in ,

அவர் பொருட்டு எல்லோருக்கும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலை 6.10-க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை நோக்கி தன் சக்கரங்களை அசுர வேகத்தில் உருட்டிக் கொண்டிருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நான் சிறிது நேரத்திலேயே அதுவும்  சலித்துப் போய்விட,  அந்தப் பெட்டியில்  என்னோடு  பயணம் செய்யும் சக பயணிகளை ஆராய ஆரம்பித்தேன்.

எதிர்இருக்கைக்காரர் என்னை நேருக்கு நேர் பார்க்க ஒரு நேசப் புன்னகையை வீசினேன்.  பதிலுக்கு அவரும் புன்னகைக்க, ‘சார்…எங்க… கோயமுத்தூருக்கா?” கேட்டேன்.

‘ஆமாங்க”

‘சார் என்ன உத்தியோகம் பார்க்கிறாப்பல?”

‘பள்ளிக்கூட ஆசிரியர்”

‘நெனச்சேன்… உங்களைப் பார்த்தப்பவே நெனச்சேன்… நீங்க நிச்சயம் ஸ்கூல் டீச்சராத்தான் இருப்பீங்கன்னு…” சொல்லி விட்டு  நான்  சிரிக்க,

அந்த ஆசிரியருக்கு இடப்புறம் அமர்ந்திருந்த ஒரு காட்டான், ‘நீங்க… கோயமுத்தூரா சார்?” என்று தன் தகர டப்பா குரலில் என்னைப் பார்த்துக் கேட்டான்.

முகத்தை அருவருப்பாய் வைத்துக் கொண்டு  ‘ஆமாம்…” என்றேன். ஏனோ எனக்கு அந்த ஆளைப் பிடிக்கவேயில்லை.  அவன் தோற்றமும் மீசையும் ‘கர..கர” குரலும் எனக்குள்  ஒரு எரிச்சலைத்தான் மூட்டினவே தவிர ஒரு தோழமை உணர்வைத் தோற்றுவிக்கவே இல்லை.

நான் அந்த  நபரைத் தவிர்த்து  விட்டு எதிர் இருக்கை ஆசிரியரிடம் ‘கோயமுத்தூர்ல எந்த ஸகூல்ல சார் வொர்க் பண்ணறீங்க?” கேட்டேன்.

‘கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் ஸ்கூல்….”

‘ஓ…நல்லாத் தெரியும்… நல்ல பேர் வாங்கின ஸ்கூலாச்சே”

அந்தக் ‘கர…கர” குரல் மறுபடியும் இடையில் புகுந்து ‘சார் கோயமுத்தூர்ல என்ன தொழில் பண்ணறாப்ல?” என்று என்னிடமே கேட்க

பற்களைக் கடித்தபடி ‘ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன்” என்றேன்.

‘எந்தக் கம்பெனி?”

‘நான் எந்தக் கம்பெனில வேலை பார்த்தா உனக்கென்னடா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு ‘எமரால்டு என்ஜினியர்ஸ்”

‘எமரால்டு என்ஜினியர்ஸா?…கேள்விப்பட்ட மாதிரிதான் இருக்குது… ஆனா எந்த ஏரியான்னுதான் தெரியல…”

‘அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே?”…நினைத்துக் கொண்டவன் ‘சிட்கோ இண்டஸ்ட்ரியல்ஸ் எஸ்டேட்” என்று வேகமாய்ச் சொல்லி விட்டு மீண்டும் அந்த ஆசிரியர் பக்கம் திரும்பி ‘உங்க ஸ்கூல்ல ரிசல்ட்டெல்லாம் எப்படி சார்?”

‘ம்ம்ம்…கடந்த மூணு வருஷமாவே….டென்த்ல நூத்துக்கு நூறு சதவீதம் பாஸ்”

அந்தக் ‘கர…கர” குரல் வேறு ஏதோ கேட்க வாயெடுக்கும் போது, ‘சார்…புக்…புக்..”என்று சன்னமாய்க் கூவிக் கொண்டே தட்டுத் தடுமாறி வந்தான் ஒரு இளைஞன். வயது… இருபது… இருபத்திரெண்டு இருக்கும்… வலது கையில் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நெஞ்சோடு  சேர்த்து  அணைத்துப் பிடித்திருந்தான். இடது பாதியாய்ச் சூம்பிப் போயிருக்க பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் அதன் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தன.

‘பாவம்… சின்ன வயசு… த்சொ…த்சொ..” நான் அங்கலாய்த்தபடி அவனைக் கூர்ந்து பார்த்து அதிர்ச்சி வாங்கினேன். ஆம்… அவன் கால்களிலும் ஒன்று சூம்பிப் போய் முக்கால் வாசிதானிருந்தது.

அவன் யாரிடமும் எதுவும் பேசாது கையில் அணைத்துப் பிடித்திருந்த புத்தகங்களை காலியாயிருந்த ஒரு இருக்கையின் மீது வைத்து விட்டு நகர பயணிகள் ஆளுக்கொன்றாய் எடுத்துப் பிரித்துப் பார்த்தனர்.

தன் இருக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்தும் அதைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை அந்தக்  ‘கர…கர” குரல்.

‘எடுத்துப் பார்த்தா என்ன காசா கேட்டிடுவாங்க?.. பாரு… எப்படி எருமை மாடாட்டம் உட்கார்ந்திட்டிருக்கான்னு”

அதே நேரம் அந்த ஆசிரியரானவர் அதில் நாலைந்து புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்க, ‘இதான்… இதான் படிச்ச வாத்தியாருக்கும் படிக்காத காட்டானுக்கும் உள்ள வித்தியாசம்”

கால் மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த அந்த மாற்றுத் திறனாளிக்கு எல்லாப் புத்தகங்களும் சரியானபடி திருப்பித் தரப்பட்டனவே தவிர  ஒன்று கூட விற்பனையாகவில்லை. அவன் முகம் வாடிப்போனது அப்பட்டமாய்த் தொpந்தது.

அப்போது…. ‘தம்பி….இங்க வாப்பா” அந்தக்  ‘கர…கர” குரல் ஆசாமி அவனை அழைக்க எனக்கு எரிச்சல் வந்தது. ‘க்கும்… எல்லா புத்தகமும் இத்தனை நேரம் அவன் பக்கத்திலேதான் கெடந்தது..அப்ப அதுகளைச் சீண்டவேயில்லை… பெரிய இவனாட்டம் இப்பக் கூப்பிட்டுக் கேக்கறான் பாரு…”

‘இதுல மொத்தம் எத்தனை புத்தகம் இருக்கு தம்பி?”

‘ம்ம்ம்… ஒரு இருபத்தியஞ்சு..இருக்கும்”

‘தோள்ல தொங்க விட்டிருக்கியே  அந்த பேக்குல?”

‘ஒரு அறுபது இருக்கும்”

‘மொத்தமாச்  சேர்த்து  எல்லாத்துக்கும் என்ன வெலை ஆகுது?”

அவர் நிஜமாகவே கேட்கிறாரா?…இல்லை  தமாஷ் செய்கிறாரா?…என்பது புரியாமல் அந்த இளைஞன் மலங்க  மலங்க  விழிக்க, ‘அடச் சும்மா சொல்லுப்பா…நானே வாங்கிக்கறேன் எல்லாத்தையும்” என்றார் அந்தக் ‘கர…கர” குரல்.

‘ம்ம்ம்…ரெண்டாயிரத்து  நூறு ஆவும்  சார்…. நீங்க  ரெண்டாயிரம்  குடுங்க சார் போதும்”

தன் பனியனுக்குள் கையை  விட்டு, காக்கி  நிற கவரை எடுத்து அதிலிருந்து இருபது நூறு  ரூபாய்த்  தாள்களை உருவி  புத்தகக்காரனிடம்  நீட்டினார்  ‘கர..கர” குரல்.

முகம் முழுவதும்  சந்தோஷம் கொப்பளிக்க வாங்கிக் கொண்டு நடந்தான் அந்த மாற்றுத் திறனாளி

அவன் சென்ற சிறிது நேரத்தில் ஜீன்ஸ், பேண்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்து கண்களில் ஸ்டைலான கறுப்புக் கண்ணாடியுடன் ஒரு இளைஞன் பெட்டிக்குள் பிரவேசித்தான்.  அவன் கையில் அழகிய சிறிய சூட்கேஸ்!.

பயணிகள் மத்தியில்  நின்று அவன் அதைத் திறந்து காட்ட உள்ளே ஏராளமாய் சி.டி.க்கள்.

‘ஒண்ணு இருவது ரூபாதான் சார்…என்ன படம் வேணுமானாலும் எடுத்துக்கலாம்… புதுப்படம்… பழையபடம்… இங்கிலீஸ் படம்… எல்லாம் இருக்கு..”

ஸ்டைலாக அவன் சொல்ல பாய்ந்தது  கூட்டம்.  சில நிமிடங்களில் அது மொத்தமாய் தீர்ந்து விட பணத்தை எண்ணியபடியே நகர்ந்தான் அவன்.

என் எதிரில்  அமர்ந்திருந்த ஆசிரியரின் கை நிறைய சி.டி.க்கள். சுமார் பதினைந்திலிருந்து இருபது இருக்கும்.

”வாத்தியாருக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம் போல…” அந்தக் கர…கர…குரல் ஆசிரியரைக் காட்டி என்னிடம் சொல்ல

‘ஹி…ஹி..”என்று அசடு வழிந்த ஆசிரியர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘ஆமாம்… நீங்க எப்படி புத்தகப்  பைத்தியமோ… அப்படித்தான் நான் சினிமா பைத்தியம்” சமாளித்தார்.

‘அட நீங்க வேற ஏன் சார்… எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது… மழைக்குக் கூட பள்ளிக்கூடப் பக்கம்  ஒதுங்காத ஆளு நான்” சற்றும்  லஜ்ஜையில்லாமல் அந்தக் கர…கர…குரல் சொன்ன பொது குழம்பிப்  போனேன் நான்.

‘என்னது.. எழுதப் படிக்கத் தெரியாதவரா நீங்க?… அப்புறம் எதுக்கு அத்தனை புத்தகங்களை…”

‘ஓ…அதுவா…சார்… இந்தக் காலத்துல கையும்  காலும் நல்லா இருக்கறவங்களே பல பேர் உழைச்சுச் சம்பாதிக்க சோம்பேறித்தனப் பட்டுக்கிட்டு… பிச்சையெடுக்கறாங்க… திருடறாங்க… தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விக்கறாங்க… ஆனா தனக்கு ஊனம் இருந்தும் அதையே சாக்கா வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம… ஏதோ தன்னால் முடிஞ்ச புத்தக வியாபாரத்தைப் பண்ணறானே அந்த இளைஞன்… அவனோட அந்தத் தன்னம்பிக்கைக் குணத்துக்கு நான் குடுத்த பரிசுதான் சார் அந்தப் பணம்..அதையே நான் ‘சும்மா… வெச்சுக்கப்பா”ன்னு குடுத்திருந்தா நிச்சயம் அந்த இளைஞன் அதை வாங்கிக்க மாட்டான்னு எனக்குத் தெரியும்  அதனாலதான்  அந்தப்  பணத்துக்கு மொத்த  புத்தகங்களையும் வாங்கினேன்”

“சரி… படிக்காத நீங்க இதுகளை வெச்சுக்கிட்டு என்ன பணணுவீங்க?” அந்த ஆசிரியர் தான் பெரிய  படிப்பாளி  என்கிற தெனாவெட்டில் கேட்டு  விட்டு என்னைப்  பார்த்து  இளித்தார்.

‘நம்ம ஏரியாவுல இளைஞர்களெல்லாம் சேர்ந்து ஒரு சின்ன நூலகம் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்காங்க… யார்  வேணாலும்  போய்  இலவசமாப்  படிக்கலாம்… அந்த  நூலகத்துக்கு  இதுகளையெல்லாம்  குடுத்திடுவேன்”

படு யதார்த்தமாய்ச்  சொல்லி விட்டு அந்த புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்த அந்த மனிதரி ஏனோ எனக்கு இப்ப பிடிக்க ஆரம்பித்தது.  அவரது தோற்றத்தையும், மீசையையும், கர கர குரலையும் என்னையே அறியாமல் நான் ரசிக்கத் துவங்கிய போது, என் எதிரே அமர்ந்திருந்த சினிமாப் பைத்திய ஆசிரியர், அந்த சி.டி.கவரின் மீதிருந்த நடிகையின் படத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிர் உள்ள வரை உஷா (அத்தியாயம் 3) பாவம் காயத்ரி – பாலாஜி ராம்

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 22) – தி.வள்ளி, திருநெல்வேலி