in ,

அன்பு தெய்வங்கள் (சிறுகதை) – ✍கு. அசோக் குமார், சென்னை

அன்பு தெய்வங்கள்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 42)

“போலாம்மா” என்றபடி வேகமாக வாசலுக்கு ஓடினான் வினய்.

டிஷர்ட் ஒன்றினுள் நுழைந்தபடி, “வெளிய போவாதடா”  என்று இரைந்தான் சித்தார்த்.

“அவ வெயிட் பண்ணுவாப்பா”

“ஓலா புக் பண்ணிருக்கன், கார் வந்துரும் இரு”

“அவளைப் பார்க்க பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னோம், இங்கயே பத்து ஆகப் போவுது. பாவம், காலைல இருந்து காத்துட்டு இருப்பா” என்றாள் மகள் கீர்த்தி.

“பாத்ரூமுக்குள்ள போனா ஒரு மணி நேரம் என்ன பண்ணுவீங்களோ தெரியல. உங்களாலத் தான் லேட்” என்றாள் சித்தார்த்தின் மனைவி அபர்ணா.

“உள்ள தூங்கிருவாரு போல” என்று சிரித்த கீர்த்தி, இவர்களின் முதல் பெண். மைலாப்பூர் வித்யா மந்திரில் எட்டாவது படிக்கிறாள்.  வினய் அதே ஸ்கூலில் நான்காம் வகுப்பு பயில்கிறான்.         

“விசிட்டர்ஸ் அவரே பன்னெண்டு மணி வரைக்கும் தான், நாம போய் சேரவே பதினொண்ணு ஆயிரும்” என்று சலித்துக் கொண்டாள் அபர்ணா.

“ஞாயிற்றுக்கிழமை தான, சொல்லிக்கலாம்” என்ற போதே அவனது போன் அடிக்க “ஓலா டிரைவர் தான். வந்துட்டார் போல” என்றபடி போனை அட்டென்ட் செய்து வீடு இருக்குமிடத்தைக் கூறினான் சித்தார்த்.

சிறிது நேரத்தில் வண்டி வந்து சேர, வீட்டைப் பூட்டிக் கொண்டு நால்வரும் காரில் ஏறினர்.

“எங்க சார் போகணும்?”

“மைலாப்பூர் பியர்ல்ஸ்”

“இருபது சேர்த்து குடுங்க சார்”

“சரி போங்க”

டிராபிக்கில் முக்கால் மணி நேரம் ஊர்ந்து சென்ற கார், பியர்ல்ஸ் கேட்டில் நின்றதும் டிரைவருக்கு பணத்தை தந்து விட்டு சித்தார்த் இறங்க, நால்வரும் உள்ளே சென்றனர்

வாசல் கதவருகில் இவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தாள் அவள். கையில் போன முறை தந்த பொம்மை. தீபாவளிக்கு எடுத்த பிங்க் கலர் பிராக். கண்களில் ஏக்கம் தேங்கியிருந்தது. 

முகத்தில் ஆசையும், பயமும், ஆர்வமும், குழப்பமும் மாறி மாறி தோன்றி மறைந்தது. இவனைப் பார்த்ததும் ஓடி வர முயன்றவள், மற்றவர்களைப் பார்த்து தயங்கி நின்றாள்.  அவள்  சித்தார்த்தின் வளர்ப்பு மகள் மாளவி.

பிரைவேட் கம்பெனி ஒன்றில் மேனேஜராக இருந்தான் சித்தார்த். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்பது அவனது நீண்ட நாள் ஆசை. திருமணத்திற்கு பின்னர் மனைவியிடம் கூற, அவளுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. ஒரு குழந்தையை  பெற்றுக்கொண்டு மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர்.

கீர்த்தி பிறந்த பின்னர் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்க, குழந்தையை தத்தெடுப்பது கொஞ்சம் தள்ளிப் போனது. எதிர்பாராமல் இரண்டாவது முறையாக அபர்ணா கருத்தரித்தாள்.

ஒரு உயிரை வளர்க்க மற்றொரு உயிரை பறிக்க வேண்டாமென ஆசையை கை விட்டனர். எனினும் மனதின் ஓரத்தில் தத்தெடுக்கும் ஆசை மேகமாய் திரண்டு உருண்டு கொண்டிருந்தது.

#ads – Best Deals in Amazon 👇


 

நான்கு வருடங்களுக்குப் பின்னர் நண்பர் ஒருவர் மூலம் பியர்ல்ஸ் காப்பகத்தைப் பற்றி கேள்விப்பட்டான் சித்தார்த். மறுநாளே மனைவியுடன் புறப்பட்டு அமைப்பை நிர்வகித்த பாத்திமா சிஸ்டரை சந்தித்தான்.

“வணக்கம் சிஸ்டர், பிரண்டு ஒருத்தர் உங்க காப்பகத்தைப் பற்றி சொன்னார். ஒரு குழந்தைக்கு ஸ்பான்ஸர் அண்ட் கார்டியனாகலாம்னு விரும்பறோம். அதான் விசாரிச்சிட்டு போக வந்தோம்”

“வெல்கம், உட்காருங்க” என்ற சிஸ்டருக்கு வயது நாற்பதில் நின்று போயிருந்தது. நீல நிற பார்டருடன் வெண்ணிற அங்கியால் தலையை மூடி, மென்மையின் உருவமாய் கனிந்து இருந்தாள்.

காப்பகம் மிகத் தூய்மையாய் மெல்லிய  நறுமணத்துடன் இருந்தது. பின்னணியில் தோத்திரப்  பாடல் லேசாக ஒலித்துக் கொண்டிருந்தது.  சுவரில் இருந்த புகைப்படத்தில், சகாயமாதா கருணை நிரம்பிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்

“நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்ட சிஸ்டர் “எத்தனை குழந்தைகள்? தத்தெடுக்க என்ன காரணம்?” என மேலும் விசாரித்தவர், மேலும் தொடர்ந்து பேசினார்

“முதலில் இங்க வர நினைச்சதுக்கு நன்றி. இது ஒரு அனாதைக் குழந்தைகள் காப்பகம். இங்க லீகலா குழந்தைகளை தத்து எடுத்து  கூட்டிட்டு போகலாம்.  சில  பேரால குழந்தையை  வீட்டில் வச்சி வளர்க்க முடியாது. அப்படி இருக்கவங்க பிடிச்ச குழந்தைகளை செலக்ட் செஞ்சி ஸ்பான்ஸர் கம் கார்டியனா மட்டும் பொறுப்பேத்துக்கலாம்.

குழந்தையை வளர்ப்பதை நாங்களே பாத்துக்குவோம். மாசாமாசம் உங்களால் முடிஞ்ச பணஉதவி செஞ்சா போதும். எதுவும் கட்டாயம் கிடையாது. முடியலன்னு தோணுறப்பா எங்களுக்கு சொல்லிட்டு நிறுத்திக்கலாம். அதே நேரம் ஒரு விஷயம் மனசுல வெச்சுக்கணும் நீங்க.

ஒரு குழந்தைகிட்ட பழகி ஒரு உறவை அன்பான உணர்வுகளை ஏற்படுத்திட்ட பிறகு, திடீர்னு விட்டுட்டு போயிட்டா அவங்க மனநிலைமை பாதிக்கும் இல்லயா? அதனால, தொடர்ந்து செய்ய முடியும்னு தோணினா பண்ணுங்க. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமா  தடை வந்தா, அந்த நேரத்தை ஆண்டவர் கைல விட்டுட்டுடலாம். அவர் சரி பண்ணுவார்.  

தினமும் சாயங்காலம் அஞ்சு டு ஆறு அப்புறம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்திலிருந்து பன்னெண்டு மணி வரைக்கும் பார்வை நேரம். குழந்தைகளை வந்து பாக்கலாம். ஹாஸ்டலில் தங்கியிருக்கும் சொந்த குழந்தைகளைப் பார்ப்பது போல உணவு, உடை கொண்டு வந்து தரலாம். வெளிய கூட்டிட்டு போகணும்னா உங்க போட்டோ, ஐடி, ஆதார்னு கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்கு. குழந்தைகளோட பாதுகாப்புக்காகத் தான் இதை பாலோ பண்றோம். வாங்க இருக்குற குழந்தைகளை காட்டுறேன்” என்று அழைத்துச் சென்றாள்

அடுத்த ரூமில் இரண்டு பெண்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்

“உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு. கர்த்தர் உனக்கு பலனளிப்பார்” என்று சுவர் வாசகம் சொன்னது.

நிலைமாறி இடம்மாறி இடிந்த சுவற்றின் விரிசலில் பூச்செடியாய் முளைவிட்டிருப்பதை இன்னும் அறியாமல், சில குழந்தைகள் தொட்டிலில் சுருண்டு கிடந்தன. முகவரியற்ற கடிதங்களாய், சில குழந்தைகள் தடுமாறியபடி நடந்து திரிந்து கொண்டிருந்தன.   

“அஞ்சு வயசு வரைக்கும் இங்க வச்சிருப்போம். அப்புறம் பக்கத்துல இருக்க செயின்ட் ஜார்ஜ் ஆர்பனேஜுக்கு அனுப்பிருவோம். அவங்க ஹாஸ்டலில் தங்க வச்சு படிக்க வைப்பாங்க. அதுக்குள்ள யாராவது தத்தெடுக்க வந்தால் தந்துருவோம்”

ஹாலில் மெதுவாக நடந்தனர். எவரின் கவனிப்புமின்றி புறம்போக்கு நிலங்களாய் குழந்தைகள்  கிடப்பதைப் பார்க்க, பாவமாய் இருந்தது சித்தார்த்திற்கு

‘விதி இன்னும் எழுதப்படாத உயிரின் வடிவங்கள் இவை. மனிதர்களை சோதிக்க தெய்வங்கள் அனுப்பிய தேவதைகள்’ என நினைத்தான்.

“உங்களுக்கு பிடிச்ச குழந்தையை செலக்ட் பண்ணிக்கலாம். போட்டோ எடுத்துக்கலாம். பெயர் நீங்களே வைக்கலாம்” என்றாள் சிஸ்டர்.

“இதுவரைக்கும் இவங்களுக்கு பெயர் வைக்கலயா?”

“ஜாஸ்மின், ரோஸ் என்று ஏதாவது ஒரு பூவோட பெயர் வச்சி கூப்பிடுவோம்”

“செயின்ட் ஜார்ஜ் ஆர்பனேஜுக்கு அனுப்பிய பின்னர், நாங்க எப்படி இவங்களை கான்டெக்ட் பண்றது?” என்றான் சித்தார்த்

“இடம் தான் வேற, அங்கயும் இதே ப்ரொசீஜர் தான். நீங்க தான் அவங்களுக்கு கார்டியன். அவங்களோட படிப்பை நீங்க டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கலாம், கைட் பண்ணலாம். நீங்க தர்ற பணத்துக்கு ரசீது வாங்கிக்கலாம். தேவைன்னா லீகலா எழுதி வாங்கிக்கலாம். எங்களுக்கு குழந்தைகள் நல்லா இருப்பது, அவங்களுக்கு நல்ல படிப்பு கிடைக்கறது  முக்கியம்”

கையை உயர்த்தி தத்தி நடந்து வந்த ஒரு பெண் குழந்தை, அபர்ணாவைப் பார்த்துச்  சிரிக்க, சுருட்டை முடியும் புஷ்டியாயும் இருந்தவளை அபர்ணாவிற்கு பிடித்துப் போனது

கீழே அமர்ந்து “ஹாய்” என அபர்ணா சிரிக்க, கையை இழுத்துக் கொண்ட குழந்தை, அபர்ணாவையே உற்றுப் பாத்தாள்

சில கணங்களுக்கு பின்னர், உதடுகளைக் குவித்து “ஊ” என்று ஓசையெழுப்பினாள். அவளைக் கட்டியணைத்து அபர்ணா தோளில் தூக்கிக் கொள்ள, பவுடர் வாசம் அடித்தது. அவள் அபர்ணாவின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறு இருந்தாள்.

“இவ பெயர் என்ன?”

“டைஸி”

“இவளை எடுத்துக்கலாமா?” என்றாள் அபர்ணா.

“சரி” என்ற சித்தார்த், “என்ன பார்மாலிடீஸ்?” என சிஸ்டரிடம் கேட்க

“வாங்க ரூமுக்கு போகலாம்” என அழைத்துச் சென்றாள் சிஸ்டர்.

சில பாரம்களை தந்த சிஸ்டர், “இதுல உங்க விவரங்களையும், ஒவ்வொரு மாசமும் நீங்க குடுக்க நினைக்கிற தொகையையும் எழுதிருங்க” என்றாள்.

சித்தார்த் அனைத்தையும் நிரப்பி கையெழுத்திட்டு விட்டு, பணத்தை எடுத்து தந்தான்.

“ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்” என சிஸ்டர் கூறியதும், அபர்ணா குழந்தையை   தூக்கிக் கொண்டாள்

“இதை எங்க ஆல்பத்தில் வச்சிக்குவோம். உங்களைப் போல மேலும் சிலர் சேர்ந்தால், ஆதரவற்ற  இந்த குழந்தைகளின் துயரத்தை ஓரளவாவது தீர்க்க முடியும்”

தனது போனை சிஸ்டரிடம் தந்து நாலைந்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டான் சித்தார்த்.

“பெயர் என்ன வைக்கலாம்?”

“மாளவி” என்றாள் அபர்ணா.

தன் பின்னர் மாதா மாதம் பணத்தைத் தரும் போது மாளவியைப் பார்த்து விட்டு செல்வான். சில முறை அபர்ணாவையும், ஓரிரு முறை குழந்தைகளையும் அழைத்து வந்தான்.

எதுவும் புரியாமல் யாரோ இவர்கள் என்று பழகிய மாளவி, அவர்கள் தந்த உணவுகளையும், உடைகளையும் விரும்பத் துவங்கினாள். குழந்தைகளுக்கும் தங்களுக்கு எது வாங்கினாலும் மாளவிக்கு என்று ஒரு பங்கு எடுத்து வைக்கும் எண்ணம் மெல்லத்  தோன்ற ஆரம்பித்தது.

அனைத்தும் தெரிந்திருந்தும், அவளுக்கு வேறெதுவும் உதவி செய்ய முடியாமலிருப்பதை நினைத்து வருந்துவான் சித்தார்த்

தத்தெடுத்து வீட்டில் வளர்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாவிட்டாலும், அரை மனசாக இப்படியாவது ஒரு குழந்தைக்கு ஆதரவு தர முடிகிறதே என்று தேற்றிக் கொண்டனர்.

மாளவி பேசத் துவங்கியதும் “அங்கிள்” என்று சித்தார்த்தைக் கூப்பிட துவங்கினாள்.  “அக்கா இல்ல அண்ணா இல்ல” என்று கேட்பாள்.

மாளவியை பார்த்து விட்டு பிரியும் ஒவ்வொரு முறையும், சித்தார்த்தின் மனம் வேதனையடையும். கிளம்பும் நேரம் தன்னையே ஏக்கத்துடன் பார்த்தபடி நிற்பவளை பிரிந்து செல்வது பெரிய கஷ்டமாக இருக்கும்.

மாதாந்திர கடைசியில் பட்ஜெட் இடிக்கையில், கடன் வாங்கி சமாளிப்பவனுக்கு, இவளையும் அழைத்து சென்று பராமரிப்பது கடினம் என்பதை நினைத்து வருத்தத்தை விழுங்கி விட்டு சென்று விடுவான். அவளைப் பிரிந்து சென்றதும், சில நாட்கள் அவளின் நினைப்பாகவே இருக்கும்.

சென்ற முறை வந்த போது, “நானும் உங்க வீட்டுக்கு வரட்டுமா? என்னோட பிரண்ட் வினோத்தை அவனோட அங்கிள் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க” என்று மாளவி கேட்ட போது, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் சித்தார்த்.

“கண்டிப்பா ஒருநாள் உன்னைக் கூட்டிட்டு போறேன்” என சமாளித்தான்

நாலைந்து நாட்களுக்கு முன்னர் போன் செய்த சிஸ்டர், “மாளவிகாவுக்கு அடுத்த மாசம் அஞ்சு வயசு ஆகப் போறதால, அவளை செயின்ட் ஜார்ஜில் விடப் போறோம். நீங்களும் வந்தா உங்களை அறிமுகம் செஞ்சி வைக்கிறேன்” என்றாள்.

அந்த வாரம் சித்தார்த்துக்கு பிறந்த நாள் வந்ததால், அப்போது எல்லோரும் அங்கேயே கேக் வெட்டியும் கொண்டாடலாம் என்று முடிவு செய்தனர். ஒரு கிலோ கேக் நான்கை வாங்கிக்  கொண்டு அன்று புறப்பட்டிருந்தனர்.

“அதோ நிக்கிறா” என்றபடி அவளை நோக்கி ஓடினான் வினய்.

அவனைப் பார்த்ததும் மாளவிவின் முகம் சிரிப்பை வாரிக் கொட்ட, நின்ற இடத்திலேயே குதித்தாள்.

அவளைக் கட்டிக் கொண்ட வினய், “வா” என்று கையைப் பிடித்து கூட்டி வந்தான்.

“மாலு ஹவ் ஆர் யூ?” என்று அவளைத் தூக்கிக் கொண்டாள் கீர்த்தி.

மாளவிகாவின் கன்னத்தைப் பற்றி முத்தமிட்ட சித்தார்த், “சிஸ்டரை பார்த்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றான்.

மாளவியை வாங்கிக் கொண்டு அபர்ணா விசிட்டர்ஸ் ரூமை நோக்கிச் சென்றாள். இவர்களை போல மற்றொரு பெற்றோர், ஒரு பையனுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“முன்னாடிய விட வளந்துட்டா, இல்லம்மா?”

“ஆனா இளச்சிட்டா”

பைகளில் கொண்டு வந்திருந்த ஒரு கிலோ கேக்கை டேபிளில் வைத்து அபர்ணா பிரிக்க, “எனக்கு  பர்த்டேவா?” என்றாள் மாளவி கண்களில் ஆச்சரியத்தை தேக்கி

ஒரு கணம் தடுமாறிய அபர்ணாவுக்கு, ‘இது வரையில் இவள் பர்த்டே கொண்டாடியே இருக்க மாட்டாளே’ என்று தோன்ற  “ஆமாம் குட்டி” என்று சொல்லி விட்டு கீர்த்தியை கண்களால் எச்சரித்தாள்  

“இல்ல” என்று ஆரம்பித்த வினய்யின் வாயைப் பொத்தி தனியே இழுத்துச் சென்றாள் கீர்த்தி.

சித்தார்த்தின் பெயர் எழுதப்பட்ட அந்த கேக்கை மூடி விட்டு, “ஹேப்பி பர்த்டே” என்று மட்டும் எழுதியிருந்த மற்றொரு கேக்கை திறந்து வைத்தாள் அபர்ணா

மெழுகுவர்த்தி ஒன்றை நடுவில் நிறுத்த “நெறயா கேண்டில்ஸ் இருக்குமே” என்றாள் மாளவி ஆர்வத்துடன்.

“வச்சிட்டா போவுது. எல்லாத்தையும் ஊதி அணைப்பியா?”

தலையை அசைத்த மாளவி, அபர்ணாவின் அருகில் நகர்ந்து செர்ரி நிறத்தில் இருந்த கேக்கையே பார்த்தபடி நின்றாள்.

சித்தார்த்தும், சிஸ்டரும் நடந்து வருவதைப் பார்த்த வினய் ஓடிச் சென்று ரகசியமான குரலில், “அம்மா இன்னைக்கு மாளவிக்கு பர்த்டேனு சொல்லிட்டாங்க. நீங்க மாத்தக் கூடாது” என்றான்.

சிஸ்டர் சிரிக்க,  “சரிடா” என்றான் சித்தார்த் நெகிழ்வுடன்.

“குட் மார்னிங் சிஸ்டர்” என்று அபர்ணா சொல்ல

“குட் மார்னிங்’ என்ற சிஸ்டர், “ஹாய் ஏஞ்சல். ஹவ் ஆர் யூ?” என்றாள் கீர்த்தியைப் பார்த்து.

“பைன் சிஸ்டர்”

“ஹாப்பி பர்த் டே மாளவி” என்று சித்தார்த் சொல்ல, மலர்ச்சியுடன் சிரித்தாள் மாளவி

“அய்யோ நான் சொல்ல மறந்துட்டனே” என்ற வினய், மாளவியின் கைகளைப் பற்றி, “ஹேப்பி பர்த் டே” என்று சொல்ல, கீர்த்தியும் அவளுக்கு வாழ்த்து சொன்னாள்.

கேண்டில்ஸை பற்ற வைத்த அபர்ணா, “அவளை தூக்கி ஊத வையுங்க” என்று சொல்ல

“இரு நான் சேர் போடுறேன்” என்று சேரை தூக்கி வந்தாள் கீர்த்தி.

“ஒரு நிமிஷம் வரீங்களா” என்று அபர்ணா அருகிலிருந்த பெற்றோரையும் இன்வைட் செய்ய, அவர்களும் வந்து நின்றனர்.

“இவங்க ராகுலின் கார்டியன்ஸ்” என்று சிஸ்டர் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“மற்ற குழந்தைகளை அழைக்கட்டுமா?” என்று சிஸ்டர் கேட்க

“வேண்டாம் சிஸ்டர், அவங்க வருத்தப்படலாம். கேக் மட்டும் தந்துரலாம்” என்றான் சித்தார்த்.

சேரில் மாளவியை நிற்க செய்த சித்தார்த், ஒரு கையால் அவளை பிடித்துக் கொண்டான்

“ரெண்டு பெரும் ஊதி அணைங்க” என்றாள் அபர்ணா.

இருவரும் ஊதத் தொடங்க, கைகளைத் தட்டி “ஹேப்பி பர்த்டே” பாடினார்கள்.  சித்தார்த் மாளவியின் கையைப் பற்றி கத்தியால் கேக்கை வெட்ட, போனில் போட்டோ எடுத்தாள் அபர்ணா

சிறிய விள்ளலை எடுத்து மாளவிற்கு ஊட்டி விட்டான் சித்தார்த். கத்தியால் சிறு துண்டுகளாய் வெட்டி அனைவருக்கும் தந்த அபர்ணா, மற்ற பிள்ளைகளுக்கும் தருவதற்கு கேக் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு சிஸ்டருடன் உள்ளே சென்றாள்.

“அப்பாவுக்கு கிப்ட் சொல்லலாமா?” என்று முணுமுணுத்த வினய்யை, தலையில் கொட்டி ‘உஷ்’ என்று விரல் காட்டினாள்  கீர்த்தி.

“நீ பெரிய ஸ்கூலுக்கு போகப் போறியாமே?” என்றான் சித்தார்த்.

தலையை அசைத்த மாளவி, “ஆமாம் அங்கிள். மேடம் சொன்னாங்க” என்றாள்.

“ஏ,பி,சி,டி படிச்சியா? நான் போன தடவை புக் குடுத்தனே” என்றான் வினய் தலையைத் தேய்த்தபடி.

“அக்கா சொல்லி தந்தாங்க, படிச்சிட்டேன்”

“எங்க சொல்லு?”

“டேய் அவளை நச்சு பண்ணாத” என்ற கீர்த்தி, “உன்னோட பிரண்ட்ஸ் எல்லாம் யாரு?” என்றாள்.

“காயத்திரி, நர்மதா…அப்புறம்…” என்று அவள் ராகம் இசைக்க… ஒரு மணி வரை அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்

“இங்கயே சாப்பிட ஏதாவது பேக் லன்ச் வாங்கிட்டு வந்திருக்கலாம்” என்றான் சித்தார்த்.

“வீட்டுக்கு போகும் போது ஹோட்டலில் வாங்கிட்டு போயிரலாம்” என்றாள் அபர்ணா.

 மாளவிவை பிரியும் நேரம் வர, அவளிடம் எப்படி சொல்வதென்று நினைத்தான் சித்தார்த்

“நான் அவளைத் தூக்கிட்டு போயி சிஸ்டர்கிட்ட விட்டுட்டு வரேன். நீங்க காரில் வெயிட் பண்ணுங்க” என்றான் அபர்ணாவிடம் மெதுவாக.

“சரி” என்றாள் அபர்ணா.

சித்தார்த், “வாம்மா. நாம உள்ள போகலாம்” என்று மாளவிவைத் தூக்கிக் கொள்ள, பிரிகிறோம் என்று புரிந்து கொண்ட மாளவி “பாய்” என்றாள்.  வினய் சிரிப்புடன் “பாய்” என்று கையை ஆட்டினான்.

நெஞ்சில் பாரத்துடன் ஆபீஸ் அறைக்குள் சித்தார்த் நுழைய, “புறப்பட்டாச்சா?” என்றாள் சிஸ்டர். 

“ஆமாம் சிஸ்டர்”

உள்ளறையை பாத்து “லட்சுமி…” என்று குரல் கொடுத்த சிஸ்டர், “இவளை தூக்கிட்டு வெளிய போ” என்றாள். லட்சுமி மாளவிவை சித்தார்த்திடமிருந்து வாங்கிச் சென்றாள்.

“அவளை பிரிஞ்சு போறதுக்கு மனசு கஷ்டமா இருக்கு, வேற வழியும் இல்லை சிஸ்டர்”

“எனக்கு புரியுது. உங்களுடைய மனதுக்கும் உங்க குடும்பத்தோட மனசுக்கும் எப்பவும் எந்த குறையும் வராது.  ஆண்டவர்  பாத்துக்குவார்”

“தேங்க்ஸ்”

“காட் பிளஸ் யூ”

“வர்றேன் சிஸ்டர்” என்று கூறி விட்டு குனிந்த தலையுடன் நடந்தான் சித்தார்த். வாசலில் வந்து நின்ற காரில் ஏறி, வீட்டு அட்ரஸை கூறினான்.

“போற வழியில் சரவண பவன்ல மீல்ஸ் வாங்கிடுங்க” என்றாள் அபர்ணா.

எதையோ பறி கொடுத்தவன் போலிருந்த சித்தார்த் தொலைவில் பார்த்தபடி “சரி” என்றான்.  காரில் பெருத்த அமைதி நிலவியது.

வீட்டுக்கு அருகிலிருந்த சரவண பவனில் வண்டி நிற்க, இரண்டு மீல்ஸ் வாங்கி வந்து ஏறிக் கொண்டான். வீட்டருகில் கார் நின்றதும் சித்தார்த் பணத்தைக் கொடுக்க, அபர்ணா குழந்தைகளுடன் இறங்கி உள்ளே சென்றாள்.

கேட்டை சாத்தி விட்டு சித்தார்த் வீட்டுக்குள் நுழைய, ஆசிரம பணியாளர்கள் இருவரோடு  எதிரே நின்று கொண்டிருந்தாள் மாளவி.  திகைத்துப் போனான் சித்தார்த்

“ஹேப்பி பர்த்டே” என்று அனைவரும் கத்த, குழப்பத்துடன் “இவள் எப்படி இங்க?” என்றான்.

“இவளை வேற இடத்துக்கு மாத்தப் போறாங்கன்னு நீங்க சொன்னதும் மனசு கஷ்டமா போச்சு. புது இடத்துக்கு போயி புது சூழ்நிலைல குழந்தை எப்படி   கஷ்டப்பட போறாளோனு பயமா இருந்தது. ரெண்டு  நாள் முன்னாடி சிஸ்டர்கிட்ட, ‘இனி நாங்களே வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறோம்’னு கேட்டேன். அவங்க கேட்ட எல்லா டாகுமெண்ட்ஸையும் ரெடி பண்ணி தந்துட்டு தயாரா இருந்தோம். உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு அவங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தோம்” என்றாள் அபர்ணா

“ஆனா எப்படி சமாளிக்கிறது ?” என்ற சித்தார்த்திடம்

“அட விடுங்க, நமக்கு ரெண்டாவது ரெட்டையா பிறந்திருந்தா என்ன பண்ணிருப்போம்? எக்ஸ்ட்ரா ஒரு குழந்தையை நம்மால் பாத்துக்க முடியாதா?” என சமாதானமாய் கூறினாள் அபர்ணா

சித்தார்த்தின் கண்கள் கலங்க, முகத்தில் மகிழ்ச்சியுடன் சென்று மாளவிவை இறுக அணைத்துக் கொண்டான்.

“நாங்க வேணும்னே உங்கக்கிட்ட சொல்லாம மறைச்சமே” என்ற வினயையும் சேர்த்து இறுக்கிக் கொண்டான்.  மனம் நிறைந்து இருந்தது.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

 1. குடுப்பதற்ககு உரிய சிறந்த பொருள் அன்பு மட்டும் தான் என்பதை அன்பு தெய்வங்கள் கதை ஆணித்தரமாக சொல்கிறது. தன் உதிரத்தில் பிறந்த பிள்ளைகளைத் தாண்டி, எல்லா குழந்தைகளையும் நேசிப்பது தான் ஆகச்சிறந்த தாய்மை, தந்தைமை என்று சொல்லும் சிறப்பான கதைக் கரு..வாழ்த்துகள்.💐💐

 2. அன்பு தெய்வங்கள் இது கதையல்ல.. கவிதை.. சிறு குழந்தையின் ஏக்கம், சித்தார்த்தின் பாசப்போராட்டம், அவன் மனதை புரிந்த மனைவி, காப்பகத்தில் வசிக்கும் மாளவியை தன் உடன்பிறந்தவளாகவே பாவிக்கும் குழந்தைகள் என அனைவருமே மனதில் நிற்கும் பாத்திரங்கள்..
  கதை என்பதை தாண்டி அனைவரும் தத்தெடுக்க முன்வரவேண்டும் எனும் ஆழமான கருத்தை மையமாக வைத்து அழகாக சொல்லியதற்கு ஆசிரியருக்கு முதல் வாழ்த்துகள்💐💐💐
  சுயவிருப்பின்றி முகமறியாதோர் விருப்பில் காப்பகத்தில் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகளின் நிலையை வார்த்தை தூரிகை கொண்டு காட்சிகளை ஓவியமாய் கண்முன் வரைந்ததற்கு மீண்டும் வாழ்த்துகள்💐💐💐
  மொத்தத்தில் சமூக அக்கறை எனும் தறியில் அன்பெனும் இழை கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளாய் மிளிர்கின்றனர் இந்த அன்பு தெய்வங்கள்…

 3. அன்பால் ஆளும் தெய்வங்கள் குழந்தைகள். அதை மீண்டுமொருமுறை உணரச்செய்த படைப்பு. நேர்மறை சிந்தனைகளோடும் அன்பு கொண்டவர்களாகவும் கதை மாந்தர்கள் இருப்பது சிறப்பு.
  இருப்பதை மூன்று குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுக்க என்னும் தாயின் முடிவும் அருமை..வாழ்த்துக்கள்

 4. அன்பால் ஆளும் தெய்வங்கள் குழந்தைகள் என மீண்டும் உணரச்செய்த படைப்பு. நேர்மறை எண்ணங்களோடு குழந்தைகள், பாகுபாடின்றி இருப்பதை மூன்று குழந்தைகளுக்கும் பகிரத் தயாராகும் தாய் மனம் என நெகிழ வைக்கிறது.
  மாளவியை எல்லோருக்கும் பிடித்து விடும். வாழ்த்துக்கள்

 5. அன்பு தெய்வங்கள் இது கதையல்ல.. கவிதை..
  சிறு குழந்தையின் ஏக்கம், சித்தார்த்தின் பாசப்போராட்டம், அவனைப் புரிந்த மனைவி, காப்பகத்தில் வளர்ந்தாலும் மாளவியை உடன்பிறந்தவளாகவே பாவிக்கும் குழந்தைகள் என அத்தனை பேருமே மனதில் நிற்கும் கதாப்பாத்திரங்கள்.
  கதை என்பதை தாண்டி அனைவரும் தத்தெடுக்க முன்வர(தூண்டும்)வேண்டும் எனும் ஆழமான கருத்தை மையமாய் வைத்து எழுதியதற்கு முதல் வாழ்த்துகள்💐💐💐
  முகமறியாதோர் விருப்பில் உருவாகி சுயவிருப்பின்றி காப்பகத்தில் தள்ளப்பட்டிருக்கும் நிலையை வார்த்தை தூரிகை கொண்டு காட்சிகளை ஓவியமாய் வரைந்து கண்முன் நிறுத்தியதற்கு மீண்டும் வாழ்த்துகள்💐💐💐
  மொத்தத்தில் சமூக அக்கறை எனும் தறியில் பாசமெனும் இழை என்று கொண்டு நெய்த அழகிய ஆடைகளாய் மிளிர்கின்றனர் மற்றும் சொல்ல வந்ததை வாசிப்பவர்க்கு கடத்திய விதத்தில் மனதுக்குள்ளும் வாழ்கின்றனர் இந்த அன்பு தெய்வங்கள்💐💐💐

பாரதி கண்ணம்மாவின் விடியல் பயணம்💓 (சிறுகதை) – ✍ ஹீராஷினி இராமன், பினாங்கு, மலேசியா

அரைஞாண் கயிறு (சிறுகதை) – ✍ மீனாட்சி அண்ணாமலை, சென்னை