sahanamag.com
சிறுகதைகள்

கயல்விழியும் சீதாப்பழமும் (சிறுகதை) – ✍ லக்ஷ்மி விஜய்

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நாம் ஒரு 25 வருடம் பின்னோக்கி செல்வோம். அந்த ஏரியாவின் பெயர் அம்பாள் நகர், மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடம்

வாடகைக்கு வசிக்க பெட்டி பெட்டியாக வீடுகள் நிறையவே இருக்கும். ஒரு காம்பவுண்டுக்குள், 10 வீடுகள் 7 வீடுகள் என்று இருக்கும். நாம் இப்பொழுது 5 வீடுகள் கொண்ட கணபதி காம்பவுண்டுக்குள் செல்வோம்.

அந்த 5 வீடுகளில் குடியிருப்பவர்களும் உறவுகளைப் போல் தான் பழகுவார்கள்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக பழகி வந்தனர் . இவர்களின் ஒற்றுமையைப்  பார்த்து பொறாமை கொள்பவர்களும் உண்டு

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேளுங்கள்.  ஐந்து வீட்டிற்கும் இரண்டு பாத்ரூம்கள் மட்டுமே உண்டு. கிணற்றில் நீர் இறைத்து தான் பயன்படுத்த வேண்டும்.  குழாய் வசதி எல்லாம் கிடையாது. 

காலையில் ஒரே களேபரம் தான்.  ரெண்டே பாத்ரூம் பஞ்சதந்திரம் போல என்ன தந்திரம் செய்தாலும் பாத்ரூம் பிடிக்க முடியாது.  வேலைக்கு செல்லும் ஆண்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அனைவருமே போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள் பாத்ரூமிற்காக.

பெரும்பாலும் சிறு குழந்தைகள் கிணற்றடியில் தான் குளிப்பார்கள் (அது ஒரு அலாதி சுகம்). காலையில் மிக பிஸியாக இருப்பவர்கள் இருவர். ஒன்று வீட்டில் காலையில் அவசரமாக உணவு தயார் செய்து கொண்டு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப போராடும் பெண்களும், இரண்டு அந்த பாத்ரூம்களும் தான்.

இத்தனை களேபரம் இருந்தாலும், சண்டை வந்தது இல்லை. மற்ற காம்பவுண்டுகளில் எல்லாம் பாத்ரூம் சண்டைப்  பற்றி மட்டுமே ஒரு நாவல் எழுதலாம். ஆனால் இங்கு சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவே மற்றவர்கள் பொறாமைக் கொள்ள காரணம்

“சரி பாத்ரூமையே சுத்திக்கிட்டு இருக்கிற” என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.

அந்தக் காம்பவுண்டுக்குள் குழந்தைகளும் அதிகம். கயல்விழி தான் இருப்பதிலேயே குட்டி(சுட்டி) பெண், 5 வயது அவளுக்கு. கயல்விழியை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும், ஆனால் கயல்விழிக்கு  ஜோதி அக்கா வீட்டு சீதாப்பழ மரம் தான் பிடிக்கும்

ஜோதி அக்கா வீடு, கணபதி காம்பவுண்டுக்கு அடுத்த வீடு. அந்த தெருவில் அவர் மட்டும் தான் வீட்டை வாடகைக்கு விடாமல் பெரிய வீடாக கட்டி வசித்து வந்தவர். அவருக்கு ஒரு மகள் மகன். சரி சீதாப்பழ மரத்திற்கு வருவோம். 

ஜோதி அக்கா வீட்டு சீதாப்பழ மரம்,  கணபதி காம்பவுண்ட் சுவற்றின் அருகில் இருப்பதால், மரத்தின் பழங்களை எட்டிப் பறிக்கலாம்

ஒருநாள் எல்லா குழந்தைகளும் கொரோனாவை  அழிக்க திட்டம் தீட்டுவதைப்  போல திட்டம் தீட்டினர். எல்லோரும் சேர்ந்து கயல்விழியை பிடித்துக் கொண்டு பழங்களை பறிப்பது என்று முடிவு செய்தனர். 

மதிய நேரம் எல்லோர் வீட்டிலும் உண்ட மயக்கம் ஆட்கொண்டதால் உறங்கிக் கொண்டிருந்தனர்.  ஜோதி அக்காவும் மயக்கத்தில் இருந்தார் (அதாங்க தூக்கம்).  இதுவே சரியான தருணம் என்று குழந்தைகள் சேர்ந்து கயல்விழியை தூக்கிப் பிடித்துக் கொண்டனர். 

மூன்று வெற்றிக்கனியை பறித்தே விட்டாள் கயல்விழி. அனைவரும் பகிர்ந்து உண்டனர், கயலுக்கு பழத்தின் சுவை மிகவும் பிடித்துப் போயிற்று

அன்று மாலை வள்ளியம்மாள் அக்கா வந்தார் (இவர் ஐந்து வீட்டினில் வசிப்பவர்களில் ஒருவர்)

கயல்விழியின் அம்மாவிடம், “காயத்ரி, ஜோதி அக்கா வீட்டு சீதாப்பழ மரத்தில் மூன்று பழத்தை காணோம்னு கத்திக்கிட்டு இருக்கு, நீ யாராவது பறிக்கறதை பாத்தியாடி”

“இல்லையே அக்கா, நான் பாக்கலையே”

“ஜோதி அக்கா எண்ணி வச்சிருந்துச்சாம், இப்ப மூணு பழத்தை காணோமாம்.  எதிர் வீட்டு நந்தினிகிட்ட கோபமா சொல்லிக்கிட்டு இருந்துச்சு, அதான் உன்னைக் கேட்டேன்”

“இல்லக்கா” இதைக் கேட்டவுடன் கயல்விழி சற்று பயந்து போய் விட்டாள்

‘எண்ணி வச்சு கண்டுபிடிக்கிறாங்களே, இது தெரியாம நாம பறிச்சிட்டோமே’ என்று யோசித்தாள். இனிமேல் பறிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். 

அன்று இரவு எட்டு மணிவாக்கில், ஜோதி அக்கா வீட்டு வாசலில் ஒரே பரபரப்பு.  பெண்கள் ஒரு ஐந்து பேர் கூடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர், எல்லோர் முகத்திலும் கலவரம். 

“என்ன சொல்ற ஜோதி அக்கா, சரியா எட்டரை மணிக்கா, என்னால நம்பவே முடியலை” என்றாள் சீதா,  ஜோதி அக்காவின் எதிர் வீட்டில் குடியிருப்பவர்.

“உண்மையைத் தான்டி  சொல்றேன்  சீதா, சரியா எட்டரை மணிக்கு” இது நம்ம ஜோதி அக்கா.

“நீ சொல்றது நம்பற மாதிரி இல்லையே அக்கா” என்றாள் நந்தினி

“ஆமா ஜோதி அக்கா, நீ எதையாவது பார்த்துட்டு உளராத” என்றாள் வள்ளியம்மா

“ஏண்டி, நான் இவ்வளவு சொல்றேன் நம்ப மாட்டேங்கறீங்க. கொஞ்சம் பொறுங்க, எட்டரை மணிக்கு வரும் பாருங்க” என்றாள் ஜோதி அக்கா

“காமெடி பண்ணாத, எனக்கு வேலை கிடக்கு நான் வரேன்” என்றாள் வள்ளியம்மாள். கோபமாக முறைத்தாள்  ஜோதி அக்கா.

திடீரென வள்ளியம்மாள்  வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக வந்த நந்தினி, “அக்கா  அங்க வந்து பாரேன்” என்று பயந்தவாறேக் கூறினாள்

“உண்மையா தான் சொல்றியா நந்தினி?”

“அட ஆமா, நீ வேகமா வா” என்று வள்ளியம்மாளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் நந்தினி.

எல்லோரும் பீதியுடன் ஜோதி அக்கா வீட்டின் மேல் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த காட்சி தான் அனைத்திற்கும் காரணம். அந்த சுவரில் நிழலாக இரண்டு கால்கள் மட்டும் நடந்து கொண்டிருந்தன.

“அக்கா என்னக்கா இது, கால் மட்டும் அந்தரத்துல நடக்குது” என்று பயத்துடன் கேட்டாள் நந்தினி

“ஆமாண்டி, இது ஏதோ பொண்ணோட ஆவி மாதிரி இருக்கு” என்றாள் வள்ளியம்மா

ஜோதி அக்காவின் கண்களில் பயத்துடன் கண்ணீர் வழிந்து ஆறாய் ஓடியது. மாடியிலிருந்த காயத்ரி தற்செயலாக ஜோதி அக்காவின் வீட்டின் முன் ஒரே பரபரப்பாக இருப்பதைப் பார்த்தாள்

“கயல் நீ விளையாடிட்டிரு, நான் இப்ப வந்திடுறேன் மாதவா, பார்த்துக்கோ” என்றாள்

மாதவன் பக்கத்து வீட்டு பையன், அவனும் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். “சரி அக்கா, நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என்றான்

வேகமாக சென்ற காயத்ரி, “வள்ளி அக்கா என்ன ஆச்சு?”  என்று ரகசியமாக கேட்டாள்.

வள்ளி அக்கா கையை மேலே உயர்த்திக் காண்பிக்க, அங்கே இரண்டு கால்கள் நிழலாக நடந்து கொண்டிருந்ததை கண்டு காயத்ரி மிரண்டாள்.  எல்லோருமே அதிர்ச்சியில் இருந்தனர்

ஜோதி அக்கா அமைதியாய், “நான் சொன்னேன்ல கரெக்டா எட்டரை மணிக்கு வரும்னு, வந்துடுச்சு பாருங்க” என்று ரகசியமாகக் கூறினாள்

ஜோதி  அக்காவுக்கு தலை கிறுகிறுத்து மயக்கம் வருவது போலிருந்தது. வாசலிலேயே அமர்ந்தாள்

“நான் யாருக்கும் எந்த துரோகமும் செயலையே, எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது” என்று விசும்பினாள்

“அழாதே அக்கா” என்று அவளைத் தேற்ற முற்பட்டனர்.

‘கயலை விட்டுட்டு வந்தோமே, பாவம் அவள் என்ன செய்கிறாளோ?’  என்று எண்ணிய காயத்ரி, அங்கிருந்து நகர்ந்தாள். 

மாடியின் சிறு சுவற்றில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தாள் கயல். சட்டென மின்னலாய் யோசித்த காயத்ரி, ஜோதி அக்காவிடம் சென்றாள்

“அக்கா நல்லா பாருங்க, அது என் பொண்ணு கயலோட காலின் நிழல். அவள் தான் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறாள், பாருங்க அந்த நிழல் தான் இது”

“என்னடி காயத்ரி சொல்ற?” என்று எல்லோரும் ஒரு சேர மாடியைப் பார்த்தனர்.

ஆம், உண்மை தான், கயல் அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள். மாடியின் சிறு சுவரின் மேல் அமர்ந்து காலைத் தொங்கப் போட்டு அடிப் பிரதட்சணம் செய்வது போல காலை மெல்ல மெல்ல வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்

“தொடர்ந்து மூணு  நாளா எட்டரை மணிக்கு இந்த நிழல் வந்ததே” என்று கண்களை துடைத்தபடி கேட்டாள் ஜோதி அக்கா

“அக்கா, எட்டரை மணிக்கு சாப்பாடு ஊட்ட மாடிக்கு கூட்டிக்கிட்டு போறேன். அங்க அவ இப்படி தான் காலாட்டி விளையாடிட்டு இருப்பா” என்றாள் காயத்ரி

ஜோதி அக்கா நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்

“இருங்க வரேன்” என்று காயத்ரி கயலை அழைத்து வரச் சென்றாள்

“கயல் வாடா ” என்றாள் காயத்ரி. கயல் எழுந்ததும் நிழல் மறைந்தது. அவளை அழைத்துக்கொண்டு ஜோதி அக்காவின் வீட்டிற்கு சென்றாள்.

“கயலு என்ன விளையாட்டு விளையாடிட்டு இருந்த”  என்றாள் வள்ளி

“அடி வைத்து சாமி கும்பிட்டேன்”

“இப்ப எதுக்கு அடி வைத்து சாமி கும்பிட்ட” என்றாள் ஜோதி

“நீங்க எனக்கு சீதாப்பழம் கொடுக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்.  கங்கை அம்மன் கோயில்ல இப்படித் தான் ஒரு அக்கா நடந்துகிட்டே சாமி கும்பிட்டாங்க. எங்க அம்மாகிட்ட கேட்டேன். அந்த அக்கா வேண்டுதல் வைத்து சாமி கும்பிடறாங்க, வேண்டிக்கிட்டா நினைச்சது நடக்கும் அப்படின்னு சொன்னாங்க.  அதான் நானும் அதே மாதிரி சாமிகிட்ட நீங்க சீதாப்பழம் கொடுக்கணும்னு வேண்டிகிட்டேன்”

“சரி அப்ப நேத்து என்ன வேண்டிக்கிட்டு அடி வைத்து சாமி கும்பிட்ட” என்றாள் வள்ளியம்மா

“அது சீதாப்பழத்தை யாருக்கும் தெரியாம கரெக்டா பறிக்கணும்னு சாமிகிட்ட கேட்டேன்”

“அப்ப பழத்தை நீதான் பறிச்சியா?” என்றாள்  ஜோதி அக்கா

“இல்ல நாங்க எல்லோரும் சேர்ந்து தான் பறிச்சோம்.  சாரி” என்றாள் கயல்,  அம்மாவின் பின்னாடி தன்னை  மறைத்துக் கொண்டே, “இனிமே பறிக்க மாட்டேன்” என்று கூறினாள். 

அனைவரும் சிரித்து விட்டனர். அவளை தூக்கிக் கொஞ்சிய ஜோதி அக்கா, “நாளைக்கு பழத்த மரத்திலிருந்து பறிச்சு உனக்கு தரேன்” என்றதும், கயல் துள்ளிக் குதித்து அம்மாவிடம் சென்றாள்

“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!