2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21
ஒரு கனத்த மௌனம் வீட்டில் நிலவினாலும், ராம்குமார் மகாவிடம் வலிய வலிய பேசினான்.. வேளாவேளைக்கு அவளை வற்புறுத்தி கீழே அழைத்து வந்து தன் கையாலே பரிமாறி சாப்பிட வைத்தான்.
தான் மாறிவிட்டதாக காட்டிக் கொள்ள ரொம்பவே பிரயத்தனப்பட்டான். மகா ஒரேடியாக மகிழவும் இல்லை.. அதே நேரம் அவன் செய்வதை வேண்டாம் என்று மறுக்கவும் இல்லை. அதுவே அந்த நேரத்தில் தேவையான மாற்றமாக தோன்றியது ராம்குமார்க்கு.
‘குழந்தை வந்த பிறகு தான் மாறிவிட்டதாக மகா நினைக்கிறாள். வந்தனாவை பிரிந்து வந்து விடுவேன் என்று கூட நினைக்கலாம். எது எப்படி இருந்தாலும் இதையே கொஞ்சநாள் கண்டினியூ பண்ணுவோம்’ என்று எண்ணிக் கொண்டான் .
தங்கத்திடம் தினமும் சாத்துக்குடி ஜூஸ் போட சொல்லி அவன் கையாலேயே கொண்டு போய் மகாவிற்கு கொடுத்தான். மகா மறுக்காமல் வாங்கிக் கொள்ள அவன் மனம் சந்தோஷத்தில் குதித்தது.
‘இதுபோன்ற ஒரு சூழ்நிலையே நான் எதிர்பார்ப்பது. நிச்சயம் மகாவிற்கு என் அன்பும், அக்கறையும் இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. இதை நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’
மகாவிடம் மட்டுமல்லாமல், தங்கத்திடமும் அக்கறையாக மகாவை கவனிக்கச் சொல்லி பேசினான். காலை வாக்கிங் போய்விட்டு வரும் போதெல்லாம் கீரையை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சமைக்கச் சொன்னான்.
“காய்கறிகளை சூப் பண்ணி மகாவிற்கு கொடு தங்கம்” என்றதோடு ப்ராக்கோலி, கேரட், பீட்ரூட் என பிரஷ்ஷான காய்கறிகள் வாங்கிக் கொண்டு வந்து அசத்தினான்.
தங்கமே கொஞ்சம் கொஞ்சமாக அவனை நம்பத் தொடங்கி விட்டாள். அவனுடைய மாற்றம் மனதில் ஒரு சிறு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது.
“பரவாயில்லை ஐயாவுக்கு குழந்தை ஆசை இருக்கிறது போல.. அதனால் மகா அம்மாவை நல்லபடியாக கவனிக்கச் சொல்கிறார்” என்று மனதில் தோன்றியது.
சுந்தரம் காரை துடைத்தபடி வெளியே நின்றிருந்தார். இப்போதெல்லாம் ராம்குமார் அனேகமாக சுந்தரத்தை தனக்கு கார் ஓட்ட சொல்லுவதில்லை. மகா எங்காவது வெளியே போனால், அவளுக்கு காரோட்ட சுந்தரம் வீட்டில் இருக்கட்டும் என்று எண்ணினான்.
சுந்தரத்திற்கு காபியை எடுத்து வந்த தங்கம் ,”சுந்தரம் அண்ணே. ..மகா அம்மா எங்கேயோ வெளியில கிளம்புறாப்பல தெரியுது .”
“ஆமாம் தங்கம் ஈஸ்வர் டிரஸ்ட் வரைக்கும் போகனும்னு அம்மா சொன்னாங்க.. ரொம்ப நாளாச்சு அவங்க அங்க போயி.. அந்த பிள்ளைளையெல்லாம் பார்த்துட்டு வந்தா அவங்களுக்கு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா, சந்தோஷமா இருக்கும். ரொம்ப உடைஞ்சு போய் இருந்த அவங்க இப்ப வெளியில போகனும்னு சொல்றதே நல்ல மாற்றம் ..”
“ஆமாம் அண்ணே ஐயா கூட இப்ப பரவாயில்ல. ரொம்ப நல்ல கவனிச்சுகிறாரு. முன்ன மாதிரி சட்டென்று கோபப்படுவதெல்லாம் இல்ல… பொண்டாட்டிய பார்த்து பார்த்து கவனிக்கிறாரு.”
“காய்கறி வாங்கிட்டு வர்றது.. காலையில சாத்துக்குடி ஜுஸ் போட சொல்லி அவர் கையாலயே மகாம்மாவ குடிக்க சொல்றாரு.. அவங்களும் கோபப்படுவதில்லை. அவர் கொடுத்தா வாங்கி குடிக்கிறாங்க. அவர் கீழே அவங்கள கூட்டிட்டு வந்து சாப்பிடச் சொன்னா மறுக்கவில்லை..இது ஒரு நல்ல மாற்றமா தெரியுது அண்ணே …இப்படியே ஐயா அந்த கழிசடைகளை தலைமுழுகிட்டு… பொண்டாட்டி, புள்ளைன்னு நல்லபடியாக குடும்பம் நடத்தினா அதைவிட சந்தோஷம் நமக்கு கிடையாது”
“ஆமாம் தங்கம்.. அம்மா மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றார் சுந்தரம் நெகிழ்வோடு.
தங்கம் சாத்துக்குடி ஜூஸ் பிழிந்து எடுத்துக் கொண்டு மாடி ஏற… மாடிப்படியில் கடகடவென இறங்கிவந்த ராம்குமார் “மகாவுக்குத்தானே தங்கம் கொண்டு போற.. குடு நான் கொடுத்துடறேன்” என்று கிளாசை வாங்கிக்கொண்டான்.
“அந்த சின்ன கிண்ணத்தில் சர்க்கரை இருக்கு ஐயா.. அம்மாவுக்கு இனிப்பு போதலைன்னா போட்டுக்கச் சொல்லுங்க” என்று டிரேயில் இருந்த கிண்ணத்தை காண்பிக்க.. வாங்கிக் கொண்டு மேலே ஏறினான் ராம்குமார்.
தங்கம் கீழே இறங்குவதை உறுதி செய்துகொண்டு அந்த ஜூஸை அப்படியே தன்னுடைய அறைக்கு எடுத்துப் போனவன் அந்தப் அலமாரியைத் திறந்து, அதில் இருந்த சிகப்பு மூடி போட்ட அந்தப் வெள்ளை பாட்டிலை எடுத்தான்.
ஒரு கணம் மனதில் சிறு நடுக்கம் ஏற்பட்டது. சென்டிமென்ட் எல்லாம் பார்த்தால் இனி வேலைக்காகாது என்று மனதை தேற்றிக் கொண்டான். கவனமாக மூடியைத் திறந்து, ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனால், கால் ஸ்பூன் பொடியை எடுத்து சாத்துக்குடி ஜூஸில் கலக்கினான்.
‘மகா உன்னுடனான யுத்தத்தில் கடைசி கட்டம் வந்து விட்டது.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நன்றாக ஜூஸை கலக்கியவன், ஜூஸை மேஜைமேல் வைத்துவிட்டு திரும்ப பாட்டிலை மூடி அதன் இடத்தில் வைத்து விட்டு..பைல்களை நகர்த்தி பாட்டிலை மறைத்துவிட்டு, அலமாரியை மூடி நினைவாக பூட்டினான்.
ஜூஸை எடுத்துக்கொண்டு மகா அறை கதவை தட்ட, வழக்கம்போல தாழிடப் படாத அந்த கதவு திறந்து கொண்டது ..”மகா! சாத்துக்குடி ஜூஸ் கொண்டு வந்திருக்கேன். குடிம்மா..” என்று பரிவாக கூறினான்.
“வெச்சுட்டுப் போங்க நான் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு குடிக்கிறேன்” என்றாள்.
“இல்லம்மா ஜூஸ் பிரஷ்ஷாக குடிச்சா தான் சத்து. நேரம் கழிச்சு குடிச்சால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய்விடும் குடி” என்று அவள் எழுந்து உட்காரும் வரை பொறுமையாக அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன், அவள் எழுந்து உட்கார்ந்ததும் கையில் ஜூஸைக் கொடுத்தான்.
ஜூஸை வாங்கி குடித்தவள் ..”லேசாக கசக்குது.. கொஞ்சம் சீனி போடுக்கிறேன்” என்று கொஞ்சம் சீனியை போட்டு கலக்கிவிட்டு.. ஒரேடியாக குடித்து முடித்து கண்ணாடி தம்ளரை மேஜை மீது வைத்தாள்.
ராம்குமார் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது, ‘அட மக்கு மகா உன்னுடைய கதை .. உன்னுடைய ஆட்டம் எல்லாம் பத்து நாளைக்கு தான். சொர்க்கலோகத்தின் சாவியை நீயே என்னிடம் எடுத்துக் கொடுக்கிறாய்’ என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டே கீழே இறங்கினான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings