in ,

அரைஞாண் கயிறு (சிறுகதை) – ✍ மீனாட்சி அண்ணாமலை, சென்னை

அரைஞாண் கயிறு

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 43)

ணேசனின் பெரியப்பா மகன் போட்ட கூச்சலால், திருமண மண்டபமே அதிர்ந்தது

“ஏண்டா கணேசா, இது உனக்கே நியாயமாகத் தெரிகிறதா? மூத்தவன் வெற்றி இருக்க இளையவன் கார்த்திக்கு திருமணம் செய்து வைக்கலாமா? வெற்றியின் அம்மா ஜெயா இறந்த பின், அக்கா மகளையே மறுமணம் செய்து கொண்டாய், ஒரு பிள்ளையையும் பெற்றுக் கொண்டாய்

வெற்றியின் ஒரு கிட்னியை எடுத்து உனக்கு பொருத்திக் கொண்டு உன் உயிரை காப்பாற்றிக் கொண்டாய். அவன் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விவசாயம் செய்யச் சொல்லி விட்டு நீ ஓய்வெடுத்துக் கொண்டாய். தவறில்லை, ஆனால் உன் இரண்டாவது மகனை மட்டும் படிக்க வைத்து சென்னையில் வேலைக்கு அனுப்பியதும் அல்லாமல் இப்பொழுது திருமணமும் செய்து வைக்கின்றாயே இது சரியா? உனக்கு கிட்னி மட்டும் பழுதடையவில்லை, இதயமும் பழுதடைந்து விட்டது” என ஆத்திரமாக சத்தம் போட்டார்

சத்தம் கேட்டு அங்கு வந்த வெற்றி, “பெரியப்பா, இது எங்கள் குடும்ப விஷயம். தயவு செய்து தகராறு செய்யாமல் மணமக்களை வாழ்த்தி விட்டு புறப்படுங்கள். இந்த நல்ல நாளில் அப்பாவின் மனதை புண்படுத்தாதீர்கள்” என்றான்

வெற்றி அப்படி பேசினானே தவிர, அவன் மனதிற்குள் அழுவது அவனுடைய கலங்கிய கண்கள் காட்டிக் கொடுத்தது

மனம் தாங்காமல் பெரியப்பா அவனை கட்டிப் பிடித்த பொழுது, “எல்லாம்  விதிப்படித் தான் நடக்கும்” என்றான் மெல்லிய குரலில்

“விதி மேல் ஏண்டா பழியைப் போடுகிறாய், பேசாமல் காவி கட்டிக் கொண்டு சந்நியாசி ஆகி விடு” என்று கோபமாக கத்தி விட்டுச் அங்கிருந்து உடனே வெளியேறி விட்டார் அவர் 

#ads – Best Deals in Amazon 👇


 

ப்பொழுதெல்லாம் அடிக்கடி வெற்றிக்கு அம்மாவின் நினைவு வந்து மனதை வாட்டியது. தம்பி கார்த்தியின் திருமணத்திற்குப் பின், நாளின் பெரும்பொழுதை வயல் காட்டிலேயே கழிக்க ஆரம்பித்தான் வெற்றி

சாப்பாட்டிற்கு மட்டும் வீட்டுக்கு வருவதையும், அப்படியே அப்பாவை பார்த்து விட்டு திரும்புவதையும் தினசரி வாடிக்கையாக்கிக் கொண்டான்.

பக்கத்து கழனியில் வேலை செய்து கொண்டிருந்த வெற்றியின் நண்பன்  வேலு, தன் மண் வெட்டியின் கைப்பிடி உடைந்துவிட்டதால் வெற்றியிடம் வாங்கிச் செல்லலாம் என்று வந்த போது, வெற்றியின் முகத்தை பார்த்து அதிர்ந்து போனான்.

“என்னடா கண்ணெல்லாம் உள்வாங்கி மஞ்சளாக இருக்கிறது, ஆளே வெளிறிப் போயிருக்கிறாய்” என்று அவனை தொட்டுப் பார்த்தான். உடம்பு அனலாய் கொதித்தது,

“வேலையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் வெற்றி. என்னுடன் வா, மணி டாக்டரிம் காண்பித்து வரலாம்” என சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் சென்றான் வேலு

“உனக்கிருக்கும் அறிவிற்கு நீ படித்து பெரிய வேலைக்கு போயிருக்க வேண்டியவன் வெற்றி, உன் குடும்பத்தினர் நலனுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டாய். உன் தியாகத்தை நல்ல மனதை உன் சித்தியும், தம்பியும் எப்போதும் புரிந்து கொள்ளப் போவதில்லை.

இனிமேலாவது உனக்காக, உடல்நலமில்லாத உன் அப்பாவை கவனித்துக் கொள்வதற்காக வாழ கற்றுக் கொள். திருமணம் செய்து கொள், அனாதை மாதிரி வயல் காட்டு பம்ப் செட்டிலேயே நீ படுத்துக் கொள்வதை பார்க்கும் பொழுது என் மனம் பதை பதைக்கிறது வெற்றி” என்று பேசியபடியே வேலு சைக்கிளை மிதித்தான் வேலு

“நீ கூறுவதும் சரி தான் வேலு. எனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றவில்லை. என்னுடைய சிறுவயது முதலே அம்மா வழி தாத்தா, பாட்டி என்னை தங்களோடு வந்து விடும் படி அழைப்பார்கள். அப்பாவிடமும் அடிக்கடி கேட்பார்கள்.

உன்னுடைய சித்தி உன் அப்பாவிற்கு முறைப் பெண், அக்கா மகள். எனவே வீட்டில் அவளுடைய ஆதிக்கம் தான் கொடிகட்டி பறக்கும். உன் தம்பி, சித்தி மகன் கார்த்தி தான் அக்குடும்பத்தில் செல்லப் பிள்ளையாக வலம் வருவான் என்பார்கள்

உன் அப்பா வீட்டு உறவினர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் நெருங்கிய சொந்தம் என்பதால் உன்னை ஓரங்கட்டி தனிமரமாக்கி விடுவார்கள் என்று சொன்னதை இப்பொழுது உணர்கிறேன்

என் அம்மா, அப்பாவிற்கு சொந்த உறவில்லை. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தனக்கு மறுமணம் வேண்டாம் என்று அப்பா கூறியும், உறவுகள் அவரை கட்டாயப்படுத்தி சித்தியை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ‘நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று’ என்பது அப்பாவின் வாழ்வில் உண்மையாகிப் போனது” என்ற வெற்றியிடம்

“படிச்சவனில்லையா… பேச்செல்லாம் நல்லா தான் பேசுற. உன் அப்பாவிற்குப் பின், உனக்கு சொந்தம் என ஒருவரும் இல்லை என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டாயே” என்றான் வேலு.

“உன்னுடைய அப்பாவால் இனி என்ன செய்ய முடியும்? திருமணமாகியிருந்தால் இந்நேரம் உனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கும். அப்பா… அப்பா… என்று உன்னை சுற்றிக் கொண்டிருக்கும். அந்த சுகத்தை எல்லாம் இழந்து கொண்டிருக்கியே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றான் வேலு தோழமையுடன்.

வெற்றியை பரிசோதித்த டாக்டர், “உனக்கு மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் உள்ளது. உடனே சென்னை சென்று வைத்தியம் பார்த்துக் கொள்வது நல்லது” என்றார்

இந்தச் செய்தி வெற்றியின் அப்பா காதுக்கு எட்டியதும் பதற்றமடைந்த அவர், உடனே கார்த்திக்கு போன் செய்து விவரத்தை கூறினார்

“அப்பா ஏன் இப்படி பதட்டப்படுகிறீர்கள், தம்பியை தொந்தரவு செய்ய வேண்டாம். நானே சென்று வருகிறேன்” என்று கூறிய வெற்றி, உடனே சென்னைக்கு புறப்பட்டான்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், மஞ்சள் காமாலை நோய்க்கு சிறப்பாக வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை ஒன்றிற்கு வந்த வெற்றி, டாக்டரின் அறிவுடைப்படி மருத்துவமனையில் அட்மிட் செய்து கொண்டான். அப்பாவிற்கு போனில் தகவல் தெரிவித்தான்.

வெற்றியை பற்றி அப்பா போனில் கூறியதால், கடனே என்று மனைவி அமுதாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த கார்த்தி, அண்ணனை அந்நியனை பார்ப்பது போல் பார்த்து கடனே என்று நலம் விசாரித்தான்

“உங்க உடம்பை நீங்க தான் பாத்துக்கணும், இப்ப பாருங்கள் உங்களால் எத்தனை பேருக்கு சிரமம்” என்றான்.

மறுநாள் முகத்தில் சுரத்தே இல்லாமல் ரூமுக்கு வந்த கார்த்தியை பார்த்த வெற்றி, பதற்றத்துடன், “டாக்டரை பார்த்தாயா? என்ன சொல்கிறார்?” என்று கேட்டான்

“இன்னும் ஒரு வாரத்தில் குணமாகி விடுவீர்கள் என்றார்” என்று கார்த்தி வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கூறினான்

தம்பி கார்த்தி பொய் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்டான் வெற்றி

அறைக்கு வெளியே வராந்தாவில் நின்று கொண்டு, “வெற்றி இன்னும் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பானாம். முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறோம் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். செலவு வேறு நிறைய ஆகும் போல் இருக்கிறது. வெற்றி இறந்தால் உடலை எப்படி கிராமத்திற்கு எடுத்துப் போவது என்பதை எல்லாம் நினைத்தால் இப்பவே தலை சுற்றுகிறது” என்று தன் நண்பனிடம் கார்த்தி போனில் பேசியது துல்லியமாக வெற்றிக்கு கேட்டது.

‘தன்னுடைய தம்பியா இப்படி பேசுவது?’ என்று அதிர்ச்சியில் உறைந்து போனான்

‘நான் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்தும் பரிதாப்படாமல் சலிப்பாக பேசுகிறானே? நான் உடன்பிறவா சகோதரன் என்பதாலா? ஒருவேளை உடன்பிறப்பாக இருந்திருந்தால் பாசம் வந்திருக்குமோ?’ என்று வெற்றி தனக்குத் தானே பல கேள்விகள் கேட்டுக் கொண்டான்.

அப்பாவை நினைக்கு போதே அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. ‘இவன் அப்பாவையாவது பார்த்துக் கொள்வானா? அல்லது பணம் தான் முக்கியம் என வாழ்வானா?’ என்ற கேள்வி வெற்றியின் மனதை நெருடியது

‘மொத்த சொத்தும் தன் மகனுக்கே வரப் போவதை எண்ணி சித்தியும் மகிழ்ச்சியடைவாள். நமக்கென்ன மனைவியா? பிள்ளைகளா? கவலைப்படுவதற்கு, நாம் பிறந்த மண்ணில் உயிரை விடப் போவது நிச்சயமில்லை. அப்படியே அங்கு போய் உயிரை விட்டாலும், அப்பாவின் வேதனை தான் அதிகமாகும்’ என வெற்றியின் மனதில் பலமான சிந்தனைகள் தோன்றி மறைந்தன

அம்மாவை நினைத்தபடி அவள் நினைவாக ஊரில் வீட்டருகே நட்டுவைத்துள்ள சுமை கல்லில் படுத்திருப்பது போல் கனவு கண்டான். கடந்த கால நினைவுகள் கடல் அலை போல வெற்றியின் மனதில் வந்து மோதின.

க்கத்து ஊரில் நடக்கவிருக்கும் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு தாத்தா, பாட்டியுடன் புறப்பட்ட அப்பா, வெற்றியை அழைத்து, “அம்மாவுடன் சமர்த்தாக வீட்டில் இருக்க வேண்டும்” என்றார்

“அம்மாவை தொந்தரவு செய்யாமல் இருந்தால், உனக்கு பரிசாக வயிற்றிலிருக்கும் பாப்பாவை சீக்கிரம் பெற்றுத் தருவாள்” என்று கூறி விட்டுச் சென்றார்

அம்மா தன்னோடு விளையாட ஒரு பாப்பா தரப் போகிறாள் என்ற மகிழ்ச்சியோடு அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு, “என்னுடன் வாருங்கள்” என்று வீட்டின் பின் பக்க தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.

“எதற்கு இவ்வளவு சந்தோஷமாக வேகமாக இழுத்துக் கொண்டு வருகிறாய்?” என்று கேட்டதற்கு மாமரத்தை கை காட்டினான்

“அட மாம்பழண்டா செல்லம்” என்றவள், அவனுடன் சேர்ந்து குழந்தை போல குதூகலித்தாள்

“உனக்கு மட்டும் எப்படி இந்தப் பழம் கண்ணில் பட்டது” என்று கேட்டுக் கொண்டே கொண்டியையும், ஏணியையும் கொண்டு வந்தாள்.

அந்த மாம்பழம் தான் அவளுக்கு எமனாக வரப் போகிறது என்று தெரியாமலே, கொண்டியால் மாம்பழத்தை அறுத்தாள். ஆனால் மாம்பழம் வீட்டின் கூரை மேல் விழுந்து விட்டது

ஏணியை சுவற்றில் சாய்த்து கூரை மேல் ஏறி மாம்பழத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிய போது, ஏணிக்கட்டை உடைந்து கீழே விழுந்தாள். ஜெயாவின் தலை தரையில் இருந்த கல்லில் மோதியதால், அங்கேயே அவள் உயிர் பிரிந்தது.

அப்போது ஏழு வயதே ஆன விவரம் தெரியாத வெற்றிக்கு, தன்னுடைய ஆசையால்தான் இரு உயிர்கள் பிரிந்தது என்பது தெரியவில்லை. பெரியவனான பின்பு அடிக்கடி அதை அப்பாவிடம் கூறி வருத்தப்படுவான் வெற்றி

ஜெயா இறந்த ஒரு மாதத்திலேயே அக்கா மகள் தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கணேசனை தாத்தாவும் பாட்டியும் நச்சரித்தனர்.

“வெற்றியை ஒத்தையில் இருந்து எப்படி வளர்ப்பாய்? என் மகளை மணந்து கொள், நாங்கள் எல்லோரும் அவனை பாசமாக பார்த்துக் கொள்வோம்” என்று கூறி சம்மதிக்க வைத்தாள் அக்கா

“எனக்கு மகன் வெற்றி தான் முக்கியம், தேவியும் அவளுக்கு பிறக்க போகும் குழந்தைகளும் பிறகு தான்” என்று கூறி கணேசனும் மறுமணம் செய்துகொண்டார். காலப் போக்கில் எல்லாம் மாறிவிட்டன

தேவியும் மாற்றாந்தாயாக நடக்க ஆரம்பித்தாள். எவ்வளவு தான் வெற்றி தன் தம்பியிடம் உடன் பிறந்தவன் போல் பாசம் காட்டினாலும், கார்த்தி வெற்றியை பங்காளியாக நினைத்தே வளர்ந்தான்

அப்பா அருகில் இருக்கும் போது பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொள்பவர்கள், அவர் இல்லாத பொழுது வெற்றியை அலட்சியப்படுத்துவார்கள்.

வெற்றிக்கு இறந்த அவன் அம்மாவுடன் ஒரு பிணைப்பு இருக்க வேண்டும் என நினைத்த கணேசன், வெற்றியிடம்  “வீட்டின் முன்பு இருக்கும் மரத்தடியில் அம்மா நினைவாக ஒரு சுமைகல் வைக்கலாம்” என்றார்

“தெருவில் போவோர், வருவோர் எல்லாம் நிழலுக்காக இக்கல்லில் உட்கார்ந்து இளைப்பாறி மகிழ்ச்சியோடு வாழ்த்தினால் உனக்கு நல்லது நடக்கும்” என்றார்

அப்பா கூறியது போல், அந்த சுமைகல்லில் உட்கார்ந்தாலோ படுத்தாலோ வெற்றியின் மனம் லேசாகி விடும். எப்பொழுதெல்லாம் மனதில் மகிழ்ச்சியும், சஞ்சலமும் வருகின்றதோ, அப்போதெல்லாம் வெற்றி அந்த சுமைகல்லில் போய் உட்கார்ந்து கொள்வான்.

வெற்றி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் கணேசனின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. தனக்கிருக்கும் ஒரே ஆறுதல் அப்பா மட்டும் தான், அவருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று கூறி, தன் ஒரு கிட்னியை தானம் செய்தான் வெற்றி

கல்லூரியில் சிறந்த மாணவன் என்று பெயரெடுத்த வெற்றி தன் அப்பாவின் நலன் தான் முக்கியம் என, படிப்புக்கு பாதியிலேயே முற்றுப்புள்ளி வைத்து எதிர்கால கனவை கலைத்து விட்டான்

வெற்றியை விட, அவன் தந்தை கணேசனுக்குத் தான் இதில் மிகுந்த மனவருத்தம்.

“தம்பி கார்த்தியை படிக்க வைத்து அவனை பெரிய ஆளாக்கி நம் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று அப்பாவை சமாதானப்படுத்தினான் வெற்றி

பக்கத்து தெருவில் வசிக்கும் வெற்றியின் நண்பன், வேலனின் தங்கை அமுதா அடிக்கடி வீட்டிற்கு வந்து சித்தியிடம் பேசிக் கொண்டிருப்பாள்

ஒருநாள் கணேசன் வெற்றியிடம், “இவளை உனக்கு திருமணம் செய்து வைக்கவா?” என்று கேட்க, அன்று முதல் வெற்றி அவளை ஒரு தலையாய் காதலித்தான்

ஆனால் ஒருநாள் அமுதா வெற்றியிடம் வந்து, “கார்த்தியும் நானும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம், அண்ணனிடம் கூறினால் அம்மா அப்பாவிடம் பேசி அவரே அவர்களை சம்மதிக்க வைத்து விடுவார் என்று உங்க தம்பி கூறினார்” என்றாள்

வெற்றிக்கு அவள் கூறிய செய்தி, தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.

தன் மனக் கவலையை மறைத்துக் கொண்டு, தன் அப்பாவிடம் தம்பி கார்த்தியும் அமுதாவும் ஒருவரை ஒருவர் விரும்புவதை சொல்லி உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினான் வெற்றி

“பெரியவன் நீ இருக்க இளையவனுக்கு எப்படி?” என கணேசன் இழுக்க

“ஏதாவது ஏடாகூடமாக நடப்பதற்கு முன்னால் திருமணத்தை நடத்தி வையுங்கள், பிறகு நாம் தான் அவமானப்பட நேரிடும்” என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து விட்டான் வெற்றி

அம்மா இல்லாத தன் வாழ்வின் வெற்றிடத்தை அமுதா நிரப்புவாள் என நினைத்த வெற்றிக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. அமுதாவினால் ஏற்பட்ட ஏமாற்றம், ஏற்கனவே சித்தியின் செயல்பாட்டால் வெற்றிக்கு ஏற்பட்ட பெண்களின் மீதான வெறுப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்தது

‘இனி என் வாழ்வில் பெண் என்றால் அது அம்மா மட்டும்தான், அவர் மட்டுமே என் இதயம் முழுதும் குடியிருக்க வேண்டும்’ என நினைத்துக் கொண்டான்.

ப்பாவை நினைத்து அழுது கொண்டிருந்த பொழுது “சார்…சார்…” என தன்னை யாரோ தட்டியது போன்ற உணர்வு வந்து வெற்றி கண் விழித்து பார்த்த பொழுது, எதிரில் நர்ஸ் நின்றிருந்தார்

“இந்தாங்க சார் மாத்திரை” என்று நீட்டியவள், கூடவே தண்ணீரையும் கொடுத்தாள்

வெற்றி நர்ஸிடம், “நான் மருத்துவமனை மேலாளரை பார்க்க வேண்டுமே” என்றான்

சிறிது நேரத்தில் மேலாளர் அங்கு வந்து, “என்ன தம்பி, எப்படி இருக்கிறீர்கள்? என்னை அழைத்தீர்களாமே” என்று வெற்றியின் அருகில் அமர்ந்தார்.

வெற்றி மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்தே அவனிடம் மேலாளர் கனிவாக நடந்து வந்தார்

எனவே, ”சார், எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும், நான் இறந்து விட்டால் என் பிணத்தை யாரிடமும் கொடுக்காமல் சென்னையிலேயே நீங்களே அடக்கம் செய்ய வேண்டும்.செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று தன் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கொடியை கழற்றி அவரிடம் கொடுத்தான் வெற்றி

அதிர்ச்சியில் கலங்கிய கண்களுடன், “சரி தம்பி” என வெற்றிக்கு ஆறுதல் கூறினார் மேலாளர் 

மறுநாள் தன் வீட்டிலிருந்து பத்திய சாப்பாடு கொண்டு வந்தார் மேலாளர். ஒருவாய் சாப்பாடு கூட அவன் சாப்பிட்டு இருக்க மாட்டான், மேலாளர் மடியிலேயே வெற்றியின் உயிர் பிரிந்தது

மேலாளரும் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் முன்னே செல்ல, தாரை தப்பட்டை முழங்க வெற்றியின் இறுதி ஊர்வலம் மயானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது

‘அண்ணன் உயிரோடு இருப்பானா இல்லையா? தெரியவில்லையே’ என்று நினைத்தபடி ஆபீசிலிருந்து நேராக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தான் கார்த்தி. அவனுக்கு பக்கத்திலேயே வெற்றியின் சவ ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.

மருத்துவமனைக்கு வந்த கார்த்தி, வாசலிலேயே மனைவி அமுதாவின் தம்பி குமார் நின்று கொண்டிருப்பதை பார்த்து கலவரத்துடன், “என்ன?” என்று கேட்டான்

“அம்மாவிற்கு நெஞ்சுவலி, நர்ஸிங்ஹோமில் சேர்த்து இருக்கிறோம். உங்களை போனில் தொடர்பு கொள்ள முடியாததால் அக்கா தான் வெற்றியை பார்க்க போயிருப்பார் என்று கூறி என்னை இங்கு அனுப்பினாள்” என்றான்

“சரி வா, அண்ணனை அப்புறம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று குமாருடன் புறப்பட்டான் கார்த்தி.

றுநாள் மருத்துவமனைக்கு வந்த கார்த்தி, அண்ணனின் படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். கலக்கத்தோடு அங்கிருந்த ஆயாவிடம் விசாரித்தான்

“நீங்கள் யார்?” என்று விசாரித்த ஆயா, “அவர் நேற்றே இறந்து விட்டாரே” என்று கூறினாள்.

“நான் இறந்துவிட்டால் நீங்களே அடக்கம் செய்துவிடுங்கள் என்று அவர் மேலாளரிடம் கேட்டுக்கொண்டதால், மேலாளரும் தனக்கு குழந்தை இல்லாததால் உன் அண்ணனை தன் மகனாக பாவித்து நேற்று மாலை அலங்காரமாக கொண்டு சென்று அடக்கம் செய்தார். செலவிற்கு இடுப்பிலிருந்த வெள்ளி அரைஞாண் கொடியை கழற்றி ஏற்கனவே உன் அண்ணன் மேலாளரிடம் கொடுத்திருந்தார்” என்றாள் ஆயா

கார்த்திக்கு தன் நெஞ்சை யாரோ சம்மட்டியால் அடித்து பிளப்பது போல் இருந்தது

‘நேற்று சாலை நெரிசலில் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு சவ வண்டியின் பக்கத்திலேயே ஊர்ந்து சென்றோமே, அண்ணன் பிணத்தருகே தான் சென்றோமோ? அண்ணா நீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னை பார்த்து தம்பி என்று கூப்பாடு போட்டிருப்பாயோ? நான் தான் பாவி, யாரோட பிணமோ என்று எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இறந்தும் கூட நீ இந்த தம்பியை உன்னருகே அழைத்து ஆவியாக இருந்து பார்த்து விட்டுச் சென்றிருக்கிறாயே’ என்று அழுதான்

வெள்ளி அரைஞாண் கொடி பற்றி ஆயா கூறியது கார்த்திக்கு சிறு வயதில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகத்திற்கு கொண்டு வந்தது.

வெற்றியிடம் அதை தனக்கு கழட்டிக் கொடுக்கும்படி கார்த்தி கேட்கும் போதெல்லாம், “எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன், இதை மட்டும் கேட்காதே” என்பான் வெற்றி

“இந்த அரைஞாண் கொடி, வெற்றிக்காக அவன் அம்மா, அவள் அப்பாவிடம் சொல்லி பாதரச குண்டுமணியை உள்ளே வைத்து செய்த தங்கதாயத்து. உன் மூச்சு உள்ளவரை இதை இடுப்பிலிருந்து கழட்டக் கூடாது, இது நம் உறவுக்கான தொப்புள் கொடி என வெற்றியிடம் சத்தியம் வாங்கியிருந்தாள் அம்மா. அதனால் உன் அண்ணனிடம் எதை வேண்டுமானாலும் கேள். ஆனால் இதை மட்டும் கேட்காதே” என்பார் அப்பா கணேசன்

“தொப்புள் கொடி உறவு போல் உங்களிடம் இருந்த அரைஞாண் கொடி, கடைசியில் உங்கள் உயிர் போலவே எங்களிடமிருந்து பிரிந்து உங்களுடனே போய் விட்டதே” என அழுதான் கார்த்தி.

“பணமும் பாசமும் என் ஒருவனையே சேர வேண்டும் என எண்ணி என் குடும்பம் முழுதும் உன்னை ஒதுக்கி வைத்தது. நானும் உனக்கு பல தீய செயல்களை செய்தேன். உன்னை விட எல்லாவற்றிலும் நான் தான் ஒருபடி உயர்வாக வாழ வேண்டும் என்று தலைக்கனம் பிடித்து திரிந்தேன். எல்லோரையும் போல் நீயும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏன் தோன்றவில்லை என்று இப்போது எண்ணி வெட்கப்படுகிறேன்” என்று கதறினான் கார்த்தி.

“உங்களை அலட்சியமாக நடத்திய எனக்கும் அம்மாவிற்கும் சரியான தண்டனை கொடுத்து விட்டீர்கள். அப்பாவை என்ன சொல்லி ஆறுதல் படுத்துவேன். ஊரார் என்னை காறித் துப்புவார்களே, காலம் முழுதும் எங்களை இந்த அவமானத்தை சுமக்க வைத்து விட்டீர்களே” என்று அங்கேயே இடிந்து போய் உட்கார்ந்து விட்டான் கார்த்தி.

“ஒருவர் உயிரோடு இருக்கும் போது அவருடைய அருமை பெருமைகள் அவர்களின் தியாகங்கள் பலருக்கு பெரிதாகத் தெரிவதில்லை, இறந்த பின் தான் தெரியும் என்பார்கள். உங்கள் விஷயத்தில் இது உண்மையாகி விட்டதே” என்று வருந்தியபடியே வீட்டிற்கு புறப்பட்டான் கார்த்தி.

அப்போது “இறந்தவருடைய நல்ல செயல்களையும் தியாகங்களையும் நினைத்து பார்ப்பவனே மனிதன், இல்லையென்றால் அவனும் பிணமே” என்று முதியவர் ஒருவர் தன் நண்பரிடம் கூறிக் கொண்டு செல்வதை கேட்டு, மறைந்த அண்ணன் வெற்றியிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு அழுதான் கார்த்தி

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

11 Comments

  1. அண்ணன் தம்பி பாசப்போராட்டத்தில் கடைசியில் பணம் தான் வென்றது. இன்றைய நவீன உலகின் எதார்த்த நிலையை எடுத்து காட்டுகின்றது.

  2. அரைஞாண் கயிறு படித்தேன். கதை மனதை வருடுவதாக உள்ளது. “வீடுவரை உறவு – கடைசி வரை யாரோ” என்ற பாடல் நினைவில் வந்தது — எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்

  3. இன்றைய காலகட்ட மனிதர்களின் உறவு நிலையை எதார்த்தமான நடையில் எடுத்துச் சொல்லியுள்ளார். சமூக சிந்தனையுடன் எளிய நடையில் இக்கதையை எழுதியுள்ள எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  4. மிக அருமையான கதை மட்டுமல்ல, உரைநடையும் தான். கார்த்தியும், வெற்றியும் நாம் பார்க்கும் மனிதர்களிடையே வாழுபவர்கள்தான். வாழ்த்துக்கள்

அன்பு தெய்வங்கள் (சிறுகதை) – ✍கு. அசோக் குமார், சென்னை

சினம் தவிர் (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்