என நிர்பந்திப்பாள்.

“என் புள்ளையாண்டான் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்து இருக்கான். போடலைன்னா எப்படி?” என்பாள். எல்லா விசேஷங்களுக்கும் பட்டும் வைரமும் போடணும் என்பது பழக்கத்தில் வந்தது. 

வீட்டின் அழைப்பு மணி என் எண்ண அலையில் விழுந்த கல்லாய், என்னை நினைவுலகத்துக்கு கொண்டு வந்தது. சீதாவின் தோழி கீதா தான். இவளுக்கு சின்ன காது. தோடு போடாதது ஒரு பொருட்டாய் தெரியவில்லை.

ஆனா சீதாவுக்கு அழகிய பெரிய காதுகள். அவள் பிறந்தவுடன் அவள் காதைப் பார்த்துதான் அவளுக்கு பாட்டியின் பேர் வைத்தேன். ஒன்னுக்கு நாலு வைரத்தோடு இருக்கு. சின்னது, பாரம்பரியம், நவீனம், சாலிட்டர் என. இருந்து என்ன பிரயோஜனம், போட மாட்டேன்கிறாளே.

“அம்மா உனக்கும்  சீதாப்பாட்டி மாதிரி வைரம் பிடிக்குமா?” எனக் கேட்டாள் சீதா

“தெரியலடி.. எனக்கு வைரம் பிடிக்குதோ இல்லையோ, ஆனா எனக்கு பிடித்த சீதாப்பாட்டியை அது ஞாபகப்படுத்தும்” என்றேன்.

“உன்ன மாதிரி பிடிச்சிருக்கா இல்லையானு தெரியாமயே காதுல ஒன்னு போட முடியாது” என தடாலடியாக பதில் தந்தாள்.

“நன்னாவே இல்லடி நீ பண்றது” என்றால்

“ஐ டோன்ட் கேர்” என்ற பதில் வருகிறது.

பாட்டியின் கடைசி காலத்தில், “பாட்டி! இந்த வைரத்தோடில் அப்படி என்ன இருக்கிறது?” எனக் கேட்டேன்

“அது என்னவோ தெரியலடி. மத்தவா எல்லாரும் அது வைரமா இல்லையா என மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கும்போது, என் அறிவுக்கு மட்டும் அது என்ன வகையான வைரம், எத்தனை கேரட் என பிடிபடுவது ஒரு சந்தோஷத்தை கொடுத்ததோ என்னவோ?”என்றாள்.

பாட்டியின் எண்பது வயதிற்கு, வைரத்தோடு பரிசளிக்க எண்ணிய எங்களை ஏமாற்றி மேலே சென்ற பிடிவாத பாட்டியை எண்ணி அழுவதா, விதம் விதமாக இருக்கும் வைரத் தோடை பார்த்து வியக்க பாட்டி இல்லையே என ஏங்குவதா, மூளிக்  காதுடன் நிற்கும் என் பெண்ணை மாற்ற முடியவில்லை என வருந்துவதா.

புது வைரம் நான் உனக்கு என ரசித்து பாடினாரே, தீர்க்கதரிசி  அந்த கவியின் வாக்கு பொய்த்து விட்டதா என மருகுவதா?

உள்ளே ஒரே ஆரவாரம், சத்தம். கூர்ந்து கவனித்தேன்

“என்னது ஐபோன் 13 வாங்கிட்டியா? இப்பதானேடி 12 வாங்கின…. உனக்கு செம அதிர்ஷ்டம்டி. மச்சம் டீ” என ஆரவாரித்தாள்  சீதா.

“வாங்கியதென்னவோ நான் தான். ஆனா அதை யூஸ் பண்ண கத்துக்கறதுக்குள்ள… அப்பப்பா… சீதா, நீ தான்டி இதுல கிங்” எனப் புகழ்ந்தாள் கீதா.

“இதில் தான் எனக்கு கிக்கே” என பதிலுரைத்தாள் சீதா. ஒரு நிமிடம் சீதாப்பாட்டி கண் முன்னே தோன்றி மறைந்தாள்.

பாரதியின் புதுமைப் பெண்ணான சீதாவின் புது வைரம் இது தானோ?

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காக்க! காக்க! ❤ (இறுதிப் பகுதி) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 25) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்