in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 45) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திரும்பத் திரும்ப ஆதியை அழைத்துக் கொண்டே இருந்தேன். என்னவென்று தெரியாமல் எப்படி நிம்மதியாக மூச்சு விடுவது. எட்டாவது அழைப்பில் ஆதி பேசினார்.

“என்னங்க ஆச்சு”

“ப்ரண்ட் ஒருத்தனுக்கு அக்சிடென்ட்”

‘அதுக்குள்ள என்னை பயமுறுத்திட்டியே ஆதி’ மனதிற்குள் ஒரு நிமிடம் சுயநலமாக மகிழ்ச்சி அடைந்து கொண்டேன். என் கணவர் நலமாக இருக்கிறார்.

“யாருக்கு என்னாச்சு?”

“கவின்னு ஒருத்தன் உனக்கு தெரியாது. ஒசூர்ல இருந்து பைக்ல வந்துருக்கான். கார்காரன் இடிச்சிட்டான்”

“அய்யோ என்னாச்சு அவருக்கு”

“நீ பதறாத.. சின்ன காயம் தான்.. எதுக்கு இப்போ போன் பண்ணி டென்ஷன் ஆகிட்டு இருக்க”

“இல்லை எங்கன்னு கேக்கலாம்ன்னு கூப்பிட்டேன் ஆதி”

“ஹ்ம்ம்” என்ற பதிலோடு அழைப்பைத் துண்டித்தார்.

ஆதியின் குரலில் சோகம் தெரிந்தது. யாரோ ஒருவருக்கு நடக்கும் செய்தியை காணும் பொழுது மனம் எவ்வளவு வேதனை அடைகிறது. தெரிந்த நண்பர் ஒருவருக்கு எனும் பொழுது ஆதிக்கு எப்படி இருக்கும்.

இரவு வெகு நேரம் கழித்து தான் ஆதி வந்தார். அம்மா அவரைச் சாப்பிட அழைத்தார். ஆதி வேண்டாம் என்று கூறிவிட்டு முகம் கழுவ சென்றார்.

அம்மா அதற்குள் பால் ஒரு டம்ளர் எடுத்து வந்தார். ஆதி வெளியே வந்ததும் அவரிடம் நீட்டினார்.

“என்னாச்சு மாப்பிள்ளை.. யாருக்கோ ஆக்சிடென்ட்ன்னு கவி சொன்னா”

“தெரிஞ்ச ப்ரண்ட் ஒருத்தருக்கு”

“எப்படி இருக்காங்க இப்போ”

“அவன் இறந்துட்டான் அத்தை” 

பாத்ரூமிற்குள் இருந்த என் காதிலும் விழுந்தது.

“என்ன மாப்பிள்ளை சொல்றிங்க”

“இடிச்சதுமே அங்கேயே ஆள் அவ்ளோதான்.. கவிகிட்ட சொல்லாதிங்க அவ கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்குவா.. மாசமா வேற இருக்கா”

“அந்த பையனுக்கு குழந்தைங்க இருக்கா”

“ஒரு வயசுல பையன்”

“கடவுளே ஏன்னப்பா இப்படி அந்த குடும்பத்தை சோதிச்சிட்ட”

பாத்ரூமில் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த என் கண்களில் இருந்து நீர் கொட்டியது.

அவருடைய மனைவியை நினைத்தும் அவர் ஒரு வயது மகனை நினைத்தும் கவலையடைந்தேன். துக்கம் தொண்டையை அடைத்தது.

அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது.. இனி வாழ்நாள் முழுக்க தந்தை இல்லாதவன் ஆகி விட்டானே.. ஏன் இப்படி சிறு வயது மரணங்கள் நிகழ்கின்றன. எல்லாம் கர்மாவா பூர்வ ஜென்ம பாவமா இல்லை என்னதான் காரணம்.

“கவி உனக்கும் பால் வேணுமா?”

பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் அம்மா கேட்டார்.

“வேணாம் மா”

“குடிக்கலாம்ல நீயும்”

“வேணாம்”

“ஏன் கவி.. ஐயன் டானிக் மாத்திரைலாம் முழுங்குனியா” என் முன் நண்பன் இறந்த சோகத்தை காட்டாமல் என்னை விசாரித்தார் ஆதி.

“ம்ம்”

என் மனம் நோகக் கூடாது என்பதற்காக இருவரும் என்னிடம் எதுவும் கூறாமல் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். அவ்வளவு முக்கியமான ஒரு சூழலில் நான் இருக்கிறேனா. இன்னொரு உயிரை எனக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அது ஆரோக்கியமாக வளர ஒவ்வொருவரும் முயற்சிக்கிறார்கள்.

நான் நிம்மதியாக மனஅமைதியுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என் குழந்தைக்காக.

என்ன வாழ்க்கை இது. ஏன் மனிதர்களுக்கு இவ்வளவு துயரங்கள். நிம்மதியான வாழ்க்கை வாழ்வது எத்தனை கடினமாகி விட்டது.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எதையோ தேடி எங்கேயோ அலைந்து கொண்டிருக்கிறோம்.

இருக்கும் வரையில் யாருக்கும் எந்த பாவமும் செய்யாமல் வாழ்ந்துவிட வேண்டும். இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக ஆரோக்கியத்தை எந்த நிலையிலும் விட்டு விடக்கூடாது.

வாழ்க்கையை நூறு ரூபாய் இருந்தாலும் வாழலாம். லட்ச ரூபாய் இருந்தாலும் வாழலாம். என்ன இருந்தாலும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத் தெரிந்திருக்க வேண்டும்.

நாட்கள் வேகமாகச் சென்றன.

“குங்குமப் பூ எவ்வளவு போடணும் கவி”

“ரெண்டு மூணு இதழ் போடுங்க அத்தை போதும்”

சிவப்பு நிறம் இறங்கிய மஞ்சள் நிற பாலை என்னிடம் தந்தார் அத்தை.

குழந்தையின் நிறத்திற்காக இல்லை. ஏதோ ஒரு ஊட்டச்சத்து குழந்தைக்குக் கிடைக்கட்டும் என்று வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களோ குங்குமப்பூ பால் குடிப்பேன்.

“கவி ஏழாவது மாசம் ஆரம்பிச்சுடுச்சுல.. உங்க வீட்ல உனக்கு சாப்பாடு செஞ்சு போட்றதான்னு என்கிட்ட கேக்கறாங்க”

மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

“மொதல்ல நம்ம கோவிலுக்குக் கூட்டிட்டு போய் சாமிகிட்ட வெச்சு வளையல் வாங்கிப் போட்டு நாங்க சாப்பாடு போட்டப்பறம் நீ அவங்க வீட்டுக்குலாம் போலாம்”

“சரிங்க அத்தை”

“உனக்கு வளைகாப்பு பெருசா பண்ணும்னு ஆசை இருக்கா கவி”

யாருக்குத்தான் அந்த ஆசை இருக்காது. எல்லா பெண்களுக்கும் இது மறக்க முடியா தருணம் அல்லவா. அதை கொண்டாட வேண்டாமா!

“எப்படி வழக்கமோ அப்படி பண்ணிக்கலாம் அத்தை”

“நம்ம பெருசா மண்டபத்துல வளைகாப்பு பண்ற பழக்கம் இல்லை.. நம்ம குலதெய்வ கோவிலுக்கு உன் அத்தைங்க நெருங்கிய சொந்தக்காரங்கள கூட்டிட்டுப் போய் சாமிக்கு பூஜை குடுத்துட்டு வளையல் வெச்சு வாங்கி எல்லாரும் போட்டுட்டு சாப்பாடு செஞ்சு போடுவோம்”

“நமக்கு என்ன பழக்கமோ அதே பண்ணிக்கலாம்”

“உங்க அம்மாவ அத்தையெல்லாம் நானே கூப்பட்றேன். என்னைக்கு போலாம்”

“ஏப்ரல் இரண்டாவது வாரம் நிறைய லீவு வருது.. அதுல எப்போ சொல்றிங்களா அப்போ போலாம் அத்தை”

“நானும் நல்ல நாள் பாக்கறேன்.. அப்புறம் இன்னொன்னு கவி குழந்தை புறந்தப்பறம் தான் அதுக்கு புதுத்துணி எடுக்கணும் பொம்மை வாங்கணும். நீயும் ஆதியும் முன்னாடியே எதாவது ஆசைல வாங்கிடாதீங்க”

“அப்படியா அத்தை.. வாங்கல.. அவர்டையும் சொல்லிட்றேன்”

ஏப்ரல் பத்தாம் தேதி கோவிலுக்குச் செல்ல முடிவு எடுத்தோம். அதற்கு முன்னாடி எங்கள் வீட்டில் இருந்து அத்தை மாமா சித்தி சித்தப்பாவென நெருங்கிய சொந்தங்களையும் அழைத்தார்கள்.

இரு வீடும் சேர்ந்து ஐம்பது பேர் கணக்கு வந்தது.

முன்னாடி நாள் எனக்கு மருதாணி வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. செயற்கையான மருதாணி வைத்துக் கொள்ள பயந்து மருதாணியைச் செடியில் இருந்து பறித்து கையில் வைத்துக் கொண்டேன்.

விடிந்ததும் சீக்கிரம் தயாராகத் தொடங்கினேன். கல்யாணப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு நன்கு தலை சீவி பூ வைத்து கொண்டேன். ஆதியும் கல்யாணச் சட்டை வேஷ்டியை அணிந்து கொண்டார்.

கோவிலில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக கிளம்பினோம்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 44) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 46) – ரேவதி பாலாஜி