சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 44)
கருணாகரன் புல்லட்டை வேகமாக செலுத்திக் கொண்டு வந்தான். அண்ணியை இன்று கண் ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போக வேண்டும். அண்ணியின் மீது அளவிற்கு அதிகமான பாசம் உண்டு கருணாகரனுக்கு.
இவ்வளவுக்கும் அண்ணன் குமரேசன் சொந்த அண்ணன் இல்லை, நட்பு தான். ஒரு பஸ் பயணத்தில் ஏற்பட்ட சிநேகிதம்
கருணாகரன் ஒருமுறை தஞ்சாவூருக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் பஸ்ஸை விட வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது.
அன்று பஸ்ஸில் ஏகப்பட்ட கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. முதியவர் ஒருவர் நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டிருந்தார். யாரும் அவருக்கு எழுந்திருந்து இடம் தரவில்லை.
மேலும் இளைஞன் ஒருவன், காலேஜ் மாணவனைப் போல் இருந்தவன் காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு பாடாவதி பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தவன் “யோவ் பெருசு… மேல மேல வந்து விழாத, தள்ளி நில்லு” என்று அந்த முதியவரை மரியாதை இல்லாமல் வேறு பேசினான்
மறுகணம் அருகில் நின்று கொண்டிருந்த குமரேசன், அந்த இளைஞனை பளாரென்று ஒரு அறை அறைந்தான்
“எழுந்து பெரியவர் உட்காருவதற்கு இடம் கொடுக்கறதுக்கு துப்பு இல்ல, வயசுல பெரியவங்களை இப்படியா பேசுவ ?” என்று மேலும் அடிப்பதற்கு கையை ஓங்கினான்.
நிலைமை ரசாபாசமாக ஆகி விட்டது. அதே பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த கருணாகரன், டியூட்டியில் இல்லாவிட்டாலும், போலீஸ் சீருடையில் இருந்ததால் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தான்.
இளைஞனுக்கு புத்தி கூறி விட்டு குமரேசனின் கோபத்தையும் தணித்தான். ஒரு சின்ன அநியாயத்தை கூட பொறுக்காத குமரேசனின் ரௌத்திரம், போலீஸ்கார கருணாகரனை கவர்ந்ததில் வியப்பில்லை.
அன்று தொடங்கியது இருவருக்கும் இடையே உள்ள நட்பு.
அண்ணி விமலா ஒரு கல்லூரியில் மொழிப் பிரிவில் பேராசிரியையாக பணியாற்றி வந்தாள். குமரேசன் ஒரு தனியார் ஏற்றுமதி இறக்குமதி அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தான்.
அவனுடைய நாணயத்திற்கும் நேர்மைக்காகவுமே முதலாளி குமரேசனுக்கு மிகவும் மதிப்பு கொடுத்து வந்தார். ஆனால் முதலாளிக்கு நிறைய முகஸ்துதி செய்து குமரேசனின் நல்ல குணங்களை அவர் முழுமையாக புரிந்து கொள்ளாத படி சிலர் செய்து வந்தனர்.
குமரேசனின் கோபம் பிரசித்தி பெற்ற ஒன்று. யாரும் அவனை நெருங்க மாட்டார்கள். யாரையும் பாராட்ட மாட்டான், எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடிப்பான். ஆனால் வேலையில் நல்ல திறமைசாலி
அவனுடைய முகராசியோ அல்லது ஆளுமைத்திறனோ ஏதோ ஒன்றினால் கம்பெனிக்கு நிறைய ஆர்டர்கள் பிடித்து விடுவான். கணக்காளராக இருந்தாலும் மார்க்கெட்டிங் வேலையும் செய்வான்.
பாராட்டு கிட்டினாலும் கிட்டாவிட்டாலும் எதையுமே பொருட்படுத்த மாட்டான். மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் தானே எல்லாவற்றையும் படபடவென்று முடித்து விடுவான்.
ஆனால் கச்சிதம் இராது. செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு இருக்காது. நேர்த்தி இருக்காது. கம்பெனிக்கு குமரேசன் லாபம் ஈட்டி தருவதால், முதலாளியும் அவன் எது செய்தாலும் சரி என்று ஏற்றுக் கொள்வார்.
“வேலை முடிஞ்சுதா? அதைத் தான் பார்க்கணும். பழத்தை சாப்பிட வேண்டுமா இல்லை அதை எண்ணிட்டே இருக்கணுமா?” என்று விதண்டாவாதம் பேசுவான். ஆனால் அவன் கீழே வேலை பார்ப்பவர்கள், இதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
கிறுக்கலும் கோணலுமாக குமரேசன் எழுதிய அறிக்கைகளை, தாங்கள் நல்ல விதமாக காப்பி அடித்து எழுதி மேலிடத்திற்கு அனுப்பி விடுவார்கள். மேலிடத்தில் இருந்து கிடைக்கும் பாராட்டும் ஊக்கத் தொகையும் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு போகும்.
குமரேசன் அவையெல்லாம் லட்சியமும் செய்ய மாட்டான், கண்டு கொள்ளவும் மாட்டான். அவன் மனைவி விமலா தான் ரொம்ப வருத்தப்படுவாள்.
வீட்டிலும் குமரேசனின் போக்கு மிகவும் விசித்திரமாக இருக்கும். விமலாவின் கை மணத்தை ருசித்து சாப்பிட மாட்டான், ஏனோதானோவென்று அள்ளி அள்ளி அடைத்துக் கொள்வான்.
குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறும் போதும், பரிசுகள் பெறும் போதும் அவர்களை பாராட்ட மாட்டான்
அதுமட்டுமில்லாமல் “இது என்ன பெரிய விஷயம், நான் நிறைய பிரைஸ் வாங்கி இருக்கேன் ஸ்கூல் நாட்களில்” என்று அவர்களை மட்டம் தட்டுவான்.
நாளாவட்டத்தில் மகனும் மகளும் தந்தையிடம் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்காமல் இருக்க கற்றுக் கொண்டனர்.
இதையெல்லாம் உணர்ந்து இருந்த கருணாகரன், குமரேசனின் நேர்மையான உள்ளத்தை உணர்ந்து அவனிடம் உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் பழகி வந்தான்.
குமரேசனும் கருணாகரனின் மிடுக்கான போலீஸ் தோற்றத்திற்கு அன்புடன் பணிந்து போவான். ஆனால் தன் பழக்கங்களை மாற்றிக் கொள்ளவே இல்லை குமரேசன்.
தன் மனைவி, தன் மக்கள் இவர்களை நாம் தான் பேண வேண்டும், அவர்களின் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒரு நாளும் குமரேசனுக்கு ஏற்படவே இல்லை.
மனைவி, குழந்தைகள் இவர்களுடன் எங்காவது வெளியில் போய் வர வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குமரேசனுக்கு ஏற்பட்டதே இல்லை. ஏன்? அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துப் போவது கூட தன் வேலை இல்லை என்று நினைப்பான் குமரேசன்
“ஆட்டோ இருக்கு, வாயில வார்த்தை இருக்கு, தானே போக வேண்டியது தான்” என்பான்.
குமரேசனின் நட்பு ஏற்பட்ட பிறகு, கருணாகரன் அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் தயங்காமல் செய்வான். கருணாகரனின் மனைவி பானு, நட்பை மதிக்கத் தெரிந்த ஒரு அற்புதமான பெண்மணி.
குமரேசனின் போக்கை நினைத்து வருந்தி, விமலாவிற்கும் அவள் குழந்தைகளுக்கும் தன்னால் இயன்ற சரீர உதவிகளை கணவனைப் போலவே செய்து வந்தாள்
“எவ்வளவு கொடுத்து வைத்தவன் நான்” என நினைத்துக் கொள்வான் கருணாகரன்
#ads – Best Deals in Amazon 👇
குமரேசனின் அப்பார்ட்மெண்ட்டை நெருங்கி விட்டிருக்க, கருணாகரனின் எண்ண ஓட்டம் தடைபட்டது. அடுத்த அப்பார்ட்மெண்ட் வாசலில் பெரிய கூட்டம் இருந்தது. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு போய் என்னவென்று விசாரித்தான்
“கீழ் வீட்டில் குடியிருக்கற அம்மா ரொம்ப சத்தம் போடறாங்க. கத்தல் தாங்க முடியலை. கெட்ட வார்த்தையா வேறே பேசறாங்க ” என்றார் ஒருவர்.
“ஏன் எதுக்கு?”
“அவங்களுக்கு ஒண்ணும் காரணமே வேண்டாம் சார். பால்காரர் அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தா, பேப்பர்காரர் பேப்பர் போட்டுட்டு பெல் அடிக்காம போனா, அதுக்கெல்லாம் சண்டை போடுவாங்க கத்துவாங்க. இன்னிக்கு என்ன காரணம்னு தெரியல, ரொம்ப கத்துறாங்க. அவங்களுக்கு வயசான அம்மா வேற இருக்காங்க, அவங்கள நினைச்சாதான் பாவமா இருக்கு” என்றார் மற்றொருவர்.
“நான் போய் பார்க்கிறேன்” என்றான் கருணாகரன்.
“வேண்டாம் சார் உங்களுக்கு எதுக்கு வம்பு” என்றார் இன்னொருவர்.
கருணாகரன் சீருடையில் இல்லாததால், அவன் போலீஸ் அதிகாரி என்பதை அவர்கள் அறியவில்லை.
“வெறுமே கூடிக் கூடி நின்னு வம்பு பேசுவீங்க. ஆனா பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று யோசிக்க மாட்டீங்க, எந்தவித முயற்சியும் எடுக்க மாட்டீங்க, அதானே” என்று கூறி விட்டு, எந்தவித பதிலையும் எதிர்பார்க்காமல் சத்தம் வந்த அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி நடந்தான் கருணாகரன்.
உள்ளே 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கூச்சலிட்டு கொண்டிருந்தாள். வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழுந்து கொண்டிருந்தன. உலகில் உள்ள அனைவரையும் முட்டாள், மடையன், கையாலாகாதவர்கள் என்று சரமாரியாக வைது கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
மற்றொரு முதிய பெண்மணி தலையை குனிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
“என்னம்மா என்ன பிரச்சனை?” என்று கேட்டான் கருணாகரன்.
மறுகணம் ஆவேசத்தோடு திரும்பிய அந்தப் பெண்மணி, “யாருயா நீ திறந்த வீட்டில் நாய் நுழைவதை போல் வந்து கேக்குற, அறிவில்ல உனக்கு” என்று குரைத்தாள்.
அதிர்ந்து போன கருணாகரன், “நீங்க சத்தம் போடுவது கழுதை கத்துறத விட கேவலமா இருக்கு, மத்தவங்களுக்கு எல்லாம் தொல்லையா இருக்கு. கூச்சல் போடாமல் உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னீங்கன்னா, மத்தவங்க ஏதாவது உதவி செய்வாங்க” என்று கூறி விட்டு வெளியில் வந்தான் கருணாகரன்
நிறைவேறாத ஆசைகளும் ஏக்கங்களும் அவளுக்குள் இருந்து இந்த மாதிரி ஆக்ரோஷமான தீக்கனலாக வெளிப்படுகின்றன என புரிந்து கொண்டான் கருணாகரன்
“அந்தப் பெண்ணிற்கு தேவை இப்பொழுது ஒரு நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனை” என்பதை வெளியில் நின்று கொண்டிருந்தவர்களிடம் கூறினான்.
” அவங்க பிரதர் சென்னையில் இருக்காங்க, போன் பண்ணி சொல்லி இருக்கோம், ரெண்டு நாள்ல வரேன்னு சொல்லி இருக்காரு” என்றார் அந்த குடியிருப்பில் இருந்த ஒருவர்
“சரி போங்க எல்லாரும், ஏன் இப்படி கூட்டம் கூடிக்கிட்டு நிக்கிறீங்க?” தோரணையான அவனுடைய குரலுக்கு அடிபணிந்து எல்லோரும் கலைந்து சென்றனர்.
குமரேசனின் அப்பார்ட்மெண்டை நோக்கிச் சென்றான் கருணாகரன்.
அடுக்குமாடி குடியிருப்புகள், அடுக்கடுக்கான சந்தோஷங்கள், வலிகள், வெற்றி தோல்வி எல்லாவற்றையும் உள்ளடக்கியவை. ஆனால் பூட்டிய கதவுக்குள் இருந்து வெளியே வராதவை. அடுத்தவரின் வலியையும் களிப்பையும் பகிர்ந்து கொள்ளத் தெரியாத ஒரு சமுதாயம்.
மாலை வேளைகளில் திண்ணைகளிலும் ஆலமரத்தடியிலும் பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட மகிழ்ச்சியும் வேதனைகளும், அளிக்கப்பட்ட தீர்வுகளும் யோசனைகளும் இன்று வீட்டிற்குள்ளேயே அமுங்கி மன உளைச்சலாக வெளிப்படுக்கிறது.
போதாததற்கு தொ(ல்)லைக்காட்சியின் தாக்கம் வேறு. மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்ந்து வாழ்வோம், என்ற கொள்கையை எப்பொழுது பின்பற்ற போகிறார்கள் இந்த நகர மக்கள்?
குமரேசனின் வீட்டு அழைப்பு மணியை கருணாகரன் அழுத்துவதற்கு முன்பே, குமரேசனின் கூப்பாடு பெரியதாக கேட்டது.
“நேரம் ஆச்சு எனக்கு. மதிய சாப்பாடு கட்டியாச்சா?”
“ரெடிங்க, அப்பவே வெச்சாச்சு. பையில் எடுத்து வச்சுக்கோங்க” என பதிலுரைத்தாள் விமலா
“வா கருணா” என்று அன்புடன் கருணாகரனை வரவேற்றான் குமரேசன்.
“என்னங்க… நகைச் சீட்டு கட்டறதுக்கு இன்னிக்கு தான் லாஸ்ட் டேட், மறக்காம கட்டிடுங்க” என்றாள் விமலா உள்ளே இருந்தபடியே.
“ஏன் ரெண்டு நாள் கழிச்சு கட்டினால் ஆகாதா?” என்றான் கடுப்போடு குமரேசன்.
“ரெண்டு நாள் கழிச்சு பணம் செலுத்தினால் அவங்க குலுக்கலில் சேர்த்துக்க மாட்டாங்க, நமக்கு தான் நஷ்டம்” என்று கூறியவாறு வெளியில் வந்தாள் விமலா.
“வா தம்பி, பானு நல்லா இருக்கா? காஃபி கொண்டு வரேன் இரு” என கருணாகரனை விமலா உபசரிக்க
“வேண்டாம் அண்ணி, வீட்டில இப்ப தான் காப்பி குடிச்சிட்டு வரேன். நகைச் சீட்டு நான் போய் கட்டிடறேன், நீங்க அண்ணனை ஏன் தொந்தரவு பண்றீங்க?”
“கடை இவர் ஆபீஸ் பக்கத்துல தான் இருக்கு. எல்லாத்துக்கும் சோம்பல் அவருக்கு, போதாததுக்கு நீ வேற ஏத்தி விடுறியா?”
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு நைஸாக நழுவினான் குமரேசன். சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டாள் விமலா.
“நீங்க அண்ணனை எதுக்கும் தட்டிக் கேட்காமல் இடம் கொடுத்து விட்டு, நான் ஏத்தி விடுறேன்னு சொல்றீங்களே, இது நியாயமா அண்ணி? ” என்றான் கருணாகரன்.
அதற்கும் விமலாவிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பு தான் பதிலாக வந்தது.
“சரி கிளம்புங்க அண்ணி, நகைச் சீட்டு அட்டையை என்கிட்ட கொடுங்க. கண் அப்பாயிண்ட்மெண்ட் பேப்பர் ரெடியா எடுத்து வச்சுக்கங்க. மதியம் தானே அப்பாயிண்ட்மெண்ட். பானு பர்மிஷன் போட்டுட்டு நேர ஹாஸ்பிடல் வரேன்னு சொல்லி இருக்குது. இப்போ உங்கள காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு நான் போய் நகைச்சீட்டைக் கட்டிட்டு வர்றேன் ” என்றான் கருணாகரன்.
இதெல்லாம் குமரேசன் செய்ய வேண்டிய வேலை. ஆனால் செய்ய மாட்டான்.
“ஆட்டோ இருக்குது, காசு இருக்கு, தானே போய் பார்த்துக்கொள்ள வேண்டியது தான” என்பான்.
விமலாவிடம் குமரேசன் அடிக்கடி, “நீ எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம், அதே போல நானும் உனக்கு ஒண்ணும் செய்ய மாட்டேன். ரெண்டு பேரும் தனித் தனி” என்பான்
“அப்போ எதுக்கு கல்யாணம்? எதுக்கு குழந்தை குட்டிகள்?” என்று கேட்டு அலுத்துப் போய் விட்டாள் விமலா
புல்லட் கருணாகரனையும் விமலாவையும் சுமந்துகொண்டு சீறிப் பறந்தது
“கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க தம்பி ” என்றாள் விமலா.
விமலாவை கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு நகைச் சீட்டைக் கட்டுவதற்கு சென்றான் கருணாகரன்.
மதிய சூரியன் முகத்தில் அனலை அறைந்தான். சில்லென்று ஏதேனும் அருந்த வேண்டும் போல் இருந்தது கருணாகரனுக்கு.
எதிரில் இருந்த ஹோட்டலில் பழரசம் அருந்த சென்றான். சீருடையில் இல்லா விட்டாலும், அவனை போலீஸ் அதிகாரி என்று புரிந்து கொண்ட ஹோட்டல் முதலாளி, “வாங்க வாங்க” என்று அவனுக்கு ஏக உபசாரம் செய்தார்
அவன் அமர்ந்தவுடன் தலைக்கு மேல் இருந்த மின்விசிறியை சுழல விட்டு, “டேய் ஐயாவை கவனி” என்று உள்நோக்கி குரல் கொடுத்தார்
சர்வர் உடனே வந்து, “என்ன வேண்டும் சார்? சூடான தோசை இருக்கு, இட்லி இருக்கு” என்றான்.
“ஒரு சாத்துக்குடி ஜூஸ் மட்டும் போதும் “
இரண்டு நிமிடத்தில் வந்த ஜூஸை அருந்தி விட்டு பணம் கொடுப்பதற்கு கவுண்டரை நோக்கி சென்றான் கருணாகரன்
“பரவால்ல சார்… வேண்டாம் சார்” என்று மறுத்த முதலாளியை முறைத்துப் பார்த்து விட்டு
“லஞ்சம் மாமூல் இதெல்லாம் நீங்க தான் வளர்த்து விடுறீங்க, அப்புறம் எங்கள குத்தம் சொல்றீங்க” என்று அழுத்தமாக கூறி காசை வைத்து விட்டு, வெளியில் வந்து ஹோட்டல் முதலாளி மேல் இருந்த கோபத்தை புல்லட்டை உதைத்து காண்பித்தான்.
அதற்குள் அவன் பையிலிருந்த அலைபேசி ஒலித்தது. விமலா தான்.
“என்ன அண்ணி?”
“இன்னிக்கு ஹாஸ்பிடல் அப்பாயிண்ட்மெண்ட் ரத்து ஆயிடுச்சு. டாக்டர் கண்தான பிரிவுல இருக்கறதுனால எமர்ஜென்சி ஆப்ரேஷன் ஒண்ணு வந்திருச்சாம். பார்வையற்ற ஒருவருக்கு இன்னிக்கு பார்வை கிடைக்கப் போகுது. அதனால மத்த அப்பாயின்மென்ட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்க. நர்ஸம்மா தான் போன் பண்ணி சொன்னாங்க”
“இன்னொரு நாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்களா?” என்று வினவினான் கருணாகரன்.
“ஆமாம் சனிக்கிழமை வரச் சொல்லி இருக்காங்க, நீ பானுக்கு போன் பண்ணி சொல்லிடு. அலைய போவுது, பாவம் அது.”
“சரி அண்ணி சொல்லிடுறேன். நீங்க காலேஜ்ல இருங்க, நான் உங்களை வந்து பிக்கப் பண்ணி வீட்ல கொண்டு போய் விட்டுடறேன்.”
“வேண்டாம் தம்பி நான் பஸ்ல போய்க்கிறேன்.” என்றாள் விமலா.
“பரவால்ல, எனக்கு இப்போ மதியம் வரை வேற வேலை இல்ல.”
ஸ்டேஷனுக்கு சென்று முக்கியமான வேலை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து விட்டு, மீண்டும் விமலாவின் கல்லூரிக்கு சென்றான் கருணாகரன்.
வாயிலில் இருந்த செக்யூரிட்டியிடம் தான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விமலாவை அழைத்துப் போக வந்திருப்பதாகக் கூறினான்.
“வாங்க சார். மேடம் சொன்னாங்க, நீங்க வருவீங்கன்னு, அந்த கடைசி ரூம் தான் அவங்க கிளாஸ் ரூம். ரூம் வாசல்ல பெஞ்ச் போட்டு இருப்பாங்க. நீங்க அங்க போய் வெயிட் பண்ணலாம். இல்லை இங்கேயும் இருக்கலாம். உங்களுக்கு நாற்காலி கொண்டு வரேன்.” என்றான் வாயில் காப்போன்
வீட்டில் பெட்டிப் பாம்பாக இருக்கும் விமலா, வகுப்பறையில் மாணவ மாணவிகளை எப்படி சமாளிக்கிறாள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது கருணாகரனுக்கு
விமலாவின் வகுப்பறை வாசலில் இருந்த பெஞ்சில் அமர்ந்து, மெதுவாக உள்ளே கவனம் செலுத்தினான்.
விமலா காரசாரமாக சொல்லிக் கொண்டிருந்தாள்
“செமினாரும் அசைன்மென்ட்டும் நாளைக்குள் முடிக்க வேண்டும். உங்கள் எல்லோருக்கும் பிடித்த சப்ஜெக்ட்டில் தான் தயார் பண்ணி கொண்டு வரச் சொல்லி இருந்தேன். கிரிக்கெட், சினிமா. அதைக் கூட ஒருவரும் செய்யவில்லை. வெரி இர்ரெஸ்பான்ஸிபிள். யாருக்கும் இன்டர்னல் மார்க்ஸ் கிடையாது.
எனக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. ஆனா உங்களுக்காக நிறைய இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணிக் கொண்டு வந்தேன். மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியையா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். ஆனா உங்களுக்கு எல்லாம் உங்க மேலேயே அக்கறை இல்லை.
நாளைக்கு இந்த அசைன்மென்ட் முடிக்கலேன்னா யாருக்கும் மதிப்பெண் போட மாட்டேன். அசைன்மென்ட் டாபிக் இப்போ நான் மாத்திட்டேன். விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பங்களிப்பு. நுண்கலையில் நம் இந்தியாவின் சாதனைகள். உங்களுக்கு எல்லாம் ஈசி டாபிக் கொடுக்கக் கூடாது.
நாளைக்கு எல்லாரும் நல்லா தயார் பண்ணிட்டு வாங்க. Otherwise you all will face very serious consequences” என்று மிகவும் கடுமையாக எச்சரித்து கொண்டிருந்தாள் விமலா.
கருணாகரனுக்கு பிரமிப்பாக இருந்தது. பெட்டிப் பாம்பு வெளியில் வந்ததும் இவ்வளவு சீறு சீறுகிறதே. இது தான் விமலாவின் உண்மையான முகமா?
மணி அடிக்கவும் மாணவர்களும் விமலாவும் வெளியில் வந்தனர்.
“அட தம்பி, இங்கேயே வந்துட்டீங்களா? வாங்க “
மாணவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.
“எப்படி அண்ணி? இவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்கீங்க? நீங்க தானா நான் வீட்டில் பார்த்த அதே அண்ணி? ஆச்சரியமா இருக்கே ” என்றான் கருணாகரன்.
“கேன்டீன் போலாமா தம்பி? டீயும் சமோசாவும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் வா “
மின் விசிறிக்கு அடியில் இடம் பார்த்து இருவரும் அமர்ந்தனர் கேன்டீனில்.
“நான் எப்படி வீட்ல எலியாவும் வெளியில புலியாவும் இருக்கேன்னு தெரிஞ்சுக்கணும் உனக்கு, அவ்வளவு தானே ” புன்முறுவலுடன் தொடர்ந்தாள் விமலா.
“உங்க அண்ணனை, அவருடைய பொறுப்பை உணர வைக்கிறதுக்கு, அன்பு பாசம் இதற்கெல்லாம் வாழ்க்கைல நிறைய மதிப்பு உண்டு, அப்படிங்கறத புரிய வைக்கிறதுக்கு நிறைய முயற்சி செஞ்சு தோற்றுப் போய் விட்டேன்.
எதிர்த்து வாயாடுவதும், ஆங்காரத்தை காண்பிப்பதும் அர்த்தமற்ற ஓசைகள் மட்டுமே. அவை கேட்பவரின் காதையும் மனதையும் செவிடாக்கும். ஆமாம், பாரதியார் ‘ரௌத்திரம் பழகு’ என்றார், அநியாயம் அநீதியை எதிர்த்து மட்டுமே, தொட்டதற்கெல்லாம் அல்ல.
எந்தப் பிரச்சனைக்கும் நல்ல வழி முறைகள் உள்ளன. வீட்டில் ரௌத்திரம் பழகினால் விபரீதத்தில் கொண்டு விடும். அழகிய இல்லறம் சிதைந்து விடும். அதனால் தான் நான் சினம் தவிர்த்து விடுகிறேன். ஆனால் என் சுயத்தை நான் இழப்பதில்லை.
என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்து, என் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் நான் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. எனக்கு வருத்தங்களே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவற்றால் நான் பாதிக்கப்படுவது இல்லை என்பதே உண்மை.
நான் பெற்ற மக்களுக்கு நான் ஒரு நல்ல உதாரணமாக இல்லாமல் போகலாம், ஆனால் நிச்சயமாக கெட்ட உதாரணம் இல்லை. நிச்சயமாக நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இருக்கிறோம். இதை கணவன் மனைவி இருவருமே நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
ஒருவர் புரிந்து கொள்ளாத போது விட்டுத் தான் பிடிக்க வேண்டும். இந்தக் கொள்கையை பின்பற்றினால் மன அழுத்தம், தற்கொலை இவற்றுக்கெல்லாம் இடம் எது?
சண்டையும் கூச்சலும் வாழ்க்கை அல்ல. சங்கீதம் போன்ற இனிமையும் புரிதலுமே வாழ்க்கை. இல்லறத்தின் வெற்றி இருவர் கையிலும் இருக்கிறது என்றாலும், ஒருவரால் மட்டும் கூட அந்த வெற்றியை அடைய இயலும். என் குழந்தைகளுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன்”
விமலாவின் முக மலர்ச்சியில் இளங்காலைப் பொழுதில் உதிக்கும் ஆதித்தனின் ஒளியைக் கண்டான் கருணாகரன்.
“உங்கள் அண்ணியா அடைந்ததுக்கு நான் ரொம்ப பெருமைப்படறேன். ரௌத்திரம் பழகுதல் எல்லோருக்கும் ஓர் அரண். ஆனால் சினம் தவிர்த்தலும் அந்த அரணுக்கு ஓர் துணையாக நிற்கும்”
கை குவித்து அண்ணியை வணங்கினான் கருணாகரன்
(முற்றும்)
#ads – Best Deals in Amazon Deals 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings