in ,

மயக்கமா… கலக்கமா… (சிறுகதை) – ✍ ஆர்.வெங்கட்டரமணி, சென்னை

மயக்கமா... கலக்கமா...
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 46)

ரவணனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று சொல்லி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவுடன், ராதிகாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. 

சரவணனுக்கு நாற்பத்தைந்து வயது.  பெங்களூரில் வங்கி ஒன்றில் மண்டல மேலாளராகப் பணிபுரிகிறார்.  ராதிகாவுக்கு நாற்பத்தி இரண்டு வயதாகிறது.  ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள்.  இருவருக்கும் கை நிறைய சம்பளம். பெங்களூரு ஜே.பி நகரில் சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் என்று சகல வசதிகளுடன்

சரவணனுக்கும் ராதிகாவுக்கும் திருமணமாகி இருபது வருடங்களாகிறது.   மகள் ப்ரியா கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு எழுதியிருக்கிறாள்.  மேற்படிப்பு படிக்க வேண்டும் என முடிவு செய்திருந்ததால், கேம்பஸ் இன்டெர்வியு எதிலும் பங்கேற்காமல் விட்டு விட்டாள்.

மகன் ஆதித்யா பிளஸ் டூ படிக்கிறான்.   இறுதித் தேர்வு எப்போது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. .

வங்கிகள் அனைத்துமே கொரோனா சமயத்தில் இயங்க வேண்டிய நிர்பந்தத்தால் வங்கி அலுவலர்களும் அதிகாரிகளும் சுழற்சி முறையில் வேலை செய்தனர். சரவணன் உயர் பதவியிலிருந்ததால் வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் வேலைக்குப் போக வேண்டியதாக இருந்தது.   

கொரோனா முதல் அலையில் சரவணனுடைய அலுவலகத்தில் இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.  ஆனால் இந்த இரண்டாம் அலையில், ஒரே சமயத்தில் எட்டு பேர் மருத்துவமனையில் சேரும் நிலை உண்டானது.  அதில் சரவணனும் ஒன்று.

சரவணனுக்கு கொரோனா உறுதியானதால், ராதிகா உள்ளிட்ட மூவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். மூவருக்கும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு முடிவு அடுத்த நாள் வரும் என்று சொல்லியிருந்தனர்.  

சரவணனுக்குக் கொரோனா என்றதும் துடிதுடித்துப் போனாள் ராதிகா.  அவன் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு மேலாக, உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தான்.  

இரணடாவது அலையில் பாதிக்கப்படுகிறவர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருப்பதும், அதனால் சிலர் மரணம் அடைவதும் அவளை பீதி அடையச் செய்தது.   

சரவணன் இந்த மாதிரி ஆபத்தான நிலைக்குப் போகாமல் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று நொடிக்கொரு முறை கடவுளை மனதார அழுது வேண்டிக் கொண்டாள் ராதிகா

ஐ.டி நிறுவனத்தில் வேலை என்பதால், பொதுவாகவே ராதிகாவுக்கு முழு இரவு நேர வேலையாக இருக்கும், இல்லை என்றால் இரவு பன்னிரண்டு மணிக்கோ அல்லது ஒரு மணிக்கோ வேலை முடிந்து கம்பெனி வாகனத்திலே இரவு வீட்டுக்குத் திரும்புவாள். 

அதனால், தினமும் காலை குழந்தைகளை பள்ளிக்குத் தயார் செய்து அனுப்புவதையும், அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு தயார் செய்து தருவதையும் முகம் கோணாமல் செய்து வந்தான் சரவணன்

ராதிகாவுக்கு அலுவலக வேலைகளில் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நல்ல அணுகுமுறையை அவளுக்கு சொல்லித் தந்திருக்கிறான்.  சில சமயங்களில் அந்த அலுவலக பிரச்சனைகளை அவள் வீட்டில் வந்து குழந்தைகளிடமும் அவனிடமும் கொட்டும் போது, அவற்றை அவன் கையாண்ட விதமே தனி

சமீப காலமாக அவளுடைய வயது காரணாமாக ஹார்மோன் சுரப்பதில் உண்டான சில மாற்றங்களால் அவளுக்கு வரும் கோபத்தையெல்லாம் கூட அவன் சமாளித்த விதத்தில், அவளே நினைத்திருக்கிறாள் இந்த மாதிரி புரிந்து கொள்ளக் கூடிய கணவன் கிடைக்க, சென்ற பிறப்பில் என்ன தவம் செய்தாளோ என்று.  அந்த அளவிற்கு அவளுடைய மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தான் சரவணன்

அவர்களுக்குத் திருமணமான இந்த இருபது ஆண்டுகளில், அவன் அவளுடனும் குழந்தைகளுடனும் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொண்டது மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருந்தது.   

“உனக்கென்ன, உன் வீட்டுக்காரன் உன்னைத் தலைல வெச்சுத் தாங்கறான்” என்று பலர் வெளிப்படையாகவே சொல்லக் கேட்டிருக்கிறாள் ராதிகா

சரவணன் இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. 

குழந்தைகள் முன் தான் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அவளுடைய பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,  வெளி வேஷம் போட்டாள் ராதிகா

ஆனால் ப்ரியா, அப்பாவுக்கு கொரோனா என்றதும் அழுது தீர்த்து விட்டாள். 

அப்பாவுக்கு அவள் கொள்ளை  செல்லம்.   அவள் எது கேட்டாலும் சரவணன் இல்லை என்று  சொன்னதே இல்லை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு வித்தியாசமான கிப்ட். அதுவும் அவளுடைய தேவையை அறிந்து வாங்கிக் கொடுப்பார்.

ப்ரியாவுக்கு சிறுவயதிலிருந்தே கணிதப்பாடம் அவ்வளவாகப் புரியாது.  ஒரு சில சமயங்களில் அந்தப் பாடத்தில் அவள் மிகக் குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததும் உண்டு.   

அதற்கெல்லாம் கோபப்படாமல் “சரிடா செல்லம், இந்த எக்ஸாம் இல்லன்னா என்ன, அடுத்ததுல பாத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறி தேர்வின் மீதிருந்த அவள் பயத்தைப் போக்கியதே அவள் அப்பா சரவணன் தான்

ப்ரியா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவளுக்கு டூ வீலர் ஓட்ட சொல்லிக் கொடுத்து அவளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்ததும் சரவணன் தான்

அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, அவர்களுக்கு பாடத்தில் வரும் சந்தேகங்களை தீர்த்து வைத்து, அவர்களுடன் விளையாடி விட்டு, இரவு டின்னர் முடித்து விட்டு அவர்களைத் தூங்க வைப்பது வரை தாயுமானவர் பொறுப்பை எடுத்துக் கொண்டான் சரவணன்.

இப்படி குழந்தைகளை தினமும் அரவனைத்துச் செல்லும் சரவணனுக்கு கொரோனா என்றால் குழந்தைகளால் எப்படி தாங்கி கொள்ள முடியும்? 

ஆதித்யா அடிக்கடி வீட்டிலிருந்த கடவுள் படத்திற்கு முன்னால் சென்று ஏதோ மனதிற்குள் வேண்டிக்கொண்டு வருவதுமாய் இருந்தான்.  

#ads – Best Deals in Amazon 👇


 

சரவணன் மருத்துவமனையில் இருக்கும் செய்தியை, ராதிகா தன் தங்கை கவிதாவுக்கும் சரவணனின் தங்கை ராதாவுக்கும் தெரியப்படுத்தினாள். 

அன்றிரவு ராதிகா கைபேசியில் சரவணனைத் தொடர்பு கொண்ட போது, ‘சரவணனால் பேச முடியவில்லை’ என்று அங்கிருந்த செவிலிய பெண் ஒருத்தி எடுத்து பேசினாள்.  மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும், முன்னேற்பாடாக ஆக்சிஜன் கொடுத்திருப்பதாகவும் சொன்னாள்.   

ராதிகாவுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.  அன்றிரவு அவர்கள் மூவரும் தூங்கவேயில்லை. 

அடுத்த நாள் காலை வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றதும் மூவரும் பயந்தே போய் விட்டார்கள்.

ஆம்புலன்ஸில் வந்தவர்கள், ராதிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் சொல்லி அவளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

“ப்ரியா, ஆதித் அழக்கூடாது. இங்க பாருங்க.  ரெண்டு பேரும் தைரியமா இருங்க. நானும் அப்பாவும் குணமாகி திரும்ப வந்துடுவோம்.  பாதுகாப்பா இருங்க” என்று சொல்லி விட்டு ராதிகா ஆம்புலன்ஸில் ஏறினாள்.

ராதிகா கிளம்பிப் போன பின், ப்ரியா, நடந்ததை சென்னையிலிருக்கும் தன் கவிதா சித்திக்குத் தெரிவித்தாள்.   

“ப்ரியா, இப்ப இருக்கற லாக் டவுன் கண்டிஷன்ல நான் அங்க வரது ரொம்ப கஷ்டம்.  நான் அடிக்கடி போன் பண்ணி கேட்டுக்கறேன்.  எதுக்கும் கவலைப்படாத.  அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது.  சீக்கரம் சரியாய் வீட்டுக்கு வந்துடுவாங்க. என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளு.  கையில பணம் வச்சிருக்கயா?   ஹாஸ்பிடல் செலவுக்கு என்ன பண்ணப் போற?   நான் எதாவது அனுப்பட்டமா?’ என்று கேட்டாள்.  

“இப்ப எதுவும் வேண்டாம் சித்தி.   அம்மாவோட எ.டி.எம். கார்டு என்கிட்டத் தான் இருக்கு.   எதாவது தேவைன்னா சொல்றேன் சித்தி” என்று சொல்லி வைத்தாள்.

சற்று நேரம் கழித்து அப்பாவை கைபேசியில் அழைத்தாள் ப்ரியா.  அப்பா எடுக்காததால், அம்மாவைக் கூப்பிட்டாள். 

மறுமுனையில் வேறு ஒருவர் எடுத்து,‘டாக்டர் அவங்களப் பாத்துட்டிருக்காங்க. நீங்க அப்பறம் கூப்பிடுங்க’ என்று சொல்லி வைத்து விட்டார்.  

அடுத்த இரண்டு நாட்களும் சரவணன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் ப்ரியாவால் அப்பாவுடன் பேச முடியவில்லை.   அம்மாவுக்கோ மருத்துவமனைக்குப் போகும் போதே ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் அம்மாவை நேராக தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சேர்த்து விட்டார்கள்.   அதனால் அம்மாவுடனும் பேச முடியாமல் செய்வதறியாது தவித்தாள்.   

அவளது சித்திக்கும் அத்தைக்கும் காலையிலும் மாலையிலும் போன் செய்து என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டாள்.  

இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன.  நாள் போகப் போக பிரியாவுக்கும் ஆதித்யாவுக்கும் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.  எப்படியாவது அப்பாவையும் அம்மாவையும் உயிருடன் பார்த்து விட மாட்டோமா என்ற ஆதங்கம் இருவருக்கும் இருந்தது.

அருகில் இருந்த நண்பர்கள் வற்புறுத்தலுக்காக இருவரும் ஏதோ சாப்பிட்டனர். 

அன்றிரவு  அவளது அத்தை ராதாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  அடுத்த நாள் பெங்களூருக்குக் கிளம்பி  வருவதாகச் சொன்னாள்.   

மறுநாள் மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ராதா சென்னையிலிருந்து வந்து சேர்ந்தாள்.  அதன் பிறகு தான் ப்ரியாவிற்கும் ஆதித்யாவிற்கும் சற்று ஆறுதலாக இருந்தது.  மூன்று நாள் கழித்து மனம் விட்டு அழுதார்கள். 

அதன் பிறகு அப்பாவுக்கு போன் செய்த ப்ரியா, அப்படியே பேச்சு மூச்சின்றி விழுந்து விட்டாள்.  மறுமுனையில் பேசியவர் சரவணனின் உயிர் பிரிந்ததைத் தெரிவிக்க, ராதாவால் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முடியவில்லை.   

#ads – Best Deals in Amazon 👇


அண்ணன் இறந்ததற்கு அழுவதா இல்லை அழும் இந்தக் குழந்தைகளை தேற்றுவதா என்று புரியாமல் தவித்தாள் ராதா.  அண்ணன் இறந்த செய்தியை அண்ணிக்குச் சொல்வதா வேண்டாமா என்று குழம்பினாள்.  இறுதியில், அண்ணி இருக்கும் நிலையில் இதைச் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தார்கள்.  

அரசு உத்தரவின்படி, கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அவரவர் சொந்த நிலத்தில் எரிக்கவோ புதைக்கவோ செய்யலாம்.  ப்ரியாவும், ஆதித்யாவும் அப்பாவின் உடலை அந்த வீட்டின் பின்னாலேயே புதைக்கலாம் என்று சொன்னதால், சரவணனின் உடலைச் சுமந்தபடி ஆம்புலன்ஸ் அவர்கள் வீட்டு வாசலில் நின்றது.  ஈம காரியங்களைச் செய்ய ஏற்பாடு செய்திருந்தாள் ராதா 

ப்ரியாவும், ஆதித்யாவும் அப்பாவின் உடலைப் பார்த்ததும் கதறி அழுதது அந்தத் தெருவையே உலுக்கி எடுத்தது. 

சரவணனின் உடலை வெகுநேரம் வைத்திருக்க முடியாது என்பதால், ஈம காரியங்களை செய்ய வந்தவர்கள் ஆதித்யாவைத் தயாராகும்படிச் சொன்னார்கள்.  

ஆதித்யாவைச் சம்மதிக்க வைப்பதற்குள் ராதாவுக்கும் ப்ரியாவிற்கும் போதும் போதும் என்றாகி விட்டது. 

“நான் டாக்டர் ஆகணும்னு அப்பா எவ்வளவு ஆசைப்பட்டார் தெரியுமா அத்தை.   இப்ப இதெல்லாம் பாக்க அப்பா இல்லாமப் போயிட்டார்.  எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.  நான் உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கறேன்னு சொல்லியிருந்தார். இப்ப யார் என்ன இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்கப் போறாங்க அத்தை” என்று மீண்டும் அழ ஆரம்பித்தான்.  

“நான் இருக்கேன் ஆதித் உன்னைப் படிக்க வைக்க,  கவலைப்படாத.  நீ டாக்டர் ஆகறத அப்பா மேல இருந்து பாத்துகிட்டே இருப்பார்” என்று சொல்லி அவனை ஒரு வழியாய் சமாதானப்படுத்தினாள் ராதா

இத்தனை சின்ன வயதில் அம்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அப்பாவின் இறுதிக் காரியத்தை செய்யும் நிலை யாருக்கும் வரக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டாள் ராதா.  

ஒரு வழியாய் அப்பாவின் இறுதிக் காரியங்கள் முடிந்து வீட்டுக்குள் வந்த பிரியாவிற்கு, வீடே சூன்யமாகிப் போன மாதிரி இருந்தது.  அப்பா அம்மாவின் சொந்தக்காரர்கள் அனைவரும் துக்கம் விசாரிக்க மூன்று நாட்கள் ஒரே சோகமயமாகக் கழிந்தன.  

ராதிகாவின் தங்கை கவிதாவும் எப்படியும் ராதிகாவையாவது பார்த்து விட வேண்டும் என்ற தவிப்பில் பெங்களூர் வந்து சேர்ந்தாள். கவிதா வந்தவுடன் மீண்டும் அப்பாவுடைய நினைவுகள் மனதின் ஆழத்திலிருந்து வெளிவந்தன பிள்ளைகளுக்கு

“அவன் காலேஜ் சேர்ந்தவுடனே இவனுக்கு என்பீல்ட் புல்லட் வாங்கித் தரேன்னு அப்பா சொல்லியிருந்தார்” என்று ப்ரியா சொன்னவுடன்

“எனக்கு ஒரு பைக்கும் வேண்டாம், அப்பா திரும்ப வந்துட்டாலே போதும்” என்றான் ஆதித்யா     

சரவணனின் பத்து நாள் காரியங்களில் நான்கு நாள் காரியங்களை ஆத்மார்த்தமாகச் செய்து முடித்தான் ஆதித்யா.  இந்த மூன்று நாட்களும் ராதிகாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

அன்று காலையிலிருந்தே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது.   எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்பது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தது.  பெரிய இடியுடன் மழை கொட்டித் தீர்த்தது.  அவர்கள் வீட்டிலும் மற்றொரு பேரிடி இறங்கியது, மருத்துவமனையிலிருந்து ராதிகா இறந்த செய்தி வந்தது.  

ராதிகாவின் உடல் நிலை மோசமாகத் தான் இருந்தது என்றாலும், ‘எப்படியாவது உயிர் பிழைத்து வந்து விட மாட்டாளா?’ என்ற நப்பாசை எல்லோருக்கும் இருந்து கொண்டு தான் இருந்தது

ஆனால் அவளும் இப்படி ப்ரியாவையும் ஆதித்யாவையும் தவிக்க விட்டு விட்டுப் போனது, சரவணன் மற்றும் ராதிகாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாத பேரிழப்பாக இருந்தது. 

ப்ரியாவும் ஆதித்யாவும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சிரமப்பட்டனர். ராதாவும் கவிதாவும் ஆளுக்கொருவரை தேற்றி ஒரு வழியாக ராதிகாவின் ஈமக்கிரியை செய்து முடித்தனர்

“ராதிகா அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தா, உனக்கு இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷத்திலே நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்யணும்.  நூறு பவுன்லயாவது நகை போட்டு அழகு பார்க்கணும்னு ஆசைப்பட்டா.  பாவி  இப்படி அல்பாயுசுல போய்ச சேர்ந்துட்டா” என்று கவிதா தன்னுடைய மன உளைச்சலைக் கொட்டித் தீர்த்தாள்.  

சரவணன் ராதிகா இருவருடைய பத்து நாள் காரியங்களும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மேற்கொண்டு அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை ப்ரியா மற்றும் ஆதித்யாவின் பேருக்கு மாற்றுவது பற்றியும் ப்ரியாவும் ஆதித்யாவும் எங்கே இருக்கப் போகிறார்கள் என்பது குறித்தும் குடும்பத்தார் எல்லோருடைய கருத்தையும் கேட்டுக் கொண்டிருந்தனர். 

ப்ரியாவும் ஆதித்யாவும் ஒருவேளை சென்னைக்கு இடம் பெயரும் பட்சத்தில், ஆதித்யாவின் டாக்டர் படிப்புக்கும் ப்ரியாவின் திருமணத்திற்கும் கையில் பணம் வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் வசித்து வரும் ஜே.பி நகர் வீட்டை விற்று விடலாமா? என்றும் யோசித்து வந்தனர். 

ராதா, கவிதா இருவருமே பேசி வைத்தது போல், “ப்ரியா, ஆதித்யா இருவரில் யாராவது ஒருவரை வைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.  இரண்டு பேரையும் பார்த்துக் கொள்ள முடியாது” என்று சொல்லி விட்டனர் 

கடைசியில், ப்ரியா கவிதா சித்தி வீட்டிலும், ஆதித்யா ராதா அத்தை வீட்டிலும் இருப்பது என்று எல்லோராலும் முடிவு செய்யப்பட்டது.   

கவிதா ப்ரியாவைக் கூப்பிட்டு அவளுக்கு அங்கிருந்து என்னென்ன வேண்டும் என்பதைக் கேட்டு தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.  இதை பார்த்ததும் ராதாவும் ஆதித்யாவைத் தனியாகக் கூட்டி கொண்டு போய் பேசினாள்.   அவனுக்கு அந்த வீட்டிலிருந்து என்ன என்ன வேண்டும் என்று கேட்டு எடுத்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

கார், ஆடியோ சிஸ்டம் இன்னும் சிலதையெல்லாம் விற்பதா அல்லது எடுத்துக் கொண்டு போவதா என்று தீர்மானிக்க முடியாமல் இருந்தார்கள். 

பிரியாவிற்கு திருமணச் செலவு இருப்பதால், அவளுக்குத் தான் அதிக பங்கு கொடுக்க வேண்டும் என்று கவிதா கேட்டாள்.  ஆதித்யாவை டாக்டருக்கு படிக்க வைக்க செலவு அதிகம் ஆகும் என்பதால் ஆதிதியாவுக்கு அதிக பங்கு கொடுக்க வேண்டும் என்று ராதா கேட்டாள். 

“ப்ரியா, உங்கம்மா உனக்கு நூறு பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டா,   அதனால தான் உனக்கு அதிக ஷேர் வேணும்னு கேட்டிருக்கேன்.   எனக்கு ஒரு பைசா வேண்டாம் ப்ரியா.   எல்லாம் உனக்காகத் தான்” என்று அவளை ஏற்றி விட்டாள் கவிதா 

அதே போல், “ஆதித்யா… உங்கப்பாவோட ஆசை நீ டாக்டர் ஆகணும்கறது.   அதுக்கு எம்.பி.பி.எஸ் மட்டும் படிச்சா போதாது.  அதுக்கு மேல எம்.டி படிச்சா தான் இன்னிக்கு வேலை கிடைக்கும்.  இதுக்கே உனக்கு ஐம்பது அறுபது லட்சம் வேணும். அதனால தான் உனக்கு கூட வேணும்னு கேக்கறேன்.   அதுல இருந்து எனக்கு ஒரு பைசா வேண்டாம் ஆதித்.   எல்லாம் உன் பேர்லயே பாங்குல போட்டு வச்சுடறேன்” என்றாள் ராதா.  

முதலில் பெரியவர்கள் அளவில் இருந்த பேச்சு வார்த்தை, மெதுவாக ப்ரியா, ஆதித்யா வரை இறங்கி வார்த்தைகள் தடிப்பாயின.

“ஏண்டீ, நீதான் படிச்சு முடிச்சுட்டீல்ல. நான் இனிமேல்தான் படிக்கணும்.   உனக்கு அப்பா ஏற்கனவே வண்டி வாங்கி கொடுத்திருக்கார், எனக்கு இனிமேல் தான் வண்டி வாங்கணும். எனக்காக நீ எதுவுமே செய்ய மாட்டியா?” என்று ப்ரியாவைப் பார்த்து கேட்டான் ஆதித்யா

அப்போது வீட்டு புரோக்கர் ஒருவர் வரவே, ப்ரியா அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், வீட்டைக் காண்பித்தாள்.  கொரோனா சமயத்தில் வீட்டுக்கு டிமாண்ட் குறைந்து விட்டது எனவும், வீட்டை எண்பது இலட்சத்திற்கு மேல் விற்பது கடினம் என்றும் சொல்லி விட்டுப் போனார் புரோக்கர்

“குறைந்தது ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு போகக் கூடிய அந்த வீடு எண்பது இலட்சத்திற்கா? என்ன செய்வது?” என்று புரியாமல் முழித்தாள் ப்ரியா

அன்றிரவு தூக்கம் வராமல் தவித்தாள் ப்ரியா.  அப்பா அம்மா இல்லாத இந்த வாழ்க்கையில் எப்படி அடி எடுத்து வைப்பது, தன்னுடைய எதிர்காலம் என்னாவது என்றெல்லாம் எண்ணி பதில் எதுவும் கிடைக்காமல் உறங்கினாள்.   

மறுநாள் காலை தெளிவான சிந்தனையுடன் எழுந்த ப்ரியா, குளித்து விட்டு வந்து அப்பா, அம்மா படத்திற்கு பூப்போட்டு, நமஸ்கரித்தாள்.  ஆதித்யா அப்பா, அம்மாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து விட்டு குளித்து விட்டு வந்தான்.  அனைவரும் சாப்பிட்டு விட்டு வந்தமர்ந்தனர்.   

“ஆதித், உன்கிட்ட கொஞ்சம் பேசணும், என் கூட வா” என்றாள் ப்ரியா. 

“எங்க முன்னாலேயே பேசேன், தனியாக் கூட்டிட்டு போய் பேசி சமாதானப்படுத்திடலாம்னு பாக்கறயா?” என்றாள் ராதா

“நான் என் தம்பிகிட்ட பேசறேன், இது எங்க ரெண்டு பேரோட எதிர்காலம் அத்தை. என்ன பண்ணனும்னு நாங்க ரெண்டு பேரும் தான் முடிவு பண்ணனும். டேய் ஆதித் வரயா இல்லையா?’ என்று அவனை அதட்டிக் கூப்பிட்டாள்.  

“என்ன ப்ரியா மரியாதை இல்லாம பேசற?”  என்ற ராதாவின் கேள்விக்கு, ”மரியாதை இல்லாம பேசல அத்தை, நானும் ஆதித்தும் பேசறோம்னு சொன்னா நீங்க அத எதுக்குத் திரிச்சுப் பேசறீங்க? நாங்களே ஏற்கனவே அப்பா அம்மாவை இழந்து நிக்கறோம். ஆதித் இப்படி வா” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் ப்ரியா. 

ராதாவும் கவிதாவும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.  

“ஆதித்யா, அத்தையும் சித்தியும் சொல்ற மாதிரி, பணத்தை பங்கு போட்டுக்கிட்டு நீயும் நானும் அத்தை வீட்டுலயும் சித்தி வீட்டுலயும் பிரிஞ்சு இருக்கணுமா?   நீ என்ன நினைக்கற?” என்று கேட்டாள் ப்ரியா.   

“ப்ரியா… நான் டாக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார்.   அதான் என்னோட இலட்சியமும் கூட.  நீயோ படிச்சு முடிச்சுட்ட.  அப்பா அம்மாவோட டெபாசிட் பணம், வீடு வித்து வர பணம் எல்லாத்துலயும் நான் படிக்கறதுக்கு எவ்வளவு ஆகுமோ அதைக் குடுத்துட்டு நீ மத்ததை எடுத்துக்க” என்றான் ஆதித்யா. 

“அப்ப உனக்கு அக்கா வேண்டாம், பணம் மட்டும் தான் வேணுமா ஆதித்?” என்று மனதொடிந்து போய்க் கேட்டாள்ப்ரியா. 

“என்ன சொல்ற நீ? எனக்குப் புரியற மாதிரி சொல்லு” என்றான்ஆதித்யா.

“முதல்ல பணத்தை மறந்துட்டு பேசுவோம்.   நீ அத்தை வீட்டுக்கும் நான் சித்தி வீட்டுக்கும் போனா நீயும் நானும் பிரிஞ்சு போயிடுவோம்.  அதுல உனக்கு சம்மதமா?” எனக் கேட்டாள் ப்ரியா.   

“அத்தையும் சரி, சித்தியும் சரி, நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர வைச்சுப் பாத்துக்கறேன் ஆனா ரெண்டு பேரையும் வைச்சுக்க முடியாதுன்னுட்டாங்களே.  அப்ப நாம வேற என்ன செய்யறது?” என்றான் ஆதித்யா. 

“ஆதித், எனக்கு பணம் எதுவும் வேண்டாம்.  அப்பாவையும் அம்மாவையும் ஒரே நேரத்துல இழந்த நாம, அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு கேக்கறத விட, யோசனை பண்ணி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.

எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம் நீ தான். அதே மாதிரி உனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம் நான் தான்.  உனக்கு இவ்வளவு பணம் எனக்கு இவ்வளவு பணம்னு இப்பவே சண்டை போடறது நம்ம அப்பா அம்மாவுக்கு செய்யற துரோகம்.   நம்ம அப்பா அம்மா நம்மள அப்படி வளர்க்கல.  என்ன கரெக்டா?’ என்று கேட்டு விட்டு

“நான் வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன் ஆதித்.  நாம இங்கயே இருப்போம்.  நான் உன் கூடவே இருந்து உன்னைப் படிக்க வச்சு, அப்பா எதிர்பாத்த மாதிரி டாக்டர் ஆக்கறேன்.  அதுக்கப்பறம் தான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்” என்றாள் ப்ரியா.   

“என்ன ப்ரியா சொல்ற?   நாம ரெண்டு பெரும் தனியா இருக்க முடியுமா? அப்பறம் நான் படிக்கறதுக்கு பணம் வேணுமே?” என்றான் ஆதித்யா

“டேய், இப்போதைக்கு அப்பா அம்மாவோட டெபாசிட் பணம், இன்சூரன்ஸ் பணம் இதெல்லாம் வரும்.   இப்ப வீட்டை வித்தா நஷ்டம் தான்.  கொஞ்சம் வெயிட் பண்ணி விப்போம்,   அப்பா அம்மாவோட பணம் எல்லாமே உன் படிப்புக்குத் தான்.  என்ன சொல்ற?” என்றாள் ப்ரியா.   

ஆதித்யா சற்று நேரம் யோசனை செய்தான். “நல்லாத் தான் இருக்கு ப்ரியா, ஆனா பயமா இருக்கு” என்றான்.   

‘பயப்படாத…   அப்பாவும் அம்மாவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க,  நம்மள தவிக்க விடமாட்டாங்க” என்று ப்ரியா சொன்னதும்

“சாரி ப்ரியா, நான்தான் உன்னை தப்பா நினைச்சுட்டேன்” என்றான் ஆதித்யா. 

“இப்பவாவது நான் சொல்றதப் புரிஞ்சுகிட்டயே, அதுவே போதும்” என்றாள் ப்ரியா

ப்ரியாவும் ஆதித்யாவும் அத்தையிடமும் சித்தியிடமும் தாங்கள் எடுத்த முடிவைச் சொல்ல விரைந்தனர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. மிக அற்புதமான கதை. இந்த கொடிய நேரத்திலும் தாங்கள் எப்படி சம்பாதிக்க முடியும்என்று யோசிக்கும் கழுகுகள் இருக்கதான் செய்கின்றன

  2. மிகவும் உருக்கமான எழுத்துக்கள்…மனதை நெகிழ வைத்தது…இந்த கொரோனா காலத்தில் ஏற்படும் இன்னல்கள் மிகவும் கொடுமையானது…அருமையாக எழுதியுள்ளீர்கள் …

கடவுளின் பரிசு (சிறுகதை) – ✍ அனந்த் ரவி, சென்னை

அபியும்… அம்மாவும்… (சிறுகதை) – ✍ பானுமதி கண்ணன்