in

வல்லபி ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 11)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8_பகுதி 9_பகுதி 10

ரு வீட்டின் கதவைத் தள்ளிக் கொண்டு எல்லோரும் உள்ளே நுழைந்தனர். நகைகள் விற்ற பணத்தில், சாராய பாட்டில்களும், பிரியாணிப் பொட்டலங்களும் வாங்கி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் பாலாஜி.

போலீசார், அவனுக்குத் தர வேண்டிய மரியாதைகளைத் தாராளமாகக் கொடுத்த பிறகு, மூக்கிலும் வாயிலும் வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, அவர்களுடன் ஊருக்கு வெளியே வயல்களுக்கு மத்தியில் இருந்த ஒரு குடிசைக்குள் அழைத்துச் சென்றான்.

உள்ளே ஒரு நாற்காலியில் கைகால்கள் கட்டப்பட்டு, பாதி மயங்கிய நிலையில் வாய் ஒரு டேப்பால் ஒட்டப்பட்டு, கண்கள் செருக உட்கார்ந்திருந்தாள் வல்லபி.

அதைப் பார்த்தவுடன் விஷ்ணுவிற்கு பயங்கர கோபமும், துக்கமும் பொங்கியது. “திருட்டு நாயே, ஏண்டா இப்படி செய்தாய்?” என்று கூறி பாலாஜியை சரியாக அடித்து மையப் புடைத்தான்.

போலீஸ், விஷ்ணுவைத் தடுத்து நிறுத்தியது. “வேண்டாம் சார். உங்கள் அடியெல்லாம் இவனுக்கு உறைக்காது. போலீஸ் அடியென்று ஒன்று இருக்கிறது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் டாக்டர் மேடத்தை அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனில் ஒரு ரிப்போர்ட் கொடுங்கள். நாங்கள் எப்.ஐ.ஆர் போட்டு இவனைக் கோர்ட்டில் நிற்க வைக்கிறோம்” என்றனர்.

சுகந்தியின் உதவியுடன் வல்லபியை மருத்துவமனையில் சேர்த்து குளூக்கோஸ் ஏற்றினார்கள். இரண்டு நாட்களாக சாப்பாடு, தண்ணீர் சரியாக இல்லாததால் மிகவும்  பலவீனமாக இருந்தாள். வல்லபியின் கன்னத்தில் மாறி, மாறி அறைந்து இருப்பான் போலும் அந்த அரக்கன். வல்லபியின் கன்னங்கள் சிவந்து கை விரல்கள் பதிந்து இருந்தன. விஷ்ணு லேசாக அவள் கன்னத்தைத் தொட்டான். அதற்கே வலியிலும், எரிச்சலிலும் முகம் சுளித்தாள். கண்கள் கலங்கின .

வல்லபி அவன் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவள் உடம்பு மழையில் நனைந்த புறாவைப் போல் நடுங்கியது. அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான் விஷ்ணு. இதைப் பார்த்த மல்லிகா, மூர்த்தி மற்றும் மரகதம், இராமச்சந்திரன் எல்லோரும் அறையை விட்டு வெளியேறினர்.

“வல்லபி, நீ தான் இப்போது என்னுடன் இருக்கிறாயே, இன்னும் ஏன் உனக்கு பயம்?” அவள் காதுகளில் கிசுகிசுத்த குரலில் காதோரம் தொங்கிய சுருண்ட முடியைத் தள்ளியபடி கூறினான் விஷ்ணு.

“விஷ்ணு, எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் உயிர் மட்டுமல்ல, மானத்தையும் காப்பாற்றியிருக்கிறீர்கள். என்னை விட்டு எங்கும் போக மாட்டீர்களே?” என்றாள் வல்லபி, மிக பலவீனமான குரலில் விம்மிக் கொண்டு.

“நான் உன்னை விட்டு எங்கும் போக மாட்டேனடா என் கண்ணே. நீ ஏன் இப்படி பயப்படுகிறாய்? அந்தப் பொறுக்கி பாலாஜியையும் போலீஸ் அரெஸ்ட் செய்து விட்டார்கள். நான் உன்னுடன் தான் இருப்பேன். என் ஆபீஸிற்குக் கூட பத்து நாட்கள் விடுமுறை கேட்டுள்ளேன்” என்றவன், படுத்திருந்த அவளை அணைத்துக் கண்களில் முத்தமிட்டான்.

அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கி, அவன் மார்பில் முகம் புதைத்தாள் வல்லபி. “ஐ லவ் யூ விஷ்ணு” என்றாள் கண்களை மூடியபடி. இயலாமையால் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது .

விஷ்ணு அவள் கண்களைத் துடைத்து நெற்றியில் முத்தமிட்டான். “ஐ டூ லவ் யூ வல்லபி. உனக்காகத் தான் நான் பல வருடங்களாகத் தவமிருக்கிறேன். என் வல்லபி எனக்கு வேண்டும். நீ எதற்கும் பயப்படாமல் அமைதியாகத் தூங்கு” என்றான் விஷ்ணு.

“விஷ்ணு, அந்த பாலாஜியுடன் இன்னும் இரண்டு மூன்று ஆட்கள் இருக்கிறார்கள். நீ இன்று வந்து என்னைக் காப்பாற்றா விட்டால் வேறு எங்கோ அழைத்துப் போயிருப்பார்கள்” வல்லபி.

“பயத்தில் உளறுகிறாயா?” என்றான் விஷ்ணு பதற்றத்துடன்.

“இல்லை விஷ்ணு. அவர்கள் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள். இவர்கள் பெண்களைக் கடத்தும் கும்பல் போல் இருக்கிறது. இவருடன் வந்தவர்கள் இவனை விட மோசமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்னைக் கடத்திக் கொண்டு போய் எங்கேயோ கொடுத்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள்”

“அப்படியா?” என்றான் விஷ்ணு அதிர்ச்சியுடன். “நீ ஒன்றும் பயத்தில் உளறவில்லையே?” என்றான் மேலும்.

“இரண்டு நாட்களாக என்னைக் கட்டிப் போட்டிருந்த அறையில் தான் சுற்றிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள் பேசியதைத் தான் சொல்கிறேன். நான் எப்படி பயத்தில் உளறுவேன்?” என்றாள் வல்லபி பதிலுக்கு.

“அப்படியென்றால் இதை உடனடியாகக் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் வல்லபி” என்றவன், உடனே இன்ஸ்பெக்டருக்குத் தகவல் அனுப்பினான். அவரும் நேரில் வந்தார் .

“மேடம் அந்தத் திருட்டுப் பசங்களை நேரில் பார்த்தால் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?” என்றார்.

“முடியும்” என்றாள் வல்லபி.

“இரண்டு நாட்களில் உங்கள் உடம்பு தேறி விடும். எங்கள் ஆபிஸில் உள்ள ஆல்பங்களில் இவர்கள் போன்ற ஆட்களின் போட்டோ இருக்கும். அந்த முகங்கள் அடையாளம் தெரிகிறதா பாருங்கள்” என்றார்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு விஷ்ணு, மூர்த்தி, இராமச்சந்திரன் இவர்களின் துணையோடு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றாள். அவர்கள் காட்டிய ஆல்பத்தில் அந்த இரண்டு போக்கிரிகளின் போட்டோக்களையும் காட்டினாள்.

“நாங்கள் வெகுநாட்களாகத் தேடும் போக்கிரிகள். பெண்களைக் கடத்திப் பணம் பறிப்பவர்கள், ரெட்லைட் ஏரியாவிற்குப் பெண்களை சப்ளை செய்பவர்கள். நீங்கள் சொல்வதில் இருந்து அவர்கள் இங்கே தான் எங்கேயோ ஒளிந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த பாலாஜியை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் எல்லா விவரங்களும் தெரியும்” என்ற போலீஸ் அதிகாரி, மூர்த்தியைப் பார்த்து “ஸாரி சார்” என்றார்.

“அதனால் பரவாயில்லை சார். இது நான் செய்த பாவம். மாதாபிதா செய்த பாவம் மக்களுக்கு” என்றார் மூர்த்தி குனிந்த தலையோடு.

பாலாஜியைப் போலீஸ் எப்படி விசாரித்தது என்று தெரியவில்லை, அந்தக் கூட்டத்தை ஒரே வாரத்தில் பிடித்து விட்டது. வல்லபியின் ‘V’ டாலர் போட்ட சங்கிலியும், வளையல்களையும் அவளிடம்  சமர்ப்பித்தது காவல்துறை.

பத்து நாட்கள் மருத்துவவிடுப்பில் இருந்து விட்டு மீண்டும் பணியில் சேர்ந்து விட்டாள் வல்லபி. மல்லிகா இப்போது தான் ஒழுங்காக சாப்பிட ஆரம்பித்தாள். மூர்த்தி, மரகதம், ராமச்சந்திரன் யாவரும் அங்கேயே இருந்தனர்.

மூர்த்தியும், மல்லிகாவும் பேசிக் கொள்வதில்லை என்றாலும், கனகாவிடம் சொல்லி மல்லிகாவிற்கு அடிக்கடி பழச்சாறு, ஹார்லிக்ஸ் போன்றவைகளைத் தர வற்புறுத்திக் கொண்டிருந்தார் மூர்த்தி.

மரகதமும், ராமச்சந்திரனும் இதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். விஷ்ணு மட்டும் தன் அபார்ட்மெண்ட்டில் தங்கி, தினம் மாலையில் வல்லபியைப் பார்க்க வந்து விடுவான். ஸிஸ்டர் மேரியும், அந்த ஹோமில் உள்ளவர்களும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டனர். சுகந்தி, முரளிக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தி, அவனையும் அழைத்துக் கொண்டு வந்து பார்த்து விட்டுப் போனாள்.

ஆனால் அதன் பிறகு வல்லபியும், சுகந்தியும் விஷ்ணுவின் அபார்ட்மெண்ட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தனர். மல்லிகாவையும் மூர்த்தியையும் அங்கே வரவழைத்தனர். அவர்களிடம் பேசி முடித்த பின்னர் மரகதத்தையும், இராமச்சந்திரனையும் அங்கே வரவழைத்தனர்.

“சுகந்தி, நீங்கள் அடிக்கடி அண்ணாவையும், அண்ணியையும் வரவழைத்துப் பேசுகிறீர்கள். இப்போது எங்களையும் அழைத்திருக்கிறீர்கள். ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று ஆவலுடன் கேட்டாள் மரகதம்.  

“ஆன்ட்டி, உங்களுக்கு விஷ்ணுவைப் பற்றியும் வல்லபியைப் பற்றியும் நன்கு தெரியும். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?” என்றான் முரளி.

“என் அண்ணாவின் அருமை மகள் வல்லபி. அவளை மருமகளாக அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் வல்லபிக்குத் தான் என்னைக் கண்டால் பிடிக்கவில்லையே. அவள் நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள். என் அண்ணாவின் மேல் உள்ள பாசமும், நம்பிக்கையும் தான் நான் தவறிழைக்கக் காரணம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. என் குறுகிய மனப்பான்மை தான் காரணம்” என்றாள் வருத்தத்துடன்.

“எய்தவன் இருக்க அம்பை நோவதில் என்ன புண்ணியம்?” என்றாள் மல்லிகா. மூர்த்தி வருத்தத்துடன் தலை கவிழ்ந்தார்.

“மல்லிகா  நீங்களுமா இப்படிப் பேசுகிறீர்கள்? என் மச்சான் மூர்த்தி, ஏற்கனவே அவர் செயலுக்கு அவரே வருத்தப்படும் போது, மேலும் மேலும் குத்திக் கிளறுவது எப்படி நியாயம்? தவறு செய்தவர் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிக்கா விட்டாலும் பரவாயில்லை, குத்திக் காட்டாதீர்கள். அவர் செய்த தவறுக்கு வருந்தித்தான் அவருக்கு பிட்ஸ் வந்து விட்டது”  என்றார் ராமச்சந்திரன் வருத்தத்துடன்.

வல்லபியும், சுகந்தியும் திகைத்து நின்றனர். மூர்த்தியின் வலிப்பு வியாதியின் காரணம் அவர்களுக்கு இப்போது தான் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 “பரவாயில்லை விடுங்கள் இராமச்சந்திரன். மல்லிகா சொன்னதில் தவறொன்றும் இல்லையே. ஓர் இளம் பெண் தனியே, தன்னையும் காத்துக் கொண்டு, ஒரு பெண் குழந்தையையும் வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்? எல்லாம் என் தவறு தான்” என்றார் மூர்த்தி. அவமானத்தால் அவர் முகம் சிவந்தது.

“பழைய கதையை விடுங்கள் மூர்த்தி. நாமெல்லாம் வயதானவர்கள். வாழ்ந்து முடித்து விட்டோம். வாழ வேண்டிய இவர்கள் வாழட்டும். நாம் செய்த தவறால் விஷ்ணுவும், வல்லபியும் ஒருவரை ஒருவர் விரும்பியும் ஒன்று சேராமல் இருப்பது சரியில்லை. நாம் இவர்களுக்குத் திருமணம் செய்து ஒரு பேரனையோ, பேத்தியையோ பார்க்க வேண்டாமா?”  என்றார் ராமச்சந்திரன்.

எல்லோரும் மல்லிகாவையும், வல்லபியையும் ஆவலுடன் பார்த்தனர்.

“நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா. எங்கே என் மகள் தனியாக நின்று விடுவாளோ என்று எனக்கும் பயம் தான். நீ என்ன சொல்கிறாய் வல்லபி? மேலும் விஷ்ணுவை எனக்குக் குழந்தையிலிருந்து நன்கு தெரியும். ‘யாமினிப் பாப்பா’ என்று உயிராக இருப்பான்” என்றாள் மல்லிகா.

வல்லபி, விஷ்ணுவைப் பார்த்தாள். விஷ்ணுவோ, “வல்லபிக்கு எது சம்மதமோ அதுவே எனக்கும் சம்மதம். ஆனால் வல்லபியைத் தவிர வேறொரு பெண் என் வாழ்க்கையில் இல்லை” என்றான் தீர்மானமாக.

“எல்லோரும் பேசி விட்டோம். வல்லபி நீ தான் எதுவும் சொல்லவில்லை. மூர்த்தியையும் மரகதத்தையும் நினைத்தால் பயமாக இருக்கிறதா?” என்று கேட்டார் ராமச்சந்திரன்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஏன் பயப்பட வேண்டும்? மூர்த்தி சார், அவருடைய மகளைத் தான் இரண்டு வயதில் வீட்டை விட்டு அனுப்பி விட்டார். பார்வதியின் மகனான பாலாஜியையும் ஏன் கை விட்டார்? அவனுக்குப் படிப்பும் இல்லை, நல்ல தொழிலும் இல்லை. எனக்குப் படித்த, பொறுப்பான அம்மா இருந்தார்கள். அதனால் நான் தப்பித்து விட்டேன். ஆனால் அந்தப் பையனை அவனுடைய தாயும் கவனிக்கவில்லை. அவன் ஒரு ரௌடியாக, திருடனாக மாறியதற்கு இவர்கள் தானே காரணம். அதற்கு மிஸ்டர் மூர்த்தி என்ன சொல்கிறார்?” என்றாள் வல்லபி காரசாரமாக.

“நான் அவனை நல்ல பள்ளியில் தான் படிக்க வைத்தேன். அவன் ஒழுங்காகப் படிக்கவில்லை. நான் என்ன செய்ய முடியும்?” என்று முணுமுணுத்தார் மூர்த்தி.

“மாமா என்ன செய்வார் வல்லபி? அவன் உறவினர் அவனை வைத்துப் பணம் செய்ய தவறான வழியில் அழைத்துச் சென்று விட்டனர். உன்னையே இரண்டு நாட்கள் அடைத்து வைத்து என்ன கொடுமைப்படுத்தினான். அவனுக்குப் போய் பரிந்து பேசுகிறாயே” என்றான் விஷ்ணு .

“நான் ஒன்றும் பரிந்து பேசவில்லை விஷ்ணு. உங்கள் பெற்றோர் உங்களை நன்கு படிக்க வைத்து ஒரு வேலையில் சேர்த்தார்கள் இல்லையா? ஆனால் மூர்த்தி சார் ஏன் அப்படி செய்யவில்லை? சரி, போனது போகட்டும், அந்த பாலாஜி ஜெயிலில் இருந்து திரும்பிய பிறகாவது, ஏதாவது ஒரு தொழிலோ, வியாபாரமோ வைத்துக் கொடுத்தால் ஒரு மோசமான திருடன் உருவாவதைத் தடுக்கலாம் இல்லையா?”

மூர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“தகப்பனுக்குப் பாடம் சொன்ன முருகக் கடவுளே பெண் உருவில் வந்தாற் போல் நீ நிற்கிறாயம்மா. நீ என்ன சொல்கிறாயோ அப்படியே நான் கேட்கிறேன், சத்தியம்” என்றார்.

“சரி வல்லபி, முருகக் கடவுளாக நின்று பாலாஜிக்கு ஒரு வழி காட்டினாய். அதேபோல் என் பிள்ளையையும் கொஞ்சம் கண் திறந்து பாரம்மா” என்றார் ராமச்சந்திரன் லேசாகச் சிரித்துக் கொண்டே.

“பாலாஜிக்கான என் விருப்பத்தை நிறைவேற்றுவதாக நீங்களும் விஷ்ணுவும் வாக்களித்தால், நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன்” என்றாள் வல்லபி சிரித்த முகத்துடன். அதற்கே அவள் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது. அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு, தனக்குள் மகிழ்ந்து சிரித்துக் கொண்டான்.

‘எவ்வளவு நல்ல பெண் இந்த வல்லபி. அந்த பாலாஜி இவளைப் பிடித்து அடைத்து வைத்து, அடித்து இம்சை படுத்தியிருக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கைக்காகப் போராடுகிறளே’ என்று பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மல்லிகா நீ என்னம்மா சொல்கிறாய்?” என்றார் ராமச்சந்திரன்.

“வல்லபி சொல்வதும் கரெக்ட் தான். அம்மாவும், அப்பாவும் ஒழுங்காக இல்லையென்றால், பிள்ளைகள் நிலைமை எப்படி இருக்கும் என்பதற்கு இந்தப் பையனே சரியான உதாரணம் என்று தான் தோன்றுகிறது” மல்லிகா.

“மல்லிகாவும், வல்லபியும் நல்ல குணம் வாய்ந்தவர்கள். அதனால் அவனுக்காகப் பரிதாபப்படுகிறார்கள். ஆனால் அவனுக்குப் பரிதாபப்படுவது பாம்பிற்குப் பால் வார்ப்பது போலத்தான். பார்வதியின் குணத்தின் ஜெராக்ஸ் காபி அவன்” என்றார் மூர்த்தி.

டுத்த நாள் விடியற்காலம். ட்ராகிங் சூட்டில் வழக்கமாகப் போகும் பாதையில் வல்லபி ஜாகிங் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய எல்லா செயல்களும் விஷ்ணுவிற்கு அத்துப்படி ஆனதால், பல நாட்களில் இவனும் அவளுடன் கலந்து கொள்வான். அப்படிப் போகும் போது தான் விஷ்ணு அவளைப் பார்த்து கிண்டலாக சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” என்றாள் வல்லபி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு.

“பாலாஜிக்காகத் தான் என்னைத் திருமணம் செய்யப் போகிறாயா வல்லபி? காலமெல்லாம் உனக்காகக் காத்திருந்து தவம் செய்தவன் நான். உனக்கு முன்பின் தெரியாத ஒருவனுக்காக என் விருப்பத்தைப் பந்தயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்றான் விளையாட்டாக அவள் முகத்தைத் தன் இருகரங்களில் ஏந்தி.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

    மந்திரக் கைக்குட்டை (சிறுகதை) – ✍ மலர் மைந்தன்

    நாத்தனார் (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு