2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13
சுதாரித்துக் கொண்டாள். தன் எண்ணம் பட்டை தீட்டிய பைத்தியக்காரத்தனமாய் தோன்ற, அதை மனதில் இருந்து அழிக்க முற்பட்டாள். ஆனால், அது அழிய மறுத்தது. மீண்டும் மீண்டும் அதே எண்ணம் தோன்றிக் கொண்டேயிருக்க, தலையை இடவலமாய் வேகமாய் ஆட்டி அதைத் துடைக்க முயற்சித்தாள்.
அதாவது… அழிவதாவது. இறுதியில், “ஏன்?… ஏன் நான் செத்தால்தான் என்ன?… இந்த சுந்தர் சோகத்துக்கு போவார்… அவ்வளவுதானே போகட்டுமே?… அதை ரசிச்சிட்டாப் போச்சு!… இன்னும் சொல்லப் போனால் இவர் என் மேல வச்சிருக்கிற இந்த அன்பு எவ்வளவு ஆழமானதுங்கிறதை கூட நான் செத்தத்தான் தெரிஞ்சுக்க முடியும்… தெரிஞ்சுக்குவோம்”
தான் இறந்து விட்டால் நடக்கும் எதையும் தன்னால் காணவோ, உணரவோ கூட முடியாது என்கிற உண்மையை அவள் மனம் மறந்து போனதுதான், உள்ளிருக்கும் சாத்தானின் உலகக் கோப்பை வெற்றி.
தற்கொலை எண்ணத்தை செயல்படுத்தும் வெறியோடு ஆவேசமாய் படுக்கையை விட்டு எழுந்தாள் வித்யா.
“என்ன செய்யலாம்?… எப்படிச் சாகலாம்?” கண்களிரண்டும் “பர…பர”வென்று அலைந்து, கடைசியில் கட்டிலின் தலைமாட்டில் டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெட்ரூம் லைட்டின் மீது வந்து நின்றது.
பூனை போல் நடந்து அதை நெருங்கி, அதன் மேல் இருந்த கூம்பு வடிவ பிளாஸ்டிக் குடையை அகற்றினாள் வித்யா. உள்ளே இருந்த அந்த முட்டை பல்பு மின்சார தீண்டலில் அழகாய் எரிந்து கொண்டிருந்தது. அதனுள் கையை விட்டு மெலிதாய்ச் சுடும் அந்த முட்டையை ஹோல்டரிலிருந்து விடுவித்தாள். அறைக்குள் மொத்தமாய் இருள் கவிழ்ந்தது.
இருட்டில் தடவித் தடவி அந்த ஹோல்டரின் வாய்க்குள் விரல்களை நுழைத்து, பித்தளை சமாச்சாரத்தை தொட்டாள். காத்திருந்த மின்சாரம் அவள் உடலுக்குள் பாய “ஹீய்ய்ய்ய்ய்ய்” என்ற ஹீனக் குரலுடன் “பட…பட”வென்று உடல் துள்ளியது.
அந்த ஓசையில் திடுக்கிட்டு விழித்த சுந்தர், அறைக்குள் கும்மிருட்டு அமர்ந்திருக்க, தலைமாட்டில் இருக்கும் பெட்ரூம் லைட்டை ஆன் செய்யும் நோக்கத்தோடு கையை மேலே கொண்டு சென்றான்.
துடித்துக் கொண்டிருந்த வித்யாவின் உடல் மேல் அவன் கை பட்டு விட “கப்”பென்று அவனையும் இழுத்துக் கொண்டான் மின்சார அசுரன்.
சற்றுமுன் காமன் அம்பு பாய்ந்ததில் துடிதுடித்துச் சேர்ந்த அந்த இரண்டு உடல்களும் இப்போது மின்சார அம்பு பாய்ந்ததில் துடித்தன. கட்டிலுக்கு கீழே நின்று கொண்டிருந்த வித்யாவின் உடல் பட்டென்று தரையில் விழுந்ததில் மின்சார தொடர்பு அறுந்தது. அதே விநாடியில் சுந்தரின் துடிப்பும் ஓய்ந்தது.
****
“என்னது?… மணி ஏழரை ஆயிடுச்சு… இன்னும் இவங்க ரெண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை” உள்ளே நடந்தேறியிருக்கும் அமங்கல நாடகத்தை அறியாதவளாய் அந்த அறையின் கதவைத் தட்டினாள் சுந்தரின் தாய் நீலவேணி.
அறைக்குள் எந்தவித சலனமும் இல்லை. “ஹும்…ரெண்டும் ராத்திரி ரொம்ப நேரம் கூத்தடிச்சிட்டு இப்பத்தான் தூங்குதுல போலிருக்கு” சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு சுந்தரின் தந்தை ராமச்சந்திரன் வந்து தட்டினார்.
அப்போதும் பதில் இல்லாமல் போக, “இவனுக்கு ஆபீஸ் போகணும் என்கிற எண்ணமே இல்லையா?” எரிச்சலுடன் வாசலுக்கு சென்று காலிங்பெல்லை “பர்ர்ர்ர்ர்ர்”ரென்று அழுத்திப் பிடித்தார்.
அந்த அலறலிலாவது அடித்து பிடித்து எழுந்து வருவார்கள் என்கிற எண்ணத்தில் அரை மனதுடன் தான் அதைச் செய்தார் ராமச்சந்திரன். ஆனால், அதன் பின்னும் அறைக்குள் அமைதியே தொடர்ந்தது.
அப்போது சுந்தரின் தாயாரும் வந்து சேர்ந்து கொள்ள, இருவர் முகமும் கொஞ்சமும் கொஞ்சமாய் கலவரம் பூசிக் கொள்ள ஆரம்பித்தது.
“என்னங்க… எனக்கென்னவோ பயமா இருக்குங்க!… நம்ம சுந்தர் இப்படியெல்லாம் தூங்க மாட்டானுங்க” நீலவேணி பதட்டமானாள்.
ராமச்சந்திரன் மீண்டுமொரு முறை கதவைத் தட்டிப் பார்த்து விட்டு, அந்த அறையின் ஜன்னல் பக்கமாய் சென்று நின்றார்.
“ஏண்டி உடைந்திருக்கிற கண்ணாடி துவாரத்தில் கண்ணை வைத்து பார்க்கட்டுமா?” தர்மசங்கடமாய் கேட்டார்.
“வேண்டாம்” என்று அவசரமாய் மறுத்தவள், ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின், “சரி… ஆபத்துக்கு பாவம் இல்லை!… பாருங்க” என்றாள் நீலவேணி.
துவாரத்தின் வழியே பார்த்த ராமச்சந்திரன் முகம் மாறினார். ”கடவுளே” அவர் வாய் அவரையும் மீறி கூவியது.
“ஏங்க… என்னாச்சுங்க?” கையை உதறிக் கொண்டு கேட்டாள் சுந்தரின் தாய்.
“நீயே வந்து பாரு” வழி விட்டார்.
பார்த்தவள் அலறினாள். “அய்யோ… என்னங்க இது?… வித்யா தரைல கெடக்கிறா!.. இவன் பாட்டுக்கு கட்டில்ல தூங்குறான்!… என்ன ஆச்சு?ன்னு தெரியலையே… கடவுளே”
வேகவேகமாய் வாசலுக்கு சென்று, எதிர்வீட்டை நோக்கி ஓடினார் ராமச்சந்திரன். செடிகளுக்குத் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த எதிர் விட்டு ஆடிட்டர், “என்ன சார்?… ஏன் இப்படி பதட்டமா ஓடி வர்றீங்க?” கேட்டார்.
“சார்… உடனே கிளம்பி என் வீட்டுக்கு வாங்க…” பதைபதைக்கும் குரலில் சொன்னார் ராமச்சந்திரன்.
தன் கையிலிருந்த தண்ணீர் பக்கெட்டை அப்படியே கீழே போட்டு விட்டு ராமச்சந்திரனுடன் புறப்பட்டார் ஆடிட்டர். அவர் செல்வதைப் பார்த்து வீடு பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்த அவரது மகனும் பின்னாலேயே வந்தார்.
பத்து நிமிட போராட்டத்திற்கு பின் பெட்ரூம் கதவு உடைக்கப்பட, எல்லோருமே உள்ளே பாய்ந்தனர். உள்ளே பரவியிருந்த இருளையும், தாறுமாறாய்க் கிடந்த அந்த பெட்ரூம் லைட்டைப் பார்த்து ஓரளவிற்கு விஷயத்தை யூகித்து விட்ட ஆடிட்டர், தன் மகனைப் பார்த்து, “டேய்….. ரகு ஓடிப் போய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுடா… யுடனே வரச் சொல்லுடா” கத்தினார்.
மேகலா மருத்துவமனை.
எமர்ஜென்சி பிளாக்கின் முன் அந்த ஆம்புலன்ஸ் வேன் வந்து நின்றதும், காத்திருந்த ஆஸ்பத்திரி சிப்பந்திகள் ராணுவ பரபரப்புடன் ஸ்ட்ரக்சரை உருட்டிக் கொண்டு வந்தனர்.
“இன்னொரு ஸ்ட்ரக்சர்…. இன்னொரு ஸ்ட்ரெச்சர்” வேனிலிருந்து இறங்கிய ஆடிட்டர் கூவ, இரண்டு பேர் ஓடிப்போய் இன்னொரு ஸ்ட்ரக்சரையும் உருட்டிக் கொண்டு வர, முதல் ஸ்ட்ரக்சரில் சுந்தர் பயணப்பட்டான். அவனுக்குப் பின்னால் இன்னொரு ஸ்ட்ரக்சரில் வித்யாவும் புறப்பட்டாள்.
“திடும்… திடும்” என அதிரும் இருதயத்துடன் எமர்ஜென்சிக்கு வெளியே காத்திருந்தனர் சுந்தரின் பெற்றோரும், ஆடிட்டரும் அவர் மகனும்.
சில நிமிடங்களில் ஒரு டாக்டர் வெளியே வர, ஆடிட்டர் அவரைப் பின் தொடர்ந்தார். இருவரும் சற்றுத் தள்ளிச் சென்று எதையோ கிசுகிசுப்பாய்ப் பேசினர். ஆடிட்டர் அவ்வப்போது ராமச்சந்திர்னைக் கை காட்டிப் பேசினார்.
டாக்டர் சென்றதும் சோகம் அப்பிய முகத்துடன் திரும்பி வந்த ஆடிட்டர், “மிஸ்டர் ராமச்சந்திரன்!… ரெண்டு பேரும் சிவியரா எலக்ட்ரிக் ஷாக் வாங்கி இருக்காங்க!…”
“கரண்ட் ஷாக்கா?… எப்படி?…எப்படி?” கதறினாள் சுந்தரின் தாய்..
“இப்ப அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?… உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?” ராமச்சந்திரன் கவலையுடன் கேட்டார்.
அவரைக் கூர்ந்து பார்த்த ஆடிட்டர், “கொஞ்சம் அப்படி வாங்க” என்று சொல்லி தனியே அழைத்துச் சென்று, “மிஸ்டர் ராமச்சந்திரன் உங்க மருமகள் தரையில் விழுந்ததுல பின் மண்டையில பலத்த அடி!… அதனால்தான் அவங்க மயக்க நிலையில் இருக்காங்க!ன்னு டாக்டர் சொன்னார்!” என்று சொல்ல
“சுந்தர்… சுந்தர்?” பரபரத்தார் ராமச்சந்திரன்.
“ஸாரி மிஸ்டர் ராமச்சந்திரன் உங்க மகன் நாம கொண்டு வரும் போதே இறந்துட்டானாம்”
“சு…ந்…த…ர்” ராமச்சந்திரனின் அலறலில் அந்த கட்டிடமே அதிர்ந்தது.
டியூட்டி நர்சுகளும், டாக்டர்களும் என்னென்னவோ ஏதோவென்று பதறிக் கொண்டு வந்தனர். தான் ஒரு ஆண்மகன் என்பதை மறந்து, தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறியவரை நோக்கி பாய்ந்து வந்தாள் சுந்தரி தாய்.
“என்னங்க… என்னங்க… டாக்டர் என்னங்க சொல்லிட்டுப் போறார்?” என்றபடி கணவரின் தோளைத் தொட, கண்களில் நீருடன், “அடியேய்… நம்ம பையன் நம்மளை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாண்டி” கத்தலாய்ச் சொன்னார்.
“அய்யோ… என் மகன் என்னை விட்டுப் போயிட்டானா?…. என் மகன் போயிட்டானா?” கேட்டுக் கொண்டே மயக்கத்திற்குப் போனாள் சுந்தரின் தாய்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings