in ,

பாரதி கண்ணம்மாவின் விடியல் பயணம்💓 (சிறுகதை) – ✍ ஹீராஷினி இராமன், பினாங்கு, மலேசியா

பாரதி கண்ணம்மாவின் விடியல் பயணம்💓
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 41)

ழக்கத்திற்கு மாறாகவே அன்று ஏனோ அவனது நெஞ்சம் அதிகம் அலைப் பாய்ந்தது. மனதில் ஆழமாய் இறங்கிய இடியின் தாக்கம் அவனது விழியோரம் கண்ணீராகப் பெருக்கத் தொடங்கியது.

தன் வாழ்கையில் திறந்திருந்த கதவுகள் யாவும் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தற்பொழுது அடைக்கப்பட்டு விட்டதாகவே உணர்ந்தான். நடப்பது அனைத்தும் நன்மைக்கே என மனம் வெறுத்தப்படியே நண்பர்களிடமெல்லாம் முற்றும் துறந்த முனிவராய் பேசி திரிந்தவனுக்கு, இந்த அதிர்ச்சியை ஏனோ ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை.

‘இது என்ன கொடுமை இறைவா! ‘விடியலை மீட்போம்’ எனும் இவ்வாசகத்தைத், தன் காதலை சொல்லியதை விட இதையல்லவா தன் மனைவியின் காதில் தினமும் கூறி நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன்’ என முணுமுணுத்தவாறு அமந்திருந்தான்.

இன்று காலையில் கூட இதையே தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ச்சியாகப் புறப்பட்டவனுக்கு, அப்பொழுது ஏனோ புரியவில்லை இந்த கோவிட்-19 துயரம் தன்னையும் தாக்கும் என்று.

இலவு காத்தக் கிளி போல விடியலுக்காகக் காத்திருந்தவனின் திசையெல்லாம் திக்குத் தெரியாமல் போனது.

“நம்மால் என்ன செய்ய முடியும் பாரதி. இதே நினைச்சா கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கு. நம்ப தான் வேற வழியத் தேடி போகணும் டா” என்று தனக்கு ஆறுதல் சொல்ல வந்த செழியனின் வார்த்தைகள், பாரதியின் காதுகளில் கேட்கவே இல்லை.

“பாரதி” என்று மறுமுறை அழுத்தமாக உடலை உலுக்கியப் போது தான் சுய நினைவிற்கே வந்தான் பாரதி

“என்ன அழந்த யோசனை உனக்கு. இப்போ குடியா மூழ்கி போச்சி. இப்படி ஒடஞ்சிற  கூடாது. அது சரி, இந்த கோவிட்-19 யாரத் தான் விட்டுச்சு. நோயால பாதிச்சவன விட வேல இல்லாம போனவங்கத் தான் அதிகம்னு எல்லாரும் சொல்லுறாங்க” என்ற செழியனின் வார்த்தைகள், பாரதியின் சிந்தனைக்கு விதையாகவும் மன வருத்தத்திற்கு மருந்தாகவும் அமைந்தது.

இருவரும் நடந்த படியே, “இவங்க ஏதுமே சொல்லாம திடீர்னு இப்படி சம்பளத்தைக் கொடுத்து வேலை விட்டு தூக்கினா நம்ப எங்கேனு போறது. இப்போ இருக்குற சூழ்நிலைக்கு வேற வேலயும் தேட முடியாது.  இப்ப தான் வீட்ல எல்லாம் சரியாச்சு!” என்று பெருமூச்சி விட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற முற்பட்டப் பாரதியை, செழியன் கை பிடித்து நிறுத்தி ஆரத் தழுவினான்

“ஒன்னும் கவலைப்படாத, பத்திரமா வீட்டுக்குப் போ. கண்ணம்மாவோட மனசு விட்டு பேசு, கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” செழியன் அன்பு வார்த்தைகளைப் பொழிந்தான்.

அது ஏனோ பாரதிக்குக் காலையில் வேலைக்குச் புறப்படும் போது இருந்த உற்சாகம் ஏதுமின்றி, இறுக்கமான முக்கத்துடன் மகிழுந்தை வீட்டை நோக்கி செலுத்தினான்.

கணித துறையில் தனது பட்டப்படிப்பை முடித்திருந்த பாரதிக்கு விரல் விட்டு எண்ணுவதற்குக் கூட எந்த ஒரு குறையுமின்றி பகட்டான வாழ்கையில் திளைத்தவன்.

அன்பை உற்றாய் பொழியும் பெற்றோர், கன்னிணைக் காக்கும் இமை போல சகோதரர்கள், தூணாக விளங்கும் உறவினர்கள், கூடி வாழும் சுற்றம், தோள் கொடுக்கும் நெருங்கியத் தோழர்கள் என்று அனைத்துச் சுகத்தையும் ஒருங்கிணைந்து பெற்றுப் பெருமிதம் கொண்டவனாக இருந்தான், கண்ணமாவை கரம் பற்றும் வரையில்

பார்வை குன்றியவனுக்குத் திடீரென்று பார்வை கிட்டியது போல, பாரதியின் வாழ்க்கையில் இறைவன் அளித்த பெரும் வரமாகவே கண்ணம்மாவை நினைத்துத் தாங்கினான்.

ஆம்! கண்ணின் மணியாய், கள்ளங்கபடமில்லாமல் புன்னகைக்கும் காதலியாய் வந்த முண்டாசு கவிஞனின் கண்ணம்மா, தன் வாழ்நாள் துணைவியாய் அடைந்தவன் பாரதி

பலகலைக்கழகத்தில் காதலித்தவளையே கரம் பிடிக்க எண்ணினான். ஆனால், பாரதியின் வீட்டில் நிராகரித்தனர். இந்த பாரதியின் மூச்சும் அளவில்லா காதலும் கண்ணம்மாவிர்க்கு மட்டுமே உரியது என வீட்டில் போராடினான். அப்போதும் முடியாதென்று மறுத்தனர்

ஆடம்பரமெனும் குடைக்குள் நிழலுக்குப் பதங்கியவன், அனைத்தையும் துறந்து வெளியேறினான். அதிசயக் காதல் படகில் ஏறினான். அவளோடு சேர்ந்தால் அரையடி வைப்பதற்குள் வாழ்க்கை கசந்து விடும் என்று ஏளனம் பேசியவர்கள், முன்னால் இரண்டு ஆண்டு காலம் கலகலப்பாய் கடந்து விட்டான்.

தொடக்கத்தில் போராட்டமாய் அமைந்தாலும், கண்ணம்மாவின் மாசற்ற அன்பு பாரதியின் வாழ்க்கையைச் சீரமைத்தது.

இரண்டு ஆண்டு கால காதல் வாழ்க்கை அவர்களுக்கு இனிக்கத் தொடங்கிய போது தான், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாய் இந்த எதிர்பாரத பணி நீக்கம்

பாரதியின் அலுவலகத்தில் மட்டுமல்லாது, இந்த எதிர்பாரத பணி நீக்கம்  நாடு முழுவதும் அரங்கேறியது. கடந்து வந்த போராட்டப் பாதையின் நினைவுகளை, வானொலியில் ஒலிக்கப்பட்டிருந்த தித்திக்கும் திரைகாவியப் பாடல்கள் மெல்ல தாலாட்டின.

விளம்பர இடைவேளையின் ஓசையில் தான் மீண்டும் நிகழ்கால சிந்தனைக்குள் விழுந்தான் பாரதி. பயணிக்கும் வழியெல்லாம் தன் சிந்தனையைப் படரவிட்டவனுக்கு வீட்டை அடைந்து விட்டது மகிழ்ச்சியைத் தரவில்லை.

கண்ணம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவாறு மகிழுந்தை வீட்டு வாசலில் கிடத்தினான். ஆனால், தன்னையே நம்பி வந்தவளுக்கு இதுவரை என்ன செய்து விட்டேன் என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கியிருந்தது

பாரதிக்குள் எண்ணற்ற சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. என்ன நடந்தாலும் சரி, கண்ணம்மாவை மட்டும் தனியே விட்டு விடக் கூடாது என்ற எண்ணம் பசுமரத்தாணி போல ஆழமாய் பதிந்தது.

#ads – Best Deals in Amazon 👇


வாசலை அடைந்தவன் கதவைத் தட்டினான். “இதோ வரேன்” என்ற குரலோடு காலையில் அலர்ந்த அல்லியாய் புன்சிரிப்போடு கணவனின் அன்பை எதிர்பார்த்தப்படியே வாசற்கதவை திறந்தாள் கண்ணம்மா

“என்னங்க வழக்கத்த விட இவ்வளோ சீக்கிரமா வந்துட்டிங்க? என் மேல அவளோ பாசமா?” என்று நகைத்தப்படியே வினவினாள்

பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் சாதித்தான்

“என்னங்க! உங்கள தான் கேக்கறேன், சரி இருங்க தண்ணி எடுத்து வரேன்” என்று சொல்லி உட்கார இருக்கையை நோக்கி கை கட்டினாள்

நீட்டிய அவர் கரத்தைப் பற்றிய பாரதி, “கண்ணம்மா, நா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” எனவும்

முகத்தில் எவ்வித பாவனையுமின்றி, “என்ன சொல்லணும்?” எனக் கேட்டாள் கண்ணம்மா

பாரதியின் தொண்டை இறுகி,  வார்த்தைகள் வெளிவர மறுத்தது

“சரி உட்காருங்க பா, வரேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள் கண்ணம்மா

தொம்பு இல்லாதவனாய் நாற்காலியில் அமர்ந்தான். தனது வேலை பறிபோனதைச் சொன்னால் கண்ணம்மா எவ்விதமான உணர்வுகளை வெளிக் கொணர்வாள் என்பதை எண்ணி பாரதியின் மனம் கலங்கியது.

உள்ளே சென்றவள் வரும் போது கையில் தண்ணீர் கோப்பையுடன் வந்தாள். “இந்தாங்க குடிங்க” என்று கோப்பை நீட்டியவள், பாரதி அருகே அமர்ந்தாள்

நீரை மெல்ல விழுங்கினான். அதற்குள் குறுக்கிட்டு “காலைல நா சொன்னது…” என்று இழுத்தாள் கண்ணம்மா.

அவளின் புதிர்க் கொண்ட பேசு பாரதியைத் திக்குமுக்காட செய்தது

“என்ன சொன்ன?” என்று மனதிற்குள் கேட்பது போல வெளியே வாய்விட்டே சொல்லி விட்டான்.

கண்ணம்மாவின் முக்கத்தில் பாவனைகள் மாறியதோடு ஆதாங்க பார்வையும் மேலிட்டது

பாரதியின் வலது கையைப் பற்றி தன் வயிற்றில் வைத்து, பாரதியின் காதோரம் “பாப்பா” என்று மெல்லியக் குரலில் கூறி புன்முறுவலிட்டாள்.

மறுகணமே இதுவரை தன்னை அணைத்திருந்த இருளெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகியதை உணர்ந்தான் பாரதி

உச்சிக் குளிர்ந்த பாரதி, எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை இந்த அலுவலக அழுத்தத்தினால் மறந்து விட்டேன் என்று நினைத்தவனுக்கு, மறுபக்கம் பேரிடியாய் அந்த பணிநீக்கம் கண் முன்னால் வந்து சென்றது.

சுதாரித்துக் கொண்டவன், “கண்ணம்மா!” என்று ஈன குரலில் அழைத்தான்.

அவனது கண்களை உற்றுப் பார்த்தவளிடம் “ஏன் கண்ணம்மா? நமக்கு மட்டும் இப்படி நடக்குது. ஒன்னு முடிஞ்ச இன்னொன்னு வருது. நல்லது நடந்த மறுநொடியே நமக்கு கெட்டதும் சேர்ந்து கொள்ளுது. ஒரு கதவ அடைச்சிட்ட கடவுள் இன்னொரு கதவ நமக்கு திறப்பாரா” என்று மேலும் தொடர்ந்தான் பாரதி

“நமக்கு மட்டும் விடியலே வராத என்ன?” என்று பொங்கி எழத் தொடங்கியவனை வாயில் கை வைத்துத் தலையை “அப்படி சொல்லாதீங்க” என்ற பணியில் அசைத்தாள் கண்ணம்மா.

மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வந்த பாரதியின் விழிகளை நோக்கியவாறே “நடப்பது அனைத்தும் நான் அறிவேன்” என்ற தொனியில் கண் சிமிட்டினாள் கண்ணம்மா.

அவளின் சிமிட்டல் பாரதிக்குத் திகைப்பை ஏற்படுத்தியது. பாரதியின் கண்கள் நிழலாடவில்லை. “அது எப்படி சாத்தியம்” என்ற பல்வேறு கேள்விகள் அவனது மனதைத் தொடுக்கத் தொடங்கியது.

பாரதியின் குமுறலின் வெப்பக் கனல் தீண்டப்பட்டவளாய், கண்ணம்மாவே முன் மொழிந்தாள். “ஆமாங்க. எல்லாம் கேள்விபட்டேன். செழியன் அண்ணா தான் சொன்னாரு. நீங்க வந்தவுடனே உங்ககிட்டக் கேட்க வேணாம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்” என்றாள்

பேசி முடித்தக் கண்ணம்மாவின் முகத்தையே சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாரதி

ஒரு பக்கம் தான் சொல்ல வந்ததைக் கண்ணம்மாவே அறிந்து இருந்தது குற்றவுணர்ச்சிக்கு வடிகால் ஏற்படுத்தினாலும், மறுபக்கம் இந்த நிலமையை எவ்வாறு கடத்துவதென்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தான்

“அது இல்ல கண்ணம்மா, அடுத்து என்ன பண்றதுனு எந்த ஒரு வழியும் புலப்படல. பாப்பாவோட எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைச்சலே பகிர்னு இருக்கு. விடியல்னு ஒன்னு நம்ப வாழ்க்கைக்கு இப்ப தேவ. உனக்கு ஏற்ற துணைவனா இருக்க முடியலே, பாப்பாக்கு நல்ல தந்தையாவும் இருப்பேனானு தெரியலே” என்றான்.

ஆனால், முன்பை விட இப்பொழுது பாரதிக்குப் பொறுப்பான குடும்பத் தலைவனின் சாயல் தெரிந்தது

சட்டென்று எழுந்தவள் பாரதியின் கன்னங்களில் இரு புறமும் கை வைத்தப்படி “இது வருத்தப்பட்டு உட்கார வேண்டிய நேரமில்ல, துணிஞ்சு நின்று போராட வேண்டிய நேரம். இது நமக்கு மட்டுமே நடந்திருந்தா அது அநீதி, நாட்டுல எல்லாருக்கும் இப்போ இந்த நிலைமை தான. சற்று சோர்ந்துட்டா காலத்தால் பின் தள்ளப்பட்டு விடுவோம்” என வீரமங்கையைப் போல் பேசினாள் கண்ணம்மா

எட்டயப்புரக் கவிஞனின் புதுமைப் பெண்ணாகவே தோன்றினாள் இந்த கண்ணம்மா

“அதுலாம் சரி தான் கண்ணம்மா, நம்ம பாப்பா?” என்று வார்த்தையை மென்று விழுங்கியவனிடம் தீர்க்கமாய் போட்டுடைத்தாள்

“இங்க பாருங்க. இது பாரதி கண்ணம்மாவின் குழ்ந்தை. நமது முதல் பிள்ளை அல்லவா, சற்று புரட்சிக்கரமாகத் தான் பொறக்கும்” என்றப்படி வயிற்றை தடவி மகிழ்ச்சியடைந்தாள்

குழந்தையின் அசைவை தானும் உணர எழுந்தவன், “உண்மைல என்ன வழி இருக்குனு தெரியல கண்ணம்மா? முன்கூட்டியே இத்தகவலை தெரிஞ்சிக்கிட்ட உனக்கு, வேறேதும் வழி புலப்படலையா?” என மனைவியிடம் கேட்டான் பாரதி 

புன்னைகைத்தப்படியே, “நல்ல வழியா? ஆஹா இருக்கே” என்று தனது முக பாவனையிலே பாரதிக்குப் பதிலளித்தாள் கண்ணம்மா

பின் தொடர்ந்து கூறினாள், “என் நண்பர்களிடமெல்லாம் கேட்டேன். அவங்களும் நல்ல யோசனை சொன்னாங்க. அலுவலக ஊழியர்களுக்கு உணவு செஞ்சி கொடுக்குற வேலை மாறி செயலாம்னு பார்த்தேன்”

பாரதியோ “அது எப்படி சாத்தியம் கண்ணம்மா? இந்த மாறி சூழ்நிலைல யாரு தான் நமக்கு வாய்ப்பு கொடுப்பா? அதும் இல்லாம உணவு வாங்குறவங்க சரியா காசு கொடுப்பங்களா? மிச்சம் பண்ண தான யோசிப்பாங்க” எனக் கேட்க

“முடியும்னு நினைச்சா அனைத்தும் சாத்தியம் தான் பா! இப்போ எல்லா உணவகமும் கோவிட்-19 ஊரடங்குக் கட்டுபாடு உத்தரவால முடங்கிக் கெடக்கு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல கிடைக்கும் இந்த நல்ல வாய்ப்பை சரியாப் பயன்படுத்திக்கிட்டா நம்ப நிச்சயமா விடியல ஏற்படுத்திக் கொள்ளலாம்” என்றாள் கண்ணம்மா

மனைவியின் இந்த நேர்மறை சிந்தனை, பாரதியையும் சற்று அசைத்து பார்த்தது.

“நீங்க மட்டும் சரினு சொல்லுங்க, எல்லாமே சிறப்பா நடக்கும். உழைக்கறதுக்குத் தெம்பு இருக்கு. உங்களுக்குத் துணைக்கு நான் இருக்கேன். நம்ப உற்சாகத்துக்கு இதோ பாப்பா வேற இருக்கு. இதை விட என்ன வேணும்? தொடர்ந்து முயற்சித்தால், நாளைய விடியல் நமக்கான வாழ்கையின் விடியலாகவே அமையும்” என்ற கண்ணம்மாவின் ஆணித்தரமான பேச்சு, பாரதிக்கு மகிழ்வைத் தந்தது

வாழ்வின் சுகத்தில் உடன் உய்ந்தவள், இன்று தன் துன்பத்திலும் கை கொடுக்கும் பாங்கு கண்டு, பாரதி ஆனந்த வெள்ளத்தால் மூழ்கிப் போனான்.

திருமணத்திற்கு முன்பு பெற்றிருந்த எல்லா நிறையும், இப்பொழுது கண்ணம்மாவின் ரூபத்தில் மீண்டும் ஒருங்கே பெற்றவனாய் உணர்ந்தான் பாரதி

அப்பொழுது தான் மிளிர தொடங்கிய அவர்களின் வாழ்க்கை, சற்று இருளை தந்திருந்தாலும் பாரதி கண்ணம்மாவை கை விடவில்லை

“வெறுங்கை முழம் போடுமா? ஏதுமில்லாமல் எப்படி தொழில் தொடங்குவது” எனும் பல கேள்விகள் அவனுள் எழத் தொடங்கியது

வாய் திறந்தவனை குறுக்கிட்டு, “முதலீட்டுக்கு என்கிட்ட நீங்க கொடுத்தப் பணத்துல சேமித்து வெச்சிருக்கேன். அதை பயன்படுத்தி முதல்ல ஆரம்பிப்போம். நாளைக்கே எனக்குத் தெரிஞ்ச தோழிய போய் பாப்போம். இதை பத்தி மேலும் பேசி தெரிஞ்சிபோம்” என்றாள்

கருமேகமாய் சூழ வந்த சிக்கல், இன்று கண்ணம்மாவால் விடியல் பாதையில் முன்னேறியதைக் கண்டு, மிகவும் மகிழ்ந்தான் பாரதி

அவனை சூழ்ந்திருந்த மன அழுத்தம், கண்ணம்மாவிடம் பேசியப் பத்து நிமிடங்களில் இடம் தெரியாமல் போனது

காதல் வாழ்க்கையின்  விடியலுக்காகப் பாரதி ஏற்றியத் தீபமொன்று, பலத்த காற்றினால் அணைய முற்படும் போது, கண்ணம்மா எனும் அழகியச் சிற்பம் கொண்டு வந்த அளப்பரியத் தீப்பெட்டியின் தீக்குச்சியால், அணைந்த தீபம் மீண்டும் அண்ணாமலை ஜோதியைப் போல பிரகாசமாக ஒளி வீசத் தொடங்கியது

பாரதி வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம், தோளுக்குத் தோளாய் கை கொடுத்து உயர்த்தும் கண்ணம்மாவின் பெயரையே, தனது புதிய நிறுவனத்திற்குச் சூட்ட ஆவலோடு எதிர்பாத்திருந்தான் பாரதி.

கண்ணம்மாவின் முக்கத்தை நோக்கியவாறு, மீண்டும் தனது சிந்தனையை வேறொரு திசையின் பக்கம் படரவிட்டான் பாரதி.

பாரதி கண்ணம்மாவின் வாழ்க்கையில் இந்த கோவிட்-19 எனும் பெருந்தொற்று கொழு கொம்பற்ற கொடி  போல வாழ்கையின் விழும்பில் தள்ளினாலும், இந்த காலக்கட்டமே ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து செயல்படக் காரணமாக அமைந்தது.

வேலைப்பழு முடிந்து வீடு திரும்பும் போதெல்லாம், பாரதியின் அசதியைப் போக்கவும் இன்பத்தில் மூழ்கடிக்கவும் கண்ணம்மா ஒரு போதும் தவறியதில்லை.

ஒவ்வொரு முறையும் பாரதி, கண்ணம்மாவை பெருமிதத்துடன் காணும் போது “அனைத்து நற்குணத்தையுமே ஒருங்கிணைத்துப் பெற்றவள் இவளா என் வாழ்கையில் நுழைந்து தனது மாயா வலையால் தன்னை மயக்கியக் கள்ளி. இவள் தானோ என் கண்ணம்மா?” என அடிக்கடி நினைத்துப் பூரித்துக் கொள்வான்

திரைப்படக் காட்சியைப் போல் கண்ணம்மாவின் சிறுசிறு நினைவுகள் வரும்போதெல்லாம், கவிதையின் நாயகனுக்குரியக் காதலியின் ‘பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு’ எனும் பாடல் வரிகளே பாரதியின் சிந்தனையில் உதிக்கும்.

வீட்டின் சன்னல்கள் காற்றினால் ஒன்றோடு ஒன்று உரசி சத்தம் எழும்பும் வேளையில் தான், மீண்டும் சுய நினைவிற்கு வந்தான் பாரதி

சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. காதல் பெருகி ஊற்றும் அத்தருணத்தில், இருவரும் மனம் வீட்டு கண்ணோடு கண்ணாக பேசியவாறே அமந்திருந்தனர்.

நாளைய விடியல் நமக்கான விடியலாக அமையுமா? என்ற எதிர்பார்ப்போடு கண்ணம்மாவின் மடியில் படுத்தப் பாரதிக்கு, உலகமே மறந்து போனது

வயிற்றில் ஒரு குழந்தையும் மடியில் ஒரு குழந்தையும் படுத்தபடி, விடியலின் நாளுக்காக இமைகளின் ஓரம் கனவுகளையும் மனதில் குடும்பத்தின் பாரத்தையும் சுமந்தப்படி அமர்ந்திருந்தாள், கண்ணம்மா எனும் பெண் சிங்கம்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விதிவிலக்கு (சிறுகதை) – ✍ த.வேல்முருகன், ஈரோடு

    அன்பு தெய்வங்கள் (சிறுகதை) – ✍கு. அசோக் குமார், சென்னை