2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாலை ஏழு மணி.
ராம்குமாரின் கார் அந்தக் கல்யாண மண்டபத்தின் கேட்டினுள் நுழைந்து பார்க்கிங் பகுதியில் நின்றது. செக்யூரிட்டியின் உதவியுடன் அதை நாசூக்காய் பார்க் செய்து விட்டு, காரிலிருந்து இறங்கி, கையில் கிஃப்ட் பார்சலுடன், ரிசப்ஷன் பகுதியை நோக்கி நடந்தனர் ராம்குமாரும் அவர் மனைவி காதம்பரியும்.
ராம்குமார் எப்போதும் பிசினஸ்… பிசினஸ்… ஆபீஸ் மீட்டிங்… கஸ்டமர் மீட்டிங்… செல் போன்… லாப் டாப்… கார்… என தன் நேரத்தைத் துளியும் வீணாக்காமல் ஒவ்வொரு நிமிடத்தையும் காசாக்கிக் கொண்டிருக்கும் ஒரு வணிக காந்தம்…அதாவது பிசினஸ் மேக்னட்.
கிளம்பும் போதே அவர் மனைவி காதம்பரி கேட்டாள், ‘என்னங்க இது… ஆச்சரியமாயிருக்கு…. சொந்தக்காரங்க கல்யாணத்திற்கெல்லாம் நான் வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும் வராத நீங்க… இப்ப யாரோ பழைய கல்லூரி நண்பன்… அதுவும் கடந்த இருபத்தியெட்டு வருஷமா தொடர்பே இல்லாத நண்பன்… அவனோட மகள் கல்யாணத்திற்கு கண்டிப்பா போயே ஆகணும்னு கிளம்பறீங்க… என்னால நம்பவே முடியலைங்க”
‘காதம்பரி கல்லூரில படிக்கற காலத்துல எங்களுக்குன்னு ஒரு குரூப் உண்டு!… அதுல நான்… சுரேஷ்…. கண்ணுசாமி… வேணுகோபால்… ம்ம்ம்…அப்புறம்.. சீனிவாசன்… திருமுருகன்… இந்த திவாகர்!… நாங்க ஏழு பேரும் ஒரு செட்!… பார்க்கறவங்க பொறாமைப் படற அளவுக்கு அவ்வளவு ஒற்றுமையா… ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்துப் பழகினோம்!… நட்புக்கு இலக்கணமே நாங்கதான்னு சொல்லலாம்..அப்படியொரு நெருக்கம்…!”
‘அட…பரவாயில்லையே!”
‘காலேஜ் படிப்பு முடிஞ்ச பிறகு ஆளாளுக்கு ஒரொரு பக்கம் போயிட்டோம்.. ஆரம்பத்துல கொஞ்சம் தொடர்பு இருந்திட்டேயிருந்தது!… அப்புறம் வாழ்க்கையின் ஓட்டத்துல கலந்து போனதுல… புதுசு புதுசா சேர்ந்திட்ட புது நண்பர்களால அவங்களையெல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போயிட்டோம்!… இப்ப… இருபத்தியெட்டு வருஷத்துக்கப்புறம் திவாகர் தன் பொண்ணு கல்யாணத்திற்கு இன்விடேஷன் அனுப்பியிருக்கான்… அதான்… அவனுக்கொரு ஷாக் டிரீட்மெண்ட் குடுக்க… பழைய உறவைப் புதுப்பிக்க…. போறேன்”
ரிசப்ஷனை நெருங்கி பன்னீர்த் தெளிப்புக்களையும், வணக்கங்களையும் பெற்றுக் கொண்ட ராம்குமார் நிதானமாய்க் கூட்டத்தில் தேடினார் தன் பால்ய நண்பனை. ம்ஹூம்…எங்குமே கண்ணில் படவில்லை.
‘என்னங்க…உங்க ஃபிரண்ட் எங்கே?” காதம்பரி கேட்க,
‘அவனைத்தான் நானும் தேடறேன்…கண்ணில் படவே மாட்டேங்கறான்…ஒரு வேளை ரொம்ப வருஷமாயிட்டதால எனக்குத்தான் அவனை அடையாளம் தெரியலையோ?”
‘வாங்க ராம்குமார்…எப்படியிருக்கீங்க?…எத்தனை வருஷமாச்சு உங்களைப் பார்த்து…”
குரல் கேட்டுத் திரும்பிய ராம்குமார் குழப்பமானார். ‘இவன்…இவன்…அட…இவன் பேரும் திவாகர்தான்…இவனும் என் கிளாஸ்ல படிச்சவன்தான்…பட்…இவன் எங்க குரூப் திவாகர் இல்லையே…எங்களோட எதிரி குரூப் ஆளாச்சே!…இவன் அனுப்பிச்ச இன்விடேஷனுக்கா இத்தனை ஆர்வமாய்ப் புறப்பட்டு வந்தேன்…அடச்சே…பெயர்க் குழப்பத்துல ஏமாந்திட்டேனே…இவன் வீட்டு மேரேஜூக்கெல்லாம்…நான் எதற்கு…ச்சை!”
ராம்குமாரின் முகம் பொலிவிழந்து போக,
‘என்ன ராம்குமார் முழிக்கறே?…என்னை அடையாளம் தெரியலையா?…நான்தான் திவாகரப்பா”
‘இல்ல…தெரியுது….ரொம்ப வருஷமாச்சில்ல அதான்….கொஞ்சம்..” சமாளித்தார் அவர்.
‘ரொம்பத் தேங்க்ஸ்பா…என்னை மாதிரி மிடில் கிளாஸ் ஆளுங்க மேரேஜூக்கெல்லாம் நீ வருவியோ…மாட்டியோ…ன்னு ஒரு சந்தேகத்தோடதான் அட்ரஸைத் தேடிப் பிடிச்சு இன்விடேஷனை அனுப்பி வெச்சேன்…பட்..நீ வந்திட்டே…ரியலி ஐ யாம் வெரி…வெரி ஹாப்பி”
‘க்கும்…டேய்..டேய்…ரொம்ப பில்டப் பண்ணாத…நீன்னு தெரிஞ்சிருந்தா இன்விடேஷன் வந்தப்பவே கிழிச்சுப் போட்டிருப்பேன்…” உள்ளுக்குள் சொல்லிக் கொண்ட ராம்குமார் ‘நம்ம கிளாஸ்மேட்ஸ்…வேற யாராவது?” என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.
‘ம்ஹூம்…ஒரு பய வரலை!… கிட்டத்தட்ட எல்லாருக்குமே… இன்விடேஷன் அனுப்பியிருந்தேன்!… என் குரூப் ஆளுங்க கூட எவனுமே வரலேன்னா பார்த்துக்கோயேன்!…எனிவே…நீ வந்திருக்கே ரொம்ப சந்தோஷமாயிருக்கு!”
‘அட முட்டாப் பயலே…விவரம் தெரிஞ்சிருந்தா நானும் வந்திருக்க மாட்டேன்டா” ராம்குமாரின் உள் மனசு சொன்னது.
அப்போது, ‘வெடுக்‘கென்று ராம்குமாரின் கையைப் பற்றி இழுத்துச் சென்ற அந்த திவாகர் கூட்டத்தில் பல பேரிடம் அவரை அறிமுகம் செய்து, ‘என்னோட காலேஜ் மேட்…ஏறக்குறைய இருபத்தோரு வருஷமாச்சு பார்த்து….!…உண்மையைச் சொல்லப் போனா அந்தக் காலத்துல காலேஜ்ல நாங்க ரெண்டு பேரும் எதிரெதிர் குரூப்…ஆனாலும் என்னோட இன்விடேஷனை மதிச்சு வந்திருக்கார்…இப்ப இவரு சாதாரண ஆளில்லையாக்கும்…பெரிய மல்டி மில்லியனர்…” என்று அடுக்கிக் கொண்டே போக, எல்லோரும் ராம்குமாரை மிகுந்த மரியாதையோடு வணங்கினர்.
தர்ம சங்கடத்தில் நெளிந்தார் ராம்குமார் ‘படுபாவி…உனக்காக யாருடா வந்தா?…ஏமாந்து போய்த்தானடா வந்திருக்கேன்”
இறுதியில் மேடையில் இருந்த மணமக்களிடம் ராம்குமாரையும் அவர் மனைவியையும் அழைத்துச் சென்று அதே வசனத்தை நெகிழ்ச்சியுடன் அந்த திவாகர் சொன்ன போது தங்களின் வருகை அந்த மனிதரை எந்த அளவிற்கு புளகாங்கிதப் பட வைத்திருக்கின்றது என்பதை உணர்ந்த ராம்குமாரின் மனைவி காதம்பரி, அதே உணர்வுப் பெருக்கோடு தன் கையிலிருந்த பரிசுப் பொருளை மணமக்களிடம் கொடுத்தாள்.
அதை வெகு ஆர்வமுடன் புகைப்படமாக்கிக் கொண்ட திவாகர் அவர்களை விட்டு அங்கிங்கு நகராமல் கையோடு டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கேயும் அவர்களுக்கு தனிக் கவனிப்பை ஏற்பாடு செய்து, அவர்கள் சாப்பிட்டு முடியும் வரை உடனிருந்து கவனித்துக் கொண்ட அந்த உபசரிப்பு காதம்பாpக்கு உண்மையிலேயே பெருமிதமாயிருந்தது.
எல்லாம் முடிந்து ராம்குமாரும் காதம்பரியும் விடை பெறும் போது மண்டபத்தில் இருந்த பல பேர் வாசல் வரை வந்து வணக்கம் கூறி வழியனுப்பி வைத்தனர்.
காரில் செல்கையில் தன் கணவரின் முகம் ஒருவித இறுக்கத்தில் இருப்பதைக் கண்ட காதம்பரி கேட்டாள். ‘என்னாச்சு உங்களுக்கு?…ஏன் முகம் டல்லாயிருக்கு?”
‘ப்ச்…என்னோட குரூப் திவாகர்ன்னு நெனச்சு இங்க வந்து என்னோட எதிரி குரூப்பைச் சேர்ந்த திவாகருக்கு அப்படியோரு காஸ்ட்லி கிஃப்ட்டைக் குடுத்திட்டு வர்றேனே…அதை நெனச்சுப் பார்த்தேன்…அவ்வளவுதான்”
‘என்ன பெரிய காஸ்ட்லி கிஃப்ட் நீங்க கொடுத்துட்டீங்க…அவர் உங்களுக்குக் குடுத்ததை விடவா காஸ்ட்லி கிஃப்ட் நீங்க குடுத்தது?” காதம்பரி பீடிகையாய் பேச,
‘ஏய்…நீ என்ன சொல்றே?”
‘பின்னே?…ஒவ்வொருத்தர்கிட்டேயும் உங்களைக் கூட்டிக்கிட்டுப் போய்…’என்னோட காலேஜ் மேட்…என்னோட காலேஜ் மேட்”ன்னு சொல்லி ‘இருபத்தியெட்டு வருஷமாகியும் என்னோட இன்விடேஷனை மதிச்சு மறக்காம வந்திருக்கார்”ன்னு பெருமையாச் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டதோட நில்லாம அங்கிருந்த அத்தனை பேருக்குமே உங்க மேல ஒரு தனி மரியாதையே ஏற்படற அளவுக்கு உங்க கூடவே இருந்து கவனிச்சு…வழியனுப்பி வெச்சாரே…அவர; உங்களுக்கு ஏற்படுத்திக் குடுத்த அந்த அற்புத மாpயாதையை விடவா காஸ்ட்லி நீங்க குடுத்த கிஃப்ட்?…சொல்லுங்க!”
‘அது…வந்து…”
‘எப்பவும்… ‘பிசினஸ்… பிசினஸ்‘ன்னே இருக்கற உங்களுக்கு இந்த மாதிரியான நெகிழ்ச்சிகள்…. மகிழ்ச்சிகள்…. சந்தோஷங்கள்…. பெருமிதங்கள்….. எதுவுமே புரியாதுங்க!… உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம்… பணம்… பணம்… பணம்… சொத்து…சொத்து…. சொத்து! அவ்வளவுதான்”
சொல்லிவிட்டு சட்டென்று வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்த மனைவியை ஊடுருவிப் பார்த்தார் ராம்குமார்.
அந்த விநாடியிலிருந்து தன் மனதிற்குள்ளும் லேசான ஒரு சலனம் துளிர் விட ஆரம்பித்திருந்ததை ஏனோ அவர் வெளிப்படுத்திக் கொள்ள வில்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings