பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சில் என்று முகத்தில் வீசும் தென்றல் காற்று காதில் வந்து ரீங்காரம் இட, ‘எங்கோ பிறந்தவராம், எங்கோ வளர்ந்தவராம், எப்படியோ என் மனதைக் கவர்ந்த வராம்’ என்ற சஹானா ராகம் பாடலைப் மனதிற்குள் பாடிக் கொண்டே தோட்டத்தில் இருக்கும் மலர்களை பறித்து வந்தாள், ரசிகா என்ற ரசிகப்பிரியா
“ஏம்மா மனசுக்குள்ளேயே பாடற? இசையில் ஊறியது நம்ம பரம்பரை. உன் தாத்தா தோடி இராகத்தின் மேல கொண்ட காதலால் தான் அவருக்கு தோடி கிருஷ்ணன் என்று பெயர்” என்றார் சாரங்கன்
“ஆமாம் ப்பா, சங்கீதம் நம்ம மூதாதையர் நமக்குத் தந்த பொக்கிஷம். அதனால் தானே நானும் இசை என்ற ஒரு சமுத்திரத்தில் கலந்தேன், சங்கீதப்பிரியரைக் ஒரு நல்ல மனிதம் வளர்த்த மனிதரைப் பார்த்தேன்” என்று ரசிகா கடந்த கால நினைவுகளை அசை போட்டாள்
“அம்மா ரசிகா, உனக்கு ஒரு பையன் பார்த்து இருக்கேன். நல்ல குடும்பம், அதோட சங்கீதத்தில் விருப்பம் உள்ள பையன். உன் பாட்டை எங்கேயோ கேட்டு ரசித்து உன்னை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப்படறார், நீ என்ன சொல்றே?” என ரசிகாவின் தந்தை சாரங்கனும் தாய் சாருமதியும் கேட்க
“அம்மா அப்பா, நான் யோசிச்சு சொல்றேன். நான் உங்களுக்கு ஒரே பொண்ணு, நாம சாதாரண குடும்பம். நமக்கு சங்கீதம் தான் ஒரே சொத்து. கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு மகனா அவர் இருக்கனும், அதேப் போல கண்டிப்பா நானும் இருப்பேன்.
ஆனால் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மாறி வருது. பெண்களும் படிச்சு முன்னேற்றம் அடைஞ்சு வரோம். ஆனாலும் பெண் என்றால் சில சமயங்களில் இளக்காரமாகத் தான் நினைக்கிறா
ஒரு பையனை எப்படி கஷ்டப்பட்டு படிக்க வைச்சு முன்னுக்கு கொண்டு வரோமோ, அதே மாதிரி, ஏன் இன்னும் ஜாஸ்தியாகவே பொண்ணை பெத்தவங்க மெனக்கெடறாங்க.
என் பொண்ணு இன்னும் காலேஜில் இருந்து வரலையே, அவ யார்கிட்டேயும் மாட்டாம இருக்கனுமே, அவள் கற்புக்கு எந்த பங்கமும் வரக்கூடாதே என்று பயந்து பயந்து ஒரு பூப்போல வளர்க்கிறேள்
அவர்கிட்ட பேசனும், எங்க அப்பா அம்மாக்கு நான் கடைசி வரை துணையா இருக்கனும்னு சொல்லப் போறேன். அதுக்கு சரி என்றால் கண்டிப்பா பண்ணிக்கிறேன். மருமகளை மகளாக நடத்தற பெரியவா இருக்கிற வீட்டில் இனிமை இருக்கும்”
“ரசிகா… நீ போகாத ஊருக்கு வழி தேடறே. இது நடக்குமா?”
“நடக்கும் ப்பா” என்ற ரசிகா, தன் தம்பூராவை எடுத்து சுருதி கூட்ட ஆரம்பித்தாள்.
மறுநாள் ரசிகாவின் தந்தை சாரங்கன், “ரசிகா… நான் சொன்னனே அந்த பையன் ராஜீவ், அவர் அப்பாகிட்ட பேசிட்டேன். இன்னிக்கு பிள்ளையார் கோவிலில் நீங்க இரண்டு பேரும் மனம் விட்டு பேசலாம்” என்றவுடன், என்ன பேசுவது என்று மனதிலேயே ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டாள் ரசிகா
எளிய பசுமையான நிறத்தில் காட்டன் புடவை, அதிக ஒப்பனை இல்லாத புன்னகை ததும்பும் முகத்துடன் தயாரானாள் ரசிகா
கோவிலில் பிரார்த்தனை செய்த இருவரும், தனிமையில் விடப்பட்ட நிலையில், முதலில் ராஜீவ் பேச ஆரம்பித்தான்.
“ரசிகா… முதலில் நீ எனக்கு கொடுத்த முதல் டெஸ்டில் பாஸாகி விட்டேன். என்னோட அப்பா அம்மாக்கு நான் ஒரே பையன், அதே மாதிரி தான் நீயும். எனக்கு எந்த வித பாகுபாடு கிடையாது. இரண்டாவது நான் ஒரு சங்கீத பைத்தியம். உன்னை முதலில் சபாவில் பாடும் போது ரசிகாவின் அழகை ரசிக்கலை, அவள் பாட்டைத்தான் ரசித்தேன்” என்று இசையைப் பற்றி ஒரு சொற்பொழிவே நடத்தினான்
“ரசிகா… இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. உலகத்துல இருக்கும் அத்தனை பாடலுக்கும் மூலாதாரம் கர்நாடக இசை. ஒரு குழந்தையைத் தாலாட்டும் போது நீலாம்பரி, இனிய திருமண நாளுக்கு ஆனந்த பைரவி என்று நிறைய பல ராகங்களை நமக்கு பொக்கிஷமாக தந்து இருக்கா மும்மூர்த்திகளான ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், ஸ்ரீச்யாமா சாஸ்திரி
இன்னும் சங்கீதத்தை பற்றி நிறைய பேசலாம், நிச்சயமாக உனக்கு போரடிக்காது. நீயும் சங்கீதம் என்ற சாகரத்தில் மூழ்கியவள் தானே. ஆனா நீ இன்னும் ஒன்றை புரிஞ்சுக்கனும். நான் ஒரு ராணுவ டாக்டர். போர் நடக்கும் போதும், இடர்கள் வரும் போதும் நான் நம் அரசாங்கம் கூப்பிட்டா உடனே போகணும். அப்போ எனக்கு முதல் மனைவி என் மருத்துவம்தான். அதற்கு நீ எப்பவும் தடை சொல்லக் கூடாது. இப்போ உனக்கு நான் பச்சைக் கொடி காட்டிட்டேன், நீ பச்சை கொடி காட்டினா நம்ம கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடக்கும்” என்றான் ராஜீவ்
“அடேங்கப்பா… இசையைப் பத்தி நீங்க கதாகாலட்ஷேபம் பண்ணியாச்சு, இப்போ என் டர்ன்” என கலகலவென சிரித்தவள், “எப்படி இசை உங்களைக் கவர்ந்ததோ, அதேப் போல் நீங்க டாக்டர்… அதுவும் ராணுவ டாக்டர் அப்படின்னதும் என்னைக் கவர்ந்தது
ராணுவம் என்பது… நாம நிம்மதியா உட்கார்ந்து பேசிண்டு ஏதோ நம்ப வேலைகளைப் பார்க்கறோம்னா, அதுக்கு பாதுகாப்பு அவசியம். மழையிலும் வெயிலிலும் அலைந்து திரிந்து பசி தூக்கம் இல்லாமல் நம்மை காப்பாத்தறவா ராணுவ வீரர்கள் என்று நான் ஆணித்தரமாக நம்பறேன். அவாளுக்கு சேவை செய்யற ஒரு டாக்டர் என்று நான் பெருமிதப்பட்றேன். என்னிக்கு நம்ம கல்யாணம்?” என்று கேட்க, கோவில் மணிகள் ‘டிங்டாங்’ என்று ஒலித்தது
‘கோபுர தரிசனம் பண்ணிக்கோங்க, கோடி புண்ணியம் கிடைக்கும்’ என்று சொல்வது போல் இருந்தது
பெண்ணுக்கான இன்முகம், கருணை, பொறுமை… ஆண்களுக்கான வீரம், கம்பீரம், அஞ்சாமை… இந்தக் குணங்கள் இருக்கும் கோபுரமும், அதன் மேல் இருக்கும் கலசங்களும் பொக்கிஷங்கள் தான்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
அற்புதமான கதைக்கரு.
இந்தக் கால இளைஞர்களுக்குத்
தேவையான புரிதலை
மிக அழகாக சொல்கிறது அம்மா.
சூப்பர். வாழ்த்துக்கள்.
👏👏💐🤝
அற்புதமான கதைக்கரு.
இந்தக் கால இளைஞர்களுக்குத்
தேவையான புரிதலை
மிக அழகாக சொல்கிறது அம்மா.
சூப்பர். வாழ்த்துக்கள்.
👏👏💐🤝