in ,

கடவுளின் பரிசு (சிறுகதை) – ✍ அனந்த் ரவி, சென்னை

கடவுளின் பரிசு
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 45)

சித்திரை மாதம். வெயில் பொசுக்கிக் கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியேப் பார்த்தாலே வெளிச்சத்தில் கண்கள் கூசின. தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. தூரத்தில் பார்த்தால் கானல் நீர் தெரிந்தது.

வெயிலின் கொடுமைத் தாங்க மாட்டாமல் சில தெரு நாய்கள் ஊளையிட்டுக் கொண்டும், ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டும் கிடந்தன. மேலும் கீழுமாக அலைந்துத் திரிந்து தங்கள் பொருட்களை விற்கும் தினப்படி வியாபாரிகள் கூட எங்கோ பதுங்கி இருந்தார்கள்.

சாப்பிடக் கூடத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள் சுகன்யா. மணி நாலு இருக்கும். மௌனமாக உட்கார்ந்து இருந்தாலும் அவள் மனதில் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

ஒரு மிகப் பெரிய பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பது என்கிற போராட்டத்தில் இருந்தாள் சுகன்யா. அந்த பக்கமும், இந்த பக்கமுமாக அவள் மனது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.

திடீரென ஒரு சமாதானம் தோன்றுவதைப் போல இருக்கும். பிறகு  இல்லை இல்லை என்று மனம் மீண்டும் அடுத்த நிமிடமே புதைகுழியில் இறங்கி நிற்கும்.

மனதிற்குள் தீர்மானம் ஏதாவது ஏற்படும் போதெல்லாம் கலங்கிய கண்களோடு தன் ஆசை மகள் ஸ்வாதியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள் சுகன்யா. கடந்த ஒரு மணி நேரமாகவே வலியில் சிணுங்கிக் கொண்டே தான் இருந்தாள் ஸ்வாதி.

உடல் வளர்ந்தும், மூளை வளர்ச்சி இல்லாத பெண் ஜன்மம். என்ன செய்ய? கடவுள் அப்படியெல்லாம் பார்க்கிறானா என்ன? ஸ்வாதிக்கும் அந்த மூன்று நாட்கள் உண்டே!

“அப்பவே கொன்னுப் போட்டிருக்கணும்…கேட்டியா நீ” 

திடும் திடும் என அண்ணனின் வார்த்தைகள் அவளைத் தாக்கும். என்ன கொடூரமான வார்த்தைகள் அவை

அண்ணனா அப்படி சொன்னார்? இப்படியெல்லாம் பேசக் கூட அண்ணனுக்குத் தெரியுமா என்ன? அவ்வளவுக்கு இரும்பு மனம் படைத்தவரா அவர்?

திக்குத் தெரியாமல் நின்ற இந்த சகோதரியின் வாழ்வை உயர்த்திக் கொடுத்தவர் ஆயிற்றே. எப்படி அந்த வார்த்தைகளைச் சொல்ல மனம் வந்தது அவருக்கு? அந்த அமில வார்த்தைகள் அவளைச் சுற்றி சுழன்றுக் கொண்டே தான் இருந்தன.

‘எப்படி முடியும்?’ திணறினாள் சுகன்யா.

‘அப்படியெல்லாம் நம்மால் செய்து விட முடியுமா என்ன? அப்படித் தானா நாம் வாழ்ந்திருக்கிறோம்? பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கா?’ சிலிர்த்து போனது அவளுக்கு.

அண்ணனால் மட்டும் முடிந்திருக்குமா என்ன? ஒரு கோபத்தில் அல்லது தன் மேல் இருக்கும் பச்சாதாபத்தில் அப்படி பேசினாலும் உண்மையிலேயே அப்படி செய்ய அவருக்கு மட்டும் மனசு வந்திருக்குமா? ஆற்றாமையில் அப்படி பேசுகிறார். அப்படி ஒரு நிலை வந்தால் அவர் மட்டும் செய்து விடுவாரா என்ன?

அதுவும் முதல் குழந்தை. மிகவும் கஷ்டப்பட்டு தான் அண்ணன் திருமணத்தை நடத்தினார். எவ்வளவோ கடன் பட்டிருப்பார். அதையெல்லாம் அவர் சொல்லியது கூட இல்லை.  திருமணம் முடிந்த இரண்டாவாது ஆண்டில் பிறந்தாள் ஸ்வாதி

பிறந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த போது தான் அந்த விஷக் காய்ச்சல் வந்து தொலைந்தது. ஊரே மிரண்டு போய் தானே கிடந்தது

எத்தனை பாடு? எத்தனை செலவு? அவ்வளவு செய்தும் ஸ்வாதியின் உயிரை மட்டும் தான் காப்பாற்றிக் கொடுக்க முடிந்தது டாக்டர்களால். ஆனால் அந்த ஜுரத்தில், மிக மிக அதிகமாகக் கொடுக்கப்பட்ட மருந்துகளால் மூளை வளர்ச்சிக் குன்றிப் போனாள் ஸ்வாதி.

இனி, இவள் இப்படித் தான் இருக்கப் போகிறாள். எந்த காலத்திலும் இதற்கு மேல் இவளுக்கு மூளை வளர்ச்சி இருக்கப் போவதில்லை என்று தெரிந்ததும், சுகன்யாவின் உலகம் இருண்டே போனது.

ஆசை ஆசையாய் திருமணம் முடிந்து பிறந்த அழகான பெண் குழந்தை… மூக்கும் முழியுமாகப் பார்ப்பவர்களைக் கவர்ந்து இழுத்தது குழந்தையின் அழகு.

ஆனால் என்ன பிரயோசனம்? அழகைக் கொடுத்த இறைவன் இவள் அறிவைப் பறித்துக் கொண்டு விட்டானே. ஸ்வாதி ஆயுசுக்கும் இனி குழந்தை தான். எங்கே போய் தன் சோகத்தைக் கொட்டுவாள் சுகன்யா?

பெற்ற வயிறு பற்றி எரிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொன்னார்கள். சிலர் இகழ்ந்தார்கள், உறவுகள் கேலி பேசின. அப்பொழுதும் அண்ணன் சொன்னார்.

“இது உனக்குப் பிரயோசனம் இல்லாதக் குழந்தை மட்டுமல்ல, உன் வாழ்க்கையை துன்பத்தில் ஆழ்த்தப் போகும் குழந்தை. மனசை கல்லாகிக் கொள். டாக்டர்களிடம் பேசியே இதன் வாழ்வை முடித்து விடு. இல்லையென்றால் உன் எதிர்காலமே பாழ்”

இரண்டு வயது முடிந்த நிலையில், அதற்குள்ளாகவா அந்த ஜீவனை, பிஞ்சுக் குழந்தையைக் கொன்றிருக்க முடியும்? யாரால் முடியும்? என் புருஷனால் மட்டும் முடிந்ததா என்ன? அழகாக மலர்ந்து மணம் வீசும் ரோஜாவைக் கசக்கி எறிய யாருக்கு மனசு வரும்?

பிடிவாதமாக இருந்து விட்டாள் சுகன்யா. இது என் குழந்தை. கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு. இது என்னுடனேயே இருக்க வேண்டும்

நான் ஒரு தாய்; நொந்து பெற்றக் குழந்தையை அழித்து விட நான் தயாராயில்லை என்று திடமாகச் சொல்லி விட்டாள் சுகன்யா

ஸ்வாதியின் முனகல் சற்று அதிகமாகவே, எண்ணக் குவியல்களில் இருந்து விடுபட்ட சுகன்யா எழுந்திருந்தாள். அந்த வேதனையிலும், சிரித்த முகத்தோடு தான் இருந்தாள் ஸ்வாதி.

அவளுக்குச் சிரிக்க மட்டுமே தெரியும். மெல்ல நெருங்கி அவளை ஆசவாசப்படுத்தினாள் சுகன்யா. ஸ்வாதிக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்

என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று முகம் உயர்த்தி சுகன்யாவைப்  பார்த்தாள் ஸ்வாதி. எதற்காக என்று புரியாத அந்த பார்வை அந்தத் தாயின் மனதைப் பிசைந்தது. ஒரு குற்றவாளியைப் போல தன் மகளை நோக்கினாள்.

ஸ்வாதியின் தீர்க்கமான பார்வை  ‘என்னைப் பிரித்து அனுப்பி விடுவாயா அம்மா?’ என்று கேட்பதைப் போலவே இருந்தது சுகன்யாவிற்கு

அப்படி எல்லாம் புரிந்து கொள்கிறாளா ஸ்வாதி? நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகள் எல்லாம், புரிந்தும் புரியாமலும், அவளைக் குலைத்துப் போட்டு இருக்கின்றனவோ? அவள் காதுகளில் விழும் விவாதங்களை அவள் கவனிக்கிறாளா?

தன் குழந்தையைப் பார்க்கப் பார்க்க துக்கமும் ஆற்றாமையும் சுகன்யாவைத்  தீப்புகையைப் போல சூழ்ந்துக் கொண்டன. இது யார் செய்த பாவம் என்று அவளுக்குப் புரியவில்லை.

எல்லாம் நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் ஸ்வாதிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருக்கும். தன் இயலாமையை நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்டாள் சுகன்யா.

மகளை மெல்ல சாய்த்துப் படுக்க வைத்தாள். களங்கமில்லாத அந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுகன்யாவுக்கு, வயிற்றைப் பிசைந்தது.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ராத்திரி அண்ணனுக்கும் ராகவனுக்கும் என்ன பதில் சொல்வதென்று சுகன்யாவுக்குப் புரியவில்லை.

அவர்கள் சொல்வது அப்படியே தவறு என்று எடுத்துக் கொள்ள முடியாது தான். ஆனால் நான் அம்மா ஆயிற்றே என்று நினைத்துக் கொண்டாள்.

#ads – Best Deals in Amazon 👇


 

பெற்றெடுத்தத் தாய் என்பவள் வேறு அல்லவா? மற்றவர்களைப் போலவே ஒரு தாயாலும் சிந்தித்து விட முடியுமா? மற்றவர்கள் ஆயிரம் காரணிகளை அடுக்கலாம். ஆனால் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு அன்பும் பாசமும் மட்டுமே அல்லவா காரணிகள். தாய்மை அல்லவா அவளின் உயிர் மூச்சு

எந்த திடமான முடிவுக்கும் சுகன்யாவால் வர முடியவில்லை. யாருக்கென்று பார்ப்பது? மணம் முடிக்கக் காத்திருக்கும் தன் மகன் ராகவனுக்கா, அல்லது வாலிப வயதைக் கடந்தும் தன்னையே நம்பிக் கொண்டு இன்னும் உயிரோடு இருக்கும் இருபத்தி இரண்டு வயது குழந்தை ஸ்வாதிக்கா?  குப்பென்று அவள் கண்களைக் கண்ணீர் அடைத்தது.

“உன்னோட பைத்தியக்காரத் தனத்தை விடு சுகன்யா. உன்னுடைய சுயநலத்துக்காக உன் பிள்ளை ராகவனோட வாழ்க்கையை பணயம் வைக்கப் போறியா?” முழங்கினார் அண்ணன்

தப்பில்லையே, அண்ணன் சொல்வது மாதிரி தானே இந்த உலகமும் சொல்லும்? நான் தான் தவறோ? நிஜமாகவே என்னுடைய சுய நலத்துக்காக என்னோட மகனின் வாழ்க்கையை நான் பாழடிக்கிறேனோ?

என் கடைசி நாள் வரை ஸ்வாதியோடு வாழ வேண்டும் என்று நான் நினைப்பது பேராசையா? அது என் கடமை இல்லையா? அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டுமானால் ராகவன் திருமணம் இல்லாமல் வாழ்ந்து விட வேண்டுமா? அது நியாயம் தானா?

ஸ்வாதிக்கு நான் தாய் என்றால் ராகவனுக்கும் தாய் தானே? அவனது வாழ்க்கையை நான் பார்க்க வேண்டாமா? அதுவும் என் கடமை தானே?

மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்தாள் சுகன்யா

“இன்றைக்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும்” என்பது அண்ணனின் கட்டளை.

கணவனை இழந்த எனக்கு அண்ணன் தானே ஆதரவு? அவர் இல்லாவிட்டால் இத்தனை காலம் மதிப்பு, மரியாதையோடு இந்த ஊரில் வாழ்ந்திருக்க முடியுமா? எவ்வளவு பாசம் இருந்தால் கூடப் பிறந்தவளை கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார் அண்ணன்?

காசு பணம் என்ன அவருக்கு மட்டும் கொட்டியா கிடக்கிறது? அளப்பில்லா அன்பும் பாசமும் தானே அவரிடம் இருந்தது. அண்ணனாகவும் தகப்பனாகவும் இருந்து முகம் கோணாமல் தன்னை வளர்த்து திருமணமும் செய்வித்தவர் ஆயிற்றே. என் நன்மையை தானே அண்ணன் எப்பவும் சிந்திப்பார், விரும்புவார்.

எப்படி எல்லாம் காலம் மாறி விட்டது என்று நினைக்க நினைக்க அவளுக்கு மிகுந்த ஆயாசமாக இருந்தது. தங்களுடைய காலத்தில் எப்படிப் பெரியப் பெரிய குடும்பகளில் எல்லாம் சின்னஞ்சிறிய பெண்கள் வாழ்க்கைப்பட்டுப் போனார்கள்.

ஐயோ பெரிய குடும்பத்தில் போய் மாட்டிக் கொள்கிறோமே, எத்தனை பேருக்கு என்னென்ன சேவை செய்ய வேண்டுமோ என்றெல்லாம் நினைத்தோமா என்ன? கிடைத்த வாழ்க்கையை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் இன்றைக்கு… என்னென்ன கண்டிஷன் எல்லாம் போடுகிறார்கள் பெண்கள்? அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஸ்வாதியைக் காரணம் காட்டி ராகவனை மணக்க யோசிப்பது என்ன விதத்தில் நியாயம்?

“நல்லா இருக்கே உன் நியாயம்? பொண்ணு கொடுக்கறவன் நாலும் யோசிச்சு தான கொடுப்பான்” என்றார் அண்ணா அன்றைக்கொரு நாள்.

“இல்ல அண்ணா… ஸ்வாதியைப் பார்த்துக்க நா இருக்கேன். அப்பறம் என்ன?”

“உனக்கப்பறம்..? வரவ தான பார்த்துக்கணும்? அதை யோசிக்காம இருப்பாங்களா?”

 “அப்படி எல்லாமா பார்ப்பார்கள்?” என்ற சுகன்யாவின் கேள்வி, அவளுக்கே சற்றுப் பலகீனமாகத் தான் கேட்டது.

தனக்கு வரப் போகும் கணவனுக்குத் தங்கைகள் இருக்கவே கூடாது என்று பெண்கள் கண்டிஷன் போடும் இந்த காலத்தில், ஸ்வாதி மாதிரி ஒரு தங்கையைப் பரவாயில்லை என்று எவள் சொல்லுவாள்?

தப்பித் தவறி அப்படியே ஒரு பெண் நினைத்தாலும், பெண்ணை பெற்றவள் சும்மா விடுவாளா?

“அம்மா அப்படி என்னம்மா எனக்குக் கல்யாணம்? காலம் முழுக்க நாம இப்படியே இருந்துடலாமே” என்றான் ராகவன். அவனாலும் ஸ்வாதியைப் பிரிந்து இருக்க முடியவில்லை. பாசமுள்ள தம்பி!

“நீயும் ஒரு பொண்ணாப் பொறந்திருந்தா நானும் அப்படி தாண்டா நினைச்சிருப்பேன்”

“ஏன்?”

“என்னவா? ஏண்டா, எனக்கப்பறம் நீ அவளைப் பார்த்துக்குவியா?  ஸ்வாதியை உன்னால  பாத்ரூமுக்குக் கூட்டிக்கிட்டுப்  போக முடியுமா? ட்ரெஸ் போட்டு விடுவியா இருபத்தி ரெண்டு வயசு பொண்ணுக்கு?”

ஆவேசமாக சுகன்யா கேட்ட கேள்விகளுக்கு, அவள் மகனாகிய ராகவனிடம் பதில் இல்லை தான்

“இதையெல்லாம் யோசிச்சு தான் நா சொல்றேன் சுகன்யா. உனக்கப்பறம் யாராலையும் ஸ்வாதியைப் பார்த்துக்க முடியாது. பேசாமா நா சொல்றதை கேளு, அவளை மாதிரி உள்ளக் குழந்தைகளைப் பார்த்துக்கறதுக்குன்னு ஒரு ஆஸ்ரமம் இருக்கு. அங்கே போய் அவளை விட்டுடறது தான் நல்லது” என அண்ணன் கூற

“ஐயோ அண்ணா” என்று காதைப் பொத்திக் கொண்டாள் சுகன்யா

“பெத்தக் குழந்தையை நான் உயிரோட இருக்கறச்சயே அனாதையா ஆஸ்ரமத்துல விட்டுடறதா? இல்ல அண்ணா, முடியவே முடியாது. தயவு செய்து என்னை மன்னிச்சிக்கங்க” என்றாள் கண் பனிக்க

தாயின் கண்ணீரைக் கண்டு ராகவனும் கண் கலங்கி நின்றான். என்ன செய்வது என்று அவனுக்கும் புரியத் தான் இல்லை. தன் தாய்க்காகவும், சகோதரிக்காகவும் எந்த தியாகத்தையும் செய்ய அவன் தயாராகத் தான் இருக்கிறான். ஆனாலும் மாமா சொல்வது சரி தானே

“அர்த்தமில்லாம பேசாத சுகன்யா. இதோட மூணு பொண்ணுங்க ராகவனை வேணாம்னு சொல்லிட்டாங்க. இப்படியே இன்னும் எத்தனை நாள் ஒட்டறதா உத்தேசம்? அவனுக்கும் வயசாகல்லியா? சொல்றதை கேளு” என அண்ணன் நிதர்சனத்தை எடுத்துரைக்க, புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு உள்ளே ஓடினாள் சுகன்யா

“ஆண்டவா ராகவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு ஸ்வாதியையும் பாத்துக்கறேன்னு சொல்ற ஒருத்தியை என் கண்ணுல காட்டிட மாட்டியா?” என கடவுளிடம் மன்றாடினாள் சுகன்யா

தாய் படும் வேதனையை ராகவானால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

“மாமா எனக்குக் கல்யாணமே வாண்டாம் மாமா, எங்கள இப்படியே விட்டுடுங்க…” என்று கண்ணீரோடு கை கூப்பி வேண்டிக் கொண்டான் ராகவன்.

“இந்த இழவுக்குதாண்டா நா அப்பவே சொன்னேன். ரெண்டு வயசாறச்சே அந்த டாக்டர் என்ன சொன்னான்? இனிமே இந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சியே ஏற்படாது’னான். நான் சொல்ற பேச்சை உங்கம்மாவும் அப்பனும் கேட்டிருந்தா, இன்னைக்கு இந்த பாடுபட வேண்டியிருக்காது. விவரம் தெரியாத வயசுலேயே அந்த குழந்தையை முடிச்சிருக்கலாம். அவளுக்கும் நிம்மதி, நமக்கும் நிம்மதி”

“ஐயோ அண்ணா. வேணாம் அண்ணா… மறுபடியும் மறுபடியும் அந்த வார்த்தையை சொல்லாதீங்க. இந்த உலகத்துல பெத்த தாயே தன் குழந்தையை கொல்வாளா? எங்கையாவது இந்த அக்ரமம் நடக்குமா?”

“குழந்தை நல்லபடியா இருந்தா யாராவது கொல்லுவாங்களா? இப்படி ஒரு பைத்தியத்தை வெச்சிகிட்டு நீயும் சீரழிஞ்சி ராகவனையும் சீரழிக்கிறியே? எக்கேடோ கேட்டுப் போன்னு விட்டொழிய எனக்காச்சும் மனசு வருதா? இல்லியே”

அந்த வார்த்தைப் பிரயோகம் சுகன்யாவைக் குத்தினாலும், எதிர்க்க அவளால் முடியத் தான் இல்லை. தன் கையாலாகாதத்தனத்தை சின்ன சின்ன விசும்பல்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்

யார் சொல்லும் நியாயத்தை எடுத்துக் கொள்வது என்று புரியாமல் விழித்தான் ராகவன். மெல்ல எழுந்து, வெளியே சென்றபடியே சொன்னார் சுகன்யாவின் அண்ணன்

“டே ராகவா, நீதாண்டா உங்கம்மாவுக்கு எடுத்து சொல்லணும். ஏற்கனவே நான் ஆஸ்ரமத்துல பேசி வெச்சிட்டேன். இன்னிக்கி ராத்திரியே ஆம்புலன்ஸ் வந்துடும், ஸ்வாதியைத் தயார்ப்படுத்தி வை” என்றபடியே வெளியேறினார்.

ஆற்ற மாட்டாமல் எழுந்து சென்று மீண்டும் ஸ்வாதியின் அருகே அமர்ந்து கொண்டாள் சுகன்யா. கள்ளங்கபடம் இல்லாத அந்த முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘மூளை சரியில்லை என்பதால் மட்டும் இவள் என் குழந்தை இல்லை என்றாகி விடுமா? என் வயிற்றில் வளர்ந்தவள் இல்லையா இவள்?’ படபடப்பாக வந்தது சுகன்யாவிற்கு

‘என் சொத்து இல்லையா இது? கடவுள் எனக்கே எனக்கு என்று கொடுத்த இந்த சொத்தை எப்படி வீசி எறிவது? யாருக்காக வீசி எறிவது?’ ஆற்றாமையில் மூச்சு முட்டியது சுகன்யாவிற்கு

அதே சமயம் ராகவனைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை சுகன்யாவால்

‘அவன் என்ன செய்வான் பாவம்? அவனால் தனியாக ஸ்வாதியைப் பார்த்துக் கொள்ள அவனால் முடியவே முடியாது. அதற்காக… அதற்காக… இதைக் காரணம் காட்டி அவன் வாழ்க்கையை பாழாக்கலாமா நான்? எனக்கு அப்படி உரிமை இருக்கிறதா?’

இருதலை கொள்ளி எறும்பைப் போல என்பதே சரியான உதாரணமாக இருக்கும் சுகன்யாவின் நிலைக்கு. என்ன முடிவு செய்வதென்பதைப் புரிந்துக் கொள்ளவே முடியாமல் மெல்ல எழுந்து சுவாமி அறையில் நுழைந்தாள் சுகன்யா.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. விளக்குகளில் நிறைய எண்ணையை ஊற்றி, திரிகளைப் பற்ற வைத்தாள். கவலை அவள் கைகளை நடுங்க செய்துக் கொண்டிருந்தது. சுவாமி படத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்தாள்.

இன்றிரவு அண்ணன் வந்து விடுவார். அவருக்கு என்ன பதில் சொல்வது? மெல்லக் கண்களை மூடி கடவுளை வேண்டிக் கொண்டாள்

‘என் தெய்வமே, நீ தான் எனக்கொரு வழி காட்ட வேண்டும்’

எதைப் பற்றியும் கவலைப்படாதக் காலம் மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்தது. உணர்ச்சிகள் மரத்துப் போனவளாக அமர்ந்திருந்தாள் சுகன்யா.

மணி இரவு எட்டை நெருங்கியது. ஆனால் சுகன்யா அசையவில்லை. தனக்கு ஒரு வழி காட்டியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதத்தில், ஸ்வாமி அலமாரியின் முன் அமர்ந்திருந்தாள்

திடீரென்று வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும், சுகன்யாவிற்கு திக்கென்றது. உடல் வியர்த்துக் கொட்டி கண்கள் இருட்டிக் கொண்டு வர, வாய் உலர்ந்து போயிற்று.

“தெய்வமே… எனக்கு ஒரு வழி காட்ட மாட்டாயா? என் கண் முன்னே நான் பெற்ற மகளை விடுதிக்கு அனுப்பி விடுவாயா?”

கண்களில் கண்ணீர் நிரம்ப, இறைவன் முன் கவலையோடும் பயத்தோடும் விழுந்து நமஸ்கரித்தாள் சுகன்யா. அவள் இருதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டது.

“டே ராகவா… எங்கடா இருக்கே? பார் வண்டி வந்தாச்சி, கிளப்பு உன் தங்கச்சிய…” என்றபடியே உள்ளே நுழைந்த அண்ணனுக்கு, ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது

சுவாமி அறை வாசலிலேயே முகம் வெளுத்து போய் இதயம் நின்று போய் வீழ்ந்து கிடந்தாள் சுகன்யா. தன் பிரியமான ஸ்வாதி, தான் பெற்றெடுத்த  குழந்தை  அந்த வீட்டை விட்டு வெளியே போவதற்கு முன்னால் தான் போய் விட வேண்டும் என்ற அவளின் வைராக்கியம், பலித்துப் போய் தான் இருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

17 Comments

  1. திரு ஆனந்த் ரவியின் சிறுகதை அருமை. முடிவில்ஆறுதலாக இருந்த அம்மா இறந்தது பெருஞ்சோகம்.

  2. அனந்த் ரவி அவர்களின் “கடவுளின் குழந்தை”க் கதை படிக்கும் ஒவ்வொரு தாயும் தன்னைச் சுகன்யாவாகவே எண்ண வைக்கும் அருமையான எழுத்தாக்கம்.
    ஸவாதியை அனுப்பும் முன் சுகன்யா உயிர் விட்டது மனத்தை நெகிழ வைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள் ரவி சார்.
    வாழ்க வளமுடன்.❤️👍🙏

    • லீலா ராமசாமி அவர்களே, உங்களின் பாராட்டு என்னை நிறைத்து விட்டது. நன்றிகள் மா.

  3. அருமையான தாய்ப்பாசத்தை உணர்வு பூர்வமாக உணர வைக்கும் சிறப்பான குடும்பக் கதை…
    சற்றும் தொய்வில்லாமல் காட்சிகளை… அல்ல… அல்ல…
    உணர்ச்சிக் கொந்தளிப்பை காட்சிகளாக அமைத்து கதையை நகர்த்திச் சென்றிருக்கும் பாங்கு, ஒரு தேர்ந்த கதையாசிரியர் இவர் என்பதை நிரூபிக்கிறது.
    மாற்றுத்திறனாளி மகள் மீதுள்ள
    பாசத்தில் தாயின் மனம் படும்பாட்டை படித்துணரும்போது என் கண்கள் குளமானது.
    ஆசிரியர் அனந்த் ரவி அவர்களின் “கடவுளின் பரிசு” எழுத்தோவியம் பாராட்டுக்குரியது!
    நல் வாழ்த்துக்கள்!

    • ஐயா உங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  4. அருமையான கதை. யதார்த்தமான நிகழ்வுகள். கதை போன்றே தோன்றவில்லை. அக்கம் பக்கத்தில் நடக்கும் சம்பவங்கள் போலவே இருந்தது கடவுளின் பரிசு என்கிற இந்த கதை.

  5. ஆழமான கதை. இது உண்மையான சம்பவம் போலலவே இருந்தது. மனம் கனத்துவிட்டது. தம்மைச் சுற்றி நடக்கும் சம்பவமாகவே தெரிந்தது.

    • மாதங்கி ஜி, ஆமாம் இந்தக் கதையின் ஒரு சம்பவம் உண்மையில் நடந்ததுதான். அதை ஆதாரமாகக் கொண்டு கற்பனைக் கதையாக இதைப் புனைந்திருக்கிறேன். உங்களின் பாராட்டு என்னை நெகிழ்த்துகிறது. நன்றி மா.

  6. கடவுளின் பரிசு. ஆசிரியர் திரு. ஆனந்த் ரவி.
    நிச்சயம் கண்களில் நீரை வரவழைத்த கதை.
    தாய் எனும் இரு எழுத்தில் இந்த உலகமே அடங்கும். தன் மகள் ஸ்வாதி சித்த ஸ்வாதீனம் இல்லாத நிலையிலும் அரவணைக்கும் அன்பு, நிச்சயம் தாய்க்கு மட்டுமே இருக்கும். தாய்மை குணத்தை கண்ணீருடன் வெளிப்படுத்தி இருக்கிறார் என நினைக்கிறேன்.
    பாசப் போராட்டம் இறுதியில் உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மிக அருமையான உணர்ச்சி வசமான கதை. வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.


    ஜோதிடர் ரவீந்திர ராவ்

    • ஜோதிட நண்பரே, உங்களின் விரிவான விமர்சனம் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. என் கதையைப் படித்ததற்கும், பாராட்டியதற்கும் மிகவும் நன்றிகள் நண்பரே.

  7. ஒரு சிறப்புக் குழந்தை உள்ள தாயின் பரிதவிப்பு, இயலாமை, ஆதங்கம் எல்லா அற்றையும் அப்படியே கண் முன் நிறுத்தி விட்டீர்கள். மிக உயிரோட்டமான எழுத்து. கதாசிரியரின் சிறந்ததொரு படைப்புக்கு வாழ்த்துக்கள்.

  8. படிக்கும் நெஞ்சங்களை ஈரமாகிய ஒரு உயிரோட்டமான கதை. ஒரு சிறு கதையில் எவ்வளவு உணர்ச்சிகள் – அருமை அருமை – கதை படித்தாகிவிட்டது – முடிந்துவிட்டது கதை – ஆனாலும் மனது அதிலிருந்து வெளிவரவில்லை.

    • சார்,

      உங்கள் மனதை தொட்ட கதை என்று சொல்கிறீர்கள். அதுவே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. உக்னள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி சார்.

  9. படிக்கும் நெஞ்சங்களை ஈரமாகிய ஒரு உயிரோட்டமான கதை. ஒரு சிறுகதையில் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் மிக யதார்த்தமாக காட்டியிருப்பது கதாசிரியர் ரவி அவர்களின் திறமைக்கு சான்று.

  10. சிறப்பு குழந்தைகள் உள்ள பெற்றோரின் மனநிலையை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். வேதனையான முடிவு தான். ஆனாலும் கதை மனதில் நிற்கிறது

    • பானுமதி அவர்களே,

      முடிவு வேதனைதான். என்ன செய்ய முடியும்? சூழ்நிலை அப்படி. படித்தற்கும் விமர்சித்ததற்கும் நன்றிங்க.

சினம் தவிர் (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்

மயக்கமா… கலக்கமா… (சிறுகதை) – ✍ ஆர்.வெங்கட்டரமணி, சென்னை