சிறுகதைகள்

மந்திரக் கைக்குட்டை (சிறுகதை) – ✍ மலர் மைந்தன்

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தக நாட்டு மன்னன் ‘விமலாதித்தன்’. மதிகெட்ட மந்திரிகளின் சதி யோசனையால் வரிகளை விதித்தான். மக்கள் துன்பத்தில் தவிக்க அரண்மனை மாடங்கள் தங்கத்தால் ஜொலித்தது.

அந்நாட்டில் நெசவு செய்யும் ‘குணபாலன்’ என்பவன் சிறந்த ஆடை வடிவமைப்பாளன். ஆட்சியின் கொடுமையினால் நெய்வதை நிறுத்திவிட்டான். குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றான்.

ஆலமரத்தின்  விழுதில் தூக்கு மாட்டியவன், அறுந்து கீழே விழுந்தான். மரத்தின் மீதிருந்து அழகியப் பட்டுக் கைக்குட்டை ஒன்று  பறந்து வந்தது, எடுத்துப் பார்த்தான்.

ஆச்சர்யம்… அதில் சில வரிகள் எழுதப்பட்டிருந்தது, “கைக்குட்டையை வீட்டுப் பணப்பெட்டியில் வைத்துவிட்டு மீண்டும் நெசவு செய், நல்ல வருமானம் வரும், மாற்றங்களைக் காண்பாய்”

‘உழைக்காத காசு ஒட்டாது’ என்றாலும்  ‘பசி வந்தால் பத்தும் (புத்தியும்) பறந்து போகுமே’

கைக்குட்டையுடன் கிளம்பினான். ஆலமரத்தில் இருந்து உடல் முழுதும் மூடியபடி  உருவம் ஒன்று இறங்கி வேறு திசையில் போனது.

கைக்குட்டையைப் பணப்பெட்டியில் வைத்துவிட்டு உழைக்கத் தொடங்கினான். குணபாலனின் வேலைப்பாடுகள் சிறப்பாக இருந்ததால், வெளியூர் வியாபாரிகள் வந்து அதிக விலைக்கு வாங்கிப் போயினர். சில மாதங்களில் செல்வந்தன் ஆகிவிட்டான்.

ன் தேவைக்கு மட்டும் பணத்தை வைத்துக்கொண்டு, மற்றவற்றை வேலையற்ற தொழிலாளர்களுக்கு கொடுத்து தொழில் தொடங்க உதவினார்.

சில மாதங்களில் ஊருக்குள் மாற்றம். மக்கள் எல்லோருமே பல்வேறு தொழில்கள் செய்ய ஆரம்பித்தனர், தேவையற்ற வரிகளைக் கட்ட மறுத்தனர், அரசாங்க வருவாய் குறைந்தது.

மந்திரிகளை அழைத்த மன்னன் காரணத்தைக் கேட்க “அனைத்திற்கும் காரணம் குணபாலனே” என்று சொல்ல, அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டான் குணபாலன்.

உண்மையையே பேசி பழகியவனுக்கு மறைக்க தெரியாததால் விசாரணையில் நடந்ததைக் கூறி, “மாற்றத்திற்கு இந்த மந்திரக் கைக்குட்டையே  காரணம்” என்று எடுத்துக் காட்டினான்

“என்னது? இது மந்திரக் கைக்குட்டையா?” ஆச்சர்யப்பட்ட மன்னன், அதை அபகரித்து கருவூலத்திற்கு அனுப்பினான்.

இழப்பு வந்தாலும் உழைப்பவர்களுக்கு ஓய்வேது? குணபாலன் மேலும் உத்வேகத்துடன் உழைக்க, பணம் பெருகியது.

மாறாக, கருவூலத்தில் கைக்குட்டையை வைத்தும் கஜானா நிரம்பவில்லை. குழப்பத்தில் குதிரை ஏறி தனியே போன அரசன், களைத்துப்போய் மரத்தின் நிழலில் ஓய்வெடுக்க ஒதுங்கினான்.

ஆமாம்… அதே ஆலமரம்தான். மேலிருந்து கைக்குட்டை ஒன்று விழுந்தது. எடுத்து பார்த்தான், சில வரிகள் எழுதியிருந்தது.

“ஏழு கண்டங்களுக்கு அதிபதியாக இருந்தாலும் பேராசை எவனுக்கு உண்டாகிறதோ அவன் தரித்திரனே. தேவைக்கு மேல் உள்ளதை மக்களுக்கு கொடு, நாடு வளம் பெரும்”

மேல் நோக்கி மரத்தைப் பார்த்தால், அடர்ந்த கிளைகளோடு இலைகளே தெரிந்தது.

மனம் தெளிந்து மன்னன் கிளம்பியதும் மரத்திலிருந்து முன்னர் இறங்கிய அதே உருவம் இறங்கியது. அது வேறுயாருமில்லை  மகாராணி நப்பின்னை.

நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்துவது அவரின் கடமையன்றோ?

உணவர்வற்ற மக்களின் உள்ளத்தில் கிளர்ச்சியையும், உருப்படாமல் இருந்த மன்னனையும் மாற்ற மகாராணிக்கு கிடைத்த “துருப்புச் சீட்டு”  இந்த கைக்குட்டை.

(முற்றும்)

Similar Posts

2 thoughts on “மந்திரக் கைக்குட்டை (சிறுகதை) – ✍ மலர் மைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!