in

புன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே!!! (வதனி பிரபு) – பல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை

புன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே!!!
வணக்கம், 
பல் மருத்துவத் துறையில் செவிலியராய் இருக்கும் வதனி பிரபு அவர்கள், பல் ஆரோக்கியம் பற்றிய பயனுள்ள இந்த கட்டுரையை “சஹானா” இதழுக்கு பகிர்ந்துள்ளார்.   
 
குறிப்பாய், பெண்களுக்கு எல்லா வயதிலும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அது தொடர்பான பல் பிரச்சனைகள், அதை தடுக்கும் முறைகள் என, நிறைய உபயோகமான தகவல்களை பகிர்ந்துள்ளார், வாசித்து பயன் பெறுங்கள். நன்றிங்க வதனி பிரபு
 
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 
editor@sahanamag.com
contest@sahanamag.com

தாயாய் நின்று தரணியைத் தாங்கும்

தாராமாய் வந்து தளர்வைப் போக்கும்,

உடன்பிறப்பாய் பிறந்து உறுதுணை புரியும்

மகளாய் பிறந்து சேவையில் மகிழும்

அயலார் தமக்கும் அன்பு செய்யும்

நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்

பெண்ணின் பெருமையைப் பறைசாற்றும் நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கேற்ப, பெண் என்பவள் மிகுந்த மனபலம் வாய்ந்தவள், சமூக வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம்.

அவள் இல்லையேல் வீடும், நாடும் இயங்க முடியாதிருக்கும். இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகிறாள் பெண்ண்ணின் பெருமையைப் பறைசாற்றும் நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கேற்ப, பெண் என்பவள் மிகுந்த மனபலம் வாய்ந்தவள், சமூக வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கம்.

இவர்கள் மற்றவர்களின் நலனில் காட்டும் சிறு அக்கறையைக் கூட, தங்கள் நலனில் காட்டுவதில்லை. குறிப்பாக “பல்”லில். பல்லின் வலிமையே, உடலின் வலிமை. அதுவே பெண்களின் மன வலிமையைக் கூட்டுகிறது

வாயை  ‘உடலின் நுழைவாயில்’ என்கிறார்கள் மருத்துவர்கள். “உடல் ஒரு கோயில் என்றால், வாய் அதன் நுழைவாயில்” என்றும் கூறலாம்

வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறுபாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். ‘பல்’லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.

பல் ஆரோக்கியத்தின் அவசியம்

“பல் போனால் சொல் போச்சு” என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள் தான். நாம் பேசும் போது குரல்வளையில் இருந்து வரும் காற்றானது, பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும் போது குரல் பிறக்கிறது

பல் ஆரோக்கியம் என்பது, முக அழகுக்காக மட்டுமல்ல. இதய நோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக் கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. 

உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில் தான் பிரதிபலிக்கும். ஆனால் நம் சமுதாயத்தில் இன்னும் கூட பெண்களுக்கு, ‘பல்’லைப் பற்றியும், அதனால் உண்டாகும் நோய் பற்றியும், விழிப்புணர்வுகள் அதிகம் ஏற்படவில்லை என்று, சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் ஈறு நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்கள் தான்

முக்கியமாக பெண்கள் பருவமடைதல், குழந்தைப் பேறு, மாதவிடாய் நிறுத்தம் போன்ற காலங்களில், பெண்களின் வாய் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுகிறது என்ற, அதிர்ச்சி தகவலையும் தருகிறது அந்த ஆய்வறிக்கை

30 வயதிலிருந்து 54 வயதிலிருப்பவர்கள், பற்புறத்திசு நோயினால் பாதிப்படைகின்றனர். இந்த ‘பற்புறத்திசு நோய்’, எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் இருப்பதால், ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.

பருவமடைதல் பருவத்தில் ஈறுகளில் மாற்றம்

பருவமடைதல் பருவத்தில் ப்ரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு அதிகமாவதால், அது ஈறுகளின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன

இதனால் ஈறுகளானது, மிகவும் மிருதுவானதாகவும், சற்று வீங்கிய நிலையிலும் காணப்படும். இந்நிலையில் உணவுப் பொருட்களின் தாக்குதல், பற்காறையின் தாக்குதலினாலோ, ஈறுகள் எளிதில் ரத்தம் வடிபவையாகவும், வலி உள்ளவையாகவும் இருக்கும்.

மாதவிடாயின் போது ஈறுகளில் மாற்றம்

சில பெண்கள் மாதவிடாயின் போது ஈறுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களது ஈறானது சிவப்பாகவும், வீக்கமாகவும், எளிதில் ரத்தம் வடியக் கூடியதாகவும் இருக்கும்.

வாய் உலர்ந்து போதல், வாயில் எரிச்சல் அதிகரித்தல், சுவையில் மாற்றம் வருதல் ஆகியவை இருக்கும். கன்னத்தின் உட்புறப்பகுதியில் வாய்ப்புண் ஏற்படும்.

இந்த மாற்றங்கள் மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்பட்டு, மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மறைய ஆரம்பிக்கின்றன. இந்த சமயத்தில் பெண்களுக்கு எலும்பு கரைதல் அதிகமாக இருக்கும்.

மகப்பேறு சமயத்தில் ஈறுகளில் மாற்றம்

மகப்பேறு காலத்தில் ‘ப்ரெக்னென்ஸி ஜின்ஜைவிடிஸ்’ என்ற ஈறுநோய் ஏற்படுகிறது. இது மகப்பேறு காலத்தில், இரண்டு அல்லது மூன்றாவது மாதத்தில் தொடங்கி, எட்டாவது மாதம் வரைக்கும் ஈறுகளில் வீக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்கும்

இந்நிலையில், ஈறுவீங்குதல், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல், ஈறுவலித்தல் அறிகுறிகள் காணப்படும். வீங்கிய நிலையில் உள்ள ஈறானது, பற்காறையின் காரணமாக பெரிய கட்டியாகவும் மாற வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஏற்பட்டால், பல் மருத்துவரிடம் காண்பித்து, அதை அகற்றிக் கொள்வது நல்லது. ‘பற்புறத் திசுநோய்’ உள்ள தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள், குறை மாதத்தில் பிறப்பவையாகவும், குறைந்த எடை கொண்டதாகவும் இருக்கலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு, ஈறுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

பற்களின் ஆரோக்கியத்தைப் பதம் பார்க்கும் எட்டு பழக்கங்கள்

  • அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது
  • மேலும், அவற்றை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்
  • சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக் கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.
  • புகைப் பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு, ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.
  • பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால், கடித்து கிழிப்பது போன்ற செயல்களால், பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.
  • நகம் கடித்தல், கோபம் அல்லது மன உளைச்சலின் போது பற்களைக் கடித்தல், போன்ற பழக்கங்கள், பற்சிதைவை உண்டாக்கக் கூடும். பற்கள் தேயக் கூடும்.
  • சீரற்ற முறையில் பல் துலக்குவதால், பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
  • குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது, பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  • உணவு உண்ட பின்னும், குளிர்பானங்கள் அருந்திய பின்னும், ஃபுளூராய்டு டூட்பெஸ்ட் பயன்படுத்தி, பல் துலக்க வேண்டும். இதில் உள்ள மினரல், பற்சிதைவில் இருந்து நம்மைக் காக்கும். வாய் துர்நாற்றத்தை சரி செய்யும்.
  • சாப்பிபிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக் கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்.
  • ‘வாயில் இன்ஃபெக்சன்’ ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.
  • ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். 
  • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
  • பல் மற்றும் ஈறுக்களுக்கு இடையே, பிளாக் (Plaque) என்னும் மஞ்சள் நிறக்கறைபடிந்து இருந்தாலோ, பல் துலக்கும் போது அவற்றில் இருந்து ரத்தம் வந்தாலோ, உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

மருத்துவர் பரிந்துரை

அதோடு, பற்களில் வலி வந்த பிறகு தான் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்பதில்லை. பிரச்னைகள் இருந்தாலும், இல்லை என்றாலும், கட்டாயமாக ஆறுமாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி,  பற்களில் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

’பல்’தானே என்று ஒதுக்காமல், அதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இது உங்களின் புன்னகையை மட்டுமல்ல, உங்களின் தன்னம்பிக்கையையும் மெருகூட்டும்.

உங்களின் அழகான புன்னகையே அன்பான வாழ்விற்கான அஸ்திவாரம் என்ற நம்பிக்கையுடன்  புன்னகைப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

9 Comments

  1. பற்களின் பராமரிக்கும் விதம் குறித்து மிகவும் நன்றாக எழுதிஉள்ளீர்கள் . மிகவும் அருமையான பதிவு சகோதரி . நன்றி, வாழ்த்துகள்.

  2. படைப்பை வெளியிட்டு பெருமைப்படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றிகள் மா

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 1) – விபா விஷா

ஒரிசா பயணம் (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – ஜனவரி மாதப் போட்டிக்கான பதிவு