in

நாத்தனார் (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

நாத்தனார் (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ல வருடங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் குடியிருந்த நாச்சிமுத்து மாமா எப்படியோ இப்போதைய முகவரியைக் கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து விட்டார்.

அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.  அவர் மகன் கார்த்திக்கும் நானும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்ததாலும், பக்கத்து வீடு என்பதாலும், எங்கள் இரு குடும்பங்களும் உறவுக்காரர்கள் போல ஒட்டுதலோடு பழகிக் கொண்டிருந்தோம். 

கால ஓட்டத்தில், இடம் மாறி எங்கெங்கோ சிதறிவிட்ட போதும், எப்படியோ நூல் பிடித்து விசாரித்து இன்று வீட்டிற்கு வந்துவிட்டார் நாச்சிமுத்து மாமா. 

ஆவலில் மாமா  என் குடும்பத்தைப் பற்றி கேள்விகளை வீச ஆரம்பிக்கும் முன் நானே அவருக்கு எங்கள் குடும்பக் கதையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டேன். 

அப்பா, அம்மா இறந்து விட்டார்கள். எனக்குத் திருமணம் முடிந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும். அப்போது வீட்டில் இருந்த மனைவியையும், அக்காவையும் அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தினேன். 

அக்காவைப் பார்த்ததும் ஒரு கணம் திடுக்கிட்டார்.  இளமை மினுமினுப்பில், பாவாடை சட்டையுடன் துள்ளித் திரிந்த இளம் பெண்ணை, நெற்றியில் பொட்டில்லாமல், உடம்பில் ஒரு பொட்டு நகையில்லாமல் வெள்ளையுடையில் பார்த்தால் யாருக்குத்தான் அதிர்ச்சி இருக்காது?

கேள்வி கேட்க வாயைத் திறந்தவரை கண்ணால் அடக்கி, வீட்டிற்கு அருகில் இருந்த பார்க்கிற்குக் கூட்டி வந்தேன்.

“மாமா… நாங்க அந்த ஊரை விட்டு வந்தவுடன் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடாயிற்று.  அக்காவின் கணவர் சொந்தமாக கார், பஸ் வாங்கி வாடகைக்கு விட்டு வந்தார். ஒரு சமயம் அவரின் டிரைவர் திடீரென்று லீவு போட்டு விட்டதால் இவரே வாடகைக்குக் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். சென்னை செல்லும் வழியில் விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இறந்து விட்டார். 

அப்போது அக்காவிற்கு கல்யாணம் முடிந்து இரண்டு வருடமே ஆகி இருந்தது. குழந்தை இல்லை. அப்பாவும், அம்மாவும் அக்காவைக் கூட்டி வந்து உடன் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு என் கல்லூரிப் படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்து சாந்தியுடன் கல்யாணமும் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அப்பாவும், அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்தார்கள்”

“இத்தனை நாள் கழித்து உங்களைப் பார்த்ததில் சந்தோசம் தம்பி.  நீங்க எல்லோரும் ஒரு தடவை எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும்.  இதோ இந்தப் பேப்பரில் போன் நம்பரும், முகவரியும் இருக்கு”

கிளம்பியவரை நிறுத்தினேன்.

“இத்தனை வருடம் கழித்து எங்களைப் பார்க்க வந்துவிட்டு ஒரு காப்பி கூட சாப்பிடாமல் போவதா? வாங்க”

அவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆர்யபவனில் நுழைந்து இரண்டு காபி ஆர்டர் கொடுத்தேன்.

நாச்சிமுத்து மாமா தயங்கிக் கொண்டே கேட்டார், “கேக்கறனேன்னு தப்பா நினைக்க வேண்டாம்.  பொதுவாக நம் வீடுகளில் மாமியார், நாத்தனார் உறவுகள் எப்போதும் ஒரு சிக்கலாகவே இருக்கும்.  அக்காவுடனான உறவு உன் மனைவிக்கு எப்படி இருக்கு?”

மனதில் உறுத்திக்கொண்டு வெளிவரத் திணறிக் கொண்டிருந்த உணர்வுகள் அவரின் கேள்வியில் மடை திறந்த வெள்ளமென வெளி வந்தது.

“அப்பா, அம்மா இறக்கும்போது அக்காவை கடைசி வரை நான் நன்கு பார்த்துக் கொள்ளவேண்டும் என்று உறுதி வாங்கிக் கொண்டார்கள்.  என் மனைவி சாந்தியும் ஆரம்பத்தில் அக்காவை குடும்பத்தில் ஒருத்த‌ரைப் போலவே நடத்தினாள். குழந்தைகளைப் பெரிதாக்கியதில் அக்காவின் பங்கு மிகப் பெரிது.  எத்தனையோ இரவுகள் அவள் தூங்கவே இல்லை.  சாந்தியின் பிரசவத்தின் போதும் அதற்குப் பிறகு குழந்தைகளை வளர்ப்பதிலும் அக்கா பல தாய்களுக்கு ஈடாக இருந்தாள். 

ஆனால் ஏனோ தெரியவில்லை, கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அக்காவின் எல்லாச் செயல்களிலும் குறை கண்டுபிடித்து என்னிடம் புகார் செய்யும் நோய் சாந்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜாடையாக முதியோர் இல்லங்களைப் பற்றியெல்லாம் என்னிடம் சம்பந்தமில்லாமல் பேசுகிறாள். ஒரு நல்ல கணவனாகவும், ஒரு நல்ல சகோதரனாகவும் இருக்க ஒரு ஆண் எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது”

நாச்சிமுத்து மாமாவிற்கு அவன் நிலைமை நன்கு புரிந்தது.  இந்தப் பிரச்சினைக்கு அவனைத் தவிர வேறு யாராலும் தீர்ப்பு வழங்க‌ முடியாது என்பதை அவரின் அனுபவம் சொல்லியது.  அவனின் கையை ஆதரவாய்த் தடவிக் கொடுத்து விடைபெற்றார்.

‘ஹோ’ என்ற இரைச்சலுடன் தரையில் வந்து மோதிச் செல்லும் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்த அவனின் கவனத்தை சாந்தியின் குரல் கலைத்தது.

“பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து வந்துடுவாங்க.  திடீர்னு கடற்கரைக்குப் போகலாம்னு கூட்டி வந்துட்டீங்க?”

அருகில் வந்து நின்ற சுண்டல் விற்கும் பெரியவரிடம் இரண்டு பொட்டலம் வாங்கி ஒன்றை அவளிடம் கொடுத்தான். அவளின் முகத்தில் விழுந்திருந்த சுருக்கங்கள் அவள் அவனோடு வாழ்ந்த காலங்களுக்கு சாட்சியாக இருந்தன. 

ஏனோ அவள் மீது கோபம் தோன்றாமல் ஒரு பச்சாதாபமே எழுந்தது. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களின் போதும், பொருளாதார நெருக்கடியின் போதும் அவள் தன் தோளோடு தோள் கொடுத்து நின்றதும் நினைவில் வந்து போயின.

அவளைப் பார்த்துக் கேட்டான், “நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையாக பதில் சொல்வாயா?”

அவனை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே “ம்” என்றாள்.

“நான் கோபத்தில் உன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டால் எங்கே போவாய்?”

கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னாள், “அப்பா, அம்மா வீட்டிற்கு”

‘ அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டால்?’

“மும்பையில் இருக்கும் என் அக்கா வீட்டிற்கு”

“உன் அக்காவும் ஏற்றுக் கொள்ளாவிட்டால்?”

“கன்யாகுமரியில் இருக்கும் என் தம்பி வீட்டிற்குப் போவேன்”

“சரி… இதே போல் என் அக்காவை வெளியே போகச் சொன்னால்?”

இந்தக் கேள்வி ஒரு நிமிடம் சாந்தியை நிலை குலையச் செய்தது. அக்காவிற்கு என்னை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்ற உண்மை அவளுக்குள் மின்னல் போல்  இறங்கியது.

“ஒரு இடம் இருக்கிறது” என்றேன்.  என் கை விரல் கடலை நோக்கிக் காட்டியது.

சாந்தியின் கண்களில் அடிபட்ட வேதனை தெரிந்தது.

சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பெரியவர் அருகில் வந்தார்.

“சுண்டல் வாங்குங்க, வீட்டிற்குக் கொண்டு போக” என்றாள்.

“குழந்தைகளுக்கா?” என்றேன்.

“இல்லை… அக்காவுக்கு” என்றாள் சாந்தி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

வல்லபி ❤ (பகுதி 11) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நினைவுகள் இனியவை (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி