in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 46) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கிளம்பும் முன் ஒருமுறை கண்ணாடி முன் நின்றுப் பார்த்தேன். வயிறு நன்றாக தெரிந்தது. இனி என்னை அறியாதவர்கள் பார்த்தால் கூட நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொள்வார்கள்.

இந்த புடவையில் கல்யாணத்தன்று எப்படி இருந்தேன். இன்றோ வேறு மாதிரி இருக்கிறேன். கை கால்கள் எல்லாம் பூசின மாதிரி இருக்கிறது. பெரிதாக வீக்கம் இல்லை. கொஞ்சம் மினுமினுப்போடு இருந்தேன்.

நிமிர்ந்து தான் நடக்க முடிகிறது. என் நடையை கண்ணாடியில் பார்த்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது. சில நேரம் கைகளைக் கொண்டு வயிற்றைத் தாங்கிக் கொண்டு நடக்கிறேன் அமர்கிறேன்.

முகமும் பூசின மாதிரி தான் இருக்கிறது. எனக்கே நான் லட்சணமாக தெரிந்தேன். அப்படியென்றால் பெண் பிள்ளை என்கிறார்கள். பரவாயில்லை எதுவாக இருந்தாலும் சரி.

“கவியினியாள் போலாமா கோவிலுக்கு” ஆதி அழைக்கத் திரும்பிப் பார்த்தேன்.

“போலாமே மிக்கு அப்பா”

கோவிலில் முதலில் சாமிக்குப் பூஜை கொடுத்தார்கள். பொறுமையாக அமர்ந்து சாமி தரிசனம் செய்தோம்.

பின் எனக்கும் ஆதிக்கும் மாலை போட்டார்கள். சாமியிடம் வைத்து வாங்கிய வளையலை போட இருவரையும் கீழே அமரச் செய்தார்கள். இருவரும் திருமண கோலத்தில் அமர்ந்தோம்.

முதலில் என் தாய் மாமாவின் மனைவி எனக்கு அத்தை முறை உள்ளவரை வளையல் போடச் சொன்னார்கள். முகத்தில் நலுங்கு வைத்து நெற்றியில் பொட்டு வைத்து இரு கைகளிலும் ஒவ்வொரு வளையலைப் போட்டார்.

எத்தனை மகிழ்ச்சிகரமான நொடி இது. என் குழந்தையும் உள்ளே குதூகலாமாக இருக்கும் இந்நேரம்.

ஒவ்வொருவராக வளையல்களைப் போட்டார்கள். இறுதியாக என் கணவரையும் போடச் சொன்னார்கள். எங்கள் குழந்தைக்காக அவரும் வளையலை போட்டார்.

கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட வளையல்கள் இரு கைகளிலும் இருந்தன. பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். சத்தம் எழுப்பி மகிழ்ந்தேன். 

பின் சாப்பாடு போட்டார்கள்.

என்னையும் என் கணவரையும் அமர வைத்து இலை போட்டு இனிப்பு வைத்து முக்கனிகளான மா, பலா, வாழைப் பழங்களை வைத்துவிட்டு மூன்று விதமான வடைகள் வைத்து பாயசமிட்டு இரண்டு பொரியல்கள் வைத்து தக்காளி சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், பொதினா சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகிய ஏழு வகையான சாதங்களை வைத்து அப்பளம் வைத்து நிரப்பி இருந்தார்கள். பார்த்ததுமே வயிறு நிரம்பியது. பொறுமையாக ஒவ்வொன்றையும் ருசித்தேன்.

“இதெல்லாம் சாப்டுட்டு சாப்பாடு ரசம் இருக்கு வாங்கிக்கணும்” அத்தை செல்லமாக கூறினார்.

“அய்யோ என்னால முடியாது அத்தை”

“பொறுமையா சாப்புடு ஒன்னும் அவசரம் இல்லை”

மெல்ல மெல்ல சாப்பிட்டேன்.

கையில் எடுத்து வாயிற்கு கொண்டு போகும் நேரத்தில் எழும் வளையல் சத்தத்தை ரசித்துக் கொண்டே சாப்பிட்டேன். இதற்கு முன்பும் கண்ணாடி வளையல் அணிந்திருந்தேன். ஆனால் இப்பொழுது தான் இப்படி கை நிறைய அணிந்திருக்கிறேன்.

கல்யாணக் கண்ணாடி வளையலும் ஐந்து நாட்கள் தான் அணிந்திருந்தேன்.

அப்பொழுது இல்லாத பெரும் ஆசை கூட இப்பொழுது கைகளில் அதை பார்க்கும் பொழுது என் மகளோ மகனோ இந்த ஓசையைக் கேட்டு என்னை உணரப் போகிறார்கள் என்பதாலா.

இனி பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று கண்ணாடி வளையல்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கப் போகின்றன.

அளவோடு நடந்தாலும் மிக அழகாக நடந்தது வளைகாப்பு. அடுத்தது என்ன அப்படியே அடுத்த செக் அப்பிற்கும் செல்ல வேண்டியது தானே!

மறுநாளே ஏழாவது மாதப் பரிசோதனைக்குக் கிளம்பினோம்.

இந்த முறை விடுமுறையில் இருந்ததில் சேலத்தில் முதன் முதலில் பார்த்த மருத்துவரிடம் சென்றோம். அங்கே தோழி ஒருத்தியைச் சந்திக்க நேர்ந்தது.

“ரேணுப்பிரியா நீ எங்க இங்க?”

“இங்க தான்டி எனக்கு டெலிவரி ஆச்சு.. அப்போ இரத்தம் கொஞ்சம் கம்மி ஆயிடிச்சு.. மூணு மாசம் கழிச்சு செக் அப் வரச் சொன்னாங்க.. அதான் வந்தேன். உனக்கு எத்தனை மாசம் கவியினியாள்”

“ஏழாவது மாசம்.. இங்க நல்லா பாக்குறாங்களா.. என்ன டெலிவரி”

“நல்லா பாக்குறாங்க.. நார்மல் டெலிவரி”

“பரவால்ல ரேணு”

“நார்மல் டெலிவரிக்கு நம்மலும் கொஞ்சம் எஃபர்ட் போடணும்”

“என்னடி சொல்ற”

“நீ வாக்கிங்லாம் போக ஆரம்பிச்சுட்டியா”

“போறேன் ரேணு.. அப்பப்ப நடக்குறேன்”

“அப்பப்பவா.. ஏழாவது மாசம் ஆரம்பிச்சிடுச்சுல.. இனி தினமுமே வாக்கிங் கண்டிப்பா போ கவி”

“ஓகே ரேணு”

“அப்பப்ப சோம்பு கஷாயம் குடி.. எட்டாவது மாசத்துல இருந்து வெறும் வயித்துல வெண்ணை சாப்புடு.. ஒன்பதாவது மாசம் நாட்டு கோழி முட்டைல விளக்கெண்ணெய் விட்டு சாப்புடு.. அப்பப்ப வெறும் வெத்தலை சாப்புடு”

“என்னடி ஏதேதோ சொல்ற”

“ஆமா அப்புறம் தோப்புக் கரணம், பட்டர்பிளை எக்சர்சைஸ் ரெண்டுமே கொஞ்சம் கொஞ்சமா ரெகுலரா பண்ணு.. முடிஞ்ச அளவு பண்ணு”

“இதெல்லாம் பண்ணாதான் சுகப் பிரசவம் ஆகுமா”

“சொல்ல முடியாது.. இதெல்லாம் பண்ணியும் ஆபரேஷன் ஆகலாம்.. ஒண்ணுமே பண்ணலனாலும் நார்மல் ஆகலாம் எல்லாம் கடைசி நிமிஷத்துல கடவுள் நினைக்கிறது தான்”

“உனக்கு எப்படி இருந்துச்சு”

“நான் இதெல்லாம் ரெகுலரா பண்ணேன்.. எனக்கு நாலு மணி நேர வலி இருந்துச்சு அதுக்குள்ள முழுசா டைலேஷன் ஆகி புஷ் பண்ண சொல்லிட்டாங்க”

“அப்படின்னா”

“ரொம்ப கொழப்பிக்காத.. அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம்.. அது வரைக்கும் சுறுசுறுப்பா இரு.. நார்மலோ ஆபரேஷனோ சுறுசுறுப்பா எல்லா வேளையும் பண்ணிட்டு இருந்தா குழந்தைக்கும் நல்லது.. அதுக்காச்சோம் எல்லாம் பண்ணு”

“கண்டிப்பா ரேணு”

இனி இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிக்கலாம் சரி. தொடர்ந்து செய்ய என்னால் முடியுமா?

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 45) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 47) – ரேவதி பாலாஜி