in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 27) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(அத்தியாயம் 27)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேடலுக்கு விடை தமிழ்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

கிருஷ்ணன் லட்சுமியின் சத்தம் கேட்டு ஓடோடி வந்தான். அம்மா சரிந்து கிடந்தாள். அவன் விழிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. மௌனமே வடிவாக ஆகிவிட்டான்.

லட்சுமியை அங்கிருந்து போகச் சொல்லிவிட்டு, அம்மாவைத் தூக்கிக் கொண்டு, முற்றத்திற்கு வந்தான் கிருஷ்ணன்.

எதார்த்தமாக எழுந்து வந்த ராதா, “டேய் கிஸ்னா… என்னடா இது? ஆத்தா போய்ட்டாளா?” என்று விம்மி விம்மி அழத் தொடங்கினான். 

கிருஷ்ணன் எல்லோருக்கும் தகவல் சொல்லப் புறப்பட்டான். அப்போதெல்லாம் அவன் மனதில், ‘ஆறடி மனிஷி.. அரை நிமிட செய்தியாகி விட்டாளே. இப்ப தான வேலை வந்தது, என் பணத்துல ஒரு வா சோறு போட முடிலையே’ என்ற இறுக்கம். 

பூ, மாலை, வண்டி என்று எல்லா விஷயத்துக்கும் கிருஷ்ணன் ஓடினான். அவன் ஓட்டத்தில் அப்படி ஒரு வெறி. அவன் மனதிலும் ஏகத்துக்கும் சஞ்சலம்.

‘மா… அப்பன் பூட்டான், நீயும் போய்ட்ட. எனக்குன்னு இனிமே யாருமா இருக்கா? இப்டி பண்ணிட்டியே மா. வேலை வந்து உன்னை உட்கார வெச்சி சோறு போட முடியலேம்மா? ஏன்மா இப்டி பண்ண? அனாதையா வுட்டுட்டு போய்ட்டீயேம்மா” என்ற குமுறல்.

அவன் தான் கொள்ளி போட வேண்டியவன். அம்மாவிற்குச் செய்ய வேண்டியதை செய்துவிட்டு, வீட்டில் ஒரு மூலையில் சென்று அமர்ந்து விட்டான். நிமிட நாக்குகள் நேரத்தை விழுங்கி விட்ட நிலையில், கடிகாரம் இப்போது இரவு எட்டை காண்பிக்கிறது. கிருஷ்ணன் அந்த இடத்தை விட்டு இன்னும் எழுந்தபாடில்லை. 

லட்சுமி வேலை நிமித்தம் அதைக் கவனிக்காத நிலையில், இப்போது அவன் தோள் மேல் கை வைக்கிறாள்.

“ஏங்க… இப்படி அழுவாம இருந்தா எப்படிங்க? மனசு விட்டு அழுதுருங்க. அத்தை எங்கேயும் போலங்க. நீங்க வேணா பாருங்க, இந்த புள்ளயும் நிச்சயமா பொண் கொழந்த தான்” என்று வயிற்றைத் தடவிக் கொடுக்கலானாள்.  

கிருஷ்ணன் ஏதோ முடிவு பண்ணியவன் போல் எழுந்து, “ஆமா… லட்சுமி… அது பொண்ணு தான். என் அம்மா தான் அது. நல்ல நேரத்துல எனக்கு சொன்னே. நம்ம கொழந்த இருக்குல்ல நமக்கு. எனக்கு யாருமே இல்லன்னு நினைச்சேன் தெரியுமா? நான் தப்பு பண்ணா கேட்கவும் கொள்ளவும் இனிமே யாரு இருக்கான்னு நினைச்சேன். வருவா… நிச்சயம் எம் மகாலட்சுமி வருவா” என்று இவ்வளவு நேரம் தேக்கி வைத்த நீர் அனைத்தையும் கன்னத்தில் வழிய விட்டான்.

லட்சுமி தன் முந்தானையில் துடைத்து விட்டு, “வாங்க சாப்ட, அம்மாக்கு நீங்க ஒரு வேள சாப்டலனாலும் பிடிக்காது” என்றாள். அவனும் அம்மாவை மனதில் நினைத்து சாப்பிட அமர்ந்தான்.

சிநேகிதன் பக்கத்தில் அமர்ந்து, “டேய் கிஸ்னா… ஆர்டர் எடுத்துட்டு போய் சேம்பள்ளில கொடுத்து கையெழுத்து வாங்கிக்கோ டா” என்றான்.

அப்போது தான் கிருஷ்ணனுக்கு அந்த நியாபகமே வந்தது. நாளைக்கு எழுந்தவுடன் அந்த வேலை தான் என்று நினைத்துக் கொண்டு இரவு உறங்கினான். கனவெல்லாம் அம்மாவின் முகம்…

அடுத்த நாள், அப்பாவோடிருந்த அம்மாவின் போட்டோவை வணங்கி விட்டு, ஆர்டரை எடுத்துக்கொண்டு நேரே வாசல் முன்பு நின்றான். அவன் ஆசைப்பட்ட ஆசிரியர் வேலை கிடைத்து விட்ட நிதர்சன மகிழ்ச்சி.

விடுமுறை நாள் தான் என்றாலும், அந்த தலைமையாசிரியர் சசிகலாவதி என்கிற பெண்மணி வந்து கையெழுத்திட்டு, அன்றைய ஒரு நாள் சம்பளமான 250 ரூபாயை கொடுத்தார்.

“கார்த்திகை தீபம் லீவு முடிஞ்சி ஜாய்ன் பண்ணிக்கோங்க சார்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவள் காரிலேயே கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு போய் சிறிது தூரம் இறக்கி விட்டாள்.

கிருஷ்ணன் சிறிது நேரம் அந்தக் காரைப் பார்த்தான். அவனுக்குப் பாலச்சந்தர் அய்யாவின் நினைவு மேலிட்டு வந்தது. போன் செய்து எல்லாவற்றையும் சொன்னான். பாலச்சந்தர் பார்வதியை நினைத்து உடைந்து அழுதார். பின்பு கிருஷ்ணனுக்குத் தன்னாலான ஆறுதல் மொழிகளைக் கூறினார். 

நாட்களோடு சேர்த்து, வலிகளும் வழிகளாயின. 

ந்து வருடங்களுக்குப் பிறகு…

ஒரு நாள் கிருஷ்ணன் வீடு திரும்பிய நிலையில், லட்சுமி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது தெரிந்தது. கிருஷ்ணன் அவளை சீண்டினான்.

“என்ன தீவிர யோசனை போலருக்கே?” எனவும், அவள் உடனே பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“என்னங்க… இங்க பாருங்க. கொஞ்ச நாளாவே எனக்கு சிதம்பரம் நியாபாகமாவே இருக்கு. அன்னிக்கு நம்ம கோயிலுக்கு போறோம்னு போய் சுனாமில மாட்டிக்கிட்டோம்ல. அதுல நமக்கு நல்ல காலம் பொறந்துருச்சு. பாலச்சந்தர் ஐயா.. கோயில் கொளம்ன்னு புண்ணியம் தேடிட்ருக்கார், வடிவேலு அண்ணனுக்கு கண்ணானம் ஆயிடுச்சு. எனக்கு யமுனாவ பத்தி தெரியணும்ங்க. அன்னிக்கு அவங்க புருஷன் பன்ன செயல்… அப்பாடா” என்று விழிகளில் வியப்பைக் காட்டி, “நாம ஒருமுறை சிதம்பரம் போவோம்’ங்க, நம்ம கொழந்தங்களையும் கூட்டிட்டு போலாம்” என்று கண் சிமிட்டினாள். 

அவனுக்கு அப்போது தான் ஒரு விஷயம் நியாபகம் வந்தது. சுனாமியன்று கிழக்கு கோபுர வாசல் வந்து நிற்கையில் கையில் மிதந்து வந்த ஏட்டுக்கட்டைப் பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை. அதைத் தான் அவன் சிதம்பர ரகசியமாக நம்புகிறான். லட்சுமியின் கேள்விக்கு ஒரு புன்னகையைப் பதிலாக அளித்துவிட்டு, நேரே அவன் அறைக்குச் சென்றான். 

மனதிற்குள் ஏடு கிடைத்த நாளன்று, கிருஷ்ணன் யாருக்கும் தெரியாமல் படித்த வரிகள். 

“கண்ணன் கையிலெடுத்த ஏடு இது

அவன் இளவல் எழுதியதாம்

“தான்” இளவல் என்ற சத்தியம்

அவனும் அறிய வாய்ப்பாம்”

என்ற வரிகள் தான் அது.

அவன் மனதில் பதிந்துவிட்ட வரிகள் இவை. இதற்கு முன்பும் அவன் அந்த ஓலையை ஒரு முறை முழுதாக படித்திருகிறான். ஆனால், பொறுமையாக படித்ததில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சிக்கல் எழும், மூடி வைத்து விடுவான். 

தன் அறையில் பரண் மேல் இருந்த ஓர் சிறிய அறையினுள் கை விட்டுத் துழாவ, ஏடுகள் கையில் சிக்கியது. அதை அங்கேயே பரண் மேல் உட்கார்ந்தபடியே முதல் பக்கத்தைப் படிக்கலானான.

அதில் “திருச்சிற்றம்பலம்” என்று எழுதியிருந்தது. அடுத்த பக்கத்தில் மனதில் ஓடிய நான்கு வரிகள் இருக்க, அதற்கடுத்த பக்கத்தை வேகமாகத் திருப்பினான். 

“இளையவன் காண்பட கடல்நீர் சூழ்ந்திட 

பஞ்சாட்சர நாயகன் சரண் அடைந்தே

உலகமிது நீரில் அழிய

அரி-அரன் பெயரைக் கொண்டவன்

தன் ஆருயிர் சேயை நீட்ட”

என்ற எழுத்துக்களைப் படித்த கிருஷ்ணன் கண்கள் விரித்தான்.

“கண்ணன் கையிலெடுத்த ஏடு இது

அவன் இளவல் எழுதியதாம்

“தான்” இளவல் என்ற சத்தியம்

அவனும் அறிய வாய்ப்பாம்”

இந்த நான்கு வரிகள் படி பாத்தா, அந்தச் சாமியார் தான் என் மூத்த அண்ணன். அடுத்த இந்த “இளையவன் கண்பட கடல்நீர் சூழ்ந்திட பஞ்சாட்சர நாயகன் சரண் அடைந்தே” வரிகள் சொல்லுறது, “நான் பாக்குறப்பவே அவர் ஜலசமாதி ஆயிட்டாருன்னு குறிப்பிடுது”. ஆமாம்… அவரு கிளையிலிருந்து அப்படியே தியானம் பண்ண நிலையில தண்ணில விழுந்தாரே. நான் பாத்து அப்டியே ஆடி போய்ட்டேன்’ என்று தனக்கு கேட்கும்படி பேசிக்கொண்டான். 

அடுத்து “உலகமிது நீரில் அழிய..”ங்கற வரி, “அன்னிக்கு வந்த சுனாமியைக் குறிக்குது..”

அடுத்து, “அரிஅரன் பெயரைக் கொண்டவன் தன் ஆரூயிர் சேயை நீட்ட”– இது தான் புரில… என்று நிதானித்தான். சட்டென்று, ஹரின்னா விஷ்ணு. ஹரன்ன்னா சிவன். சட்டென்று அவனுக்கு “ராமலிங்கம்” பெயர் மனதில் உதித்தது.

“அட ஆமாம்..! ஹரி – ராம. ஹரன்-லிங்கம். ஹரிஹரன் பெயரைக் கொண்டவன். சரியாப் போச்சு. அவருதானே தன்னோட கொழந்தைய தூக்கி அப்படியே கொடுத்துட்டார்.

‘அடுத்து என்னன்னு பாப்போம்’ என்று நினைத்தவன், மனதிற்குள் ‘நான் கையில எடுப்பேன்னு இவருக்கு எப்படி தெரியும்? புட்டு புட்டு வெசிருக்காரே’ அடுத்த ஏடுகளைத் திருப்பினான். 

அதில், 

“இளவல் பிறந்த ஊர் புறப்பட

கண்ணனுக்குப் பிறந்ததோ மகாலட்சுமிகள்

அதில் ஈராவதவள் பிறக்க 

சுபிட்சம் உடன் பிறக்கும்”

என்கிற வரிகள் அவன் முகத்தில் அதிர்ச்சி ரேகையை வரைந்தன.

“மனுஷன் நைனாவப் போலவே சித்தன் போலிருக்கே. பல வருஷங்களுக்கு அப்பறம் என் வாழ்க்கையில் நடந்ததை, அவரு என்னிக்கோ எழுதி வெச்சிட்டு போயிருக்காரு. சரி பொருள் தெரிஞ்சிக்குவோம்” 

“இளவல் பிறந்த ஊர் புறப்படன்னா, அவரோட உடன்பிறப்பான நான், சொந்த ஊரான குடியாதத்திற்கு வந்துட்டேன்.

“கண்ணனுக்குப் பிறந்ததோ மகாலட்சுமிகள்”ன்னா, கிருஷ்ணனான எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்.

“அதில் ஈராவதவள் பிறக்க சுபிட்சம் உடன் பிறக்கும்” ன்னா, “ஆமாம் மா..! சரிதான். ரெண்டாவது குழந்தை நின்ன போது தான், எனக்கு வேலை கிடைச்சிருச்சு”

இவ்வாறு அவன் வாய் முணுமுணுத்தது. அவன் புருவங்கள் இரண்டும் அதிர்ச்சியில் ஒன்றோடு ஒன்று உரசி, நெற்றி நடுவில் ஒட்டிக் கொண்டிருந்தன.

கதிரவன் நாள் ஆதலால், அனைத்து வேலைகளுக்கும் விடுமுறை. லட்சுமி வெகுநேரமாக பரண் மேலிருந்து கீழிறங்காத கிருஷ்ணனைக் காண அறைக்கு வந்தாள். ஏட்டின் அடுத்த பக்கத்தை எடுத்தவன் காதில் லட்சுமியின் குரல்.

“என்னங்க இது பரண் மேலே உட்காந்துகிட்டு. கீழ வாங்க, சாப்பாடே ஆயிடுச்சு” என்று சொல்லியவாறே, “ஏய் தமிழ், சுதா… விளையாடியது போதும் வாங்க சாப்டலாம்” என்று தன் இரு குழந்தைகளையும் அழைத்தாள். கிருஷ்ணன் அதைக் கவனிக்காதவனாய், அடுத்த ஏட்டில் உள்ள எழுத்துக்களைப் படித்தான்.

“பாடலில் நான்கு எட்டால் வந்த சேயவன்

மாயவன் பிடியினில் விடுபட

திசையது நான்கும் மலையாகியிருக்கும்

இடமதில் வசிப்பான்..!”

இந்த நான்கு வரியும் அவனுக்குச் சுத்தமாக பிடிபடவில்லை. லட்சுமியின் குரல் கேட்டு, அப்படியே ஏடுகளைப் பெட்டியில் வைத்துவிட்டு கீழிறங்கினான்.

கிருஷ்ணனுக்குப் பிடித்தபடி அனைத்து உணவும் இருந்தும் அவன் ஈர்ப்பெல்லாம் அந்த வரிகளின் மேலேயே இருந்தது.

லட்சுமியிடம் கேட்டே விட்டான். “ஏண்டி லட்சுமி..! உனக்கு நாலு திசை எங்க மலையா இருக்குன்னு தெரியுமா?” 

அதற்கு அவள், “ஹான் என் தலைல இருக்கு. வாய மூடிட்டு சாப்பிடுங்க. பரண் மேலே என்ன இருக்கு? சார் ரொம்ப சின்சியரா படிச்சிட்டு இருந்தீங்க” என்று தூண்டில் போட்டாள்.

பதிலுக்கு அவன் மௌனத்தை விதைத்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த பிஞ்சு வாய் மலர்ந்தது. 

“அப்பா எனக்கு தெரியும்பா, நீங்க கேக்குற விஷயம்.” என்றது.

லட்சுமி அவளை அதட்டினாள். “ஏய் தமிழ்… சாப்பிடுடி மொத. அவளுக்கு கீரையே பிடிக்காது, அதான் எழுந்து போக பிளான் போட்டா” என்று சொல்லவும்

கிருஷ்ணன் அவளை அமைதிபடுத்தி விட்டு, தமிழிடம் விளையாட்டாய், “நீ சொல்லுடா என் பட்டு” என்றான். அவள் சொல்லிய பின், ஏராளமான வியப்புகள் கிருஷ்ணனுக்கும் லட்சுமிக்கும்.

“அப்பா தமிழ்நாட்டு கோயில் பத்தி ஒரு புக் வாங்கி கொடுத்தீங்களே, நிறைய பெரிய கோபுரம்லாம் இருக்க மாறி. அந்த புக்ல இருக்குப்பா, இருங்க நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று புத்தகத்தை “ததக் பிதக்” என்று எடுத்துக் கொண்டு வந்தது எட்டு வயது நிரம்பிய அந்தக் குழந்தை. 

சாப்பாடு கைகளை வைக்காமல், இடது கையில் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி, ஒரு பக்கத்தில் வந்து நின்றது. “இதான் பா அது, தோ போட்டிருக்கு பாருங்க. நான்கு திசைகளும் மலையா இருக்குற இடம் வந்து சதுரகிரியாம்”

மழலை பாஷையில் “சதுர கி… ரி…” என்று சொல்லவும், கிருஷ்ணனுக்கு ஏக ஆச்சரியம்.

லட்சுமி பயந்து போய் தமிழை வாரி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள். தமிழ் காண்பித்த பக்கத்தில், சுந்தர மகாலிங்கத்தின் உருவம் வரையப்பட்டிருந்தது.

கிருஷ்ணன் உடனே துள்ளி குதித்து, அந்தக் குழந்தையைக் கட்டிக் கொண்டான். “செல்லப்பட்டு. எவ்ளோ நியாபகசக்தி பாரு பொண்ணுக்கு. உனக்கு என்ன வேணும்னு யோசிச்சி வை, அப்பா கண்டிப்பா அத வாங்கித் தரேன்” என்று விறுவிறுவென்று சாப்பாடு தட்டை விட்டு, எழுந்து புறப்பட்டான். 

லட்சுமியின் மனதில் ஏக சலனம்.

‘இவரு என்கிட்ட ஏதோ மறைக்கிறாரு’ என்று நினைத்தவாறே தமிழின் பிஞ்சு உதடுகளில் கீரை உருண்டையை வைத்தாள்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கோதுமை அல்வா (எளிமையான செய்முறை) – 👩‍🍳 கமலா நாகராஜன், சென்னை

    தீபாவளி பரிசுப் போட்டி 2022