2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காலை எட்டு மணியாகிவிட்டது. கிழவிக்கு சாப்பிடக் கொடுக்கவேண்டுமே என்று நினைத்துக்கொண்ட ருக்குமணி, உடனே கிண்ணத்தை எடுத்து அதில் இரண்டு இட்லிகளைப் போட்டு கொஞ்சம் சட்னியையும் ஊற்றிவிட்டு மகனைக் கூப்பிட்டாள். அவனை வரக் காணோம். சரி, அவன் வரும்போது கொடுத்தனுப்புவோம் என்று நினைத்தபடி கிண்ணத்தை மூடி போட்டு வைத்துவிட்டு வேறு வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள்.
கிழவியின் பெயர் விசாலம். பக்கத்து வீட்டுக்காரி. உடம்பும் முகமும் சுருக்கம் விழுந்து கூனும் தட்டிவிட்டவள். இளவயதாக இருக்கும்போது அவ்வளவு அழகாக இருப்பாள். அது ருக்குமணிக்கும் தெரியும். இவ்வளவுக்கும் ருக்குமணி செல்லாம்மாளுக்கு பக்கத்து வீட்டுக்காரி, அவ்வளவே.
இருபது வருடங்களுக்கு முன்பு ருக்குமணி கல்யாணம் ஆகி வந்த புதிதில் அவள் நன்றாக திடகார்த்திடமாகத்தான் இருந்தாள். நான்கைந்து ஆடுகளும் ஒரு கறவை மாடும் வைத்துக் கொண்டு ஓடியாடி திரிந்துகொண்டுதானிருந்தாள். காலப் போக்கில் மூப்பின் காரணமாகவும் ஆரோக்கியமின்மையின் காரணாமாகவும் படுத்த படுக்கையாகிவிட்டாள். பின்னாளில் அவைகளை ஒவ்வொன்றாய் விற்றும் விட்டாள்.
அவள் நன்றாக இருக்கும்போது தனது வீட்டு முருங்கை மரத்தில் நீளமான குச்சியில் வாங்கரிவாளைக் கட்டி காய்கள் பறிப்பாள். முதலில் ருக்குமணிக்குத்தான் கொண்டுவந்து கொடுப்பாள். மீதம்தான் தனக்கும் சந்திக்கும். மனது அவ்வளவு விசாலம், அவளது பெயருக்கேற்றார்போல.
ருக்குமணி வந்த புதிதில் கிழவியின் கணவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையாய்க் கிடந்து கொஞ்ச நாளில் இறந்தும் போனான். அவளுக்கு ஒரு மகள் மட்டும் இருந்தாள். அவள் கல்யாணமே செய்துகொள்ளாமல் அம்மாவுடனேயே இருந்து, ஒரு தடவை, குளிக்கப் போயிருந்த சமயம், கிணற்றில் தவறி விழுந்து அவளும் இறந்து போனாள். எஞ்சியிருந்தது கிழவி மட்டுமே.
கொஞ்ச காலத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டாள். அவளுடன் பேச்சு வார்த்தை வைத்துக்கொண்டிருந்தது ருக்குமணி மட்டுமே. பக்கத்து வீடுகளிலெல்லாம் சண்டை. யாருடனும் கிழவி பேசமாட்டாள், அவர்களும் பக்கத்தில் நெருங்கவும் மாட்டார்கள்.
ருக்குமணிக்கு உடம்பு சரியில்லாத போதேல்லாம் ருக்குமணியின் மகன் மணிதான் மொபெட்டில் உட்காரவைத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவான். மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுப்பான். கடைசியாய் காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டபோது வர மறுத்துவிட்டாள் கிழவி. வேறு வழியின்றி ஏற்கனவே வாங்கிய அதே மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்தான் மணி. எல்லாவற்றுக்கும் தவறாமல் பணத்தை கொடுத்து விடுவாள் கிழவி.
எங்கிருந்தோ ஓடிவந்து, ‘ அம்மா பாட்டிக்கி சோறு தரலையா…? ‘ என்று கேட்டு அவளது நினைவுகளை கலைத்தான் மணி.
‘ வாடா… வா… முன்னேயே போட்டு வச்சு ஆறியே போயிருக்கும்… உன்னை. கூப்பிட்டு பார்த்துட்டு மூடி வச்சிட்டேன்… கொண்டு போயி கொடு… ‘ என்று தட்டைக் காட்டினாள்.
தட்டை எடுத்துக்கொண்டு போய் ஓரமாய் வைத்துவிட்டு பாயில் படுத்திருந்த கிழவியைத் தட்டி எழுப்பினான்.. அவள் அசைந்து கொடுக்கவில்லை. அப்போதுதான் உணர்ந்தான், உடம்பு சில்லிட்டிருந்ததை. மூக்கில் கைவைத்துப் பார்த்தான். மூச்சையும் காணவில்லை.
அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தான்… ‘அம்மா அம்மா… பாட்டிக்கு மூச்சைக் காணோம்… உடம்பு சிலீர்ங்குது… ‘ என்று மூச்சிரைக்க சொன்னான். அதிர்ச்சியாகி தானும் ஓடினாள். தொட்டுப் பார்த்து விட்டு அலறினாள்.
‘ தம்பி… ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகனுமேடா… ‘ என்று பதறினாள். ஓடிப்போய் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வந்து கிழவியை தூக்கி மடியில் படுக்கவைத்துக் கொண்டு ஓடினான்.
பரிசோத்தித்துப் பார்த்துவிட்டு, ‘ ஸாரி தம்பி… பாட்டி ஏற்கனவே செத்துடுச்சு… ‘ என்று சொல்லிவிட்டனர். அதே ஆட்டோவில் தூக்கிப் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
என்ன செய்வதென்று புரியவில்லை. ஆளில்லாத வீட்டில் தனியாய் கிடந்தாள் கிழவி. ஒரு கட்டிலை எடுத்து போட்டு கிழவியைப் படுக்க வைத்தார்கள். அண்டை அயலார் யாரும் பக்கத்தில் வரவில்லை. ஒரு சிலர் மட்டும் வந்து தூர நின்று எட்டிப் பார்த்து விட்டு அப்படியே போய்விட்டனர்.
ருக்குமணிக்கு ஒரு யோசனை ஓடியது. ‘ டேய்… ஓடிப்போய் பிரசிடன்ட் ஐயாவை கூட்டிக்கிட்டு வா… ‘ என்றாள். பெரியசாமி என்பவர் ஒருகாலத்தில் அந்த ஊருக்கு பஞ்சாயத்து பிரசிடென்ட். அதனால் அதே பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.
ரொம்பவும் நேர்மையானவர், மற்றவர்களுக்கு கஷ்டம் என்று தெரியவந்தால், தானாகவே போய் உதவும் மனப்பாங்கு கொண்டவர். வந்து பார்த்த அவர், ‘ அனாதைக்கிழவி… நாமதான் அடக்கம் பண்ணனும்… ‘ என்று சொல்லிவிட்டு போன் போட்டு யாருக்கோ பேசினார்.
பிறகு தனது தோட்டத்தில் இருந்து ஒரு தென்னங்கீற்றை வெட்டி வரச்செய்து கீற்று பின்ன வைத்தார், அதை கட்டிலில் விரித்துப் போட்டுவிட்டு, ருக்குமணி உதவியுடன் கிழவியைக் குளிப்பாட்டி, தூக்கி கட்டிலில் கிடத்தி, நெற்றியில் சந்தனத்தை வைத்து அதன்மேல் ஒரு ரூபாயை ஒட்டவைத்து, வெற்றிலைப் பாக்கை கசக்கி வாய்க்குள் திணித்து ஒரு வெள்ளைத் துணியால் கட்டி, அதற்குள் அவர் சொல்லிவிட்ட ஆள் ஒரு மாலை வாங்கி வந்திருக்க அதை அவளது கழுத்தில் போட்டு கும்பிட்டார்.
மணி முன்னின்று ஓடியாடி வேலைகள் செய்தான். பிரசிடென்ட் வந்ததை அறிந்து அங்கே ஓடிவந்த ஆண்களும் பெண்களும் தாங்களாகவே உதவி செய்தனர்.
பிரசிடன்டுக்குத் தெரியும் ருக்குமனியும் அவளது மகனும் தான் கிழவிக்கு கடைசி வரை சோறுபோட்டு பார்த்துக்கொண்டார்கள் என்று. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் வரவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை, அவர்களுடன் கிழவிக்கு பேச்சு வார்த்தையுமில்லை என்றும் தெரியும். அதனால், மணியையே கொள்ளிப் போடச் செய்தார் பிரசிடென்ட்.
உடம்புக்கு சீதை மூட்டி எரியவைத்துவிட்டு திரும்பி வரும்போதே பிரசிடன்டுடன் வந்திருந்த நான்கைந்து பேர்களும் நகர்ந்து கொண்டனர். பிரசிடென்ட் மட்டும் வீடு வரை வந்து வாசலில் சாணம் தெளித்து ஒரு சூடம் ஏற்ற வைத்துவிட்டு கிளம்பிப் போய்விட்டார். ருக்குமனியும் மணியும் குளித்துவிட்டு வந்து அப்போதுதான் உட்கார்ந்தனர். மணி தனது மொட்டைத் தலைக்கு சந்தனம் அப்பிக்கொண்டு வெளியே காற்றாட உட்கார்ந்தான்.
பசி வயிற்றைக் கிள்ளியது ருக்குமணிக்கு. காலையில் சுட்ட இட்லிகள்தான் கிண்ணத்தில் கிடந்தன. மணியைக் கூப்பிட்டு கடையில் நான்கு பரோட்டாவாவது வாங்கிவரச் சொல்லலாம் என்று பர்ஸைத் திறந்தாள்.
காலையில் இருநூறு ரூபாய் வைத்திருந்த ஞாபகம். ஆட்டோவுக்கும், மாலைக்கும் செலவு செய்தது போக நாற்பது ரூபாய்தான் இருந்தது. அவசரத்திற்கு வேண்டுமே என்று அதை செலவு செய்யாமல், பழைய இட்லியாக இருந்தாலும் பரவாயில்லை என்று மூன்று இட்லிகளை தட்டில் எடுத்துப் போட்டு சாப்பிட உட்கார்ந்தாள். மணி பசி என்று கேட்டால் அவனுக்காக இன்னும் மூன்று இட்லிகள் இருந்தன, அவைகளை மூடிபோட்டு வைத்துவிட்டாள்.
அதற்குள் திடீரென்று ஒரு புல்லட் பெருஞ்சத்தத்துடன் அங்கே வந்து நின்றது. திகைத்துப் போய் திரும்பினாள் ருக்குமணி. அதில் வந்தவர் ஒருசில தடவைகள் கிழவியின் வீட்டுக்கு வந்து போனதை அவளும் பார்த்திருக்கிறாள்.
இறங்கி வந்தவர், ‘ அம்மா… நான் ஒரு வக்கீல். காலையிலதான் ஊரிலேர்ந்து திரும்பி வந்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் பிரசிடென்ட் அய்யா மூலமா பாட்டி செத்துப் போச்சுன்னு கேள்வி பட்டேன்…. ‘ என்றவர், தனது லெதர் பைக்குள் இருந்து ஒரு கவரை வெளியே எடுத்தார்.
‘ மூணு மாசத்துக்கு முன்னே பாட்டி என்னைக் கூப்பிட்டனுப்பி, தனக்கு யார் கொள்ளி போடறாங்களோ அவங்களுக்குத்தான் தன்னோட சொத்துன்னு எழுதித் தரணும்னு ஒரு உயில் எழுதச் சொன்னாங்க… பின்னாடி கிடக்கற கொஞ்சம் காலி இடத்தோட சேர்த்து இந்த வீடுதானே அவங்களுக்கு இருந்தது. அந்த சொத்தை பத்திரம் போட்டுத் தர எனக்கு ஒரு பவரும் எழுதி கொடுத்திருக்காங்க. பிரசிடென்ட் சொன்னார்…. உங்க பையன்தான் முன்னே நின்னு கடைசி காரியத்தை செஞ்சு கொள்ளையும் போட்டார்னு… மொட்டைப் போட்டிருக்கற உங்க பையனைப் பார்த்தாலே தெரியுது. ஒரு பத்து நாள் போகட்டும்… பத்திரம் தயார் பண்ணிட்டு அடுத்த வாரம் திரும்பி வர்றேன்… உங்களை பத்திரம் பதிவு பண்ற இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்… பார்மாலிட்டி எல்லாம் செஞ்சு கொடுத்துடறேன்… ‘ என்றுவிட்டு மணியின் ஆதார் கார்டை மட்டும் வாங்கிக்கொண்டு திரும்பினார்.
பாதியில் சாப்பிடுவதை நிறுத்தியிருந்த அவள், பசி வயிற்றைக் கிள்ள, இட்லியை பிய்த்து பொடியைத் தொட்டுக்கொண்டு வாயில் வைத்தாள். அதற்குள் கிழவியின் நினைவு வர கண்களில் கண்ணீருடன் அங்கிருந்தே கிழவியின் வாசலை எட்டிப் பார்த்தாள்.
சூடம் எரிந்து முடிந்திருந்தது. ஆனால், மணி அவளுக்காக கொண்டுபோன இட்லி கிண்ணம் மட்டும் அங்கே ஒரு மூலையில் கிடந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings