in

இரவென்னும் வானவில் (சிறுகதை) – ✍ பரத் ஸ்ரீனி

இரவென்னும் வானவில் (சிறுகதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“நாளைக்கு காலைல 5 மணிக்கு அங்க இருக்கணும் காயத்ரி, இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். ஆமா ஆமா, நீ சொல்ற மாதிரியே எல்லாத்தையும் சமர்த்தா எடுத்து வச்சுட்டு கிளம்பிட்டேன்டீ. டாக்ஸி வந்து நிக்குது, கால் கட் பண்ணிரட்டுமா? ஏர்போர்ட் போயிட்டு கூப்பிடறேன், பை டி”

அவசரமாக ஃபோன் காலை கட் செய்து விட்டு, டாக்ஸி கதவைத் திறந்து பின்னால் ஏறினான் சரண்

ஏர்போட்டை நோக்கி வண்டி புறப்பட்டது. கால் கட் செய்த அடுத்த நொடியே மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்து விழுந்தது.

காயத்ரியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து மொபைலை அன்லாக் செய்து வாட்சேப் பார்த்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஆம், அவளுடைய நம்பரிலிருந்து தான் அந்த மெஸேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனான். 

“திங்களன்று தொடரும்” என்ற எழுத்துக்கள் தோன்றி மறைந்தது

“ச்சே என்ன இது, இப்படி முடிச்சிட்டாங்க” என்று வழக்கமாக நாடகங்களைப் பார்ப்பவர்கள் சொல்லும் வரியைச் சொல்லி விட்டு, அடுத்தது என்னவாகும் என்ற யோசனையில் மூழ்கிப் போனாள் வர்ஷா

ஆம்… வர்ஷா – எட்டாம் வகுப்பு மாணவி. கொரானா கால லாக்டவுனில் போரடிக்கும் பொழுது நாடகம் பார்க்கப் பழகிக் கொண்டவள். அதுவும் அலைபேசியில் நாடகங்கள் பார்க்கும் வசதி வந்ததற்குப் பிறகு, மொபைலும் கையும் தான்.

அவளது தம்பியோ, தோழர்களுடன் விளையாடப் போய் விடுவான். அப்பா, அம்மா இருவரும் வீட்டிலேயே தனித் தனி அறையில் ஆன்லைனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். பாவம் அவள் மட்டும் தனியே என்ன செய்வாள். நாடகங்கள், படங்கள், முகப்புத்தகத்தில் மேய்வது தான் அவளது பொழுது போக்கு

மற்ற நேரத்தில் பள்ளி ஆன்லைன் வகுப்புகள். ஆசிரியர்கள் பாடம் எடுக்கையில் மியூட் போட்டு விட்டு ஜடம் போல் அமர்ந்து கொள்வாள். இப்படி தான் போய்க் கொண்டிருந்தது.

சில நேரங்களில் ஏதோ  எழுதிக் கொண்டிருப்பாள். அன்றும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள், அம்மா வேலை முடித்து வெளியே வந்த பொழுது, வாசித்துக் காண்பிக்க எழுந்து போனாள்.

“அம்மா இதை வாசித்துப் பாரேன். திடீர்னு தோணுச்சு மா, எழுதிருக்கேன், படிச்சு பாரேன்” என்ற வர்ஷாவிடமிருந்து அவள் அம்மா சாயிஷா அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்தாள்.

“அவள் இங்கு இல்லை,

காணாத கண்ணிற்கு முன்

அவள் எங்கோ ஒடி மறைந்தாள்!!

 

யாரோ அவளெங்கே எனக் கேட்க,

காற்று மட்டும் பலமாக வீசித்

தள்ளியது, சத்தமில்லாத வார்த்தைகளை!!

 

எங்கே………..

……………….

…………………

(தொடர்ந்தது)

“அம்மா, ஏன் மா நிறுத்திட்ட, முழுசா படிச்சு சொல்லும்மா” என்றாள் வர்ஷா.

“அம்மாக்கு ரொம்ப டயர்டா இருக்குடா குட்டி, நாளைக்கு படிச்சு சொல்லட்டுமா?” என்று வேலை செய்த அசதியில் சொன்னாள் வர்ஷாவின் அம்மா சாயிஷா

“அம்மா, ப்ளீஸ் மா” என்றவளை

“இன்னிக்கு ஆன்லைன் கிளாஸ் சரியா அட்டென்ட் செஞ்சியா? என்ன படிச்ச?” என்று கோவமாய் பேசி கடந்து போனாள் சாயிஷா

வருத்தமும், அழுகையும், கோபமுமாய் உணர்ச்சிகள் மாறி எழும்பி அடங்கியது வர்ஷாவிற்கு. எழுதுவது அவளுக்கு பிடித்தமான ஒன்று, அங்கீகரிக்கத் தான் யாருமில்லை

சரியான வரவேற்பு இல்லாமல் போன எந்தவொரு திறமையும் மிளிரப் போவதில்லை. மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைக் கூட யாரும் கவனிக்காத நாட்களில், அர்த்தமில்லாமல் போனதுண்டு.

அன்றிரவு யாரிடமும் பேசாமல் அவள் படுக்கையில் விழுந்து தூங்கிப் போனாள் வர்ஷா. அவள் தூக்கம் நெடுநேரம் நீடிக்கவில்லை, அடிக்கடி இது போல் உறக்கம் கெட்டு எழுந்து அமர்ந்து கொள்வது வழக்கமானது

சில நாட்கள் கழித்து

“ஹாய் காய்ஸ், வெல்கம் டூ மீட்டிங். இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உங்ககிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லனும். அதுக்கு முன்ன, நம்ம டீம் இமெயில் ஃபோல்டர்ல ஒரு மாத இதழ் அனுப்பிச்சுருக்கேன், அதை பாருங்க” என்றார் வர்ஷாவின் அம்மா சாயிஷாவின் அலுவலக மேனேஜர்

“என்ன இது, ஆபீஸ் ஃபைல்களா அனுப்பி வேலை வாங்குறவரு, இப்ப மாத இதழ் அனுப்பிச்சுருக்கேன், பாருங்கங்கறாரே. என்னமோ போடா மாதவா. காலையிலேயே மொக்கைப் போடப் போறாரோ” என்று குழுவில் சிலர் அலுத்துக் கொண்டனர்

சாயிஷாவும் ஆர்வமே இல்லாமல் இமெயில் திறந்து பதிவிறக்கம் செய்து பார்த்தாள். முகப்பு அட்டைப் படத்தில், ‘கிருஷ்ணாஷ்டமி மாதப் போட்டிகள் ஸ்பெஷல்’ என்று இருந்தது.

“என் பிள்ளை வரைந்த ஓவியம் பதினாறாம் பக்கத்தில் இருக்கிறது, அதற்கு முதல் பரிசி கிடைத்திருக்கிறது. பார்த்துவிட்டு உங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்” என்றார் மேனேஜர்

பதினாறாம் பக்கத்திலிருந்த ஓவியத்தைச் சிலர் பார்த்துப் பாராட்டு தெரிவித்தனர்.

‘கைகளில் பேனாவை வைத்திருந்த அந்த சிறுமி, வானம் முழுக்க வண்ணம் தீட்டுவது போல இருந்தது. ஆனால், அவள் முகம் இருண்டு போனது போல வரையப் பட்டிருந்தது. நல்ல ஓவியம் தான், ஆனால் ஏன் அவள் முகம் இருண்டு போயிருக்கிறது?’ என்று யோசித்தாள் சாயிஷா

இவ்ஓவியத்திற்கான காரணம், முதல் பக்கத்தில் இருக்கிறது என்று சிறு குறிப்பு இருந்தது. ஆர்வ மிகுதியில் முதல் பக்கத்திற்குச் சென்று பார்த்தவளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருந்தது.

“அவள் இங்கு இல்லை,

காணாத கண்ணிற்கு முன்

அவள் எங்கோ ஒடி மறைந்தாள்!!

 

யாரோ அவளெங்கே எனக் கேட்க,

காற்று மட்டும் பலமாக வீசித்

தள்ளியது, சத்தமில்லாத வார்த்தைகளை!!

 

எங்கே காணினும் தனக்கான

உலகத்தைத் தேடிக் களைத்திருந்தவளுக்கு,

சுகமாய் இருந்தது மகரந்தத்தைத் தேடும் பட்டாம்பூச்சியைப் போல!!!

 

மகரந்தம் எங்கும் செல்லாமல் காத்திருக்கும் மலராக,

பலர் திறமைகள் அரங்கேறக்

காத்திருக்கும் ஒரு மாத இதழில்

மலர்ந்திருந்து, அவள் கவிதை!!

 

ஆம்!!! அவளுக்கான உலகத்தைக்

கண்டுபிடித்தவளை, ஒரு மலராய்

சேயாய் சேகரித்துக் கொண்டது,

மலர்த் தோட்டம் எனும் இம்மாத இதழ்!!!

இப்படிக்கு

– வர்ஷா எனும் பெரு மலர்.

இதை வாசித்து முடிக்கையில், கண்களில் நீர்வழிய அறையை விட்டு வெளியேறிய சாயிஷா, வர்ஷாவை தேடி அணைத்துக் கொண்டாள்

அக்கவிதை முதல் பரிசாக மலர்ந்ததைப் போல, சாயிஷா தன் மகளை அணைத்துக் கொண்ட அந்த இரவுப் பொழுதில், வர்ஷாவின் உலகில் வானவில் தோன்றி வண்ணமயமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிட்டுவும் சின்ன தங்க மீனும் (சிறுவர் கதை) – ✍ ஆர்த்தி சுவேகா

    கயல்விழியும் சீதாப்பழமும் (சிறுகதை) – ✍ லக்ஷ்மி விஜய்