2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
சட்டென்று அவனை உதறி தள்ளி விட்டு, அடிவயிற்றை பிடித்துக் கொண்டு, “அம்மா” என்று ஈனக்குரலில் அரற்றினாள் வித்யா. பதறிப் போய் மலங்க மலங்க விழித்தான் அவன்.
அவனை தர்மசங்கடமாய் பார்த்து விட்டு, அட்டாச்டு டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள் வித்யா. டாய்லெட் கதவையே பார்த்தபடி தவிப்பாய் அமர்ந்திருந்தான் சுந்தரராமன்.
பத்து நிமிடங்களுக்கு பிறகு டாய்லெட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டவள், அவன் முகத்தையே பாராமல், கட்டிலில் மேலிருந்த ஒரு பெட்ஷீட்டையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு போய் அறையின் மூலையில் விரித்தாள்.
“என்ன இது?” புரியாமல் கேட்டான்.
“ஸாரி டியர்… இது மந்த்லி ஃபெஸ்டிவல்” பொய் சொன்னாள்.
“என்ன சொல்றே?” அவன் குரலில் ஏமாற்றம் தொணித்தது.
“இனி மூன்று நாட்களுக்கு நான் உங்க கூட கட்டாய டூ”
நெற்றியில் உள்ளங்கையை வைத்துக் கொண்டான் சுந்தரராமன்.
“அடச்செ… என்ன பெரியவங்க? இது கூடத் தெரியாமலா சாந்தி முகூர்த்தம் பிக்ஸ் பண்ணுவாங்க?” அவன் எரிச்சல் அவனுக்கு.
“இல்லை டியர் வழக்கமா நான் பதினாலாம் தேதி வாக்குலதான்!.. இந்த தடவை கண்டலன்ஸ்… கல்யாணம்னு ஏகப்பட்ட அலைச்சல்… அதனால் கொஞ்சம் அட்வான்ஸாக ஆயிட்டேன்”
அவளை ஒருமுறை முறைத்து விட்டு மெத்தையில் போய் தொப்பென்று விழுந்து திரும்பி படுத்து கொண்டான். படுத்தவன் தூக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாய்ப் புரண்டு கொண்டே இருந்தான். அவ்வப்போது எழுந்து தண்ணீர் குடித்து விட்டுப் படுத்தான்.
அவன் படும் அவஸ்தையைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தாள் வித்யா. ஆசையின் உச்சத்திற்கே போய் விட்டதால் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் அவன் திணறிக் கொண்டிருந்தான்.
இரவு இரண்டு மணி வாக்கில், மெல்ல எழுந்து கீழே படுத்திருந்த வித்யாவை நெருங்கி, சுரண்டினான். தூங்குவது போல் பாவலா செய்து கொண்டிருந்த வித்யா அப்போதுதான் எழுந்தவளைப் போல் கண்களை கசக்கிக் கொண்டு, “என்னங்க? என்ன வேணும்?”
“வித்யா என்னால முடியல. இன்னிக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட்., அட்லீஸ்ட் ஒரு ஸ்மால் கிஸ்ஸாவது குடு” கிட்டத்தட்ட கெஞ்சினான்.
“அய்யோ…. மூச்… நியாயப்படி நானும் நீங்களும் இப்படி ஒரே ரூம்ல படுக்கிறதே தப்பு!… வேற வழியில்லை படுத்திருக்கோம்!… நீங்க என்னடான்னா…”
“சீ போடி” எரிச்சலுடன் எழுந்து டாய்லெட்டிற்கு சென்றவனை இதழோரம் கனிந்த வெற்றி புன்னகையுடன் ரசித்தாள் வித்யா.
‘பார்த்தால் ரொம்பவே பாவமாயிருக்கான்… சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்’னு சொல்லி அவனை குஷிப்படுத்தி விடலாமா?’ என்று கூட தோன்றியது.
ஆனால் அதை செயல்படுத்த மனசு வரவில்லை. காரணம், அவள் சாத்தானின் பிடிக்குள் அல்ல இருக்கிறாள். மூன்று மணிக்கு மேல் அவளையும் அறியாமல் உறக்க தேவதையின் மடியில் அவள் வீழ்ந்து விட, கட்டிலில் அமர்ந்து விடிய விடிய அவள் தூங்கும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தான் சுந்தரராமன்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பர்ச்சேசிங் என்கிற பெயரில் அலைந்து திரிந்து கொண்டிருந்தனர் வித்யாவும் சுந்தரும்.
“சுந்தர் எனக்கு கால் வலிக்குதுப்பா” நின்று காலை உதறியபடி சொன்னாள் வித்யா.
“பின்னே?… வலிக்காமல் இருக்குமா?… ஒரு லெக்கின்ஸ் வாங்குவதற்கு மூணு மணி நேரம்… துப்பட்டா வாங்குவதற்கு நாலு மணி நேரம்ன்னு அலைஞ்சா… கால் என்ன?.. எல்லாமே வலிக்கும்”
சலிப்பாய்ச் சொன்னவனைக் கோபமாய்ப் பார்த்தவள், “சரி பாவம் மனுசனை ஒரு வாரமாகக் காய போட்டுட்டோமே… இன்னைக்கு செமையா கவனிச்சிடலாம்னு நெனச்சேன்… இப்படிப் பேசினதுனால இன்னைக்கும் டோர் க்ளோஸ்டு” என்றாள் ஏகமாய் அலட்டிக் கொண்டு.
அவள் அப்படி சொன்னதுதான் தாமதம், “அய்யோ லெக்கின்ஸ்ன்னா என்ன சாதாரணமா… போனவுடன் டக்குனு எடுத்துட்டு திரும்ப? சாதாரண கத்திரிக்காய் வாங்குறப்பவே நல்லாத் திருப்பித் திருப்பி பார்த்துத்தான் வாங்குறோம். அப்படியிருக்கும் போது லெக்கின்ஸ்… துப்பட்டா… எல்லாம் எத்தனை பெரிய விஷயம்? அதுகளை வாங்கறதுக்காக… சாயந்திரம் வரை கூட அலையலாம் தெரியுமா?”
அப்படியே பிளேட்டை மாற்றி பேசினான் சுந்தரராமன்.
“போதும் போதும் ரொம்ப வழியுது… தொடச்சுக்கோங்க” என்றாள் வித்யா.
“ஹி…ஹி…” உண்மையிலேயே வழிந்தான்.
காம்ப்ளக்ஸ் விட்டு வெளியேறி டூவீலர் பார்க்கிங்கை நெருங்கியதும், “ஓ.. காட்” என்றான் சுந்தர்.
“ஏன்… என்னாச்சு?”
“அங்க பாரு… என்னோட பைக் எக்கச்சக்கமா நடுவுல சிக்கிக் கிடக்கு… இனி அதை மீட்டு வெளியே கொண்டு வர்றதுக்குள்ளார பிராணன் போயிடும்…. வித்யா நீ போய் அந்த வீடியோ ஸ்பெக்ட்ரம் கடைக்கு முன்னாடி நில்லு!… நான் உள்ளார புகுந்து… வண்டியை எடுத்துட்டு வர்றேன்” என்றான்.
“சரி…” என்றபடி நடந்தாள் வித்யா.
அந்த வீடியோஸ் ஸ்பெக்ட்ரம் கடைக்கு ஒரு சின்ன கும்பல் நின்று கொண்டு, கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தது.
அவ்வப்போது “சூப்பர் ஷாட்”… “பென்டாஸ்டிக் டிரைவ்” என்ற வார்த்தைகள் அந்த கும்பலுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.
தன்னைக் கடந்து போன அந்த தாடி இளைஞனிடமிருந்து பரவிய சிகரெட் புகை முகத்தை தாக்க, “ஸ்டுப்பிட்” என்றாள் வித்யா.
அவன் நின்று திரும்பிப் பார்த்தான். கோபமாய் ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அப்படியே நிறுத்திக் கொண்டு, “ஹேய்ய்… நீ விஜயசந்திரன் தானே?” கேட்டாள்.
“ஆமாம்” என்றான் அவன் ஆச்சரியமாய்.
“என்னடா… என்னை தெரியலையா, நான்தான் வித்யா…”
“ஓ… வாட் அ சர்ப்ரைஸ்? வித்யா எப்படி இருக்கே? ஏன் இங்கே நின்னுட்டிருக்கே?” அவன் முகத்திலும், பேச்சிலும் ஒரு சோகம் இழைந்தோடுவதை வித்யா கண்டுபிடித்தாள்.
“என்னோட மிஸ்டர் பைக்கை எடுத்துட்டு வர பார்க்கிங் சைடு போயிருக்கார்… அதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். அது சரி.. நீ இப்ப எங்க இருக்கே?… என்ன பண்ணிட்டு இருக்கே?… ஆமாம்… ஏன் இப்படி தாடியும் மீசையுமாய்?” கேட்டாள்.
“ஹும்…அது ஒரு பெரிய கதை” நீண்ட பெருமூச்சொன்றைப் பிரசவித்தான்.
“என்னடா சொல்ற?… கொஞ்சம் புரியிற மாதிரிதான் சொல்லேன்”
அவளை மேலும் கீழும் பார்த்தவன், “வித்யா நீ புருஷனோடவும்… புள்ள குட்டிகளோடவும் சந்தோசமா வாழ்ந்துக்கிட்டு இருக்கே!… அப்படியே இருந்திடு வித்யா… என்னோட சோகக்கதையைக் கேட்டு நீயும் சோகம் ஆக வேண்டாம்” என்றான் அந்த விஜயசந்திரன்.
“டேய்… ஃபிரண்ட்ஷிப் என்பது சந்தோஷத்தை மட்டும் பங்கு போட்டுக்கறதில்லை!… சோகத்தையும் பங்கு போட்டுக்கணும்!… அதுதான் உண்மையானது”
அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, “நோ நீ எதுவும் பேசக்கூடாது!.. இந்தா…பிடி.. இது என்னோட ஹஸ்பண்டோட விசிட்டிங் கார்டு. நாளைக்கு ஈவினிங் நீ கண்டிப்பா வீட்டுக்கு வர்றே” உரிமையோடு அவள் இட்ட ஆணையை அந்த விஜயசந்திரனால் மறுக்க முடியவில்லை.
இதற்குள் சுந்தர் வந்து விட, “சுந்தர் இவன் விஜய்சந்திரன்… என்னோட காலேஜ் மேட்” அறிமுகப்படுத்தினாள்.
“ஹலோ” என்றபடி கை குலுக்கினான் சுந்தர்.
“ஓகே விஜய்… நாளைக்குப் பார்க்கலாம்.. கண்டிப்பா வர்றே..” சொல்லியவாறே பில்லியனில் ஏறி அமர்ந்தாள் வித்யா.
இரு சக்கர வாகனம் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்க, அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்று இதே விஜயசந்திரனுக்கும் அவளுக்குமிடையில் கல்லூரிக் காலத்தில் நடந்த அந்த சம்பவத்தை அசைபோட்டது.
****
பஸ்ஸின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த வித்யா தலையை வெளியே நீட்டி, முன் புறத்தில் படிக்கட்டில் தொங்கியவாறே, தன்னை அவ்வப்போது சைட் அடித்துக் கொண்டே வரும் அந்த மாணவனைக் கூர்ந்து பார்த்தாள்.
“கோமதி… அவன் யாரு?… எந்த கிளாஸ்?” கேட்டாள்.
மெல்ல எழுந்து எட்டிப் பார்த்த கோமதி, “அந்த கூலிங் கிளாஸ் போட்டிருக்கானே…அவனா?” கேட்டாள்.
“ஆமாம் அவனேதான்”
“அவன் விஜயசந்திரன்… நம்ம கிளாஸ்தான் ஆனா கடைசி பெஞ்ச் ஆசாமி… அதனால நீ அவனைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை!… அது செரி… எதுக்கு இப்ப அவனைப் பத்தி விசாரிக்கறே?”
“இல்லை… அவன் பார்வை அடிக்கடி என் மேலே விழுது… சைட் அடிக்கறான்”
“அட விடுடி… வாலிப வயசுல எல்லாப் பசங்களும் இப்படித்தான் இருப்பானுக!.. அவனுக பார்க்கிறதினால நம்ம என்ன தேய்ஞ்சா போயிடுவோம்?… பார்த்திட்டுப் போகட்டுமே?” என்றாள் கோமதி.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings